- எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் வெளியீடு பற்றிய எனது முகநூல் குறிப்பும், அது பற்றிய எழுத்தாளர் தேவிபாரதியின் கருத்தும் இங்கு ஒரு பதிவுக்காகப் பதிவு செய்யப்படுகிறது. -
பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்த தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவல் கடந்த மே 16, 2015 அன்று 'டொராண்டோ'வில் வெளியானது. தேவகாந்தன் திருப்தியும், மன நிறைவும் அடையக்கூடிய விதமாக நூல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக, நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.
அன்று தவிர்க்க முடியாத காரணங்களினால் சிறிது தாமதமாகவே செல்ல முடிந்தது. நான் சென்றுகொண்டிருந்தபொழுது எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் நாவலைப்பற்றிய தனது உரையினை ஆற்றிக்கொண்டிருந்தார். எழுத்தாளர் அருண்மொழிவர்மன் தனது உரையினை ஏற்கனவே ஆற்றியிருந்திருக்க வேண்டும். ஏனெனில் அதன்பின் அவர் அங்கு உரையாற்றவில்லை.
நிகழ்வினைத்தலைமை தாங்கி சிறப்புறச்செய்தவர் கலாநிதி மைதிலி தயாநிதி.
என்.கே.மகாலிங்கத்தைத்தொடர்ந்து அடிகளார் சந்திரகாந்தன் அவர்கள் தனது உரையினை ஆற்றினார். அவரது உரையினைத்தொடர்ந்து முனைவர் சேரன் நூலினை வெளியீட்டு வைக்க சட்டத்தரணி மனுவல் ஜேசுதாசன் முதற் பிரதியினை வாங்கினார். அவரைத்தொடர்ந்து சிறப்புப் பிரதிகளைக் குறிப்பிட்ட சிலர் வாங்கினார்கள்.
நிகழ்வில் 'தாய்வீடு' திலீப்குமார், 'தேடகம்' மயில், 'உரையாடல்' முரளிதரன், 'காலம்' செல்வம், ரதன், எழுத்தாளர் அகில், எழுத்தாளர் த.சிவபாலு, எழுத்தாளர் குரு. அரவிந்தன், எழுத்தாளர் ஶ்ரீரஞ்சனி விஜேந்திரா, முனைவர் பார்வதி கந்தசாமி, எழுத்தாளர் ராஜாஜி ராஜகோபாலன், எழுத்தாளர் மீராபாரதி, எழுத்தாளர் வரன் சந்தியாப்பிள்ளை, கவிஞர் திருமாவளவன், பாபு , முருகதாஸ், ஓவியர் ஜீவா (நந்தகுமார்) எனப் பலரைக் காண முடிந்தது.
இகுருவி புகைப்படப்பிடிப்பாளர், மீராபாரதி போன்றோர் 'டொராண்டோ' பிரபலங்களைப் படம் பிடிப்பதில் ஆர்வமாகவிருந்தார்கள்.
எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் நூலினை மகா நாவல் என்று குறிப்பிடுவது பற்றிக் குறிப்பிடுகையில் 'நாவல் மகாநாவலோ இல்லையோ ஆனால் இலங்கையிலிருந்து வெளிவந்த நாவல்களில் பெரிய நாவல்' என்னும் சாரப்படக் குறிப்பொன்றினையும் குறிப்பிட்டிருந்தார்.
நூலினை வெளியீட்டு வைத்த முனைவர் சேரனும் மகாநாவல் பற்றிக்குறிப்பிடுகையில் அறிஞர், கவியரசர் என்றெல்லாம் தாராளமாகவே சிறப்புப்பெயர்கள் பயன்படுத்துவதைக்குறிப்பிட்டார். மேலும் அவர் தொடர்கையில் எழுத்தாளர் தேவகாந்தன் முக்கியமான படைப்பாளி. இருந்தும் இதுவரை உரிய கவனத்தை அவர் பெறவில்லை. இந்த நாவல் வெளியீட்டின் மூலம் அந்த நிலை மாறும் என்னும் சாரப்படக் கருத்தினைத்தெரிவித்தார். என்னைப்பொறுத்தவரையில் ஈழத்து எழுத்தாளர்கள் அங்கீகாரத்துக்காக நாடும் தமிழகத்து ஆளுமைகளின் கவனத்தை உரிய முறையில் பெறாவிட்டாலும், முனைவர் நா.சுப்பிரமணியன் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னரே இந்நாவலுக்குரிய இடத்தைகண்டறிந்து, 'ஈழத்துத்தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் தனது நூலில் இதற்கொரு முக்கிய இடத்தினையும் வழங்கி, நாவல் பற்றிய விரிவான ஆய்வினையும் உள்ளடக்கியிருந்தார்; பாராட்டுதற்குரியது.
