ஞானம் புலம்பெயர் இலக்கியத்தொகுப்பின் 'ஈழத்துப்புலம்பெயர் இலக்கியம்' என்னும் முன்னுரையில் ஞானம் இதழின் பிரதம ஆசிரியரான ஞானசேகரன் புலம்பெயர் தேசத்தின் முதலாவது நாவ;ல் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:
"புலம்பெயர் தேசத்திலிருந்து வெளிவந்த முதலாவது நாவல் என்ற வகையில் 1987இல் வெளிவந்த பார்த்திபனின் 'வித்தியாசப்படும் வித்தியாசங்கள்' என்ற நாவல் அமைகிறது."
ஆனால் பார்த்திபனின் நாவல் 4.1.1987ற்கு முன்னர் வெளிவந்திருந்தால் மட்டுமே மேற்படி கூற்று பொருந்தும். ஏனெனில் 4.1.1987 அன்று 'டொராண்டோ', கனடாவில் 'மண்ணின் குரல்' என்னும் என்ற எனது நாவலொன்று றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. மேற்படி 'மண்ணின் குரல்' நாவல் 1984/1985 காலகட்டத்தில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த 'புரட்சிப்பாதை' கையெழுத்துச் சஞ்சிகையில் தொடராக 9 அத்தியாயங்கள் வரையில் வெளிவந்து. பின்னர் இறுதி அத்தியாயமான பத்தாவது அத்தியாயம் சேர்க்கப்பட்டு, நூலாக வெளிவந்தது. நூலாக வெளிவந்தபொழுது 'புரட்சிப்பாதை'யில் வெளியான கட்டுரைகள் இரண்டு, கவிதைகள் 8 ஆகியவற்றினையும் உள்ளடக்கி, ஒரு சிறு தொகுப்பாக வெளிவந்தது. [1998இல் தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக மண்ணின் குரல் என்றொரு எனது நான்கு நாவல்களை உள்ளடக்கிய தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. அது வேறு ; இது வேறு. ஆனால் இந்த மண்ணின் குரல் நாவலானது அத்தொகுப்பிலும் உள்ளது.] மேற்படி 'மண்ணின் குரல்' நூலுக்கான அட்டைப்படத்தை கட்டடக்கலைஞர் பாலேந்திரா வரைந்திருந்தார். அதனையே இங்கு இடது பக்கத்தில் முதலாவதாகக் காண்கின்றீர்கள் (தமிழகத்தில் வெளியான மண்ணின் குரல் தொகுப்புக்கு இதே அட்டைப்படத்தையே அடிப்படையாகக்கொண்டு, வேறு ஓவியரொருவரால் வரையப்பட்ட ஓவியத்தைக் குமரன் பப்ளிஷர்ஸ் பயன்படுத்தியிருந்தது. அதனை இரண்டாவதாகக்காண்கின்றீர்கள்.)
இந்த வகையில் 'மண்ணின் குரல்' நாவலே புலம்பெயர் தேசத்திலிருந்து வெளியான முதலாவது நாவலாக இருக்க வேண்டும். மேலும் கனடாவின் முதலாவது நாவலும் இதுவாகத்தானிருக்கவேண்டும். எனவே புலம்பெயர் தேசத்திலிருந்ந்து வெளிவந்த புனைவுகள் பற்றி ஆராய விளைபவர்கள் இந்த உண்மையினைக் கவனத்திலெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தகவல் இங்கு பதிவு செய்யப்படுகிறது.
4.1.87இல் வெளியான 'மண்ணின் குரல்' நூல் உள்ளடக்கியவை:
நாவல்: மண்ணின் குரல்
கட்டுரைகள்:
1. பாரதி கண்ட சமுதாயமும், தமிழீழமும்
2. விடுதலைப்போரும் பெண்களும், பெண்கள் விடுதலையும், பாரதியும்.
கவிதைகள்:
1. மாற்றமும், ஏற்றமும்
2. அர்த்தமுண்டே...
3. விடிவிற்காய்...
4. புல்லின் கதை இது.
5.ஒரு காதலிக்கு....
6. மண்ணின் மைந்தர்கள்.
7.புதுமைப்பெண்
8.பொங்கட்டும்! பொங்கட்டும்!
குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாகத் தமிழகத்தில் வெளியான 'மண்ணின் குரல்' நூல் உள்ளடக்கியவை:
நாவல்கள்:
1. வன்னி மண் (தாயகம் சஞ்சிகையில் வெளியானது.)
2. அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (தாயகம் பத்திரிகையாக வெளியானபோது வெளியானது.)
3. கணங்களும், குணங்களும் (தாயகம் பத்திரிகையாக வெளியானபோது மணிவாணன் என்னும் புனைபெயரில் வெளியானது.)
4. மண்ணின் குரல் (புரட்சிபபாதை கையெழுத்துச்சஞ்சிகையில் 84/85 காலகட்டத்தில் வெளியானது.)