அச்சில் வெளியான எனது முதற்சிறுகதை 'சலனங்கள்'
அச்சில் வெளியான எனது முதலாவது சிறுகதை 'சலனங்கள்'. 1975 பங்குனி மாதச் 'சிரித்திரன்' இதழில் வெளியானது. அப்பொழுது நான் யாழ் இந்துக்கல்லூரி மாணவன். முள்ளியவளையைச்சேர்ந்த முல்லைத்திலகன் என்னும் மாணவர் அப்பொழுது யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவராகப்படித்துக்கொண்டிருந்தார். நடிப்புத்திறமை மிக்கவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீரபாண்டியக்கட்டப்பொம்மன், ராஜாராணி ( 'சோக்கிரடிசு') வசந்தமாளிகை திரைப்பட வசனங்களை அழகான , உச்சரிப்புடன் பேசிக்காட்டுவார். ' ஏதென்சு நகரத்து ஏற்றமிகு வாலிபர்களே' என்று ராஜாராணி சோக்கிரடிசு வசனங்களை, கட்டப்பொம்மன் வசனங்களை மீண்டும், மீண்டும் அவரைப்பேசச்சொல்லிக் கேட்டு இரசிப்பதுண்டு. அவற்றை மாணவர்களாகிய நாம் இரசிப்பதுண்டு.
ஒருமுறை அவரது ஊரான முள்ளியவளைக்கும் சென்று ஒரு வாரமளவில் அவர் வீட்டில் தங்கியிருந்து திரும்பியிருக்கின்றேன். அப்பொழுது ஆழநடுக்காட்டினுள் 'கள்ளூறல்' என்னும் எப்பொழுதும் வற்றாத நீர்நிலையினைத்தேடி அலைந்து, திரிந்ததை இப்பொழுதும் மறக்க முடியாது. எனது வன்னி மண் நாவலில் அந்த ஆழ்நடுக்காட்டின் அனுபவங்களைச்சிறிது கற்பனையையும் கலந்து பதிவு செய்திருக்கின்றேன். அவரது கையெழுத்தும் அழகானது. அவரைக்கொண்டு எனது முதற்சிறுகதையான 'சலனங்கள்' சிறுகதையினைப் பிரதியெடுத்து, 'சிரித்திரன்' சஞ்சிகை நடாத்திய 'அறிஞர் அ.ந.கந்தசாமி' சிறுகதைப்போட்டிக்கு அனுப்பியிருந்தேன். அது பாராட்டுக்குரிய சிறுகதைகளிலொன்றாகத்தெரிவு செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. அச்சிறுகதை வெளியான சிரித்திரன் பக்கத்தின் ஒரு பகுதியினையே இங்கே காணுகின்றீர்கள். இது அச்சில் வெளியான முதற் சிறுகதையான போதிலும், கதைகள், நாவல்களென்று பாடசாலை அப்பியாசக் 'கொப்பி'களில் எனது பத்தாம் வயதிலிருந்து நிறையவே எழுதி, எழுதிக் குவித்திருக்கின்றேன். இந்தச்சிறுகதை மூலமே எனக்குச் சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்துடனான அறிமுகமும், நட்பும் ஆரம்பமானது. அப்பொழுது அவர் யாழ் ஐயனார் கோயிலருக்கில் வசித்து வந்தார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் இடம் மாறி வந்திருந்தார். பின்னர் எண்பதுகளின் ஆரம்பத்தில்தான் யாழ் கே.கே.எஸ்.வீதியில் வீடு கட்டிக் குடிபுகுந்திருந்தார். அவரது அந்த வீட்டினை வடிவமைத்திருந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் குணசிங்கம் ஆவார். நான் அக்காலகட்டத்தில் மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பயின்றுகொண்டிருந்தேன். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் சென்றிருந்தபொழுது அவரை அவ்வீட்டில் சென்று சந்தித்தேன். அப்பொழுதுதான் அந்த வீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டினை எனக்குச் சுற்றிக்காட்டினார். அப்பொழுதுதான் அதனை வடிவமைத்தவர் குணசிங்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதுவே நான் அவரை இறுதியாகச் சந்தித்தது.
என் எழுத்துலகின் ஆரம்பப்பருவத்தில் ஊக்குவித்தவையாக ஈழநாடு (யாழ்ப்பாணம்) மாணவர் மலர், பெருமாள் வாரமலர் ஆசிரியராகவிருந்த ஈழநாடு வாரமலர், வெற்றிமணி சஞ்சிகை, கண்மணி, சஞ்சிகை போன்றவற்றைக்குறிப்பிடுவேன். சிரித்திரன் ஆசிரியரை என் எழுத்தார்வதை வளர்ப்பதற்கு உதவியவர்களிலொருவராகக் குறிப்பிடுவேன்.
