27-ம் அத்தியாயம்: ஈடிப்பஸ் நாடகம்
ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாளை நிர்ணயிப்பதில் பேராசிரியர் நோர்த்லிக்குப் பலத்த சிரமம் ஏற்பட்டது. முதலாவதாக அவருக்கிருந்த பிரச்சினை காலப் பிரச்சினை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் அவரால் இலங்கையில் தங்கியிருக்க முடியாதிருந்தது. அவரது தாய்நாட்டில் அவருக்காக எப்பொழுதும் குவிந்திருக்கும் வேலைகள் பல. ஆகவே எவ்வளவு விரைவில் ஸ்ரீதரின் சந்திர சிகிச்சையை முடித்துக் கொண்டு இங்கிலாந்து புறப்பட முடியுமோ அவ்வளவு விரைவில் புறப்பட வேண்டும். அத்துடன், இந்தியாவிலும் ஓரிரு தினங்கள் தங்க வேண்டும். அதுவும் அவருடைய கால அட்டவணையில் இடம் பெற்றிருந்தது. இவை தவிர, ஸ்ரீதரை இன்னொரு தடவை நன்கு பரிசீலித்து, சந்திர சிகிச்சைக்கு அவனைத் தயார் செய்ய வேண்டும். அதற்கும் இரண்டு மூன்று நாள் பிடிக்கும். மேலும் சந்திர சிகிச்சைக்குப் பின்னர் கூட சில குறிப்பிட்ட தினங்கள் கண்ணில் ஏற்பட்ட புண் ஆறும் வரை ஸ்ரீதர் கண் கட்டோடு விளங்க வேண்டும். அக்காலவெல்லையின் முடிவில் கண்களைக் கட்டவிழ்த்துப் பார்த்துத் தமக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னர் தான் அவரால் இலங்கையை விட்டுப் புறப்பட முடியும். ஆனால் இவற்றுடன் பிரச்சினை தீரவில்லை. ‘அமராவதி’ வளவில் எப்பொழுதும் சோதிடத்துக்கு மிகவும் மதிப்புண்டு. சிவநேசருக்கு, அவற்றில் நம்பிக்கை இல்லையென்றாலும், பாக்கியம் நாளும் கோளும் பார்க்காமல் ஒன்றுமே செய்வதில்லை. அதிலும் சோதிடத்தில் மிக வல்லவரான சின்னைய பாரதி எப்பொழுதும் பக்கத்திலிருக்கும் போது அவரைக் கலக்காமல் எதையும் செய்ய யாருக்குத்தான் மனம் வரும்? ஆகவே, சந்திர சிகிச்சை ஸ்ரீதருக்கேற்ற நல்ல நாளிலும் நடைபெற வேண்டும். எனவே, இவற்றை எல்லாம் பார்த்து இரண்டு மூன்று நாட்களை வீணாக்கியே ஸ்ரீதரின் சந்திர சிகிச்சை நாள் நியமிக்கப்பட்டது.
பேராசிரியர் நோர்த்லியைப் பொறுத்த வரையில் நல்ல நாள் பெரிய நாள் என்ற சோதிடப் பேச்செழுந்ததும், அதை அவர் எதிர்த்துப் பரிகசிக்கவே செய்தார். இவற்றை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்று கருதுபவர் அவர். உண்மையில் இங்கிலாந்திலிருந்து பகுத்தறிவு அச்சகச் சங்கத்தில் அவர் ஒரு முக்கிய உறுப்பினர். இருந்தாலும் பண்பே உருவான அவர், ஒரு தாய் தன் மகனின் மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கை நிகழ்ச்சி சம்பந்தமாக நாள் பார்க்கும் போது, அதை எதிர்த்து வேறு நாளை நியமித்தல் மனோதத்துவ ரீதியில் அவ்வளவு நல்லதல்ல என்பதால் வெறும் பரிகாசத்துடன் நிறுத்திக் கொண்டு சந்திர சிகிச்சையை சின்னைய பாரதி கூறிய நல்ல நாளன்றே நியமித்துவிட்டார்.
“சந்திர சிகிச்சைக்காகச் சிவநேசர் குடும்பமே டாக்டர் நெல்சனின் ஆஸ்பத்திரியில் நான்கு நாட்களுக்கு முன்னரே குடியேறிவிட்டது. ஸ்ரீதருக்கு ஒரு தனியறையும் அதற்குப் பக்கத்தில் அவனுக்குத் துணையாக இருப்பவர்களுக்கென வேறு ஓர் அறையும் ஒதுக்கிவிடப் பட்டன. ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது, ஸ்ரீதர் பொழுது போகாமல் இடர்ப்படக் கூடாது என்பதற்காக ‘ரேடியோ கிராம்’ இசைத்தட்டுகள், ‘பிரெயில்’ எழுத்தில் தயாரிக்கப்பட்ட சில புதிய கதைப் புத்தகங்கள் என்பனவும் ஸ்ரீதர் கட்டிலுக்கருகே வைக்கப்பட்டன.
ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் உள்ளத்தில் விநோதமான எண்ணங்கள் பல இடையிடையே எழும். அவன் வண்ணங்களைப் பார்த்து ஏறக்குறைய இரண்டு வருடங்களாகி இருந்தன. இருந்தாலும் வண்ண வித்தியாசங்களை இன்னும் அவனது மனத்திரையிலே அவனால் ஞாபகம் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் அவற்றின் பெயர்கள் தன் மனதில் குழம்பிப் போய்விட்டது போன்ற ஓர் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. உதாரணமாக, நீலமென்றால் எது, பச்சை என்றால் எது என்று யாராவது கேட்டால் ஒன்றின் பெயரை மற்றதற்குத்தான் மாற்றிக் கூறிவிடக் கூடும் என்றா அச்சம் அவனுக்கு உண்டாயிற்று. ஆனால் அதற்கென்ன செய்வது? மீண்டும் வண்ணங்களையும் அவற்றின் பெயரையும் ஒன்றோடொன்று தொடர்புறுத்திக் கற்றுக் கொண்டால் போகிறது என்று தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டான் அவன்.
