எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் இலங்கையிலிருந்த காலத்திலேயே 'பூரணி' சஞ்சிகையின் இணையாசிரியர்களிலொருவராக இருந்தவர். எழுத்தாளர் அமரர் மு.தளையசிங்கத்தின்பால் பெருமதிப்புக் கொண்டவர். கவிதை, கட்டுரை, சிறுகதை மற்றும் மொழிபெயர்ப்பு என்று பன்முக இலக்கியப்பங்களிப்பாற்றி வருபவர். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய இவரது ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்ப்பவை. சினுவ ஆச்சிபியின் 'Things Fall Apart' என்னும் புகழ்பெற்ற நாவலைத் தமிழில் 'சிதைவுகள்' என்று மொழிபெயர்த்திருக்கின்றார். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலது. `ஆடும் குதிரை` (நற்றிணை பதிப்பகம்) `, 'இரவில் நான் உன் குதிரை' என்பன இவரது மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அடங்கிய குறிப்பிடத்தக்க நூல்கள். இவரது சிறுகதைகள் அடங்கிய `தியானம்` தொகுதி `பூரணி` வெளியீடாகவும், `உள்ளொளி` கவிதைத்தொகுப்பு `காலம்` சஞ்சிகை வெளியீடாகவும் வெளிவந்துள்ளன. கனடாவிலிருந்து மாதாமாதம் வெளியாகும் டிலீப்குமாரை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'தாய்வீடு' பத்திரிகையில் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வருகின்றார்.
இவர் பல இலக்கிய அமர்வுகளை நடாத்தியிருக்கின்றார். இவர் இலக்கிய அமர்வுகளைத் தலைமையேற்று நடாத்துவதற்கு மிகவும் பொருத்தமான படைப்பாளிகளொருவர். கலை, இலக்கியம் பற்றிய இவரது கருத்துகளில் தத்துவார்த்தரீதியில் எனக்கு மாற்றுக் கருத்துகள் இருப்பினும் , அவற்றையும் மீறி இவரது இலக்கியப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. விதந்தோடப்பட வேண்டியது.
இவர் தனக்குச் சரியென்று பட்டதை யாருக்கும் அஞ்சாது எந்தச்சபையிலும் எடுத்துக்கூறும் பண்பு மிக்கவர். அந்த இவரது பண்பும், நறுக்குத்தெறித்தாற்போன்று உரையாடல்களில் இவர் கையாளும் மொழியும், எந்நேரமும் இவர் முகத்தில் படர்ந்திருக்கும் புன்னைகையும் எனக்கு இவரைப்பற்றி எண்ணியதும் நினைவுக்கு வருபவை.
பதிவுகள் இணைய இதழிலும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. பதிவுகள் இணைய இதழும், தமிழர் மத்தியில் நிறுவனமும் ஒன்றிணைந்து நடாத்திய அகில உலகச்சிறுகதைப்போட்டிக்கு நடுவர்களிலொருவராகவிருந்து பரிசுக்குரிய சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்கப் பங்காற்றியுள்ளார். அதனை இத்தருணத்தில் நினைவு கூர்ந்துகொள்கின்றேன்.
இவரது நூல்கள் சில நூலகம் இணையத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளன.
இரவில் நான் உன் குதிரை: http://noolaham.net/project/02/131/131.pdf
ஆடும் குதிரை: http://noolaham.net/project/161/16022/16022.pdf
தியானம் (சிறுகதைகளின் தொகுப்பு): http://noolaham.net/project/01/88/88.htm
முகநூலில் மேற்படி பதிவுக்கு இடப்பட்டிருந்த எதிர்வினைகள்:
பேனா மனோஹரன்: பூரணி இலங்கையில் வாசித்தது.என் கோப்பில் ஒரு பிரதியோ....பகுதியோ இருக்கக்கூடும்.நேர்மையான அறிமுகம்.அவருக்கென் வாழ்த்துகள்.
நடராஜா முரளிதரன்: வாழ்த்துகள்!
அ.யேசுராசா: சின்னுவா அச்சுபேயின் இன்னொரு நூலையும் - 'வீழ்ச்சி' என்னும் பெயரில் - அவர் மொழிபெயர்ப்புச் செய்து வெளியிட்டிருக்கிறார்.
அ.யேசுராசா: நாங்கள் 'அலை' சிற்றிதழை வெளிக்கொண்டுவரக் காரணரானவரும் அவர்தான்! "நீங்கள் ஏன் ஒரு சிற்றிதழைக் கொண்டுவரக்கூடாது? 'பூரணி'க்குரிய அச்செழுத்துக்களை உங்களுக்குத் தந்துவிடுகிறேன்" என்று (அவ்வேளை பூரணி நின்றுவிட்டது), 1975 இன் நடுப்பகுதியில் என்னைக் கண்டபோது சொன்னார். நான் கண்டியில் கடமையாற்றியதால், அடுத்த ஆண்டு யாழ்ப்பாண இடமாற்றம் கிடைத்ததும் அதனை ஆலோசிக்கலாம் என்று கூறினேன். அதுபோல் 'அலை'யை ஆரம்பித்தோம். "எந்த நிபந்தனையும் இல்லை; நீங்கள் சுதந்திரமாக இயங்கலாம்." என்று பெருந்தன்மையுடன் கூறி, அச்செழுத்துக்களைத் தந்தார். கொழும்பிலிருந்து அவற்றை யாழ்ப்பாணம் கொண்டுவருவதில் இருந்த சில சிரமங்களினால், 'அலை'யின் மூன்றாவது இதழிலிருந்தே அந்த அச்செழுத்துக்களைப் பாவித்தோம். அவருக்கான எனது நன்றியை இங்கு மகிழ்வுடன் பகிர்கிறேன்.
அ.யேசுராசா: மேலும், சின்னுவா அச்சுபே என்ற சிறந்த எழுத்தாளரின் படைப்பைத் தமிழில் முதலில் வெளிக்கொண்டுவந்த பெருமையும், அவரையே சேர்கிறது!
முனைவர் துரை. மணிகண்டன்: வாழ்த்துக்கள் ஐயா.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.