எனது முதலாவது அச்சுருவில் வெளியான கவிதை ஒரு சிறுவர் கவிதை பொங்கலைப்பற்றியது. 'பொங்கலோ! பொங்கல்' என்னும் தலைப்பில் சுதந்திரனில் வெளியானது. அப்பொழுது நான் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். அக்காலகட்டத்தில் சுதந்திரனில் வெளிவந்த ஒரே படைப்பு அக்கவிதை என்றபோதும், அதனைப்பிரசுரித்து, என் எழுத்தார்வதுக்குக் களம் அமைத்துக்கொடுத்ததன் மூலம் சுதந்திரன் என்னால் மறக்க முடியாத பத்திரிகைகளிலொன்றாக மாறிவிட்டதெனலாம்
மாணவப் பருவத்தில்: 'கண்மணி'யில் எனது சிறுவர் கதை 'அரசாளும் தகுதி யாருக்கு?'
அப்பொழுது நான் யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். 'ஈழநாடு மாணவர் மலர்' , சிரித்திரன் நிறுவனம் வெளியிட்ட 'கண்மணி' சிறுவர் மாத இதழில் எனது ஆக்கங்கள் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் ஆகியன வெளியாகிக்கொண்டிருந்தன.
'சிரித்திரன்' நடாத்திய 'கண்மணி' ஓரிரு இதழ்களே வெளியாகி நின்று போனது எனக்கு அக்காலகட்டத்தில் மிகவும் வருத்தத்தைத் தந்தது. அழகான ஓவியங்களுடன் சிறுவர் ஆக்கங்களை உள்ளடக்கி, தமிழகத்திலிருந்து வெளியான 'கண்ணன்' சஞ்சிகையைப்போல், வெளியான சிறுவர் இதழது.
'கண்மணி' இதழொன்றில் எனது சிறுவர் சிறுகதையான 'அரசாளும் தகுதி யாருக்கு?' என்னும் சிறுகதை, அழகான ஓவியங்களுடன், வெளியாகியிருந்தது. அது அக்காலத்தில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்த விடயம்.
இலங்கைக்கும் , இந்தியாவுக்குமிடையிலொரு பாலம்!
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடல் வழிப்பாலத்தையும், சுரங்கப்பாதையையும் அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசு தயங்கினாலும், இந்தியா விடாதுபோல் தெரிகிறதே. சீனா எல்லா தெற்காசிய நாடுகளிலும் துறைமுகங்களை அமைத்து, இந்தியாவைச்சுற்றி வளைத்தால், இந்தியாவோ மேற்படி நாடுகள் எல்லாவற்றுடனும் தரைவழி, கடல் வழி இணைப்பை ஏற்படுத்தி., மேற்படி நாடுகளைத்தன் கைப்பிடிக்குள் வைத்திருக்க முனைவதுபோல் தெரிகிறதே. உண்மையில் மேற்படி பாதைகளுடன், இந்தியாவுக்கும், இலங்கைக்குமிடையிலான கடலாழத்தைக்கப்பல்கள் செல்லும் வகையில் அதிகமாக்கினால், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தென்னிந்தியத்துறைமுகங்கள் மிகுந்த முக்கியத்துவத்தினை அடையும். தற்போது முக்கியத்துவம் பெற்று விளங்கும் கொழும்பு காலித்துறைமுகங்களின் முக்கியத்துவம் குறையும். அதே நேரத்தில் அதனாலேற்படும் சூழற் பாதிப்புகளையும் அலட்சியப்படுத்திவிட முடியாது.
வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதை பற்றி....
அண்மையில் முகநூலில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையொன்றினை அவரது முகநூற் பதிவாக வாசித்தேன். அது அவரது சொந்த , குடும்ப வாழ்வு பற்றியது. அவர் தனக்கும், தன் மனைவிக்குமிடையில் நிகழ்ந்த ஊடலையும், அதன் பின்னரான கூடலையும், ஊடலுக்கான காரணங்களையும், கூடலுக்கான புரிதல்களையும், அவர்களுக்கிடையிலான காதலையும் வெளிப்படுத்தியிருந்தார். முதல் வாசிப்பிலேயே வாசிப்பவரை மீண்டுமொருமுறை வாசிக்கத்தூண்டும் வகையில் அக்கவிதையில் வாழ்வின் உண்மையான தரிசனங்களும், மொழிச்சிறப்பும் மிகுந்திருந்தன.
