22-ம் அத்தியாயம் : பலாத்காரத் திட்டங்கள்
பத்மா ஸ்ரீதரைத் தான் மணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதும், சிவநேசருக்கு வந்த ஆத்திரத்தை அளவிட்டுச் சொல முடியாது. தன் வாழ்நாளிலே, எதிலுமே தோல்வி பெறாத அவர் இந்த விஷயத்தில் இப்பெண்ணிடம் இப்படிப்பட்ட பேச்சைக் கேட்க வேண்டி வந்ததே, தன் மகனைத் தன் முன்னாலேயே குருட்டுப் பிள்ளை என்று கூறினாளே இக்குமரி - அவளை விட்டு வைப்பதா என்ற அளவுக்கு அவரது கோபம் ஆவேசங் கொண்ட கடுஞ் சினமாகக் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. "வருவது வரட்டும். பலாத்காரமாக அவளைத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்." என்ற எல்லைக்குக் கூட அவரது எண்ணங்கள் சென்றுவிட்டன. உண்மைதான். அவர் நினைத்தால் அதுவும் அவரால் செய்ய முடியாத ஒன்றல்ல. கொழும்பு நகரில் அப்பிரதேசத்தில்தான் இலங்கையில் மகா பயங்கரமான காடையர்களும் அகில இலங்கை ரெளடித் தலைவர்களும், கஞ்சா வியாபாரிகளும் கள்ளக்கடத்தல் பேர்வழிகளும், சாராயக்குதச் சொந்தக்காரர்களும் இருந்தார்கள். இவர்கள் எல்லோருக்கும் சிவநேசர் என்றால் எப்போதுமே அளவுக்கு மீறிய மதிப்பு. இதற்குக் காரணம் அவர்களில் முக்கியமான ஒரு சிலருக்கு மிக எக்கச்சக்கமான நேரங்களில் சிவநேசர் பல உதவிகளைச் செய்திருந்ததேயாகும். அவர்களைப் பார்த்துச் சிவநேசர் தம் சுண்டு விரலை அசைத்தால் போதும். அவர்கள் உடனே நாட்டையே அசைத்துவிடுவார்கள். அத்தகைய செல்வாக்கு அவருக்கு அவர்களிடையே இருந்து வந்தது. மேலும் இத்தகைய கோஷ்டிகளைக் கட்டியாள்வதற்கும், இது போன்ற வேலைகளைச் செய்து முடிப்பதற்கும் வேண்டிய பணத்தைப் பற்றிய கவலையும், சிவநேசருக்கு இல்லை. இன்னும் என்றுமே பணத்தைத் தண்ணீர் போல் அள்ளி வீசிச் செலவிடுவதற்கும் அவர் பின்னிற்பவரல்லர். எனவே, பலாத்காரத்தைக் கட்டவிழ்த்து விட்டுக் காரியங்களைச் சாதிப்பது அவருக்கு இலகுவான காரியமே.
பத்மா ஸ்ரீதரை நிராகரித்த அன்று மாலை "கிஷ்கிந்தா"வின் மாடியிலிருந்த நிலா முற்றத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக விஸ்கியை அருந்திக் கொண்டிருந்த சிவநேசர் மனதில் இப்படிப்பட்ட பலாத்கார எண்ணங்கள் பேய் நடம் புரிந்து கொண்டிருந்தன. ஒருவரிடமும் ஒன்றும் பேசாமல் விஸ்கி மேல் விஸ்கியாகக் குடித்துக் கொண்டிருந்த அவரது முகம் நிமிஷத்துக்கு நிமிஷம் பயங்கரமாக மாறிக் கொண்டிருந்ததை அவதானித்த பாக்கியம் பயந்து போய்விட்டாள். என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ என்ற அச்சம் அவளைப் பீடித்தது. எரிமலை வாய் திறந்து தீக்குழம்பைக் கக்க ஆரம்பித்ததும், அதைப் பார்த்தவர்கள் பூகம்பம் அதிக தொலைவிலில்லை என்று அதனை எதிர்பார்த்திருப்பது போல், சிவநேசரின் போக்கைப் பார்த்து ஏதோ அநர்த்தம் சீக்கிரமே விளையப் போகிறது என்று அதனை எதிபார்த்திருந்தாள் பாக்கியம். அவ்வித எதிர்பார்ப்பின் காரணமாகக் கணவனிலும், குடும்பத்தின் எதிர்காலத்திலும் எப்பொழுதும் அக்கறை கொண்டவளாகிய அவள் அவ்வித விளைவுகள் ஏற்பட்டால், அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றியும் தன் புலனைச் செலுத்தினாள். பத்மா ஸ்ரீதரை இவ்வாறு கைவிட்டாளே என்பதால் சிவநேசருக்கு ஏற்பட்ட அதே வேதனை அவளுக்கும் ஏற்படத்தான் செய்தது. ஆனால் அவ்வேதனையால் சிவநேசரின் உள்ளத்தில் பிறந்ததோ, உலகத்தையே சர்வ நாசமாக்கும் சூறாவளி. ஆனால் பாக்கியத்தின் மனதில் ஏற்பட்ட எதிரொலியே வேறு. உள்ளம் சாம்பி, இரத்தக் கண்ணீர் வடித்தாள் அவள்.
