திரு. தங்கவடிவேல் ஆசிரியர் அவர்கள் எனது தந்தை அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்...’ என்ற நூல் வெளியீட்டிற்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற வருகை தந்து சிறப்புரை ஆற்றியமை எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன். திரு.தங்கவடிவேல் அவர்கள் எனது தந்தையின் சம காலத்தவர். முற்போக்கு அரசியல் இலக்கிய பாரம்பரியத்தைச் சுவீகரித்தவர்கள். திரு. தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தன் சமகாலத்தில் முற்போக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்து எழுத்தாளர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் ஆவார். \யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை தமிழ் சமுதாயத்தின் கோரமான முகம் என்பதை நன்குணர்ந்த என் தந்தை அகஸ்தியர் அவர்கள் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்ற நாவலை எழுதினார். எழுத்து வெறும் கலைக்காக மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்தைக் கோரி நிற்கும் புரட்சிகரப் பணியாகும் என்பது என் தந்தையின் இலக்கியக் கோட்பாடாக இருந்தது.
திரு தங்கவடிவேல் அவர்கள் மாவிட்டபுர ஆலயப் பிரவேசத்தில் முன்னணியில் நின்று செயற்பட்ட போராளி ஆவார். எனவே ஒரே குறிக்கோளுடன் அரசியல் இலக்கிய வெளியில் சிறகடித்துப் பறந்த இரு பறவைகள் போலவே சஞ்சரித்தார்கள். அரசியல் ரீதியின் பின்னால் இந்த இருவரும் வெவ்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் எழுத்தாழுமையையும் நேர்மையையும் மதித்து மரியாதையோடு பழகிய நாகரீகம் இருவரிடத்திலும் இருந்தது. என் தந்தை அகஸ்தியர் அவர்களின் எழுத்து ஆளுமைபற்றியும், முற்போக்கு இலக்கியத்திற்கு அவர் அளித்த பங்கினைப்பற்றியும் அவர் அவ் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை கனதியாக இருந்தது.
திரு.தங்கவடிவேல் ஆசிரியர் அவர்களை நான் லண்டனில் சந்திக்க நேர்ந்தது என்றாலும் என் தந்தையை நினைவு கூர்ந்து என்னை அவர் மகள் போலவே கருதி என் அழைப்பினை ஏற்று என்னை கௌரவித்தமையை மிகப் பேறாகக் கருதுகிறேன். லண்டனில் இடம்பெற்ற முற்போக்கு அரசியல் இலக்கியக் கூட்டங்களில் அவர் தனது முதுமையிலும் கலந்து கொண்டமை குறிப்பிட்டுக் கூறவேண்டிய ஒன்றாகும். மிக உயர்ந்த நாகரீகத்தின் அடையாளமாக திரு தங்கவடிவேல் அவர்கள் திகழ்ந்ததார்.
லண்டனில் அவர் இருந்த காலத்தில் அவரது அனுபவங்களையும், நினைவுகளையும் பதிவு செய்ய வேண்டுமென்று மிகப் பலர் அக்கறை கொண்டிருந்தும் அதனைச் செயற்படுத்த முடியாமல் போனது துரதிஷ்டவசமாகும். எனினும் லண்டனில் அவர் ஆற்றிய உரைகள் இணையத்தளத்தில் கிடைக்கக்கூடியதாக இருப்பது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும். நம் காலத்தில் வாழ்ந்த சமூகவிடுதலைப் போராளியின் மறைவு நம் அஞ்சலிக்குரியதாகும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.