கவிதையென்பது கவிஞனொருவரின் உள்ளத்துணர்வுகளின் வெளிப்பாடு. அந்த உணர்வுகள் உண்மையாகவிருப்பின், அவற்றின் வெளிப்பாடும் கலைத்துவம் மிக்கதாக, கவித்துவம் மிக்கதாக வெளிப்பட்டுவிடும் என்பதற்கு உதாரணமானதொரு கவிதையிது என்பதால் இங்கு அக்கவிதையினைப் பகிர்ந்துகொள்கின்றேன்.
மேலும் கவிஞரின் நெடுந்தீவு ஆச்சி நல்லதொரு கவிதை. நெடுந்தீவு ஆச்சி அற்புதமானதொரு படிமம். தீவினை ஆச்சியாக்கிய கவிஞரின் கவித்திறன் பாராட்டுதற்குரியது. எனக்குப்பிடித்த கவிதை வடிவம் அகவல். ஜெயபாலனின் கவிதைகளில் பெரும்பாலும் தேமா, புளிமா போன்ற ஈரசைச்சீர்களே அதிகமாக வருவதாலும்,வரிகளில் அளவாக, பொருத்தமாக எதுகை, மோனைகள் பாவிப்பதாலும், அவரது கவிதைகளி்ல் மரபுக்கவிதைகளின் தாக்கம் குறிப்பாக அகவற்பாவின் பண்பு படிந்து, வாசிப்பதற்கு இனிமையினைத்தருவதாக உணர்கின்றேன்.
கவிதையில் எனக்குப் பிடித்த வரிகளாகப்பின்வரும் வரிகளைக்குறிப்பேன்:
அவள் தனி வனமான ஆலமரம்.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.........
மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”
மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்
” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்
இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.
கவிஞரது பதிவும் , கவிதையும் கீழே:
- இன்று மிக நல்ல நாள். எனக்கும் மனைவி வாசுகிக்கும் இடையில் நிலவிய பனி யுத்தம் இனிதே முடிவுக்கு வந்தத நாள். இபோ மீண்டும் முன்னைபோல நட்புடன் -
என் கதை
வ.ஐ.ச.ஜெயபாலன்
*
அவள் தனி வனமான ஆலமரம்.
நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை.
என்னை முதன் முதற் கண்டபோது
நீலவானின் கீழே அலையும்
கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம்.
நானோ அவளை
கீழே நகரும் பாலையில் தேங்கிய
பாசி படர்ந்த குளமென்றிருந்தேன்.
*
ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி
ஜாடை காட்டினாள்.
மறுநாள் அங்கிருந்தது என் கூடு.
இப்படித்தான் தோழதோழியரே
எல்லாம் ஆரம்பமானது.
தண்ணீரை மட்டுமே மறந்துபோய்
ஏனைய அனைத்துச் செல்வங்களோடும்
பாலை வழி நடந்த காதலர் நாம்.
*
அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை.
நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது.
சிறகுகளில் மிதக்கும் எனக்கோ
நிலைத்தல் இறப்பு.
மண்ணுடன் அவள் எனை
வேரால் இறுகக் கட்ட முனைந்தும்,
நானோ விண்ணுள் அவளைச் சிறகுடன்
எய்ய நினைந்தும் தோற்றுப் போனோம்.
*
உண்மைதான் அவளை
நொண்டியென்று விரக்தியில் வைதது.
முதலில் அவள்தான் என்னைப் பார்த்து
கண்ட மரம் குந்தி, ஓடுகாலி
மிதக்கும் நரகல் என்றாள்.
*
ஓரு வழியாக இறுதியின் இறுதியில்
கூட்டுக்காகவும் குஞ்சுகட்காகவும்
சமரசமானோம்.
மாய ஊறவின் கானல் யதார்த்தமும்
வாழ்வின் உபாயங்களும்
காலம் கடந்தே வாய்த்தது நமக்கு
நம் காதலாய் அரங்கேறியதோ
உயிர்களைப் படைக்குமோர் பண்ணையார்
என்றோ எழுதிய நாடகச் சுவடி.
*
இப்போது தெளிந்தேன்.
சந்திக்கும் போதெலாம்
என் தங்க ஆலமரத்திடம் சொல்வேன்.
”ஆயிரம் வனங்கள் கடந்தேன் ஆயினும்
உன் கிளையன்றிப் பிறிதில் அமர்ந்திலேன்.”