விநாடிக்கு விநாடி பலாத்கார எண்ணங்கள் வலுப் பெறப் பெற்ற சிவநேசர் படிப்படியாகத் தீர்க்கமான முடிவுகளைச் செய்து கொண்டிருந்தார். பரசுராமர், துர்வாசர், விஸ்வாமித்திரர் என்ற மகாமுனிவர்களின் கோபம் போல அவர் சினமும் அத்துமீறிவிடவே அவர் மனமும் ரெளத்திரகாரமான கொந்தளிப்பு நிலையை அடைந்தது. சர்வாங்கார காலத்து மகாருத்திரன்போல் கொதிப்படைந்த கண்ணோடு பற்களை நறநறவென்று அவர் கடித்துக் கொண்டிருந்ததைப் பாக்கியம் பார்த்தும் பாராதவள் போல் கவனித்துக் கொண்டிருந்தாள்.
படிப்பாளியாகிய சிவநேசருக்கு எந்த நிலையிலும் தாம் படித்தறிந்த விஷயங்கள் ஞாபகம் வராமல் இருப்பதில்லை. பத்மாவைப் பலாத்காரமாகத் தூக்கி வந்து ஸ்ரீதருக்குத் திருமணம் செய்து வைத்து விடுவோமா என்று நினைத்த அவருக்கு, அர்த்தசாஸ்திரத்தில் கெளடில்யன் கூறியுள்ள எழுவகைத் திருமணங்களும் ஞாபகம் வந்தன. இவற்றில் ஒன்று இராட்சத திருமணம். பலாத்காரமாக ஒரு பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்யும் இதனைக் கூடக் கெளடில்யன் ஒப்புக் கொள்ளுகிறான். இத்திருமணத்தின் முடிவாகச் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தி ஏற்படுமாயின் அது அங்கீகரிக்கத்தக்கதே என்பது அவரது தீர்ப்பு. உண்மையில் பல இடங்களில் கூட பலாத்காரத் திருமணங்கள் கூட நல்ல இல்லற வாழ்வுக்கு அடிப்படியாவதை நாம் காணத்தானே செய்கிறோம்.
கோபத்தில் துடிதுடித்த சிவநேசருக்குக் கொலைக்கார எண்ணங்கள் கூடத் தோன்றின. "கொட்டாஞ்சேனை கொலீஜ் ரோட் முழுவதையும் பிய்த்தெறிந்துவிடுவோமா? பத்மாவையும் பரமானந்தரையும் சுட்டுச் சாம்பாலாக்கி உள்ளங்கையில் வைத்து ஊதிவிடுவோமா?" என்று கூட யோசித்தார் அவர். இந்த யோசனையில் திடீரென " நன்னித்தம்பி இங்கே வா." என்று சப்தமிட்டார் சிவநேசர்.
நன்னித்தம்பி ஓடோடி வந்தார். சிவநேசர் அவரிடம் "கொச்சிக்கடை கஞ்சா நல்லையாவை டெலிபோனில் எடு. ‘மூன்றைஸ்’ கிளப்பில் ஆளைப் பிடிக்கலாம்." என்றார். நன்னித்தம்பியும் "சரி" என்று டெலிபோனுக்கு ஓடினார்.
‘மூன்றைஸ்’ கிளபில் டெலிபோன் அலறியது.
"யாரது? நானிங்கே நல்லையா பேசுகிறேன்."
"இங்கே பேசுவது சிவநேசர். உடனே உன்னை நான் காண வேண்டும்."
"சிவநேசரா? எங்கே இருந்து பேசுகிறீர்கள் ஐயா? எங்கே வர வேண்டும்."
"ஹோர்ட்டன் பிளேஸ் ‘கிஷ்கிந்தா’வில் இருந்து பேசுகிறேன். உடனே புறப்பட்டு வா."
"சரி ஐயா."
இந்தச் சம்பாஷணை நடந்து முக்கால் மணி நேரத்தில் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் வந்த பெரிய கார் ஒன்று ‘கிஷ்கிந்தா’ வளவுக்குள் வந்து நிற்க, அதிலிருந்து வாட்டசாட்டாமான ஓர் ஆள் பங்களாவுக்குள் நுழைந்தார் அந்த வாட்டசாட்டமான ஆள்தான் கஞ்சா நல்லையா.
கஞ்சா நல்லையா எப்பொழுதும் விலை உயர்ந்த பட்டுச் சட்டையும் வேட்டியுமே அணிந்திருப்பார். அவர் கைவிரல்களில், இடது கையில் இரண்டு மோதிரங்களும் வலது கையில் ஒரு மோதிரமுமாக மூன்று மோதிரங்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன. தங்கப் பட்டியிட்ட கைக்கடிகாரம் மணிக்கட்டை அலங்கரிக்க, கழுத்தில் பெரிய சங்கிலி ஒன்றும் வடம் போல் ஊசலாடிக் கொண்டிருந்தது.
