1. 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்'
கடந்த ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக தமிழ்க்கலை, இலக்கிய உலகில் கலை, இலக்கிய விமர்சகராகப்பங்களித்து வருபவர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள். முதுமையின் தளர்ச்சியையும் உள்வாங்கிச்சோர்ந்து விடாமல் தொடர்ந்தும் சஞ்சிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று தன் எழுத்துப் பங்களிப்பினை வழங்கி வருபவர் வெங்கட் சாமிநாதன். அவருடன் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் கூட தமிழ்க்கலை, இலக்கியச்சூழ்நிலையில் நிராகரிக்க முடியாத அவரது ஆளுமையினை ஏற்றுக்கொள்வார்கள், 'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல வருடங்களாகத்தன் கட்டுரைகளை அனுப்பி வருபவர் அவர். 'பதிவுகள்' இணைய இதழினை மிகவும் மதிப்பவர் திரு.வெ.சா, அவர் தன் படைப்புகளை அனுப்பும்போது எப்பொழுதும் மின்னஞ்சலில் 'அன்புள்ள நண்பர், ஆசிரியர் பதிவுகள் கிரிதரன் அவர்களுக்கு' என்று விளித்துத்தான் தன் படைப்புகளை அனுப்புவார். இது அவரது பெருந்தன்மையினைக்காட்டுகிறது. என்னை அவர் தன் நண்பர்களிலொருவராக ஏற்றிருப்பது அவரது நல்ல உள்ளத்தைக்காட்டுகிறது. அது 'பதிவுகள்' இணைய இதழ் மேல் அவர் வைத்துள்ள மதிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.
திரு.வெ.சா.வின் ஐம்பது வருட இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்' என்றொரு தொகுப்பு நூலினை 2010இல் வெளியிட்டு வைத்தார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான 'அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்' என்றொரு நீண்டதொரு கட்டுரையினை எழுதியிருந்தேன். மேலும் மேற்படி நூலினைப்பெற விரும்புவோர் சந்தியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளவும். முகவரி வருமாறு: சந்தியா பதிப்பகம், புது எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யு, அசோக் நகர் , சென்னை 600 083 என்னு முகவரிக்கு எழுதித்தொடர்பு கொள்ளுங்கள். விலை ரூபா 300.
2. எழுத்தாளர் மற்றும் எழுதுபவர் பற்றிய ஜீவகுமாரன் கூற்று பற்றி....
தன்னை யாரும் எழுத்தாளனென்று என்று அழைக்க வேண்டாமென்றும் , "சிறுகதை நாவல் ”எழுதுபவர்” என்பதற்கும் "எழுத்தாளர்' என்ற சொற்பதத்துக்கும் பாரிய வேறுபாடு உண்டு." என்று 'எழுதுபவர்' ஜீவகுமாரன் கூறியிருக்கின்றார். இந்தக்கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. கம்யூட்டர் என்பதற்குக் கணினி என்ற சொல்லினைத் தமிழ்ச்சொல்லாகப்பாவிப்பது எவ்விதம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டதோ, Clerk என்பதற்கு எவ்விதம்; ' எழுத்தர் என்ற சொல் அனைவராலும் பாவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டதோ அவ்விதமே Writer என்பதற்குரிய தமிழ்ச்சொல்லாக எழுத்தாளர் என்னும் சொல் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாவிக்கப்படுகிறது. கதை, கட்டுரை, கவிதை, நாடகம், நாவல் என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் எழுதுபவர்கள் எழுத்தாளர்களே. எழுத்தாளர் என்பது பொதுவான பிரிவு. அதன் உபபிரிவாக ஏனையவற்றை நாவலாசிரியர், கவிஞர், நாடகாசிரியர், மொழிபெயர்ப்பாளர் , பத்தி எழுத்தாளர், மர்க்கதை எழுத்தாளர், குழந்தைக்கவிஞர் போன்றவற்றைக்குறிப்பிடலாம்.
இவர்கள் யாவருமே தாம் படைக்கும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்கள். அந்த எழுத்து எவ்வகையானது என்பதற்கும் அப்பால் (தரமானதா அல்லது தரமற்றதா) அவர்களது எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்கள், அவ்வெழுத்துகளை ஆளுபவர்கள் அவர்கள்தாம். எனவே எழுத்தாளர் என்னும் பதத்தைப்பாவிக்கக்கூடாதென்றால் writer என்பதற்குரிய சரியானதொரு சொல் தமிழில் உருவாக்கப்பட்டு , அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பாவனைக்கு வரவேண்டும்.