ஸ்ரீதர் கண் பார்வை பெற்றால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி அதிகமாகச் சிந்திக்க வேண்டிய யாராவது இவ்வுலகில் இருந்தால் அது சுசீலாவாகத்தானே இருக்க முடியும்? ஆனால் உண்மை அவ்வாறிருக்கவில்லை. சுசீலா இப்பொழுது சிந்திப்பதையே நிறுத்திவிட்டாள். அவள் மூளை சிறிதும் வேலை செய்யாது ஓய்ந்து விட்டது போல் தோன்றியது. எந்த விஷயத்தையும் அந்த விஷயம் எழும்பும் அந்நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து, கையிலிருக்கும் வேலையைச் செய்வதில் மட்டும் கண்ணும் கருத்துமாயிருந்தாள் அவள். இருந்த போதிலும் அவள் கல கலப்பான பேச்சும், நகைச்சுவையும், பிள்ளைப் பாட்டுகளும் ஓரளவு அடங்கி விடத் தான் செய்தன. இடையிடையே அவள் முரளியை மடியில் தூக்கி வைத்திருந்தாலும், முக்கால் வாசி நேரம் பாட்டி பாக்கியத்தின் மடியிலேயே அவனை போட்டு விட்டாள் அவள். ஆனால் அவன் பாட்டியின் மடியில் இருந்தால் தானே? சிவநேசர், பேராசிரியர் நோர்த்லி உட்பட எல்லோரிடமும் தவழ்ந்து சென்று விளையாடினான் முரளி. முரளி அந்த ஆஸ்பத்திரிக்கே ஓர் அலங்காரப் பொருளாகிவிட்டான். டாக்டர் நெல்சன், டாக்டர் சுரேஷ், தாதியார் - யாவருமே அவனால் கவரப் பட்டுவிட்டவர்கள். ஒரு நாள் பேராசிரியர் நோர்த்லி அவனைத் தூக்கி விளையாட்டுக் காட்ட அவன் அவரது சட்டையில் சல மோசனம் செய்து அசுத்தப்படுத்திவிட்டான். “அடே பயலே, என் சட்டையை அசுத்தம் செய்ததற்கு உனக்கு எதிராகப் பொலீசில் வழக்குத் தொடர்கிறேன். பார்” என்றார் பேராசிரியர். முரளி அதற்கு “சரி போடுங்கள் வழக்கை. யார் வெல்கிறார் பார்ப்போம்.” என்று கூறுவது போல மழலைக் கூச்சலிட்டுக் கை தட்டினான்.
ஸ்ரீதர் கண் பார்வை பெறுவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிச் சுரேஷ், சிவநேசர், பாக்கியம் ஆகியோரும் கவலைப் படவே செய்தனர். உண்மையில் இது பற்றி அவர்கள் தம்மிடையே பேசிக் கொள்ளவும் செய்தனர். இவ்வுரையாடலின் பயனாகப் பாக்கியம் சுசீலாவிடம், “ஸ்ரீதர் கண் பார்வை வந்ததும் நீ பத்மா அல்ல என்று கண்டு கொள்வானே, அதை நீ எப்படிச் சமாளிக்கப் போகிறாய்” என்று கேட்டாள். அதற்குச் சுசீலா “அது எனக்குத் தெரியும். நான் பார்த்துக் கொள்வேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்.” என்று மட்டும் சொன்னாள். பாக்கியமும் தீர்க்க முடியாத பிரச்சினையை, புண்ணைக் கிளறுவது போல் கிளறிக் கொண்டிருக்க விரும்பாததால் அப்படியே விட்டுவிட்டாள்.
ஸ்ரீதர் சந்திர சிகிச்சைக்குத் தயார் செய்யப்பட்டு வந்த மூன்று நாட்களும் சுசீலா அவன் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தாள். அத்துடன் அவனுக்கு வேண்டிய தினசரிப் பணிகளையும் புரிந்து கொண்டிருந்தாள் அவள்.
சில சமயங்களில் தான் கண் பார்வையை இழந்தது பற்றிச் சிந்தித்தபோது, பல்கலைக்கழகத்தில் தான் நடித்த ஈடிப்பஸ் நாடகம் ஸ்ரீதருக்கு ஞாபகம் வந்தது. அதில் அவள் மிகவும் நல்ல பெயர் எடுத்திருந்ததால், மன்னன் ஈடிப்பஸ் அவன் மனதில் அடிக்கடி தோன்றுவது வழக்கமாயிருந்தது. இப்பொழுது ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்த போது தேபேஸ் மன்னனின் இந்நினைவு முன்னிலும் பார்க்க மிகவும் அதிகமாயிருந்தது. புகழ்பெற்ற கிரேக்க நாடகாசிரியரின் சொபாக்கிளினின் உணர்ச்சிகரமான அந்நாடகம் இப்பொழுது அவன் மனத்திரையைப் பீறிப் பீறி வந்து கொண்டிருந்தது.
அவனைப் பொறுத்த வரையில் அவன் அறிந்த நாடகங்களில் அதுவே ஆகச் சிறந்தது. அதனால்தான் அதனை மொழி பெயர்த்து அரங்கேற்றியதோடு அதில் தானே கதாநாயகனாகவும் நடித்தான் அவன். அது தவிர, ஈடிப்பஸ் நாடகம் அவன் வாழ்க்கையில் இன்னொரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்நாடகத்தின் பயனாகத் தானே அவனது காதலி பத்மா அவனுக்குக் கிடைத்தாள்? பரமானந்தர் அறிமுகமானதும் இந்நாடகத்தின் பின்னர் தானே? ஆகவே “இன்று என்னுடன் என் பத்மா இங்கு வாழ்வதற்கே ஈடிப்பஸ் நாடகந்தானே அடிகோலியது?” என்று கூட யோசித்தான் அவன். ஈடிப்பஸ் நாடகம் நினைவுக்கு வந்ததும் அவன் மனதில் பளிச்சிட்ட முக்கியக் காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைத் தானே குத்திக் கொள்ளும் காட்சியாகும். “இந்நாடகத்தில் ஈடிப்பஸ் தன் கண்களை இழுக்கிறான். ஆனால் நான் அவனை விட அதிர்ஷ்டசாலி. நான் இழந்த பார்வையை மீண்டும் பெறக் கூடியதாயிருக்கிறதல்லவா?...” என்று பலவாறாகத் தன்னையும் ஈடிப்பஸையும் சமப்படுத்தி யோசித்தான் அவன்.
