'கரமசோவ் சகோதரர்கள்' தஸ்தயேவ்ஸ்கியின் மிகச்சிறந்த நாவல் மட்டுமல்ல. உலக இலக்கியத்தின் சிறந்த நாவலாகவும் கருதப்படுவது. இதன் தமிழ் மொழிபெயர்ப்பினை 'நியூ செஞ்சுரி புக்ஸ்' பதிப்பகமும் (கவிஞர் புவியரசு மொழிபெயர்ப்பிலும்) , காலச்சுவடு பதிப்பகமும் (நேரடியாக ருஷ்ய மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து 'கரமஸாவ் சகோதரர்கள் என்னும் தலைப்பில்) வெளியிட்டுள்ளன.
நம்மவர்கள் பலர் அவ்வப்போது ஏன் அவரைப்போல் அல்லது இவரைப்போல் எழுத முடியவில்லையே என்று கண்ணீர் வடிப்பதுண்டு. அவர்கள் முதலில் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளை வாசிக்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்விதம் வாசித்தால் அவர்கள் ஏன் அவர்கள் குறிப்பிடும் படைப்பாளிகளால் தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளைப்போன்ற படைப்புகளை வழங்க முடியவில்லை என்பது புரிந்து நிச்சயம் கண்ணீர் விடுவார்கள்.
மானுட வாழ்வின் இருப்பை, இருப்பின சவால்களை, இருப்பின் இன்பதுன்பங்களை, இருப்பின் நன்மைக்கும் தீமைக்குமிடையிலான மோதல்களை, இருப்பின் நோக்கம் பற்றிய தேடலை தஸ்தயேவ்ஸ்கி எழுதியதுபோல் வேறு யாருமே இதுவரையில் எழுதவில்லை என்பது இதுவரையிலான என் வாசிப்பின் அடிப்படையில் எழுந்த கருத்து. தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளின் ஒவ்வொரு பக்கத்தையும் ஒதுக்கித்தள்ள முடியாது. அது அவரது எழுத்தின், சிந்தனையின் சிறப்பு.
வக்கிரமான உணர்வுகளும், காமமும் மிகுந்த ஒரு பணக்காரத்தந்தை, அவரது மூன்று வகைக்குணவியல்புகளுள்ள மூன்று புத்திரர்கள், அவருக்கும் பிச்சைக்காரியொருத்திக்குமிடையில் முறை தவறிப்பிறந்ததாகக் கருதப்படும் இன்னுமொரு புத்திரன், அவரது வேலைக்காரன், மூன்று புத்திரர்கள் வாழ்விலும் புகுந்துவிட்ட பெண்மணிகள், அந்தப்பெண்மணியிலொருத்திக்கும் மூத்த புத்திரனுக்கும், தந்தைக்குமிடையிலுமான காதல், காம உணர்வுகள், மேலுமிரு சகோதரர்களுக்குமிடையில் வரும் இன்னுமொரு பெண்மணி , ஒரு துறவி என வரும் முக்கியமான பாத்திரங்களை உள்ளடக்கிப் பின்னப்பட்டிருக்கும் மகாநாவல் கரமசோவ் சகோதரர்கள்.
நாவலின் பின்பகுதியில் வரும் தந்தையின் மரணமும் , சந்தர்ப்பசூழ்நிலைகளால் மூத்தமகன் குற்றஞ்சாட்டப்படுவதும், உண்மையில் அக்கொலையின் சூத்திரதாரியான முறைதவறிப்பிறந்த புத்திரன் தற்கொலை செய்வதும், இருந்தும் நீதிமன்றத்தால் மூத்தவன் தண்டிக்கப்படுவதும், அது பற்றி நிகழும் நீதிமன்ற வாதிப்பிரதிவாதங்களும் வாசித்து அனுபவித்து மகிழ வேண்டியவை.
இந்நாவலின் பக்கங்களில் விரியும் மானுடத்தேடல் பற்றிய உரையாடல்கள், எண்ணங்கள், மானுடத்துயரத்திற்கான தீர்வு பற்றிய சிந்தனைகள் (மதமா அல்லது சோசலிசம் போன்ற அரசியல் தீர்வுகளா என்பவை பற்றிய), மானுடத்தின் உணர்வுரீதியிலான இயல்புகள் (நன்மை, தீமை, காதல், காமம் என்பவற்றால் சதா மோதல்களுக்குள்ளாகிக்கொண்டிருக்கும் உணர்வுகள் பற்றிய) பற்றிய தேடல் மிக்க எண்ணங்கள் என விரியுமிந்த நாவலை வாசிப்பதே ஓர் அனுபவம்.
தஸ்தயேவ்ஸ்கியைப்பற்றிக்குறிப்பிடும்போது அவரைப்போல் மனிதரைப்பற்றி இவ்வளவு விரிவாக எழுதியவர் யாருமிலர் என்று குறிப்பிடுவார்கள். அவரது குற்றமும், தண்டனையும், அசடன் மற்றும் கரமசோவ் சகோதரர்கள் ஆகிய நாவல்களைப்படிப்பவர்கள் அக்கூற்று எவ்வளவு தூரம் உண்மையென்பதைப்புரிந்து கொள்வார்கள்.
