“மிக ஆரோக்கியமான தொடர்புறுதல் விளக்கம் மிகுந்த உள்நோக்கத்தோடு உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்தப் பரப்பினுள் கற்பவை அவர்களது எல்லாவித தொடர்புகொள்ளலுக்கும் பொருந்துவதாகும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் (மற்றும் அவர்கள் வளர்ந்தவர்களாக குறிப்பிடத்தக்க காதல் விருப்புக்கள்) அல்லது பங்காளர், துணைவர், துணைவி அல்லது மனைவி என்பவர்களோடு எதிர்காலத்தில் அன்புவைக்கவும் பயன்படுத்தக்கூடியதாக அமையும்.” என பாலியற் கல்விபற்றி ஒன்ராறியோ கல்வி அமைச்சு ஒரு எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பாலியற் கல்வி என்றவுடன் பலபெற்றோர்கள் ஏதோ தேவையற்ற அல்லது பிள்ளைகளைத் தவறான வழிகளுக்கு இட்டுச் செல்லும் கல்விமுறை என எண்ணுகின்றார்கள். பாலியற் கல்வி என்பது உடலுறவை மட்டும் அடிப்படையாகக் கொண்டது என்ற எண்ணக் கரு பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் காணப்படுகின்றது. அல்லது அப்படியான கருத்து பரப்பப்படுகின்றது. பேசாப்பொருளைப் பிள்ளைகளிடம் பேசக் கல்வி அமைச்சும் பாடாசாலைகளும் முற்படுவதாக கருதப்படுகின்றது. பாலியல் கல்வியைப் பாடசாலைகளில் புகட்டுவதற்குப் பல பெற்றோர்கள் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் உள்ளனர். சமய அடிப்படை வாதிகள் பாலியற் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
“சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை” என்பது எம்மத்தியிலே பயின்ற வரும் முதுமொழி. இயற்கையின் நியதியில் பறவைகள், விலங்குகள் அனைத்துமே உடலுறவு கொள்கின்றன. இவற்றை நாம் எமது பிள்ளைகளிடம் இருந்து மறைத்துவிட முடியாது. “எனது பிள்ளைக்கு பாலியற் கல்வியைக் கற்பிப்பதற்கு கத்தோலிக்க மதம் சார்ந்த பாலியல் நூல்கள் ஏதாவது உண்டா என்பதனைத் nதியத் தாருங்கள்” என ஒரு பெற்றார் இணையத்தளத்தில் பதிவுசெய்திருந்தார்.
பாலியற் கல்வியினை ஏன் பாடசாலைகளில் கற்பிக்கவேண்டும்?
பாடசாலைகளில் பாலியற்கல்வியை கற்பிப்பது சரியா பிழையா என்னும் முரண்பட்ட கருத்தேற்றம் பன்நெடுங்காலமாக மக்கள் மத்தியில் நிலவிவருகின்றது. பாடசாலைகள் முறைசார் கல்வியின் நிலைக்கழன் என்பது அனைவரும் அறிந்ததே. முறைசார் கல்வியின் வழியில் மாணவர்களுக்கு நன்நெறிகளைக் கற்றுத்தந்து அவரகளை நல்லவர்களாக ஆக்கும் பணி பாடசாலைகளைச் சார்ந்தது. இதனைப் பற்றி கனடா பொது சுகாதார முகவர் நிலையம் 2008ல் இதனைப் பற்றி ஒரு தெளிவான அறிக்கைகை வெளியிட்டிருந்தது. “ஒவ்வொரு தனிப்பட்ட இளம் மனிதர்களிடையே முறைகார் கல்வியைத் தரும் ஒரே ஒரு நிறுவனமான பாடசாலைகளிலிருந்தே அர்த்தமுள்ளதும் கட்டாயமானதுமான கல்வியைப் பெறுகின்றார்கள். அவையே முழுமையான தன்மையை மாணவர்களக்குத் தரத்தக்கன. வளர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர்கள் செய்யத்தக்கதும் மேற்கொள்ளத்தக்கதுமான அவர்களின் வாழ்க்ழை முழுமையும் பாலியல் நலன்தொடர்பான தீர்மானங்களை எடுத்தலும் அவற்றை விருத்திசெய்தலுக்குமான புரிந்துணர்வாற்றல், அறிவாற்றல் என்பனவும் அவற்றைச் செயற்படுத்தக் கூடியவர்கள் அவர்களே.(பாடசாலை மாணவர்களே)” என்று குறிப்பிட்டுள்ளமை பாடசாலைதான் பிள்ளைகளுக்கு வொழ்க்கைக்கேற்ற கல்வியினைக் கற்றுத்தரத்தக்க நிலைக்கழனாகும்.
