'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்ப காலகட்டத்தில் நூல் மதிப்பரைகளை வெளியிட்டு வந்தது. நூல் மதிஉப்புரைக்காக தமது படைப்புகளின் இரு பிரதிகளை அனுப்பி வைககவும் என்ற எமது வேண்டுகோளினையேற்று, எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தார்கள். நூல் மதிப்புரை பகுதிக்காக அவ்வப்போது பல்வேறு புனைபெயர்களில் மதிப்புரைகள் எழுதுவதுண்டு. அவ்விதம் அவதானி, திருமூலம், மார்க்சியன், ஊர்க்குருவி, வானதி போன்ற புனைபெயர்களில் எழுதிய நூல் மதிப்புரைககளில் சில 'வாசித்ததும், யோசித்ததும் பகுதிக்காக மீள்பிரசுரமாகின்றன ஒரு பதிவுக்காக.
பின்வரும் நூல்களுக்கான மதிப்புரைகளை இங்கு நீங்கள் வாசிக்கலாம்: கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள் , ஆழியாளின் 'உரத்துப் பேச..., ' நடேசனின் 'வாழும் சுவடுகள்', பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!, அசை அரையாண்டிதழ், ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு, திலகபாமாவின் கவிதைகள்!, பா.அ. ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்'! , ஆசி. கந்தராஜாவின் 'பாவனை பேசலன்றி..', செ.க.வின் 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை', நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்! & காஞ்சனா தாமோதரனின் 'இக்கரையில்..'
மதிப்புரைகளுக்காக நூல்கள் அதிக அளவில் வரத்தொடங்கியதால் அப்பகுதியினை நிறுத்தி வைத்தோம். அதற்குப்பதிலாகத் தற்பொழுது பதிவுகள் இணைய இதழுக்கு நூல்கள் பற்றி அனுப்பப்படும் மதிப்புரைகளை 'நூல் அறிமுகம்' என்னும் பகுதியில் வெளியிட்டு வருகின்றோம். ஏற்கனவே 'பதிவுகளி'ல் வெளியான மதிப்புரைகள் 'பதிவுகள்' இணைய இதழில் ஒரு பதிவுக்காக அவ்வப்போது மீள்பிரசுரமாகும்.
1. . கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்'
வெளியீடு: மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கொழும்பு -06, இலங்கை. தொலைபேசி: 826336. விலை: 150 ரூபா
ஆசிரியரின் மின்னஞ்சல்:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. - பதிவுகள், ஜூன் 2003 இதழ் 42 -
தமிழில் திரைப்படங்கள் பற்றி அண்மைக் காலமாகத் தான் மிகவும் விரிவாக யமுனா ராஜேந்திரன் போன்றவர்கள் எழுதி வருகின்றார்களெனெ நினைத்தேன். ஆனால் அண்மையில் கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்' நூலினை வாசித்த பொழுதுதான் புரிகின்றது சிவகுமாரன் அறுபதுகளிலிருந்தே திரைப்படக் கலை பற்றி அவ்வப்போது தமிழில் எழுதி வந்துள்ள விடயம். இதுவரை காலமும் இலக்கியப் படைப்புகள் பற்றியே இவர் அவ்வப்போது தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருவதாகக் கருதியிருந்த எனக்கு 'அசையும் படிமங்கள்' வியப்பினையே தந்தது.
கொழும்பிலிருந்து மீரா பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'அசையும் படிமங்கள்' நூலில் திரைப்படக் கலை மற்றுந் திரைப்படத் திறனாய்வு பற்றிய கட்டுரைகள் காணப்படுகின்றன. மிகவும் எளிமையான தமிழில் சாதாரண ஒரு வாசகருக்குப் புரியக் கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள ஆரம்பக் கட்டுரைகளாக இவற்றைக் கொள்ளலாம். மிகவும் நுணுக்கமான ஆய்வுக் கட்டுரைகளல்ல இவை. ஆனால் திரைப்படக் கலை, திரைப்படத் திறனாய்வு பற்றி அறிய மற்றும் புரிய விரும்புவோருக்கு வழிகாட்டக் கூடியதொரு முதனூலாக 'அசையும் படிமங்கள்' நூலினக் கூறுவதில் எனக்கு எந்தவித தயக்கமுமில்லை.
தமிழில் சிறுகதை, நாவல்கள், கவிதைகள் போன்ற இலக்கிய வடிவங்கள் பற்றிய திறனாய்வு நூல்கள் வெளிவந்த அளவுக்கு ஓவியக் கலை பற்றியோ சினிமா பற்றியோ அதிகமான நூல்கள் வெளிவரவில்லையென்றே கூறலாம். அண்மைக் காலமாகத் தான் ஓவியங்கள் பற்றிய சில நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அது போல் சினிமா, தமிழ்ச் சினிமா பற்றியும் நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்நிலையில் கே.எஸ்.சிவகுமாரனின் 'அசையும் படிமங்கள்' நூல் இத்துறை பற்றிய தீவிர ஆய்வு செய்ய விரும்பும் எவருக்கும் வழிகாட்டக் கூடிய வகையில் தேவையான அடிப்படை விடயங்களைப் பற்றிய விபரங்களை எளிய மூறையில் தருகின்றது.
அறுபதுகளிலிருந்து தொண்ணூறுகள் வரையில் இவரால் அவ்வப்போது எழுதப்பட்ட மொத்தம் 24 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ள இந்நூலில் முதல் மூன்று கட்டுரைகளும் திரைப்படத் திறனாய்வு பற்றி விளக்குகின்றன. ரொஜர் மன்விலின் திறனாய்வு அணுகு முறை பற்றிய நூலின் முதலாவது கட்டுரை 1-12-1962 இல் சென்னையிலிருந்து வெளிவந்த 'தமிழ் சினிமா'வில் வெளிவந்திருக்கிறது. ரோஜர் மன்வில் பற்றியதொரு சுருக்கமான அறிமுகக் கட்டுரையிது. கட்டுரையில் ரொஜர் மன்விலின் சினிமா பற்றிய நூல்கள், அவரது பங்களிப்பு மற்றும் அவரது சினிமா விமரிசனம் பற்றிய கருத்துகள் ஆகியவற்றைத் தொகுத்துக் கூறும் கட்டுரையின் முடிவில் 'ஆங்கிலம் போன்ற மொழிகளில் இலக்கிய விமர்சனம் போல் திரைப்படத் திறனாய்வுத் துறையும் வளர்ந்து வருகின்றது. பல புத்தகங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவற்றைத் தமிழர்களாகிய நாம் படித்துப் பார்ப்பதால் பயன்பெற இடமுண்டு' என்று கே.எஸ்.எஸ் கூறுவார். 'திரைப்படத் திறனாய்வு' என்னும் கட்டுரையில் சிவகுமாரன் 'திரைப்படத் திறனாய்வுக்கு முதலில் தேவைப்படுவது திரைப்படத்தின் நல்ல அம்சங்களை இனங்கண்டு இரசிக்கத் தக்க மனோபாவமும், விருப்பும் ஆகும்' என்கின்றார். ஆனால் உண்மையில் இவை மட்டும் போதுமா? உண்மையில் திரைப்படத் திரனாய்வுக்கு திரைப்படக் கலை பற்றிய ஆழ்ந்த அறிவும், கமரா நுணுக்கங்கள் போன்ற திரைப்பட உத்திகள் பற்றிய போதிய அடிப்படை அறிவும் அவசியமானவையல்லவா? மேலும் நல்ல அம்சங்களை மட்டுமல்ல அனைத்துச் சாதக, பாதக அம்சங்களை அறிந்துணர்தலும் திரைப்படத்திறனாய்வாளனுக்கு அவசியமல்லவா? 'திரைப்படத் திறனாய்வு: அடிப்படைகள்' என்னும் கட்டுரை திரைப்படத் திறனாய்வுக்கு அடிப்படை அம்சங்களான 'கதை', 'காட்சி', 'ஒளிப்பதிவு', 'ஒலி', 'கதாபாத்திரங்கள்','நடிப்பு', 'படத் தொகுப்பு', 'நெறியாளர் ஆற்றல்' மற்றும் 'பாடம்' பற்றிச் சுருக்கமாக எடுத்துரைக்கும்.
திரைப்படமொன்றினை எவ்வாறு நுகர்வது பற்றிய விபரங்களை 'ஒரு திரைப்படத்தை எவ்வாறு நுகர்வது?', 'சினிமா: ஒரு கனவு', 'சினிமாவில் கலை நுட்பம்' போன்ற கட்டுரைகள் தருகின்றன. 'டொக்கியூமெண்டரி என்றால் என்ன? ' என்று விவரணப் படங்களைப் பற்றிய கட்டுரையொன்றும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.
'திரைப்பட வசன அமைப்பு என்பது யாது?' என்பது இன்னுமொரு சுருக்கமான கட்டுரை. கதை நகர்வு, கமெரா நகர்வு ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் தோன்றும் படிமங்களை மனதில் வைத்துத் திரைக்கதை அமைக்கப் படவேண்டும். முதலில் பாத்திர வருணனை, செயல்கள், கதை நிகழுமிடம் ஆகியவற்றை விளக்கும் Treatment பிரதியினைத் தயாரிக்க வேண்டும். பின் இந்த Treatment அடிப்படையில் திரை நாடகம் (screen play) தயாரிக்கப் படவேண்டும். இதன் தொடர்ச்சியாகத் திரைப்படத்தை எவ்வாறு எடுக்கப் படவேண்டுமென்பதை விளக்கும் பிரதியாக Shooting Scriptஇனைத் திரைப்பட நெறியாளர் தயாரிப்பார். இவ்விதமான தகவல்களை மேற்படி கட்டுரை தரும்.
'புரியும் சினிமா' என்று இன்னுமொரு கட்டுரை...நூலாசிரியரின் சினிமாக் கலைப் பற்றிய கேட்பாட்டினை அறிவிக்கும் கட்டுரையிது. 'கலை மக்களுக்காகவே' என்று இதில் கே.எஸ்.எஸ். உறுதியாகக் கூறுவார். 'கலை சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் அமையவேண்டும்' என்கின்றார். 'விழுமிய பயனுள்ள சமூகப் பணி தான் கலைஞனின் சேவையாக இருப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது' என்கின்றார் ஆசிரியர் மேற்படி கட்டுரையில். கே.எஸ்.எஸ்.சின் பொதுவாகக் கலை பற்றிய கோட்பாட்டினை விளக்கும் கட்டுரையிது.
'மாறிவரும் திரைப்படத் திறனாய்வு என்னும் கட்டுரையில் சிவகுமாரன் பின்வருமாறு கூறுவார்:'ஜனரஞ்சக சினிமாதானே என்று வணிக நோக்குள்ள படங்களை ஒதுக்கித் தள்ளாமல் , அவற்றையும் திறனாய்விற்கு உட்படுத்தும் பக்குவம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது'. இவ்வணுகு மூறை ஏனைய கலை வடிவங்களுக்கும் பொருந்தக் கூடியது. மேலும் ஒரு ஜனரஞ்சகத் திரைப்படம் கூட பல விதங்களில் சிறப்பாக இல்லாது போனாலும் கூடச் சிலவேளைகளில் கூறும் பொருளில் சிறந்து விளங்கக் கூடும். அவற்றை உணர்ந்து அறிவதற்கு இத்தகைய திறனாய்வுத் துறையிலான மாற்றங்கள் மிகவும் அவசியமானவையாக அமைகின்றன.
அன்றிலிருந்து இன்றுவரை பத்தி எழுத்தாளராகத் தன்னை அடையாளம் காட்டி வரும் கே.எஸ்.எஸ், மிகவும் விரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விசயஞானம் உள்ளவர். இவ்விதமான ஆழ்ந்த அறிவுள்ளவர் ஏன் இத்துறைகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதக் கூடாது? என்னும் கேள்வி இவரது பத்தி எழுத்துகளைப் படிக்கும் போது ஏற்படுவது வழக்கம். வழக்கம் போல் 'அசையும் படிமங்களும்' இக்கேள்வியினை எழுப்பிடத் தவறவில்லை. வெறும் பத்தி எழுத்துகளுடன் நின்று விடாமல் வருங்காலத்தில் விரிவான ஆய்வுப் படைப்புகளை நூல்களை எழுதுவதிலும் கே.எஸ்.எஸ்.கவனம் செலுத்துவாரெனவும் எதிர்பார்ப்போம்.
- அவதானி -- ஜூன் 2003 இதழ் 42 -மாத இதழ்
2. ஆழியாளின் 'உரத்துப் பேச...'
கவிதைத் தொகுப்பு: உரத்துப் பேச..., ஆசிரியர்: ஆழியாள். வெளியீடு: மறு, 71 முதலாவது பிரதான சாலை, இந்திரா நகர், சென்னை-20
ஆசிரியர் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
'மறு' வெளியீடாக வந்துள்ள கவிதைத் தொகுதி ஆழியாளின் 'உரத்துப் பேச'. ஆயிரக்கணக்கான வருடங்களாக ஆணாதிக்க அடக்குமுறைக்குள்ளாக்கப் பட்டு வந்துள்ள பெண்ணினத்தின் உணர்வுகளைப் படம் விரிக்கும் கவிதைகள். ஆழியாள் உரத்தே பேசியிருக்கின்றார். பெண்ணியக் கவிதைகள், மொழி பெயர்ப்புக் கவிதைகள் இவற்றுடன் பாப்பாப் பாட்டுகளென விரிகிறது கவிதைத் தொகுதி. 'கடற்கரை உலா' என்றொரு கவிதை. கட்டுகளை, கால் விலங்குகளை மரபாகக் கொண்டு வாழும் சமூக அமைப்பில், பெண்கள் கட்டுகளை மீறும் போது 'கற்பு கால் வழியே போகிறது எனக் கூவாதே வீணே' எனத் தாய் மகனைப் பார்த்து அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள கவிதை. இந்தக் கவிதையிலுள்ள முக்கியமான சிறப்புகளிலொன்று: ஒரு தாய் தன்னைப் பெண்களின் பிரதிநிதியாக வைத்துக் கொண்டு, மகனை ஆண் வர்க்கத்தின் பிரதிநிதியாக உருவகித்துக் கூறுவதாக வடிக்கப் பட்டுள்ளதே. பொதுவாகத் தாய்மார்கள் தாங்கள் பெண்கள் என்பதை மறந்து விட்டுத் தங்கள் புதல்வர்களுக்காக பல இலட்சக்கணக்கில் சீதனைத்தை அள்ளுவதில் குறியாகவிருப்பதும், காலத்தால் செல்லரித்துப் போன பெண்கள் பற்றிய சமூகத்தில் நிலவும் கருதுகோள்களை அவர்களே தங்கள் மருமகள்மார்மீது திணிப்பதில் முன்னணியில் நிற்பதும் அன்றாட நிகழ்வுகளாக நாம் அறிந்தவைதான். காண்பவைதான். இந்நிலையில் இக்கவிதையில் வரும் தாய் ஒரு புரட்சிகரத்தாயாகத் தன் மகனைப் பார்த்து
'அவர்கள்
அவர்களாக அவிழும்போதும்
முடிச்சுகளை அவிழ்க்கும் போதும்
கற்பு கால் வழியே போகிறது
எனக் கூவாதே வீணே'
என அறைகூவல் விடுப்பது வித்தியாசமானது மட்டுமல்ல விரும்பத்தக்கதும் தான். இது போல் 'தடை தாண்டி'யில் வரும் காதலியும் தன் உள்ளம் கவர்ந்தவனைப் பார்த்து 'எனினும் என் கருவறையை நிறைப்பது உன் குறியல்ல என்ற புரிதலோடு வா' என்று அறிவுரை கூறி வரவேற்கின்றாள். 'நீயும் நானும் வரையறைகளைக் கடக்க வேண்டும்' என்று வரையறைகளை இருவருமே கடக்க வேண்டுமென்ற தெளிவுள்ள காதலி இவள்.
