ஜெயமோகனின் குணா கவியழகனின் படைப்புகள் பற்றிய கருத்துகள் பற்றி....,
ஜெயமோகன் அண்மையில் தனது வலைப்பதிவில் குணா கவியழகனின் படைப்புகளைப்பற்றிக் கூறிய கருத்துகளையிட்டுப்பலர் முகநூலில் வாதிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.ஜெயமோகனுக்குத் தன் கருத்துகளைக்கூறும் முழு உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமையினை வலியுறுத்தும் அனைவரும் இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படைப்பு எல்லோருக்கும் ஒரே விதமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில்லை. ஒருவருக்குப்பிடித்த படைப்புகள் இன்னுமொருவருக்குப் பிடிக்காது. ஜெயமோகனுக்கு சயந்தனின் படைப்புகள் பிடித்திருக்கின்றன. கவியழகனின் படைப்புகள் அவ்விதம் பிடித்திருக்கவில்லை. ஜெயமோகன் போன்றவர்களிடம் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதும், கிடைக்கவில்லையென்றால் கடுமையாக எதிர்வினையாற்றுவதும் ஆரோக்கியமான இலக்கியச் செயற்பாடுகளல்ல. ஜெயமோகன் கவியழகனின் படைப்புகள் ஏன் தன்னைக் கவரவில்லை என்பதற்குக் காரணங்கள் கூறியிருக்கின்றார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவர் கவியழகனின் படைப்புகளை உதாரணங்களாக்கி, ஏன் ஜெயமோகனின் கூற்றுகள் தவறென்று தர்க்கபூர்வமாக வாதிட வேண்டும். இவற்றை எதுவும் செய்யாமல் ஜெயமோகனுக்கு எதிராக வார்த்தைகளை அள்ளிக்கொட்டுவதில் அர்த்தமில்லை. ஜெயமோகனின் கட்டுரையினை நானும் வாசித்தேன். அதன் இணைப்பினைக் கீழே தருகின்றேன். இதனை வாசித்து விட்டு உங்கள் கருத்துகளை ஜெயமோகனின் கருத்துகளின் அடிப்படையில் கூறுவீர்களென்றால் விவாதம் மேலும் சிறக்கும்.
விமர்சனங்களை அவை எவ்விதமிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ஒருவரின் விமர்சனமென்பது அவர் குறிப்பிடும் படைப்பு பற்றிய முற்று முழுதான உண்மையல்ல. விமர்சனங்கள் எப்பொழுதுமே சார்பானவை. அவரது வாசிப்பு அனுபவம், கலை, இலக்கியம் பற்றிய கருத்தியல் போன்ற காரணங்களுக்காக அவரது விமர்சனம் இன்னுமொருவரிடமிருந்து வேறுபடும். அதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உண்மையான படைப்பானது இவ்விதமான பல்வகை விமர்சனங்களையும் மீறி நிலைத்து நிற்கும் தன்மை மிக்கது. இவ்விதம் பலர் ஒரு படைப்பினைப்பற்றி விமர்சிப்பது அந்தப்படைப்பினைப் பலர் கவனிக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. அந்த வகையில் அந்தப்படைப்பானது வெற்றிகரமானதொரு படைப்பே.
குணா கவியழகனின் படைப்புகள் காலத்தில் நின்று பிடிப்பது இவ்விதமான ஆதரவான அல்லது எதிரான விமர்சனங்களால்ல. அவரது படைப்பின் மொழி, கூறும் பொருள், பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல் இவை போன்ற புனகைகதைகளுக்குரிய அம்சங்கள் எவ்விதம் சிறந்து விளங்குகின்றன என்பதிலும், அவற்றை வாசிக்கும் வாசகர்களாலும்தாம்.
http://www.jeyamohan.in/80623#.Vlbve15Mow8j
அறிஞர் அண்ணாவின் ரங்கோன் ராதா! அப்பாவுக்குப் பிடித்த அறிஞர் அண்ணாவின் அடுக்கு மொழி!
அண்மையில் டொராண்டோ நூலகக் கிளையொன்றில் அறிஞர் அண்ணாவின் 'ரங்கோன் ராதா' நாவலைப்பார்த்தவுடன் என் நினைவலைகள் என் தந்தையார் வாழ்ந்த காலகட்டத்துக்கு ஒருமுறை சென்றது. எழுபதுகளில் ராணிமுத்து மாத நாவல் தொடங்கிய காலகட்டம் அது. அதன் ஆரம்ப கால வெளியீடுகளில் அறிஞர் அண்ணாவின் பார்வதி பீ.ஏ மற்றும் ரங்கோன் ராதா ஆகியவையும் உள்ளடங்கியிருந்தன.
அப்பா இருந்தவரை திமுக ஆதரவாளர். அப்பொழுது திமுக பிளவு படாமலிருந்த காலகட்டம். அறிஞர் அண்ணாவின், கலைஞரின் எழுத்துகள் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக அவர்களின் அடுக்கு மொழிகளை அவர் மிகவும் இரசிப்பார். அவ்விதம் அவர் இரசித்த அறிஞர் அண்ணாவின் அடுக்கு மொழிகளிலொன்று ரங்கோன் ராதா நாவலின் இறுதி வசனம்.
அந்த நாவல் கீழ்க்கண்டவாறு முடியும்:
"இன்பமே" என்றேன் நான்.
கண்களை ஒரு விநாடி மூடித்திறந்தாள் - செந்தாமரை மலர்ந்தது. அருகே வந்தாள், வசந்தம் வீசிற்று!
புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்! "
இதிலுள்ள புன்னகை புரிந்தாள், புது விருந்து உண்டேன்! என்ற நாவலின் முடிவில் வரும் அடுக்குமொழித்தொடர் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனை வாசித்து அண்ணாவின் அடுக்கு மொழித்திறனை எண்ணி, அவர் தனக்குத்தானே மெல்லிய புன்னகையினைச்சிந்தியது இன்னும் நெஞ்சினில் பசுமையாக உள்ளது.
மேற்படி ரங்கோன் ராதா நாவல் 1956இல் திரைப்படமாகவும் மேகலா பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வெளியானது. சிவாஜி/பானுமதி/ எம்.என்.ராஜம் நடிப்பில் வெளியான திரைப்படமது. கலைஞரின் வசனத்தில் வெளியான திரைப்படத்தில் அவரது பாடல்கள் சிலவும் உள்ளன.