ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இலக்கியத் திறனாய்வில் தங்கள் பங்களிப்பை நல்கியவர்களில் கே.எஸ்.சிவகுமாரனுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அவரது கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் பிரசுரித்து வருகின்றன. அவரது பங்களிப்பு எத்தகையது என்பதைச் சிறிது ஆய்வுக்கண்ணோட்டத்தில் சிந்திப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம். இவரது பத்தி எழுத்துகள் அதிகமாக வெளிவருவதால் இவர் தன்னையொரு பத்தி எழுத்தாளராகவே அடிக்கடி கூறிக்கொள்கின்றார். தான் எழுதுவது இலக்கியத் திறனாய்வுகளல்ல வெறும் மதிப்பரைகள்தாம் என்று கூறிக்கொள்கின்றார். இவர் எழுத்துகள் வெறும் புத்தக மதிப்புரைகளா? அல்லது காத்திரமான இலக்கியத் திறனாய்வுகளா? இவ்வகையான எண்ணம் பலருக்கும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் அடிக்கடி தான் எழுதுவது வெறும் மதிப்பபுரைகள்தாம் என்று கூறிக்கொள்வதுமென்பதென் கருத்து. இது பற்றிக் கலாநிதி கார்த்திகேச சிவத்தம்பி அவர்களும் 'திறனாய்வுப்பார்வைகள்'' - பத்தி எழுத்துகளும் பல் திரட்டுகளும் 1 -(1966இல் வெளிவந்த நூல்) என்னும் கே.எஸ்.எஸ். அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்:
" சிவகுமாரன் தன்னை என்றும் ஒரு நியாயமான விமர்சகனாகக் கொள்வதில்லை. இவர் தனது எழுத்துகளை மதிப்புரை (Review) களாகவும் பத்தி எழுத்துகளாகவுமே (Columns) காண்கிறார். ஆழமான , நுண்ணிதான கருத்து நிலைத்தளம் நின்ற விமர்சனங்களிலிருந்து தனது எழுத்துகளைப் பிரித்துக் காட்டுவதற்காகவே இவர் இவ்வாறு கொள்கின்றார் என்பது தெரிகின்றது. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் திரு. சிவகுமாரன் தன்னைத்தானெ குறைத்து மதிப்பிடுகின்றார் என்றெ கருதுகிறேன்."
மேலுள்ள கூற்றில் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் 'சிவகுமாரன் தன்னை என்றும் ஒரு நியாயமான விமர்சகனாகக் கொள்வதில்லை' என்று கூறியதை என்னால் ஒருபோதுமே ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமான என்ற சொற்பதம் இங்கு தவறாகப் பாவிக்கப்பட்டுள்ளது. நியாயமான விமர்சகனாக அவர் இல்லையென்றால் நியாயமற்ற விமர்சகனா அவர் என்றொரு கேள்வியினை வாசகர்கள் மத்தியில் மேலுள்ள சொற்பதம் ஏற்படுத்துகின்றது. கே.எஸ்.எஸ் அவர்களின் எழுத்தில் குற்றம் காணும் சொற்பதமிது. உண்மையில் நியாயமான என்ற சொற்பதத்தை நீக்கிவிட்டு, தன்னை விமர்சகனாகக் கொள்வதில்லை என்று மட்டும் கூறுயிருந்திருக்கலாம் என்பதென் கருத்து. அவ்வாறு கூறியிருப்பின் திரு. கே.எஸ்.எஸ். அவர்களின் எழுத்தின் தரம் பற்றி , மேலுள்ளவாறு, குழப்பம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்காது. உண்மையில் கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் திரு.கே.எஸ்.எஸ் அவர்கள் தன்னை விமர்சகர்களிலொருவராகக் கருதவில்லை என்றுதான் கூற நினைத்திருக்கின்றார். ஆனால் தேவையற்றுப் பாவித்த நியாயமான என்ற சொற்பதம் கூற வந்த பொருளின் அர்த்ததைத் திசை திருப்பி விட்டதென்றுதான் நான் எண்ணுகின்றேன்.
'திறனாய்வுப் பார்வைகள்' என்னும் நூலின் மீள்பதிப்பு தமிழகத்தில் மணிமேகலை பிரசுரமாக 'ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை.. ' என்னும் பெயரில் 2008இல் வெளிவந்திருக்கின்றது. திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் தன் எழுத்துகளை வெறும் மதிப்புரைகள் என்று கூறிக்கொள்கின்றார். ஆனால் நூலின தலைப்பு 'திறனாய்வுப் பார்வைகள்' என்று முதற் பதிப்பிலும், 'ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை..' என்று மணிமேகலைப் பிரசுரப் பதிப்பிலும் என்றிருக்கின்றது. அப்படியென்றால் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் தன்னைத் திறனாய்வாளராகக் கருதுகின்றாரா? தனது கட்டுரைகளைத் திறனாய்வாளர் ஒருவர் எழுதிய மதிப்புரைகளாகக் கருதுகின்றாரா?
