அறிஞர் அ.ந.கந்தசாமியைப்பற்றி எழுத்தாளர் அந்தனி ஜுவா அவர்கள் தினகரனில் 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தொடர்' எழுதினார். அதில் அவர் அ.ந.கந்தசாமியின் அரசியல்,கலை, இலக்கியப்பங்களிப்பு பற்றி விரிவாகவே விபரித்துள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றோம். இதில் அவர் அ.ந.கந்தசாமியின் அரசியற் செயற்பாடுகளை, அவர் ஆசிரியராகவிருந்து செயற்பட்ட பத்திரிகை, சஞ்சிகைகளைப்பற்றியெல்லாம் தகவல்களைத் தந்துள்ளார். மேற்படி தொடரையே பின்னர் 'அ.ந.க ஒரு சகாப்தம்' என்னும் நூலாக எழுதினார். - பதிவுகள் -
'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' தொடரிலிருந்து சில பகுதிகள் - அந்தனி ஜீவா -
'மணிக்கொடி' யுகத்தைத் தோற்றுவித்த சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன் தமிழக எழுத்தாளர்களின் போற்றுதலுக்கு உரியவராக விளங்குவது போல, மறுமலர்ச்சிக் குழுவைத் தோற்றுவித்த அ.ந.கந்தசாமியும் ஈழத்து எழுத்தாளர்களிடையே விளங்கினார்.
யாழ்பாணத்தில் மறுமலர்ச்சிக் குழுவின் முன்னோடியாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி கொழும்பு வந்தார். கொழும்பு வந்ததும் கொழும்பு வாழ்க்கையின் பரபரப்பில் பங்கு கொள்ளாமல் அமைதியை விரும்பினார். சமரச சன்மார்க்க கருத்துகளில் மனதைப் பறிகொடுத்த அ.ந.க. அன்பு மார்க்கத்தில் அவாக் கொண்டார். ஆனால் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக அரசாங்க உத்தியோகம் ஒன்றில் அமர்ந்து விட்டு, பின்னர் 'ஒப்ஸர்வர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் புரூப் ரீடராக அமர்ந்தார். அங்கும் கொஞ்சக் காலம் கடமையாற்றினார்.
தமிழகத்துப் பெரியார் ஈ.வே.ராவின் பகுத்தறிவுக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டார். அ.ந.க. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையில் அக்கறை கொண்டவர். இதனால் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்ட அ.ந.கந்தசாமி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரானார். மார்க்ஸிய தத்துவ நூல்களை விரும்பிப் படித்தார்.
பத்திரிகைத் துறையினை மிகவும் நேசித்த அ.ந.க. 'ஒப்ஸர்வ'ருக்குப் பிறகு 'வீரகேசரி' ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதனால் வீரகேசரியிலிருந்து விலக்கப் பட்டார்.
தொழிலாளர் நலனில் அக்கறை....
அச்சகத் தொழிலாளர்கள் எப்பொழுதுமே அ.ந.க.வின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய மரணத்தின் பின்பு கூட அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் மலர் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் பிரேத ஊர்வலத்திலும் பெருந்தொகையான அச்சகத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான 'தேசாபிமானி'யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. 'தேசாபிமானி'யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.
கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமையாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டி என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழிலாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களினுரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார்.
கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த போராட்டத்தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் பேரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏறபட்டது. [இது பற்றி அ.ந.க.வே என்னிடம் தெரிவித்தார்]. அங்கிருந்து வெளியேறி 'சுதந்திரன்' பத்திரிகையில் சேர்ந்தார்.
தினசரிப் பத்திரிகையாக வெளிவந்த 'சுதந்திரன்' வாரப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியதும் அ.ந.கந்தசாமி ஆசிரியர் கடமைகள் முழுவதையும் ஏற்றார். 2000 பிரதிகள் விற்ற சுதந்திரன் 12000 பிரதிகளாக விற்பனையைப் பெருக்கிய பெருமை அவரையே சாரும். சுதந்திரனில் பணியாற்றிய காலத்தில் எமிலிஸோலாவின் 'நானா' என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து 'பண்டிதர் திருமலைராயர்' என்ற புனைபெயரில் பிரச்னைக்குரிய பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர் இலக்கிய உலகில் அடிபடலாயிற்று. சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர்களில் வந்த கட்டுரைகளைத் தமிழகத்துப் பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ஈ.வே.ரா அவர்கள் தனது குடியரசு பத்த்ரிகையில் மறுபிரசுரஞ் செய்ததுடன் மட்டுமல்லாது, அதைப்பற்றி ஆசிரியர் தலையங்கமும் வரைந்தார். மலேசியாப் பத்திரிகையும் அவற்றை மறுபிரசுரஞ் செய்தது.
சுதந்திரனில் ஆர்.கே.சண்முகநாதன் ஆரம்பித்த 'குயுக்தியார்' கேள்வி-பதில் பகுதியை அவர் விட்டதும், அ.ந.கந்தசாமி அதை ஏற்று 'குயுக்தியார்' மூலம் அளித்த பதில்கள் குயுக்தியாருக்கு மேலும் ஆழமான மவுசை ஏற்படுத்தின என்பதனைப் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்கள் எவரும்மறுக்க மாட்டார்கள். அ.ந.க சுதந்திரனில் பணியாற்றிய காலத்தை 'சுதந்திரனின் பொற்காலம்' என்றே வர்ணிக்கலாம்.
சுதந்திரனிலிருந்து வெளியேறிய பின்பு அரசாங்கத் தகவற் பகுதியில் மொழிபெயர்ப்பாளராக அ.ந.கந்தசாமி கடமையாற்றினார். தகவற் பகுதியிலிருந்து வெளிவந்த ஸ்ரீலங்கா பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
அந்தனி ஜீவாவின் 'அ.ந.க ஒரு சகாப்தம்' நூலிலுள்ள தகவற்பிழையொன்றும், திருத்தமும்
[ * வரதர்,மயிலங்கூடலூர் நடராசன் போன்றவர்கள் தம் கட்டுரைகளில் அ.ந.க அளவெட்டியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டதன் காரணமாகப் பலரும் அவரை அளவெட்டியைச் சேர்ந்தவராகக் கருதி விட்டார்கள். ஆனால் அவர் யாழ்ப்பாணத்திலுள்ள வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். அவரது தந்தையார் ஆறுமுகம் நடராசாவும் யாழ் வண்ணார்பண்ணையைச் சேர்ந்தவர். அவர் யாழ் சிறைச்சாலையில் வைத்திய அதிகாரியாகப்பணியாற்றியவர். அ.ந.கந்தசாமியின் தாயாரே அளவெட்டியைச் சேர்ந்தவர். இந்நூலிலும் அ.ந.கந்தசாமியின் தந்தையார் அளவெட்டியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தவறானது. மேலும் அ.ந.க ஆரம்பக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும், இடைப்பட்ட கல்வியை மகாஜனாக் கல்லூரியிலும் பின்னர் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக்கல்லூரியிலும் கற்றவர். தாய், தந்தையரைத் தனது ஐந்தாவது வயதில் இழந்த அ.ந.க.வின் பால்ய பருவம் அளவெட்டியில் கழிந்தது. அம்மண்ணின் மேல் கொண்ட பற்றினால் தன் பெயருக்கு முன்னால் அ.என்று பெயரை வைத்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் கொழும்பு சென்று விட்டார். - ஆசிரியர், பதிவுகள்- ]