பாலியற் கல்வியின் பயன்:
•மாணவர்கள் அறிந்துகொள்ள பாடசாலையல் கற்பிக்கப்படும் பாலியற் கல்வி உதவுகின்றது.
•குழந்தைகளின் பாலியற் துற்பிரயோகம் தவிர்க்கப்படலாம்
•பதின்ம வயதில் தாய்மையடைதலைத் தவிர்க்கலாம்
•குழந்தையைப் பொறுப்புடைய வளர்ந்தவராக மாற்றம்பெறவைக்கலாம். என்பன போன்ற
பயன்களைப் பாலியற் கல்வி தருகின்றது என்னும் கருத்து முன்வைக்கப்படுகின்றது. பாடசாலைகளில் பாலியற் கல்வியைக் கற்பிக்கவேண்டியதன் முக்கியத்தவம் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பாலியல் மற்றும் பாலியல் ஆரோக்கியம் பற்றிய பிரச்சினைகள் தொடர்பானவற்றிற்கு பாடசாலைகளில் பாலியற் கல்வி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படவேண்டும். ஒரு சமூகத்தின் நலனுக்காக தனிப்பட்டவர்களுக்கு பாலியல், பாலியல் நடத்தைகள், குழந்தைகள் பாலியல் உதாசீனம் செய்தல், பாலியலால் தொற்றும் நோய்கள் என்பனபற்றிய அறிவினை மாணவர்களுக்கு அறியவைக்க பாலியற் கல்வி முக்கியமானது.
பாலியற் கல்விபற்றிய பல்வேறு ஆய்வுகள் பாடசாலைகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்களின் பாலியல் தொடர்புகள், கருத்துக்கள், பாலியலில் ஈடுபாடும் அவற்றின் பாதிப்புக்களும் என்பனபோன்ற மிக அற்தமுள்ள பாலியற் கல்வி பயன் தருவதாக அமைகின்றது எனக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பாலியல் கல்வியால் ஏற்படும் பயன்கள்:
•வளர்ந்த பதின்ம வயதினரும் மேற்பட்டோரும் திருமணத்திற்கு முன்னரே-முறைசாரா பாலியல் அனுபவம் பெறுவதைத் தடைசெய்கின்றது.
•பதின்ம வயதினரை பாதுகாப்பான முறைகள் எவை என அறிந்துகொள்ளவும் வழிவகுக்கின்றது.
•உலக சுகாதார அமையம் ‘பாலியற் கல்வி’ பதின்ம வயதினருக்குக் கட்டாய பாடமாகப் பாடத்திட்டத்தில் இணைக்கப்பட வேண்டும் என விதந்துரைக்கின்றது .
உடல் நலத்தை மேம்படுத்தும் பாடசாலைகள் என்றால் என்ன என்பது பற்றி உலக சுகாதார நிறுவனம் பின்வருவனவற்றை எடுத்துக்காட்டுகின்றது.
கற்றல், வாழுதல், வேலை செய்தல் என்பனவற்றிற்கான ஒரு உடல்நலம் சார்ந்த கொள்ளளவினை தொடர்ச்சியாக வலுப்படுத்துவதாக அமைவதே ஒரு உடல்நல மேம்பாட்டுப் பாடசாலைத் திட்டம் எனப்படுகின்றது. இதற்கு ஒரு பாடசாலை பின்வருவனவற்றைப் பின்பற்றுவனவாக இருத்தல் வேண்டும்.
ஓர் ஆரோக்கியமான மேம்பாட்டு பாடசாலை பின்வருவனவற்றைக் கொண்டுள்ளதாக அமைந்திருத்தல் வேண்டும்:
•உடல்நலத்தையும் கற்றலையும் வளர்ப்பதோடு வேண்டப்படாதவற்றை நீக்கிவிடுதலும்.
•உடல்நல மற்றும் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சங்கம், மாணவர்கள், பெற்றோர், உடல்நலப் பணியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் என்போருடன் தொடர்புகளைப் பேணிப் பாடசாலையை ஒரு ஆரோக்கியமடான இடமாக வைத்திருத்தல்.
•ஆரோக்கியமான சூழல், பாடாசாலை உடல்நல கல்வி, பாடாசாலை உடல்நல சேவைகள் என்பனவற்றைக் கொண்டிருத்தல், பாடசாலைத்திட்டங்கள் மற்றும் சமூகத் திட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப் படுத்துதல், ஆசிரியர்களுக்கான உடல்நல மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள், சத்துணவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் நிகழ்ச்சித்திட்டங்கள், உடற்கல்விக்கான வாய்ப்புக்கள், வழிகாட்டலுக்கான நிகழ்ச்சித்திட்டங்கள், சமூக உதவிகள் மற்றும் உளநல விருத்திச் சேவைகளை பல்வேறு சவால்கள் மற்றும் சிரமங்கள் மத்தியிலும் நல்குதல்.
