[அறிஞர் அ.ந.கந்தசாமி நினைவுதினம் பெப்ருவரி 14. அதனையொட்டி அமரர் செம்பியன் செல்வனின் 'ஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்' நூலில் அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியினை மீள்பிரசுரம் செய்கின்றோம். -பதிவுகள்]
இலக்கிய மின்னல்
இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் - சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை, வறுமை முதலாம் இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது1, - என்று தனது முதற்படைப்பான ‘சிந்தனையும் மின்னொளியும்’ என்ற கவிதை தனது பதினேழாவது வயதில் பிறந்ததையும், அது பின்னர் ஈழகேசரிப் பத்திரிகையில் வெளிவந்ததையும் நினைவுகொண்ட அமரர் அ.ந. கந்தசாமி அவர்களின் இலட்சியக் கொள்கை வெறி, எழுத்தின் ஆரம்காலம் தொட்டு, அவரின் அந்தியகாலமான 14-2-68 வரை மாறவோ, மறையவோ இல்லை.
பல் கலைஞன்
ஈழத்தமிழிலக்கிய உலகின் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டு மற்றையோரால் மறுக்கவோ மறைக்கவோ முடியாதளவிற்கு சிறந்த தொண்டாற்றினார்.
நவீன் தமிழ்க்கலை வடிவங்களாக உருவகித்த சிறுகதை, நாவல், விமர்சனம், மொழி பெயர்ப்பு என்பனவற்றுடன் நாடகம், கவிதை ஆகிய துறைகளையும் - புத்தாற்றல் நிரம்பிய ஆக்ரோஷ வேகத்துடன் சமூகச்சீர்கேடுகளைக் கெல்லி எறியவும், ‘புதியதோர் உலகு’ அமைக்கவும் ஏற்றகருவிகளாக்கினார்.
இதே போன்றே, அவர் அதிகம் ஈடுபட்டு, பெரும் புகழீட்டிக் கொண்ட பேச்சுக்கலை, பத்திரிகைத்துறை என்பனவற்றையும், சமூக நலன் கருதி அமையும் சிறந்த வெளியீட்டுச் சாதனமாக்கிக்கொண்டார்.
இதனால், இவர் எந்தக் கலையை - எந்தத் துறையை எப்போது எதைக் கொண்டாலும் சமூக நலன் கருதிச் - சிறப்பாகத் தொழிலாள வர்க்கத்தின் நலன் கருதி செயல்பட்ட காரணத்தால். இவரின் படைப்புக்கள் இயல்பாகவே - அவர் எடுத்துக்கொண்ட ‘களத்தி’ன் தன்மையினால், ஓர், ஆழத்தையும், அகண்ட பரப்பையும் பெற்றுவிடுகின்றன. வாசகரிடையேயும் இலக்கிய விமர்சகர்களிடையேயும் இவரின் படைப்புக்கள் ஒரு கௌரவ நிலையை அடைவதற்கு இதுவும் முக்கிய ஒரு காரணம் எனலாம்.
ஆகவே, இவரைப்பற்றிய உண்மையான மதிப்பீடு பல்துறைகளையும் தழுவியதாகவிருந்தாலன்றி முழுமையடையாதாயினும், இங்குள்ள தேவை, வசதி, அளவுகருதி சிறுகதையில் அவரின் பணியையே மதிப்பிட வாய்ப்பு ஏற்படுகின்றது.
கிராமமும், நகரமும்
'சமுதாயச் சூழ்நிலைகளே மனிதவுணர்வுகளை நிர்ணயிக்கின்றன’ என்ற கார்ல் மாக்ஸின் சிந்தாந்தம் இவரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
ஈழத்தின் வடபாகத்திலுள்ள அளவெட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் - யாழ்ப்பாண நகரிலுள்ள ஆங்கிலக் கல்லூரி ஒன்றிற்கு அக்காலப் புகையிரத வண்டியில், (1940) நாடோறும் சென்று திரும்பிக்கொணடிருக்கையில் புதிய புதிய அனுபவங்களினாலும், எண்ணச் சிந்தனைகளினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டான். புரிந்தும் புரியாத - புத்வேகம் ஊட்டக்கூடிய கிளர்ச்சி பெறக்கூடிய உணர்வுகளை அக்கிராமத்து இளைஞனுக்கு நகர அனுபவங்கள் ஏற்படுத்தி வந்தன. நகரத்திற்கும், கிராமத்திற்குமிடையேயுள்ள வாழ்க்கை முறை வேறுபாடுகள் அனுபவிப்புக்கள், துன்ப துயரங்கள், இன்பக் களியாட்டங்கள், உழைப்பும், உழைப்பின் பயனும் வேறாகிச் சென்றடைதல், முதலாளித்துவக் சுரண்டல்கள், சாதி சமய வேறுபாடுகள் - என்பன பற்றி அவனது இயல்பான மன எண்ணங்களும், நகரக் கல்லூரியின் ஆங்கிலக் கல்வித் திறவுகோலினால் ஏற்பட்ட உலகக் கதவுகளின் திறக்கைகளின் ஒளி வெள்ளமும் அவனை வியப்பிலும், அதிர்ச்சியிலும், துயரத்திலுமாழ்த்தின. அதனாலேற்பட்ட இதயத் துடிப்புகளே அவனை ஓர் எழுத்தாளனாக்கின.
பத்திரிகைத் தொண்டுகள்
அ.ந. கந்தசாமி சுமார் நாற்பது சிறுகதைகள் வரையே எழுதியிருப்பார் என அவரின் நெருங்கிய இலக்கிய நண்பர்களால் அறியவருகின்றது. அவை யாவும் ஆங்காங்கே அவர் பணியாற்றிய பத்திரிகைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் சிதறிக்கிடக்கின்றன. அவரது சிறுகதைகள் இன்றுவரை தொகுப்பாக வெளிவராதிருப்பது விந்தையான வேதனையே, அவரால் உற்சாகப் படுத்தப்பட்டும் உயர்த்தப்பட்டும் உருவாக்கப்பட்ட இலக்கியவாணர்கள் எத்தனையோ பேர் இன்று ஈழத்தமிழிலக்கிய உலகில் மட்டுமல்லாது சமூக நிலையிலும் உயர்நிலை பெற்று விளங்குகின்றனர். அவர்களோ அன்றிப் பிற பதிப்பங்களோ, அ.ந. கந்தசாமியின் படைப்புக்களை நூலுருவில் கொணர முயலவேண்டும். அவர் தன் ஆயுட்காலம் முழுவதும் தொடர்பு கொண்டிருந்த இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமாவது இவ்விடயத்தில் ஆழ்ந்த கவனம் செலுத்தவேண்டும்.
இவர் - காலத்திற்குக் காலம் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வந்தபோது எழுதப்பட்டவையே இச்சிறுகதைகள். எனவே இக்கதைகளில் அவர் பணியாற்றி வந்த பத்திரிகைகளின் அவ்வக்கால இலக்கிய, சமூக, அரசியற் போக்குகளை அவதானிக்கக்கூடியதாக இருப்பதுடன் அவற்றை மீறிய அ.ந.க-வின் தனித்துவத்தையும் காணக்கூடியதாகவுள்ளது.
1946ஆம் ஆண்டளவில் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாரப் பத்திரிகையான ‘தேசாபிமானி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றி, பின்னர் முறையே சுதந்திரன், வீரகேசரி, ஸ்ரீலங்கா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் குழுக்களிலும் கடமையாற்றினார். இப்பத்திரிகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையின: கொள்கையளவில் முரண்பாடு கொண்டவை நோக்குகளும் போக்குகளும் வெவ்வேறானவை. இத்தகைய பத்திரிகைகளில் இவர் கடமையாற்றத்துணிந்த திறம்- காரணம் - என்பன விமர்சன ஆராய்வுக்குரியன (தனித்து ஆராயப்படவேண்டியதும் கூட). எவ்வாறு இருந்தாலும் இவர் தாம் பணிபுரிந்த அந்தப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தபோதிலும், தனது கொள்கைப் போக்கை - பொதுவுடமைச் சேவையை - கைவிட்டிலர். ஒவ்வொரு பத்திரிகைகளிலும் அவர் பணியாற்றியபோது ஒரு பரபரப்பு தென்பட்டது. தேசாபிமானி - மூலம் நாட்டின் சீர்கேடு, பொருளாதாரச் சீர்கேடு, சுரண்டல், சாதி ஒழிப்பு என்பனவற்றை ஒழிக்கப்பாடுபட்டார். சுதந்திரன் மூலம் நாட்டின் கலை, கலாச்சாரம், இலக்கியம் என்பனவற்றை வளர்க்க முன்றார். பத்திரிகைகள் ஏதுவாக இருந்தாலும் அப்பத்திரிகை வாயிலாக நம் கொள்கைகளுக்கு முரசம் கட்டினார். இதனாற்றான். எப்பொழுதுமே தம்முள் ஒன்றுடன் ஒன்று வக்கரித்துக்கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், தமிழரசுக் கட்சியிலும் இவரால் பணியாற்ற முடிந்தது போலும். அப்போது தினப்பத்திரிகையாக மூவாயிரம் பிரதிகளே விற்பனையர்கிக்கொண்டிருந்த சுதந்திரன் பத்திரிகையை, இவர் பொறுப்பேற்ற ஆண்டிலேயே பத்தாயிரம் பிரதிகளாக உயர்த்தினார். இவ்வுயர்வுக்கு இவரின் எழுத்தே காரணம் எனலாம் இன்று சுதந்திரன் பத்திரிகையில், பிரபலமாக அடிபடும் ‘குயுக்தியார்’ பதிலை முதன் முதலாகத் தாபித்தவர் இவரே! பிரான்சிய எழுத்தாளரான ‘எமிலி ஜோலா’வின் ‘நாநா’- என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டதும், இவரின் சிறந்த சிறுகதைகள் வெளிவந்ததும் இக்காலத்தில்தான். நாநாவின் மொழிபெயர்ப்பு - தமிழ் நாட்டிலும், ஈழத்திலும் பெரும் பரபரப்பை ஊட்டியதுடன், ஈழத்தின் நாவல் போக்கின் சிந்தனையில் பலத்த திருப்பத்தை ஏற்படுத்திற்று.
இதே போலவே, வீரகேசரியில் பணிபுரிந்தபோது, இவரின் கடமை, எழுத்துடன் மட்டும் நின்றுவிடாது. செயல் முறையிலும் தீவிரமடைந்தது. வீரகேசரியில் முதன் முதலாகத் தொழிற் சங்கம் ஒன்றினைத் தாபித்து தொழிலாளர் உரிமைக்காகப் பாடுபட்டவர். ஆகவே, இந்த உண்மைகளை முன்னிறுத்தியே இவரின் படைப்புகளை ஆராய்தல் பொருத்தமுடையதாகும்.
சிறுகதைச் சிற்பங்கள்
சிதறிக்கிடக்கும் இவரின் சிறுகதைகள் எல்லாவற்றையுமே நாம் சிறந்தனவெனக் கூறிவிட முடியாது. எந்தவொரு எழுத்தாளனின் எல்லாக் கதைகளுமே இலக்கிய ரீதியில் வெற்றிபெற்று விட முடியாது. ஏன் புதுமைப்பித்தனின் கதைகளில்கூட சுமார் பதினைந்தே வெற்றிபெறும் என க. நா. சுப்பிரமணியம் கூறுவதும் இங்கு கவனிக்கற் பாலது. இவரின் கதைகள் பத்திரிகைகளின் தேவைகளுக்காக அவ்வப்போது எழுதப்பட்டவையாகும். எனவே, சிலவற்றின் கலைத்துவமோ, பூரணத்துவமோ நிறைந்திருப்பதாகக் கூறமுடியாது. அதுமட்டுமல்ல அ.ந.க-வே தாம் எழுதியவற்றுள் சிறந்தவை என சுமார் பதினைந்து கதைகளைக் குறித்துப் போயுள்ளார். எனவே, அக்கதைகளை மட்டும் வைத்துக்கொண்டு அவற்றின், சிறுகதைப் பண்புகளையும், தன்மைகளையும் ஆராய்வதே இம்முயற்சியாகும். அவர் தமது சிறுகதைகளை ஆரம்ப காலங்களிலேயே எழுதினார். பிற்காலங்களில் அவர் கவனம் நாடகம், நாவல், கவிதை, கட்டுரை எனத் திரும்பி விட்டது.