கொழும்புப் பல்கலைக்கழகத்திலும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் அவன் இந்நாடகத்தில் நடித்த போது பார்த்தவரெல்லாம் நடுங்கிய காட்சி ஈடிப்பஸ் தன் கண்களைக் குத்திக் கொள்ளும் அந்தக் காட்சிதான். சில தினசரிப் பத்திரிகைகளின் கலா விமர்சகர்கள் இக்காட்சியை அளவு மீறிப் புகழ்ந்திருந்தார்கள். அது ஞாபகம் வந்ததும் கண்கள் சுகமாகிப் பழையபடி மற்றவர்கள் போல் நடமாடத் தொடங்கியதும் மீண்டும் ஈடிப்பஸ் நாடகத்தை ஒரு தரமேனும் அரங்கேற்ற வேண்டுமென்ற ஆசை அவனுக்கு. இது பற்றிச் சிந்தித்து போது தனது இலக்கியப் பேராசிரியர் ஈடிப்பஸ் நாடகத்தின் இக் காட்சியைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசியதும் அவனுக்கு ஞாபகம் வந்தது. உலக நாடக வரலாற்றிலே இக் காட்சி ஆகச் சிறந்த காட்சி என்று அவர் கூறியதும், அதன் பின்னர் மாணவர்கள் வகுப்பு முடிந்து இது பற்றிய நடத்திய வாதப் பிரதிவாதங்களும் அவனுக்கு நினைவு வந்தன. சிலர் “இரத்த வெறி பிடித்த இந்தச் சுய நோவுக் காட்சியைப் பேராசிரியர் இவ்வாறு மெச்சுகிறாரே” என்று குறைப்பட்டதும், தன்னைப் பொறுத்த வரையில் கூற்றே முற்றிலும் சரி என்று தான் தீர்ப்புக் கூறியதும் அவனுக்கு நினைவு வந்தன.
அப்பொழுது விகடப் பேச்சில் நிபுணனான ஒரு மாணவன் “ஈடிப்பஸின் சுய நோவை மெச்சும் பேராசிரியர் தாமும் சுய நோவில் ஆசை கொண்ட ஒருவராகவே இருக்க வேண்டும். நாமெல்லாரும் ஒன்று சேர்ந்து அவரை ஒரு நாள் மொத்துவோமா? அவர் அதற்காக மகிழ்ச்சிதானே அடைவார்?” என்று கூறியதும், மற்ற மாணவர்கள் எல்லோரும் அதைக் கேட்டுக் கொல்லென்று சிரித்தமையும் கூட அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தன.
“உண்மையில் ஈடிப்பஸ் நிலையில் இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன்? தன்னையறியாமல் தாயைப் பெண்டாக்கிப் பிள்ளைகளையும் பெற்றுவிட்டேன் என்ற செய்தி வாளைப் பிழந்து ஒரு மின்னல் போல் ஒருவன் முன் வந்து நிற்குமானால், அவன் என்ன செய்திருப்பான்? அநேகமாக நான் கூட தேபேஸ் மன்னனைப் போலவே என்னிரு கண்களையும் குத்திக் கொண்டிருக்கக் கூடும்.” என்றும் சிந்தித்தான் அவன்.
நான்கு தினங்கள் கழித்து டாக்டர் நோர்த்லி சந்திர சிகிச்சையைச் செய்து முடித்தார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. டாக்டர் நெல்சனும் டாக்டர் சுரேசும் டாக்டர் நோர்த்லிக்குப் பக்கபலமாக இருந்து உதவினார்கள்.
சந்திர சிகிச்சை முடிந்து ஒரு நாள் மட்டும் ஸ்ரீதர் தனது கட்டிலில் ஓய்ந்து போய்க் கிடந்தான். அதன் பின் மிகவும் கல கலப்பாகப் பேச ஆரம்பித்துவிட்டான் அவன். சுசீலாவையும் முரளியையும் அருகே உட்கார வைத்து எதை எதையோ கூறினான் அவன். “பத்மா, இன்னும் சில நாட்களில் பேராசிரியர் நோர்த்லி என் கண்ணை அவிழ்த்துவிடுவார். என் கண்ணை அவிழ்த்ததும் நீ முரளியைத் தூக்கிக் கொண்டு என் முன்னே வர வேண்டும்” அது தான் நான் விழி பெற்றதும் முதலில் காண விரும்பும் காட்சி. தெரிகிறதா?” என்று ஒன்றுக்குப் பல தடவை கூறிவிட்டான் அவன்.
இவை எல்லாம் சுசீலாவின் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கிக் கொண்டிருந்தன. சுசீலா மட்டுமல்ல, பாக்கியம், சிவநேசர், நன்னித்தம்பியர் எல்லோருமே உள்ளூர நடுங்க ஆரம்பித்தார்கள். வானமிடிந்து தலையில் விழுவதை எதிர்பார்ப்பதுபோல பயங்கரமான விளைவுகளை எதிர்பார்த்து இருந்தார்கள் அவர்கள். கண்ணுக்குத் தெரியும் தொலைவில் ஒரு பூகம்பம் வந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது அவர்களுக்கு.
கடைசியில் பூகம்பமும் வரத் தான் செய்தது.
பேராசிரியர் நோர்த்லி தாம் நியமித்த நாளில் ஸ்ரீதர் கன்களின் கட்டுகளை அவிழ்த்தார். அவ்வாறு அவர் கட்டுகளை அவிழ்த்த போது ஸ்ரீதரின் அறையில் டாக்டர்களையும் ஒரு தாதியையும் தவிர வேறு யாரையும் அவர் அனுமதிக்கவில்லை.
கட்டுகளை அவிழ்த்துத் தமது விரல்களினால் பேராசிரியர் நோர்த்லி ஸ்ரீதரின் விழிகளை மலர்வித்தார்.
ஸ்ரீதர் கண் விழித்தான். உலகமே ஒளிக் கடலில் நீந்திக் கொண்டிருப்பது போல் இருந்தது அவனுக்கு. அப்பொழுது தான் இவ்வுலகில் பிறந்தது போன்ற ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது. திக்பிரமை பிடித்தவன் போல் தன் முன்னே நின்ற பேராசிரியரையும் மற்ற டாக்டர்களையும் சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள். பின்னர் “கண் தெரிகிறது. கண் தெரிகிறது.” என்று பலமாகச் சப்தமிட்டாள் அவன்.
பேராசிரியர் நோர்த்லி சிரித்தார். டாக்டர் சுரேஷ் அவர் கால்களைப் பற்றிக் கொண்டு “தாங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள். நீங்கள் ஸ்ரீதருக்குச் செய்த இந்த உதவியை எவ்வாறு பாராட்டுவேன்” என்றான். டாக்டர் நெல்சன், “பேராசிரியரே, நீங்கள் மிகவும் பெரிய சாதனையைச் செய்துவிட்டீர்கள். என்னைப் பொறுத்த வரையில் ஸ்ரீதர் இவ்வளவு இலகுவில் கண் பார்வையை மீண்டும் பெறுவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை.” என்றார்.
