பதிவுகள் இணைய இதழில் வெளியாகியிருக்கும் மதிப்பிற்குரிய திரு. வெ.சா. அவர்களின் க.நா.சுவும் நானும் கட்டுரையின் இறுதிப்பகுதியில் கலாநிதி கைலாசபதி பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படித்தபொழுது சிறிது திகைப்பும், வருத்தமும் ஏற்பட்டன. அதிலவர் கலாநிதி கைலாசபதி பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
1. "ஆனால் இலங்கையில் பெரிய சட்டாம்பிள்ளையாக வலம் வந்த ஒரு பேராசிரியர், பர்மிங்ஹாமில் ஜார்ஜ் தாம்ப்சனின் கீழ் ஆராய்ச்சி செய்தவர், இலங்கையில் தம்மை அண்டியவர்களுக்கெல்லாம் இலக்கிய தீக்ஷை அளித்து தம் பக்தர் கூட்டத்தை பெருக்கிக் கொண்டவர், ஏன் க.நா.சு.வைக் கண்டு எரிச்சல் பட வேண்டும்?"
2. "இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் முற்போக்குகளுக்கு குருவாகவும் ஒரு மாமேதையாகவும் உலா வந்த இந்த கலாநிதி எத்தனை கடைத்தரமான மனிதர், எத்தனை பொய்யான திரிபு வாதங்களை முன் வைப்பவர் என்பதற்கு ஒரு சில அவரது எழுத்திலிருந்து சில மேற்கோள்கள். இன்னமும் இவர் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் முற்போக்குகளால் பூஜிக்கப் படுபவர். ”என்னதான் இலக்கியக் கொள்கைகளை அள்ளி வீசினாலும், க.நா.சுவிடம் பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் என்ற பாகு பாட்டுணர்ச்சி ஆழமாகப் பதிந்திருக்கிறது. அதனை அம்மணமாகக் காட்டிக்கொள்ளாத வகையில் திறனாய்வு முலாம் பூசி மெருகூட்டும் திறனும் அவருக்கு நிரம்ப உண்டு. அடிப்படையில் இது ஒரு வர்க்கப் பிரசினையேயாகும். எனினும் தமிழ் நாட்டு அரங்கின் பரிபாஷையில் கூறுவதானால், நிலை இழந்த பார்ப்பனர்களுக்கு நிலைபேறு தேடும் இலக்கியக் கைங்கர்யத்தை செய்து வந்திருப்பவர் க.நா.சு”.
3. ”ந. முத்துசாமியின் கதைகளில் மூத்திர வாடை சற்று அதிகமாகவே தெரிகிறது என்று அடிக்கடி என்னிடம் சொல்லி ஒரு புதுமை எழுத்தாளர் தன் புதுமணத்தையும் பரிசுத்தத்தையும் காப்பாற்றிக்கொள்ள முயல்கிறார் என்று காணும்பொழுது எனக்குச் சிரிப்பு வருகிறது. இந்தப் புது எழுத்தாளர் எழுத்தில் விபசாரம் சற்று அதிகம். மூத்திர நாற்றமானால் என்ன, விபசார நாற்றமானால் என்ன, இரண்டையும் சகித்துக்கொள்ளத் தானே சமுதாயம் இருக்கிறது? இந்த இரண்டு நாற்றங்களுக்கும் அப்பால் இலக்கியம் எப்படி அமைந்திருக்கிறது என்று காண்பது தான் எனது நோக்கமாக நான் எண்ணுகிறேன்”. இதை மேற்கோள் காட்டி, பர்மிங்ஹாமில் கலாநிதி பட்டம் வாங்கிய, ஜார்ஜ் தாம்ப்ஸனின் கீழ் ஆராய்ச்சி செய்த, தமிழக, இலங்கை முற்போக்குகளுக்கு பிதாமகரான கலாநிதி எம்.ஏ. பி எச் டி. இதற்கு பாஷ்யம் தருகிறார். ”இவ்வாறு தனது எழுத்தில் மணக்கும் சிறுநீர் வாடைக்கு, க.நா.சு.விடமிருந்து இலக்கிய அங்கீகாரமும் பாராட்டும் பெற்றுள்ள ந. முத்துசாமி”