இரத்த உறவு (மறுமலர்ச்சி), நாயிலும் படையர் (வீரகேசரி), காளிமுத்து இலங்கை வந்த கதை (தேசாபிமானி) பாதாள மோகினி, நள்ளிரவு, ஐந்தாவது சந்திப்பு (சுதந்திரன்), பரிசு, குருட்டுவாழ்க்கை, உலகப்பிரவேசம், ஸ்ரீதனம், பிக்பொக்கட், சாகும் உரிமை, கொலைகாரன், உதவிவந்தது, வழிகாட்டி ஆகிய கதைகளை அ.ந.க. தனது நல்ல கதைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தஉறவு, ஐந்தாவது சந்திப்பு, நாயிலும் கடையர், - ஆகிய கதைகள் இவருக்குப் பெரும் புகழீட்டிக் கொடுத்தன. முதலிரு கதைகளும் சிங்கள மொழியில் பெயர்க்கப்பட்டு புகழ்பெற்றவை. தேயிலைத் தோட்டவாழ்வு பற்றிய ‘நாயிலும் கடையர்’ - மிகச் சிறந்த தமிழ்ச் சிறுகதை என பல்வேறு ஈழத்து விமர்சகர்களால் பாராட்டப்பட்டதொன்று.
இவரின் கதைகளில் நாம் புன்னகையைக் காணவில்லை. எங்கும் ஏக்கமும், போராட்டமும் வறுமையும் சமுதாயத்தின் சீர்கேடுமே கருவாக அமைந்துள்ளன. ‘இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும் துயரமும், அழுமையும் ஏத்தமும் கண்ணீரும் கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கின்றது. ஏழ்மைக்கும் செல்வத்திற்கும் நடக்கும்போரும், அடிமைக்கும் ஆண்டானுக்கும் நடக்கும் போரும் இன்று உலகைக் கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகி விட்டது'2, எனவே, வாழ்வின் உயிர் நாடியான சமூகப்பிரச்சினையான இவற்றைப் பொருளாகக் கொண்டு இவரின் கதைகள் எழுந்தன. சமூக ஆராய்வின்போது எழும் முடிவுகள் - தத்துவஞானிக்குத் தத்துவங்களாகவும், எழுத்தாளனுக்கு கதைகளாகவும் வெளியாகின்றன. உண்மையில் சிறந்த எழுத்துக்கள் வாழ்வின் நடப்பியல்பில் பிறப்பன அல்ல. அவ்வியல்புகளின் ஆராய்வின் முடிவிலேயே பிறக்கின்றன என்பதற்கு இவரின் கதைகள் சிறந்த உதாரணங்களாகும்.
கலாபூர்வ, சித்தாந்தங்கள்
இவரின் பேச்சுக்கள், எழுத்துக்கள், சமூகத் தொடர்புகள், இயக்கத்தொண்டுகள் என்பனவற்றைக் கவனிக்கையில் இவர் மாக்ஸீயச் சித்தாந்தங்களினால் வசீகரிக்கப்பட்ட, ஒரு சமூகப்புரட்சித் தொண்டனாகவே தரிசனம் தருகின்றார். ஆயினும் இவரின் படைப்புக்களில் இச்சித்தாந்தங்கள் கலாபூர்வமாக வெளிவருவதிலிருந்தே இவர் சமுதாய சோசலிச இலக்கிய - மக்கள் எழுத்தாளராகின்றார்;. இதுவே, இவரை ஏனைய மாச்ஸீயச் சித்தாந்தகாரரிலிருந்து வேறுபடுத்துவதுடன், தனித்துவம் மிக்கவராகவும் காட்டுகின்றது. சித்தாந்தக்காரர் எழுத்தாளராவதற்கும், எழுத்தாளர் சித்தாந்த அபிமானியாக மாறுவதற்குமுள்ள நுணுக்கமான வேறுபாட்டின் எல்லைக் கோடாக இவர் விளங்கினார் என்பதனை இவரின் சிறுகதைகள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன. இவரை நிதர்சன உலகின் புத்துஜீவியான இலக்கியகாரர் எனவும் குறிப்பிடுவது பொருந்தும். ஏனெனில் தம்மை வசீகரித்த - நாட்டின் தவிர்க்கமுடியாத, எல்லாhராலும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய வீடிவெள்ளிச் சித்தாந்தமான - மாக்ஸீயக் கொள்கைகளை அவர்தம் படைப்புக்களில் கையாளுகையில் சித்தாந்தங்கள் வாழ்வின் நடப்பியல் உண்மைகளாக மாறிவிடுகின்றனவேயன்றி, சித்தாந்தத் தூல உடல்களாக நிற்கவில்லை. பி சித்தாந்தக் கலைஞர்களின் படைப்புக்களில் கலையை மீறி சித்தாந்தங்கள் போதனைபுரிவதுபோலோ, கலைக்கொள்கைக்காரரின் வெறும் அலங்கார உயிரற்ற கலைவடிவங்களைப் போலவே, இல்லாததால், இவரின் படைப்புக்கள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றாகிவிட்டது. இவரது படைப்புக்களை அவதானிக்கையில் - உருவமா, உள்ளடக்கமா? என்பன போன்ற பிரச்சினைகள் எழாதிருப்பதும் குறிப்பிடத்தக்கதே.
இலக்கியத் தொனி
அ.ந. கந்தசாமி அவர்களிடம் இலக்கியம் பற்றித் தெளிவான பார்வையிருந்தது. உறுதியிருந்தது என்பதனை இவர் கதைகள் புலப்படுத்துகின்றன. இலக்கியம் என்பது பொழுதுபோக்குச் சாதனமல்ல. அதுவே சமூகப் புரட்சியின் உன்னத கருவி. அக்கருவியினால் மக்கள் கூட்டம் இனம் காட்டப்படவேண்டும். அவர்கள் வாழ்க்கை வெளிச்சத்திற்கு வரவேண்டும் - உண்மை வளர்சசிபெறவேண்டும் என்ற அவாவினால் எழுதினார் என்பதனையே அவர் கதைகளின் பொதுப் பண்பாகக் கூறலாம். அதே வேளையில் இவரின் சிந்தனை நாட்டை மீறிய சர்வதேசியப் பண்பின் அடியொட்டி விரிவடைவதையும் காணலாம். இவர் சிறுகதைகள் மூலம் மனிதனை விமர்சித்தார். அவர் விமர்சனத்தில் சோகம் கூட அனல் எறியும் ஆத்மீக வெளிப்பாடாக அமைந்துள்ளதைக் காணலாம். இவர் இலக்கியத்தை மட்டுமலலாது உலக இயக்கம் பற்றிய சிந்தனையிலும், ஆழ்ந்து ஈடுபட்டு அதில் உலக மனிதன என்ற ரீதியில் குலத்தில் ஈழத்தவனின் பண்பும் பணியும் பற்றி ஆழமான கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதனை.
உலகில் ஒரு பொருளும் தன்னந்தனியே ஏகாந்தமான சூழ்நிலையில் தொடர்பின்றி இயங்குவதில்லை. எப்பொருளையும் சூழ்நிலைகளே ஆட்சி செய்கின்றன3, ஆகவே மனிதன் ஒரு சமூகப் பிராணி அவனின் தனித்துவம் பண்புகள், விருப்பு வெறுப்புகள் முக்கியமல்ல. சமூக நிலையில் அவன் விருப்பு வெறுப்பு பங்கின் நிலை என்பனவற்றையே விமர்சித்தார். சூழ்நிலைகள் என்று கூறும்பொழுது அந்தக் காலங்களின், பிரதேசங்களுட்பட்ட அரசியல், பொருளாதார, சமூக நிலைகளையே குறித்தார். அதுமட்டுமன்றி, தன்கதைகளிலே மனிதனை விமர்சித்ததுடன் மட்டுமன்றி, மக்களின் கடமைகளையும், இனிச்செய்ய வேண்டியதென்ன? என்பதனையும் குறியீடாகவும். தம் கதைகளில் வெளியிட்டார். உண்மையான எழுத்தாளனின் உயர்ந்த பணிகளில் இதுவே முக்கியமானதாகும். பிரசசினைகளைக் காடடுவது மட்டும் போதாது, அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வழிவகைகளை காட்டுவதே உந்நத கலைஞனின் நோக்கம் என்பதனை இவர் கதைகள் புலப்படுத்துகின்றன. ‘மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்குச் சமுதாயப் பொறுப்பொன்றுண்டு: வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும் புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு, வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தில் புன்னகை தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் முல்லை மலர் போல் அவனுக்கு இன்பமூட்டும்.
கட்டறுத்த புரோமத்தியஸ்
இவரின் எழுத்துக்கள், மானிடவர்க்கத்தின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும். சாதி சமய வேறுபாடுகள், ஆண்டான் அடிமை அமைப்பு, சாதி வித்தியாசங்கள், வர்க்க வேறுபாடுகள் போன்ற கைவிலங்குகளை அறுத்தெறிந்து சுதந்திரமானதும், சகோதரத்துவமானதும், சமத்துவமானதுமான சகவாழ்வினை வேண்டி நின்றதனாலேயே கலாநிதி க. கைலாசபதி அவர்கள் ‘கட்டறுத்த புரோமத்தியஸ் என்று கருதப்படும் வகையில் முற்போக்கை முழுமூச்சாகத் தழுவிக்கொண்டவரும் முற்போக்கு இலககிய அணியின் மூத்த பிள்ளைகளுள் ஒருவருமான அ.ந. கந்தசாமி 5’ என்று குறிப்பிடுவதும் கருத்தில் கொள்ளத்தக்கது. (ஷெல்லி எழுதிய Prometheus Unbound -என்ற காவியத்தில், நெருப்பின் கடவுளான Zeus இடமிருந்து நெருப்பைப் பறித்து, மானிடர்க்கு வழங்கிய குற்றத்திற்காக புரோமத்தியஸ் பாறைகளில் கட்டபட்டு கழுகுகளினால் துன்புறுத்தப்பட்ட கதையே இதுவாகும். புரோமத்தியஸ் இன்று மனித புத்தியின் சின்னமாகக் கொள்ளப்படுபவன்) இவ் அடைமொழி சற்று எல்லை மீறியதாயினும், சில உண்மைகளைப் புலப்படுத்தவே செய்கின்றன. அ.ந.க-வின் சிந்தனைகள் இலக்கியத்திற்குப் புதியதல்லவாயினும், நம் நாடடிற்கு - அதுவும் தமிழிலக்கியத்திற்கு அந்நியமானவையாகவோ, அதிக பரிச்சமற்றனவாகவோ, அல்லது இவற்றைப் பொருளாகக்கொண்டு எழுதுபவற்றை இலக்கியமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமற்றவர்களாக மக்கள் இருந்த வேளையில் இவற்றைத் தமிழில் எழுதினார். அரசியலும் கலந்து எழுதினார். அரசியலறிவு சாதாரண மக்களிடையே வளர்ச்சிபெறாத அக்காலத்தில் (ஏன் இன்று கூட அரசியலறிவு மக்களிடையே வளர்ந்துள்ளதாக கூற முடியுமா?) அரசியற் கலந்த ஆக்கங்களை வெளியிட்டார். இவர் தமது எழுத்தால் வாழ்க்கையை விமர்சித்து அதன் மூலம் வஞ்சிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையூட்டவும் முனைந்தார். சமுதாயத்திற்குப் பயனள்ளதாக சுரண்டலும், அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும், புதிய சமதர்ம சமுதாயத்தை அமைக்கவும் பாடுபட்டார்.