•தனிப்பட்டவர்களின் நலன்கள் மற்றும் தராதரம், இலக்கை அடைவதற்கான பல்வேறு வாய்ப்புக்கள், நல்ல முயற்சிகள், எண்ணங்கள், தனிப்பட்ட அடைவுகள் என்பனவற்றை மேம்படுத்துவதற்கான கொள்கைள் மற்றும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்.
•பாடசாலை ஆளணியினர், குடும்பங்கள் மற்றும் சமூக அங்கத்தினர் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் சுகாதாரத்தை மேம்படுத்த சமூகத் தலைவர்கனோடு இணைந்து செயற்பட்டு அவர்களுக்கு எவ்விதம் சமூகம் பங்களிப்புச் செய்கின்றது அல்லது கல்வியையும் சுகாதாரத்தையும் கீழ்த்தள்ளி விடுகின்றது என்பதை உணரவைத்தல்
உடல்நல மேம்பாட்டை ஏற்படுத்தும் பாடசாலைகள் முன்வைக்க வேண்டியன:
•தனிப்பட்வரையும் மற்றவர்களையும் கவனித்தல்
•ஆரோக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளுதலும் வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு மேலாகக் கட்டுப்பாட்டைக் கொண்டிருத்தல்
•கொள்கைகள், சேவைகள், பௌதீக மற்றும் சமூக நிலைமைகளுக்கூடாக உடல்நலனுக்காகக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துதல்
•அமைதி, வதிவிடம், கல்வி, உணவு, வருவாய், ஒரு நிலையான சுழலியர், சமத்துவம், சமூகநீதி, உறுதியான வளர்ச்சி என்பனவற்றிற்கான தகமைகளைக் கட்டியெழுப்புதல்
•இறப்பு, நோய்கள், வலுவீனம் என்பனவற்றை ஏற்படுத்தும் முக்கிய காரணிகளைத் வராது தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மூலம் குடற்புழுவகை புகையிலைப் பயன்பாடு, எச்ஐவி எயிட்ஸ் போன்ற பாலியல் மற்றும் போதைப் பொருட் பாவனையால் ஏற்படும் நோய்கள், மது, போதை, வன்முறையும் காயங்களும், உடல்நலத்திற்குக் கேடுபயக்கும் உணவுவகைகளின் பாவனையைக் தடுத்தல்.
•உடல்நலம் தொடர்பான நடத்தைகளுக்கு அறிவு, நம்பிக்கை, திறன்கள், எண்ணப்பாங்கு, விழுமியங்கள், ஆதரவு போன்றன மூலம் செல்வாக்குச் செலுத்துதல் போன்றன கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்படுவதன் மூலம் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு சமுதாய மேம்பாட்டிற்கும் உதவுவபர்களாக அவர்களை மாற்றமுடியும். இதனாலேயே முறைசார் கல்விநிலையங்கள் ஆரம்பம் முதலே மாணவர்களிடையே பாலயற் கல்வியைக் கற்பிக்க வேண்டும் என்னும் கருத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
பாலியற் கல்வியும் பெற்றோரும்
பாடசாலைகளில் பாலியற் கல்வி கற்பிப்பது பற்றிப் பெற்றோரிடம் இருவிதமான கருத்துக்கள் உள்ளன. இந்தியாவில் பெற்றோர்கள் எவ்வளவுதான் பாலியற் கல்வியை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்வதை விரும்பாவிட்டாலும் பெருந்தொகையான மாணவர்கள் பாலியற் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். அதனைக் கற்றுக்கொள்ளவது பயனுடையது என்ற கருத்தையும் கொண்டுள்ளனர்.
பாலியல் கல்வி பதின்ம வயதினருக்கு மிகவும் அவசியமானது என்பது அமெரிக்க அரசின் கொள்கையாகும். அமெரிக்க தேசிய கல்வி நிலையம் பாலியற் கல்வியை பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும் என்பதற்காக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் பாலியற் கல்வி பாடசாலை மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு இரண்டு காரணிகளை முன்வைக்கின்றது:
•பாலியல் தொடர்பான நோய்களைப் பற்றி அறிந்திருப்பதற்கும், அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பாலியற் கல்வி தேவையானது என்பதும் அது
•மாணவர்களுக்கு விளக்கத்தையும் தெளிவையும் தருகின்றது என்பதை அமெரிக்க அரசாங்க சபை முன்வைத்துள்ளது.