இப்படி ஒருவர் மூளை வேளை செய்யுமானால், இப்படி ஒருவர் காழ்ப்பும் பகையும் கொண்டு சேற்றை வாரி இரைப்பவரானால், அத்தகைய இழி பிறவியை என்ன சொல்ல? இத்தகைய குணம் கொண்ட ஒருவரை இலக்கிய உலகில் நடமாடும் தகுதியை விடுங்கள், ஒரு சாதாரண மனிதராகக் கூட நம் சமூகத்தில் வாழும் தகுதி கூட உண்டா என்பது கேள்விக்குரிய விஷயம். -
இவற்றை வாசிக்குமொருவர் ,பேராசிரியர் கைலாசபதி பற்றிய முன் அறிமுகம் ஏதுமற்ற ஒருவர், பேராசிரியர் கைலாசபதி பார்ப்பனர்களின் மேல் மிகுந்த துவேசம் கொண்டவரென்றும், க.நா.சு மீது எந்தவித மதிப்புமற்றவரென்றும் மதிப்பிடக்கூடும். ஆனால் பேராசிரியர் கைலாசபதியின் படைப்புகள் பலவற்றைப் படிக்குமொருவர் உண்மையில் இதற்கு மாறானதொரு முடிவுக்கே வருவார். சில சமயங்களில் தமது கோட்பாட்டுக்கமைய தர்க்கம் செய்யும்பொழுது சிறிது எள்ளல் தொனியில் எதிரணியினரைத் தர்க்கம் செய்பவர் சாடுவது வழக்கம்தான். அந்த வகையில் பேராசிரியர் கைலாசபதி சிறிது கடுமையான தொனியில் தனது வாதங்களை வைத்திருக்கக்கூடும். ஆனால் அதற்காக அவர் பார்ப்பனர்கள் மேல் மிகுந்த துவேசம் கொண்டவரென்றும், அதன் காரணமாகத்தான் அவர் க.நா.சு.வை பார்ப்பனச் சார்பு மிக்கவராக அடையாளம் கொள்கிறாரென்றும் கருதலாமா? அவர் உண்மையில் தனது பல்வேறுபட்ட திறனாய்வுக் கட்டுரைகளில் வ.வே.சு. ஐயர், ராஜமைய்யர், பாரதியார் போன்றவர்களின் படைப்புகளை எந்தவிதத்தயக்கமுமின்றி விதந்துரைத்திருக்கின்றார். அது மட்டுமன்றி க.நா.சு.வின் புலமையில் மிகுந்த மதிப்பும் வைத்திருக்கின்றார். க.நா.சு.வை குறை/நிறைகளுடன்தாம் அவர் அணுகியிருக்கின்றாரென்பதைத்தான் அவரது படைப்புகள் எமக்குத் தெரிவிக்கின்றன. இல்லாவிட்டால் தனது முக்கியமான திறனாய்வு நூல்களில், கட்டுரைகளில் க.நா.சு.வின் கருத்துகளை மேற்கோள் காட்டித் தர்க்கித்திருப்பாரா? க.நா.சுவே அக்கருத்துகளின் மூலகர்த்தா என்பதைக் குறிப்பிட்டிருப்பாரா? அவரது திறனாய்வு நூல்கள் சிலவற்றில் பேராசிரியர் க.கைலாசபதி க.நா.சு. பற்றி, பாரதியாய், வ.வே.சு.ஐயர், ராஜமைய்யர் போன்றோரின் படைப்புகள பற்றிக் குறிப்பிட்டுள்ள கருத்துகள் சிலவற்றை இத்தருணத்தில் நினைவுகூர்வது பயனமிக்கது. மதிப்பிற்குரிய திரு. வெ.சா. குறிப்பிடுவதுபோல் பேராசிரியர் கைலாசபதி க.நா.சு.வைக் கண்டு எரிச்சல் பட்டவரா? அவ்விதம் எரிச்சல் படுபவராகவிருந்திருந்தால் எதற்காக அவர் தனது திறனாய்வு நூல்களில் க.நா.சு.வின் கருத்துகள் பலவற்றை மேற்கோள் காட்டியிருக்கின்றார்? ஒருவர் அவர் எரிச்சல்படும் ஒருவரின் கருத்துகளைப் பெருமையுடன், நேர்மையுடன் கூறுவதென்றால் ஆச்சரியம்தான்.
1. '... வ.வே.சு. ஐயர் முதற்றர விமர்சகராக மாத்திரமின்றி,ஒப்பிலக்கிய ஆய்வு முன்னோடியாகவும் திகழ்வதன் காரணத்தை உணரலாம் [ 'ஒப்பியல் இலக்கியம்' ; பக்கம் 30].
