மிகவும் அரியதொரு நேர்காணலை நண்பர் துரைசிங்கம் குமரேசன் தனது முகநூல் பதிவாகப்பதிவு செய்துள்ளார். அமரர் அ.செ.மு அவர்கள் சுவாமி ஞானப்பிரகாசருடன் நடத்திய நேர்காணலை 'வண சுவாமி ஞானப்பிரகாசர் கண்டு கதைத்தது' என்னும் தலைப்பில் 'மறுமலர்ச்சி' இதழில் (புரட்டாதி 1946) வெளியிட்டுள்ளதைத்தான் குமரேசன் அவர்கள் பதிவு செய்துள்ளார். அதற்காக அவருக்கு நன்றி. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 'மறுமலர்ச்சி' சஞ்சிகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வெளியான 'மறுமலர்ச்சி' இதழ்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிடுவது அவசியம். அதனைத்தற்போது துரைசிங்கம் குமரேசன் அவர்கள் திட்டமிட்டிருக்கின்றார். அவரது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். இது போல் ஈழத்தில் வெளியான முக்கியமான இதழ்களின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். குறிப்பாக 'விவேகி', 'கலைச்செல்வி', 'அலை' போன்ற சஞ்சிகைகளின் தொகுப்புகள் வெளிவருதல் அவசியம். மேலும் ஓரிரு இதழ்களே வெளியான சஞ்சிகைகளை ஒன்று சேர்த்தும் வெளியிடலாம். உதாரணத்துக்கு 'பாரதி', 'கவிஞன்' போன்ற சில இதழ்களே வெளியான முக்கியமான சஞ்சிகளைகளைத்தான் குறிப்பிடுகின்றேன்.இவ்விதமான தொகுப்புகள் ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றை முறையாக அறிவதற்கு மிகவும் உறுதுணையாகவிருக்கும். இல்லாவிட்டால் ஆளுக்காள் அவ்வப்போது தாம் நினைத்தபடி கூட்டி, குறைத்து, வெட்டி , ஒட்டி ஆய்வுக்கட்டுரைகளென்ற பெயரில் பூரணமற்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள்.
அசெமுவின் அந்த நேர்காணல் ஒரு பதிவுக்காக இங்கே பிரசுரமாகின்றது.
வண. சுவாமி ஞானப்பிரகாசர்.
கண்டு கதைத்தது : அ.செ.மு ( மறுமலர்ச்சி இதழ் - 6 : விய ஆண்டு புரட்டாதி : 1946 )
ஆறாம் வகுப்புப் படித்து விட்டு இலங்கை றெயில்வேயில் (Telegraph Signaller) உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீமான் வைத்திலிங்கம், பிறகு சுவாமி ஞானப்பிரகாசராகி எழுபது பாஷைகளைப் பற்றித் தெரிந்துகொண்டு புத்தக சாகரத்தின் நடுவே அமர்ந்து ‘தமிழ்தான் உலகத்துப் பாஷைகளில் எல்லாவற்றுக்கும் அடிப்படை’ என்று முழங்கவும், அதனை ஆராய்ச்சி பூர்வமாகக் காட்டவும் துணிவாரென்று யார் எதிர்பார்த்தார்கள்?
சுவாமிகளுக்குச் சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இத்தாலி, பிறெஞ்ச், இங்கிலீஷ், தமிழ் உட்பட பன்னிரண்டு பாஷைகளைப் பிழையின்றி எழுத வாசிக்கத் தெரியும். லற்றின், பிறெஞ்ச், சிங்களம், ஆங்கிலம், தமிழ் - என்பனவற்றில் பேசவும் முடியும்.
‘இத்தனை பாஷைகளையும் எப்படித்தான் கற்றுக் கொண்டீர்களோ?’ என்று கேட்டதற்கு, ‘முயற்சி; முயற்சி திருவினை ஆக்கும். அதோடு இறைவன் அருளும் இருக்கத்தான் வேண்டும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.
சுவாமிகளின் இன்றைய முயற்சி தமிழுக்குத் திருவினையாக்கத்தான் போகிறது. முயற்சி என்றால் எப்பேர்ப்பட்ட முயற்சி தெரியுமா?