இதற்காக 2011ம் ஆண்டில் நோய்க்கட்டுப்பாடு மற்றும் முற்பாதுகாப்பு நிலையங்கள் மேற்கொண்ட ஆய்வில் 47 வீதமான உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் பாலியல் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதனையும் 15 வீதமான மாணவர்கள் நான்கு அல்லது ஐந்து பேருடனாவது பாலியல் தொடர்பினை வைத்துள்ளர் என்பதனைக் கண்டறிந்தனர். இதில் 60 வீதமானவர்கள் பாதுகாப்பு உறைகளைப் பாவித்ததாகவும் 23 வீதமானவர்கள் கர்ப்பத்தடை வில்லைகளைப் பாவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாலியலும் பதின்ம வயதினரும்:
பாலியல் தொடர்புவைத்தல் பல பின் விளைவுகளைக் கொண்டுள்ளது. கைத்தொழில் விருத்தியடைந்த நாடுகளில் பதின்மவயதினர் கற்பமாகுதல் விகிதம் அமெரிக்காவில் மிக உயர்வாக உள்ளமையை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்ண்கின்றன. இந்த நிலை கனடாவிலும் உண்டு. பெயர் குறிப்பிடாது பல மருத்துவர்கள் பதின்ம வயதினரின் கருத்தரித்தமை பற்றிக் குறிப்பிட்டுப் பெற்றோர் போதியளவு பாலியல் தொடர்பான கலந்துரையாடலையும், பாதுகாப்பான பாலியல் தொடர்பினை மேற்கொள்ள அறிவுறுத்தாமையையும் அல்லது தமது காச்சாரப் பாரம்பரியங்கள், விழுமியங்கள் பற்றியம் பாலியற் செயற்பாடுகளின் வின்விளைவுகள், பக்க விளைவுகள் எத்தகையன என்பதனை தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறத் தவறுகின்றனர் எனவும் பல பெற்றோர் எவ்விதம் பிள்ளைகளுடன் பாலியல் தொடர்பான கலந்துரையாடலைதத் தொடங்குவது என்று தெரியாதவர்களாக உள்ளனர் என்பதனை எடுத்துக் குறிப்பிடுகின்றனர். பிள்ளைகள் தவறான பாலியற் தொடர்புகளைக் கொண்டபின்னர் அதனை என்ன செய்வது என்றுதெரியாது தவிப்பதனையும் காணமுடிகின்றது. இதற்குப் பெற்றோரின் பாலியல் தொடர்பான அறிவுப் பற்றாக்குறையும் ஒரு காரணம் எனக் குறிப்பிடுகின்றனர்.
பாலியற் கல்வி பாடசாலைகளில் போதிக்கப்படத் தொடங்கிய பின்னர் பதின்மவயதினரின் பிள்ளைப் பேறு வீதம் குறைவடைந்தமையை புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. நான்கில் ஒரு பெண்பிள்ளைகள் தங்கள் 20 வயதினை அடைய முன்னரே திட்டமிடப்படாத தாய்மையை அடைந்து விடுகின்றார்கள் என்பதனையும், அவர்கள் தங்கள் உயர்கல்வியை முடிக்காதவர்களாகவும், ஏழ்மை நிலைமைக்குச் செல்பவர்களாகவும் உள்ளனர் என்பதனைப் புள்ளிவிபரங்கள் எடுத்தக்காட்டுகின்றன. பாடசாலை மாணவர்களிடையே அதிகளவில் பாலியல் தொடர்பினால் வரும் நோய்களான எச்ஐவி மற்றும் எயிட்ஸ் போன்றன தொற்றிக் கொள்கின்றன என்பதற்குப் பல ஆதாரங்கள் தரப்படுகின்றன. 2011ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி 13 தொடக்கம் 24 வயதினரிடையே இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த காரணங்களை முன்வைத்து பாடசாலைகளில் பாலியற்கல்வி மேற்கொள்ளப் படுவதனால் இத்தகைய நோய்களை வராது தடுக்கலாம்என்பதோடு பதின்மவதினர் தாய்மையடைவதையும் குறைத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்கள், மற்றும் கல்வியியலாளர்களின் கருத்தாகும். சிஎன்என் தொலைக்காட்சியைச் சார்ந்த றொனால் மாட்டின் “ பாடசாலைச் சபைகபள் தங்கள் பிள்ளைகளுக்கு பாலியற் கல்வியைக் கற்பிப்பது தொடர்பாக உளறிக்கொண்டிருக்கும் பெற்றோர்கள் முறைப்பாடு செய்வது மனதிற்கு வேதனை தருவதாக உள்ளது. பாடசாலைகளில் எங்கள் பிள்ளைகளுக்கு கணிதம், விஞ்ஞானம், வரலாறு மற்றும் பெருந்தொகையான மற்றைய பாடங்கைள் கற்பிக்கப்படுவததை சரி எனச் சொல்லமுடியும், உயிரியல் பாடத்தில் சற்று கவனம் மேலும் செலுத்தி அதில் பாலியல்கல்வியைக் கற்பிப்பதற்கு ஆத்திரப்படுவதோ அல்லது குறைசொல்வதோ எப்படிச் சரி எனச் சொல்லலாம்” எனக் கேட்பது சற்றுச் சிந்திக்கத்தக்கது. (சுழடயனெ ஆயசவinஇ ஊNN ஊழவெசiடிரவழச ழுஉவழடிநச 29இ 2011)
ஒன்ராறியோ அமைச்சின் பாலியற் கல்விக் கொள்கையும் பாடநெறியும்:
ஒன்ராறியோ அரசாங்கம் பெப்ரவரி 23, 2015 அன்று பாடசாலைளில் கற்பிக்கப்டுவதற்கான பாலியல் கல்விப் பாடவிதானத்தை வெளியிட்டிருந்தது. இது 1998ல் மேற்கொள்ளப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் அதனை நடைமுறைப் படுத்த முடிவெடுத்துள்ளது. அதன் வண்ணம் ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கப்டும் பாடத்திட்டம் பற்றி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
முதாம் தரத்தில் உடல் உறுப்புக்களின் பெயர்கள் கற்பிக்கப்படுவதோடு. குழ்ந்தைகளின் பாலியல் து~;பிரயோகம் தொடர்காக விசாரணையாளர்களின் நீண்டகால வற்புறுத்தலின்படி சில உறுப்புக்களின் பெயர்கள் குழந்தைகளுக்குத் தெரிந்திருத்தல் வேண்டும் என்பது கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது, அத்தோடு வாய்மொழி யல்லாது சைகைகள், முகபாவனைகள், குரலின் ஏற்றத்தாழ்வுகள் எப்படி மற்றவர்களோடு நன்கு உரையாடுதல் என்பனவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
இரண்டாம் தரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விருத்திகள், வாய்மூல மற்றும் உடலியல் வன்முறை, ‘இல்லை என்றால் இல்லைத்தான்’ என்ற எண்ணக் கருத்து என்பனவற்றை உள்ளடக்கிய கல்வி.
மூன்றாம் நான்காம் தரங்களில் ஓரினத் தொடர்புகள், உடலியல், உணர்வியல் மற்றும் சமூக விளைவுகள் பற்றியன உள்டக்கப்பட்டுள்ள. குறிப்பாக பூப்படைதல் பற்றிய விடயங்கள் நான்காம் தரத்திலிருந்து ஐந்தாம் தரத்திற்கு எடுத்துச்செல்லப்படும்
ஐந்தாம் ஆறாம் தரங்களில் ஆண் பெண்களுக்கு இடையேயான பாலியல் வேறுபாடுகள். குறிப்பாக ஐந்தாம் தரத்தில் பெண்கள் பூரிப்படைதல் ஏன்? எப்படி? நிகழ்கின்றது. மாதவிடாய் எப்படி ஏற்படுகின்றது? அதன் உடலியல் மாற்றம் என்ன அவற்றின் விளைவுகள் என்ன என்பனபற்றிய கல்வியாகஅமையும். ஆறாம் தரத்தல் பாற்பாகுபாட்டு விளகங்கள், சுய இன்பம் என்னபனவற்றோடு எவ்விதமான ஆரோக்கியமான தொடர்புகளைக் கொள்ளுதல், உடன்பாட்டைப் பெறுதல் போன்ற உளநல விடயங்கள் பற்றிய கல்வியாகும்.
ஏழாம் எட்டாம் தரங்களில் மாணவர்கள் பாலியற்தொடர்பு கொள்ளுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பற்;றியவிளக்கமாகவும். பாலியல் உறவுகொள்ளும் முறைகள் பற்றியும் தாய்மையடைதல், கருத்தடை முறைமைகளின் பயன்களும் தாக்கமும் மற்றும் பாலியல்தொடர்பு கொள்ளவதால் ஏற்படும் நோய்கள் பற்றியும் கற்பதாக அமையும்.