உள்ளத்தின் உரைநடை
இவரின் படைப்புக்களின் வெற்றிகளுக்கு இவரின் உரை நடையும் முக்கிய காரணம் எனலாம். எளிய வாக்கியங்களாக கருத்துக்களை வெளியிட்டார். அக் கருத்துக்களை உவமை, உருவகச் சொல்லாட்சிகளினால் அழகுபடுத்தியும், கம்பீரத் தொனியேற்றியும், எல்லாருக்கும் புரியும்வண்ணம் மக்கள் முன் வைத்தார். இப் பண்பு சிறுகதைகளில் மட்டுமல்லாது, ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், கொள்கை விளக்கக் கட்டுரைகளிலும் எல்லாரையும் வசீகரிக்கும் வண்ணம் அழகழகான, ஆழமான, எளிய உவமை உருவங்களை அமைத்து எழுதுவார். சாதாரணமாக ஒரு சிறு கட்டுரையிற் கூட குறைந்தது பத்தோ பதினைந்து உவமை உருவங்களைக் காணலாம். உதாரணமாக - தேசிய இலக்கியம் என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதிச் செல்கிறார்.
‘… சமுதாயம் கலையின் கருத்துக்களை தன்னகத்தே சூல் கொண்ட மேகம் நீரைத் தாங்கி நிற்பதுபோல் தாங்கி நிற்கிறது. எழுத்தாளனின் மேதாவிலாசம் நிறைந்த உள்ளம் கூதற் காற்றுப் போல் மேகத்தில் வீசுகிறது. அதன் பயனாக இலக்கியம் என்னும் நீர் பொழிய ஆரம்பிக்கிறது.6’
தேசிய இலக்கியம்
1960ஆம் ஆண்டளவில் ஈழத்தில் எழுந்த தேசிய இலக்கியக் குரலுக்கு பெரும் ஆதரவு அளித்தவர் இவர். அதுபற்றி அவர் கொண்டிருந்த கருத்து அவரின் இலக்கியங்களில் வெளியாகின. தேசிய இலக்கியம் என்றால் ஏதோ தமிழகத்திலிருந்து, ஈழத்தமிழனைப் பிரிக்கும் முயற்சி என மருளும் மக்களும், அரசியற் தலைவர்களும் இருக்கின்றார்கள். ‘ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென்ற சில பண்புகளையும், விருப்பு வெறுப்புகளையும் தேவைகளையும் பழக்க வழக்கங்களையும் கனவுகளையும் கொண்டு விளங்குகின்றது 7’ ….ஈழத்தமிழர்களிடையே வாழும் எழுத்தாளன் ஈழத்தமிழனையும், அவனது மொழியையும் பாரம்பரியங்களையும், பண்புகளையும் தானறிவான். அவனிடம் ஜாதி வேற்றுமைகளுண்டு. ஆனால் அவனிடத்தே சக்கிலி, படையாட்சி என்ற தென்னிந்திய ஜாதிகள் கிடையாது. நாயுடுவும், செட்டியும், நாடாரும், தேவரும் இலங்கையில்லை. இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் உளர். ஆனால் நளவர் என்ற நமது தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெயரைச் சொன்னால் தமிழகம் என்னவென்று ஆச்சரியமடையும். இங்குள்ள சாதிப் போர் பிராமணனுக்கும் தாழ்த்தப்பட்டவனுக்குமல்ல. வேளாளனும் நளவனும் சாதிப்போரில் சிக்குகின்றனர் 8’
தேசிய இலக்கியத்திற்கு யதார்த்தம், மண்வாசைன என்ற இலக்கிய அம்சங்கள் மிகமிக அவசியம் எனக் கருதினார். அத்துடன் மட்டுமல்லாது, புற வாழ்வில் என்னவித சீர்திருத்தங்கள் அறிவியக்கங்களை மேற்கொண்டாலும், அகவாழ்வில் பூரணத்துவம் பெறாதளவில் மனித வாழ்வு செம்மையுறாது என்ற கருத்துக் கொண்டவர் இவர். இவரின் எழுத்துக்களில் காணப்படும் இன்னொரு அம்சம் பாலுணர்ச்சி ஆகும். பாலுறவு விவகாரங்களை மனோதத்துவ அடிப்படையில் ஆராயும் பண்பினை இவரின் கதைகள் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற சாதனைகள்
சிறுகதையைப் போலவே, கவிதைத் துறையிலும் இவர் வெற்றியீட்டினார். எதிர்காலச் சித்தன் பாட்டு, துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம் எ;னபன சிறந்தவை. ‘கடவுள் - என்சோரநாயகன்ஸ என்ற கவிதையைக் கேட்ட, தென் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை ‘ ஒரு நூற்றாண்டிற்கு ஒருமுறைதான் இப்படிப் பட்ட நல்ல கவிதை தோன்றும்’ என்றார்.
இவருடைய ‘மதமாற்றம்’ எ;ற நாடகத்தைப் பற்றி பேராசிரியர். க. கைலாசபதி பின்வருமாறு குறிப்பிட்டார். ‘இதுவே தமிழில் இதுவரை எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச்சிறந்தது’
பாரதியார் வரலாற்றை ஆராய்ந்து - பாரதியார் கூறிய யாழ்ப்பாணத்துச் சாமியார் - அல்வாயூர் அருளம்பல தேசிகர் எனநிலை நாட்டினார்.
1,2,4. நான் ஏன் எழுதுகிறேன் - புதுமையிலக்கியம் - நவம்பர்-1961
3 கட்டுப்பாடுகள் அவசியமா - அ.ந.க. மறுமலர்ச்சி ஆண்டு இதழ்
5 அம்பலத்தான் - ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி - 1972 கலாச்சார பேரவை
6,7,8 - தேசிய இலக்கியம் - 4-3-2 - மரகதம் ஒக்டோபர் 1961
சிறுகதை: இரத்த உறவு
- அ.ந.கந்தசாமி -
மாலைவேளையிலே வெள்ளிப் பனிமலையின் உச்சியிலே அகிலலோக நாயகனான பரமேஸ்வரன் பராசக்தியோடு வழக்கம்போல் உலாவிக் கொண்டிருந்தபோது அகிலாண்ட நாயகி சிவபிரானிடம் பொழுது போகவில்லை என்று கூறி ஒரு இனிய கதை சொல்லும்படி இரந்து கேட்டாள்.
பார்வதி கதை சொல்லும்படி கேட்பது இது முதல்தடவையல்ல, வருடத்தின் முந்நூற்று அறுபத்தைந்து நாட்களிலும் ஏதாவது கதை சொல்லியேயாக வேண்டியிருந்தது. கதை என்றால் உலக மாதாவுக்கு உயிர். பலயுகங்களுக்கு முன்னர் .இக்கதை சொல்லும் பழக்கத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்தபோது உமாபதிக்கும் கதை கட்டிச் சொல்வது சிருஷ்டியைப்போல ஒரு இன்பமான பொழுது போக்காகவே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுதோ அவருக்கு அது ஒரு நீங்காத தொல்லையாகவே மாறிவிட்டது. தினம் தினம் ஒரு புதியகதையைச் சிருஷ்டிப்பதென்றால் எந்தக் கதாசிரியருக்கும் இலகுவான காரியமா என்ன?
இன்று பரமசிவம் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டார். “ஒவ்வொருநாளும் தான் கதை சொல்லுகிறேனே இன்று வேறுவிதமாக நேரததைப் போக்கலாம் வா” என்று சிவபிரான் கூற, மீனாட்சியும் இரட்டிப்பு சந்தோஷம் அடைந்தவளாய் அவ்வாறே ஆகட்டும் என்று குதூகலத்துடன் புறப்பட்டாள்.
கட்புலனுக்குத் தோன்றாத சூக்கும் நிலையில் மலைமகளும் பரமசிவனும் கொழும்பு நகரிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் கட்டில்களுக்குச் சமீபமாகச் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். தமது ஒலியிலா மொழியிலே அவர்கள் பின்வருமாறு பேசிக்கொண்டார்கள். “ஐயோ! பாவம், இந்த மனுஷனுக்கு என்ன நோயோ?” என்றாள் உலகம்மை.
“தெருவிலே தனது மோட்டாரில் வந்து கொண்டிருந்தபோது ஒருபெரிய லொறியிலே மோதி இவனுக்குக் கை எலும்புகள் துறிந்துபோய் விட்டன. சரியான காயம். அதுதான் சத்திர சிகிச்சை செய்துபடுக்க வைத்திருக்கிறார்கள்.’ என்று பதிலளித்தார் சங்கரர்.
பார்வதி நோயாளியை மேலும் கவனித்தபோது ஒரு கண்ணாடிக் குழாயிலிருந்து சிவப்பு நிறமான திராவகமொன்று நோயாளியின் உடலின ஊசி மூலம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும், ஒரு தாதி பக்கத்திலிருந்து அதனைக் கவனித்துக்கொண்டிருப்பதையும் கண்டு ஆச்சரியடைந்தாள்.
“நாதா, இது என்ன திராவகம?” என்று அடக்கவொண்ணாத ஆர்வத்தோடு வினாவினாள் பார்வதி.
நடராஜர் புன்னகை பூத்தவராய்” அவசரப்படாதே உமா அதை அப்புறம் சொல்லுகிறேன். இப்பொழுது என்னுடன் இன்னோர் காட்சியைப பார்க்க வா” என்று பார்வதியை அங்கிருந்து வேறு புறமாக அழைத்துச் சென்றார்.
கொம்பனித் தெருவிலுள்ள ஒரு முடுக்கிலே குழந்தைகள் ஏகக் கும்மாளமடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த முடுக்கில் ஒரு சிறு வீட்டின் வாசலில் ஒரு அழகிய பெண் நின்று கொண்டு, வீட்டை நோக்கி வந்துகொண்டிருக்கும் தன் கணவனை வைத்து கண் வாங்காது பரிவோடு பார்த்துக்கொண்டிருந்தடிள்.
அவன் களைத்து விறுவிறுத்துப்போயிருந்தான். அவன் முகத்தில் வெயர்வை அருவிபோல விந்துகொண்டிருந்தது.
அவன் மனைவி அவனை அன்போது வரவேற்பதைக் கண்ட பார்வதி, பரமேஸ்வரனின் காதில் பார்த்தீர்களா? ஏழைப்பெண்ணாயிருந்தும் தன் பார்த்தாவிடம் எவ்வளவு அன்பும் ஆதரவும் காட்டுகிறாள்?” என்று திருப்தியுடன் குறிப்பிட்டாள். உண்மையான அன்பில் இணைந்து வாழும் தம்பதிகளைக் காணும்போது கடவுளர் கூட மகிழ்ச்சியில் திளைத்து விடுவார்கள்.
வீடு வந்த இளைஞர் தன் மனைவிடம் “இந்தா சுபைதா, பத்து ரூபா இருக்கிறது. அரிசி, காய்கறிவாங்கிப் பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடு. நான் இதோ போய்க் குளித்துவிட்டு வந்து விடுகிறேன்” என்று கிளம்பினான். சுபைதா முகத்தில் குதூகலம் தாணடவமாடியது. “பணம் ஏது? வேலை கிடைத்ததா?” ஆர்வத்Nதூடு கேட்டாள் அவள்.
இளைஞன் “வேலை கிடைக்கவில்லை, சுபைதா. கிடைக்கும் என்றும் தோன்றவில்லை. செலவுக்கு இருக்கட்டுமே என்று என் இரத்தத்தை விற்று இந்தப் பத்து ரூபாவை வாங்கிவந்தேன்” எ;னறு ஒரு விரக்தியோடு குறிப்பிட்டான் அவன்.
“இரத்தத்தை விற்பதா? எனக்கொன்றும் விளங்கவில்லையே” என்று திகிலுடன் வினவினாள் சுபைதா.
