- விரைவில் வெளிவரவிருக்கும் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' நூலுக்காக எழுதிய அறிமுகக்குறிப்புகள் இங்கு ஒரு பதிவுக்காகப் பிரசுரமாகின்றது. -
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து இன்று முற்றாக மெளனிக்கப்பட்டுவிட்டது. அகிம்சை வழியில் முன்னெடுக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டம், இலங்கையை ஆண்ட அரசுகளின் இனவாதக்கொள்கைகளாலும், காலத்துக்குக்காலம் தமிழ் மக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளினாலும், அரசுகளின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இனக்கலவரங்களினாலும் தனிநாட்டுபோராட்டமாக பரிணாமடைந்ததன் விளைவே ஈழ்த்தமிழர்களால் குறிப்பாக இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைக்கான ஆயுதப்போராட்டமாகும். இவ்விதமாகப்பரிணாமடைந்த விடுதலைப்போராட்டமானது மிகவும் குறுகிய காலத்தில் பல்வேறு குழுக்களாக வீங்கி வெடித்ததற்கு முக்கிய காரணி இந்திரா காந்தி தலைமையிலான பாரத அரசாகும். ஆரம்பத்தில் விடுதலைக்காக ஆயுதம் தூக்கியவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிளவுண்டு மோதிக்கொண்டதன் விளைவாக விடுதலைப்புலிகள் பலம்பொருந்திய ஆயுத அமைப்பாக உருவெடுத்தார்கள். இறுதியில் அவர்கள் ஆயுதங்களை மெளனிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் யுத்தத்தில் பலியானார்கள்; காணாமல் போனார்கள். சரண்டைந்த பின் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் பலர் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும் பலர் கைது செய்யப்ப்பட்டார்கள். பலர் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையாகியுள்ளார்கள். இவ்விதமானதொரு சூழலில் இன்று பல்வேறு அமைப்புகளையும் சேர்ந்தவர்கள் தமது கடந்த கால அனுபவங்களைப்பதிவு செய்து வருகின்றார்கள். இவ்வகையான பதிவுகள் அபுனைவுகளாக, புனைவுகளாக என வெவ்வேறு வடிவங்களில் வெளிவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது. இவர்கள் தாம் சேர்ந்திருந்த அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் இயங்கியவர்கள். சிலர் அடிமட்டப்போராளியாக இருந்தார்கள். சிலர் அவ்விதமிருந்து இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக மாறியவர்கள். சிலர் மாற்று இயக்கங்களினால் சிறைப்பிடிக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு தப்பியவர்கள்; இன்னும் சிலர் தாம் சார்ந்திருந்த அமைப்புகளில் நிலவிய உள் முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள். இவ்விதமான முன்னாள் போராளிகளின் சுய பரிசோதனைகள் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவற்றில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதை நிர்ணையிப்பதற்கு இவை போன்ற போராளிகளின் அனுபவங்களை உள்ளடக்கிய நூல்கள் பல வரவேண்டும். இன்றுதான் ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்து விட்டதே இனியும் எதற்கு இவை பற்றி ஆராய வேண்டிய தேவை என்று சிலர் குதர்க்கக்கேள்வி கேட்கலாம். ஆனால் இத்தகைய அனுபவப்பதிவேடுகளின் முக்கியத்துவம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவிய ஈழதமிழர்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் பற்றிய ஆவணப்படுத்தலில்தான் தங்கியுள்ளது. இவ்விதமான அனுபவப்பதிவேடுகள்தாம் ஆயுதம் தாங்கிப்போராடிய ஈழத்தமிழர்களின் விடுதலை அமைப்புகள் பற்றிய புரிதல்களை, அவற்றின் ஆக்கபூர்வமான , எதிர்மறையான செயற்பாடுகளை விளக்கி நிற்கும் வரலாற்றின் ஆவணப்பதிவுகள்.