எழுத்தாளர் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' நாவலானது மகாநாவலென்று குறிப்பிடப்படுவதில் என்னைப்பொறுத்தவரையில் ஆட்சேபணையேதுமில்லை. மகா என்பதற்குத் தமிழில் பல அர்த்தங்களுள்ளன. மகோன்னதமான, என்னும் அர்த்தத்தைத்தருவது. இன்னுமொன்று பெரிய அளவில் என்னும் அர்த்தத்தைத்தருவது.
நாவலின் அளவினைப் பொறுத்த அளவில் தேவகாந்தனின் 'கனவுச்சிறை' தமிழில் வெளியான மகாநாவல்களிலொன்று. அதாவது பெரிய நாவல்களிலொன்று. இந்தப் பெரிய நாவல் மகோன்னதமான நாவலா ( மகா) என்பதைக்காலம்தான் முடிவு செய்யும்.
எழுத்தாளர் தேவிபாரதி: காலச்சுவடு பதிப்பகத்திற்காக இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியபோது அதன் பக்க அளவு எனக்கு மிரட்சியை ஏற்படுத்தியது. அதோடு பதிப்பு நோக்கில் வாசிக்க வேண்டிய கட்டாமும் வேறு. பணிச்சுமைகளும் எனது எழுத்துத் திட்டங்களும் ஓயாது அலைக்கழித்துக்கொண்டிருந்தன. கண்ணனின் யோசனைப்படி அதன் சில பகுதிகளை சுவடச்ர்லாந்துக்கும் எடுத்துச் சென்றேன். அங்குள்ள சூழல் படிக்க அனுமதிக்கவில்லை. சென்னை வாழ்க்கையைத் துறந்து ஊருக்கு வந்தவுடன் சோர்வுடன் அதைப் படிக்கத் தொடங்கினேன். முதல் நூறு பக்கங்களைக் கடந்தவுடன் நாவலைக் கீழே வைக்க முடியவில்லை. ஐந்து நாட்கள்கூட ஆகவில்லை. படித்து முடித்தவுடன் மனதில் இனம்புரியாத சுமை. விடுபட முடியாமல் மீண்டும் படித்தேன். ஜி.குப்புசாமி, கே.என்.செந்தில், அரவிந்தன், செல்லப்பா, அடவி முரளி எனப் பலரிடமும் எனது வாசிப்பனுவத்தைப் பகிர்ந்துகொண்டேன். தேவகாந்தனை உடனடியாகப் பார்க்க வேண்டுமெனத் தோன்றியது. அழைக்கச் சொல்லி அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். கண்ணனுக்கு மின்னுஞ்சல் அனுப்பினேன். பிறகு தொலைபேசியிலும் அழைத்துப் பேசினேன். தமிழின் ஆகச் சிறந்த நாவல்களுள் ஒன்றாக இருக்குமெனச்சொன்னேன்.. கனவுச் சிறை மகா நாவல்தான். அதன் உண்மையான அர்த்தத்தில். ஈழப் போர் குறித்தோ ஈழத்தமிழரின் வாழ்க்கை குறித்தோ எதுவுமே தெரியாத ஒரு வாசகருக்கும்கூட அது முக்கியமான நாவலாகவே படும். இலங்கைக்கு அப்பால் கடந்த ஒரு நூறற்ண்டாண்டு காலமாக அலைக்கழிக்கப்படும் மானுட வாழ்வைக் கரிசனையோடு அணுகும் இதற்கு இணையான தமிழ்ப் படைப்புக்கள் அதிகம் இல்லை என்பேன். ஓராண்டுக்கு முன்னால் முன்னுரை எழுதுவதற்காகப் படித்து முடித்தேன். அப்போது தோன்றியது இது. இப்போதும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்த நாவல் உடனடிக் கவனத்தைப் பெறாமல் போகலாம். ஆனால் எல்லா செவ்வியல் படைப்புக்களையும் போலவே காலத்தோடு இணைந்து பயணிக்கும் ஆற்றல்கொண்ட நாவல் என உறுதியாகச் சொல்வேன்.