சிவநேசர் நிலாமுற்றத்தில் அவரை வரவேற்றார். "வா நல்லையா. உட்கார்." என்று அங்கிருந்த நாற்காலி ஒன்றை அவர் சுட்டிக் காட்டினார். நல்லையா சிவநேசருக்கும், பாக்கியத்துக்கும் தனது பார்வையாலும் புன்னகையாலும் அஞ்சலி செலுத்திக்கொண்டே நாற்காலியில் உட்கார்ந்தார். வேலைக்கார சுப்பையா பாக்கியத்தின் உத்தரவுப்படி விஸ்கி ட்ரேயுடன் கூடிய தள்ளு வண்டியை அவர் முன் கொண்டு வந்து நிறுத்தினான். நல்லையா விஸ்கியை வார்த்துக்கொள்ளாமல், சோடாவை மட்டும் ஒரு கிளாசில் ஊற்றி அதில் ஒரு மிடறை அருந்தினார். அதைக் கண்ட பாக்கியம், "என்ன நல்லையா, வெறும் சோடாவைக் குடிக்கிறாய்?" என்று கேட்டாள். "இல்லை. நான் சமீப காலமாகக் குடிப்பதைக் குறைத்துக் கொண்டு வருகிறேன்." என்று பதிலளித்தார் நல்லையா.
கஞ்சா நல்லையா என்ற பெயரைக் கேட்டதும் கொழும்பு முழுவதுமே அலறுமாயினும், தடை செய்யப்பட்ட கஞ்சா வர்த்தகத்தைச் செய்து இலட்சாதிபதியாக விளங்கினார் என்பதைத் தவிர அவர் மீது வேறு எவ்வித குற்றத்தையும் இலகுவில் சுமத்திவிட முடியாது. நல்லையா உண்மையாக எல்லா வகையிலும் நல்லையாவாக இருக்க விரும்பிய ஒருவர் தான். ஆனால் நியாயமான முறையில் தன் திறனுக்கேற்ற ஒரு தொழிலைச் செய்ய அவர் தமது இளமைக் காலத்தில் முயன்ற போது அவருக்கேற்பட்டது பெரிய ஏமாற்றமே. வாழ்க்கையின் ஆரம்பத்தில் இது விஷயத்தில் தோல்விக்கு மேற் தோல்வி பெற்ற அவர், வேறு வழியில்லாமல் சந்தர்ப்ப சூழல்களின் காரணமாகக் கஞ்சாத் தொழிலில் ஒரு சில்லறைப் பேர்வழியாகச் சிக்கினார். ஆனால் இன்றோ அத் தொழிலில் இலங்கையின் மாபெரும் தலைவர்களில் ஒருவராக மலர்ந்துவிட்டார். இன்று அவரமைத்த கஞ்சா வர்த்தகம், கிளப்புகள் என்ற வலைப்பின்னலிலே பல நூற்றுக்கணக்கானவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததோடு, தம் குடும்பத்தினரின் தேவைகளுக்கும் ஏராளமானவர்கள் அவரை நம்பியிருந்தார்கள். இந்நிலையில் அவருக்கு இச்சட்ட விரோதத் தொழிலில் இருந்து மீட்சியே இல்லாது போய்விட்டதென்றாலும், தமக்கு இத்தொழிலில் கிடைத்து வந்த பெரும் பணத்தில் ஒரு பகுதியை அவர் ஏழைகளுக்கு உனவளிப்பதற்கு எப்பொழுதும் செலவிட்டு வந்தார். பரிமாறிய ஏழைகளின் முகத்தில் பூக்கும் நன்றிப் புன்னகையைப் பார்ப்பதில் அவருக்கு அளவில்லாத திருப்தி. இது தவிர, ஆண்டு தோறும் சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழாவொன்றும் பெரும் பணச் செலவிலே அவர் செய்து வந்தார்.
நல்லையாவின் இப்போக்கெல்லாம் நன்கு தெரிந்ததனாலே பாக்கியத்துக்கு அவர் மீது கஞ்சாக்காரராச்சே என்ற வெறுப்பு இல்லை. அத்துடன் முன்னொரு சமயம் நல்லையா வழக்கொன்றில் மாட்டிக் கொண்ட போது சிவநேசர் தன் முழுச் செல்வாக்கையும் உபயோகித்து அவரை அதிலிருந்து காப்பாற்றியிருந்தார். அப்போது நல்லையா சொன்ன ஒரு வசனம் இன்னும் அவள் காதில் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. " நான் கடவுளை மறந்தாலும் மறப்பேன். உங்களை மறக்க மாட்டேன். நான் உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அடிமை. என்னாலான எந்த உதவியையும் எப்பொழுதும் செய்வேன்" இவ்வாறு சொல்லி நல்லையா சிவநேசரைத் தன் இருகரங்களாலும் வணங்கி ஐம்பதினாயிரம் ரூபா கொண்ட ஒரு நோட்டுக் கட்டை அவரிடம் கொடுத்ததையும் சிவநேசர் அதை வாங்க மறுத்ததையும் ஞாபகப்படுத்திக் கொண்டாள் அவள். "என்ன நல்லையா, சிவநேசர் பணத்துக்காக எதையும் செய்வார் என்று நீ நினைத்தாயா என்ன? பணத்தை எடுத்துக் கொள்" என்று சிவநேசர் சொன்னதும், நல்லையா உணர்ச்சி மேலிட்டுக் கண் கலங்கியதையும், "அப்படியானால் நீங்கள் செய்த நன்றிக்கு நான் என்ன செய்வது? நான் ஏதாவது செய்ய இடமளிக்க வேண்டும்" என்று அவர் கூறியதும் அவளுக்கு நினைவு வந்தன. அதற்குச் சிவநேசர் சிரித்து, "எனக்கு ஒரு கட்டுக் கஞ்சா கொண்டு வா" என்று விளையாட்டாகக் கூற, அன்று பிற்பகலே ஒரு கட்டுக்குப் பதில் பல கஞ்சா கட்டுகளை நல்லையா கொண்டு வந்ததும் அவள் மனத்திரையில் பளிச்சிட்டன.