1971 ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட 'சேகுவேரா' கிளர்ச்சியின் போது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப் பட்டுப் படுகொலை செய்யப் பட்ட கதிர்காம அழகி மன்னம்பெரி பற்றியும் அண்மையில் இலங்கை இராணுவத்தால் பிறப்புறுப்பில் கிரனட் வீசிக் கொல்லப் பட்ட கோணேஷ்வரி பற்றியும் கூறும் 'மன்னம்பெரிகள்' கவிதை முக்கியமான சரித்திர நிகழ்வுகளைப் பதிவு செய்கிறது.
'நிஜம்' என்றொரு கவிதை...எத்தனை தலைமுறைகள் கடந்தென்ன, எத்தனை விதிமுறைகள் ஆக்கியென்ன பெண் என்பவள் இன்னும் ஆணைப் பொறுத்தவரையில் ஒரு போகப் பொருளாகவேயிருக்கிறாளென்பதை
'எத்தனை தலைமுறைகள் போக்கினீர்?
எத்த்னை விதிமுறைகள் ஆக்கினீர்? - இன்னும்
பெண் போகமா உமக்கு?
போக்கிடமே இல்லையா அவளுக்கு?
என்றொரு வினாவெழுப்பி நடைமுறையை இடித்துக் காட்டும். பெண்ணின் நிர்வாணத்திற்காக அலையும் ஆணினத்தைப் பார்த்து,
'நிர்வாணமாய்
நிஜத்திலும் நிஜமாய்
உள்நோக்கி உம்மை ஒருகாலும் பார்த்ததே இல்லையா?
முதலில் உம்மை உற்று
உள்நோக்கிப் பாருமைய்யா, பாரும்?'
என்று சிந்திக்க வைக்குமொரு கேள்வியினை எழுப்பும். 'கடற்கரை உலா'வென்னும் கவிதையில் பெண்களுக்காகத் தன் மகனைப் பார்த்தே குரல் கொடுக்குமொரு தாயைப் பார்த்தோம். இதற்கு மாறாகத் 'தேவைகள்' என்னும் கவைதையில் காலங்காலமாக அடக்கப் பட்டு அதுவே வாழ்வெனத் திருப்தி கொள்ளும் பெண்ணினத்தின் பிரதிநிதியாக விளங்கும் தன் தாயைப் பார்த்து
'குசினித் தேநீர்க் கோப்பைக்குள்
ஊறிப் பருத்துக் கிடக்கும் உன் தலையையும்
அம்மன் கோயிலில் சரணாய்க் கிடக்கும் - உன்
கால்கள் ஒரு சோடியையும்
உடலில் பொருத்தி,
ஊருக்கு வெளியே வந்து பார் -'
எனத் தாயை வெளியில் வர அழைத்துப் பெண்ணியக் குரலெழுப்பும் மகளைக் காண்கின்றோம்.
'பதிவுத் தபால்' கவிதை ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறு வேறான ஓரபட்சச் சார்பான கருதுகோள்கள் நிலவுவதை ஒருவிதக் கிண்டலுடன் சுட்டிக் காட்டி விமர்சிப்பதாக அமைந்துள்ளது. மொத்தத்தில் பெண்களின் விடுதலைக் குரலாக ஒலிக்கும் கவிதைகளை அதிகமாகக் கொண்ட நூலில், மிகவும் தீவிரமான காத்திரமான விடயங்களைக் கொண்டுள்ள கவிதை நூலில் எதற்காக நூலாசிரியை 'பாப்பாப் பாடல்களை'க் கொண்டு வந்து வலியத் திணிக்க வேண்டும். பாப்பாப் பாட்டுகளை யாருக்காக ஆசிரியை இங்கே தொகுத்துள்ளார்? குழந்தைகளுக்காகவென்றால்...ஆழியாளின் 'உரத்துப் பேசல்' அதற்குப் பொருத்தமாகப் படவில்லையே. வயதானவர்களுக்காகவென்றால் பாடல்களின் நடை, தொனி அதற்குச் சார்பானதாகவிருக்கவில்லையே.
- அவதானி - மே 2003 இதழ் 41 -மாத இதழ்
3. நடேசனின் 'வாழும் சுவடுகள்'
ஆசிரியர்: டாகடர் என்.எஸ்.நடேசன். பதிப்பகம்: மித்ர; 375/8-10 Arcot Road, Chennai 600 024, India
தொலைபேசி: (044) 372 3182 . ஆசிரியரின் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
டாக்டர் நடேசனின் 'வாழும் சுவடுகள்' தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு வரவு. புது முயற்சியும் எனலாம். 'நாலுகால் சுவடுகளே' 'வாழும் சுவடுகளான' தலைப்பு மாற்றத்தினை நூலிற்கான எஸ்.பொ.வின் முன்னீடு தெரிவிக்கின்றது. மனிதரின் மிருக அனுபவங்களை வைத்துப் புனைகதைகள் பின்னப்படும் இக்காலகட்டத்தில் 'வாயில்லாச் சீவன்ளுடனான' மனிதரின் அனுபவங்களை மனிதாபிமானக் கண்ணோட்டத்தில் கூறும் 'வாழும் சுவடுகள்' இன்னுமொரு விதத்திலும் சிறந்து விளங்குகின்றது. ஆசிரியரின் எழுத்தாற்றல் காரணமாக ஒவ்வொரு அனுபவங்களும் ஈசாப் கதைகளைப் போல் சில சமயங்களில் தீர்வினைத்தரும் குறுங்கதைகளாக விளங்கிச் சிறக்கின்றன. வித்தியாசமான அனுபவங்கள் நல்ல சிறுகதைகளைப் போல் படிப்பதற்குச் சுவையாகவிருக்கின்றன.
'நடுக்காட்டில் பிரேத பரிசோதனை' யானைக்கு நடந்த பிரேத பரிசோதனையைக் கூறும். ஆசிரியரின், டாக்டரின் ஆரம்ப அனுபவம் 'துப்பறியும் சாம்பு' கதையொன்றை வாசித்தது போலொரு கதையாக உருவான நல்லதொரு அனுபவம். சிக்கலான பிரச்சினைகளை எவ்விதம் சாதாரண அனுபவ அறிவு மூலம் தீர்க்க முடியுமென்பதற்கு உதாரணமாக இக்கதையினைக் கூறலாம். ஆரம்பத்தில் பயந்து கொண்டு சென்ற டாக்டர் தனது சமயோசிதத்தால் நல்லதொரு தீர்வினைத் தனது தடுமாற்றத்தினை வெளிக்காட்டாமல் தீர்த்துத் துப்பறியும் சாம்புவாய்ப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் முன்னால் நிமிரும் போது வாசிப்பவர் இதழ்க் கோடியில் புன்னகையும் கூடவே தோன்றி விடுகின்றது.
'கலப்பு உறவுகள்' சிறிய இனப் பசுவொன்றிற்குப் பெரிய இனக்காளையொன்றுடன் சினைப்படுத்தியதால் உண்டான பிரசவச் சிக்கலைக் கூறும். மனிதருக்கும் இது பொருந்துமாவென்பதை பிரசவ வைத்திய கலாநிதிகள் தான் ஆய்ந்து அறிவிக்க வேண்டும். 'ராமசாமி கோனாரின் கவலைக்கு மருந்து' அவரது வாழ்வுப் பிரச்சினை அவரது மாடுகளின் அனுபவத்தினூடு ஒப்பிட்டு ஆராயப்படும் பொழுது சிறுகதைகளுக்குரிய அம்சங்களுடன் விளங்குகின்றது. இக்கதையில் தமிழகத்தில் தமிழ்ச் சொற்களாகப் பரவிக்கிடக்கும் ஆங்கிலச் சொற்களின் பாவனையும் அங்கதத்துடன் சுட்டிக்காட்டப் படுகிறது. தமிழ் நாட்டில் 'சோப்பு' என்ற தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்ததைக் கூறும் அனுபவம் அது.
பல புதிய தகவல்களையும் 'வாழும் சுவடுகள் 'தெரிவிக்கின்றன. உதாரணத்திற்கு 'இரத்த தான மகிமையி'னைக் குறிப்பிடலாம். கருணைக்கொலை செய்யப்படும் நாய்களிடமிருந்து பெறப்படும் இரத்ததானத்தினைக் குறிப்பிடலாம். இலங்கையில் போர்ச்சூழல் உக்கிரமாகவிருந்த சமயம் கொல்லப்பட்டவர்களின் கண்கள் தானமாகப் பெறப்பட்டதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றோம். மேற்படி அனுபவம் இத்தகைய சம்பவங்களை இலேசாக நினைவு படுத்துகின்றன.
'அகதி அந்தஸ்து கேட்ட பெருநண்டு' ஏற்கனவே குமுதத்தின் 'யாழ்மணத்தில்' வெளிவந்த அனுபவம். மேற்படி தொகுப்பிலுள்ள அனுபவங்களில் சிறுகதைக்குரிய அம்சங்களுடன் விளங்கும் முக்கியமான படைப்பிது. நடைமுறைக்கும் தத்துவத்திற்குமிடையில் விளங்கும் முரண்பாட்டினை அழகாக எடுத்துக் கூறும் அனுபவம். மரணப்பிடியிலிருந்து தப்பியோட முனையும் பெருநண்டு. அதன் நிலைக்காக அனுதாப்படும் மனித உள்ளம் முடிவில் அதனை உண்டு ஏப்பம் விட்ட பிறகே 'இனி மேல் பெருநண்டு சாப்பிடுவதில்லை' என்று சபதம் எடுக்கின்றது. சாதாரண நடைமுறைச் சாத்தியமான அனுபவம் உணர்வுகள் இயல்பாக வெளிப்படுகின்றன. 'போதை தந்த கொக்கிஸ்', 'நாய் வயிற்றில் பலூன்', 'விதையின் விலை பத்தாயிரம் டொலர்', 'மஞ்சள் விளக்கின் அர்த்தம்' போன்ற ஆசிரியரின் அனுபவங்கள் வெறும் மிருகங்களுடான அனுபவங்கள் மட்டுமல்ல. ஒருவகையில் புலம் பெயர்ந்த சூழலின் வித்தியாசமான அனுபவங்களாகவும் விளங்குகின்றன.
மொத்ததில் டாகடர் நடேசனின் 'வாழும் சுவடுகள்' ஒரு மிருக வைத்தியரின் சாதாரண அனுபவங்கள் மட்டுமல்ல. சொல்லும் பொருளில் , நடையில் சிறந்து விளங்கும் வித்தியாசமான படைப்பிலக்கிய முயற்சியாகவும் விளங்கும் அனுபவங்கள். மிருகங்களின், புலம் பெயர்ந்த சூழலின் அனுபவங்களை விவரிக்கும் மனித உணர்வுகளின் தொகுப்பான 'வாழும் சுவடுகள்' தமிழ் இலக்கிய உலகிற்கொரு வித்தியாசமான புது வரவு தான்.
- ஊர்க்குருவி - மார்ச் 2003 இதழ் 39 -மாத இதழ்
4. பாரிஸிலிருந்து வெளிவரும் உயிர் நிழல்!
சஞ்சிகை: உயிர் நிழல். தொகுப்பாசிரியர்கள்: கலைச் செல்வன், லக்ஷ்மி. முகவரி: EXIL, 27 Rue Jean Moulin, 92400 Courbevoie, France
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. வருடச் சந்தா: 15 Euros
மிகவும் நேர்த்தியான, கைக்கடக்கமான வடிவமைப்புடனும் கனமான விடயங்களுடனும் ஏப்ரில்-ஜூன் மாத உயிர்நிழல் வெளிவந்துள்ளது. கலையரசனின் 'பாலஸ்தீனத்தில் தொடரும் அபத்தம்' மற்றும் லக்ஷ்மியின் 'கண்ணுக்குத் தெரியாத சித்திரவதை முகாம்கள்' ஆகிய கட்டுரைகளில் விரிவான தகவல்களைச் சுவையாகத் தந்திருக்கின்றார்கள் கட்டுரையாளர்கள். இது போன்ற நீண்ட பல்கோணங்களிலிருந்தும் எழக்கூடிய கேள்விகளுக்குப் பதில் தரும் வகையில் வெளிவரும் ஆழமான கட்டுரைகள் வரவேற்கத் தக்கன. மத்திய கிழக்கு நாடுகளில், தென்கிழக்காசிய நாடுகளில் சீரழியும் உக்ரேனிய பெண்கள் நிலைகளை விரிவாக ஆராய்கின்றது லக்ஷ்மியின் கட்டுரை. இதே போல் பாலஸ்த்தீன நிலைமைகளை விரிவாக ஆராய்ந்து விளக்குகின்றது கலையரசனின் கட்டுரை.
திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ்சின் 'சாதியால் ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்வியல் ஒரு பதிவாக' என்னும் கட்டுரை டானியல் பற்றிய அவரது படைப்புகளினூடு, அவரது வாழ்க்கையினூடு அவரை நன்கு அறிமுகம் செய்து வைக்கின்றது. ஈழத்துப் படைப்பாளிகள் பற்றி இத்தகைய கட்டுரைகள் பல வெளி வரவேண்டியதன் அவசியம் காலத்தின் கட்டாயம் எனலாம். மேலும் பாரிசில் நடைபெற்ற டானியல் கருத்தரங்கில் பங்குபற்றிய முக்கிய பேச்சாளர்களின் உரைகளின் தொகுப்பு பயனுள்ளதொன்று. டானியல் பற்றி மட்டுமல்லாது ஈழத்தில் தாழ்த்தப்பட்ட சமூகம் அடைந்த வேதனைகளின் வரலாற்றையும் பதிவு செய்வது அதன் சிறப்பாகும்.
சிவலிங்கம் சிவபாலனின் 'தண்ணீரையும் எரிக்கும் இந்த நெருப்புக்கள்', திருமாவளவனின் 'யார் எண்ணினார்கள்?' ஆகிய சிறுகதைகள் புகலிட வாழ்வியல் அனுபவங்களைப் பதிவு செய்கின்றன. திருமாவளவனின் கதை பேச்சுத் தமிழில் புகலிடத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையொன்றின் அனுபவங்களைக் கூறுகின்றது. அந்த வகையில் கவனிப்பிற்குரியது. ஆனால் ஆங்காங்கே கையாளப்பட்டிருக்கும் மொழி நடை கதையின் ஓட்டத்திற்கு வலு சேர்ப்பதாயில்லையே. உதாரணத்திற்குக் 'குண்டியாலை சிரிக்க வேணும் போலை இருந்திச்சுது' என்று வருவதைக் கூறலாம். இவ்விதம் யாராவது நினைவு மாறாட்டம் இல்லாத ஒருவர் நினைப்பாரா என்பது தெரியவில்லை.
வினோதனின் கதையில் வலிந்து திணிக்கப் பட்ட சம்பவங்களை வைத்துக் கதை பின்னப் பட்டுள்ளதால் மனதில் உறைக்கவில்லை. கடைக்குள் சென்று Extra large கோப்பி, 'இவ்வளவு late ஆய்' என ஆங்கிலச் சொற்கள் தேவையற்று கையாளப் பட்டுள்ளது உறுத்துகிறது. தவிர்த்திருக்கலாம். கணவனைக் கொல்லுதல் வெகு சாதாரணமாக ஒரு சாதாரணமனுஷியின் செயலாகக் கூறப்பட்டுள்ளதைப் பின்வரும் வரிகள் புலப்படுத்துகின்றன: 'போ, இஞ்சையிருந்து போயிடு. திரும்பி வராதை. வந்தால் கண்டால் உன்னைக் கொலை செய்து போடுவன். ஏனென்றால் நான் ஒரு சாதாரண மனுஷி'. கணவனைக் கொன்ற சாதாரண மனுஷியின் நடைமுறை சாதாரணமாகத் தெரியவில்லையே. அசாதாரணமாகவல்லவா தெரிகின்றது. இவ்விதம் எழுதுவதால் இக்கதை பெண் உரிமையினை வாதிடுவதாக ஆசிரியர் எண்ணியிருந்தால் அது தவறு. பெண்களை இழிவு படுத்துவதாகவே இத்தகைய எழுத்தோட்டம் அமைந்து விடுகிறது. கணவனைக் கொல்லுதற்குரிய காரணங்கள் வலுவாக நியாயப்படுத்தும் வகையில் கூறப்பட்டிருக்க வேண்டும். யோன் தார்தியோவின் 'கால விலங்கு' , வாசுதேவனால் மொழி பெயர்க்கப் பட்டது, நல்லதொரு மொழி பெயர்ப்புக் கதை. மொத்தத்தில் கவிதைகள்,நூல் விமரிசனம், அரசியலெனக் காத்திரமான விடயங்களுடன் உயிர் நிழல் வெளி வந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
- ஊர்க்குருவி- ஆகஸ்ட் 2002 இதழ் 32 -மாத இதழ்
5. அசை அரையாண்டிதழ்
தொகுப்பாசிரியர்: அசோக் யோகன். வெளியீடு: பதிவுகள், சி-275 சேரன் மாநகர், விளாங்குறிச்சி சாலை, கோயமுத்தூர் - 35
கடந்த நூற்றாண்டில் மார்க்ஸியத்திற்கேற்பட்ட தற்காலிக தோல்விகளைத் தொடர்ந்து சோர்ந்திருந்த மார்க்ஸியர்களை மீண்டும் உற்சாகமடையச் செய்யும் வகையில் வெளிவந்திருக்கின்றது அரையாண்டிதழான அசை. வழக்கமான சஞ்சிகைகளிலிருந்து வித்தியாசமாக ஆழமான கனமான கட்டுரைகள், கவிதைகளைத் தாங்கி வெளி வந்திருக்கிறது. ஜென்னி டிஸ்கியின் 'மார்க்ஸ் என்னும் மானிடன்', சமுத்திரனின் 'உலகமயமாக்கலும் மனித சுதந்திரமும்', தமிழரசன் மற்றும் அம்பேத்காரின் 'நீட்ஷே' பற்றிய கட்டுரைகள், 'நினைவுகள் மரணிக்கும் போது' ஆங்கில நாவல் பற்றி நாவலாசிரியர் ஏ.சிவானந்தனுடன் யமுனா ராஜேந்திரனின் உரையாடல், இஸ்லாமிய அடிப்படைவாதம், பெண்நிலைவாதம், முறைகேடு இலக்கியம் ராகவனின் 'இலங்கையின் பூர்வகுடிகள்' பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வெளி வந்திருக்கின்றது அசை. ஆழமான கட்டுரைகள். அவசியமானவை. குறிப்பாக 'உலகமயமாக்கல்', 'மார்க்ஸியத்தின் இன்றைய நிலை' பற்றிய புரிதல்கள் பலருக்குப் போதிய அளவில் இல்லாத நிலையில் இவை பற்றிய கட்டுரைகளின் தேவை அவசியமானவை.
சோவியத் சிதைவுடன், பேர்லின் சுவர் உடைபடுதலுடன் மார்க்ஸியம் செத்து விட்டதாகப் பலர் எண்ணி விட்டார்கள். மார்ஸியம் எல்லாவற்றையும் பொருளாதாரக் கண்ணோட்டாத்துடன் நோக்குவதாகக் குற்றஞ் சாட்டி கொண்டு பலர் படையெடுத்து வந்து கொண்டு பல்வேறு விளக்கங்களைக் கொடுக்குமொரு காலகட்டத்தில் அசை போன்ற சஞ்சிகைகளின் வரவும் வரவேற்கத்தக்கதே.
இந்நிலையில் அசை தனது ஆசிரியத் தலையங்கத்தில் ' மரபு ரீதியிலான மார்க்ஸியர்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சாதியம், ஆணாதிக்கம், சுற்றுச் சூழல் பிரச்சினைகள், சமப்பாலுறவு உளவியல், இனத் தேசியம் போன்ற பொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகளை பிரச்சினைகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை என்கிற விமர்சனம் நமக்கிடையில் இருக்கிறது' எனக் கூறுவது வியப்பினைத் தான் தருகின்றது. சாதியம், சுற்றுச் சூழல் பிரச்சினைகள், ஆணாதிக்கம், இனத் தேசியம், போன்ற பிரச்சினைகளைப் பொருளாதாரம் அல்லாத ஒடுக்குமுறைகள் என எவ்விதம் கூறலாம்? இவை எல்லாவற்றிற்கும் மூல காரணமே பொருளியல் பிரச்சினைகளல்லவா? ஆனால் அதே சமயம் 'மேற்கிலும் பல்வேறு பின்புரட்சி சமூகங்களிலும் வளர்ந்து வரும் மார்க்ஸிய விமர்சனம் சார்ந்த மறுமலர்ச்சி வகையிலான மார்க்ஸியம் திட்டமிட்ட வகையில் தமிழ் பின் நவீனத்துவவாதிகளாலும் தமிழ்த் தேசியவாதிகளாலும் மறைக்கப் பட்டு வருகிறது என நாம் காண்கிறோம். இவ்வகையிலேயே தமிழில் அசை போன்றதொரு நூலின் தேவையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இதன் வழியில் உலகின் பிற மார்க்ஸியர்களுக்கும் தமிழ் பேசும் மார்க்சியர்களுக்கும் இடையில் திசைகளுக்கிடையிலான ஒரு தொடர் உரையாடலை நாம் உருவாக்க நினைக்கிறோம்' எனக் கூறுவது ஏற்கத் தக்கதே.
மார்க்ஸியக் கோட்பாடு, புரட்சிகர அரசியல், மாற்றுக் கலாச்சாரம் என்ற வகைப்பாடுகளின் கீழ் கோட்பாட்டு ரீதியிலான எழுத்துகளை மட்டுமே அசை வெளியிடுமென்பதும் காலத்திற்கேற்ற அவசியமே. தற்போதைய நிலையில் மார்க்ஸியம் பற்றிய சரியான புரிதல்களுக்கும், நடைமுறை சார்ந்த அதன் மீதான அணுகுமுறைகள் பற்றிய விளக்கங்களுக்கும், அதன் பலகீனங்களை அதன் பலங்களை உள்வாங்கிச் செழுமைப்படுத்துவதற்கும், மேற்கு நாடுகளில் தற்போதும் வெளிவரும் மார்க்ஸியச் சஞ்சிகைகளுடன் அறிமுகம் ஆவதற்கும் அசை போன்ற சஞ்சிகைகளின் தேவை மிகவும் அவசியமே. நீண்ட நாட்களின் பின்னர் தேவையற்ற தனிப்பட்ட தாக்குதல்களற்ற ஆழமான கோட்பாடுகளை விளக்குவதையே மையமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் அசையினை அசை போடுவதன் மூலம் மார்க்ஸியத்தை இன்றைய சூழலில் புரிந்து கொள்வதற்கு முடிகிறது.
-மார்க்ஸியன் -
மே 2002 இதழ் 29 -மாத இதழ்
6. ஊடறு: பெண்படைப்பாளிகளின் தொகுப்பு
தொகுப்பாளர்கள்: றஞ்சி (சுவிஸ்), தேவா (ஜேர்மனி), விஜி (பிரான்ஸ்), நிருபா (ஜேர்மனி)
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்தியாவில் விற்பனை உரிமை: Vidiyal Pathippakam, 11 Periyaar Nagar, Masakkalipalayam (North)
Cimpabtore 641 015. Email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
அருந்ததி றட்ணராஜின் அழகிய அட்டைப்படத்துடன் பெண் படைப்பாளிகளின் தொகுப்பாக ''ஊடறு' வெளிவந்துள்ளது. பெண்களின் ஆவேசம் கலந்த தார்மீகக் குரல் நூல் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. பெண்ணியப் பார்வையில் ஆழமான சுய மற்றும் மொழிபெயர்க்கப் பட்ட கட்டுரைகள், சிறுகதைகள், அதிக அளவில் கவிதைகள், ஓவியங்கள், இதழியற் பதிவுகளென நூலின் கனமும் களமும் விரிவானது. போர்னோக்ரா·பி பற்றிய பெண்ணியப் பார்வையிலான 'வேசிகளைப் பற்றிய சித்திரம்' என்னும் யசோதாவின் மொழிபெயர்ப்புக் கட்டுரை சுருக்கமாகவிருந்தாலும் ஆழமானது. ஆணாதிக்கச் சிந்தனையினை தோலுரித்துக் காட்டி பெண்ணியப் பார்வையின் தர்க்க நியாயத்தை நிலைநிறுத்துவதில் வெற்றியடைகின்றது. 'ஆணாதிக்கக் கலைச் சொற்களான வேசி, விபச்சாரம், வேசைத்தனம் ..' போன்ற சொற்களைப் பயன்படுத்துவது கட்டுரையின் நிர்ப்பந்தத்தைக் குறிப்பதாக மொழிபெயர்ப்பாளர் யசோதா குறிப்பிட்டாலும் அதனை தவிர்த்திருக்கலாமே. அதற்குப் பதிலாக மேற்படி சொற்களுக்கு ஏற்ற வகையில் பெண்ணியப் பார்வையில் புதுக்கலைச் சொற்களை உருவாக்கிப் பாவித்திருக்கலாமே? ஏனென்றால் கட்டுரை முழுவதும் அடிக்கடி 'வேசி' 'வேசி' என்று வருவது கட்டுரையின் நோக்கத்தைச் சிதைத்து விடுவது போல் உணர்கின்றேன். ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் பாலியல் வல்லுறவுக்கெதிராக எழுதப் படும் கட்டுரையொன்று பெண்களை போகப்பொருளாக்கிக் காட்டும் சித்திரங்களுடன் வெளிவரும் போது செய்யும் அதே தவறினை மேற்படி அதிக அளவிலான ஆணாதிக்க கலைச் சொற்கள் ஏற்படுத்தி விடுமோவென அஞ்சுகின்றேன். ஆனால் அதற்காக கட்டுரையின் ஆழத்தைப் பற்றிக் குறை சொல்வதற்கில்லை. சிந்தனையை விரிவடைய வைப்பதில் இக்கட்டுரை வெற்றியடைந்துள்ளதென்றே கூறவேண்டும். யசோதாவின் இன்னுமொரு மொழி பெயர்ப்பு கட்டுரை கரோல் வான்ஸ் ஆங்கிலத்தில் எழுதியதன் மொழி பெயர்ப்பான 'இன்பமும் அபாயமும்: பாலியல் தனமையின் அரசியலை நோக்கி' என்னும் நீண்ட கட்டுரை. இதுவும் மிகவும் ஆழமான தேடல் மிக்கது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் நிலவும் பாலியல் ரீதியிலான கருதுகோள்களைப் பற்றிய சந்தேகங்களை, ஓரபட்சமான தவறான ஆணாதிக்கப் புரிதல்களை, பெண்களின் பாலியல் சுதந்திரத்தின் தேவையினை நியாயத்தினை அதனை அடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரையிது. அரங்கமல்லிகாவின் 'தலித்தியமும் தமிழ் இலக்கியமும் ' அடிக்கட்டுமானத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பின்நவீனத்துவப் பார்வை பற்றி, வரலாற்று ரீதியிலான தலித் மக்கள் பற்றிய பதிவுகளைப் பற்றி, தலித் படைப்பாளிகள் பற்றி அவர்தம் படைப்புகள் பற்றி, தலித் பெண்ணியம் வளரவேண்டியதன் தேவை பற்றி வலியுறுத்தும். செல்வி திருச்சந்திரனின் 'மொழியும் ஆண்வழிச் சமூக அமைப்ப்' ஆணாதிக்கச் சமூகத்தில் நிலவும் மொழி வழக்குகளை பெண்நிலை நோக்கில் ஆய்வு செய்வதன் அவசியத்தை வற்புறுத்தும். ஞானபாரதியின் 'ஒரு தேவதாசியின் கதை' தேவதாசிச் சமூகம் பற்றிய சிறியதொரு குறுக்கு வெட்டு. நிரூபாவின் 'pfui pfui புனித விழா' பெண்களின் நிலையினைப் புலத்தில் புகலிடத்தில் மற்றும் புகலிடத்தில் காணப்படும் தலைமுறை இடைவெளிகளை ஆராயும். தேவாவின் 'யுத்தம் எதற்காக'சிறு விடயங்களிற்கான கடவுள்' என்ற புகழ் பெற்ற ஆங்கில நாவலைத் தந்த அருந்ததி ராயின் சமகால சமூக அரசியற் செயற்பாடுகள் மீதான பார்வையினை நமக்கெல்லாம் அறிமுகப் படுத்தி வைக்கும். முன்னைய சோவியத்திலிருந்து இன்றைய அமெரிக்க வரையிலான நாடுகளில் பெண்கள் நிலையினை விளக்கி ஆராயும் கட்டுரை றஞ்சியின் 'ஒரு பெண் நிலைப் பயணம்' கட்டுரை. சுபாவின் 'தொழில் நுட்பமும் பெண் விடுதலையும்' கட்டுரை தகவல் தொழில் நுட்பத்தின் முக்கிய மைல்கல்லான இணையத் தொழில் நுட்பத்தினை எவ்விதம் பெண் விடுதலைக்கு ஆக்க பூர்வமாகப் பாவிக்கலாமென்பதை அறிய முனைகின்றது. நோர்வேயில் பல சிரமங்களுக்குப் பின்னர் அரசியல் தஞ்சம் பெற்ற ஆப்கான் பெண்ணியப் போராளியும் கவிஞையுமான மாரியம் அஸிமியை தயாநிதியின் 'அந்த எரிந்த இதயம்' அறிமுகம் செய்து வைக்கின்றது.