இந்நாவலை அதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்திருக்கின்றேன். அதன் பின்னர் அண்மையில் கவிஞர் புவியரசுவின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த பிரதியை வாங்கி வைத்துவிட்டு ஒரு சில பக்கங்களை வாசித்துவிட்டு அவ்வளவு ஆர்வமின்றி வைத்திருந்தேன். மீண்டும் அண்மையில் மீண்டும் எடுத்து ஆறுதலாக வாசித்துப்பார்த்தேன். அப்பொழுதுதான் புரிந்துகொண்டேன் எவ்வளவு அற்புதமாக நாவலைத்தமிழில் கவிஞர் புவியரசு தந்திருக்கின்றார் என்பதை. இங்கு நான் நாவலை மூலத்துடன் ஒப்பிட்டு ஆராயவில்லை. தமிழ்ப்படைப்பின் மொழியின் சிறப்பை மையமாக வைத்துக்கூறுகின்றேன். கவிஞர் புவியரசு தமிழில் பாண்டித்தியம் பெற்றவராதலால், தேவையற்ற ஆங்கிலப்பிரயோகம் ஏதுமற்று, இலக்கணச்சிறப்பு மிக்க தமிழில் நாவலைத் தமிழில் வழங்கியிருக்கின்றார். அவரது தமிழில் நாவலை வாசிப்பதும் இன்பமே.
கவிஞர் தேவ அபிராவின் முகநூற் கவிதையொன்று:
இவ்விரவு அமைதியிலும் குளிரிலும் கரைகிறது
மானுட கபாலத்தைக் குடையும் துயரங்களைக் கரைப்பதற்கு ஒரு குவளை மது அருந்தினேன்
காதலற்ற கண்கள்
சாயம் பூசிய உதடுகள்
கையூட்டுப்பெறும் கைகள்
மது என்னை எங்கும் எடுத்துச் செல்லவில்லை
காயம் பட்ட இதயம்
சாலையில் அடிபட்ட நரிபோல்
ஓரமாகக் கிடக்கிறது.
கடந்து செல்கிறது உலகம்.
இரண்டாம் குவளை உள்ளிறங்குகிறது
இலையுதிர்காலத்தின் வர்ணங்கள் கரையும் விசும்பில்
அந்திச் சூரியன் நம்பிக்கையுடன் நிறங்களை இறைக்கிறது
இளமை இழைந்து நின்ற காலம் என் முன் சிரிக்கிறது
வெப்பம் எனக்கு கிடைத்த வரம்
இழந்து போ என்றெவர் எனக்கு சொன்னார்?
வாகனங்கள் விரையும் இவ்வீதி என்னை எங்கு அழைத்துச் செல்கிறது அறியேன்
மாயமானது உலகம்
நண்பர்கள் நிறைந்த காலம்
நினைவுகளை மட்டுமே விட்டுச் சென்றது
ஞாபங்களைப் பாதுகாக்க என்ன செய்யலாம்
மூன்றாம் குவளை என்ன செய்யும்?
எரிந்து கரையும் மெழுகுவர்த்தி
மூன்றாவது கிண்ணத்தில் தள்ளாடுகிறது
காலம் தட்டி வைத்த தீக்குச்சி பற்றி நாவில் என் சொற்கள் எரிகின்றன
எட்டி வைத்த கை தட்டிச் சரிகிறது கிண்ணம்
மூன்றாவது உலகத்தில் நாளை நிதானமாகக் கால்வைப்பேன்
நல்லதொரு கவிதை. மொழியை வைத்து வெற்றுக்கூச்சல்களாக வெளிப்படும் கவிதைகளுக்கு மத்தியில், மொழிச்சிறப்பும், பொருட்சிறப்பும் மிக்க கவிதையாக மலர்ந்திருக்கிறது இக்கவிதை. வாழ்த்துகள். இந்த வீதியில் பயணங்கள் எப்பொழுதுமே நிலைத்து நீடித்திருப்பதில்லை. இடையில் தொடங்கி, இடையில் முடிந்து விடுகின்றன. அந்த இடைப்பட்ட பயணங்களுக்கு ஆரம்பமும், அந்தமுமுண்டு. நினவுகள் மட்டுமே பல்வேறு நவீனத்தொழில் நுட்பங்களின் வடிவங்களில் நிலைத்து நிற்கின்றன. அதுவும் ஓரளவுக்குத்தான். தற்போது மனதைப்பற்றி நடைபெறும் ஆய்வுகள் எதிர்காலத்தில் ஒருவரின் வாழ்நாள் நினைவுகள் அவ்வளவையும் (100%) சேமித்து வைக்கும் சாத்தியத்தை எதிர்வு கூறி நிற்கின்றன. பல்வேறு உடல்களில் நினைவுகளைப்புகுத்தும் தீயவர்களை மையமாக வைத்து கலை, இலக்கிய வெளிப்பாடுகள் உருவாகுவதற்கான சாத்தியங்களையும் மறப்பதற்கில்லை.