2000ஆம் ஆண்டில் மதிப்புக்குரிய எஸ்.பொ. அவர்கள் உலகப் பயணமொன்றினை ஆரம்பித்து டொராண்டோ வந்திருந்தார். வருவதற்கு முன்னர் என் முகவரிக்குக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். நான் அதுவரையில் எஸ்.பொ. அவர்களை நேரில் சந்தித்ததில்லை. அவரது படைப்புகள்வாயிலாகவே எனது அவருடனான அறிமுகமிருந்தது. அக்கடிதமானது அவரது பெருந்தன்மையினையும், இளம் எழுத்தாளர்களைச் சந்திக்க அவர் கொண்டிருந்த விருப்பினையும் புலப்படுத்தியது. இதனால் அவர் மீதான மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. இதற்கு முன்னர் அவரும், எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியும் இணைந்து வெளியிட்டிருந்த 'பனியும் பனையும்' தொகுப்பு நூலில் எனது சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' சிறுகதையினையும் சேர்த்திருந்தார். அவ்விதம் அவர் அந்தச்சிறுகதையினை அத்தொகுப்பில் உள்ளடக்கியிருந்த விடயம் எனக்கு அந்த நூல் வெளிவந்து பல வருடங்களுக்குப் பின்னரே தெரிய வந்தது. அச்சிறுகதை அத்தொகுப்பில் வெளிவந்ததற்குக் காரணகர்த்தாக்கள் எஸ்.பொ.வும், இந்திரா பார்த்தசாரதியுமே என்று நினைக்கின்றேன். அத்தொகுப்பு மூலம் எஸ்.பொ. புலம் பெயர் தமிழர்களின் இலக்கியத்துக்கு மிகப்பெரிய, ஆக்கபூர்வமான பங்களிப்பினை ஆற்றியிருக்கின்றாரென்பதே என் கருத்து.
"......நான் எதிர்வரும் ஆகஸ்டு மாதம் பிற்பகுதியிலே கனடா வரத்திட்டமிட்டுள்ளேன். பத்து நாள்கள் Torontoவில் தங்கலாம் என்பது திட்டம். அங்குவாழும் தமிழ் நேசர்களையும், இலக்கியப்படைப்பாளிகளையும் நேரிலே சந்தித்து அளவளாவதுதான் இந்தப் பயணத்தின் நோக்கம். இது தமிழ்ப்பயணம். இலக்கியப்பயணம். குழு நலன்களைப் பேசுவதற்கப்பாற்பட்ட முதிர்ச்சி அடைந்து விட்டேன். இந்நிலையில் படைப்பிலக்கியத்திற்குச் செழுமை சேர்க்கும் இளவல்கள் கூட்டத்தினைச் சந்திப்பதற்கே அதிகம் விரும்புகின்றேன். ....... இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றினைத்தக்கபடி ஆவணப்படுத்தும் பாரிய நூல் ஒன்றினையும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அதிலே குறிப்பிடும் தகவல்களைச் செப்பம் பார்ப்பதற்கும் இந்தப் பயணத்தினைப் பயன்படுத்துதல் நோக்கம்'.." என்று அக்கடிதத்தில் அவர் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதம் 13.07.2000இல் எழுதப்பட்டிருந்தது. இதற்கு முன்னரும் அவருக்கு நானொரு கடிதம் எழுதியிருந்தேன். அதற்குப் பதிலளித்து 19.8.1995 திகதியிட்ட கடிதமொன்றினை எனக்கு அவர் அனுப்பியிருந்தார். அந்த இரு கடிதங்களையும் பத்திரமாக இன்னும் வைத்திருக்கின்றேன். 13.07.2000 இல் எழுதப்பட்ட கடிதத்தினை அவரது ஞாபகார்த்தமாக முகநூல் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
பின்னர் அவர் டொராண்டோ வந்திருந்தபோது அவரை அவரது சகோதரர் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடியிருக்கின்றேன். அப்பொழுது அவர் தன் வாழ்க்கை அனுபவங்களை என்னுடன் மனந்திறந்து பகிர்ந்து கொண்டது இன்னும் நினைவில் பசுமையாகவுள்ளது. அச்சந்திப்பின்போது அவர் கனடாத்தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அடங்கிய தொகுதியொன்றினை வெளியிடும் ஆர்வத்தை வெளியிட்டார். என்னையுமொருவனாக அத்தொகுப்புக்காகப் படைப்புகளைச் சேகரிக்கும்படி கூறினார். நானும் 'பதிவுகள்' இணையத்தளத்தில் அது பற்றிய அறிவித்தலை வெளியிட்டேன். கணையாழி வெளியிட்ட 'கனடாச் சிறப்பிதழி'லும் அதுபற்றிய அறிவித்தலை வெளியிட்டிருந்தார். என்ன காரணத்தினாலோ அந்த முயற்சி இடையில் நின்று போனது. அதற்குச் சரியான காரணம் இதுவரையில் எனக்குத் தெரியாது.
எஸ்.பொ எழுதிய கடிதம் ஒரு பதிவுக்காகவும் , ஞாபகத்துக்காகவும்...