சிலர் இவ்விதமான விடுதலை அமைப்புகளில் இணைந்து இயங்கிய காரணத்தினால் அவ்வமைப்புகளிலிருந்த மிகவும் சாதாரணபோராளிகளும் தம் அனுபவங்களைப்பதிவு செய்வது அவசியம்தானா? அதனால் ஏதும் பயனுண்டா? என்று கேள்விகணைகளைத்தொடுக்கலாம். அதற்கான் பதில் அமைப்பொன்றின் சாதாரண போராளியிலிருந்து மிகவும் முக்கியமான போராளி வரையில் இவ்விதமான அனுபவப்பதிவுகளை ஆவணப்படுத்துவது மிகவும் அவசியம். அதுமட்டுமல்ல அமைப்புகளில் இல்லாத பொதுமக்கள் கூட அக்காலகட்டத்தில் தாம் அறிந்த , தாம் புரிந்த அமைப்புகள் சார்ந்த செயற்பாடுகளைப் பதிவு செய்ய வேண்டும். அவ்விதமான பதிவுகளும் ஈழத்தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் பற்றிய விரிவான, ஆழமான புரிதல்களுக்கு அவசியமானவையென்பதென் கருத்து.
இந்த வகையில்தான் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' அனுபவப்பதிவுகளின் முக்கியத்துவமுமுள்ளது. இவர் தனது பதிவுகளை சரிநிகர் பத்திரிகையில் , ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்படுவதற்குப்பல வருடங்களின் முன்னரே புனைபெயரில் பதிவு செய்தவர். அந்த அனுபவப்பதிவுகள்தாம் இப்பொழுது நூலாக வெளிவருகின்றது.
இப்பதிவுகள் மூலம் எல்லாளனைப்பற்றிய பன்முகப்புரிதல்களை அடைய முடிகின்றது. அவர் கோப்பாயைச்சேர்ந்த ஒரு கிறிஸ்தவர். அவர் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச்சேர்ந்தவராக இருந்தபோதும் அவரது பெற்றோர் தம் குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர்களையே வைக்கும் பண்பு வாய்த்தவர்கள். அதனால் அவர்கள் எல்லாருக்கும் தமிழ்ப்பெயர்களே வைக்கப்படுகின்றன. எல்லாளனின் ஆரம்பக்கட்ட வாழ்வு ஆலயத்துடன் சார்ந்தே ஆரம்பிக்கின்றது. மதரீதியிலான அவரது செயற்பாடுகள் அவரை வாலிபர் சங்கம் , ஆலய நிர்வாகம் போன்றவற்றில் செயற்பட உதவுகின்றன.
எண்பதுகளின் ஆரம்பத்தில் யாழ் புனித பரியோவன் கல்லூரி நிர்வாகம் ஆண்டுக்கான கட்டணத்தை மாதா மாதம் கட்ட அனுமதித்து அவரை உயர்கல்வி கற்பதற்கு அனுமதித்தபோதும் அக்காலகட்டத்தில் அதிபராக இருந்தவர் அனுமதிக்கவில்லை. அதன் காரணமாக அவர் யாழ் மத்திய கல்லூரியில் தனது உயர் கல்வியினைக்கற்கத்தொடங்கினார். பின்னர் பட்டயக்கணக்காளர் பாடத்திட்டத்தைப்படிக்க எண்ணுகின்றார்.
இவ்விதம் அவரது மாணவப்பருவம் தொடருகின்றது. அதன் விளைவாக அவர் ஈழப்பொது மாணவர் மன்றம் அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார். 1983இல் தென்னிலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் இவர் செயற்பட்ட கோப்பாய்க்கிறிஸ்தவ ஆலயத்துக்குக்குருவாக வருகின்றார். ஏன் அவரைச் சிங்களக்கிறிஸ்தவர்களோ, குருமார்களோ, 'பிஷப்'போ பாதுகாக்கத்தவறினார்கள் என்ற கேள்வி எழுகின்றது. அவர்களது செயற்பாடுகள் அவருக்கு அதிருப்தியினைத்தருகின்றன. இதன் விளைவாக தென்னிலங்கையிலிருந்து சிங்கள 'பிஷப்' கோப்பாய் வரும்போது ஆலயத்தின் வாசலில் கறுப்புக்கொடி காட்டி வரவேற்கின்றார். அவ்விதம் சிங்களவர்கள் செயற்பட்டதற்கு இனவெறியே காரணமாக இவருக்குத்தென்படுகின்றது. இவ்விதமாகத்தொடரும் வாழ்வில் மதம் பற்றிய பல கேள்விகள் அவருக்கு எழுகின்றன.
