எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைப்பதிவில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
"தாக்கப்பட்டேன் . இச்செய்தியைப் பற்றி பலர் கேட்டனர். சேதி உண்மை. ஒரு சிறு விவகாரத்தால் நான் தாக்கப்பட்டேன். அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன். அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரிய குடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை.
என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான். அதன் பின்னரே காவல் நிலையம் சென்று புகார் கொடுத்திருக்கிறேன். காவல் நிலையம் சென்ற பின்னர்தான் ஒரு கேடியின் தொடர்புகள் புரிந்தது. வழக்கறிஞர்கள். அரசியல் தலைவர்கள் வந்து அவனுக்காக வாதாடினார்கள். ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் இருக்கிறேன். சிறு காயங்கள் உள்ளன . வழக்கு பதிவு செய்யப்படும் என நினைக்கிறேன். நீதி கிடைக்குமென்றும்."
ஜெயமோகனின் எழுத்துகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதற்காக இது போன்ற சம்பவங்களை வேடிக்கையாக அணுகலாமா?
கனடாவில் இது போன்ற சம்பவம் அதாவது வாங்கிய பொருள் பழுதானதென்றால், மீண்டும் கொண்டு சென்று கொடுத்தால் மன்னிப்புக் கேட்டு விட்டு நல்லதாக இன்னுமொன்றைத் தருவார்கள். அல்லது காசைத் திருப்பித் தருவார்கள். இந்தியா இவ்விடயத்தில் இன்னும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம். ஊழல், அரசியல் சண்டித்தனம், தீண்டாமை, என்று சமூகத்தைப் பீடித்துள்ள பல நோய்களைக் கொண்ட சமூகம் அங்குள்ளது. எழுத்தாளரை அடித்தவன் வீடு வரை சென்று பயமுறுத்தியுள்ளான். நீதி மன்றத்தில் வெறியில் நின்றதால், சுயநினைவின்றிச் செய்த செயல்கள் என்று அவன் வாதாடலாம்.
ஜெயமோகன் மருத்துவ நிலையத்தில் இருக்கும் வகையில் அடி பலமானதென்பதால், காவற் துறை வழக்கைப் பதிவு செய்து விசாரிக்க வேண்டிய தேவையுள்ளது. கடையில் பழுதடைந்த பொருட்களை விற்பனை செய்ததாலும் அக்கடையினர் மேல் வழக்குத் தொடரச் சாத்தியங்களுள்ளன. மேலும் பலருக்கு இந்நிலை ஏற்படலாம். கலை, இலக்கியத்துறையில் பிரபலமாக விளங்கும் ஒருவரை அடித்திருப்பதால் நிச்சயம் காவற்துறை வழக்கைப்பதிவு செய்யும் என எதிர்பார்க்கலாம். நீதி கிடைக்குமென்றும் எதிர்பார்ப்போம். விரைவில் அவர் பூரண சுகத்துடன் மீளுவார் எனவும் எதிர்பார்ப்போம்.