பிரபல மொழியியல் அறிஞரும், எழுத்தாளருமான அம்பர்தோ எகோவுடனான நேர்காணல்கள் அடங்கிய கைக்கடக்கமான நூலொன்றினை அண்மையில் வாசித்தேன். மொழிபெயர்த்திருப்பவர் ரஃபேல். அந்நேர்காணல்களில் தன் வாழ்வு பற்றி, விருப்பு வெறுப்பு பற்றி, தன் இலக்கிய முயற்சிகள், அவற்றுக்கான தூண்டுதல்கள் பற்றியெல்லாம் மனந்திறந்து அம்பர்த்தோ எகோ கூறியிருக்கின்றார். மூலக்கட்டுரைகளை நான் வாசிக்கவில்லை. ஆனால் நூலின் நடையிலிருந்து , மொழியிலிருந்து தரமானதொரு மொழிபெயர்ப்பாகவே தென்படுகின்றது. இதில் எம்பர்தோ எகோவுடனான புனைவுக்கலை பற்றிய நேர்காணலில் அவர் கவிதையைப்பற்றிக்கூறியதை இங்கே பதிவு செய்கின்றேன். இது எம்பர்தோ எகோவின் கவிதையைப்பற்றிய கருத்து. என்னுடையதல்ல என்பதை நண்பர்கள் கவனத்தில் வைத்திருங்கள்.
கவிதை பற்றிய கேள்வியொன்றுக்கு எம்பர்த்தோ எகோவின் பதில் இதுதான்: "சில குறிப்பிட்ட வயதுகளில் ஒரு பதினைந்து பதினாறு என்று வைத்துக்கொள்வோம். கவிதை என்பது சுயமைதுனம் செய்துகொள்வதைப்போன்றது என நினைக்கின்றேன். ஆனால் நல்ல கவிஞர்கள் தாங்கள் முன்னாளில் எழுதிய கவிதைகளைப் பின்னாட்களில் எரித்து விடுவார்கள். மோசமான கவிஞர்கள் அவற்றை வெளியிடுவார்கள். நான் அவற்றையெல்லாம் வெகு விரைவாகவே கை விட்டு விட்டேன் என்பது ஒரு வகையில் நன்றிக்குரியதே."
அம்பர்தோ எகோ இவ்விதம் கூறியிருப்பது வேடிக்கைக்காகவா அல்லது உண்மையாகவா என்பதை அவரது ஏனைய இலக்கியம் சம்பந்தமான கட்டுரைகள் வாயிலாகவே அறிந்துகொள்ள முடியும். மேலுள்ள நேர்காணலைச்செய்துள்ள லிலா அஸாம் ஸங்காநே உடனடியாகவே அவ்விதம் தம் படைப்புகளை எரித்துள்ள நல்ல கவிஞர்களைப்பட்டியலிட முடியுமா என்றும், கவிதைகளை வெளியிட்டுள்ள மோசமான கவிஞர்கள் சிலரின் பெயர்களைக்குறிப்பிட முடியுமா என்றும் கேட்டிருக்க வேண்டும்.
அம்பர்தோ எகோவின் மேற்படி கவிஞர்கள் , கவிதைகள் பற்றிய கூற்றினை வாசித்தபொழுது ஓரெண்ணம் தோன்றியது. அம்பர்தோ எகோ (Umberto Eco ) பேசாமல் தன் பெயரை அம்பர்தோ ஈகோ (Umberto Ego) என்று வைத்திருக்கலாம் என்பதுதானது.
வசீகரம் மிக்க ஆளுமைகள் பற்றிச்சில வார்த்தைகள்.