சிவநேசரும் நல்லையாவும் உரையாடத் தொடங்கியதும் பாக்கியம் அவர்கள் பேசுவதற்குத் தான் தடையாக இருக்கக் கூடாது என்று மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்று விட்டாள். அங்கு தனக்குத் தெரிந்த அளவுக்கு ஸ்ரீதர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதைப் பற்றித் தன் மூளையைக் குழப்பலானாள்.
சிவநேசர் நல்லையாவிடம் ஸ்ரீதரின் காதல் விவகாரம் பற்றியும் அது இப்போது அடைந்துவிட்ட இக்கட்டான நிலை பற்றியும் குறிப்பிட்டார். தான் முதலில் இத்திருமணத்தை எதிர்த்தது, ஸ்ரீதர் தன் கண் பார்வையை இழந்தது முதலிய சகல விவரங்களையும் ஆதியோடந்தமாய் கூறிய அவர், முடிவில் "நல்லையா என்ன ஆனாலும் பரவாயில்லை. பத்மாவைக் கடத்திச் சென்றேனும் ஸ்ரீதருக்கு அவளைத் திருமணம் செய்து வைக்க வேண்டும். வருவது வரட்டும். எல்லாவற்றையும் என்னால் சமாளிக்க முடியும்" என்றார்.
நல்லையா சிறிது நேரம் மெளனமாயிருந்து விட்டு, "நீங்கள் சொல்லும் பெண்ணை எனக்கு நன்றாகத் தெரியும். ஸ்ரீதர் தம்பியின் காரில் அப்பெண் போய் வருவதை நான் பல தடவை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ பொழுதுபோக்குக்காக அவர் அப்பெண்ணைப் பிடித்துச் சுற்றித் திரிகிறாரென்று நான் எண்ணினேனேயல்லாமல், இவ்வளவு தூரம் அப்பெண் மீது அவருக்குக் காதல் ஏற்பட்டிருந்தது என்று எனக்குத் தெரியாது. அப்பெண்ணுடன் போகும் பொழுது கூட என்னைக் கண்டால், தம்பி தன் கையால் அடையாளம் காட்டிச் சிரித்து விட்டுப் போவது வழக்கம்" என்றார்.
"நல்லையா, ஸ்ரீதர் என் ஒரே மகன். அவன் பிள்ளையும் குட்டியுமாக வாழ்வதை நான் பார்க்க வேண்டும். அதற்கேற்ற திட்டத்தை உடனே நீ தீட்டு. கோடு, போலீஸ் ஒன்றைப் பற்றியும் யோசியாதே. எல்லாவற்றுக்கும் நானிருக்கிறேன். என்ன சொல்கிறாய்?" என்றார் சிவநேசர்.
"சொல்வதற்கென்ன இருக்கிறது? உங்கள் கட்டளை இது. செய்து முடிப்பது என் வேலை. நீங்கள் எனக்குச் செய்த உதவிகளுக்கு இப்போதாவது பதில் உபகாரம் செய்ய எனக்குச் சந்தர்ப்பமளிக்கிறீர்களே, அது எனக்குப் பெரிய வாய்ப்பல்லவா?" என்றார் நல்லையா.
அதைக் கேட்ட சிவநேசர் தம் ஆசனத்தை விட்டெழுந்து நல்லையாவின் சமீபம் சென்றார். அவர் தோள்களைத் தன் கரங்களால் தொட்டு "நல்லையா, பணச் செலவை பற்றி யோசிக்காதே. எவ்வளவு வேண்டுமானாலும் நான் செலவிடத் தயார். உடனே தொடங்கு வேலையை. இரண்டு மூன்று தினங்களில் எல்லாம் முடிய வேண்டும்." என்றார்.
நல்லையா, "சரி" என்று தலையை அசைத்துச் சிறிது நேரம் மெளனமாயிருந்துவிட்டு, "ஆனால் ஒரு விஷயம், இப்பெண் ஒழுங்கான ஒரு பெண்ணல்ல. சமீப காலமாக ஒரு மீசைக்கார வாலிபனுடன் மோட்டார் சைக்கிளில் அவள் சுற்றித் திரிவதை நான் கண்டிருக்கிறேன். இருவரையும் ஆள் வைத்து ஒரே அமத்தாக அமத்தி அவனை விரட்டிவிட்டு அப்பெண்ணை யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வந்து விடுவேன். ஆனால் ஒழுக்கம் என்ற விஷயத்தில் ஒரு சல்லி பெறாத ஒரு பெண்ணுக்காக இப்படிப்பட்ட பெரிய காரியங்களை நாம் செய்யத்தான் வேண்டுமா?" என்று கேட்டார்.
