அழியாத கோலங்கள்: சாகாதவரம் பெற்ற வேதாள மாயாத்மா!
எம் பால்ய காலத்தில், குறிப்பாகப் பதின்ம வயதுப்பருவத்தில் நான் வாசித்த 'காமிக்ஸ்'களின் அளவு கணக்கிலடங்காதவை. ஆரம்பத்தில் விகடன், கல்கி, குமுதம் போன்றவற்றில் வெளியான சித்திரக்கதைகளுடன் என் 'காமிக்ஸ்' வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. குமுதத்தில் வெளியான 'கடற்கன்னி', விகடனில் வெளியான 'கிங்கரனும், சங்கரனும்', மற்றும் கல்கியில் வெளியான 'ஓநாய்க்கோட்டை' இவ்விதமான ஆரம்பமான என் சித்திரக்கதைகளின் மீதான ஆர்வத்தை டால்டன் பிரசுரமாக வெளிவந்த பொன்மலர் , பால்கன் மற்றும் இந்திரஜால் காமிக்ஸ்ஸில் வெளியான வேதாள மாயாத்மாவின் சாகசக்கதைகள் ஆகியன ஆக்கிரமித்துக்கொண்டன.
பொன்மலர், பால்கன் ஆகிய இரு இதழ்களும் மாத இதழ்களாக வெளிவந்ததாக ஞாபகம். அவை 'Tabloid' அளவில் ஏனைய இதழ்களை விடப் பெரிதாக வெளிவந்ததாக ஞாபகம். இவற்றில் பல சித்திரக்கதைத்தொடர்கள் (எல்லாமே மேனாடுகளில் வெளியான காமிக்ஸ்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளே), மற்றும் நாகரிகத்தின் வரலாறு, சாகசம் மிக்க கடற்பயணங்களின் வரலாறு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய ஆக்கங்கள் மிகவும் அழகான வர்ண ஓவியங்களுடன் வெளியாகிய இதழ்கள் அவை. ஆனால் அவற்றில் ஒரிதழைக்கூட இணையத்தில் இதுவரையில் என்னால் தேடி எடுக்க முடியவில்லை என்பது இன்னும் ஒரு குறையாகவேயுள்ளது.
இவை தவிர அடுத்து என்னைக்கவர்ந்தவை இந்திரஜால் காமிக்ஸ்களே. குறிப்பாக வேதாள மாயாத்மாவின் சாகசங்களை உள்ளடக்கிய காமிக்ஸ்கள் என்னையும், நண்பர்களையும் மிகவும் கவர்ந்தவை. இவையெல்லாம் மேனாட்டுக் கதைகளென்றாலும், இவை உருவான சமுதாயத்தின் கருத்துகளை மையமாக வைத்து உருவான கதைகளென்றாலும், அவற்றையெல்லாம் உணரும் பருவமல்லவே. அந்த வயதில் ஆழநடுக்காட்டிலிருந்து நீதிகாகச்சாகசம் புரியும் முகமூடி அணிந்த வேதாளரின் சாகசக்கதைகள் விபரிக்கும் சாகசங்களில் மனம் ஊறித்திளைத்திருப்போம். அவற்றிலொரு வேதாளரின் கதையொன்றின் ஞாபகம் இன்னும் மனதில் பசுமையாக உள்ளது. அதில் நிலத்துக்குக்கீழுள்ள உலகமொன்று விபரிக்கப்பட்டிருக்கும். அங்கு வாழும் உயிரினங்கள் எல்லாமே , எறும்புகள் போன்ற சிற்றுயிர்கள் எல்லாமே, மனிதர்களை விட உருவத்தில் மிகவும் பெரியவை.
அண்மையில் 'த இந்து' பத்திரிகையில் வெளியான வேதாள மாயாத்மா பற்றிய கட்டுரையொன்று வேதாள மாயாத்மாவின் இந்திரஜால் காமிக்ஸ் வாசித்த ஞாபகங்களை மீண்டுமெழச்செய்து விட்டன. கிங் விஸ்வா எழுதிய 'சாகாவரம் பெற்ற வேதாளர்' என்ற அந்தக் கட்டுரை வேதாள மாயாத்மா பற்றிய விரிவான தகவல்களை விபரிக்கின்றது. அந்தக்கட்டுரைக்கான இணைப்பு இதோ: http://tamil.thehindu.com/…/%E0%AE%9A%E0…/article6588339.ece
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.