[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ]
முதல் அத்தியாயம் - பணக்கார வீட்டுப் பிள்ளை
ஒருவன் ஏழை வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனால் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது. ஆனால் பணக்கார வீட்டில் பிள்ளையாகப் பிறந்தால் அதனாலும் பிரச்சனைகளில்லாமல் இல்லை. ஸ்ரீதரைப் பல காலமாக அலைத்து வந்தப் பிரச்சினை அவன் மிகப் பெரியதொரு பணக்கார வீட்டில் பிள்ளையாய் பிறந்திருந்தான் என்பதுதான். பணக்கார வீட்டுப் பிள்ளைக்கு எவ்வளவு கஷ்டங்கள் என்பது அவனுக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவன் அவற்றைத் தன் சின்ன வயதிலிருந்தே அனுபவித்து வந்திருக்கிறான். உதாரணமாக அவர்களது பெரிய மாளிகைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு பொக்கு வாய் கிழவி தட்டிக் கடை நடத்தி வந்தாள். அந்தக் கிழவியைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு அவனது இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் அச்சிடப்பட்டிருந்த ஒளவையாரின் படம் நினைவுக்கு வராதிருப்பதில்லை. "ஒரு வேளை இந்தக் கிழவியும் ஒளவையாரைப் போலக் கவி பாட வல்லவளோ?" என்று கூட ஓரொரு சமயம் அவன் எண்ணியதுண்டு.