நல்லையாவின் இப்பேச்சைக் கேட்டு சிவநேசர் திகைப்படைந்து விட்டார். "நீ சொல்வது உண்மைதானா? பத்மா கண்டவர்களுடனும் ஊர் சுற்றும் பெண்ணா? அப்படியானால் என் ஸ்ரீதர் எவ்வளவு ஏமாற்றப்பட்டு விட்டான்? அவனோ பத்மா மகா உத்தமி என்று நினைக்கிறான். அவள் பெரிய ஏமாற்றுக்காரியாகவல்லவா இருக்கிறாள்" என்றார்.
நல்லையா "ஐயா எதற்கும் கொஞ்சம் பொறுங்கள். நாளைக் காலை ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு வருகிறேன். அப்போது நீங்கள் என்ன உத்தரவு போடுகிறீர்களோ அதை நான் இரவுக்கு முன் முடித்துவிடுகிறேன். உங்களுக்காக மட்டுமல்ல. தம்பி ஸ்ரீதருக்காகவும் நான் இதைச் செய்ய வேண்டும். உங்களோடு பழகியது போல் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லையென்றாலும் அவரது சிரித்த முகத்துக்காக எதையும் செய்யலாம். உண்மையில் அவர் கண் பார்வை இழந்து விட்டாரென்ற செய்தியை என்னால் தாங்க முடியவில்லை ஐயா." என்றார்.
போகும் வழியில் பாக்கியம் நல்லையாவை வழிமறித்து "ஐயாவின் திட்டமென்ன?" என்று கேட்டாள். நல்லையா விவரத்தைக் கூறியதும், "அவர் கோப வெறியில் சொல்வதை அப்படியே செல்வதற்கு நீ கிளம்பி விடாதே. நல்லையா" என்றாள் பாக்கியம்.
"நான் அப்படிச் செய்வேனா அம்மா? உங்கள் குடும்பம் எங்கள் குடும்பம் போல் சாதாரணமான குடும்பமா என்ன? நாங்கள் எந்த இழிவையும் இகழ்ச்சியையும் தாங்கிக் கொள்வோம். உங்கள் குடும்பமோ பரம்பரைப் புகழும் செல்வாக்கும் வாய்ந்த குடும்பம். ஆகவே கீழ்த்தரமான செய்கைகளினாலே அம்மதிப்புக்குப் பங்கம் விளைவிக்க நான் ஒரு போதும் ஒருப்பட மாட்டேன். ஆனால் ஐயா சொன்னதற்கெல்லாம் "ஆமாம்" சொல்லிவிட்டுத்தான் போகிறேன். ஏனெனில் அவரை எதிர்த்துப் பேச யாராலும் முடியாது. ஆனால் நாளைக் காலை அவராகவே மனம் மாறிவிடுவார் என்று நினைக்கிறேன்," என்று சொல்லிப் பத்மா ஒரு புதிய காதலனுடன் மோட்டார் சைக்கிள் சவாரி போவதைப் பற்றியும் பாக்கியத்துக்குக் கூறினார் நல்லையா. "இப்படிப்பட்ட பெண் ஸ்ரீதர் தம்பியின் மனைவியாவதை நான் விரும்பவே இல்லை." என்றார் அவர்.
"நிச்சயம் இப்படிப்பட்ட பெண் எங்கள் வீட்டுக்கு வேண்டாம்." என்றாள் பாக்கியமும்.
*** *** ***
கொழும்பில் இவை நடந்து கொண்டிருக்க "அமராவதி"யில் ஸ்ரீதர் நித்திரையில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான். அவன் இம்முறை யாழ்ப்பாணத்துக்கு வந்த பிறகு தாய் பாக்கியத்தைப் பிரித்து தனியாக இருந்த இரண்டாவது இரவு இது. முதல் இரவு நேற்றைய இரவாகும். நேற்று மத்தியானம் கழித்தே சிவ நேசரும் பாக்கியமும் கொழும்புக்குப் புறப்பட்டனர். புறப்படு முன்னர் பாக்கியம் ஸ்ரீதரைக் கட்டி முத்தமிட்டு "நாளை பகல் நாங்கள் பத்மா வீட்டுக்குப் போகிறோம். நாளை மறு தினம் அல்லது அடுத்து நாள் திரும்பி விடுவோம். அது வரைக்கும் தனியாக இருக்க வேண்டுமென்று கவலைப்படாதே. தெய்வானை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வாள். உனக்கு விருப்பமான முறையிற் சமைத்துத் தருவாள். வேண்டியதை அவளிடமோ மற்ற வேலைக்காரர்களிடமோ கேட்டுப் பெற்றுக் கொள். ரேடியோகிராமுடன் போதிய அளவு இசைத்தட்டுகள் வைத்திருக்கிறேன். இஷ்டப்படி போட்டுக் கேட்டுக் கொள். பேச கற்துனைக்குச் சின்னைய பாரதியையும் பிள்ளைகளையும் வரச் சொல்லியிருக்கிறேன். அவர்களுடன் விளையாடிக் கொண்டிரு. ‘ரேடியோ’வும் இருக்கிறது. இவை தவிர உன்னோடு எந்நேரமும் விளையாட மோகனாதான் இருக்கிறாளே" என்று கூறினாள்.
