எழுத்தாளர் தீபச்செல்வனின் நாவலான 'நடுகல்' சிங்கள மொழியில் 'கடுல்ல' பதிப்பக வெளியீடாக வெளியாகியுள்ளது. சிங்கள மொழிபெயர்ப்பினைச் செய்திருப்பவர் ஏற்கனவே பல தமிழ் நூல்களை மொழிபெயர்த்துள்ள எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த.
இச்செய்தியினை அவரே அறியத்தந்திருந்தார். நன்றி சரத் ஆனந்த. நாவலாசிரியர் தீபச்செல்வனுக்கும் வாழ்த்துகள்.
ஜி.ஜி.சரத் ஆனந்த உண்மையிலேயே தற்போதுள்ள சூழலில் மகத்தான சேவையொன்றினைச் செய்து வருகின்றார். சிங்கள, தமிழ் மக்களுக்கிடையில் இவரது மொழிபெயர்ப்புகள் புரிந்துணர்வை வளர்க்க, தமிழ்ப்படைப்புகளை சிங்கள மக்கள் அறிந்து
கொள்ள இவரது மொழிபெயர்ப்புகள் வழி வகுக்கின்றன.
மேலும் இவர் தானே வாசித்து , இனங்கண்டு மொழிபெயர்ப்பதற்கான படைப்புகளைத் தெரிவு செய்கின்றார். அது நல்லதொரு விடயம். நம்மவர்களோ தமிழ்ப்படைப்புகளை இன்னொரு மொழிக்கு மொழிபெயர்ப்பதற்கு, குழுக்களாக இயங்கி , தமக்குச்
சார்பானவர்களின் படைப்புகளைத் தெரிவு செய்வார்கள். பல திறமான படைப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும் அவற்றைப் படைத்தவர்கள் அவர்களது வட்டத்தில் இல்லையென்பதால். இந்நிலையில் சரத் ஆனந்த தானே வாசித்து, அவற்றைத் தெரிவு செய்வது பாராட்டுக்குரியது.
பிரபல கலை,இலக்கிய விமர்சகர் இந்திரன் எழுத்தாளர் சு.ரா.வின் பின்வரும் கூற்றினைத் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்:
"நல்ல எழுத்தாளர்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். மோசமான எழுத்தாளர்கள் சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள். - --சுந்தர ராமசாமி"
டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, ஜெயகாந்தன், பஷீர், தகழி, ஜானகிராமன், புதுமைப்பித்தன், பாரதியார்.. தனது குறுகிய கால வாழ்வில் இவர்களைப்போல் பலர் நிறைய எழுதியவர்கள். ஜெயமோகன் போன்றவர்கள் நிறைய எழுகின்றவர்கள். சுந்தர
ராமசாமியே சுறுசுறுப்பாய் இயங்கிவர்தான். நிறைய எழுதியவர்தான். எனவே சு.ரா.வின் கூற்றைப் பொதுவானதொரு கூற்றாக எடுக்க முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இவ்விதம் கூறுவது சிலருக்கு வாடிக்கை. என்னைப்பொறுத்தவரையில்
உண்மையான எழுத்தாளர் பாரதியைப்போல் நிறைய வாசிப்பவர்; நிறைய எழுதுபவர்; நிறைய சிந்திப்பவர். அருந்ததி ராயைப்போல் , மெளனியைப்போன்றவர்களும் இருக்கின்றார்கள். அவர்கள் அரிதானவர்கள்.
என்னைக்கவர்ந்த எழுத்தாளர்கள் அதிகமாக சமூக, அரசியல், இலக்கியக் களங்களில் இயங்கியவர்கள்; இயங்குபவர்கள். அதிகம் சிந்திப்பவர்கள்; அதிகம் எழுதுபவர்கள். அவர்கள்தம் சிந்தனைகள், எழுத்துகள், உரைகள் எனக்கு மிகவும் விருப்பமானவை.
நிறைய வாசியுங்கள்! நிறைய சிந்தியுங்கள்! நிறைய எழுதுங்கள்!
சூழல்களை மீறியவர்கள்!
கார்ல் மார்க்ஸ் வறுமையில் வாடியபோதுதான் மூலதனத்தை எழுதினார். அவரது குழந்தையொன்று இறந்தபோது கூட வறுமை அவரை வாட்டியது. இருந்தும் எழுதினார். மூலதனத்தை உலகுக்கு வழங்கினார். புகழ் பெற்ற 'முத்து' போன்ற நாவல்களை எழுதி, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஜோன் ஸ்டீன்பெக் வறுமையில் வாடியவர்தான். சார்ள்ஸ் டிக்கன்ஸ் குடும்ப வறுமை காரணமாகப் படிப்பை நிறுத்திப் பல்வேறு வேலைகளைச் செய்தார். மார்க்சிம் கோர்க்கியின் நிலையும் இதுதான். எழுத்தாளர் ப.சிங்காரம் தமிழகத்தில் சிங்கார வாழ்க்கை வாழவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் இருந்தவாறே அவரது புகழ்பெற்ற நாவல்களை எழுதினார். இலங்கையில் கூட வாழ்க்கை முழுவதும் வறுமையில் வாடிய நிலையில்தான் எழுத்தாளர் அ.செ.முருகானந்தன் எழுதிக்கொண்டிருந்தார். இறுதியில் வறுமை அல்ல முதுமைதான் அதனை நிறுத்தியது. புதுமைப்பித்தனை வறுமை வாட்டியது. இறுதி வரை எழுதிக்கொண்டேயிருந்தார். அவர் அனுபவித்த வறுமையினை அனைவரும் அறிவர். அவ்வறுமையின் மத்தியிலும் அவர் எழுதியவை, மொழிபெயர்த்தவை வியக்க வைப்பவை. விந்தனையும் வறுமை விட்டு விடவில்லை. ஆனால் அது அவர் எழுதுவதை நிறுத்தவில்லை. மகாகவி பாரதியாரையும் வறுமை விட்டு வைக்கவில்லை. கூடவே அரசியல்ரீதியிலான நெருக்கடிகள். இவற்றுக்கு மத்தியில்தான் அவர் எழுதிக்குவித்தார். அதுவும் அவர் வாழ்ந்ததோ முப்பத்தொன்பது ஆண்டுகள்தாம்.
இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். மனிதர்களை அவர்களது இலட்சியங்கள், கனவுகள், விருப்பங்கள், வாசிப்பு போன்றவைதாம் வழி நடாத்துகின்றன. எத்தகைய சூழல்களில் அவர்கள் இருந்தபோதும், வாழ்ந்தபோதும் அவர்களை அவைதாம் வழிநடாத்திச் செல்லுகின்றன. இதனால் தான் வறுமையில் வாடியவர்களால், வாழ்க்கையே போர்க்களமாகப் போர்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களால், சிறைகளில் வாடியவர்களால், விடுதலைப்போராளிகளாகக் காடுகளிலும், மலைகளிலும் மறைந்து போராடியவர்களால் எல்லாம் எழுத முடிந்திருக்கின்றது. ஆனால் பெரும்பாலும், சாதாரண மனிதர்களால் இவ்விதம் செயலாற்ற முடிவதில்லை.
கொரொனாவின் இரண்டாவது அலை மிகவும் கடுமையாக இந்தியாவைத் தாக்கியுள்ளதை வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பலர் குழந்தைகளை, சகோதரர்களை, நண்பர்களை என உறவுகள் பலரைப்பறிகொடுத்திருப்பதை முகநூலில் நிறைந்து கிடக்கும் துயர் செய்திகள் தெரிவிக்கின்றன.
நண்பர்களே! அவதானமாக இருங்கள். இதனை மிகவும் இலேசாக எடுத்துக்கொள்ளாதீர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் தடுப்பூசியைத் தயங்காமல் எடுத்துக்கொள்ளுங்கள். முகக்கவசமணிதல், கைகளைக் கழுவதல் போல் நலம் பேணும் செயற்பாடுகளை நிறுத்தி விடாதீர்கள். மிகவும் சாதாரண நலம் பேணும் தடுப்பு நடவடிக்கைகள் பெரிய அளவில் நன்மையைத் தருமென்பதைப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
அவதானமாக இருங்கள்! கவனத்துடன் இருங்கள்! விரைவில் இச்சூழலிலிருந்து உலகம் மீண்டிடட்டும்! அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து வேண்டுவோம். செயற்படுவோம்!
அண்மையில் வெளிவந்த ஜீவநதியின் 150ஆவது நாவற் சிறப்பிதழில் எஸ்.ரமேஷ் நல்லதொரு , விரிவான , நாவல்கள் பற்றிய கட்டுரையினை எழுதியிருக்கின்றார். நல்லதோர் ஆய்வுக்கட்டுரை. எஸ்.ரமேஷின் இது போன்ற விமர்சனக் கட்டுரைகளை வேறிதழ்களிலும் கண்டிருக்கின்றேன்.
இவ்விதமான ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகையில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான ஒரு விடயத்தை எஸ்.ரமேஷ் தவிர்த்திருக்கின்றார். ஏனென்று தெரியவில்லை. அது: கட்டுரையின் முடிவில் தரவேண்டிய விரிவான உசாத்துணைப்பட்டியல்.பலரின் ஆய்வுக்கட்டுரைகள், நூல்களின் அடிப்படையில்தான் நிச்சயம் இவ்விதமான ஆய்வுக் கட்டுரைகளை எஸ்.ரமேஷால் எழுத முடியும். அவற்றின் அடிப்படையில் எழுதுகையில் அவற்றை எழுதியவர்களின் பெயர்களை , ஆக்கங்களையும் கட்டுரையின்
இறுதியில் குறிப்பிடுவதன் மூலம் அவற்றை எழுதியவர்களின் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். அதனால் உசாத்துணைப்பட்டியலில் அவர்களது ஆக்கங்கள் பற்றிய விபரங்கள் நிச்சயம் குறிக்கப்பட வேண்டும்.
காலத்தால் அழியாத கானங்கள்: "எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே!"
கவிஞர் அ.மருதகாசியின் வரிகள்! ஏ.எம்.ராஜாவின் இசை! பி.சுசீலாவின் குரல்! கன்னடத்துப் பைங்கிளியின் நடிப்பு! அனைத்தும் நன்கிணைந்த காலத்தால் அழியாத கானங்களிலொன்று. இனியதொரு காதற் பாடல்! பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம்:
விடிவெள்ளி!
இளம் பருவத்துக் காதல் உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்தும் வரிகள் கேட்கையில் அலுப்பதில்லை.
பாடல் வரிகள் முழுமையாக:
எந்நாளும் வாழ்விலே! கண்ணான காதலே!
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே
கண்ணாலே காணுகின்ற காட்சி எங்கும் நீ நிறைந்தாய்!
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்!
உன்னாலே எந்தன் உள்ளம் துள்ளித் துள்ளி ஆடுதே!
எனை மீறி நிலைமாறி சல்லாப கானம் பாடுதே!
உன்முன்னே ஜாதி பேத வாதமெல்லாம் சாய்வதில்லை!
ஊரெல்லாம் ஒய்ந்த போதும் நீ உறங்கி ஒய்வதில்லை!
மண்மீது நீ இல்லாது வாழும் ஜீவன் இல்லையே!
மலர் மேலே மணம் போலே உலாவும் இன்ப ஜோதியே!
பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=VGj3PnzdCoA