தாயகம் (கனடா) பத்திரிகையில் வெளியான எனது சிறுகதை 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை! பின்னர் அச்சிறுகதை இந்தியாவில் மித்ர பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'பனியும் பனையும்' புலம்பெயர் தமிழர் சிறுகதைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருந்தது. பின்னர் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும் வெளியானது. அச்சிறுகதையை குறுநாடகமாக்கியுள்ளேன். அதனையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள். - வ.ந.கி
[ தமிழ்க் கனேடியனான , 'டொரோண்டோ'வில் வசிக்கும் பொன்னையா வாகனத்தில் பஞ்சாப்காரனின் கராஜ் நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றான். அது ஒரு ஞாயிற்றுக்காலை. ]
பொன்னையா (தனக்குள்): வரவர நகரம் பெருக்கத்தொடங்கிட்டுது. முன்பென்றால் ஞாயிறு விடுமுறை நாள். கடைகளைத் திறக்க மாட்டான்கள். இப்ப நிலை மாறிட்டுது. ஞாயிறும் கடைகளைத் திறக்கிறான்கள். 'ட்ரஃபிக்'கும் அதிகமாயிட்டுது. பஞ்சாப்காரன் திட்டப்போகின்றான்."
பொன்னையா சூழலை மறக்கப் பாடுகின்றான்.
"நகரம் பெரிதானது.
நகரத்து மாந்தரின் தரமோ
சிறிதானது. ஆம்!
நகரம் பெரிதானது.
நகரத்து மாந்தரின் தரமோ
சிறிதானது.
அளவுக்கேற்ற வீக்கமில்லை. இங்கு
அளவுக்கேற்ற வீக்கமில்லை.
ஆமாம்! அளவுக்கேற்ற வீக்கமில்லை.
நகரம் பெரிதானது.
நகரத்து மாந்தரின் தரமோ
சிறிதானது.
நகரம் பெரிதானது.
நகரத்து மாந்தரின் தரமோ
சிறிதானது."
'டிரஃபிக்' ஜாம் காரணமாகப் பின்னாலிருந்தவர்கள் ஹோர்ன்களை மாறி மாறி அடிக்கின்றார்கள்.
பொன்னையா தனக்குள்ளாகவே கூறிக்கொள்கின்றான்:
"நகரம் பெரிதானது. ஆனால் நகரத்து மனிதரோ பெரிதானவரல்லர். பொறுமையற்றவர்கள். சுயநலப்பெருமை இப்பொறுமையின்மையின் முக்கிய காரணம். தனிமனிதச் சொத்துரிமைச் சமூகத்தில் தனி மனித உணர்வுகளே முக்கியமானவை. பொது நலம் கருத்திச் சிந்திப்பவர்கள் அருகிக்கொண்டே வருகின்றார்கள்."
[ மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த ட்ரபிக் நின்று விட்டது. பொன்னையா காரிலிருந்து வெளியே வருகின்றான். அவனுக்கு முன்னால் வாகனன் வரிசை நீண்டிருந்தது. தொலைவில் 'ஸ்டீர்ட் காரொ'ன்று நிற்பது தெரிந்தது. அதன் பின்னால்தான் வாகனங்கள் நகர முடியாமல் நின்றிருந்தன. ]
பொன்னையா (தனக்குள்): இந்த 'ஸ்டீர்ட் காருக்கு (Street Car) முன் தான் ஏதுவோ நடந்திருக்க வேண்டும். என்னவாகவிருக்கும். ஏதாவது 'அக்சிடN'டாகவிருக்கும்.
அப்பொழுதுதான் முன்னுக்குப் போய் விடுப்புப்பார்த்து விட்டுத்திரும்பிக்கொண்டிருந்த சீனத்துக் கனடியனொருவனை பொன்னையா அவதானித்தான்:
பொன்னையா அச்சீனனை நோக்கிக் கேட்டான்: "ஹி மான்! வாட்ஸ் த மாட்டர். வாட்ஸ் கோயிங் ஒன்?"