பொதுவில் தொகுப்பிலுள்ள படைப்புகளில் கட்டுரைகளிலுள்ள ஆழத்தை ஏனைய படைப்புகளில் அதிகம் காண முடியவில்லை. கவிதைகளில் பலவற்றில் அதிகளவில் ஆவேசக் குரல் மட்டும் தான் அதிகமாக ஒலிக்கின்றது. பாமதியின் 'தலைப்பில்லாத சில கவிதைகள்' 'நான் பாடுவதற்கான சுதந்திரத்தை இந்த எழுத்து பெற்றுத் தந்திருக்கின்றது' எனக் குரலெழுப்புவதிலுள்ள யதார்த்தம் உறைக்கின்றது. பெண்களின் விடுதலைக் குரலைக் காவும் ஊடகமாக வலிமையுடன் விளங்குவதும் இந்த எழுத்துத் தானே. கோசல்யா சொர்ணலிங்கத்தின் 'வேண்டியதில்லை சாவிகள்', சந்திரா இரவீந்திரனின் 'பிணவலி', அனாரின் 'வன்மப் படுதல்', திலகபாமாவின் 'எடுக்கவோ கோர்க்கவோ', மஸாஹிறா பாயிஸ்சின் 'பைத்தியக்காரன்' என்பனவும் நல்ல கவிதைகளே. மேலும் ஓவியங்கள் . சிறுகைதைகளென இத்தொகுப்பு கனம் நிறைந்ததென்பதில் தொகுப்பாளர்கள் நிச்சயம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.
- ஊர்க்குருவி - ஜூன் 2002 இதழ் 30 -மாத இதழ்
7. திலகபாமாவின் கவிதைகள்!
கவிதை நூல: சூரியனுக்கும் கிழக்கே
ஆசிரியர்: ம.திலகபாமா. வெளியீடு:டாக்டர் மகேந்திரசேகர், மதி மருத்துவமனை, 15/1 ஆறுமுகம் ரோடு, சிவகாசி-626 123
தொலைபேசி: 448688
இணைய இதழ்களின் தமிழ் இலக்கியச் சூழலிற்கான பங்களிப்பாக திலகபாமாவின் 'சூரியனுக்குக் கீழே' கவிதைத் தொகுதி விளங்குகின்றது. திண்ணை.காம்மில் வெளிவந்த இவரது கவிதைகள் தற்போது தொகுப்பாக வெளிவந்திருப்பதே இதற்குச் சான்று. எழுத்துத் துறையில் ஈடுபடும் பலர் புதிய ஊடகமான இணையத்தைச் சரியாகப் பாவிப்பதில்லை. பலருக்குத் தமிழில் இணையத்தில் எழுதுவது எப்படி என்பதே தெரியவில்லை.அதனை அறிவதிலும் அவர்களுக்குப் போதிய ஆர்வம் இருப்பதில்லை. இதன் மூலம் அவர்கள் அடையும் இழப்பினையும் அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இத்தகைய நூல்களைப் பார்த்தாவது அவர்கள் திருந்துவார்களாக.
திலகபாமாவின் கவிதைகள் அனைத்திலுமே காலங்காலமாக அடக்கி ஒடுக்கி வைக்கப் பட்ட பெண்ணின் சுதந்திர வேட்கை பீரிட்டுப் பொங்கி நிற்கிறது. ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண்ணென்பவள் ஆணால் மட்டுமல்ல பெண்ணாலேயே (தாய்) அடக்கி வைக்கப் பட்டே வளர்க்கப் படுகின்றாள்.இதனையும் இவரது கவிதைகள் எடுத்துரைக்கின்றன. ஆணாதிக்கச் சமுதாயத்தில் நிலவும் காணப்படும் புராண இதிகாசங்கள் கூட ஆணாதிக்கம் கொண்டவையாக விளங்குவதையும் இவரது கவிதைகள் எடுத்துரைப்பதை ஆங்காங்கே காணலாம். நூலின் தலைப்புக் கவிதையான 'சூரியனுக்கும் கீழே' இதற்கு நல்லதொரு உதாரணம். கோடு தாண்டிய சீதையை, சீர்கேடு சுட்டெரித்த கண்ணகியை விதந்துரைக்கும் கவிதை தாலி கட்டிய மண்டோதரிகளைச் சிறை வைக்கும் இராவணேஸ்வரர்களை, கரு தாங்குபவளுக்கு மட்டும் சாபங்கள் விதித்த விசுவாமித்திரர் கூட்டத்தினரை, தாய் வீடு அனுப்பும் ஆதிச் சிவனார் திருவிளையாடல்களையெல்லாம் தோலுரித்துக் காட்டும். வீட்டோடு விழுப்புண்ணோடு பெண்மை வாடச் சுதந்திரமாய்ச் சிறகடிக்கும் ஆண்மையின் ஆதிக்கத்தைக் கவிதைகள் வெளிப்படுத்தும் அதே சமயம் பெண்ணின் சுதந்திர வேட்கையினையும் நன்றாகவே
'நிதம் நிதம்
நித்திரை கலைந்து விடியல் வந்தும்
விடிந்து படாத இந்த வாழ்வால்
உறவுகளை புதுப்பிக்கும்
இரவல் வாங்கா ஒளியை
உன்னிலிருந்து பிறக்க வைக்கும்
புதிய விடியல் விடியுமென
சூரியனுக்கும் கிழக்கே
சுடரும் தாகத்தோடு காத்திருந்தபடி'
என்று வெளிப்படுத்தும். 'கனன்ற சூரியன் கனன்று விழுந்தும் தீப்பற்றி எரியாத மலையாயும்', அடிவாரத்தில் அணை நீர் அதிகம் குடித்தும் தாகம் தணியாத மலையாயும் கிடக்கும் பெண்மையின் தாகம் தணிவது தானெப்போ?
திலகபாமாவின் கவிதைகளில் காணப்படும் இன்னுமொரு பண்பு அவதானிக்கப் படும் நிகழ்வுகள், சம்பவங்கள் அனைத்தையும் பெண்ணிய நோக்கில் நின்று காண்பது. இது இயற்கையானதொரு மனோபாவம். உதாரணத்திற்குக் 'நிலவு' கவிதையினைக் குறிப்பிடலாம்.
'வெள்ளி நிலவை வெட்கமின்றி
விரகத்தோடு அணைத்தது
ஆண்மனோபாவ மேகம்'
என்கின்றது கவிதை.
'சந்தடி சாக்கில்
தடவிச் செல்லும்
மேகத்துக்குப் பயந்து
சன்னல் கம்பிச் சிறைக்குள்
சந்திரனா?'
என்று கவிதையில் பின்னால் வரிகள் வருகின்றன. சந்திரன் என்பது ஆண்பால். 'ஆண்மனோபாவ மேகத்தின் மோகத்தைக் கண்டு எதற்காக ஆணான சந்திரன் அஞ்சவேண்டும்? ஓரினச் சேர்க்கை பற்றி இங்கு கவிஞர் குறிப்பிடுவதற்காகக் கருதுவதற்குச் சந்தர்ப்பமில்லை. சொற்களைக் கவிதைகளில் கையாளும் போது சரியான கவனம் வேண்டும் என்பதற்காகக் குறிப்பிட்டேன். பொருளே மாறிவிடும் அபாயம் இருப்பதற்காக இதனை இங்கே கூறினேன். சந்திரன் என்பதற்குப் பதில் சந்திரமதி என்று வந்திருந்தால் பொருள் மாறுவதற்கே பிரச்சினை வந்திருக்காது. ஆணாதிக்க மேகத்தின் மோகத்தடவல்களால் சங்கடத்திற்குள்ளாகும் சந்திரமதியைக் காட்டுவதற்குப் பதில் ஆணாதிக்க மேகத்தின் மோகத் தடவல்களால் அல்லலுறும் சந்திரனென்ற ஆணின் நிலையைக் கவிதை படம்பிடிப்பதாக யாரும் குறிப்பிட்டால் தர்க்க ரீதியாக மறுப்பதற்கும் இடமிருப்பதாகத் தெரியவில்லை.
'குற்றால அருவி' என்பது தொகுப்பிலுள்ள இன்னுமொரு கவிதை.
'ஆவணி மாதத்தில்
தாவணி அணியும் மாது
லாவணி கண்டு மனது
வான்வழி செல்கிறதே?'
எனக் கவிதை முடிகிறது. குற்றால அருவியைப் பெண்ணாகக் காணும் கவிஞர் அவளழகில் மெய்மறந்து விடுகிறார். இந்தக் கவிதை ஓர் ஆண் குற்றாலத்தைக் காண்பதாக இருந்தால் இவ்விதம் தான் குற்றாலப் பெண்ணினை போகப் பொருளாகக் காண்பாரெனக் கவிஞர் விபரிக்கின்றாரா? அல்லது ஆணாதிக்க மனோபாவமென திலகபாமா தனது கவிதைகளில் குறிப்பிடும் அதே குற்றத்தினை மேற்படிக் 'குற்றால அருவி' கவிதையிலும் செய்கின்றாரா? ஏன் கவிஞரால் சீறிப்பாயும் குற்றால அருவியினை சுதந்திரமாகக் கட்டுடைத்துக் கும்மாளமிடும் சுதந்திரப் பெண்ணாகப் பார்க்க முடியவில்லை. மாறாக மேலாடை நீங்கி விடும் குற்றாலப் பெண்ணின் அழகுதானே கவிஞரின் முன்பும் தென்படுகிறது/ ஏன்? இந்த விசயத்தில் 'ஓடை' நல்லதொரு கவிதை. சமுதாயத்தில் பெண் கீழநிலைப் படுத்தப் படுவதை நதியுடன் அழகாகவே கவிதை ஒப்புதல் செய்கிறது. அதனையும் பொருத்தமாகவே செய்கிறது. 'சூரிய கிரகணம்', 'வானவில்' என இயற்கை நிகழ்வுகளிலெல்லாம் பெண்ணியக் குரல் ஒலிக்கின்றது. ஆயினும் சில முரண்பாடுகளும் தென்படாமலில்லை. உதாரணத்திற்குச் 'சூரிய கிரகணம்' கவிதை.
'அவளுக்கும்
அவனுக்கும்
இடையில்
இன்னொரு நிலா.
பொறுமையில் பூமியாய் அவள்
தகிக்க்ம் சூரியனாய்
தாலி கட்டியவன்.'
இவ்விதமாகச் செல்லும் கவிதை இறுதியில்
'பூமிக்கும்
சூரியனுக்கும் இடையில்
புகுந்து விட்ட நிலா'
என முடிகிறது. கேள்வியென்னவென்றால்... தாலி கட்டிய கணவன் தகிப்பிலிருந்து மனைவியான பூமிப் பெண்ணினை காப்பதற்காக இடையில் வரும் நிலா பகலவனின் கனலிலிருந்து மனைவியான பூமிப் பெண்ணினைக் காப்பாற்றுகின்றாளா? அல்லது ஆணாதிக்கக் கணவனின் மனோபாவத்தின் வெளிப்பாடான ஆசைக் கிழத்தியாக மட்டும் இருந்து விடும் இன்னுமொரு பெண் மாத்திரம் தானா?