ஸ்ரீதர் பதிலுக்கு "அதெல்லாமிருக்கட்டுமம்மா, நாளை இரவு தவறாமல் எனக்கு ‘கிஷ்கிந்தா’விலிருந்து டெலிபோன் பன்ண வேண்டும். மறந்து விடக் கூடாது" என்றான்.
அந்த ஏற்பாட்டின்படி இரவு ஆறு மணியிலிருந்தே டெலிபோன் செய்தியை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தான் அவன். சின்னைய பாரதியின் குழந்தைகள் அங்குமிங்கும் பேசிக் கொண்டும் விளையாடிக் கொண்டுமிருந்தார்கள். இடையிடையே ஸ்ரீதரிடம் கும்பலாக வந்து ஏதாவது கேலிப் பேச்சுப் பேசிச் சென்றார்கள். ஸ்ரீதர் அவர்களில் மிகவும் சிறியவளான இலட்சுமியை மடி மீது தூக்கி வைத்து அவளுக்குப் பாட்டுப் பாடிக் காட்டினான். தனக்கும் அப்படி ஒரு குறுகுறுத்த குழந்தை இருந்தால் எவ்வளவு நல்லது என்று எண்ணிய அவன் அதன் உச்சியை ஆசையோடு முத்தமிட்டான்.
குழந்தை இலட்சுமி, "மாமா, எனக்கும் உங்கள் வீட்டுப் பஞ்ச வர்ணக் கிளி போல் ஒரு கிளி வேண்டும். தருவாயா?" என்று கேட்டாள்.
"அம்மா வரட்டும். கொழும்பு மிருகக்காட்சிச் சாலையிலிருந்து நல்ல பஞ்சவர்ணக் கிளி ஒன்றை உனக்கு வரவழைத்துத் தருகிறேன்.’ என்று குழந்தைக்கு வாக்குறுதி அளித்தான் அவன். இதை அவன் விலையாட்டுக்குச் சொல்லவில்லை. உண்மையாகவே பிஞ்சு மனம் மகிழ, கிளி ஒன்றை வாங்கிக் கொடுக்கத் தீர்மானித்தான் அவன்.
அதன்பின் அவர்களை விறாந்தையில் சென்று விளையாடும்படி கூறிவிட்டுக் கட்டிலில் சாய்ந்தான் ஸ்ரீதர். சின்னைய பாரதி ஏதோ பழைய வடமொழி நூலைச் சப்தமிட்டு வாசித்துக் கொண்டிருந்தார். காளிதாசன் அல்லது பசுபூதியாக இருக்க வேண்டும். அவர்களில்தான் அவருக்கு ஈடுபாடு. அவரது குரலும் குழந்தைகளின் விளையாட்டோசையும் சேர்ந்து இரவின் அமைதியைக் குலைத்தன.
இரவு எட்டு மணியாகியும் கொழும்பிலிருந்து டெலிபொன் வராமற் போகவே தானே ‘கிஷ்கிந்தா’வுக்கு ‘ட்ரங்கோல்’ எடுத்துப் பேசினான் ஸ்ரீதர். வேலைக்காரச் சுப்பையா பதிலளித்தான்.
"சுப்பையா, அம்மாவைக் கூப்பிடு" என்றான் ஸ்ரீதர்.
"அம்மா மாடியில் இல்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். கீழே சென்று அழைத்து வருகிறேன்." என்று ஓடினான் சுப்பையா.
பாக்கியம் ஸ்ரீதருடன் அப்போது பேச விரும்பவில்லை. அவனிடம் பத்மா விவகாரத்தை எப்படிச் சொல்வது என்று அவளால் முடிவு செய்ய முடியாதிருந்ததே அதற்குக் காரணம். உண்மையைக் கேட்டால் ஸ்ரீதரின் இதயம் வெடித்து விடும் என்று பயந்தாள் அவள். ஆகவே சுப்பையாவிடம் "ஐயாவும் அம்மாவும் இப்போதுதான் காரில் ஏறி எங்கோ போய்விட்டார்கள் என்று சொல்லு" என்று உத்தரவிட்டாள். சுப்பையாவும் அவ்வாறே செய்தான். அதைக் கேட்ட ஸ்ரீதர், "அம்மா, வந்ததும் உடனே எனக்கு டெலிபோன் பண்ணும்படி சொல்லு." என்று சுப்பையாவுக்கு ஆணையிட்டான்.
பாக்கியம் அதன்பின் கீழ் வீட்டு விறாந்தையில் நின்ற நன்னித்தம்பியிடம் டெலிபோனில் நடந்த விஷயத்தைச் சொன்னாள். "இன்று இரவு முழுக்க டெலிபோன் பண்ணாமல் இருக்க மாட்டான். அடிக்கடி டெலிபோன் பண்ணுவான். இதை எப்படிச் சமாளிப்பது? எனக்கொன்றும் தெரியவில்லையே" என்று கவலையோடு கூறினாள்.
