அண்மையில் த.தர்மகுலசிங்கத்தின் மித்ர வெளியீடாக வெளிவந்த 'தேடல்: சில உண்மைகள்' என்னும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய , குறிப்பாக மூத்த எழுத்தாளர் திரு.எஸ்.பொ.வின் பங்களிப்பு பற்றிய நூலினைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இந்த நூலுக்கு முக்கியமானதொரு சிறப்பு உண்டு. எஸ்.பொ. பற்றிய மறைக்கப்பட்ட பல உண்மைகள் அவருடனான நூலாசிரியரின் நேர்காணலினோடு வெளிப்படுவது...தான் தானந்தச் சிறப்பு. எஸ்.பொ. அவர்களின் உரையினை அவர் பல வருடங்களுக்கு முன்னர் கனடா வந்திருந்த சமயம் வந்திருந்தபோது கேட்டிருக்கின்றேன். நூலாசிரியர் பல இடங்களில் குறிப்பிடுவதுபோல் எஸ்.பொ. அவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர். ஆசிரியராக இருந்தபடியால் அவரது உரையும் மாணாக்கர்களுக்கு பாடங்கள் எடுப்பதுபோல் தர்க்கச்சிறப்பு மிக்கதாக இருந்ததாக அச்சமயம் உணர்ந்தேன். அதன்பின்னர் அவரை அவரது சகோதரரின் இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் உரையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. தன் வாழ்க்கை பற்றி, திருமணம் பற்றி, ஈழத்து மற்றும் புலம்பெயர் தமிழ் இலக்கியம் பற்றியெல்லாம் மனந்திறந்து உரையாடினார். மறக்க முடியாத சந்திப்பு.
தர்மகுலசிங்கத்தின் இந்த நூல் ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது. எஸ்.பொ.வை முற்போக்கு முகாமுக்கு எதிரான நற்போக்கு முகாமுக்குரியவராகப் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அவர் ஆரம்பம் முதலே ஒரு கம்யூனிஸ்ட்டாகச் செயற்பட்டவர் என்பதை எத்தனைபேர் அறிந்திருப்பார்கள்? கம்யூனிஸ்டாக அவர் செயற்பட்டதாலேயே அவர் புனித சம்பத்திரிசியார் பாடசாலை மாணவனாக இருந்தபொழுது வெளியேற்றப்பட்டிருக்கின்றார். பின்னர் கலாநிதி கைலாசபதி அவர்கள் தினகரன் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிய சமயம் இவருக்குக் கிடைக்கவிருந்த ஆசிரியர் பொறுப்பு இவர் கம்யூனிஸ்டாக இருந்தபோது 'தேசாபிமானி' போன்ற பத்திரிகைகளில் எழுதிய படைப்புகளின் காரணமாகக் கிடைக்காமல்போயிருக்கின்றது. ஆனால் அவ்விதம் கிடைக்காமல் போனதற்குத் தூண்டுதலாக இருந்தவர்களிலொருவராக கம்யூனிஸ்டாக விளங்கிய வி.பொன்னம்பலம் அவர்களையும் அவர் குறிப்பிட்டிருப்பதையும் இந்த நூல் பதிவு செய்கின்றது.
ஈழத்துத் தமிழ் நாடக உலகில் எஸ்.பொ.வின் பங்களிப்புகளையும் நூலாசிரியர் எஸ்.பொ.வுடனான தனது நேர்காணலினூடு வெளிப்படுத்துகின்றார். கம்யூனிஸ்டாக விளங்கியவர் எவ்விதம் , எப்போது, ஏன் தனது போக்கினை மாற்றிக்கொண்டார் என்பதையெல்லாம் தனது உரையாடலில் தெரிவித்திருக்கின்றார். இந்நூலில் எஸ்.பொ. அவர்கள் கூறும் பல விடயங்கள் பல கோணங்களிலிருந்தும் வாதப்பிரதிவாதங்களை நிச்சயம் கிளப்பப்போகின்றன.
இந்த நூலின் முக்கியத்துவம் எஸ்.பொ. அவர்களின் மார்க்சிய ஈடுபாட்டினை, முற்போக்கு முகாமுடனான அவரது வெளியேற்றம் வரையிலான பங்களிப்பினை வெளிப்படுத்துவதில்தான் தங்கியுள்ளது. கலாநிதி கைலாசபதி தினகரன் ஆசிரியராக விளங்கிய சமயம் எஸ்.பொ. அவர்களின் படைப்புகளை வாங்கித் தினகரனில் பிரசுரித்திருக்கின்றார். 'நான் விரும்பும் நாவலாசிரியர்' பகுதிக்காக எழுதச் சொல்லிப் பிரசுரித்தது ஆகியவற்றை நூல் பதிவு செய்கின்றது.
நூல் இன்னுமொன்றினையும் பதிவு செய்கின்றது. அது: கலாநிதி கைலாசபதியும், எஸ்.பொ. அவர்களும் தினகரன் ஆசிரியர் தேர்வுக்காக ஒரே சமயத்தில் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் கைலாசபதி அவர்களே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்நூலுக்கு திரு. வெங்கட்சாமிநாதன் அவர்கள் நீண்டதொரு முன்னுரையினை எழுதியிருக்கின்றார்.