2. மகாகவி பாரதியின் கண்ணன் பாட்டு இரண்டாம் பதிப்பில் வ.வே.சு. ஐயர் எழுதிய முன்னுரை பற்றிக் குறிப்பிடும்போது பேராசிரியர் கைலாசபதி 'மேனாட்டிலக்கியங்களை மட்டுமின்றி, இந்திய மொழிகள் பிறவற்றிலுள்ள இலக்கியங்களையும் பொருத்தமான சந்தர்ப்பத்தில் ஓப்புநோக்கித் தாம் ஆராயும் நூலுக்கு விளக்கம் கூறினார் ஐயர். [ஒப்பியல் இலக்கியம்; பக்கம் 30/31].
3. 'அந்த வகையில் , அப்பணியை வெவ்வேறு அளவிலே தொடர்ந்து செய்து வருபவரான அ.சீனிவாசராகவன், ரா.ஸ்ரீ.தேசிகன், பி.ஸ்ரீ, டி.கே.சி, க.நா.சுப்ரமண்யன், புரசு பாலகிருஷ்ணன், ரகுநாதன், எஸ்.இராமகிருஷ்ணன். சி.சு.செல்லப்பா முதலியோரெல்லாம் ஐயர் மரபில் வந்தவர்களே. சுருங்கக்கூறின் நவீன ஆங்கில விமர்சன முறையும் உத்திகளும் ஐயர் தமிழுக்கு அளித்த அருங்கொடைகள் என்பதில் எந்தவித ஐயப்பாடுமில்லை. . [ஒப்பியல் இலக்கியம்; பக்கம் 31].
பாரதியாரின் மேல் மிகுந்த பற்றும், மதிப்பும் வைத்திருப்பவர் பேராசிரியர் க.கைலாசபதி என்பதை அவரது பல நூல்கள், கட்டுரைகள் வெளிப்படுத்தும். பாரதியார் ஒரு பார்ப்பனராகவிருந்தபோதும் பாரதியாரின் படைப்புகளில் தன் மனதைப் பறிகொடுத்தவர் கைலாசபதி. அவற்றைப் பற்றிய அவரது ஆய்வுக் கட்டுரைகளே அதற்குச் சான்று. இது எதனைக் காட்டுகின்றது? பேராசிரியர் கைலாசபதி பார்ப்பன எதிர்ப்பு மிக்கவரென்றால் இவ்விதம் தனது கருத்துகளை வெளிப்படுத்தியிருப்பாரா? பாரதியின் படைப்புகளையும் அவர் பார்ப்பனரென்ற அடிப்படையிலல்லவா அணுகியிருப்பார்.
இனி கைலாசபதியவர்கள் க.நா.சுப்பிரமணியம் பற்றிக் கூறியவை சிலவற்றைப் பார்ப்போம்.
1. '.. க.நா.சுப்ரமணியமும், மு.வரதராசனும் அறிவாற்றல் நிறைந்த நாவலாசிரியர்கள். ஆயினும் தமது சிந்தனைகளை நாவலில் வடிக்கும் இவர்களுடைய பாத்திரங்கள் குட்டிச் சிந்தனையாளர்களாகவே தோன்றுகின்றன....' [தமிழ் நாவல் இலக்கியம், பக்கம் 37]
2. ராஜமையரின் 'கமலாம்பாள் சரித்திரம்' பற்றிக் குறிப்பிடுமோரிடத்தில் 'தமிழ் வாத்தியார் மாதிரிப் பாத்திரத்தைத் தமிழிலக்கிய உலகிற்கு அளித்த ராஜமைய்யர் பாத்திரப் படைப்பின் நுணுக்கங்களையெல்லாம் கையாண்டு அம்மையப்பப்பிள்ளையை வார்த்திருக்கின்றார். க.நா.சுப்பிரமணியம் கூறியிருப்பதுபோல் 'ஒரு தரம் அறிந்துகொண்டு விட்டால் ம்றக்கவே முடியாத சிருஷ்டி இது.' [தமிழ் நாவல் இலக்கியம் , பக்கம் 101]. இங்கு க.நா.சு.வின் கூற்றினை மேற்கோள் காட்டியிருக்கின்றார். பார்ப்பனரான ராஜமைய்யரின் நாவலைச் சிலாகித்துக் கூறும் பேராசிரியர் பார்ப்பனரான க.நா.சு.வின் கூற்றினையும் மேற்கோளாக்கக் குறிப்பிடுகின்றார்.
