"ஈழ இலக்கியச் சூழலை எடுத்துப் பாருங்கள். சிங்கள இலக்கியம் உலக அளவில் கவனிக்கப்படுவது. சிங்கள நாடகமும் சினிமாவும் கலைமதிப்பு கொண்டவை. நமக்கு அங்குள்ள ஈழ இலக்கிய ஆளுமைகள் எவரேனும் சிங்கள இலக்கியம், சினிமா, நாடகத்தை அறிமுகம் செய்தார்களா? சரத்சந்திர எதிரிவீர அல்லது பிரசன்ன விதானகே பற்றி தமிழில் எவரேனும் எழுதியுள்ளனரா?"
பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இவ்விதம் கூறியதாக அறிந்தேன். ஆச்சரியம் தரவில்லை. உண்மையில் ஜெயமோகனை அறிந்தவர்களுக்கு இக்கூற்று ஆச்சரியம் எதனையும் தராது. ஜெயமோகனைப் பொறுத்தவரையில் தன்னைத் தன் துதிபாடிகள் மட்டும் கதைத்தால் போதாது. தன் எதிரிகளும் கதைக்க வேண்டும். அதற்கு அவர் கையாளும் தந்திரங்களில் ஒன்று தான் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறுவது. ஜெயமோகனைக் கடுமையாக விமர்சிப்பவர்களுக்கு மெல்ல அவல் கிடைத்த மாதிரி இச்சர்சைக்குரிய கருத்துகள். ஆளுக்கு ஆள் கொதித்தெழுந்து துள்ளிக் குதிக்கத் தொடங்கி விடுவார்கள். ஜெயமோகனுக்குத் தேவை அதுதான். இதைப்பார்த்து ஆனந்தமடைவதில் அவருக்குப் பெரு விருப்புண்டு. தன் துதிபாடிகளின் பாராட்டுரைகளை விட எதிரிகளின் வசவுகளில் குளிர் காய்பவர் ஜெயமோகன்.
ஜெயமோகனின் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை எதிர்கொள்பவர்கள் உணர்ச்சி வெறியில் ஆதாரங்களை முன் வைப்பதில்லை. அவர் சொன்னார். இவர் சொன்னார் என்னும் போக்கில் மட்டம் தட்டத்தொடங்கி விடுவார்கள். இதற்குப் பதில் ஜெயமோகனின் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தர்க்கரீதியாக ஆதாரங்களுடன் எதிர்கொள்வதன் மூலம் அவரது சர்ச்சைக்குரிய விடயங்களின் உண்மையற்ற தன்மையை பொதுவெளிக்கு அறியத்தரலாம்.
இது பற்றிய தனது முகநூற் பக்கப் பதிவில் எழுத்தாளர் தர்மினி பின்வருமாறு கூறுவார்:
"ஆதிரை வெளியீடுகள் சிங்களத்திலிருந்து தமிழுக்கு கொண்டுவந்த நான்கு தொகுப்புகளை சின்னப்பிள்ளை நானே படிச்சிருக்கிறேன். அம்பரய, நீண்ட காத்திருப்பு வடலி வெளியீடுகள். இன்னும் சிங்களத் திரைப்படங்கள் பற்றி விமர்சனங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளன. ஆக்காட்டி சஞ்சிகையில் திருமதி பெரேரா,பொட்டு மற்றும் சில கதைகள் ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில் வெளியாகின. என்.சரவணன் தொடர்ந்து பல விடயங்களை எழுதி வருகிறார். ஷோபாசக்தி, இளங்கோ,உமா,சந்தூஸ், லறீனா…இன்னும் பலரும் சிங்கள இலக்கியம், ஆளுமைகள் என்று எழுதியிருக்கிறார்கள். "
ஜெயமோகன் தனது சர்ச்சைக்குரிய கேள்விக்கான பதில்களைப் பெறுவதற்கு உண்மையில் இணையத்தில் தேடினாலே போதுமானது . நூலகம் தளத்திலுள்ள சில தொகுப்புகளைக் கீழே தந்துள்ளேன். இவை ஜெயமோகனுக்கு இவ்விடயத்தில் நல்லதோர் அறிமுகத்தை, அறிவைத் தருமென்று நினைக்கின்றேன். அதே சமயம் மல்லிகை, திசை என்று இலங்கையில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அவ்வப்போது சிங்களக் கலை, இலக்கிய, சமூக மற்றும் அரசியல் ஆளுமைகளின் பல்வகைப்பட்ட படைப்புகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டுதானுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
உதாரணத்துக்குச் சில:
1. சிங்கள சிறுகதைத் தொகுப்பு 1: கலங்கரை விளக்கமும் ஏனைய கதைகளும் - யாக்கூத், எம். எச். எம்., திக்குவல்லை கமால், கராமத், எஸ். ஏ. ஸீ. எம்.
வாசிக்க - https://noolaham.net/project/993/99260/99260.pdf
2. சிங்கள சிறுகதைத் தொகுப்பு 2: ராஜினி வந்து சென்றாள் - யாக்கூத், எம். எச். எம்., திக்குவல்லை கமால், கராமத், எஸ். ஏ. ஸீ. எம்.
வாசிக்க - https://noolaham.net/project/993/99261/99261.pdf
3. சிங்கள நாடகக் கலை ஆளுமைகள் - பாகம் 1 - மக்கள் களரி வெளியீடு
வாசிக்க - https://noolaham.net/project/913/91226/91226.pdf
4. சிங்களச் சிறுகதைகள் - தொகுப்பாளர் - செங்கை ஆழியான்
வாசிக்க - https://noolaham.net/project/150/14929/14929.pdf
5. பேராசிரியர் சி.மெளனகுருவின் 'பேராசிரியர் எதிரிவீர சரச்சந்திரவும் ஈழத்து நாடக மரபும்'
வாசிக்க - https://noolaham.net/project/17/1636/1636.pdf
6. நுட்பம் (1980/1981): 'பேராசிரியர் சரத்சந்திராவும் தேசிய நாடகமும்' - எம்.எஸ்.எம்.அனஸ்
வாசிக்க - https://noolaham.net/project/1049/104833/104833.pdf