அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!
[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. -பதிவுகள்]
அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள். அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம். அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான். அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும்.
இதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.
அவனை அவள் மாற்றப் போகின்றாள்.
அந்த உறைதலை அவள் உருக்கப் போகின்றாள்.
அந்த மெளனத்தைக் கலைய வைக்கப் போகின்றாள்.
அவனையும் பேச வைக்கப் போகின்றாள்.
கலகலப்பானவனாக, துடிதுடிப்பு மிக்கவனாக , அவனை உருமாற்றிடப் போகின்றாள்.
இதற்கு ஒரு வழி ....
அவனைச் சீண்டி விளையாடிடப் போகின்றாள். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி, உருகுவதிலுள்ள அர்த்தமற்ற தன்மையை அவனுக்கு போதிக்கப் போகின்றாள்.
இவ்விதமானதொரு முடிவுடன்தான் அவள் அன்று வந்திருந்தாள்.
'ஹாய்...' என்று அவனை அழைத்த விதத்தில் அவளது எண்ணத்தின் தீர்க்கம் மறைந்திருந்தது. பரிசோதனை செய்யப்போகும் ஒரு விஞ்ஞானியின் ஆவல் அதில் ஒளிந்திருந்தது.
'வட் அ பியூட்டிபுஃல் டே' என்றாள். அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள். அவர்களது இதுவரை காலமான நட்பின் விளைவாக இருவருமே ஒருவருடன் ஒருவர் நீ, நான் என்று ஒருமையில் கதைக்குமளவுக்கு நெருங்கியிருந்தார்கள்.
அவனது கண்களையே சிறிது நேரம் உற்று நோக்கினாள்.
சக்தி வாய்ந்த கண்கள்.
வலிமை மிக்க கூரிய கண்கள்.
கனவு மிதக்கும் கண்கள்.
அவனது வாழ்க்கையை மாற்றுவதற்கு அவள் முடிவு செய்திருந்தாள். ஆனால் என்னவென்ன வழிகளில் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும்?
அவனை 'அவுட்டிங்'க்குக்குக் கூட்டிப் போகலாம். 'நயாகரா போஃல்ஸி'ற்குப் போகலாம். 'ஹமில்டன் ஆஃபிரிக்கன் சபாரி' , 'வொண்டர் லாண்'டிற்கு ... இப்படி ஏதாவது ஒன்றில் பொழுதைக் கழிக்கலாம்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாகச் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. அவனைப் பேச வைப்பது. கலகலக்க வைப்பது. சிரிக்கச் செய்வது.
அவனை மீண்டும் நெருக்கமாக நோக்கினாள். அவர்களைச் சுற்றி உலகம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
'நீ ஏன் எந்த நேரமும் உம்மென்று மூஞ்சியை வைத்திருக்கிறாய்... ஸ்மைல் ... நீ சிரிக்கேக்கை எவ்வளவு வடிவாய் இருக்கிறாய் தெரியுமா?'
அவன் அவள் சொல்வதைக் கேட்டபடியிருந்தான். பதிலுக்கு ஏதாவது கூற விரும்பினான். பதிலாக இலேசான சிரிப்பு, புன்னகை கோடு கிழித்தது.
'அப்படித்தான் ஆ ... அப்படித்தான்.. இப்படித்தான் நீ எப்பவும் .. சிரித்தபடி இருக்க வேண்டும். ஓகே...'
குழந்தைக்கு டீச்சர் கூறுவதுபோல் கையைக் காட்டி, கண்களை உருட்டி, அவள் கூறிய விதம்... உண்மையிலேயே அவனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்தான்.
'ஓகே டீச்சர்'
'என்ன .. யார் சொன்னது நான் டீச்சரென்று' பொய்க்கோபம் அவள் முகத்தில் குமிழியிட்டது.
'நீ டீச்சரேதான் ... உன்னைப் பார்க்கேக்கை டீச்சரைப் போலவே இருக்கிறாய். ... உன்னை இனி டீச்சரென்று கூப்பிடப் போகின்றேன்.'
உறைதலிலிருந்து மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருந்தான். உவகையில் அவள் நிரம்பினாள்.
'நான் டீச்சரென்றால்... நீ... ஓகே.. சிறுவா... நான் டீச்சரென்றால் நீ எனக்குச் சிறுவன்தான்... என்ன சிறுவா'
முதன் முறையாக அவன் நெஞ்சில் இலேசான உணர்வுகள்... ஆனந்தமாக மனம் விட்டுச் சிரித்தான்.