பேராசிரியர் இப் பாராட்டுரைகளுக்குப் பதிலாக அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்து விட்டு ஸ்ரீதருடன் பேச ஆரம்பித்தார். “ஸ்ரீதர், இது என்ன வர்ணம்?” என்று ஒரு பச்சை வர்ணப் புத்தகத்தை அவனிடம் காட்டிக் கேட்டார் “நீலம்” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். பின்னர் ஒரு நீல வர்ணக் கடற்காட்சியை அவனிடம் காட்டி “இதன் வர்ணம் என்ன?” என்று அவர் கேட்டார். “பச்சை” என்று பதிலளித்தான் ஸ்ரீதர். அதைக் கேட்ட பேராசிரியர் சுரேஷைப் பார்த்து “உன் நண்பன் மறந்துவிட்டது வர்ணங்களை அல்ல. அவற்றின் பெயர்களை. நீ அவற்றை அவனுக்குத் திருப்பிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.” என்றார்.
ஸ்ரீதர் கட்டிலில் எழுந்துட்கார்ந்து பேராசிரியரின் கைகளைத் தன் கைகளால் பற்றி, “பேராசிரியரே தாங்கள் எனக்கு விழிகளைத் தந்துவிட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்” என்றான். பேராசிரியர் அவன் கன்னங்களைத் தன் கரங்களால் தட்டிவிட்டு, “ஸ்ரீதர் இன்னும் இரண்டு மணி நேரத்தில் என் விமானம் இந்தியா புறப்படுகிறது. நான் போகிறேன். இனி உனக்கு ஒரு குறைவுமில்லை. ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் டாக்டர் நெல்சன் அவற்றைப் பார்த்துக் கொள்வார்,” என்று கூறி விடை பெற்றார்.
இதற்கிடையில் சுரேஷை உற்றுப்பார்த்த ஸ்ரீதர், “அடே நீ சுரேஷல்லவா?... நீதானே எனக்கும் கண் தர ஏற்பாடு செய்தாய். உன் உதவியை நான் ஒரு போதும் மறவேன்.” என்றான்.
அதற்குச் சுரேஷ், “இந்தச் சம்பிரதாயமான நன்றியுரைகளை எல்லாம் அப்புறம் பேசிக் கொள்வோம். இப்பொழுது பேராசிரியரை விமான நிலையைத்துக்குப் போய் வழியனுப்பி விட்டு வருகிறேன்.” என்று புறப்பட்டான்.
ஸ்ரீதரிடம் விடை பெற்று வந்த பேராசிரியர் நோர்த்லி வெளியிலே சிவநேசர் முதலியவர்களுடன் சில வார்த்தைகளைப் பரிமாறிவிட்டு சுரேசுடன் காரிலேறிப் புறப்பட்டுவிட்டார். புறப்படுமுன் முரளியில் அப்பின கன்னங்களைக் கிள்ளிவிட்டு “முரளி, அப்பா உனக்காகக் காத்திருக்கிறார். போய் பார்” என்று கூறத் தவறவில்லை.
அதன் பின் பாக்கியம், சிவநேசர், நன்னித்தம்பியர், செல்லாச்சி ஆகியோர் குழந்தை முரளியுடன் ஸ்ரீதரின் அறையுள் நுழைந்தார்கள். அவர்களைக் கண்டதும் ஸ்ரீதர் ஆனந்தத்தால் கூத்தாடினான். முரளியைக் கண்டதும் கட்டிலில் எழுந்துட்கார்ந்து அவனைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டு “இவன் தானே முரளி. புரளிக்காரப் பயல். நல்ல அழகாயிருக்கிறானே.” என்று கூறிவிட்டு “பத்மா எங்கே?” என்று கேட்டான்.
பாக்கியம் அதற்கு உடனே பதிலளிக்க வில்லையென்றாலும் இரண்டு மூன்று தடவை திருப்பித் திருப்பிக் கேட்கவே ஏதாவது பதிலளிக்கும் நிர்ப்பந்தம் அவளுக்கேற்பட்டது. “பத்மாவுக்கு சிறிது சுகமில்லை. வீட்டுக்குப் போய்விட்டாள்” என்றாள்.
ஸ்ரீதர் அதைக் கேட்டதும் பதைபதைத்துவிட்டாள். “அப்படியா? அபடியானால் உடனே வீடு போவோம். பத்மாவைக் காண வேண்டும்.” என்றான். தான் முன் கூட்டித் திட்டமிட்டது போல் கண் விழித்ததும் முரளியையும் பத்மாவையும் ஒன்றாகப் பார்க்கவேண்டுமென்ற தன் ஆசைக் கனவு நிறைவேறாது போனதில் ஸ்ரீதருக்குப் பெரிய ஏமாற்றம்.
இவை நடந்து ஒரு மணி நேரம் கழித்து ‘அமராவதி’ மாளிகையில் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்ற அழைப்பு, பேரொலியாகக் கேட்டது. அந்தப் பெரிய மாளிகையின் பெரிய விறாந்தையிலும் மண்டபங்களிலும் பத்மா, பத்மா என்ற சொல் ஒளியும் எதிரொலியுமாகச் சப்தித்தது.
ஸ்ரீதர் தனது காரில் மிக வேகமாக ‘அமராவதி’ வந்து பத்மாவை அழைத்துக் கொண்டிருந்தாள். காரை ஓட்டி வந்த காரோட்டி காரைப் ‘போர்ட்டிக்கோ’வில் நிறுத்திவிட்டு இறங்கிப் போய்விட்டான். அவள் வாசலில் வாயிற்காவலாளியோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
ஸ்ரீதர் “பத்மா, பத்மா” என்று கூறியவாறு தனது அறைக்குள்ளே போனான். ஆனால் அங்கே ஓர் ஆளரவத்தையும் காணோம். இருந்தாலும் அங்கு ஒரு புறத்தில் இருந்த சிறிய ‘ஸ்கிரீனு’க்குப் பின்னால் ஏதோ சலனம் ஏற்பட்டது போலிருந்தது. விரைந்து சென்று அது என்ன சலனம் என்று பார்த்தான் ஸ்ரீதர்.