ஒன்பதாம் பத்தாம் தரங்களில் உளநலம் தொடர்பான அச்சுப்பிரதிகள், உபகரணங்கள் பற்றிக் கற்பிப்பதோடு, கீழ் வகுப்புக்களில் விடப்பட்ட அல்லது தவிர்க்கப்பட்டவை அறிமுகப் படுத்துதல், பாற்பகுப்பு வேறுபாடுகள், பாலியல் கற்கை நிலையங்கள், பாலியல் தொடர்பான வளங்களைத் பெற்றுக்கொள்ளுதல் போன்றனவற்றோடு பத்தாம் தரத்தில் பாலியல் தீர்மானத்திற்கு சொந்த விழுமியங்கள், ஒத்தகுழுவினர், குடும்பத்தினரின் எதிர்பார்ப்புக்கள், மற்றும் ஊடகங்களின் செய்திகள் என்னபன உள்ளடங்கலாக என்ன காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பனபற்றிய கல்வி.
பதினோராம் பன்னிரண்டாம் தரங்களில் இருந்துவரும் பாடத்திட்டமே தொடர்ந்து இருக்கும் எனினம் கூடுதலாக தீர்மானத்தை எடுக்கும் திறன்கள் பற்றிய கவனம் செலுத்துவதாக அமையும். இதனால் ஆரோக்கியமான தொடர்பினை ஏற்படுத்த வழிவகுப்பதாக அமையும். அத்தோடு உளநோய் தொடர்பான கீழான மனப்போக்கைத் தவிர்த்தல், நன்மைதரத்தக்க உளநல அளவீடுகளை மேற்கொள்ளுதல் தொடர்பான கல்வியாக அமையுமம்.
இவை ஒன்ராறியோ கல்வி அமைச்சின் பாடவிதானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவை. இப்பாடவிதானம் பல வருடகாலமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் திருத்தியமைக்கப்பட்டவை. சமூக நலன் தொடர்பாக பிள்ளைகளை நெறிப்படுத்தும் பணியினை பாடசாலைகள் மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்தை உளநல, மற்றும் பாலியல் மருத்துவர்கள், கல்வியியலாளர்கள் போன்றோர் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
பாலியற் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதற்கான ஆதரவான கொள்கை:
•பாடசாலைகளில் பாலியல் கற்பிக்கப்படுவதால் மாணவர்கள் தமது வாழ்வில் பாலியல் தாக்கங்கள் அதன் விளைவுகள் பற்றி விளங்கிக்கொண்டிருப்பர். பாலியல் தொடர்பான எண்ணப்பாங்கினை விரிவுபடுத்தவும் தங்கள் எல்லைகளை அளவுபடுத்தவும் உதவும்.
•தங்களது உடல்ரீதியான மாற்றங்களையும் கோர்மோன் வெளியேற்றம் பற்றிய வினாக்களுக்கு விளைகளைப் பெற்றுக்கொள்ள பாலியற் கல்வி வழிவகுக்கும்.
•எதிர்பாலார் பற்றிய விசாரணைகளை பிள்ளைகள் எப்போது விசாரணை செய்துகொண்டே இருப்பார்கள். பாடசாலையில் மேற்கொள்ளப்படும் பாலியற் கல்வி இவற்றை விளங்கவைக்கும். அவர்களுக்கு விருப்பமானவற்றைக் கண்டறிய வாய்ப்பினையும் ஏற்படுத்தும்.
•குழந்தைகள் பாலியற் துஷ்பிரயோகம் என்பது ஒரு சமூக இடர்வினையாகும். அது பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைப் பாதிப்புக்குள்ளாக்குகின்றது. பாடசாலைப் பாலியற் கல்வி பிள்ளைகளை இந்த பாலியற் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள வழிவகுக்கின்றது. எது நல்ல தழுவல் எது கூடாத தழுவல் என்பதனை அவர்கள் உணர்ந்துகொள்ள வைக்கின்றது.
•இணையத்தளம், பாலியல் பிரசுரங்கள், படங்கள் போன்றவற்றைப் பார்க்க விடுவதிலும் பார்க்க ஆரோக்கியமான பாலியற் கல்வி மிகச் சிறந்தது. இணையத்தளம் மிகப் பெருமளவிலான தகவல்களைக் கொண்டுள்ளது. அவை பிள்ளைகளைத் தவறான வழிகளில் இட்டுச் செல்லக்கூடியன.
•பாலியலால் தொற்றக்கூடிய நோய்கள், பதின்மயவதில் தாய்மையடைதல் போன்ற மிக அதிகரித்துள்ள பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கு முற்றுமுழுதும் சரியானது பாடசாலைப் பாலியற் கல்விக்கு மாணவர்கள் செல்லக்கூடியது.