2000 பக்கங்களைக் கொண்டதொரு (Etymological and Comparative Lexicon) ‘ஒப்பியல் அகராதி’யை தமிழில் சுவாமிகள் தயாரித்து வருகிறார்கள். இது தமிழுக்கு முற்றிலும் புதியதொன்றும் இதில் இதுவரையில் ஐந்து பாகங்கள் வெளியாகி இருக்கின்றன. மொத்தத்தில் ஒவ்வொன்றும் 100 பக்கங்கள் கொண்ட 20 பாகங்களாகும்.
இந்த வெளியீட்டு முயற்சிக்கு இலங்கை அரசாங்கம் வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபா வீதம் உதவி அளித்து வருகிறது. இந்த அரசாங்க உதவி கிடைப்பதன் முன்பே திருப்பனந்தாள் சைவ ஆதீனத்தார் பண உதவி செய்தனர். இப்போதும் செய்து வருகின்றனர். சுவாமிகள் தென்னிந்தியாவில் பல நகரங்களுக்கும் சென்று அங்கேயுள்ள தமிழ்ச் சங்கங்களில் தமது ஆராய்ச்சிகளை விளக்கிக்காட்டினர். அப்பொழுதுதான், காலஞ்சென்ற சேர். ஓ.பன்னீர் செல்வம் முதலியோர் இவரை ஆதீனத்துக்கு அழைத்துச் சென்று மடாதிபதியோடு அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து இருக்குமா உங்களுக்கு? என்று கேட்டதற்கு, ‘சிங்கள அகராதி முயற்சி ஒன்றுக்கு வருஷந்தோறும் பதினாயிரக் கணக்கில் உதவி அளிக்கும் அரசாங்கம் தமிழுக்கு இந்தச் சிறுதொகையைத் தரப் பின்நிற்குமென நான் கருதவில்லை’ என்றார்.
நமது அடுத்த கேள்வியாக, ‘இந்த ஒப்பியல் அகராதி எப்போது பூர்த்தியாகும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்று கேட்டோம், ‘அதுவா? அது அச்சுக்கூடத்தாரைப் பொறுத்த விஷயம்’ என்று கூறினார்.
ஏற்கனவே செய்து முடித்து விட்டவை தவிர, சுவாமிகள் இன்று செய்து வருவனவற்றில் குறிப்பிடுவதற்கு இன்னும் உண்டு.
ஆங்கில - தமிழ் ( E n g l i s h - Ta m i l Comprehensive Dictionary ) அகராதி ஒன்றுக்கு எழுதிக் கொண்டுவரும் கையெழுத்துப் பிரதிகள் அறையில் ஒரு பக்கத்தே நாலு முழ உயரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இது விரைவில் முடிவடையும் என்று சொல்லுகிறார். இது தவிர, ஆங்கிலத்தில் யாழப்பாணச் சரித்திர ஆராய்ச்சியும் எழுதுகிறாராம்.
‘ திராவிட மொழியிலிருந்து உலகிலுள்ள அநேகம் பாஷைகள் ‘இரவல்’ எடுத்திருக்கின்றன. ஆராய்ச்சி செய்துகொண்டு போகையில் இது நன்றாகத் தெரிகிறது. ஸ்ரீ ஈழம் என்று முன்னே தமிழில் வழங்கியதுதான் பின்னர் மருவி சிங்களமாகின்றது. ஐரோப்பிய மொழிகளிலேயே தமிழ் மருவிய சொற்கள் பல உண்டு’ என்று சொல்லிவிட்டு அதற்குச் சில உதாரணங்களும் எடுத்துக் காட்டி விளங்கப்படுத்தினார்.
மொழி ஆராய்ச்சி சம்பந்தமாகப் பத்திரிகைக்காரர் இன்றைய நிலையில் செய்யக்கூடிய பணி என்னவெனில் இப்படியான மொழி ஆராய்ச்சிக் குறிப்புகளை, அதாவது சொற்கள் மருவிய வரலாற்றைச் சிறு சிறு குறிப்புகளாகப் பத்திரிகைகளில் போட்டு வருவதுதான் - என்று சுவாமிகள் அபிப்பிராயப்படுகிறார். ( ‘கலைமகள்’ பத்திரிகை சிலகாலம் செய்து வந்ததே அதுபோல.)
