இன்று பிறக்குமிப்புத்தாண்டில்
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
கொன்றழிக்கும் கவலை நீக்கி,
எண்ணமதைத் திண்ணமுற
இசைத்துக்கொண்டு,
மனதினில் உறுதி கொண்டு,
வாக்கினில் இனிமையேற்றி,
நினைவு நல்லது நாடி,
மண் பயனுற வேண்டி,
இன்று புதிதாய்ப்பிறந்தோமென்று
இன்புற்றிருப்போம்!
இன்புற்றிருப்போம் இனிவருமாண்டில்.
இன்புற்றிருப்போம்! இன்புற்றிருப்போம்!
பதிவுகள் வாசகர்கள் அனைவருக்குமெம்
அகம் திறந்து வாழ்த்துகின்றோம்:
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிவுகள்' வாசகர்கள், படைப்பாளிகள் அனைவருக்கும் தனது இனிய புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. அனைவரது வாழ்விலும் அவர்தம் எண்ணங்கள் இப்புதிய ஆண்டில் ஈடேறட்டும். தொடர்ந்தும் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் ஈழத்தமிழர்கள் வாழ்வில் இந்த வருடமாவது நல்லதொரு முடிவினைக்கொண்டு வரட்டும். அல்லவற்றைத் தவிர்த்து, நல்லவற்றை நாடிப் பயணங்கள் தொடரட்டும்; பிறப்பு சிறக்கட்டும்
விரைவதே தெரியாமல் விரிந்து செல்லும் வெளியினூடு சிறு வாயுக்குமிழியென விரையுமொரு சிறு கோளினுள் இவ்வருடமாவது போர்கள், மோதல்கள், ஏற்றத்தாழ்வுகள், இன, மதம் மொழி ரீதியிலான வேறுபாடுகள் நீங்கி அமைதியும், களிப்பும், மனதில் தெளிவும் ஏற்படட்டும். மணிக்கு சுமார் 65,000 மைல்கள் வேகத்தில் விரைந்துகொண்டிருக்கின்றோம். வெளியிலோ மோதுவதற்கு கோள்கள், சுடர்கள், வால்வெள்ளிகள் இன்னும் பல விண்வெளிப் பொருட்கள் காத்திருக்கின்றன. ஒளி வருடங்கள் நீண்ட தொலைவுகளில் இதுவரையில் எம்மையொத்த உயிரினங்களின் சாத்தியங்களைக் காணவில்லை. எம்மிலும் மேலான பரிமாணங்களில் இருப்பவற்றை நாம் அறியப் போவதில்லை.
இவ்விதமானதொரு சூழலில் இருக்கும் ஒரே இல்லமான இந்த நீல வண்ணக் கோளினையும் நாசமாக்கினால், தப்பிப் பிழைப்பதற்குக் கூட அருகில் ஏதுமில்லை. இந்த உலகில் எம்முடன் கூடவே வாழும் பறவைகள், மிருகங்கள் அனைத்தும் நம் உறவுகளே. விரிந்துகொண்டிருக்கும் பெரு வெளியிலோ எம்மைச் சுற்றி வெறுமை ஒளியாண்டுத் தொலைவுகளில் விரிந்து கிடக்கிறது. இந்த வெறுமைக்குள்தான் எம் அனைவரின் இருப்பும் இருக்கிறது. இந்தப் படைப்பின் நேர்த்தி எப்பொழுதுமே என்னைப் பெருமிதப்பட, ஆச்சரியப்பட வைக்கிறது; அலுப்பதில்லை. இருப்பின் சிறப்பினை, நோக்கத்தினை அறிவதற்கே ஓரிருப்பு போதா. இவ்விதமானதொரு சூழலில் பிறக்குமிந்த வருடமாவது மானுடரின் அறிவில் சிறிது தெளிவினைத் தரட்டும்; அத்தெளிவின் விளைவாக மோதல்களால் இப்பூவுலகை வெடிக்க வைக்கும், எரித்திடும் அறியாமை சிறிதளவாவது நீங்கட்டும்; போர்களின் வீரியம் நீங்கி அமைதியின் ஆட்சி செழிக்கட்டும்.
"விரியு மறிவு நிலை காட்டுவீர் - அங்கு
வீழுஞ் சிறுமைகளை யோட்டுவீர்" - பாரதியார்.