அங்கே ஸ்கிரீனுக்குப் பின்னால் ஒரு பெண் நடுங்கிக் கொண்டு நிற்பதைக் கண்டான் அவன். அவள் முன்னே ஒரு சிறிய மேசை. அதில் ஒரு கண்ணாடி கிளாசில் எதையோ கலக்கிக் கொண்டிருந்த அவளை ஸ்ரீதர் அடையாளம் கண்டு கொண்டாள். ஆம், நன்னித்தம்பி மகள் சுசீலா அல்லவா இவள் - இவள் ஏன் இங்கு வந்தாள் என்று அதிசயித்தான் அவன்.
ஆம். சுசீலா தான் அங்கு நின்று கொண்டிருந்தாள். இன்று ஸ்ரீதர் கண் பார்வை பெறுவான் என்பது அவளுக்கு நன்கு தெரிந்திருந்தால் காலையிலிருந்தே ஒரு நிலையில் நில்லாது தவித்துக் கொண்டிருந்தது அவள் மனம். “ஸ்ரீதர் முன்னர் நான் தான் பத்மா என்று பேசுவது எப்படி?” என்ற கலக்கம் அவளைப் பீடித்தது. “ஸ்ரீதருக்குக் கண் பார்வை கிடைத்துவிட்டது. இனி நான் இருந்தென்ன, இறந்தென்ன?” என்று எண்னிய அவள் இவ்வுலகில் நச்சுக் கோப்பையே தனக்குத் தஞ்சமென முடிவு கட்டி விட்டாள். அதன் பயனாகவே ஆஸ்பத்திரியிலிருந்து அதிகாலையிலேயே வந்து, தேநீருடன் அசெட்டிக் திராவகத்தைக் கலந்து அதனை அருந்துவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள் அவள்.
ஆனால் இறப்பதென்னவோ அவ்வளவு இலேசான காரியமாகத் தெரியவில்லை. தன் ஆள் மாறாட்டக் குழறுபடியின் காரணமாக ஸ்ரீதரிடமிருந்து பிரிவதென்னவோ சுசீலாவுக்கு அவசியமானதாகிவிட்டது. தன் முன்னுள்ள பிரச்சினைக்கு அது ஒன்றுதான் திருப்திகரமான முடிவாகத் தோன்றியது. ஆனால் முரளியிடமிருந்து பிரிவதெப்படி? என் உயிரின் உயிரான, இரத்தத்தின் இரத்தமான அவனை விட்டுவிட்டு நான் போவதா - என்று தயங்கினாள் அவள். அவ்வாறு அவள் தயங்கிக் கொண்டிருந்த போது தான் ஸ்ரீதரின் “பத்மா, பத்மா” என்று அழைப்பு அவள் காதுகளில் எதிரொலிக்க ஆரம்பித்தது. அதைக் கேட்டதும் சுசீலாவின் உள்ளத்தில் புதிய ஆசை ஒன்று தோன்றியது. “இதோ ஸ்ரீதர் கண் பார்வை பெற்று வந்துவிட்டார். சாவதன் முன்னர் ஒரு தரமாவது அவரது விழி பெற்ற நிலையில் அவரைப் பார்த்துவிட வேண்டும்.” என்பதே அது. அந்த ஆசையினால்தான் ‘ஸ்கிரீனி’ன் பின்னல் பூனை போல் பதுங்கி நின்றாள் அவள். அவனறியாமல் அவனை ஒரு தரம் நன்கு பார்த்துவிட வேண்டுமென்பது அவளது ஆசை.
ஆனால் அதற்கிடையில் ஸ்ரீதரிடம் அகப்பட்டுக் கொண்டாள் அவள்.
சுசீலாவைக் கண்டதும் ஸ்ரீதர், “யாரது? நீ ஏன் இங்கு நிற்கிறாய்? நீ நன்னித்தம்பியரின் மகளல்லவா? நான் பத்மாவைக் காண வேண்டும். பத்மாவைக் கூப்பிடு” என்றான்.
சுசீலாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “பத்மாவா? நான் தான் பத்மா. ஏன் என் குரல் உங்களுக்குத் தெரியவில்லையா? இது பத்மாவின் குரலில்லையா?” என்று கேட்டாள்.
ஸ்ரீதர் திடுக்கிட்டான்: “ஆம், பத்மாவின் குரல்தான். ஆனால் நீ பத்மா அல்லவே?” என்றான்.
சுசீலா, “உண்மைதான். நான் பத்மா அல்ல - சுசீலா. ஆனால் உங்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம். பத்மாவுக்குப் பதிலாக உங்கள் அப்பாவும் அம்மாவும் என்னை பத்மா என்று சொல்லி உங்களுக்கு மணம் செய்து வைத்தார்கள். நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள்.” என்றாள். அவ்வாறு சொல்லிக் கொண்டே நச்சுத் திராவகத்தை மடக்கென்று வாயில் ஊற்றுவதற்குக் கிளாசைக் கையிலே எடுத்தாள் சுசீலா.
அதைக் கண்ட ஸ்ரீதர், “என்ன இது? நீ என்ன குடிக்கப் போகிறாய்?” என்றான்.
“நஞ்சு - அசெட்டிக் அசிட்” என்றாள் சுசீலா. அதைக் கேட்ட ஸ்ரீதர் அப்படியே பாய்ந்து கிளாசைத் தன் கைகளால் பற்றினான். இதனால் ஏற்பட்ட சந்தடியில் கிளாஸ் நிலத்தில் குப்புற விழுந்து சுக்கு நூறாக உடைந்தது.
சுசீலா ஒன்றும் தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள். அவன் கண்கள் ஸ்ரீதரின் பார்வை பெற்ற கண்களால் அள்ளி விழுங்குவது போல் நோக்கின.
ஸ்ரீதர், “ நீ சொன்னது உண்மைதானா? நீதானா என்னுடன் பத்மாவாக வாழ்ந்தவள்? என் முரளிக்குத் தாய் நீதானா?” என்று ஒன்றின் பின் ஒன்றாகப் பல கேள்விகளைக் கேட்டான்.
ஒவ்வொன்றையும் “ஆம், ஆம்” என்று உறுதிப்படுத்தினாள் சுசீலா.