மகிழ்ந்த என் ஆலமரம் சொல்லும்
” என்னைக் கடந்தன ஆயிரம் பறவைகள்
என் கிளைகளில் அமர்ந்ததோ
நீ மட்டும்தான்.”
*
இப்படித்தான் தோழதோழியரே
ஒரு மரமும் பறவையும் காவியமானது.
இசை கேட்கும் நேரம் இது: மயக்கமா? கலக்கமா?
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படப்பாடல்களிலொன்று கவிஞர் கண்ணதாசனின் 'மயக்கமா? தயக்கமா? பாடல் . சுமைதாங்கி திரைப்படத்தில் நாயகன் ஜெமினி பாடுவதாக வரும் பாடல். பொதுவாக எனக்கு எதிர்மறையான சொற்களைக்கொண்டி அமைக்கப்பட்டு ஆரம்பமாகும் வசனங்களைக்கொண்ட பாடல்கள் பிடிப்பதில்லை. ஆனால் , இப்பாடல் விதிவிலக்கு. இந்தப்பாடல் தொடங்கும்போது மயக்கம், குழப்பம், மனதில் கலக்கம், வாழ்க்கையில் நடுக்கம் போன்ற சொல்களுடன் ஆரம்பமாகும். இருந்தும் இவ்விதமான எதிர்மறையான சொல்களுடன் ஆரம்பமானால் கூட, இப்பாடலைக்கேட்கும் போதெல்லாம் மனதில் மயக்கமோ, கலக்கமோ ஏற்படுவதில்லை. வாழ்க்கை நடுக்கத்தால் நிலைகுலைந்து விடுவதில்லை. ஏன்?
இப்பாடலின் தொடக்க வரிகளைக்கேட்கும் மனதில், அங்கு காணப்படும் எதிர்மறையான சொற்களினால் ஏற்படும் தாக்கம் உணரப்படுவதற்கு முன்னரே பாடலின் அடுத்த வரிகளைச்செவிகள் கேட்கத்தொடங்கி விடுகின்றன.
வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்.
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.
இவ்வரிகளிலெல்லாம்கூட வேதனை, துன்பம் போன்ற சொற்கள் வந்து விழுந்திருந்தாலும், இவ்வரிகள் கூறும் அறிவுரை கேட்பவர்களுக்கு நம்பிக்கையினை ஊட்டுவது. 'எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்', போன்ற வரிகள் கலங்கி நின்ற மனதுக்கு, நடுங்கி நின்ற மனதுக்கு, வேதனையால் வாடி நின்ற மனதுக்கு ஆறுதலையூட்டி, வாழ்க்கையில் நம்பிக்கையினை ஊட்டுகின்றன.
இந்தப்பாடலில் வரும் 'உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப்பார்த்து நிம்மதி நாடு' என்னும் வரிகளும் எனக்குப்பிடித்தவை.
எதிர்மறையான சொற்களைப்பாவித்து ஆக்கிய பாடலின் மூலம் , நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி, வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கையினை ஊட்டும் வல்லமையினைத்தரும் பாடல் இது. அதனால்தான் இந்தப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்றாக விளங்குகின்றது.
கவிதை: யானை பார்த்த குருடர்கள்! - வ.ந.கிரிதரன் -
யானை பார்த்துப் பெருமிதமுறும்
குருடரிவர்.
காலைப் பார்த்துரலென்பார்..
காதைப் பார்த்துச்சுளகென்பார்.
முழுவுரு அறிதற்கு
முயலார். ஆயின்
முற்றுந் தெரிந்ததாய்
முரசறைவார்.
சொல்லின் பொருளறியார்.
ஆயின் சொல்லழகில்
சொக்கி நிற்பார்.
'இஸம்' பல பகர்வாராயின்
'இஸம்' புரியார்.
குழுச் சேர்த்துக்
குளிர் காய்வார்.
இருப்போ தற்செயல்.
தற்செயலுக்குள்
இவர்தம்
தற்செயற் தந்திரம் தான்
என்னே!
நிலையற்றதனுள்
நிலைப்பதற்காயிவர்
போடும் ஆட்டம் தான்
என்னே!
புரிந்து கொள்ளப்
படிக்கார்.
அறிந்து கொள்ளப்
படிக்கார்.
புலமை பகிர்வதற்கன்றிப்
பகர்வதற்காய்ப்
படிப்பார்.
ஆனை பார்க்கும் அந்தகரே!
தனியறிவை
இணைத்தறிய என்றுதான்
முயல்வீர்?
நன்றி: பதிவுகள்.காம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.