அவன் இலேசாகப் புன்னகை புரிந்தான். “இந்த விசயம் எனக்கும் தெரியாது சுபைதா. இன்று காலை ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியிலுள்ள நோயாளிகளுக்கு இரத்தம் வேண்டுமென்றும் அதற்குப் பதிலாக ரூபா பத்து கொடுக்கப்படுமென்றும் போட்டிருந்தார்க்ள. சரிதான் என்று நானும் ஜமால்தீனும் போனோம. எங்கள் உடம்பில் ஊசிப்போட்டு ஒவ்வொருவரிடமிருந்தும் முக்காற் போத்தல் இரத்தம் எடுத்து விட்டார்கள். பதிலுக்கு ரூபா பத்தும், பால் கோப்பியும் கொடுத்தார்கள்” என்றான் சிரித்துக்கொண்டு.
சுபைதா அவன் பாதி சொல்லி வரும்போதே “ஐயோ!” என்று அலறிவிட்டாள். “உங்கள் உடம்போ வாடிப்போயிருக்கிறது. இந்த நிலையிலே இருக்கற இரத்தத்தையும் கொடுத்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று மனமிடிந்து குறிப்பிட்டாள். சிறிது செல்லமீண்டும் அவள் “இதெல்லாம் எதற்காகச் செய்கறீர்கள். எனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தானே?” - என்று சொல்லி அவனது மெலிந்த தோளைக் கட்டிக்கொண்டாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் அவனது தோளில் விழுந்து நெஞ்சிலும்பட்டன.
“அழாதே சுபைதா, எப்பவுமே இப்படி இருக்காது. அல்லா அருள் புரிவார்” - என்று கூறி அவளது கண்களைத் துடைத்துpட்டான் அவன். ஆனால் அதே நேரத்தில் தனது கண்களில் கண்ணீர் துளிர்ப்பதை அவனால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
பார்வதி “ஐயோ பாவம்” என்று இரங்கினாள். பரமசிவன் “அவன் நம்பிக்கை வீண்போகாது” - என்று அங்கிருந்து கிளம்பினார். உமையவளும் அவரைப் பின் தொடர்ந்தாள்.
மீண்டும் ஆஸ்பத்திரிக் காட்சி, லோகநாயகனும் உலக மாதாவும் பழைய நோயாளியிடம் மீண்டார்கள்.
“ஆமாம், நீங்கள் அந்தச் சிவந்த திராவகத்தைப் பற்றி எனக்குச் சொல்லவில்லைத்தானே! நான் உங்களுடன் கோபம்” என்று பரமசிவனிடம் பார்வதி கோபித்துக் கொண்டாள்.
“கோபம் வேண்டாம், அம்மணி சொல்லிவிடுகிறேன். அந்த முஸ்லீம் இளைஞனின் இரத்தம்தான் அது. இந்த நோயாளியின் உடலிலிருந்து ஏராளமான இரத்தம் வெளியேறி உடல் பலவீனம் பட்டுப் போனதால் அந்த இரத்தத்தை இவன் உடலில் செலுத்தினார்கள். அவ்வளவுதான்” என்று விளக்கினார் பரமசிவன்.
இப்போது நோயாளிக்கு அறிவுத் தெளிவு ஏற்பட்டிருந்ததால் பக்கத்தில் உடகார்ந்திருந்த தன் உறவினரொவருவருடன் பேசிக்கொண்டிருந்தான்.
“அந்தத் துலுக்கப் பயலின் லொறி வந்து மோதி என்னை இப்படி ஆக்கிவிட்டது” என்று வெறுப்புமன் பேசினான் அவன்.
“வேலாயுதம்! உடம்பை அலட்டிக்கொள்ளாதே, படு” என்று கூறினார் பக்கத்திலிருந்து அவன் அண்ணா.
பார்வதிக்கு நோயாளியின் பேச்சுப் பிடிக்கவில்லை.
“துலுக்குப் பயல் என்று ஏளனமாகப் பேசுகிறானே, ஒரு துலுக்கப் பயல்தானே இவனுக்கு இரத்தம் கொடுத்தான்” என்றாள் அவள்.
பரமசிவன் விஷமப் புன்னகை புரிந்தார். “ஆமாம் பார்வதி, இந்துவான இவனது உடம்பில் முஸ்லீம்களின் இரத்தம் ஓடுவது விசித்திரமாயில்லையா? என்றார் பலமாகச் சிரித்துக்கொண்டு.
“உஷ் சிரிக்காதீர்கள்! யாராவது கேட்டுவிடப் போகிறார்கள் என்று எச்சரித்தாள் உமாதேவி. சிரிப்பின் உற்சாகத்தில் சங்கரர் தம்மை மறந்து ஒலியை உண்டாக்கி விடுவாரோ என்று லோகமாதாவுக்கு உள்ள+ரப்பயம்.
“தேவமொழிமட்டுமல்ல. தேவர்களின் சிரிப்பும் மானிடர்களுக்குக் கேட்பதில்லை” என்று விளக்கினார் சிவபிரான்.
பரமசிவனும் பார்வதியும் வான வீதி வழியே கைலையங்கிரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் ‘ஏயர்சிலோன்’ ஆகாயவிமானம் ஏக இரைச்சலோடு வந்தது. இருவருக்கும் ஒரு புறமாக ஒதுங்கிச் சென்றார்கள்.
விமானத்தின் இரைச்சல் அடங்கியதும் “கடவுளே, சிவபெருமானே! கைலாசபதி! என்னைக் காப்பாற்று! என் நோவைப் போக்கு” என்று நோயாளி வேலாயுதம் முனகுவது கேட்டது.
“அல்லாஹ{த் ஆலா! ஆண்டவனே! எத்தனை நாளைக்குத் தான் இந்தத் தரித்திர வாழ்வு! எங்களுக்கு நல்வாழ்வு அருளமாட்டாயா” என்று கொம்பனித்தெரு முடுக்கிலிருந்து இப்ராஹீமும் சுபைதாவும் தொழுது கொண்டிருப்பது அதைத் தொடர்ந்து கேட்டது.
பரமசிவனின் மலர்க் கண்களில் கருணை வெள்ளம் ஊற்றெடுத்தது. தன் வலது கரத்தை உயர்த்தி “உங்கள் மனோபீஷ்டங்கள் நிறைவேறட்டும்” என்று ஆசி வழங்கி விட்டு வான வீதியிலே நடந்தார் அவர். பராசக்தியின் உள்ளம் பூரித்தது.
- செம்பியன் செல்வனின் 'ஈழத்தமிழ்ச் சிறுகதை மணிகள்' நூலிலிருந்து..-
அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள் ... உள்ளே
அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'வெற்றியின் இரகசியங்கள்'
அறிஞர் அ.ந.கந்தசாமியின் 'மதமாற்றம்'
சிந்தனையும் மின்னொளியும்!
- அறிஞர் அ.ந.கந்தசாமி -
சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம்
ஆழ உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே,
வானம் நடுக்கமுற, வையமெல்லாம் கிடுகிடுக்க,
மோனத்தை வெட்டி யிடியொன்று மோதியதே!
'சட்' டென்று வானம் பொத்ததுபோல் பெருமாரி
கொட்டத்தொடங்கியது. 'ஹேர்' ரென்ற இரைச்சலுடன்
ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது.
ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று
சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த
ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா?
சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது.
ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
உலகம் சீரழிவிற்ற(து); அப்போ வானத்தில்
மாயும் உலகினுக்கு ஒளிவிளக்கந் தாங்கிவந்த
காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே.
கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே; சிந்தனையின் தரங்கங்கள்
ஊன்றியெழுந்தன இவ் வொளிமின்னல் செயல் என்னே?
வாழ்வோ கணநேரம்; கணநேரம் தானுமுண்டோ?
சாவும் பிறப்புமக் கணநேரத் தடங்குமன்றோ?
ஐனனப் படுக்கையிலே ஏழைமின்னல் தன்னுடைய
மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற
சேதி புதினமன்று; அச் சேதியிலே நான் காணும்
சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு
ஓடி மறைகிறது; வாழும் சிறு கணத்தில்
தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே!
சேவையதன் மூச்சு; அச்சேவை யிழந்தவுடன்
ஆவிபிரிந்து அகல்வானில் கலந்ததுவே!
என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன்.
மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும்.
வாழும்சிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே
நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும்.
இந்த வாறாகச் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டேன்.
புந்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி; நான்
இந்த உலகினிற்கு வந்தடைந்தேன்; என்னுடைய
சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ?
-அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையியிது. ஈழகேசரியில் வெளிவந்தது.-
எதிர்காலச் சித்தன் பாடல்!
எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால்யான்
ஏகிட்டேன் ஏகிட்ட போதில் என்முன்
கதிர்போலும் ஒளிமுகத்தான் கருனையூறும்
கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான்
"எதிர்கால உலகமிஃது மனிதா நீயிங்
கேன்வந்தாய் இவண்காணும் பலவுமுன்னை
அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் ஆதலாலே
அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.
அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன்
அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச்
'செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும்
செந்தமிழன் யானொருவன் ஆதலாலே
மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை
மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக்
குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான்
குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.
"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா
எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தர்
உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால்
உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா
மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில்
மடமையொரு மயக்கத்தின் ஆட்சி என்றும்
கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன்
காசினியின் பண்பிதனைக் காணப்பா நீ.
வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை
வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன்
"பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில்
பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு
ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம்
ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும்
நோக்கிடுவாய் தூரஎதிர் கால மீதே"
அண்டுபவர் அண்டாது செய்வதேது
அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன்
துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல்
தூய்மையாம் இனம்மொழிகள் மதங்க ளென்று
அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த
அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும்.
ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும்
ஒருமொழியில் ஓரரசு பிறக்குமப்பா.
அரசெல்லாம் ஒழிந்துலகில் ஓரரசே யுண்டாம்
அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் ஆகும்
விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம்
வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம்
சரசமொடு உலகத்து மககளெல்லாம் தம்மைச்
சமானர்கள் மனிதகுலம் என்ற இன மென்பார்
அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம்
அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.
செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும்
செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும்.
நந்தமிழர் இனஞ்சாகும் பிற இனமும் சாகும்
நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும்.
எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில்
எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு
அந்த மொழி தானப்பா அரசாளும் உண்மை
அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.
நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி
நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின்
புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் ஆகும்
புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார்.
இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
இம்மியள வேணும் மானமில்லா மூர்க்கன்
நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம்.
நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றிகழ்த்திடுவார்.
பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன்
பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன்.
பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம்.
பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே
வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார்
விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார்
அறிவற்றே துன்பங்கள் அனவர்க்கும் விளைப்பவர்
ஐய்யய்யோ இவர்மடமை என்னென்று சொல்வேன்.
புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன்
புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து
"எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன்.
எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நீவந்து
மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய
வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க
மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே
மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.
காலத்தின் கடல் தாவி நீங்கு வந்த
காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய்
ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்தி லுள்ளோர்.
ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா
காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால்
கட்டாயம் எனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார்
ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற
அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?
ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு
யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன்
காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக்
கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று.
பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும்
பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும்
தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு
திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?
வள்ளூவர் நினைவு!
- அ.ந.கந்தசாமி -
வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி
வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில்
தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும்
தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர்
விள்ளுகவி கேட்டோம்; பிறர்கவியும் கேட்டோம்
வேலணையூர் வீசுபுகழ் தொல்காவியல் மன்றில்
வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு
வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.
பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில்
பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே?
பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி
பரவிடுவேன் அதற்கும்பல் ஆதாரம் சொல்வேன்
நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை
நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான்
பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை
பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.
மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள
மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார்
விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர்
வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம்
இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும்
இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார்
இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம்
இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.
வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம்
வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே
வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர்
வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது
1"உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து)
உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார்
பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார்
பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.
வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார்
2"வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன்
உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று
உளம்வருந்து வானாயின்" என்பதவர் பாட்டு.
வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர்
வழுத்தினார் தன் பொருளை ஆவேசத்தோடு
3"தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சைஎடுத் திங்கே?
அவிவிதமேல் சாய்கஅந்த ஆண்டவனும்" என்றார்.
நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன்
செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம்
இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும்!
எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்!
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம்!
தீரட்டும் ஓயட்டும் தீயர்வெளி வேஷம்!
இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இழந்தோம்
ஏதிழந்தா லுமிந்தக் குறளொன்று போதும்.
கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில்
கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில்
கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை
கணக்கில்லா நூல்கலெள்ளாம் கடலோடு போச்சு!
கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த
காரியமோ யாமறியோம்! செந்தமிழர் நாட்டுக்
கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று
கவிராயர் சொலக்கூடும்! சத்தியமும் அதுவோ?
நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம்
நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம்
பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப்
பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து
ஊரிடத்தே எஞ்சிநின்றால் அஃதொன்று போதும்
உற்றகுறை எங்களுக்கு இல்லை இவன் யாதும்
நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க
நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் சூழ்க.
கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு
கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு
கலைந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று
கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று
விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை
வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை.
கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும்
கவினுடைய பாதையிலே பேனாவை ஓட்டும்.
செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின்
சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட
பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு
பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற
நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளீீர்
நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற
மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி
மகிழ்ந்திடுவீர் நீவிரிங்கு நீடூழி வாழி.
-வேலணையூர்த் தொல்காவிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை.-
நான் ஏன் எழுதுகிறேன்?
- அறிஞர் அ.ந.கந்தசாமி -
அப்பொழுது எனக்குப் பதினேழு வயது நடந்து கொண்டிருந்தது. உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும், துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்துவிட வேண்டுமென்று பேராசைகொண்ட காலம். காண்பதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும், வாழ்க்கை ஒரு வானவில் போலவும் தோன்றிய காலம். மின்னலோடு உரையாடவும், தென்றலோடு விளையாடவும் தெரிந்திருந்த காலம். மின்னல் என் உள்ளத்தே பேசியது. இதயத்தின் அடியில் நனவிலி உள்ளத்தில் புகுந்து கவிதை அசைவுகளை ஏற்படுத்தியது.
பலநாள் உருவற்று அசைந்த இக்கவிதா உணர்ச்சி ஒருநாள் பூரணத்துவம் பெற்று உருக்கொண்டது. எழுத்தில் வடித்தேன். "சிந்தனையும் மின்னொளியும்" என்ற தலைப்பில் இலங்கையின் ஓப்புயர்வற்ற இலக்கிய ஏடாக அன்று விளங்கிய 'ஈழகேசரி'யில் வெளிவந்தது.
இக்கவிதை ஒரு காரியாலயத்தில் மேசை முன்னுட்கார்ந்து என்னால் எழுதப்பட்டதல்ல. இயற்கையோடொன்றிய என் மனதில் தானே பிறந்த கவிக்குழதை இது. எனினும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலக்கிய சித்தாந்தங்கள் பலவற்றை ஆராய்ந்து நான் என்ம்னதில் ஏற்றுக் கொண்ட அதே கருத்துகளின் சாயலை இக்கவிதையில் என்னால் இன்று காண முடிகிறது.
மனோதத்துவ அறிஞர் மனதை நனவிலி மனம், நனவு மனம் என்று இரு கூறுகளாகப் பிரிக்கின்றனர். ஆங்கிலத்தில் இவற்றை முறையே Sub Conscious Mind, Conscious Mind என்று குறிப்பார்கள். "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற கேள்விக்கு நனவு மனத்திடம் பதில்பெற முடியாது. ஏனெனில் நனவு மனத்தைவிட சக்திவாய்ந்தது நனவிலி மனம் என்பதே மன இயல் அறிந்தவர் முடிவு. கவிதை பெரும்பாலும் நனவிலி மனதில் உருவாகி நனவு மனத்தின் வழியாகப் பிரவாகிக்கும் ஒன்றாகும். பின்னால் நான் ஏற்றுக்கொண்ட கருத்துகள் இக்கவிதையை எழுதிய நாளில் என் நனவிலி மனதில் துளிர்த்திருந்தவை தாம் என்பதையே இக்கவிதையில் நான் வலியுறுத்தும் தத்துவங்கள் இன்று எனக்குணர்த்துகின்றன.
இக்கவிதை எனது முதலாவது கவிதையல்ல. இதற்கு முன்னரே கல்லூரிச் சஞ்சிகையில் ஒன்றிரண்டு கவிதைகளை நான் எழுதியிருந்தேன். இருந்தாலும் இது என் ஆரம்ப இலக்கிய முயற்சிகளில் ஒன்று. எனவே "நான் ஏன் எழுதுகிறேன்?, எழுதினேன்?" என்பதற்கு இக்கவிதையில் பதில் காண முயற்சிப்பது பொருத்தமானதேயாகும்.
இக்கவிதையின் சில வரிகள் நினைவில் மிதந்து வருகின்றன.
"..கொட்டும் இடித்தாளம் இசைய நடம் செய்யும்
மட்டற்ற பேரழகு வான் வனிதை போல் மின்னல்
தோன்றி மறைந்ததுவே.
சிந்தனையின் தரங்கங்கள் ஊன்றி எழுந்தன.
இவ் ஒளி ம்ின்னல் செயல் என்னே!
வாழ்வோ கணநேரம்!
கணநேரந்தானும் உண்டோ?
சாவும் பிறப்பு அந்தக் கணநேரத்தடங்குமன்றோ?
....."
மின்னலின் வாழ்வு கணநேரம். ஆனால் அக்கண நேரத்தில்:
"..சூழம் இருள் நீங்கும்.
சுடர் விளக்குப் போலிங்கு
சோதி கொழுத்திச்
சோபிதததைச் செய்து விட்டு
ஓடி மறைகிறது...."
இம்மின்னல் எனக்குணர்த்தும் செய்தி என்ன? "சில நாட்களே நீ இவ்வுலகில் வாழ்ந்தாலும் மக்களுக்கும், உலகுக்கும் பயனுள்ளவனாக வாழ். இன்று நீ இருக்கிறாய். நாளை இறந்து விடலாம். ஆகவே நன்றே செய்க. அதையும் இன்றே செய்க" இது தான் மின்னல் சொல்லித் தரும் பாடம்.
இருளை விரட்டி ஒளியைப் பரப்பும் மின்னல் சமுதாயத்தில் சூழ்ந்துள்ள மடமை,வறுமை முதலான இருள்களை நீக்கி, அறிவையும் ஆனந்தத்தையும் பரப்பும்படி எனக்குப் பணித்தது. வாழ்க்கையையே இதற்காக அர்ப்பணிக்கவேண்டும் என்ற ஆசை மேலிட்ட நான் என் எழுத்தையும் அத்துறைக்கே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்ததில் வியப்பில்லை அல்லவா?
மனிதன் சமுதாயத்தின் ஒரு அங்கம். அவனுக்கு சமுதாயப் பொறுப்பொன்று உண்டு. வெறுமனே உண்ணுவதும், உறங்குவதும், புலனுகர்ச்சிகளில் ஈடுபடுவதும் வாழ்க்கையாகாது. அறிவு வளர்ச்சி பெற்ற மனிதன் இவற்றோடு வேறு சில காரியங்களையும் செய்ய விரும்புவான். மற்றவர் முகத்தின் புன்னகை தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் முல்லைமலர் போல் அவனுக்கு இன்பத்தையூட்டும். "இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும், துயரமும், அழுகையும், ஏக்கமும், கண்ணீரும், கம்பலையுமாக நாம் வாழுமுலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும், செல்வத்துக்கும் நடக்கும் போரும், அடிமைக்கும், ஆண்டானுக்கும் நடக்கும் போரும், உயர்சாதியானுக்கும் தாழ்ந்த சாதியானுக்கும் நடக்கும் போரும், அசுரசக்திகளுக்கும், மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போர்களினால் வாழ்வே ஒரு சோககீதமாகிவிட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்துவிட வேண்டும். அதன்ப பின்தான் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதைப் பூக்க வைக்கும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்ற கருத்தை உலகின் புகழ்பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்.
பிரெஞ்சுப் புரட்சி கண்ட ரூசோ, வால்டயர் தொடக்கம் மார்சிம் கோர்க்கி, எஹ்ரென்பேர்க் வரைக்கும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் இந்தச் செய்தியையே எனக்குக் கூறினர். பேர்னாட் ஷாவின் எழுத்துகளும் இன்றைய பேட்ரண்ட் ரசல் எழுத்துகளும் கூட சமுதாய முன்னேற்றத்துக்குரிய பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு காணும் பணியை அலட்சியம் செய்துவிடவில்லை. வங்கக் கவிஞர் தாகூரும், தமிழ்க் கவிஞன் பாரதியும் தாம் வாழ்ந்த சமுதாயத்தின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பணிக்குத் தமது பேனாக்களை அர்ப்பணம் செய்ய மறக்கவில்லை....உலகப் பண்பாட்டுப் பாடிய பாரதிதாசனும் சமுதாய ஊழல்களைச் சுட்டெரிக்கும் பணிக்குத் தன்னாளான சேவையைச் செய்திருக்கின்றான்.
"மக்கள் இலக்கியம்" என்ற கருத்தும் "சோஷலிஸ்ட் யதார்த்தம்" என்பனவுமே என் மனதைக் கவர்ந்த இலக்கிய சித்தாந்தங்களாக விளங்குகின்றன. எழுத்தாளன் வாழ்க்கையை விமர்சிப்பதுடன் நின்று விடக்கூடாது. அந்த விமர்சனத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை ஊட்டவேண்டும். அவ்வித நம்பிக்கையில்லாவிட்டால் முன்னேற்றமில்லை. வாழ்வே இல்லை. இவ்வித பிரக்ஞையில் பிறக்காமல் வெறுமனே யதார்த்தத்தை ஒரு சுத்த இலட்சியமாகக் கொண்டு எழுதும்போது நம்பிக்கைக்குப் பதில் அவநம்பிக்கையின் தொனிகளே கேட்க ஆரம்பிக்கலாம். நைந்த உள்ளத்தின் சோகக்குரலாகக் கேட்கும் எழுத்தால் பயனில்லை. நொந்த உள்ளத்தின் செயல் துணிவுகொண்ட வேகக் குரலாக அது ஒலிக்க வேண்டும். வாழ்வதற்கு நேரடியாகவோ, குறிப்பாகவோ, மெளனமாகவோ வழிகாட்டும் எழுத்தே எழுத்து. இந்தக் கருத்துகள் என்னை உந்துகின்றன. அவற்றுக்காகவே நான் எழுதுகின்றேன்.
எழுத்தில் பலவகை உண்டு. நேரடிப் பிரச்சார எழுத்து ஒருவகை. கதை, கவிதை, நாடகம் என்ற உருவங்களில் வாழ்க்கையின் படமாகவும் வழிகாட்டியாகவும் எழுதப்படுபவை வேறொருவகை. இந்த இரண்டாவது வகை எழுத்தே இலக்கியம். அதுவே நிலைத்து நிற்கும் தன்மை வாய்ந்தது. ஆகவே அதைப்பற்றியே நான் இங்கு அதிகமாகக் கூறியிருக்கிறேன். ஆனால் சோஷலிஸ யதார்த்தப் பாதையில் இலக்கியப் பணிபுரிவோர் வெறும் அழகையே நோக்காகக்கொண்ட கருத்துகள் இயற்கையாக மனதில் தோன்றும்பொழுது அவற்றை எழுதாது விட்டுவிட வேண்டுமா? நல்ல கருத்துகளைக் கருக்கிச் சாகவிட்டு விடவேண்டுமா என்று கேட்கப்படுகிறது.