சீனன் பதிலுக்குக் கூறினான்: "பீவ் எஸ்கேப் ஸ்லோட்டர்"
அருகிருந்தவர்கள் சிரித்தார்கள்: "ஹே. ஹே. ஹே. ஹோ. ஹோ. ஹோ"
அச்சீனமனிதன் அருகில் வேடிக்கை பார்தது நின்றவர்களின் சிரிப்பின் காரணம் புரியாது சிறிது குழப்பமடைந்தான். இவர்கள் சிரித்தால் நமக்கென்ன என்னும் பாணியில் உதடுகளைப்பிதுக்கி, தோள்களைக் குலுக்கி அப்பால் நகர்ந்தான்.
பொன்னையாவும் தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொள்கின்றான். அவனுக்குச் சீனனின் 'புரோக்கின் இங்கிலிஸ்' விளங்கியது.
பதிலுக்குப் பொன்னையா அச்சீனனை நோக்கிப் பின்வருமாறு கூறினான்: "தாங்ஸ் படி (Buddy)"
பொன்னையா தனக்குள் இவ்வாறு கூறிக்கொண்டான்:
" இவன் மாடொன்று 'ஸ்லோட்டர் ஹவுஸி'லிருந்து தப்பி வந்ததைத்தான் இவ்வாறு கூறுகின்றான். அந்த மாடுதான் இந்த ட்ரபிக்குக்குக் காரணமாகவிருக்க வேண்டும்."
பொன்னையா நடந்து சென்று 'ஸ்டீர்ட் காரி'ன் முன்புறத்தை நோக்கினான். அங்கே கசாப்பு இல்லத்திலிருந்து தப்பி வந்த மாடு ஒரு விதமான மரண பயத்துடன், ஆனால் உறுதியாக் கிடைத்த சுதந்திரத்தைப் பாதுகாக்கும் எண்ணத்துடன் போராடிக்கொண்டிருந்தது.
பொன்னையா அந்த மாட்டையே உற்று நோக்கினான். பின்னர் தனக்குள் இவ்விதம் கூறிக்கொண்டான்:
"மட மாடே! ஐந்தறிவு உயிரே! ஆறறிவு உயிருடன் போட்டி போட்டி வென்றிட உன்னால் முடியுமா? ஒரு போதும் முடியாது. ஆனால் நீ உறுதியுடன் போராடுகின்றாய். கிடைத்த சுதந்திரத்தின் தன்மை தெரியாத நிலையிலும் , அது நிரந்தரமா அல்லது தற்காலிகாலிமானதா என்பது தெரியாத நிலையிலும், நீ உறுதியுடன் உன் உயிர் காக்கப் போராடுகின்றாய். "
மாட்டின் மேல் மதிப்பும், கூடவே ஒருவிதப் பரிவும் தோன்றுகின்றது. பின்னர் தனக்குள் பின்வருமாறு எண்ணிக்கொள்கின்றான்:
"என்னருமை மாடே! உன்னைக் கசாப்பில்லத்தில் கூறு போடுவதற்காகப் பிடித்தபோது நீ என்ன செய்து கொண்டிருந்தாய்? உன் காதலியுடன் சல்லாபித்துக்கொண்டிருந்தாயா? அல்லது செல்லக் குழந்தைளைச் சீராட்டிக்கொண்டிருந்தாயா? என்ன செய்து கொண்டிருந்தாய் என் அருமை மாடே! ஊரிலென்றால் நான் உன்னை வாங்கி வீட்டுக்குக் கொண்டு சென்றிருக்கலாம். ஆனால் இங்கே... என்னை மன்னித்துக்கொள் மாடே! நான் இருப்பதோ தொடர்மாடிக்கட்டடமொன்றின் பொந்தினுள். அங்கு மட்டுமல்ல, அக்கட்டடத்து அயலில்கூட உன்னை வைத்துப் பராமரிக்க முடியாது. சட்டம் அதற்கிடங் கொடுக்காது. "
பொன்னையா சுற்றி ஒருமுறை பார்த்தான். அதனைப் பிடிக்கச் சென்ற கசாப்பில்லத்துத் தொழிலாளர்களை முறைத்து, முரண்டு பிடித்தபடியிருந்தது மாடு. இதற்கிடையில் மாட்டுப்பிரச்சினை பற்றிய விடயம் ஊடகங்களுக்குத் தெரிந்து பிரபல ஊடக நிறுவனங்களின் செய்திப்பிரிவைச் சேர்ந்தவர்கள் உரிய உபகரணங்களுடன் வந்து நேரடி ஒளிபரப்புச் செய்யத் தொடங்கினார்கள். பொலிஸாரும் வந்து விட்டார்கள்.