ஒருவரைப்பார்த்த மாத்திரத்தில் இதயத்தின் ஆழத்தே சென்று தங்கிவிடும் வசீகரம் மிக்க ஆளுமை மிக்கவராக எம்ஜிஆரைக்கூறலாம். இவ்விதமான ஆளுமைகள் பார்த்த மாத்திரத்திலேயே பார்ப்பவர்களைக்கவர்ந்து விடுவார்கள். அவர்களைப்பற்றி எதுவுமே அறியாத நிலையிலேயே அவர்களது முக வசீகரம் பார்ப்பவர்களை ஆகர்சித்து விடுகின்றது. அதனால்தான் அத்தகையவர்களை அவர்களால் ஆகர்சிக்கப்பட்டவர்கள் அவர்களது நேர்மறையான மற்றும் எதிர்மறையான அம்சங்களுடன் ஏற்றுக்கொண்டு விடுகின்றார்கள். இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்கள் ஏன் இவ்விதமான வசீகர ஆளுமை மிக்கவர்களாக இருக்கின்றார்களென்று நினைத்துப்பார்ப்பதுண்டு. இவர்களது அந்த வசீகரம் மிக்க ஆளுமை அவர்களது ஆழ்மனதிலிருந்து வெளிப்படுவதென்று நினைக்கின்றேன். 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். '
இவ்விதமான ஆளுமை மிக்கவர்களில் இன்னுமொருவராக நான் 43 வயதில் அமெரிக்க ஜனாதிபதியாகப்பதவியேறற ஜான்.ஃப்.கென்னடியைக்குறிப்பிடுவேன். இவரது சிரித்த முகமும், பார்ப்பவர் இதயங்களைச்சுண்டி இழுத்துவிடும் வசீகரம் மிக்கது. இவ்விதமான ஆளுமை மிக்கவர்களின் வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தால் ஒன்றினை அவதானிக்கலாம். இவர்கள் அனைவரும் வாழ்க்கையில் நன்கு அடிபட்டிருப்பார்கள். சுழல்கள் நிறைந்த வாழ்க்கைக்கடலில் எதிர் நீச்சலடித்தே தப்பிப்பிழைத்திருப்பார்கள். அதன் காரணமாக அவர்களது வார்த்தைகளெல்லாம் அவர்களது வாழ்க்கை அனுபவங்களின் காரணமாக வெளிப்படும் தன்மை மிக்கவையாக விளங்குகின்றன என்பதென் கருத்து. அதனால்தான் அவை கேட்பவர்கள் இதயங்களைச்சென்று உலுப்பி விடுகின்றன.
ஜான்.ஃப்.கென்னடியின் 'நாடென்ன செய்தது உனக்கு. எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு?' என்னும் அர்த்தத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் மிகவும் புகழடைந்த வார்த்தைகள். அவற்றைக்கேட்டவுடனேயே அந்த வார்த்தைகள் கேட்பவர்கள் இதயங்களின் ஆழத்தை அசைத்து அங்கேயே நிரந்தரமாகத்தங்கி விடுகின்றன. அதே வார்த்தைகளை இன்னுமொருவர் கூறியிருந்தால் இதுபோல் புகழடைந்திருக்குமா என்பது சந்தேகமே. கென்னடியென்றதும் எனக்குச்சிறு வயது நிகழ்ச்சியொன்று ஞாபகத்துக்கு வருகின்றது. கென்னடியின் வாழ்க்கை வரலாற்றை அழகிய புகைப்படங்களுடன், அழகான தாள்களில் நூலாக ஆனந்தவிகடன் வெளியிட்டிருந்தது. அந்த நூலை யாழ்ப்பாணப்புகையிரத நிலையத்திலிருந்த புத்தகக்கடையில் கட்டித்தூக்கியிருந்தார்கள். அவ்விதம் தொங்கிக்கொண்டிருந்த அந்த நூலின் அட்டைப்படத்தில் கென்னடியின் வசீகரம் முகம் சிரித்துக்கொண்டிருந்தது. அதன் காரணமாகவே அந்த நூலை வாங்கித்தரும்படி அம்மாவை வற்புறுத்தி வாங்கிக்கொண்டேன். அந்த நூலை வாங்கியபொழுது எனக்குக் கென்னடியைப்பற்றி எதுவுமே தெரியாது. அவரது அரசியல் கொள்கைகளோ அல்லது அந்தரங்க நடவடிக்கைகளோ எதுவுமே தெரியாது. பின்னர் அந்த நூலின் மூலம்தான் இரண்டாம் உலக யுத்தக்காலத்தில் போர் வீரராக அவர் பயணித்துக்கொண்டிருந்த ஆயுதப்படகு வெடித்துக்கடலில் சிதற, கடலில் தூக்கியெறியப்பட்ட கென்னடி நீந்தித்தப்பிப்பிழைத்த விபரமே தெரிய வந்தது. தம் நாட்டுக்காகத் தம்மை அர்ப்பணித்துப்போராடியதால்தான் கென்னடியின் 'நாடென்ன செய்தது எனக்கு? எனக்கேள்விகள் கேட்பது எதற்கு?' என்னும் அர்த்தத்தில் கூறப்பட்ட வார்த்தைகள் அவ்வளவு வலிமையாகக்கேட்பவர் உள்ளங்களை அசைத்துவிடுகின்றன.