பாரதி முற்போக்குக் கவிஞன். ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பாடிய அதே வாயால் 'கண்ணன் என் காதலனை'யும் பாடினான். ஆம், தோட்டக்காரன் கத்தரிக்காயையும், கீரையையும், தக்காளியையும் பயிரிடுகிறான். ஆனால் வீட்டு வாசலிலே மல்லிகைக் கொடியைப் படர விடுவதில்லையா? கத்தரித் தோட்டத்து வேலையின் களைப்புப் போக, மல்லிகைப் பந்தலின் நறுமணத்தை மகிழ்ச்சியோடு உறிஞ்சி மகிழ அதன் கீழ்ச் சென்று உட்காருவதில்லையா? எமக்கு நெல்லும் வேண்டும். கோதுமையும் வேண்டும். காய்கறிகளும் கிழங்குகளும் வேண்டும். ஆனால் ரோசா மலர்களும் வேண்டும். ரோசாமலர்களை மனநிறைவுக்காக நடும் தோட்டக்காரன் ரோசா மலர் நடுபவன் என்று சொல்லப்படமாட்டான். தோட்டக்காரன் என்றுதான் அழைக்கப்படுவான்.
பிள்ளையைத் தூங்க வைக்கத் தாலாட்டுப் பாடுவோம். ஏற்றமிறைக்கையில் ஏற்றப்பாட்டுப் பாடுவோம். அணிவகுப்பில் புரட்சிக் கீதம் பாடுவோம். ஆனால் குளிக்கும் அறையில் வெறும் ஸ்வரங்களை நாம் வாய்விட்டு இசைப்பதில்லையா?
சோஷலிச யதார்த்தப் பாதையில் முற்போக்கு இலக்கியம் சமைப்பவனைக் கடும் விலங்குகளால் கட்டிவிடக்கூடாது. பொதுவாக ஒரு எழுத்தாளன் எத்துறைக்குத் தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதைப் பார்க்க வேண்டும். அதில் அவன் சரியாக இருந்தால், மற்ற விஷயங்கள் சம்பந்தமாக நுணுக்கமாகச் சட்டதிட்டங்களை உண்டாக்குதல் அவன் கலைச் சுதந்திரத்தில் தலையிடுவதாகும்.
'சிந்தனையும் மின்னொளியும்' தொடக்கம் 'எதிர்காலச் சித்தன் பாட்டு 'வரை என் கருத்தோட்டம் ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஆனால் இடையிடையே ரோசாக்களையும் நான் நட்டதுண்டு. 'புரட்சிக் கீதம்' பாடாத வேளையில் 'காதல் கீதம்' பாடியதுமுண்டு. வெறும் சுவரங்களை இசைத்ததுமுண்டு. என்றாலும் என் பொதுவான இலட்சியம் ஒன்று. என் எழுத்துக்கள் மக்களை உயர்த்த வேண்டும். அவர்களின் போராட்டங்களில் எந்த அம்சத்தோடாவது அவை சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இந்த இலட்சியத்துக்காகவே நான் எழுத ஆசைப் படுகிறேன்.
ஆனால் போர்க்களத்தில்கூட பூக்கள் பூப்பதுண்டு. இதை நாம் மறக்கக்கூடாது. வாளேந்திப் போர்க்களம் புகும் வீரன் கூட தும்பை மாலையை கழுத்திலணிந்து செல்வது பண்டைத் தமிழ் நாட்டு வழக்கமாகும். இந்த விவகாரம் இக்கட்டுரைக்குப் புறப்பிரச்சினையானாலும் முற்போக்கு இலக்கியத்தோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையென்பதால் சில வார்த்தைகள் கூறும்படி நேரிட்டது. முடிவாக "எதற்காக எழுதுகிறேன்?" என்பதற்கு நான் இரத்தினச்சுருக்கமாகச் சில காரணங்களைக் கூறி இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.
முதலாவதாக என் வாழ்வு சமுதாயத்துக்குப் பயனுள்ளதாக வேண்டும் என்ற காரணம். சுரண்டலும் அநீதியும் நிறைந்த சமுதாயத்தை ஒழிக்கவும் புதிய ஒளிமிக்க சமுதாயத்தை தோற்றுவிக்கவும் என்னாலான பணியை எழுத்து மூலம் செய்ய வேண்டுமென்ற காரணம். இதனை நான் முன்னரே விரித்துக் கூறிவிட்டேன்.
இரண்டாவதாக எழுதும் கலை, பாடும் கலையைப் போல் எழுதுபவனுக்கு இன்பமூட்டும் கலை. எந்தவிதமான சிருஷ்டி வேலையிலுமே இயற்கை இன்பத்தைப் பொதித்து வைத்திருக்கிறது. அழகிய பதுமையைச் சிருஷ்டிப்பது தொடக்கம், தாயின் கருவில் ஒரு குழந்தையைச் சிருஷ்டிப்பது வரை எந்த சிருஷ்டி வேலையிலும் இன்பம் கிடைக்க வேண்டுமென்பது இயற்கையின் நியதிபோலும். எழுத்திலே உலகை மறக்கலாம். உள்ளக் கவலைகளை மறக்கலாம். அதனால்தான் உலகில் கவலைகளுக்கும், துன்பத்துக்கும் பெரிதும் ஆளாகிய எழுத்தாளர் பலர் புகழ்வாய்ந்த எழுத்தாளர்களாகி விடுகின்றனர்.
மூன்றாவதாக மனிதனுக்கு எதையாவது சாதிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களின் மதிப்பையும் அன்பையும் பெறவேண்டும். தான் ஒருவன் உலகில் இருப்பது சுற்றியுள்ள மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்ற ஆசை நனவிலி மனதில் என்றும் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். குழந்தை கூட தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டுமென்பதற்காகக் கையைத் தட்டுகிறது. ஆரவாரங்கள் செய்கிறது. இந்த ஆசையை நாம் வெளியரங்கமாகப் புரிந்து கொள்ள முடியாதிருக்கலாம். ஆனால் இவ்வித உள்மன ஊக்கங்களில் இருந்து நமக்கு விடுதலையில்லை. ஏனென்றால் நாம் மனிதர்கள். மனித மனத்தின் இயல்பு அப்படி.
[நன்றி: தேசாபிமானி, நுட்பம் & பதிவுகள்]
சிறுகதை: நள்ளிரவு
- அ.ந.கந்தசாமி -
‘நான் நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன்’ என்றான் அவன் சர்வதாரணமாக.அவன் பேச்சிலே துக்கமோ, துயரமோ, அல்லது ஏக்கத்தின் ரேகைகளோ தென்படவில்லை. அமைதியாகவும் ஒருவித விரக்தியோடும் பேசினான் அவன். என் மனதிலே சுந்தராம்பாள் பாடிய ‘சிறைச்சாலை ஈதென்ன செய்யும்’ என்ற பாடல் ஞாபகத்திற்கு வந்தது. அந்தப்பாட்டிலே கூறப்பட்ட ‘சரீராபிமானமற்ற ஞான தீரரில்’ இவன் ஒருவனோ என்று என்னுள் நானே கூறிக்கொண்டேன். ஆனால் அவன் பேச்சில் விரக்தி மட்டுமல்ல ஒருவித ஆனந்தம்கூட அலை வீசியது. ஜெயிலுக்குப் போவதற்கா இவ்வளவு தூரம் சந்தோசப்படுகிறான் என்று எண்ணினேன் நான்.என்னுடன் பேசிய ‘அவன்’ ரொம்பக்காலம் என்னுடன் பழகியவன் அல்ல. அன்றுதான் அகஸ்மாத்தாக அவனைச் சந்தித்தேன். இரவு சினிமாவில் இரண்டாவது ஆட்டம் பார்த்துவிட்டு தன்னந்தனியாக கொழும்பு நகரில் எனது அறையை நோக்கி வந்துகொண்டிருந்தேன். அப்போழுது திடீரென எங்கள் நட்புக்குதவியாக மழை பொழிய ஆரம்பித்தது. நான் ஓடோடிச் சென்று, மெயின்ஸ்ரீட்டும், பூந்தோட்ட வீதியும் சந்திக்கும் இடத்தில் உள்ள கட்டடத்தில் ஒடுங்கிக்கொண்டேன். பழைய கிறீஸ்தவ தேவாலயங்களைப் போல் பிரமாண்டமான வளைவுகள் உள்ள வராந்தாவுடன் கூடிய இக்கட்டடத்தைப் பல தெருத்திகம்பரர்கள் தமது திருப்பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்வது வழக்கம் என்பதை அப்படி ஒதுங்கியபோதுதான் தெரிந்துகொண்டேன்.
அங்குமிங்குமாய் சிலர் நீட்டி நிமிர்ந்தும் மடங்கி முடங்கியும் கூனிக் குறுகியும் படுத்துக் கிடந்தார்கள். ஒருசிலர் நித்திரையாகிவிட்டார்கள். இன்னும் சிலர் சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். மேலும் சிலர் மெல்லிய குரலில் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்.
நான் அங்கே ஒதுங்கி ஒருசில வினாடிக்குள் மழையின் வேகம் அதிகரித்தது. சாரல் வராந்தாவின் உள் சுவர்வரை வீசி அடித்தது. படுத்திருந்தவர்கள் எல்லோரும் எழுந்து விட்டார்கள். அங்குமிங்குமாக தமது படுக்கை இடங்களை மாற்றிக் கொண்டார்கள், அல்லது மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.
அந்தக் காட்சி எல்லாம் எனக்குப் புதுமையாகவும் கவர்ச்சி நிறைந்ததாகவும் தோன்றியது. அவற்றைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தேன். அப்பொழுதுதான் அங்கு மழையோடு போட்டி போட்டு வந்து வராந்தாவில் ஏறினான் அவன். பக்கத்திலே சந்தியிலிருந்த மின்சார வெளிச்சம் மழையால் மங்கி இருந்தபோதிலும் வராந்தாவில் ஒரு சிறிது வீழ்ந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சத்திலே அவனைக் கவனித்தேன். உற்சாகமான சிரித்த முகம். சுத்தமான ஷர்ட்டும், கோடுகளிட்ட வெள்ளைச் சாரமும், இடையில் ஒரு புலித்தோல் பெல்ட்டும் காட்சி அளித்தன. வயதில் வாலிபன். நன்றாக நனைந்து போயிருந்தான்.
‘இழவு பிடித்த மழை!’ என்று கூறிய அவன், என்னைப் பார்த்து “நீங்கள் மழையினால் இங்கு அகப்பட்டுக் கொண்டீர்களோ?” என்று கேட்டான்.
“ஆம்” என்றேன். அத்துடன் சம்பாஷிப்பது அந்த நேரத்திலே டானிக் போல உற்சாகம் தருவதாய் இருந்ததாலதனைத் தொடர விரும்பி “நீ எங்க அவசரமாய் போகின்றாய்?” என்றேன் சுமுகமாய்.
அவன் சிரித்தான். “இதுதான் எனது மாளிகை! படம் பார்த்துவிட்டு வருகிறேன், படுப்பதற்கு” இப்படியாக ஏற்பட்ட பேச்சு எங்கெல்லாமோ சுற்றி, எவ்விதமாகவோ வளைந்து வளைந்து சென்றது. அவன் நான் யார், எங்கிருக்கிறேன் என்பதையெல்லாம் விபரமாகக் கேட்டான். நான் பத்திரிகை ஆசிரிய பீடத்தைச் சேர்ந்தவன் என்றால் அவன் பயந்து திகைத்து விடுவானோ என்று அஞ்சி ஒரு கடையிலே சேல்ஸ்மேன் என்று கூறினேன்.
பேசிக்கொண்டிருக்கும்போதே அவன் சர்வசாதாரணமாக கஞ்சாச் சுருட்டொன்றைப் பற்றவைப்பதகாக அதற்கு வேண்டிய முஸ்தீபுகளைச் செய்ய ஆரம்பித்தான். மடியில் கஞ்சாவை எடுத்து கையில் வைத்துக் கசக்கினான். பின்னால் சிகரட்டைச் சீர்குலைத்து அதனுள்ளே அதைப் பொதிந்தான்.
