இலங்கையில் அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துள்ள நிலையில் இன, மதவாதம் கக்கும் புத்தமதத்துறவிகளின் இனத்துவேச உரைகளும் , செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன. தமிழ்ப்பகுதிகளிலுள்ள சைவ ஆலயங்களுள்ள இடங்களில் விகாரைகள் கட்டும் முயற்சிகளில் மேற்படி புத்தபிக்குகள் ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசியற் சூழலைப்பொறுத்தவரையில் புத்தமதத்துறவிகளின் செல்வாக்கைக் குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் புத்தமதத் துறவிகளின் செயலை ஒட்டுமொத்தச் சிங்கள மக்களின் செயற்பாடுகளாகக் கருதி, முழுச் சிங்களச் சமுதாயத்தின் மீதும் பழி போட்டிடச் சிலர் முயற்சி செய்வதும் வருந்தத்தக்கது. புத்தபிக்குகளின் அடாத செயற்பாடுகளுக்கு எதிராக அமைதியான வழிகளில் போராடுவதுடன் ,சட்டரீதியாக அவர்களின் செயற்பாடுகளை எதிர்கொள்ள வேண்டும். மாறாக இனத்துவேச விடத்தைக் கக்கும் குறிப்பிட்ட இனத்துவேசப் புத்தமதத்துறவிகளைப்போல் பதிலுக்கு சிங்கள மக்கள் மேல், புத்த மதத்தின் மேல் ஒட்டுமொத்தமாகப்பழியைச் சுமத்தினால் அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.
இலங்கைப்பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரதன தேரர் இவ்விடயத்தில் இவ்விதம் சைவ ஆலயங்களுள்ள இடங்களில் அத்து மீறி விகாரைகளை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இவ்விடயத்தில் அமைச்சர் மனோ கணேசனின் செயற்பாடுகளும் வரவேற்கத்தக்கவை. வியாழக்கிழமை காலை ஜனாதிபதியுடனான சந்திப்பொன்றுக்குத் தமிழ்ப்பிரதிநிதிகளை அழைத்திருக்கும் அவரது செயலும் தற்போதுள்ள சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது.
தமிழர் பகுதிகளில் உள்ள இந்து ஆலயங்களில் விகாரைகள் அமைப்பதன் மூலம் நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான நல்லெண்ணத்தைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் புத்தமதத் துறவிகள் சிலரின் செயற்பாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இதனை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இப்பிரச்சினை எதிர்காலத்தில் உபகண்ட பிரச்சினைகளிலொன்றாகப் பெருஞ்சுவாலையாகப் பற்றி எரிவதற்குக் சாத்தியங்களுள்ளது.
இலங்கை பல்லின, பன்மொழி, பன்மத மக்கள் வாழுமொரு நாடு. இது தனியே புத்தமதத்தவர்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்கோ மட்டும் சொந்தமான நாடு அல்ல. அனைவருக்கும் உரித்துள்ள நாடு. புத்த மதத்தவர்கள், சிங்கள மக்கள் பெரும்பான்மையினர். அதில் சந்தேகத்துக்கு இடமில்லை. ஆனால் அவர்கள் சிறுபான்மைச் சமூகங்களையும் உள்ளடக்கி, ஒன்றிணைத்துச் செயற்படவேண்டுமே தவிர, சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராக இனத்துவேச விடத்தினைக் கக்கி அரசியல் செய்யக்கூடாது. அது முழு நாட்டுக்குமே எதிர்காலத்தில்தில் தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
இவ்விடயத்தில் சிங்கள மக்களும், சிங்கள அரசியல்வாதிகளும், அரசும் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட வேண்டும். புத்தமதத் துறவிகள் துவேசத்துடன் இந்துக்களுக்கெதிராக, ஏனைய மத மக்களுக்கெதிராகச் செயற்படுவானார்களானால் உபகண்ட அரசியற் சக்திகளின் தலையீடு இலங்கையின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையிலேற்படும். இலங்கைத்தமிழர் பிரச்சினையைக் காரணமாக வைத்து முன்பு இந்திரா காந்தி தலைமையிலான இந்தியா இலங்கைப்பிரச்சினயைச் சர்வதேசப்பிரச்சினையாக்கித் தலையிட்டது. அத்தலையீடு இறுதியில் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், இறுதியில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் இம்முறை இந்தியா தலையீடுமானால் அது தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து இருக்கப்போவதில்லை. மதரீதியானதாக இருக்கும்.