அதே சமயம் அவரது தந்தையாரின் தமிழரசுக்கட்சியுடனான தொடர்பு காரணமாகவும் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியவற்றுடனான அவரது தொடர்புகள், பரமேஸ்வரன் போன்றோருடனான தொடர்புகள் , 1983 இனக்கலவரம், தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள், அரசின் அடக்குமுறைகள் எல்லாம் மெல்ல மெல்ல அவரைத் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தினுள் இழுத்து விடுகின்றன. அதன் விளைவாகத் தமீழீழ ஈழ விடுதலை இயக்கத்துடன் ரஞ்சித் என்னும் இயக்கப்பெயரில் போராளியாக இணைந்துகொள்கின்றார்.
இவ்விதமாகத்தனது சுயவரலாற்றை விபரிக்கும் எல்லாளன் தான் ஏன் தமீழீழ விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார், அவ்விதம் சேர்ந்தவருக்குத் தமிழகத்து முகாம்களில் ஏற்பட்ட அனுபவங்கள், அவரது இயக்கத்தின் உள்முரண்பாடுகள் ஏற்படுத்திய மனித உரிமை மீறல்கள் ஏமாற்றத்தினையே தருகின்றன. இவற்றின் விளைவாக, ஏன் தான் ஆர்வத்துடன் சேர்ந்து இயங்கிய அமைப்பிலிருந்து விலக வேண்டி ஏற்பட்டது, அவ்விதம் விலகியபோது தமிழகத்தில் அடைந்த அனுபவங்கள், அன்றாட வாழ்வினைக்கொண்டு நடாத்திட முடியாது அடைந்த சிரமங்கள், அச்சமயங்களில் ஏனைய இயக்கங்களிலிருந்து விலகி வந்த போராளிகளுடனான அனுபவங்கள் எனத்தன் போராளியாகச்செயற்பட்ட போராட்ட அனுபவங்களை எந்தவிதப்பாசாங்குகளுமற்றுத் தனது பார்வையில் பதிவு செய்திருக்கின்றார்.
இவ்விதமான இந்த அனுபவங்களின் பதிவுகள் முக்கியமானவை. அதே சமயம் ஒன்றினையும் நாம் முக்கியமாக மனதிலிருத்த வேண்டும். எல்லாளளின் அவர் சார்ந்த அமைப்பின் மீதான அனுபவங்களின் சுய விமர்சனப்பதிவுகளான இவை, அவரது அக்காலகட்டத்து வாழ்வு பற்றிய சுய விமர்சனப்பதிவுகளுமாகும் என்பதுதான் அது. ஆனால் இவ்விதமான போராளி ஒருவரின் பதிவுகள் இவற்றையெல்லாம் மீறி முக்கியத்துவம் பெறுவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துப் போராட்ட அனுபவங்களை, வரலாற்றினை ஆவணப்படுத்துவதில்தாம். ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தின் ஆயுதபோராட்ட வரலாற்றின் உண்மையான வரலாற்றினை எழுதுவதற்கு, அறிவதற்கு இது போன்ற பதிவுகளை அக்காலகட்டத்தில் இயங்கிய பல்வேறு அமைப்புகளிலிருந்து இயங்கியவர்கள் வெளிப்படுத்துதல் அவசியமானதும் முக்கியமானதுமாகும். அதே சமயம் ஒரு போராளி எவ்விதம் உருவாகுகின்றார்? அவர் உருவாகுவதற்கு எவ்விதம் அவர் வாழ்ந்த சமூக, அரசியல் மற்றும் குடும்பச்சூழல்கள் காரணிகளாக விளங்குகின்றன என்பதை எடுத்துக்காட்டும் அனுபவப்பதிவுகளாகவும் இவை விளங்குகின்றன. அந்த வகையில் முக்கியத்துவம் பெறும் எல்லாளனின் 'ஒரு தமிழீழப்போராளியின் நினைவுக்குறிப்புகள்' என்னுமிவ்வனுபவப்பதிவுகளின் தொகுப்பும் முக்கியமானதோர் ஆவணப்பதிவாகும்..