என்னைப் பார்த்து “நீங்கள் கஞ்சா பிடிப்பதில்லையா?” என்றான் சிரித்துக் கொண்டு. “இல்லை” என்ற பாவத்தை முகத்தில் பரவவிட்டேன். “குளிருக்குக் கொஞ்சம் சூடேற்றிக் கொள்ளலாம், குடித்துப் பாருங்கள்” என்று வற்புறுத்தினான். அவன் பேச்சு, அவன் புன்னகை எல்லாமே என்னை அடிமை கொண்டிருந்தன. குடித்துத்தான் பார்ப்போமே என்று சிகரெட்டை வாங்கினேன். அவன் தன் கையிலிருந்த நெருப்புப் பெட்டியால் பற்றிவைத்து விட்டான்.
கஞ்சாப் புகையை உள்ளே இழுத்தேன். அந்தக் குளிருக்கு அது சிறிது தெம்பு தரத்தான் செய்தது. மழையோ இப்போது மேலும் அடித்துப் பெய்யத் தொடங்கியது. பொட்டுப் பொட்டாக ஆங்காங்கு பரந்து கிடந்த மின்சார வெளிச்சத்தில் தார் ரோடு எண்ணெயால் மெழுகியதுபோலப் பளபளத்தது.
எனக்குப் போதை உண்டாகியதோ என்னவோ தெரியாது; ஆனால் மஸ்துப் பொருட்களின் போதைக்கு ஒரு அபூர்வசக்தி உண்டு. மனிதனின் தன்னுணர்ச்சியையும், வெட்கத்தையும், பயத்தையும் போக்கடித்து விடுகிறது. இதன் காரணமாகத்தான் சிலர் போதையின் வயப்பட்டதும் வேதாந்தம் பேசுகிறார்கள். பயத்தாலோ வெட்கத்தாலோ அவர்கள் உள்ளக் கூஜாக்களில் அடைபட்டிருந்த வேதாந்தம் மெல்ல மெல்ல வெளியே கிளம்ப லாகிரிப்போதை மூடியைத் திறந்து விடுகின்றது.
நானும் நண்பனும் அளவளாவிப் பேசிக்கொண்டிருந்தோம். நான் ஐந்தாறு தடவை கஞ்சாவை இழுத்த பின்னர் குறைச் சிகரட்டை அவன் வாங்கிக் கொண்டான்.
நான் கேட்டேன்:
“நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறேன் என்றாயே, ஏன் போகிறாய்? என்ன குற்றஞ் செய்தாய்?”
அவன் சிரித்தான். “அதோ பார்த்தீர்களா ஒரு பெண் முடங்கிப் படுத்திருக்கிறாள்! அவளைப் பலாத்காரம் செய்ததாகக் குற்றச்சாட்டு”
“ஒருநாளிரவு கள்ளுக்கடை முடுக்கிலே அவளைப் பலாத்காரம் செய்கையில் பொலிசார் பிடித்து வழக்குப் போட்டுவிட்டனர்” என்று கூறி அவன் கலகலவெனச் சிரித்தான்.
“யார் அந்தப் பெண்?” என்றேன் ஆவலுடன்.
“அவளா? யாரென்று யாருக்குத் தெரியும்! ஆனால் அவள் பக்கத்திலே படுத்திருக்கிறதே குழந்தை, அது என் குழந்தைதான்!”
“அப்போ அவள் உன் மனைவியா?”
அவன் முகத்தைச் சுளித்தான். “அவள் எல்லோருக்கும் மனைவிதான். ஆனால் என்னிடம் மட்டும் அவளுக்குச் சிறிது அதிகப் பிரியம்! நானும் அப்படித்தான்!”
எனக்கு ஒரு விசயம் ஒரே புதிராகிவிட்டது. கஞ்சா மயக்கத்தில் முன்னுக்குப் பின் முரணாக அவன் பேசுகிறானோ, அல்லது எனக்குத்தானவன் ஒன்றுபேச வேறொன்று கேட்கிறதா என்ற சந்தேகம் ஜனித்தது.
எனது நண்பன் இப்பொழுது அந்தப் பெண்ணிருந்த பக்கத்துக்குச் சென்றான். நிச்சிந்தையாகத் துயின்று கொண்டிருந்த அவளுக்கு அருகில் சென்று, “பேபி பேபி” என்று கூப்பிட்டான். அதை அவள் எதிர்பார்த்துத் துயின்றுகொண்டிருந்தவள் போல எழுந்து உட்கார்ந்தாள். கண்களை கசக்கி விட்டுக் கொண்டாள். பின் அவர்கள் இருவரும் ஏதோ சில வார்த்தைகள் குசு குசுவென்று பேசிக்கொண்டிருந்தனர். இரண்டு நிமிஷத்தில் நண்பன் மீண்டும் என்னிடம் வந்தான். அவன் கையில் வெற்றிலை பாக்கு நிறைய இருந்தது.
“நீங்கள் வெற்றிலை பாக்கு போடுவீர்களா?” என்று என்னிடம் கேட்டான் அவன். நான் வெற்றிலை பாக்குப் போடுவதில்லை. என் மனதில் ஆச்சரியமும் இந்த வினோதமான காதலர்களின் தன்மையை அறிவதில் அவாவும் அதிகமாகி இருந்தது. இவர்கள் காதலர்களா? அல்லது பலாத்கார வழக்கிலே சம்பந்தப்பட்ட இ பகைவர்களா? அவன் கூறுவதின்படி அவர்கள் இண்டுமென்று அர்த்தமாகிறது. குளிர்ந்த நீர் கையை வைத்ததும் கையைச் சுட்டது என்று கூறுவது போல் இந்தது, இத வினோதச் செய்தி. இன் பூரா விபரங்களையும் அறிய வேண்டுமென்ற ஆவல் அடக்க முடியாமல் என் மனதிலே கிளம்பியது.
மீண்டும் சம்பாஷணையில் ஓட்டத்தை உண்டாக்குவதற்காக “நீ என்ன தொழில் செய்கிறாய்?” என்று அவனிடம் கேட்டேன்.
அவன் அர்த்தபுஷ்டியுடன் புன்னகை புரிந்தான். “தொழில் எதுவென்றிருக்கிறது? எப்படியும் ஜீவனோபாயம் நடந்தாற் சரிதானே?” என்று வேதாந்தி போல் பேசினான் அவன்.
“அப்படியானால்..” என்று ஆரம்பித்த வசனத்தை பூர்த்தி செய்யாது நிறுத்தினேன் நான்.
அவன் சிரித்தான்.
மழை இப்பொழுது முன்னிலும் திடீர் வேகத்தோடு பெய்ய ஆரம்பித்தது. இடிகள் வானவெளியிலே உருண்டுருண்டு சப்தித்தன. வானம் தன் மூடிய கண்களைத் திறந்து உலகை ஒருதடவை பார்த்து பின் படீரென்று இமைக் கதவுகளை மூடிக்கொள்வது போல மின்னல் ஒன்று பளிச்சிட்டு மறைந்தது.
எனக்கு ஒரே ஆச்சரியமாயிருந்தது. புத்திசாலியாகவும், நேர்மை உள்ளவனாகவும் தோன்றும் இவன் பிக்பாக்கட்டா? ம். அவன் நேர்மையுள்ளவன்தான். இல்லாவிட்டால் தான் பிக்பாக்கட் என்பதைக் கூறிவிடுவானா? இந்த முடிச்சுமாறிக்கும் சமூகத்தின் இதர கள்வர்களுக்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அவர்கள் தம் போக்கை மூடி மறைத்துக் கண்ணியம் நிறைந்தவர்களாக நடிக்கிறார்கள். இவனோ உண்மையைக் கூறிவிடுகிறான். இதன் காரணமாக என் உள்ளத்தில் ஒரு மகாத்மாவாக, சத்தியவந்தனாகத் தோன்றினான் அவன்.
“அப்படியானால் உனக்கு ஒழுங்கான வருமானம் கிடைக்காதே! ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பாதிப்பாய்?” என்று சாதாரணமாகக் கேட்டேன்.
உலகத்திலே எல்லோரும் பிக்பாக்கட்டைப் பற்றிப் பேசுகிறார்கள். ட்ராமிலும், பஸ்ஸிலும், சினிமா நெருக்கடியிலும், அங்கிங்கெனாதபடி நிறைந்திருப்பவன் போல, நகரத்தில் மடியில் கனமுள்ள எவரும் அவனை ஞாபகப்படுத்தி அஞ்சிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஆயிரத்தில் ஒருவனுக்குத்தானும் அவன் நேரில் காட்சியளிப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒருவகை உடையைக் கொண்டு இவன் பிக்பாக்கட்டாயிருக்கலாம் என அனுமானிக்க முடிகிறதே அல்லாமல் நிச்சயம் செய்து கூறுவதற்கில்லை. பழைய காலத்து ‘சதாரம்’ நாடகத்தில் கள்ள உடைபோட்டு ‘கொள்ளையடிக்க போவோமடா’ என்று பாடிவரும் கொள்ளைக்காரர்கள் நாடகத்திற்குத்தான் சரியேயல்லாமல், வாழ்க்கையில் நாம் காணக்கூடியவர்கள் அல்ல. பிக்பாக்கட்டுக்கள் தீயணைக்கும் வீரர்கள் போல் அதற்கென்றுள்ள உடையை உடுத்துக்கொண்டா தமது தொழிலுக்குப் போகப் போகிறார்கள்? – பார்க்கப்போனால் கடவுள் போல் இவர்களும் பலர் மனதிலே அரூபிகளாகத்தான் விளங்க முடியும். ஒரு சிலர் பிடிபடுவதும் உண்மைதான்! ஆனால் அவர்கள் உண்மைக் குற்றவாளிகள்தாம் என்பதை யார் கண்டார்கள்?
என் மனதிலும் ‘பிக்பாக்கெட்’ என்பவன் நகரில் அங்கிங்கெனாதபடி நிறைந்திருக்கும் ஒரு அரூபியாகத்தான் இதுவரை இருந்தான்.
ஆனால் இப்பொழுதோ என் கண்முன் காட்சி தந்துவிட்டான். என்புதோல் போர்த்த சதையுடம்புடனே நிற்கும் அவனது அந்தரங்கங்களை எல்லாம் கூடிய அளவு தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை, அந்த ஆசையில்தான் ‘எவ்வளவு சம்பாதிப்பாய்?’ என்ற கேள்வி என் உள்ளத்தில் ஜனித்து வாயினால் வெளிப்பட்டது.
“மாதம் முடிந்ததும் இவ்வளவு கிடைக்கும் என்று நிச்சயமாய்ச் சொல்லக்கூடிய தொழிலல்ல இது. சில சமயம் ஒன்றுமே கிடைக்காது.”
எனக்கு இதிலே மனம் படியவில்லை. என் உள்ளத்தை அலைக்கழித்த அந்தப் பெண்ணின் விவகாரத்திற்கு எப்படி வருவது என்று தெரியவில்லை. இருந்தும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு “ஆமாம், நீ நாளைக்கு ஜெயிலுக்குப் போகிறாயே, உனக்கு கவலையாய் இல்லையா? பயம் கிடையாதா?” என்று அந்தத் திசைக்கு சம்பாஷணையைத் திருப்புவதற்குச் சாதகமான முறையில் என் பேச்சை ஆரம்பித்தேன்.
அவன் இதற்கும் தன் புன்னகையுடனேயே பதிலளித்தான். “பன்னிரண்டாவது தடவையாக ராஜா வீட்டுக்குப் போகிறேன், பயமா? எதற்கு?” என்றான் அவன்.
ஆரம்பத்திலிருந்தே அவன் பேச்சு, செயல் எல்லாம் எனக்குப் புதுமையாயிருந்தன. ஆனால் இப்பொழுதோ அந்தப் புதுமையின் உச்சியை நான் எட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்ற ஆரம்பித்தது.