இது போன்றதுதான் எம்ஜிஆரின் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற சொற்தொடரும். அந்தச் சொற்தொடருக்குப்பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைதான் அவ்வார்த்தைகளைக்கேட்டதும் கேட்பவர்களின் இதயங்களை ஒருகணம் உலுப்பிவிடக்காரணம். எம்ஜிஆர் குண்டடிபட்டிருந்த சமயம் அவருக்குத் தமிழகமக்கள் பலரின் இரத்தம் வழங்கப்பட்டதாம். அதற்காகத்தான் அவர் அவ்விதம் கூறுவதாக அவரே அதுபற்றி விபரித்திருந்ததை எங்கேயோ படித்திருக்கின்றேன். அவரது வாழ்க்கை அனுபவத்தின்வாயிலாக வெளிப்பட்டதால்தான் அவ்வார்த்தைகள் இவ்வளவுதூரம் மக்களை ஆகர்சிக்கக்காரணம். இதே வசனங்களை இன்னுமொரு நடிப்பில் சிறந்த நடிகர் கூறியிருந்தாலும் எடுபட்டிருக்கப்போவதில்லை.
இவ்வித வசீகர ஆளுமை மிக்கவர்களாக இன்னும் பலரைக்கூறலாம். பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஜவஹர்லால் நேரு, கார்ல் மார்க்ஸ், மாசேதுங், ஐன்ஸ்டைன்.. இவ்விதம் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவர்களைப்போன்ற வசீகர ஆளுமைகளுக்குள்ள பொதுவான அம்சம் இவர்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள் கூட , இவர்களைப்பார்த்த மாத்திரத்திலேயே இவர்கள்பால் ஈர்க்கப்பட்டு விடுவார்கள். பின்னர் இவர்களைப்பற்றி அறிய அறிய மேலும் மேலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள்.
வசீகர ஆளுமை மிக்க கென்னடியின் கூற்றினை மையமாக வைத்து வசீகர ஆளுமை மிக்க எம்ஜிஆரின் 'நான் ஏன் பிறதேன்? என்னும் திரைப்படத்திலொரு பாடல் வருகின்றது. அதுதான் 'நான் ஏன் பிறந்தேன்? நாட்டுக்கு நலமென்ன புரிந்தேன்?'
தமிழகத்தில் பாலன் தோழரின் "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" நூல் வெளியீடு!
