தமிழகச்சிற்றிதழ்களில் 'கணையாழி' இதழும் முக்கியமான இதழ்களிலொன்று. ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மட்டுமல்ல, மலேசியா, ஆஸ்திரேலியா என வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள்தம் இலக்கியத்துக்கும் முக்கிய இடத்தைக்கொடுத்து, அந்நாடுகளில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பிரசுரித்து வந்த, வருகின்ற சஞ்சிகை 'கணையாழி'. என்னைப் பொறுத்தவரையில் 'கணையாழி' சஞ்சிகைக்கு என் மனதில் முக்கியமானதோரிடமுண்டு. காரணம்: இது வரையில் நான் எழுதிய ஐந்து படைப்புகளை அது வெளியிட்டுள்ளது. அதற்காக என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கணையாழியில் வெளியான எனது படைப்புகள் வருமாறு: நான்கு கட்டுரைகள்: பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு`, `சூழற் பாதுகாப்பு` , `ஆர்தர்.சி.கிளார்க்`, மற்றும் `ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்` போன்ற விடயங்களைப்பற்றிய கட்டுரைகள்; கணையாழியின் 'கனடாச்சிறப்பித'ழில் வெளியான 'சொந்தக்காரன்' என்னும் சிறுகதை.
தற்செயலாகப் 'பதிப்பகம்' இணையத்தளத்தில் கணையாழி சஞ்சிகையின் சில இதழ்களைப்பார்த்தேன். அவற்றிலொன்று கணையாழி - யூன் 1996 சஞ்சிகை. அதில் வெளியான படைப்புகளைப் பார்க்கும்போது கணையாழி சஞ்சிகை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். இந்த இதழில் வே.சபாநாயகம் அவர்கள் எழுத்தாளர் தேவகாந்தனின் 'நெருப்பு' , மற்றும் ச.கணேசலிங்கன் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை முகங்கள் ஆகிய நூல்களுக்கு நல்ல நூல் அறிமுகக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மேலும் மேற்படி இதழில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் 'அவர்க்கென்று ஓர் குடில்' சிறுகதை, எழுத்தாளர் கே.விஜயனின் 'இலங்கைச்செய்தி மடல்' அத்துடன் எனது 'பண்டைய இந்துக்களின் கட்டடக்கலையும், நகர அமைப்பும்' என்னும் கட்டுரை ஆகிய படைப்புகளும் வெளியாகியுள்ளன.
கணையாழி என்றதும் இன்னுமொரு விடயமும் ஞாபகத்துக்கு வருகின்றது. அது: சென்ற வருடம் தமிழகத்திலிருந்து கவிதா பதிப்பகம் 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) என்றொரு கட்டுரைத் தொகுதியினை வெளியிட்டிருந்தது. அத்தொகுதியில் அக்காலகட்டத்தில் கணையாழியில் வெளியான மேற்படி கட்டுரை மற்றும் ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம் பற்றிய கட்டுரை ஆகிய இரு கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. அதுவும் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானதொரு விடயம்.
ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப , இந்த ஜூன 1996 கணையாழி இதழ் ஒன்றே போதும் கணையாழி சஞ்சிகை ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தரும் முக்கியத்துவம். அதற்காக மீண்டுமொருமுறை கணையாழிக்கு நன்றி.
கணையாழி ஜூன்1996 இதழ் (படிப்பகம் இணையத்தளத்தில்) : http://www.padippakam.com/doc…/kaniyali/kaniyali_06_1996.pdf
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.