- மாம்பொழிலாள் புத்தரின் புனிதச்சின்னம். பேரழகின் ஓர் உருவாய் அமைந்த அவள் ஒரு கணிகையாய் வாழ்ந்து பின் போதி மாதவனின் அட்டாங்க மார்க்கத்தில் ஆட்கொள்ளப்பட்டவள். அம்பபாலி என்று அழைக்கப்பட்ட அம்மாஞ்சோலை மங்கையைக் காவிய நாயகியாக்கி அ.ந.கந்தசாமி அவர்கள் புனைந்துள்ள மாம்பொழிலாள் என்ற சிறு காப்பியத்தின் சில பகுதிகளை 'நோக்கு' இங்கே தன் வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் அளிக்கிறது [ஆ-ர்]
எங்கிருந்து வந்தாள்?
எங்கிருந்து வந்தாளோ எழிலரசி யாமறியோம்
தங்கத்தை உருக்கிஅதில் தாவிவரும் உயிர்வார்த்துப்
பொங்குகின்ற பேரழகு பூரித்து நிற்கும்நல்
அங்கங்கள் அமைந்திங்கே ஆரனுப்பி னார்அவளை?
வானத்துச் சந்திரனை வாவியிலே தாமரையை
கானத்து மாமயிலைக் காரிகையார் குலத்தினையே
மோனத்தில் மூழ்கிஇவண் முற்றுவித்த பேரயனார்
தேனொத்த சேயிழையைத் தெரிந்திங்கு படைக்கையிலே
அதுவரையும் தான்படைத்த அழகென்னும் பொருளெல்லாம்
மதுவொத்த மைவிழியாள் மலருடலின் அழகின்முன்
இதுவெல்லாம் ஓர்அழகோ இன்பப்பூங் கொடிஇவளின்
மெதுவுடலின் அழகன்றோ அழகென்று மேதினியார்
மெச்சட்டும் என்றிங்கு மெலச்செய்து விட்டானோ?
நச்சொச்ச நயனத்தின் நளினத்தின் வயப்பட்டு
விச்சவிநாட் டிளைஞர்கள் வல்லியவள் லீலைக்காய்
சச்சரவிட் டுலகம்இது சாயட்டும் என்றெண்ணி
சூதாகச் சுடர்விழியாள் சுவைமிக்க நல்லமுதை
மாதாக அனுப்பினனோ மாஞ்சோலை மன்றுக்கு
ஏதெந்தக் காரணத்தால் ஏந்திழையை அனுப்பிடினும்
போதொத்தாள் போந்ததனால் பொலிவுற்ற தப்பொழிலே.
குயிற்பேடு பாட்டிசைக்கக் கோலமயில் zசதிராடும்
பயிலும்வெண் சிறையன்னம் பதுமமலர் வீற்றிருக்கும்
வெயிலணுகா நிழல்சூழ்ந்து வேனில்வேள் பாசறைபோல்
கயல்புரளும் ஓடைபல கவினூட்டும் அப்பொழிலில்
பளிங்குமா மண்டபமோர் பாங்கரிலே அமைந்திருந்து
களங்கமிலாப் பேரழகுக் காட்சி இவண் நல்கியது
வளங்கொழிக்கும் மாஞ்சோலை வனப்பினுக்கு வனப்பளிக்கும்
பளிங்குமா மண்டபத்திற் பாவையிவள் துயில்கின்றாள்.
மாம்பொழிலாள் நடனம்!
மத்தள மெத்த முழங்க முழங்க
மாங்குயி லோஎனக் கீதம் இசைக்க
தத்தரி நெடுங்கண் திசைகளில் ஓடத்
தாம்தீம் ததிங்கிண தோம்தோம் என்று
முத்தன மூரல் மென்மதி சிந்தி
முனிவரும் தங்கள் யோகம் மறப்ப
பத்தரை மாற்றுத் தங்கம் அனையாள்
பாரத சாத்திரச் சதிர்பயின் றாளே.
கட்டிள மெல்லுடல் கைகள் அசைய
கமல்பொற் பாதச் சலங்கை கிலுங்க
மொட்டிள முலைகள் முந்திடக் கன்னி
மோகன மெல்லிசை தானும் அசைய
பட்டுடை காற்றில் விசிறி அலைய
பார்ப்பவர் நெஞ்சினிற் காதலை மூட்டி
கட்டுட லாளந்த மாம்பொழி லாள்தன்
கண்களை வீசிச் சதிர்இடு கின்றாள்.
ஆடகப் பொன்னணி மன்னிடக் காலில்
அழகு சிலம்பு புலம்பிட நங்கை
நாடக மாடுதல் கண்டிடு நம்பியர்
நங்கையின் வேல்விழி உண்டிடுகின்றார்
கூடுதல் வேண்டிக் குமைந்திடு கின்றார்
குறிதவ றாதே ஐம்மலர் மன்மத
வேடுவன் வீசிடு வெங்கணை தன்னால்
வெய்துயிர்த் திட்டார் வெந்திடுகின்றார்.
கோல்வளை வேல்விழி கொன்றிட லாலே
குமரர்கள் கோதையின் தாமரை போலும்
கால்தனில் நூபுரக் கிண்கிணி யாகி
கன்னியின் மெல்லுடல் தழுவ நினைந்தார்.
கன்னிகை யாளோர் கதிரொளி மின்னல்
காசினி வந்தே ஆடுதல் போல
புன்னகைப் பூவினை அள்ளி எறிந்து
புதுநட மிடுமக் காட்சியைக் கண்டு
மன்னவன் விச்சவி மகிபனின் மைந்தர்
மையலில் மூழ்கித் தனித்திட லானார்
மின்னிடை யாளின் பொன்னணி மேனி
முயங்கிட வேண்டி மயங்கிநின் றாரே.
- நோக்கு, வேனினிதழ் 1964. -
அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) கவிதைகள்!
ஈழத்து இலக்கிய உலகில் கவிதை, சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, இலக்கியத்திறனாய்வு மற்றும் நாடகம் என அனைத்துப் பிரிவுகளிலும் காத்திரமான பங்களிப்பினைச் செய்து சாதனை புரிந்தவர் அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள். அவர் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும் கருதப்படுபவர். அ.ந.கந்தசாமி அவர்களின் கவிதைப் பங்களிப்பை எடுத்துரைப்பதற்காக எம்மிடமுள்ள அவரது கவிதைகள் ஒவ்வொன்றாகப் பிரசுரமாகும். கவிதைகள் சில தட்டச்சு செய்த நிலையில் கிடைத்தன. அவற்றில் சில எழுத்துப்பிழைகள் இருக்கலாம். எனவே அவ்வப்போது மூலப்பிரதிகள் கிடைக்கும்போது அவை ஒப்பு நோக்கப்பட்டுத் திருத்தப்படும். அ.ந.க எத்தனை கவிதைகள் எழுதியிருக்கின்றார் என்பது சரியாகத்தெரியவில்லை. ஆனால் இதுவரை அவர் எழுதிய கவிதைகளில் எமக்குக் கிடைத்த கவிதைகள் இங்கு பிரசுரமாகும். அ.ந.க.வின் ஏனைய கவிதைகள் பற்றி அறிந்தவர்கள் அறியத்தரவும். ஈழத்தில் அவர் காலத்தில் வெளியான பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றைத்தேடிப்பார்ப்பதன் மூலமே அவர் எழுதிய கவிதைகள் பற்றிய மேலதிக விபரங்களைப்பெற முடியும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.