பொன்னையா பாடுகின்றான்:
"மாடோ மரணத்தைத் தவிர்க்கப் போராடுது.
மனிதரோ அதைக் கூறு போடப் போராடுகின்றார்.
மாடோ அடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடுது.
அற்ப மாந்தரோ அதற்கெதிராகப் போராடுகின்றார்.
மாடோ கிடைத்த சுதந்திரத்தைப் பேணப்போராடுது.
முட்டாள் மனிதரோ அதை நசுக்கப் போராடுகிறார்.
மாடோ முடிந்தவரை துணிந்து போராடுது.
மாந்தரோ முடிந்தவரை தணிக்கப் போராடுகிறார்.
மாடோ மரணத்தைத் தவிர்க்கப் போராடுது.
மட மனிதரோ மகிழ்ந்தே விடுப்புப் பார்க்கின்றார்.
உயிருக்காகப் போராடுது மாடு.
உரிமைக்காகப் போராடுது மாடு.
உறுதியுடன் போராடுது மாடு.
இரண்டிலொன்று பார்த்துவிடப் போராடுது மாடு.
இதை வேடிக்கை பார்த்து நிற்குது நாடு.
துயரத்தில் துவளாமல் போராடுது மாடு.
துயரத்தை வேடிக்க பார்த்து நிற்குது நாடு.
வீரத்துடன் போராடுது வீர மாடு.
வெட்கமற்று வேடிக்கை பார்க்குது நாடு.
அவர்களிலொருவன் தானே நானும்.
அவர்களிலொருவன் தானே நானும்.
அவர்களிலொருவன் தானே நானும்.
ஆம்! வேடிக்கை மனிதர்களில் ஒருவன் நானே.
ஆம்! வேடிக்கை மனிதர்களில் ஒருவன் நானே.
ஆம்! வேடிக்கை மனிதர்களில் ஒருவன் நானே."
இறுதியில் மாட்டுப் பிரச்சினை முடிவுக்கு வருகின்றது. பொலிசார் பல வழிகளில் முயற்சி செய்தும் மாட்டை வெற்றிகொள்ள முடியவில்லை. இறுதியில் ட்ராங்குலைசர் பாவித்து அதனை மயக்கி மீண்டும் கசாப்புக் கூடத்துக்கு எடுத்துச் செல்கின்றார்கள்.
பொன்னையா தனக்குள்:
"என் அருமை மாடே! உனை நான் போற்றுகின்றேன்.
என் அருமை மாடே! உன் முயற்சியை நான் போற்றுகின்றேன்.
என் அருமை மாடே! நீ வாழ்க!
என் அருமை மாடே! நீ வாழ்க!
கிடைத்த சுதந்திரமோ தற்காலிகம்.
கிடைத்தது நிலைத்திட நீ போராடினாய்!
கிடைத்த இருப்போ குறுகியது.
கிடைத்ததை பாதுகாத்திடப் போராடினாய்.
இருப்பைத் தக்க வைக்க
இறுதிவரை போராடினாய்
என் அருமை மாடே!
என் அருமை மாடே!
ஊரே திரண்டு நின்று வேடிக்கை பார்த்தது.
உலகமே திரண்டு நின்று வேடிக்கை பார்த்தது.
நீயோ தனித்துப் போராடினாய்.
நீயோ விடாமுயற்சியுடன் போராடினாய்.
நீயோ நம்பிக்கை தளராமல் போராடினாய்.
நீ வாழ்க! என் அருமை மாடே!
நீ வாழ்க!
நாடே உனை துவம்சம் செய்தபோதும்
மாடே! நீ மூர்க்கத்துடன் போராடினாய்.
இருப்பின் இறுதிக்கணம் வரை போராடினாய்.
என் அருமை மாடே! நீ வாழ்க!
வேடிக்கை மனிதரைப்போல் நீ வீழ்ந்திடவில்லை.
என் அருமை மாடே! நீ வீழ்ந்திடவில்லை.
நீ வீழ்ந்திடவில்லை. நீ வீழ்ந்திடவில்லை.
நீ வீழ்ந்திடவில்லை. நீ வீழ்ந்திடவில்லை."
[ திரை வீழ்ந்தது. நாடகம் முடிந்தது.]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.