நன்னித்தம்பியர் சிறிது நேரம் யோசித்துவிட்டு "இப்படிப்பட்ட நேரங்களில் நாம் பொய்தான் சொல்ல வேண்டும். தம்பி மீண்டும் டெலிபோன் பண்ணினால் "இன்று நாங்கள் பத்மாவைப் பார்க்கப் போனோம். ஆனால் அவள் தந்தைக்கு உடம்பு சுகமில்லாததால் அவர்கள் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார்கள். நாளை ஆஸ்பத்திரிக்குப் போகலாம் என்றிருக்கிறோம்" என்று கூறிவிடுவோம். அதற்கிடையில் இப்பிரச்சினையைத் தீர்க்க வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்று ஆலோசிப்போம். இதை விட நாம் வேறு என்ன செய்ய முடியும்," என்றார்.
பாக்கியத்துக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது. ஆகவே உடனேயோ ‘ட்ரங்கோல்’ எடுத்து மகனுடன் பேசினாள் அவள். "அம்மா, நீ இல்லாமல் இங்கே இருப்பது எவ்வளவு கஷ்டமாயிருக்கிறது, தெரியுமா? நேற்று எப்படியோ கழிந்துவிட்டது. இன்று பாரதியயின் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தேன். அவருடைய கடைக்குட்டி இலட்சுமி குறு குறுத்த பெண். ஆனால் என்னதான் அவர்களோடு விளையாடினாலும் நீ இல்லாமல் இருப்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அது சரி, அம்மா, பத்மாவை நீ பார்த்தாயா? அவளை உனக்குப் பிடித்திருக்கிறதா?" என்றாள் ஸ்ரீதர். அதற்குப் பாக்கியம் நிலைமையைச் சமாளிக்கத் தான் நன்னித்தம்பியோடு சேர்ந்து தயாரித்திருந்த பொய்யை மெல்ல அவிழ்த்துவிட்டான். ஸ்ரீதர் அதை நம்பி விட்டதால் தற்காலிகமாக - அதாவது அடுத்த நாள் வரையாவது பிரச்சினை ஒருவாறு தீர்த்து வைக்கப்பட்டது.
ஸ்ரீதர், "அம்மா, நாளை ஆஸ்பத்திரிக்குப் போய் வந்ததும் உடனே எனக்கு நீயே போன் செய்துவிடு. நான் பேசும்வரை காத்திருக்க வேண்டாம்." என்றான்.
"ஆம் ஸ்ரீதர்., அப்படியே செய்தேன்." என்றாள் பாக்கியம்.
அடுத்த நாட் காலை கஞ்சா நல்லையா எட்டு மணிக்கே வந்துவிட்டார். சிவநேசர் மேல் மாடியில் அவரை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார். பாக்கியமோ சிவநேசர் ஆத்திரத்தில் ஏதாவது அவசர முடிவெடுத்து ஆத்திரத்தில் ஏதாவது செய்துவிடக் கூடாதென்பதற்காகத் தானும் அவர்கள் பேச்சை ஒரு புறம் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள்.
நல்லையா எதிர்பார்த்தது போல் சிவநேசர், பத்மா "ஒழுக்கமற்ற" பெண் என்பதற்காக தம் முடிவை எவ்விதத்திலும் மாற்றியதாகத் தெரியவிலை. "இக்காலத்துப் பெண் கல்யாணம் பண்ணுவதற்கு முன்னர் பலருடனும் பழகும் படியான சூழ்நிலைகள் ஏற்டத் தான் செய்கின்றன. ஆனால் கல்யாணத்துக்குப் பின்னர் எல்லாம் சரியாய்ப் போய்விடும்," என்பது பல நூல் கற்ற அவரது எண்ணம். உண்மையில் அரச குடும்பங்களில் கூட இவ்வித நிலைமைகள் ஏற்பட்டிருக்கின்றன. "பிரித்தானிய இளவரசியாகிய மார்கரெட் தனது திருமணத்துக்கு முன்னர் பலருடன் பழகியதாகக் கூறப்பட்ட போதிலும், பின் ஒருவரை மணந்து வாழவில்லையா? ஆகவே பத்மாவை ஒழுக்கமற்றவள் என்று கூறுவது இவர்கள் மடமையைத்தான் காட்டுகிறது. இன்னும் ஸ்ரீதரால் பத்மா இல்லாமல் வாழ முடியாது. அவனுக்கு அவன் விரும்பும் பத்மாவை அளிக்க வேண்டும். அதுதான் எனது வேலை." என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தார் அவர்.
ஆகவே நல்லையாவை நோக்கி "நல்லையா, விஷயத்தை இன்றே முடித்துவிட வேண்டும்." என்றார் அவர்.
"எல்லாம் ரெடி. உடனே தொடங்க வேண்டியதுதான்." என்றார் நல்லையா.