ஜீவகுமாரனின் இன்னுமொரு முகநூல் பதிவும் என் கவனத்தைக்கவர்ந்தது. சென்னையில் கன்னிமாரா ஹொட்டலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு அனுபவம் பற்றிய பதிவு அது. அந்தப்பதிவு வருமாறு:
"விழா நடந்த பொழுது ஒரு வயோதிபர் கையெழுத்துப் பிரதி ஒன்றுடன் என்னை அணுகினார். அவரின் தோற்றம் அவரின் வறுமையைக் காட்டியது. அவரின் பேச்சு மனநோயின் தளம்பலைக் காட்டியது. ”உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டேன். ”மதுரையின் மைந்தன்… தீ முழக்கம் … புரட்சி எழுத்தாளர் சிரோன்மணி சிவதானு” என்றார். ”உங்களுக்கு என்ன வேண்டும்” ”இந்த நூலை நீங்கள் பதிப்பிக்க வேண்டும். நிச்சயமாய் 10 இலட்சம் இலாபம் உங்களுக்கு கிடைக்கும். எனக்கு றோயல்டியாக 10 வீதம் தர வேண்டும்” என்றார். ”இதற்கு முதல் ஏதாவது நூல்கள் வெளியிட்டு இருக்கின்றீர்களா” ”இல்லை” ”இந்தப் பட்டங்கள்…” ”மேடைகளில் கிடைத்தது” "உங்கள் சொந்தப் பெயர்" "நாச்சிமுத்து" ”சரி வாசித்து பார்க்கின்றேன்” ”இப்போ ஒரு 1000 ரூபாய் தந்து விட்டுப் போங்கள்” வறுமை கை நீட்டியது. கொடுத்தேன். அந்த ஆயிரத்தில் எனது புத்தகங்கள் இரண்டை ஐந்நூறு ரூபாய்க்கு வாங்கியதையும் கண்ட பொழுது என் கண்கள் பனித்தது. பின்பு விமானத்தில் அவரின் நூலைப்படித்த பொழுது அது பதிப்புக்கோ வெளியீட்டுக்கோ தகுதி இல்லை என முடிவெடுத்தேன். ஆனாலும் 2 கிலோ எடை என்னுடன் தேவையில்லாது டென்மார்க்வரை பயணம் செய்தது. இந்த இரண்டு கிலோ எடைக்கு ஊரில் இருந்து பனங்கிழங்கோ... அல்லது இந்தியாவில் இருந்து 2 கிலோ திருநெல்வேலி அல்வாவை டென்மார்கிற்கு கொண்டு வந்திருக்கலாம். ஆனாலும் ”மதுரையின் மைந்தன்… தீ முழக்கம்… புரட்சி எழுத்தாளர் சிரோன்மணி சிவதானு” என்பது மட்டும் இன்றும் எனது ஞாபகத்தில் உண்டு"
இது ஒருவரின் கருத்து. முற்று முழுதான உண்மையாக இருக்க வேண்டியதில்லை. பதிப்பகங்கள் பலவற்றால் நிராகரிக்கப்பட்ட பல படைப்புகள் பின்னர் வெளியாகிச் சாதனைகள் புரிந்திருக்கின்றன. மேலும் அந்த எழுத்தாளரின் உண்மையான பெயர் , விபரங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கத்தேவையில்லையென்று தோன்றுகிறது. ஜீவகுமாரன் கொடுத்த பணத்தில் அவரது புத்தகங்கள் இரண்டினையும் வாங்கியிருக்கின்றார். அது அவரது நூல்கள் மீதான விருப்பினை வெளிப்படுத்துகிறது. ”இந்த நூலை நீங்கள் பதிப்பிக்க வேண்டும். நிச்சயமாய் 10
இலட்சம் இலாபம் உங்களுக்கு கிடைக்கும். எனக்கு றோயல்டியாக 10 வீதம் தர வேண்டும்” என்று கூறி உங்களிடன் பணம் பெற்றிருக்கின்றார். அந்தத்தன்னம்பிக்கை, கர்வம் பாராட்டத்தக்கது.