'சிறுவா... இன்று கொஞ்சம் நேரத்தோட போகோணும்... 'மிராக'லிலை 'குரோசரி ஷொப்பிங்' செய்யணும்... கூடத் துணைக்கு வாறியாம்' என்றதும் தலையாட்டினான். பழையபடி உறைநிலைக்குத் திரும்பிவிட்டானா? கனவுலகில் புகுந்து விட்டானா?
'என்ன... ம் ... பதிலைக் காணவில்லையே... வாயிலென்ன கொழுக்கட்டையா'
அவள் கொழுக்கட்டை என்று கூறவும் குபீரெனப் பீறிட்டுக்கொண்டு சிரிப்பு வந்தது. சிரித்தான். காலையில் மாமா மகனுடன் நடந்த மோதல் நினைவுக்கு வந்தது. மாமா மகன் கொழுக்கட்டை என்று கூறியது நினைவுக்கு வந்தது. சோமசுந்தரப் புலவர் ஞாபகத்தில் வந்தார்.
'என்ன சிரிப்பு... சிறுவா'
'மச்சானுடன் ஒரு சண்டை ... ஞாபகம் வந்தது..'
'அதுக்கென சிரிப்பு'
'டீச்சர். அவனும் கொழுக்கட்டையைப் பற்றிச் சொன்னான். நீயும் சொன்னாய். கொழுக்கட்டை சோமசுந்தரப் புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' பாடலை ஞாபகத்துக்குக் கொண்டு வந்துவிட்டது. அதுதான்'
எத்தனையோ வருடங்களுக்கு முன்னால், குழந்தைகளாகயிருந்தபோது கேட்ட பாடல் வரிகள் மூளையின் ஆழத்தே பதிந்து விடுகின்றன. மீண்டும் ஏதாவது ஒரு சொல் அல்லது காட்சி அவற்றைப் புதைக்குழிகளுக்குள் இருந்து மீட்டு வந்து இன்பத்தைத் தந்து விடுகின்றன'
இவ்விதம் அவன் நெஞ்சில் எண்ணமொன்று ஓடியது.
'விந்தையான உலகம். அதிசயமான உலகம்'
'ஏன் டீச்சர்?'
'பார்த்தாயா , எப்பவோ ஒரு காலத்திலை உன் காதுகளுக்குள் புகுந்த பாடலின் நினைவுகள் எத்தனையெத்தனையோ வருடங்களின் பிறகு இன்றைக்கு உன் மூளையின் ஆழத்துக்குள்ளிருந்து வெளிவரும் அதிசயத்தை.... இப்படித்தான் ஒவ்வொரு செக்கனும் எங்கட வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு செயலும், காட்சியும் மூளைக்குள் பதிந்து கிடக்கின்றது.
அவளது சொற்கள் அவனைப் பழையபடி பழைய நிலைக்கே திருப்பிவிட்டது. உறைநிலைக்குத் திரும்பி விட்டான். அவனுக்கேயுரிய தனியுலகத்திற்குத் திரும்பி விட்டான்.
'என்ன ' அவள் அவன் தோள்களைப் பற்றி அசைத்தாள். அவன் அசைவதாகக் காணோம். 'இவனை மாற்றுவதென்பது இலேசான காரியமல்ல'. இவ்விதம் எண்ணினாள். 'நிறைய பொறுமை, அவகாசம் வேண்டும். அடிக்க அடிக்கத்தானே அம்மியும் நகர்கிறது. தளராமல், சோர்ந்துபோய் விடாமல், விடாமுயற்சியுடன் முயல வேண்டும். முயல முயலத்தான் எல்லாமே கை கூடுகின்றது.
அவள் என்றைக்குமே தோல்விகளைக் கண்டு தளர்ந்து விடுபவளல்லள். சவால்களுக்கு எதிராக, ஏமாற்றங்களுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டுப் போட்டே பழகும் பிரிவினைச் சேர்ந்தவள். இவனது விசயத்தையும் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டுள்ளாள்.