இவ்விதமான எண்ணங்களை மேலின் நூலின் தலைப்பு வாசிப்பவர்களிடத்தில் ஏற்படுத்துகின்றது. ஆனால் நூலிலுள்ள 'திறனாய்வு சில அடிப்படை அம்சங்கள்' என்னும் கட்டுரையில், ஓரிடத்தில், திரு .கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:
"மு.தளையசிங்கமும், இக்கட்டுரையாளரும் தாங்கள் விமர்சகர்கள் அல்லர் என்று பகிரங்கமாகவே குறிப்பிட்டு உள்ளனர். திறனாய்வு என்றால் என்ன? என்பதை நன்கு அறிந்து வைத்ததனாலேயே அவர்கள் தாம் விமர்சகர்கள் அல்லர் என்று கூறினர்" (பக்கம் 237)
தான் திறனாய்வாளரல்லரென்றால் எதற்காக நூலின் தலைப்பாக 'ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை' என்று வைத்தார். உண்மையில் இவர் வைத்தாரா? அல்லது பதிப்பத்தார் வைத்தார்களா? ஆனால், என்னைப் பொறுத்தவரையில் மேற்படி நூலின் பெயர் சரியான ,நியாயமான பெயர் என்றே கருதுகின்றேன். அதற்குரிய என் காரணங்களைக் கூறுவதற்கு முன்னர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் எழுத்துகள் வெறும் மதிப்புரைகளா? அல்லது திறனாய்வுகளா/ என்பதை அவரது படைப்புகள் சிலவற்றின் மூலம் பார்ப்பது நல்லதென்று கருதுகின்றேன். அதற்கு மேற்படி நூல் மிகவும் உரிய நூலென்பதென் கருத்து. தேர்தல் கணிப்புகளில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாக்காளர்களிடம் கருத்துகளைக் கேட்டு முடிவுகளை எடுப்பார்கள். அதுபோல் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்களின் மேற்படி 'ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை' என்னும் நூலை, ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப , உபயோகப்படுத்துவதும் சாலச்சிறந்ததுதான். ஆனால் 'ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை' என்று பெயர் வைப்பதற்குப் பதில் 'திறனாய்வாளரொருவரின் இலக்கியப் பார்வை' என்று வைத்திருந்தால் இன்னும் இலக்கணச் சுத்தமாகவிருந்திருக்குமென்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.
மேற்படி நூலிலுள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது அவற்றைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம் என்று படுகிறது:
1. ஒரு விடயத்தைப் பற்றிய ஆழமான எழுத்து. உதாரணமாக 'விபுலானந்தர் தமிழ் திறனாய்வு முன்னோடி' என்னும் கட்டுரை. இக்கட்டுரையில் விபுலாநந்தர் ஏன் தமிழ் திறனாய்வு முன்னோடி என்பதை , விபுலாநந்தரின் எழுத்துகளோடு, நிறுவியிருப்பார் திரு.கே.எஸ்.சிவகுமாரன். இக்கட்டுரை 33 பக்கங்கள் வரை நீண்டதொரு , நூலிலுள்ள கட்டுரைகளில் நீண்ட கட்டுரை. இக்கட்டுரையில் விபுலாநந்தரின் இலக்கியக் கட்டுரைகளினூடு அவர் ஏன் திறனாய்வு முன்னோடி என்பதை ஆராய்ந்திருக்கும் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் ' ஒப்பிடுதலென்பது திறனாய்வாளரொருவரின் தேடல் முயற்சிகளிலொன்று என்பதைச்சுட்டிக்காட்டுவார். விபுலாநந்தரும் வில்லிபாரதத்தில் வரும் இலக்கியக் காட்சிகளைக் கிரேக்கர்களின் ஹோமரின் படைப்புகளுடன் ஒப்பிடுவதைக் குறிப்பிட்டு, இவ்விதம் பார்க்கும் திறனாய்வு முன்னோடித்தன்மையை விபுலாநந்தரிடம் தான் பார்ப்பதாகக்' கூறியிருப்பார். மேலும் ' கலாநிதி க.கைலாசபதி அவர்கள் பிற்காலத்தில் தமிழ் சங்க காலப்படைப்புகளைக் கிரேக்க வீர காவியங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெறுவதற்குத் தூண்டுகோலாக விபுலாநந்தரின் மேற்குறிப்பிட்ட ஒப்பீட்டுப் பாங்கு அமைந்திருந்ததோ! ' என்றும் வியப்ப்பார். மேற்படி கட்டுரையில் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் விபுலாநந்தரின் கலை, இலக்கியக் கட்டுரைகளினூடு விபுலாநந்தர் இலக்கியத் திறனாய்வாளர் மட்டுமல்லர் கலை, இலக்கியத் திறனாய்வாளரும் கூட என்று விபுலாநந்தரின் 'வண்ணமும் வடிவமும்' ஆய்வுக் கட்டுரையினை உதாரணம் காட்டிக் கூறியிருப்பார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினரால் , 1991இல் ஏற்பாடு செய்யப்பட்ட சுவாமி விபுலாநந்த அடிகள் நூற்றாண்டு விழாவில் நினைவுரையாக வாசிக்கப்பட்ட இக்கட்டுரையினை மேலோட்டமானதொரு கட்டுரையாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது. திரு.கே.எஸ்.சிவகுமாரனின் இக்கட்டுரை விபுலாநந்த அடிகளாரை இலக்கியத் திறனாய்வு முன்னோடியாக நிறுவும் அதே சமயம் திரு.கே.எஸ்.சிவகுமாரனையும் இலக்கியத்திறனாய்வாளர்களிலொருவராக நிலை நிறுத்துகிறது.