மேலும் அந்தப்பதிவில் ஜீவகுமாரன் அந்த வயோதிபரைப்பற்றி விபரிக்கையில் 'ஒரு வயோதிபர் கையெழுத்துப் பிரதி ஒன்றுடன் என்னை அணுகினார். அவரின் தோற்றம் அவரின் வறுமையைக் காட்டியது. அவரின் பேச்சு மனநோயின் தளம்பலைக் காட்டியது.' என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அதுவும் என் மனதைப்பாதித்தது. அந்த வயோதிபர் தான் எழுதிய நூலொன்றினைகொண்டு வந்து கொடுப்பதற்காக வந்திருக்கின்றார். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் எழுத்தாளரென்பதால் ஒருவேளை தன் நூலினை வெளியிட அவர் உதவக்கூடுமென்று எண்ணியிருக்கலாம். நேரடியாகத் தன் நூலினை எழுத்தாளரிடம் கொடுத்து அதனை வெளியிட்டுப்பணம் சம்பாதிக்கலாமென்றும், அதற்குரிய உரிமைப்பணமாகச் சிறிது தொகையினையும் கேட்டிருக்கின்றார். அது பாராட்டப்பட வேண்டிய விடயம். அவர் பிச்சை கேட்கவில்லை. தன் நூலுக்குரிய 'ராயல்டி'யைத்தான் கேட்டிருக்கின்றார். அவரது கோரிக்கையினை ஜீவகுமாரன் ஏற்றிருக்க வேண்டிய கட்டாயமில்லை. அதனை மறுத்திருக்கலாம். ஆனால் அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு, சிறிது தொகையினையும் கொடுத்துவிட்டு ஜீவகுமாரன் தன் பதிவில் பின்பு "விமானத்தில் அவரின் நூலைப்படித்த பொழுது அது பதிப்புக்கோ வெளியீட்டுக்கோ தகுதி இல்லை என முடிவெடுத்தேன். ஆனாலும் 2 கிலோ எடை என்னுடன் தேவையில்லாது டென்மார்க்வரை பயணம் செய்தது. இந்த இரண்டு கிலோ எடைக்கு ஊரில் இருந்து பனங்கிழங்கோ... அல்லது இந்தியாவில் இருந்து 2 கிலோ திருநெல்வேலி அல்வாவை டென்மார்கிற்கு கொண்டு வந்திருக்கலாம்." என்று கூறியிருக்கின்றார். இதுவும் நெஞ்சில் வலியினைத்தந்தது. ஜீவகுமாரனிடமிருந்து இவ்விதமானதொரு பதிவினை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
3. பால்ய காலத்து வவுனியா நினைவுகள்.....
என்னுடன் வவுனியா மகாவித்தியாலயத்தில் ஏழாம் வகுப்பு வரை படித்த சண்முகராஜா (சங்கீத வாத்தியார் பொன்.நடராஜா அவர்களின் புதல்வன்), 'மொடேர்ன் ஸ்டோர்ஸ்' திருநாவுக்கரசு சிற்றம்பலம் மற்றும் யாழ் இந்துக்கல்லூரியில் க.பொ.த (சாதாரணம்) என்னுடன் படித்த முரசுமொட்டை ராஜரத்தினம் போன்றவர்களையெல்லாம் இணையம் குறிப்பாக முகநூல் மீண்டும் சந்திக்க வைத்துள்ளது. இவர்களைப்போல் சிறிது காலத்துக்கு முன்னர் 'கட்டை விக்கி' என்று அக்காலத்தில் செல்லமாக அழைக்கப்பட்ட விக்கியுடனும் இணையத்தின் மூலம் மீண்டும் அறிமுகம் கிடைத்தது. முகநூலின் ஆரோக்கியமான வலிமையினை வெளிப்படுத்தும் அறிமுகங்களிவை. .