ஸ்ரீதர் ‘அமராவதி’யை நோக்கிக் காரில் புறப்பட்டதும் அவன் பின்னாலேயே சிவநேசரும் பார்வதியும் குழந்தை முரளியுடன் புறப்பட்டு வந்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தது தான் தாமதம். சுசீலாவும் ஸ்ரீதரும் தங்கள் அறையுள் பலமாகப் பேசிக் கொண்டிருப்பது அவர்கள் காதில் வீழ்ந்தது. அதைக் கேட்ட பாக்கியம் அவர்கள் அறையுள் நுழையப் போனாள். ஆனால் சிவநேசர் அதைத் தடுத்தார். “வேண்டாம் அவர்கள் எதையும் பேசிக் கொள்ளட்டும். பேசி முடிந்து வெளியில் வந்த பின் விஷயத்தை நாம் சுசீலாவிடமிருந்து தெரிந்து கொள்ளலாம்.” என்றார். பாக்கியமும் ஒப்புக்கொண்டு கீழே விறாந்தையில் முரளியை ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டுச் சிவநேசருடன் உட்கார்ந்து கொண்டான். முரளி சிறிது நேரத்தில் ஆயாவின் அரவணைப்பில் தூங்கிவிட்டான்.
சிவநேசரும் பாக்கியமும் ஸ்ரீதர் தன் கண் பார்வையைப் பெறுவது சுசீலாவுக்குப் பெரிய பிரச்சினையையே உண்டு பண்ணும் என்று உணர்ந்த போதிலும், அது தற்கொலை பன்ணும் அளவுக்கு அவளைத் தூண்டும் என்று ஒரு போதும் எண்ண வில்லை. எனவே அவர்கள் இது விஷயமாக ஓரளவு பரபரப்பு அடைந்திருந்த போதிலும், அளவுமீறிய பதை பதைப்படைந்தார்கள் என்பதற்கில்லை. ஆகவே ‘அமராவதி’யின் விறாந்தையில் அவர்கள் மிக அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள்.
ஸ்ரீதர் சுசீலாவை நோக்கிக் குமுறிக் கொண்டிருந்தான். “நான் குருடன். அதை உபயோகித்து என் பெற்றோர்களே என்னை ஏமாற்றிவிட்டர்கள். உன்னைப் பத்மா என்று கூறி என்னை மோசம் செய்துவிட்டார்கள். சிச்சீ! எத்தகைய மடையன் நான்? எப்படிப்பட ஏமாளி நான். நினைக்கவே வெட்கமாயிருக்கிறது” என்றாள்.
சுசீலாவுக்கு என்ன பதிலும் கூறத் தோன்றவில்லை. கற்சிலை போல் நின்று கொண்டிருந்தாள்.
ஸ்ரீதர் பேசிக் கொண்டே போனான். உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவன் பேசியது ஒரு நாடக நடிகன் நாடகத்தின் உச்சக் கட்டத்தில் பேசுவது போலிருந்தது. ஈடிப்பஸ் அரசன் தனது இழிதகைமையை அறிந்து, கொதிப்படைந்து தன் கண்களைத் தன் கைகளாலேயே சிதைத்தெறியுமுன் எவ்வித உணர்ச்சியுடன் பேசினானோ அத்தகைய உணர்ச்சியுடன் பேசிக் கொண்டு போனான் ஸ்ரீதர்.
அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பிலே அவன் சுசீலாவை நோக்கி, “ நீ பத்மாவல்ல. நான் உன்னை வெறுக்கிறேன். நீ என்னை ஏமாற்றியவள். மோசக்காரி. நான் உன்னை என் முழு மனதாலும் வெறுக்கிறேன்.” என்றான்.
இவ்வார்த்தைகள் சுசீலாவை அப்படியே இடிந்து போகச் செய்துவிட்டன. “என் காதால் இந்த வார்த்தைகளைக் கேட்கத்தானா நான் கண்ணற்ற அவரைத் திருமணம் செய்தேன்? அவர் வாழ்க்கை அழிந்து விடுமென்பதற்காக அவர் மீது நான் கொண்ட இரக்கமல்லவா அவரைத் திருமணம் செய் என்ற திடீர் முடிவுக்கு என்னைக் கொண்டு வந்தது? அது மட்டுமல்ல, நான் மட்டும் அவருக்குக் கண் பார்வை அளிக்கக் கூடாது என்று நினைத்திருந்தால் இன்று அவர் என்னை நோக்கி இந்த வார்த்தைகளைக் கூறும் படி ஏற்பட்டிருக்குமா?... இருந்தாலும் பாவம், பிழை அவர் மீதில்லை. அவர் மோசடி செய்யப்பட்டதென்னவோ உண்மை. இந்த நிலையில் யாரும் அவர் போல தானே பேசியிருப்பார்கள்? பிழை என் மீது தான், என் மீதேதான். நான் அவர் இங்கு வருவதற்கு முன்னரே நஞ்சை அருந்தியிருக்க வேண்டும். அவ்வாறு அருந்தியிருந்தால் இந்த வார்த்தைகளை நான் கேட்காதிருக்கலாமல்லவா?” என்று தனக்குள் தானே கூறிக் கொண்டாள் அவள்.