'பாரதி வாசிக்காத மரபுக் கவிதையா'க விளங்கும் அவனது துணைவி செல்லம்மாவைப் பற்றி கவிதை விளக்கும். பாரதி பெண்மைக்காக ஆனந்தக் கூத்தாடியவன். பெண் கல்வியினை வற்புறுத்தியவன். செல்லம்மா நல்லதொரு துணைவியே. ஆனால் அவள் காலங்காலமாக அடிமைப் பட்டுக் கிடந்த பெண்ணினத்தின் பிரதிபலிபாக இருந்தவள். அதனால் தான் அவளால் கணவனைப் புரிந்து கொள்ள முடியவில்லையோ என்று படுகிறது. பாரதியும் தன் எழுத்தைப் பாவித்து வீடு வாசல் என்று அவளுக்குப் பொருள் ரீதியில் வளமான வாழ்க்கை அமைத்திருந்தால் ஒருவேளை செல்லம்மா பாரதியென்ற மாகவியை இன்னும் நன்றாகவே புரிந்திருப்பாளோ என்று எண்ணாமலிருக்கவும் முடியவில்லை. தொகுப்பிலுள்ள 'எடுக்கவோ கோர்க்கவோ' நல்லதொரு கவிதை.'திறந்த புத்தகமும்' நல்ல கற்பனை வளமுள்ள கவிதை. திறந்த புத்தகமாய் பெண். ஆனால் ஒவ்வொரு பக்கமுமே திருப்பிப் பார்க்க முடியாத பக்கங்களுடனிருக்கும் திறந்த புத்தகம். சமூகச் சூழல் அவளை அவ்வாறு திறந்த புத்தகமாக ஆக்கி விடுகிறது. அப்பொருளே நல்லதொரு கவிதையினையும் தரத் திலகபாமாவுக்குக் காரணமாகவிருந்து விடுகிறது.
கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் பல பெண் நிலையினை எடுத்துக் கூறினாலும் 'சூழல்' குஜராத் பூகம்பம்' 'சமூக அநீதி' , போதைப் பழக்கச் சீரழிவு', 'வறுமை' இவை பற்றியெல்லாம் கூறும் கவிதைகளும் தொகுப்பில் உள்ளன. 'ஒரு பாமரனின் தீபாவளி', 'நவீன நரகாசுரர்கள்', 'எரிக்கும் பூக்கள்' என்பவற்றைக் குறிப்பிடலாம். கவிதையென்றால் காதல் இல்லாமலா? காதல் பற்றிய கவிதைகளுக்கும் தொகுப்பில் பஞ்சமில்லை. அதே சமயம் கணினி யுகத்தினைக் கலியுகமாகக் கொச்சைப் படுத்துவதை ஏற்றுக் கொள்வதற்கில்லை. அதே கணினி யுகமே திலகபாமாவை வெளிப்படுத்தக் காரணமாக இருந்ததொன்றே நல்லதொரு சான்று.
- ஊர்க்குருவி ஜூலை 2002 இதழ் 31 -மாத இதழ்
8. பா.அ. ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்'!
வெளியீடு: முதற் பதிப்பு ஜூலை 2000, தமிழர் வகைதுறை வள நிலையம்
566 Parliament Street, Toronto, Ontario, M4X 1P8
ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தமிழில் வெளிவந்த காத்திரமான நாடகப் பிரதிகள் என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். கவிதை நாடகங்களாக எழுதப் பட்ட பல பின்னர் மேடை நாடகங்களாக நடிக்கப் பட்டுள்ளன. மகாகவியின் 'கோடை' இதற்கொரு சிறந்த உதாரணம். பல நல்ல மொழிபெயர்ப்பு நாடகங்கள் வெளிவந்து அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. டென்னசி வில்லியம்சின் 'கண்ணாடி வார்ப்புகள்', பாதல் சர்க்காரின் 'முகமில்லாத மனிதர்கள்', மற்றும் 'யுகதர்மம்', 'நிரபராதியின் காலங்கள்' இவ்விதம் சிலவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். ஆனால் சுயமாகத் தமிழில் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்ட காத்திரமான நாடகங்கலென்றால் நினைவிற்கு வருபவை மிகச் சிலவே [பல்வேறு பட்ட விழாக்கள் தோறும் ஆயிரக்கணக்கில் நாடகங்கள் என்ற பெயரில் வெளிவரும் 'காட்டுக் கத்தல்களை' காத்திரமான நாடகங்கள் என்று கூறுவதற்கில்லை]. பண்டிதமணியின் 'சங்கிலி', அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்', எழுபதுகள், எண்பதுகளில் கட்டுபெத்தை வளாகத் (பின்னர் மொறட்டுவைப் பல்கலைக்கழகமாக மாறியது) தமிழ்ச் சங்கத்தினரால் க.பாலேந்திராவினால் மேடையேற்றப் பட்ட பல நாடகங்கள், எண்பதுகளில் யாழ்பல்கலைக் கழக மாணவர்களால் மேடையேற்றப் பட்ட நாடகங்கள் இவ்விதம் ஈழத்தமிழ் நாடகம் வளர்ச்சியடைந்து கொண்டு வந்தது. இந்நிலையில் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களாலும் நாடக முயற்சிகள் பல மேற்கொள்ளப் பட்டன. கனடாவில் தமிழ் நாடகத்துறையினை நவீனப் படுத்தியதில் தமிழர் வகைதுறைவள நிலையம், மனவெளி அண்மைக் காலமாக 'நாளை நாடகப் பட்டறை' ஆகியவற்றினைக் குறிப்பிட்டுக் கூறலாம். இன்னும் பலர் நாடக முயற்சிகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர்களின் நாடகங்கள் வழக்கமான வானொலி நாடகங்களைப் போன்றனவாகவேயிருந்தன. அவை கனடாத் தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டியவையென்றாலும் அவை தமிழ் நாடகத் துறையின் வளர்ச்சிக்கு புதிதாக எதனையும் கொண்டு வந்து சேர்க்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் கனடாத்தமிழ் நாடகத்துறையில் குறிப்பிடும்படியான பங்களிப்பினைச் செய்து வரும் பா.அ.ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்' என்னும் நூலாக வெளி வந்த நாடகப் பிரதி எனக்குத் தெரிந்து கனடாவில் நூலாக வெளி வந்த முதலாவது தமிழ் நாடகப் பிரதி என நினைக்கின்றேன். இந் நாடகம் சாந்தன், குமார், பதி என்னும் மூன்று முக்கியமான பாத்திரங்களினூடு மூன்று காட்சிகளை உள்ளடக்கிய நாடகம். புலம் பெயர்ந்த தமிழர் சூழலில் பொதுவாகக் காணக் கிடைக்கும் மூன்று விதமான பிரதிநிதிகளின் குறியீடுகளாக இவர்கள் மூவரும் வருகின்றார்கள். 'பணம்' 'போலிக் கெளரவம்' இவற்றையே வாழ்வாகக் கருதி வாழும் சாந்தன். அகதி வாழ்வின் சிரமங்களை எதிர்கொள்ளும் குமார். மனநிலை பாதிக்கப் பட்ட பதி. சாந்தனைப் போன்றவர்களை நாம் அன்றாடம் எதிர்கொள்கின்றோம்.இவனைப் போன்ற பல்வேறு வகையான் விற்பனை முகவர்களின் துரத்துதல்களிலிருந்து தப்பியொழிப்பதே பெரும்பாடு. இவர்களில் பலர் பணம் பண்ணுவதில் காட்டும் வெறியினை வாடிக்கையாளர்களைப் பேணுவதில் காண்பிப்பதில்லை. தங்களது வியாபாரத்தைத் திணிப்பதிலேயே கவனமாகவிருக்கிறார்கள். சாந்தனும் இவர்களில் ஒருவனே. அதே சமயம் இவனது இதயத்தின் ஆழத்தினுள்ளும் சிறிது ஈரம் இருப்பதையும் நாடகாசிரியர் காட்டத் தவறவில்லை. அதனால் தான் பதியின் நிலைமைக்காக சிலகணங்களாவது இவனால் கவலைப் பட முடிகின்றது.
சாந்தனைப் பொறுத்தவரையில் அவன் ஆரம்பத்தில் ஒரு அகதியாக கனடா வந்தவனா அல்லது வரும் போதே நிரந்தரவதிவிட உரிமை பெற்று வந்தவனா என்பது நாடகத்தில் குறிப்பிட வில்லை. பெரும்பாலான தமிழர்கள் அகதிகளாக வந்து நாடகத்தில் வரும் குமாரின் நிலையில் , பல்வேறு வகையான அனுபவங்களையும் பெற்றுப் பின் தான் சாந்தனின் நிலைக்கு மாறுகின்றார்கள். இவ்வகையில் பார்த்தால் சாந்தனும் குமாரும் ஒருவரேயென்று என்று எண்ணுவதற்கும் வாய்ப்பிருக்கின்றது. ஒரு சிலர் பதியைப் போன்று நிலையினையும் அடைந்து பின் தேறி குமாரைப் போலவும் சாந்தனைப் போலவும் வாழ்ந்திருக்கின்றார்கள் ( இவ்விதம் சாந்தன், குமார், பதி போல் வாழந்து அகால மரணமடைந்து விட்ட என் நண்பரொருவரின் ஞாபகமே நினைவிற்கு வருகிறது ). இந்தக் கோணத்தில் பார்த்தால் குமார், சாந்தன், பதி ஆகிய மூவருமே ஒருவரின் பல்வேறு பக்கங்களென்று எண்ணவும் வாய்ப்பிருக்கின்றது. உண்மையில் ஒரு மனிதரிடத்தில் இந்த மூன்று வகையான போக்குகளும் இருக்கத் தான் செய்கின்றன. அதனால் தான் வீடு விற்பனை முகவராக இருந்து கொண்டும், 'அம்வெ' விற்பனை முகவராகவிருந்து கொண்டும், காப்புறுதி விற்பனை முகவராகவிருந்து கொண்டும், புத்தக விற்பனையாளராகவிருந்து கொண்டும் படைப்புத் துறையில் ஈடுபட முடிகின்றது. அதற்காக 'எல்லாப் பக்கமும் வாசல்' தமிழர் வியாபாரம் செய்வதற்கெதிரான கருத்தினைக் கூறுவதாகக் கூற முடியாது. வியாபாரம் செய்வது வேறு. போலிக் கெளரவம், 'பணத்தாசை', சமுதாயத்தில் தங்களைப் பெரியவர்களாகக் காட்டிக் கொள்ளவேண்டுமென்ற அற்ப ஆசை, ஆகிய காரணங்களினால் மனிதத்துவத்தினை இழந்து விடுவதென்பது வேறு. இவற்றினைத் தான் நாடகம் எள்ளலுடன் சித்திரிக்கின்றது. பல படைப்பாளிகளே இத்தகையதொரு சமூகப் பெருமையினைப் பெறுவதற்காக இலக்கியம் தெரியாதவரையெல்லாம் தமது நால் வெளியீட்டு விழாவில் உரையாற்ற அழைத்து புளகாங்கிதமடைவதில்லையா. குழு சேர்த்து ஒருவரிற்கொருவர் முதுகு சொறிந்து விடுவதில் திருப்தியடைவதில்லையா? அண்மையில் தமிழகத்திலிருந்து மிகப்பெரிய படைப்பாளியொருவர் சொந்தச் சஞ்சிகை வெளியிடவே சிரமமிருப்பதாகக் கூறி இணையம் வாயிலாகக் கடிதங்களைப் பலரிற்கு அனுப்பினார். உடனேயே அவரை இங்கு அழைத்து விட்டார்கள். அழைத்ததற்குப் பதில் அந்தப் பணத்தினை அவரிற்கு வழங்கியிருக்கலாமே. எதற்காக இந்தக் கூத்து? முத்திரைக் கையால் குட்டு வாங்குவதற்காக இவ்விதமொரு நாடகம். புகழாசை யாரைத்தான் விட்டு வைத்தது? சாந்தனும் கெளரவத்தினைத் தான் எதிர்பார்க்கின்றான். ஆனால் அவன் எதிர்பார்க்கின்ற வட்டம் வேறு. படைப்பாளிகள் பலரும் இதனைத் தான் இன்னொரு வட்டத்தில் எதிர்பார்க்கின்றார்கள். ஆக 'எல்லாப் பக்கமும் வாசல்' புலம் பெயர்ந்த தமிழர் ஒருவரைப் ( அவர் யாராகவிருந்தாலும் ) பிரதிநிதித்துவப் படுத்தும் அல்லது அவரின் குறியீடாக விளங்குமொரு நாடகமென்று கூறலாம். ஆசிரியரே ஒருவேளை இவ்விதமெண்ணி இதனைப் படைத்திருக்காமலிருக்கக் கூடும். ஆனால் நல்லதொரு படைப்பென்பது படிப்பவரிடத்தில் பல்வேறு விதமான தாக்கங்களை உருவாக்கும். அந்த வகையில் ஜயகரனின் 'எல்லாப் பக்கமும் வாசல்' நல்லதொரு முக்கியமான நாடகமே.
ஊர்க்குருவி அக்டோபர் 2001 இதழ் 22 -மாத இதழ்
9. ஆசி. கந்தராஜாவின் 'பாவனை பேசலன்றி..'
ஆசிரியர்: ஆசி. கந்தராஜா; வெளியீடு: மித்ர பதிப்பகம், 375/8 ஆர்காட் சாலை, சென்னை 600 024, தமிழகம், இந்தியா
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.. ஆசிரியரின் மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கலாநிதி ஆசி.கந்தராஜாவிற்குப் பல்வேறு வெற்றிகரமான முகங்களுண்டு. உயிரியல் விஞ்ஞானி; நாடகக் கலைஞர்; வானொலிக் கலைஞர்; எழுத்தாளர். இவரது பத்துச் சிறுகதைகள் (சில நெடுங் கதைகள்) பிரபல எழுத்தாளர் பிரபஞ்சனின் முன்னுரையுடன், ட்ரொஸ்கி மருதுவின் அழகான அட்டைப் படம் மற்றும் சித்திரங்களுடன் 'பாவனை பேசலன்றி..' என்னும் தலைப்புடன் மித்ர பதிப்பக வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.முன்னுரையில் பிரபஞ்சன் "சுந்தரராஜாவின் கதைகள் சுந்தரராஜாவின் கதைகளே. அதாவது அவருடைய அனுபவம் சார்ந்த கதைகள். அதனால் தான் அவருடைய கதைகள் நிஜமான அனுபவத்தை வாசகர்க்கு மாற்றித் தருகின்றன. கதைகளின் பலம் அவை சொல்லப்பட்ட விதத்தில் நடந்திருக்கும் என்று நம்பும் படியாக இருப்பதுதான்." என்று கூறுவது இத் தொகுதியைப் பொறுத்தவரையில் சரியான வார்த்தைகள். தொகுதியிலுள்ள கதைகளின் களம் பரந்து பட்டது. ஈழத்துத் தமிழ் மக்களின் சமகால பொருளாதார , அரசியற் பிரச்சினைகள், மலையகத் தமிழரின் பிரச்சினைகள், அகதிகளாகப் புலம் பெயர்ந்த தமிழர் எதிர்நோக்கும் அனுபவங்கள், புலம் பெயர்ந்த தமிழ் முதியவர்கள் பிரச்சினைகள், புதிய சூழலில் காணப்படும் பிரச்சினைகள்... இவ்விதம் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொகுதி முழுக்க பரவிக் கிடக்கின்றன.