வவுனியா என்றதும் நகர் இப்பொழுது எப்படியிருக்கிறது என்றறிய மனம் அவாவுற்றது. Google Map மூலம் சிறிது நேரம் நகரைச்சுற்றிப்பார்த்தேன். நகரே முற்றாகவே மாறியிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒரு காலத்தில் காடு மண்டிக்கிடந்த இடங்களெல்லாம் இப்பொழுது முற்றாகவே கட்டடங்களாக மாறியிருந்தன. அக்காலகட்டத்தில் நாங்கள் அலைந்து திரிந்த வீதிகளையெல்லாம் மீண்டுமொருமுறை பார்த்தபொழுது சிந்தனை அக்காலகட்டத்துக்கே சென்றுவிட்டது. குளங்களும், காடும் மண்டி இயற்கையுடன் ஒன்றிக்கிடந்த அக்கால வவுனியாவில்
கூழாம் பழம், பாலைப்பழம், வீரைப்பழம் பறிப்பதற்காக அலைந்து திரிந்த வீதிகள் வழியே சிறிது நேரம் பயணித்தபொழுது நகரில் நீண்டிருந்த புதியதொரு வீதியையும் கண்டேன். ஹொரவப்பொத்தானை வீதியிலிருந்து, மடுக்கந்தை - ஈரப்பெரியகுள வீதி வரையில் நீண்டிருந்த அந்த வீதியின் பெயர் உமாமகேசுவரன் வீதி. வவுனியா என்றதும் என் நினைவுக்கு வருபவர்கள், வரும் விடயங்கள் வருமாறு:
1. குருமண்காடு பகுதியில் வாழ்ந்த எம் அயலவர்கள் பற்றிய நினைவுகள். அக்காலகட்டத்தில் காடு மண்டிக்கிடந்த குருமண்காட்டில் ஒற்றையடிப்பாதையை மட்டுமே கொண்டிருந்தது. இப்பொழுது மிகவும் அபிவிருத்தி அடைந்துவிட்ட பகுதி. அக்காலத்தில் அதற்கு வீதிப்பெயர் இல்லை. குருமண்காடு என்பார்கள். தற்போது அதற்கு கோவில் வீதி என்று பெயர்.
2. பட்டாணிச்சுப் புளியங்குளம். மாரியென்றால் வான் பாயும் ஒலியினை எங்கள் வீட்டிலிருந்து இரவுகளில் கேட்கலாம். வான் பாயும் சமயங்களில் வெங்கணாந்திப்பாம்பு (மலைப்பாம்பின்
சகோதர வகைப்பாம்பினம்) விரால் பிடிப்பதைப் பலர் பார்த்திருக்கின்றார்கள். இங்குதான் நான் நீந்தப்பழகியது.
3. விலாட் , கறுத்தக்கொழும்பான் என்று பல்வேறு வகைகளிலான மாம்பழங்கள்.
4 பல்வேறு வகைப்புள்ளினங்கள்: ஆலா, மாம்பழத்தி, கொண்டை விரிச்சான், குக்குறுபான், மீன்கொத்தி, நீர்க்காகம், பச்சைக்கிளி, சிட்டுக்குருவியினங்கள், தேன்சிட்டு,, காடை, கெளதாரி
5. நகரின் திரையரங்குகள்: றோயல், ஶ்ரீமுருகன் & நியூ இந்திரா டாக்கிஸ்
6. நகரின் முக்கியமான நாம் அலைந்து திரிந்த வீதிகள்.
7. நகரின் முக்கியமான வர்த்தக நிலையங்கள்.
8. 'பாண்சாலை' எனப்படும் பெளத்த வழிப்பாட்டிடங்கள்.
9. குருமண்காட்டிலிருந்த நெசவு சாலையும், அதனை அண்டிய பரந்த வயல்வெளியும்.
10. வவுனியா மகாவித்தியாலயம்.
11. மகாவித்தியாலயத்துக்கு முன்பாக கடலை, வீரைப்பழம், பாலைப்பழம் மற்றும் முதலிப்பழம் விற்கும் ஆச்சிமார்கள்.
12.சிறிது காலம் வவுனியா மகா வித்தியாலயத்தின் மைதானத்துடன் இணைந்திருந்த 'ட்றக்டர் யூனிற்' என்னும் காணியும், அங்கு சில காலம் கட்டப்பட்டிருந்த யானையும். அந்த யானைக்கு மாணவர்களாகிய நாம் எமது இடைவேளை நேரங்களில் சென்று எமக்கு வழங்கப்படும் 'பணிஸ்' போன்ற உணவு வகைகளைக்கொடுப்பது வழக்கம்.
13. ஶ்ரீ முருகன் புத்தகசாலை.
14. பல்வேறு வகை விருட்சங்கள்: பாலை, வீரை, முதிரை, கருங்காலி, போன்ற விருட்சங்கள்.
15. மூன்று முறிப்பில் அமைந்துள்ள விமானப்படைத்தளம். ஒருமுறை அங்கு வந்திறங்கிய விமானப்படையினரின் விமானமொன்றின் அருகில் சென்று அதன் சில்லுகளையெல்லாம் மாணவர்களாகிய நாம் தொட்டுப்பார்த்திருக்கின்றோம்.
16. வைரவர் புளியங்குளம்.