த மி ழி ல் கு றைவாயுள்ள உச்சரிப்புகளை நிறைவாக்கப் புதிய வரிவடிவங்கள் அல்லது புதிய குறியீடுகள் சேர்ப்பதையிட்டுத் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்பது நமது இன்னொரு கேள்வி. இதற்கு, சமஸ்கிருதத்திலிருந்து ஜ,ஷ,ஸ, போன்ற எழுத்துக்களை ஏற்றுக்கொண்ட தமிழ், குறைவாயுள்ள மற்றைய உச்சரிப்புகளுக்கும் தேவையாயின் கிரந்த எழுத்துக்களை (அதவாது ப (Ba), க (Ga) போன்றவைகளை) எடுத்துக்கொள்ளலாமே. அதில் குறையொன்றும் இருக்கமாட்டாது" என்று பதில் தந்தார்.
தமிழின் மறுமலர்ச்சி பற்றி முக்கியமாக வசன நடைபற்றி அபிப்பிராயம் கேட்டபோது , மட்டையிலிருந்து பெட்டி இழைக்க முடியுமா? மட்டையை வெட்டிவிட்டுக் குருத்தோலைகளைச் சிறிது சிறிதாக அளவாக வார்த்து எடுத்தால்தான் பன்ற வேலைகளுக்கு உதவும். அதுபோலத்தான் எளிய பாஷையில், பேச்சு நடையில் அதிலுள்ள பிழைகளை நீக்கிவிட்டு இலகுவான சிறிய வாக்கியங்களாக எழுதினால்தான் ஜனங்களுக்கு விளங்கும்; மனக்கருத்தையும் உள்ளபடியே வெளியிட முடியாது"- என்றார் பழைய புதிய தமிழ் நடைகளை நன்றாயறிந்த சுவாமிகள்.
தயாரித்துக்கொண்டு போன நமது கேள்விகளில் இன்றைய கல்விப் பிரச்சனை சம்பந்தமாகவும் ஒன்று இருந்தது. நமது நாட்டில் உயர்தரக்கல்வி எந்த மொழிமூலம் ஊட்டப்படுவது நன்று?" இதற்கு, சுவாமிகள் சிறிது விசனமாகத்தான் பதிலளித்தார்.
எவ்வளவோ நூல்கள் தமிழ் மொழியில் சரியாகமொழி பெயர்க்கப்படாத இப்போதைய நிலைமையில் இது இயலாதென்றுதான் சொல்லவேண்டும்" என்றார்.
சுவாமிகளின் முதலாவதான சமய ஆராய்ச்சி அனுபவங்கள் தான் பின்னர் அவரைப் பாஷை ஆராய்ச்சிக்கும் இழுத்துச் சென்றதாம். ஆயினும் இந்த அகராதி வேலையில் தம்மை ஊக்கி விட்டவர் சென்னைப் பல்கலைக் கழகப் பேரகராதி வேலையில் உதவி புரிந்த காலஞ்சென்ற ஸ்ரீ S.R. முத்துக்குமாரு அவர்கள்தான் என்று கூறி அவர்களை வாயார வாழ்த்தினார்.
கையெழுத்து மறையும் அந்தி நேரமாயிற்று. சரி நான் இனி மேல் ஜபம் வாசிப்பதற்குப் போகவேண்டும்" என்று விடை பெற்று எழுந்தார்.
சுற்றிவரப் புத்தகமயமாயிருக்கும் அறைநடுவே பாதம்வரை நீண்ட வெள்ளை அங்கி தரித்து, ஞானத்தின் அறிகுறியான வெண்ணிறத் தாடியோடு உயரமாக நிமிர்ந்து நின்ற அந்தப் பொன்நிற மேனியைப் பார்த்த போது, சில படங்களிலே பார்த்த பழைய காலத்து மேனாட்டுக் கவிஞர்கள், முனிவர்களின் தோற்றந்தான் என் கண் முன்னே வந்தது.
இவருடைய சொந்த ஊர் மானிப்பாய். தகப்பானார்: இராசசிங்கம் சுவாமிநாதபிள்ளை. தாயார்: கார்டினர் சிற்றம்பலம் தங்கமுத்து. முதலில் மானிப்பாயிலும், பின் யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இளமையில் சைவ சமயத்தவராகவே இருந்தார். பிறந்தது: 1875-ம் ஆண்டு ஆவணி மாதம் 31-ந் தேதி. இன்று வயது 71.
வெளியிட்ட நூல்கள் பல. அவற்றுள் முக்கியமானவை: தமிழமைப்புற்றவரலாறு, தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி, தருக்க சாத்திரச்சுருக்கம் என்பன.
நன்றி: மறுமலர்ச்சி இதழ் (புரட்டாதி 1946); இதனைப்பிரசுரித்த துரைசிங்கம் குமரேசனின் முகநூல் பதிவு.