3. 'பி.ஆர்.ராஜம்மையர் வழிவரும் நாவலாசிரியருள் சிதம்பர சுப்ரமணியமும் ஒருவர் என்று க.நா.சு. கூறுவர். அது ஏற்கக் கூடியதே என்பார் இன்னுமோரிடத்தில்.
4. "வடுவூராரின் நாவலைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'க.நா.சுப்பிரமணியம் கூறியிருப்பதுபோல் 'அவர் எழுதியதிலே அவருடையது எது, மற்றவருடையது சிறப்பாக டுமாஸ், லியனார்டு மெர்ரக், லிட்டன் இவர்களுடையது எது' என்று தீர்மானிப்பது சிரமமான விஷ்யம்." [தமிழ் நாவல் இலக்கியம், பக்கம் 133].
5. 'பத்மாவதி' நாவல் பற்றிக் குறிப்பிடுமோரிடத்தில் அது பற்றிய 'க.நா.சு.வின் மதிப்பீடு ஏற்றுக்கொள்ளக் கூடியதே' என்கின்றார். [தமிழ் நாவல் இலக்கியம், பக்கம் 160].
இவ்விதம் தனது திறனாய்வு நூல்கள், கட்டுரைகளில் கைலாசபதி க.நா.சுப்பிரமணியத்தின் கூற்றுகளை மேற்கோள் காட்டித் தன் தர்க்கத்தினை நிலைநிறுத்துவார். அத்துடன் கோட்பாட்டுரீதியில் க.நா.சு.வின் நிலைப்பாட்டினையும் விமர்சனத்துக்குள்ளாக்குவார். உதாரணமாகக் கீழுள்ள கூற்றினைக் கவனியுங்கள்: 'சுத்தக் கலை நோக்குள்ள நாவலாசிரியர் க.நா.சு. அமெரிக்க உதவியுடன் உலகிற் பல பகுதிகளில் நடத்தபபெறும் கலாச்சார சுதந்திர காங்கிரஸ் - Congress for Cultural Freedom - என்னும் நிறுவனத்தின் இந்திய முக்கியஸ்தரில் ஒருவர். முற்போக்குச் சிந்தனைகளையும்,இலக்கியத்தையும் அனைத்துலக அடிபடையிலே எதிர்த்துப் போராடும் இந்நிறுவனத்தைச் சிக்கெனப் பிடித்த அந்தக் கணத்திலேயே க.நா.சு அரசியலில் திடமாகப் பக்கம் சார்ந்து விட்டார்' [தமிழ் நாவல் இலக்கியம், பக்கம் 197].
மேலுள்ள பேராசிரியர் கைலாசபதியின் கூற்றுகள் [இது போல் இன்னும் பல அவரது படைப்புகளில் அவர் க.நா.சு.வின் கூற்றுகளை மேற்கோள் காட்டியும், ஆதரித்தும், தனது தர்க்கத்திற்கு வலு சேர்க்கவும் பாவித்திருப்பார். க.நா.சு.வின் 'பசி' என்னும் நாவல் 'நாகம்மாள்' நாவலுக்கு முன்னர் வந்த வட்டார நாவலென்றும் இன்னுமோரிடத்தில் நிறுவியிருப்பார்.] அவர் படைப்பாளிகள் பார்ப்பனர் என்ற காரணத்துக்காக அவற்றின் மேல் சேற்றினை வாரி இறைப்பதில்லையென்பதையும், க.நா.சு.வின் ஆளுமையிலோ, அறிவிலோ மிகுந்த மதிப்பினை வைத்திருப்பவர் அவரென்பதையும் புலப்படுத்துகின்றன. ஆனால் தான் நம்பும் கோட்பாடுகளுக்கமைய க.நா.சு.வை விமர்சிக்க வேண்டிய இடங்களில் விமர்சிக்கவும் அவர் தயங்குவதில்லை என்பதையும் வெளிப்படுத்துகின்றன. படைப்பாளிகள், இலக்கியத் திறனாய்வாளர்கள் தமது கோட்பாடுகளுக்கமைய படைப்புகளை மிகவும் வன்மையாக, தீவிரமாகத் தர்க்கம் செய்வது தவறானதில்லை. அவ்விதமான தர்க்கங்கள் அவ்விதமாகத்தானிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமான தர்க்கங்களை அப்படைப்பாளிகளின் ஆளுமையினைத்தாக்குவதற்குப் பாவிக்கலாமா? .
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.