17. வவுனியா முன்னாள் எம்.பி. சிவசிதம்பரத்தின் வீடு. மாலை வேளைகளில் பாடசாலையிலிருந்து ஆசிரியையான அம்மாவுடன் வீடு திரும்புகையில் , வீட்டு வாசலில் நிற்கும் திருமதி சிவசிதம்பரத்துடன் அம்மா சிறிது நேரம் நின்று உரையாடுவது ஞாபகத்திலுள்ளது. 18. எம்.பி.யின் வீட்டுக்கருகில் இராமச்சந்திரன் டீச்சரின் வீடிருந்தது. அம்மாவின் நல்லதொரு சிநேகிதியாகவுமிருந்தார். அவரிடம் மொரிஸ் மைனர் காரொன்றிருந்தது. அவரது கணவர் இராமச்சந்திரன் ஒரு வழக்கறிஞர். பல காலைகளில் பாடசாலைக்குச் செல்லும் வேளைகளில் அவர் தனது காரில் எங்களையும் அழைத்துச் சென்றிருக்கின்றார். தனது மகனை இறம்பைக்குளக் கிறிஸ்தவக் கல்லூரியில் இறக்கிவிட்டு எல்லாரையும் மகாவித்தியாலயம் அழைத்துச்செல்வார். ஒருமுறை அவரது கணவரும், அம்மாவும், அவரும் அக்காரில் பயணித்துக் கொண்டிருந்தபொழுது, மன்னார் வீதியிலிருந்த புகையிரத இருப்புப்பாதையைக் கடக்கும் சமயம் (காமினி மகாவித்தியாலயத்துக்கருகில்) விபத்துக்குள்ளாகி தப்பியிருக்கின்றார்கள். திரு.இராமச்சந்திரனுக்கு மட்டும் பலத்த உட்காயங்கள். புகைவண்டி காரை இழுத்துத் தலைகீழாக எறிந்து விட்டது.
18. வவுனியா நகரசபையும் அதன் மைதானமும்.
19. தங்கராசா டீச்சர் வீடும் மாமரங்கள் நிறைந்திருந்த காணியும். மாணவர்களாகிய நாம் வீடு திரும்புகையில் மாங்காய் பிடுங்கும் வீடுகளிலொன்று.
20. மன்னார் வீதியும், குருமண்காடும் சந்திக்கும் பகுதியில் அமைந்திருந்த முஸ்லீம் மக்களுக்குச் சொந்தமான சிறிய மயானம். இரவுகளில் இங்கிருந்து நரிகள் குழுவாக
ஊளையிடுவதைக்கேட்கலாம். பல தடவைகள் நாலைந்து நரிகள் குழுவாக ஓடி மறைவதைப்பார்த்திருக்கின்றேன்.
21. வவுனியா மகாவித்தியாலயத்தின் மைதானத்தின் தெற்குப்புறமாகவிருந்த ஆலமரம். அதன் விழுதுகளைப் பிடித்துக்கொண்டு ஊஞ்சலாடுவது எமது வழக்கங்களிலொன்று.
22. எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப்பிள்ளை' ; நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் திரைப்படம் 'எங்க வீட்டுப் பிள்ளை'. நியூ இந்திரா திரையரங்கில் பார்த்தது. இந்தப்படத்தில் வரும் 'நான் ஆணையிட்டால்' மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படப்பாடல்களைக்கேட்கும்போதெல்லாம் என் நினைவுகளில் வவுனியாவில் கழிந்த என் பால்ய காலத்து நினைவுகள் சிறகடித்துப்பறக்கத்தொடங்கி விடுவது வழக்கம்.
23. குறவர்கள், குடுகுடுப்பைக்காரர்கள், பொய்க்கால் குதிரை ஆடியபடி காலைகளில் வரும் கலைஞர்கள், வீடு வீடாகத் தோசை, இடியப்பம் சுட்டுக்கொண்டு வந்து விற்கும் மூதாட்டி.
24. ஆறாம் வகுப்பில் தமிழ் படிப்பித்த யோககுமாரன் டீச்சர். அவரிடம் நளவெண்பா படித்தது பற்றி 'குருமண்காட்டு நினைவுகள்' என்னும் கட்டுரையில் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன்.
பால்ய காலத்து நண்பர்களின் முகநூல் சந்திப்பு மீண்டும் நெஞ்சின் ஆழத்தே புதைந்து கிடந்த அக்காலத்து வவுனியா நகரைப்பற்றிய நினைவுகளை மேலெழச்செய்து விட்டதன் விளைவு இந்தப் பதிவு. இன்னும் பலர், பல விடயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.