பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் சிறந்த திறனாய்வாளர் மட்டுமல்லர். சிறந்த கவிஞரும் கூட. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில், கவிதைத்துறையில் இவரது கவிதைகள் மிகுந்த பங்களிப்பை ஆற்றியுள்ளன. இவரது கவிதைகள் பல எனக்குப் பிடித்திருப்பதற்கு முக்கிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. நடை. இனிய, நெஞ்சை அள்ளிச்செல்லும் நடை. சிலு சிலுவென்று வீசிச்செல்லும் தென்றலை அனுபவிப்பதுபோலிருக்கும் இவரது மொழியை வாசிக்கையில். ]
2. மரபுக் கவிதையின் அம்சங்கள், குறிப்பாக மோனை வெகு அழகாக இவரது கவிதைகளில் விரவிக் கிடக்கும். வலிந்து திணிக்காத வகையில் , தேவைக்குரியதாக அவை பாவிக்கப்பட்டிருப்பதால் வாசிக்கையில் திகட்டுவதில்லை. இன்பமே பொங்கி வழியும்.
3. சொந்த அனுபவங்களின் அடிப்படையில் விரியும் வரிகளைப் படிக்கையில் நாமும் அவ்வனுபவங்களை அடைவோம். பொதுவாக நாம் அனைவரும் அவ்வப்போது அடையும் அனுபவங்களை அவற்றில் இனங்கண்டு மேலும் மகிழ்ச்சியடையோம். மீண்டுமொரு தடவை அவ்வனுபவங்களில் எம்மை நனவிடை தோய வைத்து விடும் தன்மை மிக்கவை இவரது கவிதைகள்.
4. ,மானுட அடக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவை இவரது கவிதைகள்.
5. நான் இயற்கைப் பிரியன். இந் 'நிலம் என்னும் நல்லாள்' கவிதையில் கொட்டிக் கிடக்கும் இயற்கை வர்ணனை என்னை இயற்கை வளம் கொழிக்கும் வன்னி மண்ணில் வாழ்ந்த என் பால்ய பருவத்துக்கே கொண்டு சென்று விட்டன.
இக்கவிதை சிறுவன் ஒருவனின் தன் தந்தையுடன் கழித்த பால்ய பருவத்து நினைவுகளை அசை போடுகிறது. குடும்பப் பழம் பெருமையைப் பேசுகிறது. மண் வாசனை தவழும் மொழியில் அனுபவங்கள் விபரிக்கப்படுகின்றன. வயற்காரர் இஸ்மாயில் காக்கா வின் பொருளியற் சூழல், அவரது குமர்ப்பெண்கள், அவர் அவர்களுக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொடுப்பதற்காக எதிர்கொள்ளும் சவால்கள், அவரது உழைப்பு எல்லாம் சிறுவனின் பார்வையில் கவிதையில் விபரிக்கப்படுகின்றன. அக்காலச் சமூகத்தை வெளிப்படுத்தும் வரிகள் அவை.
இந்நெடுங்க கவிதையை வாசிக்கும் எவரும் ஒரு போதுமே மறந்து விடமாட்டார்கள். அனுபவித்து, இன்பம் மிகுந்து வாசிக்கும் தன்மை மிக்க வரிகள் என்பதால் வாசிப்பவர்கள்தம் உள்ளங்களில் கவிதை நிலைத்து நின்று விடுகின்றது.
இந்நெடுங்கவிதை எனக்குப்பிடித்ததற்கு முக்கிய காரணங்கள் இக்கவிதையை வாசிக்கையில் தன் தந்தையுடனான தன் பால்ய பருவத்து அனுபவங்களை விபரிக்கும் சிறுவனாக நானும் மாறி விடுகின்றேன். வன்னி மண்ணின் இயற்கை வளத்தில் கழிந்த நாட்களை எண்ண வைத்து விடுகின்றன கவிதையின் மண் வாசனை மிக்க வரிகள். எளிய , பெரும்பாலும் ஈரசை அல்லது மூவசைச் சீர்களை உள்ளடக்கிய வரிகள், அவ்வப்போது வாசிப்பவர் உள்ளங்களை வருடிச் செல்லும் மோனைகள், எதுகைகள் கவிதையை மேலும் பிடிக்க வைத்து விடுகின்றன.
கவிதையில் வரும் என்னை என் பால்ய பருவத்துக்கு இழுத்துச் சென்ற மண் வாசனை மிக்க வரிகள் சில வருமாறு:
1.
விளக்குவைத்துக்
குந்தி இருந்து படிக்கத் தலைகுனிந்தால்
அந்துப் பூச் செல்லாம்
அநேகம் படை எடுத்து
வந்துவந்து மொய்க்கும்
வரியில் முகத்திலெல்லாம்.
தொல்லை தராது
சுவரில் இருந்து வரும்
பல்லி, அவற்றைப் பசியாறிச் செல்வதுண்டு!
அட்டூழியம் செய்யும்
எலியை அழிப்பதற்குப்
பட்டடையில் எங்களது
பூனை படுத் திருக்கும்!
2.
பள்ளவெளி தூரப் பயணம் தான்;
நாம் அங்கே
போகும் பொழுதே பொழுதேறிப் போயிருக்கும்
காலை வெயிலின் கதிர்கள்
மரம் செடிகள்
மேலே விழுந்து, மினுங்கி
வளைந்து வரும்
வாய்க்காலில் கொட்டி
வழி எங்கும் புன்னகைக்கும்.
வாய்க்கால் அருகே
வளர்ந்த மருதையெல்லாம்
காய்த்துக் கிடக்கும்
கிளிகள் கலகலகலப்பாய்க்
கத்திப் பறக்கும்
கிளைகள் சலசலக்கப்
பொத் தென்று வீழ்ந்து ஓடிப்
போகும் குரங்குகள்
சற்றெம்மை நோக்கிப் பின் தம்பாட்டில் ஓடிவிடும்.