மெல்ல மெல்ல இருள் கவியத்தொடங்கி விட்டிருந்தது. வேலை முடிந்து செல்லும் பிரயாணிகளுடன் அடிக்கடி 'கோ ட்ரெயின்கள்' விரைந்து சென்றன. வழக்கம்போல் 'டொன் வலிப் பார்க்வே'(don valley parkway) இறுகிக் கிடந்தது. 'சவுத் பவுண்ட்' (south bound) மட்டும் அசைந்தபடி இருந்தது. வழக்கம்போல் கதிரவணைத்தன் அரவணைப்பிற்குள் முழுமையாக அடக்கி விட்ட இன்பத்தில் அடிவானப் பெண் நாணிச் சிவந்து கிடந்தாள். நேரத்துடனேயே சந்திரன் தன் பயணத்தைத் தொடங்கி விட்டிருந்தான். அவனுக்குத் துணையாக மேலுமிருவர் வெள்ளியும் வியாழனுமாயிருக்க வேண்டும்.
மெல்ல மெல்ல 'பார்க்'கில் சனநாட்டம் குறையத் தொடங்கியிருந்தது. 'பார்க்கிங் லொட்'டின் மூலைகளில் தூங்கிக் கிடந்த கார்களினுள் தழுவிக் கிடந்த சோடிகளைத் தவிர ஏனையவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.
இருள் நன்கு மூடி விட்ட பொழுது. 'பார்க்' தனிமையில் மூழ்கி விட்டது. அந்தத் தனிமை படர்ந்த சூழலை நாடி காதலர்கள், போதை மருந்து வாசிகள், தனிமையைப் பயன்படுத்திக் கார் பழக வருபவர்கள், நடு இராத்திரிகளில் டொராண்டோவின் இரவு ராணிகளுடன் வரும் இளவல்கள், ... இவ்விதம் இரவினிலும் அந்தப் 'பார்க்'கை நாடி மனிதர்கள் வரத்தான் செய்தார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் வருவதில்லை. அப்படி வருபவர்கள் 'ஓவர்லி புளவாட்'டை நோக்கிய 'பார்க்'கின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று விடுவார்கள். இதனால் பொதுவில் பார்வைக்கு அந்தப் 'பார்க்' இரவுகளில் தனிமையில் மூழ்கியிருப்பதுபோல் தோன்றும்.
அவர்களிருந்த பகுதியில் அச்சமயம் அவர்களிருவருமே தனித்து விடப்பட்டிருந்தார்கள். காரொன்று அவர்களிருந்த பகுதியை நோக்கி வந்தது. அண்மையில் வந்ததும்தான் அவள் கவனித்தாள். ... பொலிஸ் கார்... வழக்கமான ஓபிஸர்கள்.. இவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுச் சென்றார்கள்.
சற்றுத் தொலைவில் காரொன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. இருவரும் ஒருவித அமைதியுடன் அதனையே நோக்கியபடியிருந்தார்கள். 'பார்க்கிங் லொட்'டில் பார்க் பண்ணுவதும், 'ரிவேஸ்' பண்ணுவதும், 'திரி பாயின்ற் டேர்ன்' அடிப்பதும் அடிக்கடி சிக்னல் போடுவதுமாக யாரோ கார் பழகிக் கொண்டிருக்கிறார்கள். அருகில் டொன்வலிப் பார்க் வேயில் ஒழுங்கு திரும்பியிருந்தது. ஒளிப் பொட்டுக்கள் மின்னி அசைந்தன்.
'சிறுவா ஷொப்பிங் செய்ய வேணும்... வெளிக்கிடுவமா?'
' ஓம் டீச்சர்..' மீண்டும் அவன் உருகிய நிலையில்... தொலைவில் வட்டமடித்துக் கொண்டிருந்த கார் இவர்களை நோக்கி வந்தது. எதிர்பாராத விதமாக 'ஹெட் லைட்' ஒளி இவர்கள்மேல் பாய .. கண்கள் கூச... கைகளால் மறைத்தபடி இருவரும் அதனையே நோக்கினார்கள். இவர்களைத் தாண்டிய கார் சிறுது நேரம் நின்றது. பின் பறந்தது. இவனால் உணர முடிந்தது. அந்தக் கார் மாமா மகனின் கார். மாமா மகன்தான் யாருக்கோ கார் பழக்கியிருக்க வேண்டும்.
'என்ன சிறுவா? உனக்கு அவனைத் தெரியுமா' என்றாள் டீச்சர்.
'ஓம் டீச்சர். ஹீ இஸ் மை கசின்' என்றான் சிறுவன்.
'எனக்கும் அவனைத் தெரியும்' என்றாள் டீச்சர்.
"எப்படி டீச்சர்?'
'பிறகு சொல்லுறன். இப்ப ஷொப்பிங்குக்கு நேரமாச்சுது. வெளிக்கிடுவமா'
'ஓகே டீச்சர்' என்றான். இருவரும் புறப்பட்டார்கள்.
[ தொடரும் ]