பிரபல கலை , இலக்கிய விமர்சகரும் கவிஞருமான இந்திரன் அவர்கள் தனது முகநூல் குறிப்பில் தனது 'மியூசியம்' என்னும் கவிதையினை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதையாகக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டத்தினால் தேர்வு செய்யப்பட்டு, தொகுத்தளிக்கப்பட்ட ''In Our Translated World" என்னும் ஆங்கிலமொழிபெயர்ப்பில் வெளியான கவிதைத்தொகுப்பில் சேர்த்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார். இது பற்றி இதுவரையில் பலரிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனால் பயன் எதுவுமில்லையென்றும் வருத்தப்பட்டிருக்கின்றார்.
இது பற்றிய குற்றச்சாட்டினை இப்பொழுதுதான் முதல் முதலாக நான் அறிகின்றேன். Ontario Trillium Foundation அமைப்பின் நிதி உதவியுடன் வெளியான நூலிது. இதில் இவ்விதம் தவறு ஏற்பட்டிருப்பது ஆச்சரியமளிக்கிறது. எவ்விதம் இவ்விதமானதொரு தவறு ஏற்பட்டிருக்கலாம் என்று சிந்தித்துப்பார்க்கிறேன். ஏன் இது பற்றி இதுவரையில் கவிஞர் ஜெயபாலன் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை என்றொரு கேள்வியும் எழுகிறது.
இந்த நூலின் மீள்பதிப்பு விகடன் பதிப்பாகவும் வெளியாகியிருப்பதாகவும் இந்திரன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார். இந்தப்பிரச்சினைக்குரிய சரியான தீர்வு இந்த ஆங்கில நூலினை மீண்டும் தவறினைத்திருத்தி, தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் வெளியிடுவதுதான். அத்துடன் கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் பகிரங்கமாகவும் தனது தவறுக்காகவும், கவிஞர் இந்திரனுக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்காகவும் வருத்தம் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
கனடாத் தமிழ் இலக்கியத்தோட்டம் வேண்டுமென்றே இத்தவறினைச்செய்திருப்பதாக நான் கருதவில்லை. Ontario Trillium Foundation நிதி உதவி பெற்று வெளியிட்டதால், குறிப்பிட்ட காலத்தினுள் நூல் வெளிவரவேண்டிய தேவை இருந்ததினால், இறுதி நேர அவசரத்தில் இழைத்த தவறாகவே கருதுகின்றேன். ஆனால் இது பற்றி இந்திரன் அவர்கள் பலரிடம் முறையிட்டுள்ளதாகத் ரிவித்திருக்கின்றார். யாருமே இது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை. அதுதான் ஆச்சரியமளிக்கிறது.
இந்திரன் குறிப்பிடும் அவரது மியூசியம் கவிதை கீழே:
மியூசியம்
- இந்திரன் -
பசியிலிருந்து தப்பிக்க
தூக்கம்
மிக உசிதம்.
மியூசியம்
படிகளில்
தூங்குவதென்றால்
இன்னும் உன்னதம்.
புராதனமானது.
பசியைக்காட்டிலும் வேறென்ன?
மஞ்சள் பூத்துப்போன
எலும்புக் கூடுகளோடும்
துருப்பிடித்த பீரங்கிகளோடும்
தூங்குகையில்
இறந்த காலத்தின் உள்புதைந்த
மரண அமைதியுடன்
இன்றைய உலகின்
உயித்துடிப்புள்ள ஒரு பகுதி
கலந்து விடுகிறது.
வெளியே
தளிர்கோதும் மைனாக்கள்
சதா ஒலியெழுப்புகின்றன.
உள்ளே
நூற்றாண்டுகளுக்கு முன்னரே
வெடிக்க மறந்துபோன துப்பாக்கிகளுக்கு
எண்ணெய் பூசிக்கொண்டிருக்கின்றார்கள்.