புல்நுனிகள் எங்கும்
பனியின் பொழு பொழுப்புத்
தள்ளித் தெரியும்
சரிவில் எருமைசில
நின்று, தலையை நிமிர்த்தி எமைப்பார்க்கும்.
எட்டி அடிவைத்து நடக்கும் இடத்திருந்து
வெட்டுக் கிளிகள் சில
'விர்' என்று பாய்ந்து செல்லும்
கஞ்சான் தகரைகளில்
குந்திக் களித்திருக்கும்
பஞ்சான் எழுந்து பறந்து
திரும்ப வரும்.
அப்போது நான் சிறுவன்.
அந்த வயற் பாதை
இப்போதும் நன்றாய்
நினைவில் இருக்கிறது.
எங்கள் வயல் அருகில் எல்லாம்
மருதமரம்
செங்காய்ப் பருவத்தில்
தின்னவரும் கிளிகள் அத்தனையும் உண்டுதான்;
ஆனாலும் அங்கெல்லாம்
தொட்டாச் சுருங்கி
தொடர்ந்து வளர்ந்திருக்கும்
சட்டென்று காலின்
சதையைக் கிழித்துவிடும்.
இக்கவிதை நுஃமானின் 'தாத்தாமாரும் பேரர்களும்' கவிதைத்தொகுப்பில் உள்ள கவிதைகளில் ஒன்று. தொகுப்பை வாசிக்க -
'https://noolaham.net/project/01/82/82.pdf
முகநூல் எதிர்வினைகள் சில:
Thassim Ahamed
பேராசிரியர் நுஃமானின் "நிலம் எனும் நல்லாள்" நெடும் கவிதை "இலம் என்று அசைஇ இருப்பாரைக்காணின் நிலம் எனும் நல்லாள் நகும்"எனும் திருக்குறளைப் பிரதிபலிப்பதாகும். இலங்கையின் தென்கிழக்குப் பிரதேச முஸ்லிம்களின் வாழ்வியலில் நிலச்சுவாந்தர்களாகிய
' போடிமார்' அந்நிலங்களில் வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து போடிமாரை வாழவைக்கும் 'முல்லைக்காரர்'களின் நிலைமை ஆகியவற்றை உட்பொருளாக எடுத்துக்காட்டும் வர்க்க முரண்பாட்டைச் சித்தரிக்கும் நெடும் கவிதையாகும்;இக்கவிதை பூமியின் எல்லா இடங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்திருப்பதானது உங்கள் இரசனைக்குறிப்புமூலம் வெளிப்படுவது சிறப்பான ஒன்றாகும்.
Selvaranjany Subramaniam
அருமையான உணர்வூட்டம் தரும் கவிதைகள். அனுபவரீதியான ரசனையும் சிறப்பு.
Maunaguru Sinniah (பேராசிரியர் சி. மெளனகுரு)
நண்பர் நுஃமானின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் காரணம் அவை மிக எளிமையானவை. ஆனால் ஆழமானவை. சமூகத் தன்மை மிகுந்தவை படிக்காத பெண்கள்கூட கவி பாடும் மரபில் வந்தவர் அல்லவா? "தாத்தா மாரும் பேரப்பிள்ளைகளும்" "அதிமானுடன்"
நெடுங் கவிதையினால் கவரப்பட்ட நான் அதனை ஒரு நாடகம் ஆக்கினேன். இது நடந்தது 1980களில். யாழ்ப்பாணம் வீரசிங்கம் அரங்கில் அவைக்காற்று கழகத்துக்காக நான் தயாரித்த நாடகம் அது. நானும் அதில் நடித்திருந்தேன். அதற்கான ஒளி அமைப்புகள் செய்தவர் பாலேந்திரா. அதனைத் தயாரிக்கும் படி என்னைத் தூண்டியவர் லண்டனில் இன்று வதியும் மு.நித்தியானந்தன். அடக்குமுறையாளர்களின் அடிபட்டு அடக்கப்படுவோர் சிந்திய இரத்த துளிகளில் இருந்து மனிதர்கள் தோன்றுகிறார்கள். அடக்குமுறை அவர்களை அதிக மானுடர்கள் ஆக்குகின்றன. அதிமானுடர் நாம் அதிகமானுடர் ஆம். என ஆர்ப்பரித்த வண்ணம் அந்த மனிதக் கூட்டம் ருத்ர தாண்டவம் ஆடுகிறார்கள்.
நானும் அவர்களும் ஒருவனாக ஆடுகிறேன். நாடகம் அத்தோடு முடிவடைகிறது. பலத்த வரவேற்பு பெற்ற நாடகம் அது. அதில் யாழ்ப்பாணத்தின் புகழ்பெற்ற நடிகர்களான பிரான்சிஸ்ஜனம் சிதம்பரநாதன் ஆகியோர் நடித்திருந்தனர். கிரிதரனின் இந்த குறிப்பை ப்
பார்க்கும்போது சூழ்நிலைகள் பொருந்தி வந்தால் அதனை மீண்டும் தயாரிக்கலாம் போல உந்துதல் எழுகின்றது. நன்றி கிரிதரன்.
Thamilselvan Kanagasundaram
என் ஆசாணும் அன்புள்ளம் கொண்டவரும் விரிவுரை மண்டபத்தில் ஈழத்துகவிதைகள் பற்றிய விரிவுரைகள் சோழர்கால கல்வெட்டுகள் போல்
இன்றும் என்மனப்பாறைகளிலும் ஞாபகபடிக்கற்களிலும். மாஷா அல்லா நீண்டகாலம் வாழவேண்டும்.