தொகுதியின் முதற் கதையான 'காலமும் களமும்' ஊரில் 'அந்த' மாதிரி வாழ்ந்த விதானையார் மாமாவின் ஆஸ்திரேலிய அனுபவத்தை ஒருவித எள்ளலுடன் விபரிக்கிறது. நாற்சார் முற்றத்தில் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க மாமி சூடு பறக்க எண்ணை தேய்த்து விடும் காட்சி விதானையாரைக் கண்முன்னல் கொண்டு வந்து நிறுத்துகிறது. பதவிகளை அடைவதற்காக எந்தவகை யுக்திகளையும் கடைப்பிடிக்கத் தயங்காத விதானையாரின் பருப்பு ஆஸ்திரேலியாவில் வேகவில்லை. அவரது முன்னால் காதலியான விசாலாட்சி உருவில் வந்து பழி வாங்கி விடுகிறது. தளர்ந்தாரா மாமா? ' அறைக்குள் எட்டிப் பார்த்தேன். உண்மைதான். அந்த மஞ்சள் நிற ஆஸ்திரேலிய தமிழர் விபரங்கள் அடங்கிய கையேட்டில் சிட்னி தமிழர் அமைப்புகளைப் பற்றிய ஆராய்ச்சியில் மாமா ஈடுபட்டிருந்தார். காலங்களும் களங்களும் மாறினாலும் தமிழனுடைய குணம் மாறாது என்று என் மனதில் தோன்றிய நினைவினை மறைத்துக் கொண்டு பனஞ்சாராயப் போத்தலைக் கவசமாகக் கைப்பற்றினேன்.' எனக் கதை முடிகிறது. 'என் எழுத்து ஊழியத்தின் ஆசான் எஸ்.பொ. அவர்களே என்கின்றார் ஆசி.கந்தராஜா தனது முன்னுரையில். இச்சிறுகதையில் ஆங்காங்கே காணப்படும் எழுத்து நடை எஸ்.பொ.வின் பாதிப்பினைக் காட்டும். உதாரணமாக "..விசாலாட்சி காட்டிய 'பவிசு'..","..விசாலாட்சி மாமிக்கு இப்பொழுதும் கட்டுக் குலையாத தேகம். கண்ணைச் சுழற்றி உடம்பைக் குலுக்கி 'பவிசு' காட்டுவதில் மகா கெட்டிக்காரி..." போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
தொகுதியிலுள்ள 'யாவரும் கேளீர்' இத் தொகுதியின் முக்கியமான கதை. இலங்கையின் மலையகத் தோட்டத் தொழிலாளியான முத்துச்சாமி எண்பத்து மூன்று கலவரத்தில் பாதிக்கப்பட்டுத் தாய் நாடான இந்தியா திரும்புகின்றான். அங்காவது அவனைற்கு நிம்மதி கிடைத்ததா? இம்முறை தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிப் பேயின் கோரநாக்குகள் அவனைப் பழிவாங்கி விடுகின்றன. கதையில் வரும் பாத்திரங்களிலொன்றான ஏற்காட்டுத் தோட்டத் தலைமைக் கங்காணியான சுந்தரத் தேவர் 'தமிழன் அது இதுன்னு பேசுறதெல்லாம் அரசியல். அதை நம்ம கட்சித் தலைவங்க பாத்துக்குவாங்க..அவங்க இன்னிக்கு 'இந்தியாக்காரன்' என்ற தேசியம் பேசுவாங்க.. நாலைக்கு தமிழன்னு சொல்லி புறநாநூறுக் கதை சொல்வாங்க..அதெல்லாம் எலெக்ஷனுக்கு எலெக்ஷன் தொகுதிக்குத் தொகுதி மாறும். அதெல்லாம் கட்சித் தலைவங்க சமாச்சாரம்.. ஆனா ஜாதி அபிமானம் தான் நமக்குப் பெரிது..தேவன் மறவன். அவனுக்காக நாங்க உசிரையும் குடுப்பம்..' என்று முழங்குவார். அந்த முழங்கல் தமிழகச் சூழலை அழகாகப் படம் பிடித்து விடுகிறது. 'கள்ளக் கணக்'கில் வரும் சீன அரச உத்தியோகன் லியொங் காவல் துறை அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து தப்பித்து விடுகிறான். ஆனால் ஆசிரியரோ அதன் மூலம் சோஷலிசத்தின் நடைமுறைப் பிரச்சினைகளை ஆராயத் தொடங்கி விடுகின்றார்.
தொகுதியிலுள்ள 'அம்மா பையன்' இன்னுமொரு முக்கியமான சிறுகதை. பேராசிரியர் சந்திரசேகர் லுமும்பாப் பலகலைக் கழகத்தில் படிக்கும் போது சகமாணவியான வியட்நாமியப் பெண்ணான கிம்முடன் ஏற்பட்ட காதலின் விளைவாகப் பிறந்தவன் தான் கணினித் துறையில் புகழ் பெற்று விளங்கும் பெங்லீ. ஆனால் சந்திரசேகரோ படிப்பு முடிந்ததும் கொழுத்த சீதனத்துடன் ஊரில் பணக்காரப் பெண்ணொருத்தியை மணமுடித்து ஆஸ்திரேலி குடியேறியவர். இந்நிலையில் கணினித் துறையில் வியட்நாமுடன் கூட்டு முயற்சி சம்பந்தமாக அங்கு பெங்லியைச் சந்திக்கச் செல்லும் சந்திரசேகர் அவன் தான் தன் மகன் என்பதை அறிகின்றார். கிம் இன்னும் தனியாகவே வாழ்வதையும் அறிகின்றார். ஆனால் பெங்லியோ அவரை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றான். இதுதான் கதை. கிம்மின் துயரத்தைக் கூறும் கதை சந்திரசேகரின் சுயநலத்தையும் கோழைத்தனத்தையும் விமரிசிக்கின்றது.
காளைகள் கடுவன் நாய்களிற்கு 'நலமடித்து' கால்களிற்கு 'லாடன்' அடித்துத் தொழில் செய்து வந்தவர் சின்னக்கண்ணு. இவரது மகனைக் 'கொட்டியா' என்று சந்தேகிக்கும் ஸ்ரீலங்கா இராணுவம் இவரைக் கைது செய்து சித்திரவதை செய்கிறது. கால்கள் அடித்து நொறுக்கப் பட்டு, நகங்களும் மயிர்களும் பிடுங்கப் பட்டு, சூடு வைத்த தீக்காயங்களுடன் நடக்க முடியாமல் , விதைகள் வீங்கிய நிலையில் விடுதலை செய்யப் படும் அவர் தான் முன்னர் வாயில்லா ஜீவன்களிற்குச் செய்த கொடுமைகளை எண்ணிப் பார்க்கின்றார். ஸ்ரீலங்கா இராணுவம் செய்யும் பல்வேறு வகையான சித்திரவதைகளைக் கதை கூறும். அதே நேரத்தில் ஜீவகாருண்யத்தைப் பற்றியும் குரலெடுப்பும். நாய்களிடமுள்ள 'இனமான' உணர்வுகள் கூட மனிதனிடமில்லாததை 'இனமானம்' அங்கதம் ததும்ப விபரிக்கும். 'மறுக்கப்படும் வயசுகள்' பிள்ளைகளை இயல்பாக வளரவிடாது தமது அபிலாஷைகளை அவர்கள் மேல் திணித்து, 'ரியூசன்' 'கலை விழா'வென்று ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு தமிழ்க் குடும்பத்தைச் சித்திரிக்கும்.
தொகுதியின் நீண்ட கதைகளிலொன்றான 'அடிவானம்' இரண்டு பிரச்சினைகளை கூறுகிறது. சோஷலிச கிழக்கு ஜேர்மனியில் ஒன்றாக வாழ்ந்த குடும்பமொன்று முதலாளித்துவ மேற்கு ஜேர்மனியுடன் இணைவின் பின் புதிய சூழலின் விளைவாக சிதைந்து விடுகிறது. அடுத்தது.. எண்பத்து மூன்று கலவரத்தைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு அகதிகளாக வந்த தமிழர்களின் நிலை அலசி ஆராயப்படுகிறது. சமூக உதவிப் பணத்தில் வாழும் குடிகாரச் சின்னராசாவின் கொடுமையால் மனைவி தவமணியும் பிள்ளைகளும் வாடுவதைக் கதை விபரிக்கிறது. நிலைமையைப் பொறுக்காத தவமணி இத்தாலியனின் சாப்பாட்டுக் கடையொன்றில் வேலை பார்த்துக் குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள். செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவி பெற்று நாடு திரும்பவும் ஏற்பாடுகள் செய்கிறாள். இறுதியில் 'குடிகாரன் எண்டாலும் புருஷன்..புருஷன்..' என்று தனது முடிவை மாற்றிக் கொள்கிறாள். இவர்களும் இலங்கையில் கலவரத்திற்கு முன்னர் நன்கு வாழ்ந்த குடும்பம் தான். புதிய சூழலின் விளைவாக குடும்ப உறவுகள் சிதைந்து விடுகின்றன. இளைய மகனே கத்தியைத் தூக்குமளவிற்குக் குடிகாரத் தந்தையின் கொடுமை. ஆனால் ஜேர்மனியக் குடுமபமோ நிரந்தரமாகப் பிரிந்து விடுகிறது. இலங்கைக் குடும்பமோ பிரச்சினைகளிற்குப் பின்னரும் சேர்ந்திருக்கிறது.இரண்டு விதமான கலாச்சாரங்கள் எவ்விதம் புதிய சூழலைத் தத்தமது பாணியில் எதிர்கொள்கின்றனவென்பதை அடிவானம் விபரிக்கிறது.
தொகுதியின் மற்றுமொரு நீண்ட கதையான 'பாவனை பேசலின்றி..' ஆஸ்திரேலியாவில் மரணித்த சின்னத்துரை வாத்தியாரின் இறுதிக் கிரியைகளின் பின்னணியில் அவர் அங்கு இருந்தவரை பட்ட துன்பங்களை எடுத்துரைக்கும். ஆஸ்திரேலிய மேற்குடி வாழ்க்கை வாழும் அவரது மகனும் மருமகளும் அவர் இருந்தபோதோ வயோதிபர் விடுதியில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகின்றார்கள். அவரால் ஒழுங்காகச் சுவையாகச் சாப்பிட முடியவில்லை. நண்பர்களுடன் இயல்பாக பழக முடியவில்லை. மகனதும் மருமகளினதும் மேற்குடி வாழ்க்கை முறை அவரைப் போட்டு அலைகழிக்கிறது. இறுதியில் சமூக உதவிப் பணமெடுத்தாவது தன்மானத்துடன் வாழ்வதற்காக அவரது உள்ளம் ஏங்குகிறது. பாவம் . அதற்கும் அவர் கொடுத்து வைக்கவில்லை. அதே சமயம் இன்னுமொரு முதியவரான சம்பந்தியம்மா அடிக்கும் கூத்தும் விபரிக்கப் படுகிறது. முதியவர்களிலும் பலவிதம். பலவிதமான பிரச்சினைகள். இருக்கும் வரை அவரை இயல்பாக வாழ விடாதவர்கள் தமது கெளரவத்திற்காகத் தம்பட்டத்திற்காக, அவர் இறந்த பிறகு அவரது உடலிற்கு செய்யும் அலங்காரங்களென்ன? விடும் கண்ணீரென்ன? புலம் பெயர்ந்து வாழும் தமிழ் முதியவர்கள் நிலையினையிட்டுக் குரலெலுப்பும் காலத்தின் கட்டாய பணிகளிலொன்றினை இக்கதை செய்கின்றது. அதே சமயம் கனடா போன்ற நாடுகளில் தற்கொலை செய்து கொண்ட முதியவர்கள் சிலரின் ஞாபகத்தினையும் இக்கதை தோற்றுவிக்கின்றது.
தொகுதியின் பெரும்பாலான கதைகள் மூன்றாம் மனிதரின் பார்வையில் கூறப்படுகின்றன. அந்த மூன்றாம் மனிதர் ஆசிரியரையே ஞாபகத்தில் கொண்டு வந்து விடுகிறது. பாத்திரங்கள் வாயிலாகவே கதைகளை நகர்த்தியிருந்திருக்கலாமே என்ற எண்ணம் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுதியினைத் தந்ததற்காக ஆசிரியரையும், வெளியிட்டதற்காக 'மித்ர' பதிப்பகத்தினரையும் பாராட்டலாம்.
- திருமூலர்- செப்டெம்பர் 2001 இதழ் 21 -மாத இதழ்
10. செ.க.வின் 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை'
நாவல்: சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை
ஆசிரியர்: செ.கணேசலிங்கன்
மறுபதிப்பு மே, 1997, பதிப்பாளர்: குமரன் பப்ளிஷர்ஸ், 79 முதல் தெரு,குமரன் காலனி, வட பழநி, சென்னை-600 026
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களில் மிக அதிகமான நாவல்களை எழுதியவர் செ.கணேசலிங்கனாகத் தானிருக்க முடியும். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் தூண்களிலொருவராக இவரைச் சொல்ல முடியும்.இவரது நாவல்களான 'நீண்ட பயணம்', 'சடங்கு' மற்றும் 'செவ்வானம்' ஆகியன ஈழத்து நாவல் வரலாற்றில் முக்கியமான படைப்புக்கள். குறிப்பாகச் 'செவ்வானம்' பேராசிரியர் கைலாசபதியின் பெரும் பாராட்டினப் பெற்ற புதினமாகும். தனது புகழ் பெற்ற நூலான 'தமிழ் நாவல் இலக்கியத்தில்' கலாநிதி கைலாசபதியவர்கள் 'செவ்வானத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ' தொழிளாளர் வர்க்கத்தின் நீண்ட பயணம் எதிகால வரலாற்றுடன் சங்கமமாகவிருப்பது, அச்சரித்திரத்திர முக்கியத்துவம் வாய்ந்த பெருமாற்றத்தை யதார்த்தமாகச் சித்தரிக்க நூற்றுக்கணக்கான நாவலாசிரியர் தேவைப்படுவர். அவர்கள் படிக்கும் நாவல்களில் நிச்சயமாகச் 'செவ்வானம்' ஒன்றாகவிருக்கும். ' என்று கூறுவார்.