சுசீலாவைப் பொறுத்தவரையில், அவள் வாழ்க்கையின் தோல்வி நாள் இன்று. ஒரு பெண்ணினுடைய இதயத்தின் பெரிய வெற்றி காதலின் வெற்றியே. அது போல் காதலின் தோல்விதான் வாழ்க்கையின் தோல்வியும், தான் விரும்பி அன்பு செலுத்திய ஓர் ஆண் மகன் தன் முகத்தைப் பார்த்துச் சிறிதும் கூசாது “ நான் உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறுவதை எந்தப் பெண்ணால் தான் சகிக்க முடியும்? இவ்வுலகில் எந்த ஓர் ஆணின் மீது தன் முழு அன்பையும் செலுத்தி வந்தாளோ, எவனது சிரிப்பிலே பூரிப்பையும், எவனது துக்கத்திலே உள்ளக் குமுறலையும் கண்டு வந்தாளோ, எவனைத் தன்னுயிரினும் மேலான பொருளாக எண்ணி வந்தாளோ அவன், “நான் உன்னைக் காதலிக்கவில்லை. உன்னை வெறுக்கிறேன்.” என்று கூறிவிட்டான். இனி இந்த வாழ்க்கையில் எனக்கென்ன இருக்கிறது. முரளி... ஆனால் அவன் கூட தந்தையுடன் சேர்ந்து கொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம். அவரால் வெறுக்கப்பட்ட நான் இனி ‘அமராவதி’யில் இருக்க முடியாது. நான் அப்பா வீட்டுக்குப் போக வேண்டியதுதான். அப்படி நான் அப்பா வீட்டுக்குப் போகும்போது முரளியை என்னிடம் தருவார்களா? நிச்சயம் தர மாட்டார்கள். என்னை வெறுத்தாலும் முரளி அவர் பிள்ளை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இன்னும் முரளி ‘அமராவதி’யின் ஒரே வாரிசு. அவனை என்னிடம் ஒருபோதும் தர மாட்டார்கள். என் மகன் கோடீஸ்வரன். தங்கத்திலும் வைரத்திலும் புரண்டு வளர்வான் அவன். ஆனால் நான் அவன் தாய் என்பது கூட மறக்கப்பட்டு எங்கோ ஒரு மூலையில் கிடப்பேன். விஷயம் தெரிந்த ஒரு சிலர் மட்டும் அதைப் பற்றி அனுதாபமாகப் பேசுவார்கள். இதை விடக் கேடு கெட்ட வாழ்க்கை என்ன இருக்கிறது? சாவு அதை விட எவ்வளவோ மேலல்லவா? ஆனால் சாவதற்கு நான் எடுத்த முதல் முயற்சி இன்று தோற்றுவிட்டது. இரண்டாம் முறை எப்படியும் வெற்றி பெற்றே தீருவேன். ‘அமராவதி’யில் இல்லாவிட்டாலும் அப்பா வீடு சென்ற பிறகாவது நிச்சயம் நான் நஞ்சு குடித்துச் சாவேன். இது சத்தியம்” என்று தனக்குள் தானே உறுதி கூறிக் கொண்டாள் அவள்.
இவ்வாறு அவன் சிந்தித்துக் கொண்டிருந்த போது அவளை அறியாமலே கண்ணீர் பிரவகித்து கொண்டிருந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு அவள் தன் அழுகையை அடக்க முயன்ற காட்சி மிகப் பரிதாபமாக இருந்தது.
ஸ்ரீதர் அதைப் பார்த்ததும் கலங்கி விட்டான். இதற்கு முன் அவன் தன் வாழ்க்கையில் எவருமே இவ்வாறு கண்ணீர் சிந்திக் கலங்கி நின்றதைத் தன் கண்களால் கண்டதில்லை. “இழந்த கண்கள் மீண்டும் கிடைத்ததும் நான் காணும் முதற் காட்சி இப்படியா அமைய வேண்டும்.” என்று எண்ணினான் அவன்.
“நான் ஏமாற்றப்பட்டேன். பத்மா எங்கள் அந்தஸ்துக்குக் குறைந்தவளென்பதற்காக என் அப்பா செய்த மோசடி இது. ஆனால் உண்மையில் நான் ஏமாறியவன்தானா...”
“ஏறக்குறையக் கடந்த இரண்டு வருட காலமாக சுசீலா என்னுடன் வாழ்ந்து வருகிறாள். உண்மையைச் சொல்லப் போனால் என் வாழ்க்கையின் மிகவும் இன்பகரமான நாட்கள் இந்த இரண்டு வருடங்களும்தானே. சாதாரணமாகக் குருடனின் வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாயிருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இவைதான் என் வாழ்வின் மிகவும் இன்பமான நாட்கள். என் குருட்டு வாழ்க்கைக்கு இன்பச் சுவையை ஊட்டியது யார்? சுசீலா அல்லவா? அவள் பேச்சு எனக்கு இனித்தது. அவள் காட்டிய அன்பு என்னுள்ளத்தின் அடித்தளத்தைத் தொட்டு என்னை மெய்மறக்கச் செய்திருக்கிறது. இன்னும் அவள் என் முன் காட்டிய பணிவை என்னென்பேன். அவளது ஒவ்வொரு செயலும் என்னுள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது. அவள் பாட்டு என்னைப் பரவசப்படுத்தியது. அவளது விளையாட்டுப் பேச்சு என்னை எப்பொழுதும் சிரிக்க வைத்திருக்கிறது. உண்மையில் நான் தனித்திருக்கும் வேளைகளில், “இப்படிப்பட்ட பெண் வேறு யாருக்கும் இவ்வுலகில் கிடைக்க மாட்டாள். உலகிலேயே மிகச் சிறந்த பெண் எனக்குக் கிடைத்துவிட்டாள்” என்று எனக்குள்ளே நான் எத்தனை தடவை கூறி மகிழ்ந்திருக்கிறேன்? உண்மையில் நான் விரும்பியது போல் பத்மாவைத் திருமணம் செய்திருந்தால் அவள் கூட என்னுடைய உள்ளத்தை இவ்வாறு ஒரு சேரக் கொள்ளை கொண்டிருப்பாளோ என்னவோ? சுசீலா பக்கத்தில் இருந்தால் இன்பம், விலகினால் துன்பம். கடந்த இரண்டு வருட காலத்தில் ஒவ்வொரு நிமிஷத்தையும் இன்ப நினைவாக்கியவள் அவள். உண்மையில் அவள் என் காதற்கன்னி. உயிர்த் துணை, மனதின் அரசி, இதய ராணி. ஆனால் அது இருளில்தான். என் கண்களில் பார்வை இல்லாத போதுதான் பத்மா என்று அவளை நினைக்கும்போது தானே...