அவன் மேலும் தொடர்ந்தான். “ஜெயிலிலே எனக்கு எல்லோரும் நண்பர்கள்தான். உண்மையில் அங்கிருந்து நான் வெளியே வந்து ஒண்ணரை மாதந்தான் ஆகிறது. பத்துப் பன்னிரண்டு பேர்களைத் தவிர அனேகமாக மற்ற நண்பர்களெல்லாம் இன்னும் அங்குதான் இருப்பார்கள்..”
ஏதோ நண்பர்களைச் சந்திக்க வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு செல்லும் ஒருவன் போல அவன் பேசினான். மறியற்சாலை அவனைத் தன் இருண்ட அறைகளைக் கொண்டு பயமுறுத்தவில்லை. அவன் வர்ணனையைப் பார்த்தால் அவனை அது மயக்கி அழைப்பது போலத் தெரிந்தது.
நான் அவன் முகத்தை நோக்கினேன். கஞ்சா நெருப்பு இப்பொழுது தன் முடிவான கட்டத்தை அடைந்து கொண்டிருந்தது. மழை நேரத்தில் குளிர்ந்த பாரமான காற்றினாற் போகும் புகை விரைவாக மேலெழுந்து மறையவில்லை. ஆறுதலாக சுருள் சுருளாக மாடிப்படிகளில் சிரத்தையோடு ஏறும் ஒரு குழந்தை போல மெல்ல மெல்ல எழுந்து கொண்டிருந்தது. அதனூடாக அவன் கண்களைப் பார்த்தேன். அதில் ஒளியும் இன்பமும் அலைவீசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், ஆச்சரியம் மேலும் அதிகமாகியது.
“அப்போது சிறைக்குப் போவது உனக்குப் பிரியமென்று சொல்லு!”
“சந்தேகமில்லாமல்”
“ஏன்? அங்கே என்ன அவ்வளவு விஷேசமிருக்கிறது?”
“என்ன இருக்கிறதா? அப்போது உங்களுக்குச் சிறையைப் பற்றி ஒன்றுமே தெரியாதென்று சொல்லுங்கள்”
குருவின் சொற்களை ஆவலுடன் எதிர்நோக்கும் பக்தி நிறைந்த ஒரு சிஷ்யன்போல அவன் வார்த்தைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
“இந்த மழை ஓய்ந்ததன் பிறகு நீங்கள் உங்கள் வீட்டுக்கோ கடைக்கோ செல்வீர்கள். அடைமழை இரவுக்கும் நித்திரைக்கும் நல்ல பொருத்தம். நன்றாகத் தூக்கம் வருமல்லவா?”
நான் தலையை ‘ஆம்’ என்ற பாவனையில் அசைத்தேன்.
“எனக்கும் தூக்கம் வரும். ஆனால் துங்கத்தான் இடமில்லை! பார்த்தீர்களா நமது மாளிகை எப்படி ஈரமாய் போய்விட்டதென்று.”
கதை சுவாரஸ்யத்தில் ஈடுபட்டிருந்த நான் அப்போது தான் நிலத்தை நோக்கினேன்; காலிலே செருப்பு அணிந்து இருந்ததால் சுற்றிலுமிருந்த ஈரம் என்னை அவ்வளவாகத் தாக்கவில்லை. அவன் கால்களை நோக்கினேன். அவை ஈரத் தரையில் பதிந்து சிறிது வெளிறி இருந்தன.
குளிர்ந்த காற்றொன்று மழைச் சாரலை உள்ளே அடித்து வீசியது. உடம்பிலே சிலிர்ப்பும் நடுக்கமும் சிறிது தோன்றின.
“நீங்கள் சாப்பிட்டுவிட்டீர்களா?” என்று என்னை விசாரித்தான் அந்த அதிசய நண்பன்.
“சாப்பிட்டுவிட்டுத்தான் படம் பார்க்கக் கிளம்பினேன்” என்றதும் அவன் சிறிது நேரம் மெளனமாக இருந்தான். எதையோ பேச அவன் கூச்சமடைந்தானென்று தெரிந்தது.
பேசிக்கொண்டிருந்தவர்கள் மெளனமாகியதும் காதிலே மழையின் ‘ஓ’வென்ற இரைச்சல் ரீங்காரம் செய்ய ஆரம்பித்தது. அந்த ஓசையிலே ஒரு தனிமையுணர்ச்சி இருப்பது போல எனக்குப் பட்டது. வானம் யாரை நினைத்து இவ்வளவு கண்ணீரையும் கொட்டி ஓவென்று அழுதுகொண்டிருக்கிறதோ? என்ற வினோதமான கற்பனை என் மனதிலே தோன்றியது.
“நீ சாப்பிட்டு விட்டாயா?” என்றேன்.
“இன்று இந்தக் கஞ்சாவோடு சரி! ஒரு டீ அடித்துவிட்டுப் படுக்க வேண்டியதுதான்! ஆமாம், நீங்கள் கேட்டீர்களே, ஜெயிலிலே என்ன சுகமென்று. நேரத்துக்கு உணவு! இது போன்ற அடைமழை நேரத்தில் இருண்ட சிறைச்சாலை ‘கம்’ என்றிருக்கும். நல்லாக நித்திரை வரும்! அந்தக் கருங்கற் சுவர்களை மீறிக் குளிர் உள்ளே நுழைந்துவிட முடியாது..”
நான் திகைத்து விட்டேன்.
அடிமைத்தனத்திலே கிடைக்கும் சுகத்தை விரும்பிய இவன் சிறையை நாடுகிறான்! என் மனதைச் சிறிது நேரத்தின் முன் கவர்ந்து நின்ற அவனது உருவம் இப்பொழுது வெறுக்கத்தக்கதாகத் தோன்ற ஆரம்பித்தது. இப்படியும் ஒரு மனித ஜன்மம்! ஒருவேளை ஆகாரத்துக்காக தனது சுதந்திரத்தையே விற்கத் தயாராகி விடுகிறதா?
“அப்படியானால் உன் சுதந்திரம் பறிபோவதைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா?” என்றேன் நான்.
“சுதந்திரம்!.. ஜெயிலுக்குப் போனதும் அடுத்த வேளை உணவு எங்கே கிடைக்கும் என்பது போன்ற கவலையிலிருந்து விடுதலை கிடைக்குமல்லவா?” என்றான் அவன்.
என் சிந்தனையில் புதிய அலைகளைக் கிளறிவிடும் அவன் பிக்பாக்கட் என்று என்னால் நம்ப முடியவில்லை. என் உள்ளத்திலே மீண்டும் மோகனரூபம் பெற்றான் அவன்.
“அப்படியானால் ஜெயிலுக்குப் போக நீயேதான் சந்தர்ப்பத்தை சிருஷ்டித்துக் கொண்டாயா?”
அவன் இதற்கும் தன் சிரிப்புடனேயே பதில் தந்தான். அவனது கசந்த வாழ்விலே எப்படி இந்தச் சிரிப்பென்னும் இனிமை உதயம் ஆகிறது என்று ஆச்சரியப்பட்டேன் நான்.
“ம் அந்தப் பெண்ணின் ஒத்தாசையால் அது முடிந்தது. நான் என்ன சொன்னாலும் அவள் அதை மறுக்கமாட்டாள். அவளுக்கு என் மீது அவ்வளவு பிரியம். அன்று பொலீஸ்காரர் ரோந்துவரும் நேரத்தில் பலாத்கார நாடகத்தை நடத்தினோம். அவள் பலே கெட்டிக்காரி. ‘டவர்ஹால்’ நடிகைகள் கூட அவள்மாதிரி நடிக்க மாட்டார்கள்! அவ்வளவு கூச்சல் போட்டாள் அவள்.. அடுத்த நாள் கோட்டில் ஜரானோம்” என்று கூறிச் சற்று நிறுத்தினான் அவன்.
“அங்கே குற்றத்தை ஒப்புகொண்டாயாக்கும்” என்றேன் நான்.
“இல்லை! நாளைத் தவணையன்றுதான் ஒப்புக்கொள்ளப் போகிறேன்” என்று விளக்கினான் அவன். இதுவரை பிணையிலிருந்து வருவதாகவும் அவனது கோஷ்டியில் ஒருவன் இப்பொழுது வர்த்தகத் துறையில் சிறிது முன்னேறி வந்ததாகவும் அவனே தனக்குப் பிணை கொடுக்க முன்வந்ததாகவும் மற்ற விபரங்களையும் தெளிவுபடுத்தினான்.
“நாளை குற்றத்தை ஒப்புக்கொண்டால் குறைந்த பட்சம் ஆறுமாதம் சிறைவாசம் நிச்சயம்!”
விஷமம் செய்து ‘ஓ’வென்று கூச்சலிட்டு அழுதுகொண்டிருந்த இளம் சிறுமி ஒருத்தி படிப்படியே காரம் குறைந்து பின்னர் நீண்ட நேரம் சிணுங்கிக்கொண்டு உட்கார்ந்து விடுவது போல வேகமும், வலியும் குன்று மழை மந்த நடை போட்டுக் கொண்டிருந்தது. என்னுடைய உள்ளத்தில் தாண்டவமாடிய பல கேள்விகளுக்கும் பதில் கிடைத்து விட்டதால், அங்கும் சிந்தனைக்குகந்த ஒரு மந்தமான சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது.
மணிக்கூண்டுக் கோபுரம் சமீபத்தில்தான் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். இரண்டு மணிக்கு பதினைந்து நிமிசங்கள் இருந்தன. ஒரு கூப்பிடு தொலைவில் தேநீர்க்கடை இருந்தது. தூறலிடையே அங்கு நண்பனையும் அழைத்துச் சென்று தேநீர் அருந்தினேன். நானே தேநீருக்குப் பணத்தைச் செலுத்தினேன்.
கடையிலிருந்து வெளியே வரும்போது மழை முற்றாக நின்று விட்டது. அவனிடம் விடைபெற்றுக்கொண்டு நான் ஜம்பட்டா வீதியில் உள்ள என் விடுதியை நோக்கி நடந்து கொண்டிருந்தேன்.
சிறையை விரும்பி அங்கே செல்ல முனைந்த அந்த இளைஞன் எழுப்பிய எண்ணங்கள் மனதிலே சுழன்று கொண்டிருந்தன. அவன் கல்லால் ஆகிய சிறையை விரும்புவது நாட்டிலுள்ள பசி பட்டினி என்னும் சிறைகளிலிருந்து ஓரளவு விடுபடவே என்பதை நினைத்ததும் தான் அச்சிறைகள் எவ்வளவு பயங்கரமானவை என்பது எனக்குத் தெரிய ஆரம்பித்தது. குற்றம் புரியாமலே குற்றம் புரிந்ததாகச் சட்டத்தை ஏமாற்றி அதனால் கிடைக்கும் தண்டனையை அடைந்து சுகிப்பதற்கு ஒருவன் முன்வருகிறான் என்றால் அது நம் சமுதாய அமைப்பின் ஓட்டையையே காட்டுகிறது என்ற எண்ணமும் என் உள்ளத்தில் பளிச்சிட்டது.
வீதியிலே யாருமில்லை. என் செருப்பின் சப்தம் மட்டுமே என்னைப் பயமுறுத்துவதுபோல ஒலித்துக் கொண்டிருந்தது. யாரோ ஒருவன் ஒரு குறுக்குத் தெருவில் இருந்து ஒரு ‘கொக்கை’த்தடியுடன் அங்கே பிரசன்னமானான். மழையின் காரணமாக எங்கோ ஒதுங்கி இருந்து விட்ட நகரசபையின் இருட்டடிப்புத் தொழிலாளியான அவன் மின்சாரதீபங்களை அணைத்துச் சென்று கொண்டிருந்தான். இருளின் தூதுவனாக நடந்து கொண்டிருந்த அவன் மக்கள் வாழ்வில் இருளைப் பரப்பி நின்ற இன்றைய சமுதாயத்தைத்தான் எனக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருந்தான்!
“உழைக்கப்பிறந்தவர்கள்”
1950
பதிவுகள் ஜனவரி 2003 இதழ் 37