உண்மையிலேயே எழுத்தாளர் நந்தினி சேவியரின் மறைவுச் செய்தி அதிர்ச்சியாகத்தானிருந்தது. தனது எழுத்துகளைச் சமூகச் சீர்கேடுகளைச் சுட்டெரிக்கும் போர்வாளாகப் பாவித்தவர் அவர். எப்பொழுதுமே தான் நம்பும் கோட்பாடுகள் விடயத்தில் , குறிப்பாக மார்க்சியக் கருத்துகள் விடயத்தில், சமரசம் செய்து கொள்ளாதவர். சமூக, அரசியுல் & பொருளியல் விடுதலைக்கான மார்க்சியக் கருத்துகள் ரீதியில் அமைந்த போராட்டம், அதனுடன் இணைந்த தீண்டாமைக்கெதிரான போராட்டம் என்பவற்றில் தெளீவான, உறுதியான கருத்துகளைக் கொண்டிருந்தார்.
அண்மைக்காலமாக அவராற்றிய இன்னுமொரு விடயமும் என்னை மிகவும் கவர்ந்தது. தான் வாசித்த, தனக்குப்பிடித்த இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் பற்றிய விபரங்களைச் சுருக்கக் குறிப்புகள் மூலம் ஆவணப்படுத்தியவர் அவர்.சிலர் அக்குறிப்புகளை உதாசீனப்படுத்தினர். அவை விமர்சனங்களல்ல என்றும் கிண்டல் செய்தனர். ஆனால் அவர்கள் அவற்றின் நோக்கத்தை, முக்கியத்துவத்தைக் காணத்தவறி யானை பார்த்த குருடர்கள் என்பேன். அவற்றின் மூலம் அவர் எழுத்தாளர்கள் பலரை ஆவணப்படுத்தியுள்ளார். அதுதான் அவரது நோக்கமும் கூட. அதனைக் காணத்தவறியவர்கள்தாம் அவற்றில் குற்றம் குறை கண்டார்கள். ஆனால் அதற்காக அவர் அதனை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அறிமுகப்படுத்திக்கொண்டேயிருந்தார். இலங்கைத் தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்கு உதவும் ஆவணக்குறிப்புகளாக அவை எப்போதுமிருக்கும்.
அவரது முகநூற் குறிப்புகளும் முக்கியமானவை. அவற்றினூடு அவரது சினிமா, இலக்கியம், அரசியல் பற்றிய எண்ண ஊட்டங்களை அறிய முடியும். அவை நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவுகள்.
அவரது இறுதிக்கால முகநூற் குறிப்புகள்:
செப்டம்பர் 11, 2021: "Sinopharm - 2nd dose. தடுப்பூசி கடுப்பேத்தி படுக்கையில் வீழ்த்தி விட்டது. எதுபற்றியும் சிந்திக்கவோ எழுதவோ முடிவில்லை.
மீண்டு எழுவேன். வருவேன்எழுதுவேன்"
செப்டம்பர் 9, 2021: "இனிப்போதும்! எனக்கே சலிக்குது!! எழுத இன்னும் பலது உண்டு"
அவரது இழப்பு எம்மைப்போல் பலருக்கும் அதிர்ச்சியுடன் கூடிய துயரம். அவரது இழப்பால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தவர், உற்றார் , உறவினர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இத்தருணத்தில் பதிவுகளில் வெளியான எனது பதிவொன்றினையும் பகிர்ந்துகொள்கின்றேன்.
நான் மதிக்கும் இலக்கிய ஆளுமைகள்: எழுத்தாளர் நந்தினி சேவியர்! - வ.ந.கிரிதரன் -
அண்மைக்காலமாக எழுத்தாளர் நந்தினி சேவியரின் முகநூற் பதிவுகளை ஆர்வத்துடன் படித்து வருகின்றேன். அதிகமான இவரது முகநூல் பதிவுகள் இவரது கலை, இலக்கியம் மற்றும் சமூக நீதி, பொதுவுடமை சமுதாய அமைப்பு ஆகியவை பற்றிய, ஆளுமைகள் பற்றிய விமர்சனக் குறுங்குறிப்புகளாக அமைந்திருக்கின்றன. இலங்கை அரசின் சாகித்திய விருது, கொடகே அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்படப் பல விருதுகளைப் பெற்ற ஈழத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளிகளிலொருவர்.