சமகால அரசியல், பொருளாதார நிலைமைகள், அதன் விளைவால் ஏற்படும் பிரச்சனைகள் ஆகியனவே பெரும்பாலும் இவரது நாவல்களின் கருப் பொருளாகவிருக்கும். மார்க்சியக் கண்ணோட்டத்தில் பிரச்சனைகள் அணுகப் படும். மிகவும் யதார்த்தமாகப் பாத்திரங்கள் படைக்கப் பட்டிருக்கும். இதற்கு இவரது அண்மையில் வெளிவந்த நாவலான 'சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை'யும் விதி விலக்கல்ல.
சமூகப் பொருளாதாரச் சூழல்கள் எவ்விதம் பாட்டாளிகளை , நடுத்தர வர்க்கத்து மாந்தர்களை வெவ்வேறு விதமாகப் பாதிக்கின்றது என்பதற்கு இதில் வரும் மீனாட்சி யும் சித்திராவுமே உதாரணங்கள். ஆண் தலையெடுத்த சமுதாய அமைப்பினில் எவ்விதம் பெண்கள் ஒடுக்கப் படுகின்றார்களென்பதை நாவல் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது. அதே சமயம் ஈழத்திலோ பெண்கள் அரசியல் , இன, மத ரீதியாகவும் ஒடுக்கப் படுகின்றார்கள். இதனையும் நாவல் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. கற்பு பற்றிய மீனாட்சியின் நோக்கு மிகவும் இயல்பாக, யதார்த்தமாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.
ஆணாதிக்க உலகில் பெண்களைப் பற்றிய யதார்த்த உண்மைகளெல்லாம் மறைக்கப் பட்டிருக்கின்றன. சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை. பூமியின் இயக்கம் தான் அவ்விதம் சூரியன் கிழக்கில் உதிப்பதாகத் தோற்றம் அளிக்கச் செய்கின்றது. தாயாகத் தாரமாகப் பலத்துடன் விளங்கும் பெண்ணின் பலம் ஆணாதிக்க உலகில் மறைக்கப் படுகின்றது. கற்பு என்ற கோட்பாடு பெண்ணினை அடக்கி வைக்கவே பாவிக்கப் படுகின்றது. இவற்றை நாயகி சித்திரா எவ்விதம் தனது தோழி உமா, வேலைக்காரி மீனாட்சி, பள்ளித் தோழன் பாலன் போன்றோரின் வாழ்க்கையிலிருந்து அறிந்து கொள்கின்றாளென்பதே நாவலின் பிரதான மூலம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் நல்லதொரு யதார்த்த நாவலொன்றினைத் தந்ததிற்கு செ.க.வினை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். படித்துப் பாருங்கள்.
-வானதி- மாசி 23, 2000 இதழ்-2 -மாத இதழ்
11. நடேசனின் வண்ணத்திக்குளம்: சில குறிப்புகள்!
டாக்டர் என்.நடேசனின் 'வண்ணாத்திக்குளம்' மித்ரா பதிப்பகத்தினரால் அழகாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. . நாவலில் ஆங்காங்கே வண்ணத்திக்குளம் என்றே விபரிக்கப்படுகிறது. அதுவே நல்ல பெயராகவுமிருக்கிறது. இந்நிலையில் எதற்காக வண்ணாத்திக்குளம் என்று நூலின் பெயரை வைக்க வேண்டுமென்பதன் காரணம்தான் புரியவில்லை. சுவையான நடையில் நகரும் நாவலின் களம் புதிது. வெகு சில படைப்பாளிகளே கைவைத்த கரு. இலங்கை சுந்திரம் பெற்ற காலத்திலிருந்து நாட்டை ஆண்டு வரும் சிங்கள, பெளத்த அரசுகளால் திட்டமிட்ட முறையில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டு தன் தனித்துவத்தை இழந்த பிரதேசம்தான் வண்ணத்திக்குளமென்று ஒருபோதில் அழைக்கப்பட்ட பதவியாப் பிரதேசம். அத்தகையதொரு பகுதியில் வாழுமொரு சிங்களப் பெண்ணான சித்ராவுடன் நாயகன் சூரியனுக்குக் காதல் அரும்புகிறது. நாவலொரு காதல் கதையாகவிருந்தாலும், மிகவும் நிதானமாக நகர்கிறது. அரசியல் பின்னணியில் நாவல் கூறப்பட்டிருக்கிறது. கதை சொல்லியின் பார்வையில், மற்றவர் பார்வையிலெனப் பல்வேறு பார்வைகள். நாவல் நடைபெறும் காலத்தில் நடைபெறும் இயக்கமொன்றின் மூன்று தாக்குதல்கள் விபரிக்கப்பட்டுள்ளன. அதனத்தொடர்ந்து இடம்பெற்ற ஜூலை 1983 இனக்கலவவரம். இருவேறு இனங்களைச் சேர்ந்த காதல் ஜோடி நாட்டில் வாழ முடியாத நிலையில், அழகான தீவை விட்டே அந்நியதேசத்துக்குப் புறப்படுவதுடன் கதை முடிவுறுகிறது.
இந்நாவலை ஒரு காதல் கதையென்று கூறலாமா? அல்லது அரசியல் நாவலென்று கூறலாமா? அல்லது அரசியல் கலந்த காதல் கதையென்று கூறலாமா? ஒவ்வொருவர் பார்வையும், முடிவுகளும் வேறு வேறானவையாகவிருந்த போதிலும், இந்நாவல் இலங்கைத் தீவின் அரசியல் சூழல் பற்றி, அச்சூழல் அத்தீவின் மக்களைப் பாதிப்பது பற்றி விபரிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தின் அரசியல் நிகழ்வுகளை ஓரளவு ஆவணப்படுத்துகிறது.
கதை சொல்லியான சூரியன் ஒரு மிருக வைத்தியர். அவரது பார்வையில் ஆங்காங்கே தீவின் அரசியல் அலசப்படுகிறது. விரிவாகவல்ல; சுருக்கமாக. அதே சமயம் கதை சொல்லி மிருக வைத்தியராகவிருப்பதால் சில சம்பவங்கள் வாசகர்களுக்குப் புதுமையாகவும், சுவையாகவுமிருக்கின்றன. குறிப்பாக யானையொன்றுக்கு மரணபரிசோதனை செய்த அனுபவம். இதனை அவர் ஏற்கனவே ஆசிரியர் தனது 'வாழும் சுவடுகள்' நூலிலும் ஆவணப்படுத்தியுள்ளதாக ஞாபகம். அதிலிருந்து நாவல் ஆசிரியரின் சொந்த அனுபவங்களையே சிறிது கற்பனை கலந்து விபரிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆசிரியரின் நடை சரளமானது. சில சம்பவங்கள் நெஞ்சை அள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் பின்வரும் சம்பவம். வவுனியாவில் விமானப்படையினர் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து படைவீரர்கள் தமிழர்களைத் தாக்கத் தொடங்கி விடுகின்றார்கள். அச்சமயம் அந்தக் கலவரச் சூழலில் தமிழனான கதைசொல்லியும், சிங்களப் பெண்ணான அவனது காதலி சித்ராவும் அகப்பட்டு விடுகின்றார்கள். அப்பொழுது நிகழ்ந்த உரையாடலினை ஆசிரியர் பின்வருமாறு விபரிக்கின்றார்:
'மற்றைய படைவீரர் எங்களை நோக்கி வந்தபடி "எங்கே போகிறாய்?"
"யாழ்ப்பாணம்"
"தெமிலயோ" என்றபடி நெஞ்சில் சப்மெஷின் துப்பாக்கி அழுத்தப்பட்டது.
அப்போது நான் எதிர்பார்க்காமல் சப்மெஷின் துப்பாக்கியை கையால் பிடித்தபடி "மகே சுவாமி புருஷய" என கூறினாள் சித்ரா....'
மேற்படி உரையாலில் வரும் 'மகே சுவாமி புருஷய' என்னும் தலைப்பில், அக்கூற்றினை முடிவாக அவைத்து அருமையான சிறுகதையொன்றினைப் படைத்திருக்க முடியும். அந்த அளவுக்கு நெஞ்சைத் தொடும் வகையில் அந்தச் சொற்பதம் அமைந்துள்ளது. அந்தப் பெண்ணின் இனம், மதம் கடந்த காதலை அந்த வார்த்தைகள் அப்படியே உணர்த்திவிடுகின்றன. நடை ஆசிரியரின் பலங்களிலொன்று. மேற்படி நடையில் அதிகமான விபரித்தலுடன், சிந்தனையோட்டத்துடன் கதை நகர்ந்திருக்குமாயின் அது நாவலின் கனத்தினைச் செறிவினை அதிகரித்திருக்கும்.
இந்நாவல் தீவின் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி ஆங்காங்கே விபரிக்கிறது. ஜே.வி.பியின் நடவடிக்கைகளை ஓரளவு விமரிசனம் செய்கிறது. கதை சொல்லியின் காதலியின் சகோதரன் ஒரு ஜே.வி.பி உறுப்பினன். இலங்கை அரசின் அடக்குமுறைக்குள் ஜே.வி.பியினரும் ஆட்படுவது நாவலில் கோடிட்டுக் காட்டப்படுகிறது. ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு வாதம், மலையகத் தமிழர்கள் மீதான நிலைப்பாடுகள், தோட்டத் தொழிலாளர்களின் மீதான வடகிழக்குத் தமிழர்களின் நிலைப்பாடு என்பவை கதை சொல்லியினால் விமரிசனத்துள்ளாக்கப்படுகின்றன. "உங்கள் அடிப்படை கொள்கையில் மாற்றம் வேண்டும். அந்த தொழிலாளர்களுக்கு பிரசா உரிமை வேண்டும் என்றபோது எவரும் வாய் திறக்கவில்லை. எல்லோருமாக சேர்ந்து இந்தியாவுக்கு அனுப்பப் பார்த்தார்கள். சிங்கள இடது சாரிகள் மட்டுமல்ல, இந்த விடயத்தில் வடக்கு, கிழக்கு தமிழர்களும் ஈடுபட்டார்கள். இதன் மூலம் இலங்கையின் சிங்களத் தொழிலாளர்கள் தங்களது சகோதர தொழிலாளர்களின் பலத்தை இழந்தார்கள். வட, கிழக்கு தமிழர்கள் தமிழ் பேசும் சகோதரகளை இழந்தார்கள்." (கதை சொல்லி; பக்கம் 85)
கதைசொல்லி ஜே.வி.பியின் தலைவர் ரோகண விஜேவீராவைச் சந்திக்கும் சந்தர்ப்பமொன்று நாவலில் வருகிறது. அதில் அவர் ஜே.வி.பியின் இந்திய எதிர்ப்பு வாதம், இனவாத நிலைப்பாடு ஆகியவற்றை விமரிசனத்துக்குள்ளாக்குவார். டொன் நந்தசிறி விஜயவீர என்னும் தனது இயற்பெயரை ரோகண விஜயவீர என மாற்றியதனைக் கதைசொல்லி ' மார்க்சீச கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இயக்கத்தை வழி நடத்தும் விஜயவீர அந்தக்கால சிங்கள மன்னர்களின் கீர்த்தனைகளை உயர்த்தி பேசியது அவரது அரசியல் தன்மையை காட்டியது' என விபரிப்பார். அன்று இந்திய எதிர்ப்பு வாதம் போதித்த ஜே.வி.பி இன்று இந்தியாவின் செல்லப்பிள்ளையாகவும், இனவாதம் அதிகம் மிகுந்ததொரு கட்சியாகவும் மாறியிருக்கிறது காலத்தின் கோலங்களிலொன்று.
நாவலில் தமிழீழ விடுதலை அமைப்பொன்றின் மூன்று தாக்குதல்கள் விபரிக்கப்பட்டுள்ளன. வவுனியா விமானப்படை வீரர்கள் மீதான தாக்குதல், யாழ் நாச்சிமார் கோயிலடியில் தேர்தல் கூட்டமொன்றில் நிகழ்ந்த தாக்குதல் மற்றும் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலயம் மீதான தாக்குதல் ஆகியவற்றைக் கூறும் நாவல் அவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட படையினரின் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களையும் கூறும். வரலாற்றில் பதிந்து விட்ட யாழ்நூலக எரிப்பு பற்றியும், அதற்குக் காரணமாக அன்றைய ஐக்கியதேசியக் கட்சியின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க, சிறில் மத்தியூ போன்றவர்கள் அச்சமயம் யாழ்நகரில் இருந்ததையும் நாவல் பதிவு செய்யும்.
