என் அபிமானக் கவிஞர்களில் முதலிடத்தில் இருப்பவர் மகாகவி பாரதியார். இதற்கு முக்கிய காரணங்களாக அவரது கவிதைகளில் விரவிக்கிடக்கும் இருப்பு பற்றிய தேடல், சிந்தனைத் தெளிவு, சமூக, அரசியற் பிரக்ஞை, தீர்க்கதரிசனம், பூவுலக உயிர்கள் மீதான கருணை, இயற்கை மீதான நாட்டம் , பெண் விடுதலைச் சிந்தனைகள், சமூக அவலங்களுக்கெகிரான அறை கூவல்; என்று பலவற்றைக் கூறலாம்.
பாரதியுடனான என் தொடர்பு என் பால்ய பருவத்தில் என் அப்பா பாரதியார் கவிதைத்தொகுதியொன்றினை வாங்கித்தந்ததுடன் ஆரம்பமாகியது. அக்காலகட்டத்தில் தமிழில் வெளியான பல வெகுசன இதழ்களை வாங்கிக்குவித்த அப்பா பாரதியார் கவிதைகள், இராஜாஜியின் 'வியாசர் விருந்து', 'சக்கரவர்த்தித் திருமகன்' , புலியூர்க் கேசிகனின் உரைகளுடன் வெளியான சங்ககால நூல்கள் எனப் பலவற்றையும் வாங்கித் தந்திருந்தார். அக்காலந்தொடக்கம் பாரதியின் கவிதைகள் என்னை ஆட்கொள்ளத்தொடங்கின. இன்றுவரை அவ்வாதிக்கம் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது.
பாரதியின் கவிதைகளின் முக்கிய சிறப்புகளிலொன்று மானுடப் பருவங்கள் அனைத்துக்கும் பொருந்தும் வகையில் அவை அமைந்திருப்பதுதான். . இதுவரைக் கால என் வாழ்வின் பல்வேறு பருவங்களிலும் அவரது பல்வேறு கவிதைகள் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்ந்திருக்கின்றன. பால்யப் பருவத்தில் பிடித்த அவரது கவிதைகள் வேறு. பதின்ம வயதுகளில் பிடித்த கவிதைகள் வேறு. இளமைப்பருவத்தில் பாதித்த கவிதைகள் வேறு. உதாரணத்துக்கு பால்ய பருவத்தில் அவரது 'குடுகுடுப்பைக்காரன்' கவிதை, 'மழை' கவிதை போன்ற கவிதைகள் பிடித்திருந்தன. பதின்ம வயதுகளிலோ 'காற்று வெளியிடைக் கண்ணம்மா' போன்ற பாடல்கள் பிடித்திருந்தன. தேசிய விடுதலைக் கவிதைகள் பிடித்திருந்தன. இளமைப்பருவத்தில் 'நீற்பதுவே. நடப்பதுவே' போன்ற தத்துவச் சிறப்பு மிக்க கவிதைகள் பிடித்திருந்தன. அதே சமயம் எப்பருவங்களிலும் வாசிப்பில் இன்பம் தருபவை அவரது கவிதைகள்.
தேசிய விடுதலையைப் பாடிய அவரது கவிதைகள் சமூக விடுதலையைப் பாடின. மானுட விடுதலையையும் பாடின. இவ்விடயங்களில் அவருக்கிருந்த தெளிவு அவரது படைப்புகள் முழுவதும் விரவிக்கிடக்கின்றது.
செப்டெம்பர் 11 பாரதியாரின் நினைவு தினம். அவர் மறைந்த தினம். அதனையொட்டி பாரதியாரைப் பற்றி நான் அவ்வப்போது எழுதிய சில முக்கிய கட்டுரைகளை அடுத்து வரும் தினங்களில் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.
எனக்குப் பிடித்த பாரதியாரின் கவிதைகளிலொன்று:
சென்றதினி மீளாது,மூடரே!நீர் எப்போதும்
சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
* பாரதியார் ஒவியம் விகடன் இதழிலொன்றில் வெளியானது. அதற்காக நன்றி விகடனுக்கு.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.