•இன்று பதின்மவயதினர் பாலயல் செயற்பாடுகளில் மிகவும் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றார்கள்.
எனவே பாடசாலை பாலியற் கல்வி அவர்களைப் பொறுப்புள்ள வளர்ந்தவர்களாக ஆக்க இளம் வயதில் இவற்றில் ஈடுபடாது தடுக்கப் பாடசாலைப் பாலியற் கல்வி பயன்பாடுடையது.
பாலியற் கல்விக்கு எதிரான கருத்துக்கள்:
சமய ரீதியாக பாலியல் கல்வி பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்படுவதால் பல்வேறு பிரதிகூலங்களைப் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளுவார்கள் என்ற ஐயமும் தீய ஒழுக்கங்களுக்கு அவர்களை வழிப்படுத்துவதாக அல்லது தூண்டுவதாக அமையும் என்பது ஒரு சாராரின் கரத்தாக அமைந்துள்ளது. இதற்காக சில பெற்றோர்கள் அரசாங்கத்திற்கும் கல்விச் சபைக்கும் எதிராகப் போர்க்கொடி தூக்குவதனைச் செய்திகள் வாயிலாக அறியக்கிடக்கின்றது. அது மட்டுமன்றி கடந்த காலங்களில் பாலியல் வகுப்புக்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல் விட்ட பெற்றோர்களும் உளர். அவற்றிற்கு எதிராகப் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கலாம்.
பாலியற் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களில் பலர் பாலியல் ஆரோக்கியமானவர்களாகவோ அல்லது அவைபற்றிய சிறந்த எண்ணமோ அல்லது போதிய அனுபவமோ அற்றவர்களாவர். இது இன்னும் மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைகின்றது. தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது அவை தவறான கருத்தை மாணவர்களிடையே ஏற்படுத்துகின்றது. பிள்ளைகள் கருத்துக்களை எளிதில் கொள்ளக்கூடியவர்கள் தவறான கருத்துக்கள் கொடுக்கப்படும் போது அவர்கள் தவறான வழிகளில் செல்லத் தூண்டும். அத்தோடு வயதுவந்தவர்களை உதாசீனம் செய்ய அல்லது தவிர்த்துவிடும் தன்மை ஏற்படும்.
•கற்பிக்கப்படும் பாடங்கள் தவறாகக் கற்பிக்கப்பட்டால் அந்த விடயங்களினால் அதிசயங்கொள்ள அல்லது உணர்;ச்சிவசப் படக்சுடியவர்கள். பாடசாலை பாலியற் கல்வி நகைப்புக்கு இடமாக அமைந்துவிடுவதால் அவர்கள் அதில் ஆர்வம் கொள்ளாமல் விடுவர்.
•பல பாடசாலைகளில் பாலியற் கல்;வி ஒரு மேலதிக நெறியாகவே கொள்ளப்படுகின்றது. அது பிரதானமான ஒன்றாகக் கொள்ளப்படுவதில்லை. கற்பிக்கும் ஆசிரியர்களும் அதில் முற்றுமுழுதாக அக்கறை காட்டமாட்டார்கள். அதனால் மாணவர்களும் போதிய அக்கறை காட்டமாட்டார்கள்.
•பாலியற் கல்வி மதக்க் கொள்கைகளோடு முரண்படுவதால் அவை தீர்க்கப்படாவிட்டால் மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிடும்
பாலியல் கல்விப் பாடத்திட்டம் திருத்தப்பட்டு கடந்த செப்ரம்பர் தொடக்கம் பாடசாலைகளில் கற்பிக்கப்படுகின்றன. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பெற்றோர்கள் மத்தியிலிருந்து கருத்துக்கள் முகநூலிலும், செய்தி இதழ்களிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மே 6. 2015 சண் செய்தி இதழில் றிபியா முற்றா என்னும் இஸ்லாமிய தாய் பாலியற் கல்விக்கு ஆதரவான கருத்தினை முகநூலில் பதிவு செய்துள்ளார். இது தனியே இஸ்லாமியர்களின் பிரச்சனையல்ல. ஒரு சிலர் எதிரான கருத்தைக் கொண்டிருந்தாலும் எதிர்ப்புத்தெரிவிப்பவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் அல்ல என்ற கருத்தைத் தந்துள்ளதோடு பாலியற் கல்வி கற்பிக்கப்படுவதற்கு ஆதரவாக தங்கள் சமூகத்தவருக்கு விளக்கங்களை அளித்து 368 பேரின் சம்மதத்தைத் தன்பங்கம் ஈர்த்துள்ளார்.