இந்தியாவில் தற்போதுள்ள அரசு மோடியின் தலைமையிலான இந்துத்துவா அரசு. தற்போது இலங்கையைத் தமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சீனா, இந்தியா, இந்தியாவுக்குச் சார்பான அமெரிக்கா ஆகிய நாடுகள் முழுமூச்சுடன் இயங்குகின்றன. இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் இந்தியத்தூதரகங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் எவ்விதம் இந்துவெறிக் கட்சியினரின் செயற்பாடுகள் உள்ளனவோ அவ்விதமான செயற்பாடுகள் இலங்கையின் வடகிழக்கும் பகுதிகளிலும் படிப்படியாக உருவாகி வருகின்றன. யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு மைதானம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டபோது இந்தியப்பிரதமர் தொழில்நுட்ப வசதிகளைப்பாவித்து இந்தியாவிலிருந்தவாறே திறந்து வைக்கின்றார். இவ்விதமானதொரு சூழலில் சைவ ஆலயங்கள் மீதான புத்தமதத்துறவிகள் சிலரின் வன்முறைகள், ஆக்கிரமிப்புகள் , விகாரைகளைக் கட்ட முயற்சி செய்யும் செயற்பாடுகள் இந்திய இந்துமதத் தீவிரவாதிகளின் கவனத்தை இந்நேரம் ஈர்த்திருக்கும். சீனர்களின் ஆதிக்கத்தை இலங்கையில் சமநிலைப்படுத்துவதற்கு மோடியின் மதவாத அரசு புத்தமதத்துறவிகளின் இந்துக்கோயில்கள் மீதான ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளைப்பாவித்து, இலங்கையில் மீண்டுமொருமுறை தலையிடுவதற்குச் சாத்தியங்களுள்ளன.
இவ்விதமானதொரு சூழல் இலங்கையில் தொடர்ந்தால் , எதிர்காலத்தில் புத்தமதத்தீவிரவாத மதகுருக்களின் செயற்பாடுகளுக்கெதிராக இந்துமதத்தீவிரவாதம் தலையெடுக்கும். தமிழ்த்தீவிரவாதம் தமிழகத்தமிழரின் ஆதரவை மட்டுமே அதிகமாக ஈர்க்கும். ஆனால் இந்துத் தீவிரவாதம் இலகுவாக முழு இந்தியாவின் இந்துமத அடிப்படைவாதிகளின் ஆதரவைப்பெறும். இதனை இலங்கையால் ஒருபோதுமே சமாளிக்க முடியாது. இதன் விளைவு இலங்கைத்தீவு குறிப்பாக வடகிழக்கும் பகுதிகள் முழுமையாக இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் சாத்தியத்தை ஏற்படுத்தும். இவ்விதமானதொரு நிலை ஏற்படும் சாத்தியத்தை உணர்ந்து , தீர்க்கதரிசனத்துடன் இலங்கை அரசு, அரசியல்வாதிகள், மக்கள் அனைவரும் செயற்பட வேண்டும்.. இன, மத, மொழிரீதியிலான தீவிரவாதம் தலை தூக்காமலிருக்கும் வகையில், அனைத்து மக்களும் சம உரிமைகளுடன் வாழும் நல்லிணக்கச் சூழலினை ஏற்படுத்த வேண்டும். நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்பட்டு அனைத்துப்பிரச்சினைகளையும் நீதியாகத் தீர்க்கும் அமைப்புகளாக விளங்க வேண்டும். காவற் துறையினர், படையினர் பாரபட்சமற்று மக்கள் அனைவரையும் நடத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.