இவரது படைப்புகள் பலவற்றை நான் இன்னும் விரிவாக வாசிக்கவில்லை. ஆயினும் அவற்றை வாசிக்க வேண்டுமென்ற ஆர்வத்தினை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன இவரது முகநூற் குறிப்புகள். இவரது முகநூற் குறிப்புகள் மூலம் நான் இவரைப்பற்றி அறிந்து கொண்ட இவரது ஆளுமை பற்றிய பிரதான அம்சங்களாகப் பின்வருவனவற்றைக் கூறுவேன்:
1. மானுட சமூக விடுதலைக்காக இவர் வரித்துக்கொண்ட கோட்பாடு மாரக்சியக் கோட்பாடு. இலங்கையில் சீனசார்புக் கம்யூனிச அமைப்பினூடு, மானுட சமூக, பொருளாதார விடுதலைக்காக, கட்சியில் இணைந்து செயற்பட்ட இலக்கியப்போராளிகளிலொருவர் இவர். இவ்விடயத்தில் , தான் பின்பற்றும் கோட்பாடு விடயத்தில் இவர் மிகவும் தெளிவாக இருக்கின்றார். தீண்டாமை போன்ற சமூகப்பிரச்சினைகளுக்கு மார்க்சியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட கட்சியொன்றினூடு இணைந்து போராடுவதே ஒரே வழி என்பதில், வர்க்கப்போராட்டமே ஒரே வழி என்பதில் உறுதியாக இருக்கின்றார். இந்த அடிப்படையில் இவர் அரசியல் ஸ்தாபனங்களைப்பற்றி, ஆளுமைகளைப்பற்றித் தன் விமர்சனங்களை முன் வைக்கின்றார்.
2. அடுத்த இன்னுமொரு விடயம். இவர் யாருக்காகவும் தனக்குச் சரியென்று பட்டதை எடுத்துரைக்கத் தயங்குவதில்லை. தான் தெளிவுடன் அணுகும் அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் தன் வாதங்களை ஆணிதரமாக முன் வைப்பவர் இவர்.
3. தன் தனிப்பட்ட உடல்நிலை, பொருளியல் நிலை போன்ற விடயங்கள் தன் கலை, இலக்கியச் செயற்பாடுகளை, எண்ணங்களைத் திசை திருப்பி விடாதவாறு பார்த்துக்கொள்கின்றார்.
4. முகநூலை ஆக்கபூர்வமாகத் தொடர்ச்சியாகப் பாவித்துத் தன் எண்ணங்களை எடுத்துரைத்து வருகின்றார்.
5. கடந்த காலக் கலை, இலக்கிய மற்றும் அமைப்புகளின் செயற்பாடுகளை அவ்வப்போது இவ்விதமான குறிப்புகள் மூலம் பதிவு செய்வதோடு, அவை பற்றிய தன் விமர்சனங்களையும் முன் வைக்கின்றார். இவரது முகநூல் குறிப்புகளை வாசிக்கும்போது நான் இவரைப்பற்றி, அதாவது இவரது ஆளுமையைப்பற்றி, கலை, இலக்கிய மற்றும் அரசியல் பற்றிய கருததுகளை அறிந்து கொள்கின்றேன்; புரிந்து கொள்கின்றேன்.
இவரது முகநூல் குறிப்புகள் எனக்குப் பின்வரும் உண்மைகளை எடுத்துரைக்கின்றன:
1. இவரது கலை, இலக்கிய மற்றும் அரசியற் செயற்பாடுகளைப்புரிவதற்கு, மற்றும் இவரது ஆளுமையை அறிந்துகொள்வதற்கு மிகவும் உறுதுணையாக விளங்குவதால், அவற்றை ஒருபோதுமே புறக்கணிக்க முடியாது. எனவே இவரைப்போன்ற ஆளுமைகளின் முகநூற் குறிப்புகள் இலக்கியச்சிறப்பு மிக்கவை; புறக்கணிக்க முடியாதவை.