பாலியற் கல்வி தொடர்பான ஆதரவினைப் பெற்றுக்கொள்வதற்காக Samer Mansour என்பவர் தனது கருத்தினைப் பதிவ செய்து தனக்கு ஆதரவு திரட்ட முயன்றுள்ளார் அதற்காக அவர் “இதில் 1998ஆம் ஆண்டிலிருந்து பாலியற் கல்விப் பாடத்திட்டம் திருத்தியமைக்கப்படவில்லை. அந்தநேரம் எங்களில் பலரிடம் வலையமைப்புத் தொடர்புகள் இருக்கவில்லை. எங்களிடம் நவீன செல்பேசிகள் இருக்கவில்லை. பாலியல் துன்புறுத்தல், தகாத செயலாக அல்லது அடாச்செயலாக மாறும் தேவையற்ற பாலியல் தொடர்பான செய்திகளை அனுப்புதல் இருந்திருக்கவில்லை. எங்களுக்கு அப்படியான ஒரு திட்டச் செயலைக் கையாள ஒரு இடம் இருந்திருக்கவில்லை. இப்போது எங்களுக்கு அதுதேவையாக உள்ளது. அதனை நாம் வரவேற்கின்றோம்” எனக் குறிப்பிட்டிருப்பது பாலியற் கல்வியின் ஆரோக்கியத் தன்மையைப் புரிந்துள்ளமையையும் அதன் தேவையையும் எடுத்துகாட்டுகின்றது.
ஒன்ராறியோ பாலியல் பாடத்திட்டம் பற்றிக்குறிப்பிடும்போது எங்கள் பிள்ளைகளுக்கு அவை தேவையானது அவர்களை பாலியல் துற்பிரயோகம், பாலியல் துன்புறுத்தலர், பாலியற் பலாத்காரம், வேண்டத்தகாத தாய்மையடைதல், பாலியலால் பரப்பப்படும் தொற்று நோய்கள் என்பனவற்றில் இருந்து எமது பிள்ளைகளைப் பாதுகாப்பதாகவே கருதலாம். அதற்கான உளவியல் மற்றும் விஞ்ஞான அறிவினை அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்கள் எனக்குறிப்பிட்டு தங்கள் ஆதரவிற்கு வலுவும் சேர்த்துள்ளார்.
எதிரான கருத்தை முன்வைப்போர் தெரியாத பருவத்தில் பாலியல் பற்றிக் கதைக்கவேண்டிய அல்லது கற்கவேண்டிய தேவை இல்லை என்பதோடு அவற்றைப் பற்றி அவர்கள் மேலும் அறிய முற்பட்டு மேலும் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுவார்கள் என்ற கருத்தினைத் தெரியத்தருவதோடு. சுய இன்பம் பெறுதல், பாதுகாப்பான பாலியல் தொடர்புறுதல் என்பன அவர்களை பாலியலில் ஈடுபடத்தூண்டுவதாக அமைகின்றது என்னும் கருத்தை முன்வைக்கின்றார்கள். பாதுகாப்பு உறை பாவித்தல் அல்லது கற்பத்தடை வில்லைகளைப் பாவித்தல் என்பன பிள்ளைகள் பாலியலிலிருந்து விலகி இருப்பதற்குப் பதிலாக அவர்களைத் ஈடுபடத் தூண்டுவதாக அமைகின்றது என்று கருதுகின்றனர். ஆண், பெண் பிள்ளைகளை ஒரே வகப்;பில் வைத்து இவற்றைக் கற்பிப்பதனால் அவர்கள் பரீட்சார்தமாக இவற்றைச் செய்து பார்க்கவும், வெட்கம், பயம் போன்ற உணர்வுகள் இல்லாது துணிவாக ஈடுபடவும் வழிவகுக்கும் எனபனபோன்ற கருத்துக்களையும் முன்வைப்பதையும் காணலாம்.
பாலியற் கல்வி பாடசாலை மாணவர்களை நல்ல வழியிற் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கற்றுத்தரும் ஒன்றாகவே கல்வியியலாளர்களும், ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவிக்கின்றனர் எனினும் இதனை ஏன் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரவேண்டும்? அதுவும் இளம் வயதில் அவர்களோடு ஏன் பாலியல் பற்றிக் கதைக்கவேண்டும் என்னும் எண்ணக்கருத்தில் மாற்றம் பெறாதவர்களாக சில பெற்றோர்கள் இருப்பதும் இதற்கான இடராக அமைகின்றது எனலாம்.
மேலதிகத்தகவல்களுக்கு:
1.Circulation, Ministry of Education, Ontario Sept. 2015
2.Developing sexual health programmes, A framework for action: World Health Organization, Department of Reproductive Health and Research. 2015.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.