2. எழுத்தாளரொருவரின் முக்கியமான படைப்பு பற்றி அல்லது தொகுப்பொன்றின் முக்கியமான படைப்பு பற்றி எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள். அவற்றுக்கு உதாரணங்களாக மேற்படி தொகுப்பிலுள்ள 'மெளனி அழியாச்சுடர்', 'வ.அ.இராசரெத்தினம் தோணி' ஆகிய கட்டுரைகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேற்படி கட்டுரைகளில் மெளனியின் அழியாச்சுடர் மற்றும் வ.அ.இராசரெத்தினத்தின் தோணி பற்றி விரிவாகவே ஆராய்ந்திருப்பார் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள். 'அழியாச்சுடர்' கதையில் வரும் பாத்திரங்களின் கூற்றுகள், ஆசிரியரின் கூற்றுகள், மற்றும் கதையின் அடிநாதம் (Theme))' ஆகியவற்றின் அடிப்படையில் மேற்படி கதையினை நுணுகி ஆராய்ந்திருப்பார் திரு.கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள். அவரது மேனாட்டு இலக்கியப் பரிச்சயம் காரணமாக அவரால் ;அழியாச்சுடர்' சிறுகதையினை மேனாட்டு இலக்கியப் போக்குகளுடன் ஒப்பிட்டு முடிவுகளை எடுக்க, மெளனியைக் காஃப்காவுடன் ஒப்பிட்டிட முடிகிறது. " ..அவர் கதை சொல்லும்போது யதார்த்தபூர்வமாகத்தான் சொல்கிறார். ஆனால், அவர் கதாபாத்திரங்கள்தான் கற்பனா - ஏக்கம் (ரொமாண்டிக் நொஸ்டால்ஜியா), சூனியவாதம் (நிஹிலிஸம்), இருப்புவாதம் (எக்ஸிஸ்டென்ஷலிஸம்), மனப்பிராந்தி (ஹலுஸினேஷன்) போன்ற போக்குகளை உடையவர்களாகக் ணப்படுகின்றார்கள்.", " .. மேற்கண்ட் பந்தியின் கடைசி வரிகள் எனக்கு 'எல்ஸுஸ்டென்ஷலிஸ' எழுத்தாளர்களான ஜ்ஷான் போல் சாத்ரேயையும் , அல்பேர் கெமுவையுமே நினைவுக்குக் கொண்டு வருகின்றன" ஆகிய வரிகள் கே.எஸ்.சிவகுமாரனின் ஒப்பிட்டுத் திறனைப் (மேனாட்டு இலக்கியப் படைப்புகள், படைப்பாளிகளினூடு) புலப்படுத்துகின்றன.
3. எழுத்தாளர் ஒருவரின் நாவல்களைப் பற்றிய தனிக்கட்டுரைகள். இளங்கீரனின் 'தென்றலும், புயலும்', தெணியானின் 'மரக்கொக்கு, சுந்தர ராமசாமியின் புளிய மரத்தின் கதை போன்ற கட்டுரைகள் இவ்வகையின.
4. சிறுகதைத் தொகுப்புகள் பற்றிய அறிமுகக் கட்டுரைகள். பெரும்பாலும் சிறியதொரு அறிமுகத்துடன், தொகுப்பின் சிறுகதைகளைச் சுருக்கமாக விளக்கும் மேலோட்டமான மதிப்புரைகள்.
5. இலக்கியத்திறனாய்வு பற்றிய, இலக்கியத்திறனாய்வு பற்றி வெளிவந்த நூல்கள் பற்றிய கட்டுரைகள்.
இக்கட்டுரைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வாசித்தபொழுது எனக்குத் தோன்றிய எண்ணங்களில் முதன்மையானது நூலின் முன்னுரையில் கலாநிதி. கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் கூறிய பின்வரும் கூற்றுதான் : "ஆழமான விமர்சனக் கண்ணோட்டம் ஒன்று இல்லாது மதிப்புரைகளையும், இலக்கியப் பத்திகளையும் எழுத முடியாது......" , ஆம்! உண்மைதான். திரு.கே.எஸ்.சிவகுமாரன் மேலோட்டமான அறிமுகக் கட்டுரைகள் பலவற்றை எழுதியிருந்தாலும், ஆய்வுச் சிறப்புள்ள கலை, இலக்கியக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். அவரது மேனாட்டு மற்றும் கீழ்நாட்டுத் தத்துவங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றிலுள்ள புலமையானது அவரது எழுத்துக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேற்படி நூலினை 'ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை...' என்று குறிப்பிடுவதிலும், கே.எஸ்.சிவகுமாரனைத் திறனாய்வாளர் என்று குறிப்பிடுவதிலும் எனக்குப் பூரண சம்மதமே!
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.