2. இலக்கியத்திறனாய்வாளர்கள் இவரைப்போன்ற படைப்பாளிகளைப்பற்றிய ஆய்வுகளுக்கு அவர்களது படைப்புகளை மற்றும் கவனத்திலெடுப்பதுடன் நின்று விடாது, இணையம் குறிப்பாகச் சமூக ஊடகங்களில் அவர்கள் எழுதும் குறிப்புகளையும் (குறுங்குறிப்புகள் / நெடுங்குறிப்புகள்) கவனத்திலெடுத்துக்கொள்ள வேண்டும்.
இவரது படைப்புகளை இயலுமானவரையில் வாசித்து இவரைப்பற்றி எனது புரிதல்களை இன்னும் அதிகரித்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகின்றேன். அதற்கு முக்கிய காரணம் இவரது படைப்புகளுடன் இவரது முகநூல் குறிப்புகளும்தாம்.
உதாரணத்துக்கு நந்தினி சேவியர் அவர்களின் முகநூற் குறிப்புகள் சிலவற்றை இங்குப் பட்டியலிடுகின்றேன்:
நந்தினி சேவியரின் முகநூற் குறிப்புகள் சில:
* - "நாங்கள் சரியான கருத்தைத்தான் பேசுகிறோம், அவற்றில் தவறுகள் இருப்பதை சுட்டிக்காட்டினால், நியாயமானால் திருத்திக் கொள்ள சித்தமாகவும் இருக்கிறோம்!"
* - "வெறுப்பு! - கெட்டவர்களை விமர்சிக்காது. அவர்கள் தமிழ் உணர்ச்சியாளர்களாக இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களைச் சிலாகிக்கும், நான் மதிக்கும் சில நண்பர்கள் மீது கடும் வெறுப்பில் இருக்கிறேன். என்னால் அவர்கள்போல் இருக்க ஒருபோதும் முடியாது.!"
* - "தவறு -ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி எழுதும் படைப்புகள் எல்லாம் முற்போக்கு இலக்கியம் எனும் மயக்கம் பலரிடம் இருப்பதை நான் அவதானிக்கிறேன். அவற்றில் சில அடித்தள மக்களின் வீரத்தை கொச்சைப் படுத்துவதாகவும்,அவர்களின் பலவீனங்களை அம்பலப்படுத்துதாகவும் இருப்பதை இவர்கள் அவதானிப்பதாகத் தெரியவில்லை. அவற்றை கடுமையான விமர்சனத்துக்கு உட்படுத்தாது தமிழகத்தில் மீள்பிரசுரம் செய்வது எதிரணியினருக்கு நாம் தடி எடுத்துக்கொடுக்கும் செயல் என்பதை சம்பந்தப்பட்டவர்ளுக்கு தெரியப்படுத்துறேன்."
* - " சுயம் இழத்தல் மிகப் பெரும் துயரம்!"
* - "கலைஞர்களே, இலக்கியவாதிகளே! இந்த உலகில் வெகுமதியுள்ள எந்தப் பொருளையும் தொழிலாளர்களும், விவசாயிகளும்தான் உருவாக்கியுள்ளார்கள். ஆகவே கலையும் இலக்கியமும் அவர்களுக்கு சேவை புரிய வேண்டும். அவர்களுக்கு சேவை புரிவதற்காக கலைஞர்களும், இலக்கியவாதிகளும் அவர்கள் மத்தியில் சென்று அவர்கள் வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும். விவசாயிகளின் சேறு சகதியைப் பூசித்தான் இதனை அவர்கள் செய்யமுடியும்.!"
* - "சேறு சகதி. - விவசாயிகளின் கால்களில் படிந்திருக்கும் சேறு சகதியைக் கழுவிவிட முடியும். ஆனால் பூர்ஷ்வா அறிவுஜீவிகளின் மனங்களில் படிந்திருக்கும் சேறு சகதியைத் துப்பரவு செய்ய பெரிதும் பாடுபடவேண்டும். சிலரைப் பொறுத்தவரை துப்பரவு செய்யவே முடியாது.!"
* - "நாங்கள் மலைகளை அகற்றிய மூடக்கிழவனின் சந்ததியினர்!"
* - " பெரியாரியம், அம்பேத்கரியம் என்பவற்றைவிட மார்க்சியம், லெனினியம், மாவோயிசம் எனக்கு நிறைந்த ஆதர்சமாக இருக்கிறது. ஏனெனில் அவற்றுக்குள் முரண்பாட்டை நான் காணவில்லை மார்க்சியத்தின் வளர்ச்சியே மாவோயிசம்.!"