தனிநாடு கோரிக்கை பற்றிக் கதை சொல்லி 'தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்கள்' என்கின்றார் (பக்கம் 128). யாழ்நகரில் 1983இல் பல தமிழர்கள் துரோகிகளாகக் கொல்லப்பட்டதையும் குறிப்பிடுகிறார். (பக்கம் 129). மிகவும் பெரிதான, சர்ச்சைக்குரிய விடயங்களை ஓரிரு வரிகளில் கூறிவிட்டுக் கதை சொல்லி நகர்ந்து விடுகின்றார். தனிநாட்டுக் கோரிக்கை விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், சிங்களப் பெரும்பான்மை அரசுகளுக்கும் இடையில் நிகழ்ந்த தோல்வியுற்ற பேச்சு வார்த்தைகளும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும், தரபப்டுத்தல் போன்ற பாரபட்சமான கொள்கைகளும்.. இவ்விதமாகப் பல காரணங்களும், நீண்டதொரு வரலாறுமிருக்கையில் தமிழ் அரசியல்வாதிகள் அவசரப்பட்டு விட்டார்களென்று, தன் பக்க நியாயத்தினை மிகவும் தர்க்கபூர்வமாக நிறுவாமல் முடிவாகக் கூறுவது, மற்றும் இது போன்ற கூற்றுக்கள் இந்நாவலையொரு தீவிரமான அரசியல் நாவலென்ற பிரிவுக்குள் அடக்குவதைத் தவிர்த்து விடுகின்றன. ஒரு தீவிரமான அரசியல் நாவலொன்றில் இது போன்ற பிரச்சினைகள் அதிக அளவில் ஆழமாக விபரிக்கப்படவேண்டும் அல்லது பாத்திரங்களின் அன்றாட வாழ்க்கையினூடு புலப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும் துரோகிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதைக் குறிப்பிடும் கதைசொல்லி சிங்களப் படையினர் தமிழ்ப்பகுதிகளில் நடாத்திய படுகொலைகளை, நிலவிய அரசியல் சூழலை, அதன் தீவிரத்தினை விபரிக்கத் தவறிவிட்டார். மேலும் துரோகிகளெனப் பொதுவாகக் கூறுவதன் மூலம் ஆசிரியர் துரோகிகள் பற்றிய விரிவான விளக்கத்தைப் பதிவு செய்யும் சந்தர்ப்பத்தினை இழந்து விட்டார். பலர் அரசியல் ரீதியில் படுகொலை செய்யப்பட்டாலும், சாதாரண களவு போன்ற சமூகவிரோதச் செயல்களை, ஏற்றத்தாழ்வுமிக்க சமுதாய அமைப்பு காரணமாகப் புரிந்த பலர், துரோகிகளாகக் கொல்லப்பட்டதை விரிவாக விபரிக்கும் சந்தர்ப்பத்தினை இதன் மூலம் ஆசிரியர் இழந்து விடுகின்றார்.
ஆனாலும் நாவல் நடையில், கதைக்களனில் , குறிப்பிட்டகாலச் சம்பங்களை ஆவணப்படுத்தலில் குறிப்பிட்டு விளங்குகின்றது. தீவின் முரண்பட்டு நிற்கும் இரு இனங்களைச் சேர்ந்த காதலர்கள், சொந்த மண்ணில் வாழமுடியாத நிலையில் அந்நிய மண்ணை நாடிப் பறப்பதுடன் கதை முடிகிறது. வண்ணத்திக்குளத்தின் உறவுகள் இலங்கை முழுவதும் விரியுமானால்.. எனக் கதை சொல்லி ஏங்குகிறார். தீவின் முக்கியமான பிரச்சினைகளிலொன்று திட்டமிட்ட குடியேற்றங்கள். அக்குடியேற்றங்களிலொன்றான பதவியாவைக் களமாகக் கொண்டு விரியும் நாவலில் வரும் பல்வேறு இன மாந்தர்கள அனைவரும் பரஸ்பரம் அன்பு கொண்டவர்களாகவும், தீவிரமான பிரச்சினைகளை இனங்கண்டு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கு வாழும் சிங்கள மக்களுக்கே தாங்கள் அத்து மீறிக் குடியேற்றப்பட்டிருந்த விடயம் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ஒரு காலத்தில் அப்பகுதிக்கு வண்ணத்திக்குளம் என்றொரு பெயர் நிலவியதை அறிந்து வைத்திருக்கின்றார்கள். யாழ் நூலகம் எரிக்கப்பட்டதைக் கேட்டு அங்குள்ள சிங்கள மக்கள் கவலைப்படுகின்றார்கள். இத்தகைய வண்ணத்திக்குளத்தில் வாழும் இரு வேறு சமூகங்களுக்கிடையில் காணப்படும் புரிந்துணர்வும், நம்பிக்கையும், அன்பும் 'இலங்கை முழுவதும் விரியுமானல்...' என்று ஏங்கிக்கொண்டே கதை சொல்லி தன் துணையுடன் நாட்டை விட்டே பறக்கின்றார். ஆனால் அவரது ஏக்கம் நிறைவேறுவது அவ்வளவு சுலபமல்ல என்பதைத்தான் 1983இலிருந்து இன்றுவரையிலான காலகட்டம் புலப்படுத்தி நிற்கிறது.
- அவதானி - ஜனவரி 2005 இதழ் 61 -மாத இதழ்
12. காஞ்சனா தாமோதரனின் 'இக்கரையில்..'
நாவல்: இக்கரையில்...
ஆசிரியர்: காஞ்சனா தாமோதரன்
வெளியீடு: Kavitha Publication, 8 Masilamani Street, T.Nagar, Chennai-600 017
தொலைபேசி: 2436 4243, 2432 2177
மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
காஞ்சனா தாமோதரன் ஒரு புலம் பெயர்ந்த தமிழகத் தமிழர். பிறந்த இடத்தில் கிடைக்காத வாய்ப்புகள் பல புகுந்த இடத்தில் பெற்று , உயர் கல்வி, உயர் பதவியென்று சாதனைகள் பல புரிந்தவர். இணையத்தின் வரவினால் தமிழுக்குக் கிடைத்த ஒரு படைப்பாளி. 'இக்கரையில்..'கல்கியில் தொடராக வெளிவந்து அண்மையில் நூலாக வெளிவந்த அவரது முதலாவது நாவல். ஜனரஞ்சக இதழொன்றில் வெளிவரவேண்டிய தேவையிருந்ததால், அதற்குரிய நடையில் எழுதப் பட்ட நாவல். வழக்கமான காஞ்சனா தாமோதரனின் படைப்புகளில் காணப்படும் மொழிச் செறிவினை அதனாலேயே இந்நாவலில் காணமுடியவில்லையோ என்று கூட ஒரு சந்தேகம். எழுத்தாளரின் பெயரைக் குறிப்பிடாமல் இதை எழுதியவர் யாரெனக் கல்கி ஒரு போட்டி வைத்திருந்தால் நிச்சயமாக 'இந்துமதி', 'சிவசங்கரி', 'அனுராதா ரமணன்' என்று ஏதாவதொரு பதிலை வரவழைக்கும் நடை.
ஆனால் நாவல் கூறும் பொருள் புதிதா? களம் புதியதாகவிருக்கலாம். ஆனால் சாதாரண ஒரு இந்தியப் பெண்மணி பெரியதொரு தொழில் அதிபராகவுள்ள நாவலேதும் ஏற்கனவே வந்திருக்கிறதாவென்று ஆய்ந்து பார்த்தால்....ஆம். என்பது தான் விடையாக வருகிறது. எழுபதுகளில் கல்கி.ராஜேந்திரன் எழுதிக் கல்கியில் தொடராக வெளிவந்த 'சாருலதா' நாவலினைக் கூற முடியும். 'இக்கரையில் வரும்..' நாயகியரில் ஒருத்தியான றஞ்சி தான் குடியேறிய நாடொன்றில் அடைந்த நிலையினை சாருலதா சொந்த நாட்டிலேயே அடைந்திருக்கின்றாள். இந்திரா காந்தியென்று பெண்மணி பாரதப் பிரதமராகியதொரு காலகட்டத்தில் சாருலதாவைப் போல் தொழில் அதிபராக உருவான அன்றைய இந்தியப் பெண்மணிகள் பலர் இருந்திருக்கின்றார்கள். இந்நிலையில் 'இக்கரையில்..' வரும் றஞ்சியின் நிலை எந்தவிதப் புதியதொரு சாதனையான நிலையினையும் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகப் படுத்தி விடவில்லை.
நாவலில் மூன்று விதமான பெண்கள் வருகின்றார்கள். றஞ்சி, விது, மற்றும் ராஜி. பொதுவாக ஒரு நாவலொன்றின் பல்வேறு பாத்திரங்கள் நாவலாசிரியரின் பல்வேறு பரிமாணங்களின் விளைவுகளாக உருவாவது இயல்பாலானதென்று கூறுவார்கள். டால்ஸ்டாயின் அன்ன கரீனினா போன்ற படைப்புகளில் வரும் ஆண் பாத்திரங்களைப் பலரும் டால்ஸ்டாய் என்ற படைப்பாளியின் பலவேறு வடிவங்களாகக் கூறுவர். மனதிலேற்படும் பலவேறு வகையான போராட்டங்களை எழுத்தாளர்கள் பல்வேறு பாத்திரங்களாகப் படைப்பது இயற்கை. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் இதனை எளிதாகக் காணலாம். காஞ்சனா தாமோதரனின் மேற்படி 'இக்கரையில்..' நாவலில் வரும் மூன்று பெண்மணிகளும் உண்மையில் சாதாரண வாழ்வில் காணப்படும் ஒரு பெண்ணின் பல்வேறு இயல்புகளாகக் கொள்ளப்படத்தக்கவர்கள். புலம் பெயர்ந்த சூழலில் வாழும் ஒரு பெண்மணி பிரபல நிறுவனமொன்றில் வெற்றிகரமாக விளங்கும் அதே சமயம், தாம்பத்திய வாழ்வில் விதுவைப் போல் மனஉளைச்சல்களுக்குள்ளாவதும் , ராஜியைப் போல் அரங்கேற்றம் அது இதென்று அலைந்து திரிவதும் சர்வ சாதாரணம். இவ்விதமான பல்வேறு இயல்புகளையும் தன்னகத்தே கொண்டு வாழ்வும் பல்வேறு நபர்களை நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கின்றோம். புலம் பெயர்ந்த சூழலில் மட்டுமல்ல, இந்தியாவில் கூட பெரு நகரொன்றில் பிரபல நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கும் சாருலதாக்கள், றஞ்சிகள் அடையும் விளைவுகள் , மனப் போராட்டங்களும் இத்தகையதே. இத்தகையதொரு கோணத்தில் 'இக்கரையில்..' நாவலின் களமும், கூறும் பொருளும் தமிழ்ப் படைப்புலகத்திற்குப் புதியவையா என்று கேட்டால்....வருவது சந்தேகமே. மேற்படி நாவலில் வரும் நாயகியர் மூவரும் கல்கத்தாவில் வாழ்வதாகக் கருதிப் பாருங்கள்......மிதவையில் பம்பாய் வாழ்வை நாஞ்சில் நாடன் விபரிப்பதைப் போல் இருக்காதா?...கதை அமெரிக்காவில் நிகழ்வதால் மட்டும் மேற்படி நாவலின் கரு புதியது. களம் புதியது என்று காஞ்சனா தாமோதரனின் முகத்துக்காகப் பல எழுத்தாள ஜாம்பவான்கள் கூறுவது முறையான விமர்சனமாகவிருந்து விடாது.
இருந்தும் நாவல்... ஒரு இந்தியப் பெண்ணின் பிரச்சினைகளைப் பல்வேறு வழிகளில் கூறுகிறது. ஆனால் பெண்ணிய நாவலல்ல.கல்வித்தகைமைகளுள்ள ஓர் இந்தியப் பெண், உரிய கவனிப்பும் அங்கீகாரமும் கிடைக்காமல் புலம் பெயர்ந்து வெள்ளையினத்தவர்களே வியக்கத் தக்குமளவுக்குச் சாதனை புரிவது...அமெரிக்காவில் இவ்விதமான பல றஞ்சிகள், கல்பனா சாவலாக்கள்..நிறையவேயுள்ளனர். இன்றைய இந்தியாவிலும் இவ்விதமான பலரைக் காணலாம். அதே சமயம் வாய்ப்புகள் மறுக்கப் படுகின்ற பலரையும் காணலாம். அமெரிக்காவில் கூடப் போதிய அங்கீகாரம் கிடைக்காத ஆனால் கல்வித் தகைமைகள் பலவுள்ள வந்தேறு குடிகள் இருக்கத் தான் செய்கின்றார்கள். குறிப்பாக நாவலில் வரும் விதுவின் நிலையக் கவனித்தாலே இது புரியும். கல்வித் தகைமைகளிருந்தும் அவளால் ஒரு நிரந்தரமான உத்தியோகத்தை ஏன் எடுக்க முடியவில்லை?இவளைப் போன்ற பலரையும் இங்கே காணமுடியும். மேற்படி விதுவின் நிலை ஆய்வுக்குரியதொன்று. அதே சமயம் அவளது மணவாழ்வுப் பிரச்சினைகள்..ஊடலும் கூடலும் தமிழ் நாவலுகிற்கு நன்கு பழகிப் போன அம்சம் தான். நாவலில் புலம் பெயர்ந்த மனிதரின் ஊர் பற்றிய ஏக்கங்களும் தாராளமாகவேயுள்ளன. இது பொதுவாகப் புலம் பெயர்தலாலேற்படும் இயல்பான உணர்வுகளிலொன்று. புலம் பெயர்தலால் மட்டுமல்ல...மனிதரொருவர் வாழ்க்கைப் பாதையிலும் இழந்ததையெண்ணி ஏங்குதல் பொதுவானதொரு இயல்பு தான். உணர்வு தான். எந்த நாட்டிலிருந்தாலும்..பால்யகாலத்து வாழ்வைப் பற்றிய பசுமைகளை எண்ணி ஏங்குவதும் இது போன்றதொரு நிலைதான்.
'இக்கரையில்..' கதை புதிது. களம் புதிது. என்று முகத்திற்காகக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவில்லை. ஜனரஞ்சக இதழொன்றில் எழுதிய நாவலென்பதால், வழக்கமான காஞ்சனா தாமோதரனின் கதைகளில் தெரியும் மொழிச் செறிவினை 'இக்கரையில்..' காணமுடியவில்லை. ஆங்காங்கே கவிதைகளைத் தூவி விடுவதால் அச்செறிவு ஏற்பட்டு விடப் போவதில்லை. ஆழமான சிறுகதைகளின் மூலம் தமிழ்ப் படைப்புலகிற்கு அறிமுகமான காஞ்சனா தாமோதரன் அறிமுகமாகக் காரணமான இணைய இதழ்களிலேயே தனது ஆழமான நாவலொன்றினை இனிமேல் தான் எழுத வேண்டும். ஏனெனில் இணையத்தில் தான் அவரால் சுதந்திரமாக எழுத முடியும்
- அவதானி - ஜூன் 2003 இதழ் 42 -மாத இதழ்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.