முதுமக்கள் தாழிகள்
நொறுங்கிய
தங்கள் வயிறுகளுக்குள்
எதிர்காலத்தை
ஏப்பம் விடுமோ என்கிற
அச்சம் ஏதுமின்றி
ஒளிக்கற்றைகளுடன்
ஓடிப்பிடித்து விளையாடும்
உதிர்ந்த சருகுகளை
ஊதிப்பறக்க விடுகிறது
காற்று.
குளிர்ந்த காற்று
உறங்குவதற்கா
விழிப்பதற்கா.
இந்திரன் அவர்களின் முகநூல் குறிப்பு: இலக்கிய உலகம் அரசியலை விஞ்சி விட்டது
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வெளியிட்ட உலகத் தமிழ்க் கவிதைகள் ”எமது மொழிபெயர் உலகினுள் – IN OUR TRANSLATED WORLD” நூலில் நான் எழுதிய “மியூசியம் “எனும் கவிதையை வ.ஐ. ச ஜெயபாலன் பெயரில் வெளியிட்டு இருக்கிறது.. அதன் முதற்பதிப்பு முற்றும் விற்றுத் தீர்ந்தது. இரண்டாம் பதிப்பு விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ளது.
முதற்பதிப்பின் நன்றிக் குறிப்பில் அ.முத்துலிங்கம் ” தொகுப்பில் கவிதைகளை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கிய 78 கவிஞர்களுக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். நான் எழுதிய கவிதையை என் உத்தரவில்லாமல் வ.ஐ.ச.ஜெயபாலன் பெயரில் வெளியிட இவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது.? INTELLECTUAL PROPERTY RIGHTS பற்றி அ. முத்துலிங்கத்துக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அ.மு நன்றிக் குறிப்பில் சொல்வது உண்மையாக இருக்குமானால் வ.ஐ. ச.ஜெயபாலன் நான் எழுதிய மியூசியம் கவிதையை அவர் பெயரில் வெளியிட ஒப்புதல் கொடுத்திருக்கிறரா? அப்படி யாரும் தன்னிடம் ஒப்புதல் பெறவில்லை என்று வ.ஐ.ச.ஜெயபாலன் சொல்கிறாரே. அப்படியானால் அந்த கடிதத்தை அ. முத்துலிங்கம் வெளியிடத் தயாரா?. இரண்டு கவிஞர்களை ஒரே நேரத்தில் அவமதிக்கும் இச்செயல் குறித்து கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் பதில் என்ன?
அ.முத்துலிங்கம் கவிதைத் தேர்வுக் குழுவின் என்.சுகுமாரன், அ.யேசுராசா, செல்வம் அருளானந்தம், உஷா மதிவாணன், திருமாவளவன், லதா, அனார் என்பவர்களின் கடின உழைப்புக்கும் நன்றி கூறியுள்ளார். இவர்கள் யாருமே இதை கவனிக்கவில்லையா? . மேலும் பொது ஆலோசனைகள் வழங்கியவராக அ. முத்துலிங்கத்தால் குறிப்பிடப்படும் சேரனிடம் சென்னை புத்தக வெளியீட்டில் நேரிடையாக நான் இதை சுட்டிக் காட்டியும் பலனில்லையே. இத்தொகுப்பு தயாரிப்பில் பங்கு கொள்ளாத கவிஞர் சுகிர்தராணி புத்தக வெளியீட்டு மேடையில் பேசிய ஒரே காரணத்துக்காக தெரிவித்த வருத்தம் கூட கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் தெரிவிக்கவில்லையே ? அது ஏன்? இந்த தவறை கூட்டத்தில் அறிய வந்த எந்த இலக்கிய ஆளுமையும் தங்களது இலக்கிய இதழ்களில் இது குறித்து ஒரு சிறு குறிப்பைக் கூட வெளியிடவில்லை.காரணம் தவறு செய்திருப்பது இயல் விருது வழங்கும் ஒரு குருபீடம். அதன் வெறுப்புக்கு யாரும் ஆளாகத் தயாரில்லை. தமிழ் எழுத்துலகம் இப்படியாக முதுகெலும்பில்லாத புழுவாக நெளிந்து கொண்டிருப்பது வெட்கக் கேடு இல்லையா நண்பர்களே?
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.