* - "உன்னதம்,அற்புதம் -
எங்காவது ஒரு கூட்டத்தில் உன்னதம், அற்புதம் என்னும் வார்த்தைகள் அடிக்கொருதரம் உரத்த தொனியில் உச்சரிக்கப்படுகிறது என்றால் அக் கூட்டம் "ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம், அல்லது இயேசு அவசரமாக வருகிறார் என்பது போன்ற ஜெபக்கூட்டம் என தவறாக எண்ணிவிடாதீர்கள். அது ஒரு இலக்கியக்கூட்டந்தான். பேசிக்கொண்டிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய ஜாம்பவானாக கருதிக்கொண்டிருக்கும் ஒரு பட்டதாரியான முன்னாள் ஆசிரியர் என்பதையும் நீங்கள் கவனம் கொள்ளவேண்டும்." :-)
* - " நாங்கள் உதிரியாக இருக்கிறோம் உண்மை ஆனால் உறுதியாகவும் இருக்கிறோம் அதுவும் உண்மை.!"
* - " சுயநலவாத தலைமைகள் இருக்கும்வரை, இனத்துக்கிடையிலோ இனங்களுக்கிடையிலோ ஒற்றுமையை எதிர்பார்க்க முடியாது.! "
* - " எளிமை அழகு தான். ஆனால் ஏழ்மை அழகல்ல கொடுமை.!"
* - "சிலரை புகழ்வதின் மூலம் தாங்கள் யார்?. தங்களின் அறிவு முதிர்ச்சி என்ன? என்பதை பிறருக்கு தெரியப்படுத்திவிடுகிறார்கள் மெத்தப் படித்த வித்தகர்கள்!"
* - " நாளைப் பொழுது என்றும் நல்ல பொழுதாக உழைப்போம்.!"
* - " நிமிர்வு - நாம் மார்க்சிய இயக்கத்தில் இணைந்தது, நாளை இங்கு புரட்சி நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு அல்ல. அது ஒரு நீண்டபயணம் என்பதை நாம் அறிந்திருந்தோம். எதிர் பார்ப்போடு இணைந்தவர்களே எதிர் புரட்சியாளர்களாகினர். எத்தனை இடர் வரினும் அந்த இலட்சியத்தில் நாம் நிமிர்ந்தே நிற்கிறோம். அந்த இலட்சியம் நிறைவேற மரணபரியந்தம் உழைப்போம்.! நிச்சயம்!!."
* - "கடைசி வாங்கு - முதுகு சொறிய மனதில்லை. முன்னும் பின்னும் பந்தங்காவ விருப்பில்லை. விலாங்குத்தனம் எனக்கு இருந்ததில்லை
அதனால் என் அணிசார்ந்தவர்களின் கவனிப்பைக்கூட நான் பெறவில்லை.ஏகலைவனாக இருந்தேன். இப்போதும் இருக்கிறேன்.ஆயினும் கடைசி வாங்கில் எனக்கோர் இடமிருக்கிறது. இல்லாது விட்டாலும் நான் கவலைப்படமாட்டேன்.ஏனெனில் என்னை அறிந்த என் தோழமைகள் அகிலமெங்கும் உள்ளனர். அது ஒன்றே போதும். நன்றி என் தோழமைகளே,!"
இவரைப்பற்றிய மற்றுமிவரது படைப்புகளை உள்ளடக்கிய இணையத்தளங்கள்:
1. எழுத்தாளர் லெனின் மதிவானத்தின் 'முச்சந்தி' வலைப்பதிவு: நந்தினி சேவியர் - எதிர் நீச்சல் போடும் படைப்பாளி! http://muchchanthi.blogspot.ca/2011/05/blog-post_14.html
2. எழுத்தாளர் நந்தினி சேவியர் (விக்கிபீடியாக் கட்டுரை): https://ta.wikipedia.org/s/k9
3. 'நூலகம்' தளம்: அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் (சிறுகதைத்தொகுப்பு) - http://noolaham.net/project/03/230/230.pdf
நன்றி: https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/3941--241-