ஆனால் பார்வை பெற்றதும் கண்ணால் பார்த்ததும் காதல் மறைந்தது. அழகைப் பொறுத்தவரையில் இவளும் பத்மாவுக்குக் குறைந்தவளல்லதான். உண்மையில் இவள் கண்கள் பத்மாவின் கண்களை விட அழகு. இருந்துமென்ன? என் மனம் விரும்புவது பத்மாவை. அவளே இதுவரை என்னுடன் வாழ்ந்து வந்திருக்கிறாள். ஆனால் கண்கள் வந்ததும் இவள் யாரென்று தெரிந்து விடுகிறது. இவள் பத்மாவல்ல என்று தெரிந்ததும் இவள் மீது வெறுப்புதான் ஏற்படுகிறது. நான் இவளை வெறுக்கிறேன். பத்மாவைத் தவிர வேறு எல்லாப் பெண்களையுமே நான் வெறுக்கிறேன். இந்த நிமிஷம் வரை நான் பத்மாவுடனல்லவா என் மனதில் வாழ்ந்து வருகிறேன்? இன்று திடீரென என் காதலைச் சுசீலாவிடம் மாற்றி அவளுடன் வாழ முடியுமா? அது ஓர் இரண்டாம் திருமணம் போலல்லவா தோன்றுகிறது. நான் என்ன செய்வேன்? சுசீலா? மனதாரப் பார்த்தால் மகராசியாகத் தெரியும் அவள் ஊனக் கண்ணுக்கு வெறுப்பூட்டுபவளாகக் காட்சியளிக்கிறாள். ஆனால் ஐயோ சுசீலாவை நான் வெறுப்பதா? குருடனென்றும் பாராமல் என்னைக் கல்யாணம் செய்தாளே. இரவு பகலாக எனக்குப் பணிவிடை புரிந்தாளே, எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குக் கண் பார்வை கிடந்தால் அதனால் தன் மோசடி வெளியாகித் தான் இன்னங்களுக்கு ஆளாக நேரிடும் என்று தெரிந்தும் நான் கண் பார்வை பெற வேண்டுமென்று ஊக்கமாக உழைத்தாளே, அந்த உத்தமியையா நான் வெறுப்பது? இல்லை, நான் அவளை வெறுக்கவில்லை. நேசிக்கிறென். காதலிக்கிறேன். அவள் என் காதல் தெய்வம். ஆனால், இருளில்தான் அவள் என் காதலி. உண்மையில் அவளைச் சுசீலா என்று நான் இனங்காணாத வரையில் தான் அவள் என் காதலி. ஒளியில் அவள் ஓர் ஏமாற்றுக்காரி. அவளை நான் விரும்ப முடியாது.
ஆனால் இதுதானா? அவள் காட்டிய அன்புக்கு நான் செய்யும் கைம்மாறு? அவளது தியாகங்களுக்கு நான் செய்யும் பதில்? வெறுப்பு? கூடாது. அவள் நான் வெறுக்கக் கூடாது. நேசிக்க வேண்டும். என்றும் எப்பொழுதும் இரவும் பகலும் அவளைக் காதலிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தடை? என் கண் பார்வை? ஐயோ, நான் என் கண் பார்வையை ஏன் பெற்றேன்? அது கிடைக்கும் வரை நான் அவளை நேசிக்கத் தானே செய்தேன்? என்னுயிருக்குயிராக அல்லவா அவளை நான் நேசித்தேன்? ஐயோ என் கண் பார்வையால் நான் பெற்ற பயன் இதுதானா?”
ஸ்ரீதரின் மனதில் இடியும் மின்னலும் பூகம்பமும் ஏக காலத்தில் நிகழ்ந்தது போன்ற நிலை. தன்னையிழந்து தவிக்கும் அந்நிலையிலே அவன் கண்கள் அங்குமிங்கும் சுழல்கின்றன. அவ்வாறு சுழன்ற அவனது கண்கள் திடீரென ஓரிடத்தில் நிலைத்தன. ஆம், சுசீலாவுக்குச் சமீபமாக இருந்த மேசையிலே காணப்பட்ட பவுண்டன் பேனாவிலே அவன் கண்கள் அப்படியே நிலைத்துவிட்டன. நஞ்சருந்தி மாள்வதற்கு முன்னர் ஏதாவது எழுதி வைப்போமா என்ற சபலத்தில் சுசீலா கொண்டு வந்திருந்த பேனா அது. அதற்குப் பக்கத்தில் காகிதம் எழுதும் ‘லெட்டர் பாட்’ ஒன்றும் கிடந்தது.
“என் கண்களே என் எதிரிகள். அவை எனக்கு இன்பத்தைக் கொண்டு வரவில்லை. துன்பத்தையே கொண்டு வந்தன. அவை இருக்கும் வரை என்னால் சுசீலாவை நேசிக்க முடியாது...” என்று எண்ணிய அவன் மறுகணம் வெறி பிடித்தவன் போலானான். பவுண்டன் பேனாவைக் கையில் எடுத்தான். மின்னி மறையும் நேரத்துள் அவற்றால் தன்னிரு கண்களையும் குத்திக் கொண்டு “ஐயோ” எனக் கதறினான். உலக் நாடக பாத்திரங்களில் தன்னை முற்றாகக் கவர்ந்து அடிமை கொண்ட ஈடிப்பஸ் போலத் தன் கண்களைத் தானே குத்திக் கொண்டு கதறினான் ஸ்ரீதர்.
இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னைய கிரேக்க நாடகம் ஸ்ரீதரின் வாழ்க்கை நாடகமாகிவிட்டது.
ஒரு முறை கண்ணை மூடி மீண்டும் திறப்பதற்குச் செல்லும் அற்ப நேரத்துள் திடுதிடுப்பென்று நடந்து விட்ட இந்நிகழ்ச்சி சுசீலாவைத் திகிலடைய செய்துவிட்டது. அவள் ஒரே தாவலாகச் ஸ்ரீதரிடம் ஓடினாள். ஆனால் அதற்கு முன்னர் விஷயம் முடிந்து விட்டது. கண்களிலிருந்து இரத்தம் பிரவகித்தது. கண்கள் இரண்டும் இரண்டு புண்களாகிவிட்டன. அதைக் கண்டு ஆற்றாத சுசீலா “ஐயோ நான் என்ன செய்வேன்” என்று உச்சக் குரலில் கூச்சலிட்டாள்.
கீழே விறாந்தையிலிருந்த சிவநேசரும் பாக்கியமும் சுசீலாவின் அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டு விட்டார்கள். ஒரே ஓட்டமாக ஸ்ரீதரின் அறைக்கு ஓடினார்கள். "என்ன நடந்தது?" என்று கேட்டார் சிவநேசர்.
“தன் கண்களைத் தாமே குத்திக் கொண்டு விட்டார். உடனே டாக்டர் நெல்சனை அழையுங்கள்.” என்றாள் சுசீலா விம்மியவண்ணம்.
சிவநேசர் உடனே டெலிபோனுக்குச் சென்று டாக்டர் நெல்சனுடன் பேசினார்.
“இங்கு பயங்கரமான நிகழ்ச்சி ஒன்று நடந்துவிட்டது. ஸ்ரீதர் தனது கண்களைத் தானே குத்திக் கொண்டு விட்டான். உடனே வாருங்கள்.”
டாக்டர் நெல்சன் பதைபதைத்துப் போய்விட்டார். சில நிமிஷங்களில் வந்து விடுவதாகக் கூறி டெலிபோனை வைத்தார் அவர்.
[தொடரும்]