பாலன் தோழரின் "சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம்" என்னும் நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வாழ்த்துகள். ஈழத்தமிழர்களுக்காகக்குரல் கொடுக்கும் தமிழக மற்றும் இலங்கைத்தமிழ் அரசியல்வாதிகள் யாரும் செய்யாத செயலிது. இந்நூலாவது அவர்கள் கண்களைத்திறக்கட்டும். இதுபோல் ஈழத்துச்சிறைகளில் பயங்கரவாதத்தடைச்சட்டம் காரணமாக வருடக்கணக்காகச்சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ்க்கைதிகள் பற்றியும் விரிவான நூல்கள் வருவதவசியம். ஆயுதம் தாங்கியவர்களே மன்னிக்கப்பட்டு வெளியில் சுதந்திரமாக உலாவும்போது, வெறும் சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்பட்டவர்களை ஏன் இன்னும் சிறைகளில் வைத்துள்ளார்கள்? காலத்தின் தேவையறிந்து பாலன் தோழர் வெளியிட்ட நல்லதொரு நூல் 'சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்'.
இலங்கைத்தமிழ் எழுத்தாளர் பாலா குமாரசாமி பற்றி 'அமுதசுரபி'யில் 'யெஸ்பால்'
பிரபல இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களிலொருவரான பாலா குமாரசாமி அவர்களைப்பற்றிய கட்டுரையொன்றினை 'யெஸ்பால்' 'அமுதசுரபி' சஞ்சிகையின் செப்டம்பர் இதழில் 'தற்கால இலக்கியம்' என்னும் பிரிவுக்காக எழுதியுள்ளார். பாலா குமாரசாமி அவர்கள் தன் மதிப்புக்குரிய எழுத்துலக ஆளுமைகளாக நா,பார்த்தசாரதி, க.நா.சு, சி.சு.செல்லப்பா,ஏ.என்.சிவராமன், புதுமைப்பித்தன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோரைக்குறிப்பிட்டுள்ளார்.
"நா.பா.வின் நேர்மை, சத்திய ஆவேசம் எல்லாம் என்னுடைய எழுத்துக்கும் பயன்படுகிறது. வாழ்க்கைக்கும் பயன்படுகிறது. அவர் உருவாக்கிய மாதிரியான கதாநாயகர்களை வேறு யார் உருவாக்கினார்கள்?" என்று எழுத்தாளர் பாலா குமாரசாமி குறிப்பிட்டுள்ளதாகக்கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் "தன் எழுத்துக்கு நா.பா, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆதர்சமென்றால், விமர்சனத்துக்கு க.நா.சு.வும், சி.சு.செல்லப்பாவுமே வழிகாட்டிகள்' என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கட்டுரையாளர் 'யெஸ்பால்' குறிப்பிட்டுள்ளார்.
யார் எழுத்தாளர் பாலா குமாரசாமியென்று திகைக்கின்றீர்களா? அவர் வேறு யாருமல்லர் எழுத்தாளர் ;கனவுச்சிறை' புகழ் தேவகாந்தனேதான். அவரது இயற்பெயர்தான் பாலா குமாரசாமி
புலம்பெயர் தமிழர் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு உதவும் இணையத்தளம்: 'படிப்பகம்'
புலம் பெயர்ந்த தமிழர்களால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் பலவற்றையும், அவற்றின் வெளியான நூற்றுக்கணக்கான இதழ்களையும் கீழுள்ள 'படிப்பகம்' இணையத்தளத்தில் நீங்கள் வாசிக்கலாம். பல்வேறு நாடுகளிலிருந்தும் வெளிவந்த சஞ்சிகைகள் இவை. இச்சஞ்சிகைகளை நாடுரீதியாக வாசித்து, அவற்றில் வெளியான படைப்புகளைப்பற்றி விரிவான ஆய்வுக்கட்டுரைகளை எழுதினாலே புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றிய விரிவான சித்திரம் கிடைக்கும். தமிழகத்திலோ அல்லது இலங்கையிலோ அல்லது ஏனைய தமிழர்கள் வாழும் நாடுகளிலோ பல்கலைக்கழகங்களில் புலம்பெயர் தமிழ் இலக்கியங்கள் பற்றி ஆய்வு செய்யும் கலைப்பீடமாணவர்களின் ஆய்வுகள் சிறக்க உதவக்கூடிய பயன்மிக்க தளமிது. முறையாகப்பாவித்துக்கொள்ளுங்கள். http://www.padippakam.com/index.php