"எனக்குத் தெரியும் -- நீ இதைச் செய்து முடித்துத்தான் வேறு காரியம் பார்ப்பாய் என்று. அப்போது நீ உடனே புறப்பட்டு போ. என்ன அவசரமானாலும் உடனே எனக்கறிவி. டெலிபோனில் பேசுவதை விட நேரிலே வருவதுதான் நல்லது. உன்னாலே வர முடியாவிட்டால் ஆளை அனுப்பு. எவ்வளவு சீக்கிரத்தில் அந்தப் பத்மாவைக் கொண்டு வர முடியுமோ அவ்வளவு விரைவில் கொண்டு வா. ஆனால் அவளை எந்த விதத்திலும் காயப்படுத்திவிடக் கூடாது. எப்படியானாலும் எனக்கு மருமகளாகப் போகிறவளல்லவா? ஆனால் எமது திட்டத்தைத் தடுக்கும் மற்றவர்களை நீ என்ன செய்தாலும் பரவாயில்லை" என்றார் சிவ நேசர்.
பாக்கியம் இடைமறித்து "இதென்ன பயங்கரத் திட்டம். நல்லையா நீ இதைச் செய்யக் கூடாது." என்றாள்.
சிவ நேசர் வெகுண்டார். "பாக்கியம், நீ வாயை மூடு. உனக்கு இந்த விஷயங்கள் தெரியா. நீ கீழே போ. இவ்விஷயங்களில் பெண்களால் ஆண்களுக்கு ஆலோசனை சொல்ல முடியாது" என்றார்.
நீட்சேயின் தத்துவக் கருத்துகளை தமது வாழக்கைத் தத்துவங்களாக ஏற்றிருந்த சிவநேசர் பெண்கள் சம்பந்தமாகவும் அந்த ஜெர்மானிய தத்துவ தரிசகரின் கருத்துகளை ஓரளவு ஏற்றுக் கொள்ளவே செய்தார். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டுமேயல்லாது ஆலோசனை கூறும் அளவுக்கு வரக் கூடாது என்பது அவரது உள்ளத்தோடு ஒட்டியிருந்த ஒரு கருத்தாகும்.
ஆனால் பாக்கியமோ இன்று விட்டுக் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிட்டாள். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு பெண் தன் மனதைத் திடப்படுத்தி வாதாடாவிட்டால் விஷயம் தலைக்கு மேல் போய்விடும் என்று அவள் அஞ்சினாள். மகாபாரதத்தில் திரெளபதி பல இடங்களில் இப்படித் தன் கணவர்களுடன் போரிட்டதை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
"அந்தப் பெண் பத்மா இன்னொருவனுடன் கூடித் திரிகிறாளாம். நல்லையாவே சொல்லுகிறார். அப்படிப்பட்ட உதவாக்கரை பெண்ணை மருமகளாகப் பெறவா இப்படிப்பட்ட பெரிய திட்டம் போடுகிறீர்கள்? அப்பெண் என் மருமகளாக என் வீட்டில் அடி எடுத்து வைக்க நான் ஒரு போதும் விட மாட்டேன்."
"பாக்கியம், நீ கூட என்னை எதிர்த்துப் பேசத் துணிந்து விட்டாயா? வாயை மூடிக் கொண்டு பேசாமல் இரு. ஸ்ரீதருக்கு அந்தப் பெண்ணும் இல்லாவிட்டால் வேறு யார் கிடைப்பார்கள்? அவனைத்தான் எல்லோரும் குருடன் குருடன் என்று ஒதுக்குகிறார்களே."
"அதற்காக ஒழுக்கமற்ற ஒரு பெண்ணை அவனுக்குக் கட்டி வைப்பதா? அது மட்டுமல்ல, இவ்விதம் ஒரு பெண்னைப் பலாத்காரமாகக் கடத்தினால் போலீசார் சும்மா இருப்பார்களா?"
"அதைப் பற்றி நீ கவலைப்படாதே. பணத்தைச் செலவிட்டு அதைச் சமாளிப்பேன். அந்த வாத்தியாரை என்னால் சமாளிக்க முடியாது என்று நினைக்கிறாயா என்ன? அவனைக் கொன்று அவன் தலையைக் களுத்துறையிலுள்ள என் ரப்பர்த் தோட்டத்திலும், உடலைக் கிளிநொச்சியிலுள்ள என் வயலிலும் புதைத்துவிட்டால் போகிறது."
"அந்த வாத்தியார் மீது உங்களுக்கென்ன கோபம்? அவர் ஸ்ரீதருக்காகத் தானே பேசினார்? மகள்தான் மறுத்துவிட்டாள்."
"மறுத்த மகளை இப்பொழுது சம்மதிக்க வைக்கப் போகிறோம். வாத்தியார் பேசாமலிருந்தாற் சரி. யாருக்கும் கஷ்டம் வராது."
"ஆனால் இவ்வளவு பெரிய திட்டம் தீட்டும் நீங்கள் ஒன்றை யோசித்தீர்களா?"
"ஒன்றல்ல, எல்லாவற்றையுமே யோசித்துவிட்டேன். அதன் பயனாகத்தான் பத்மாவை ஸ்ரீதருக்கு எப்படியும் கட்டி வைப்பதென்று தீர்மானித்திருக்கிறேன் நான்?"
"பாவம் ஸ்ரீதர்! கண்களை இழந்து நிற்கிறான். உங்கள் திட்டத்தில் சிறிது தவறேற்பட்டாலும் அவன் ‘கோடு’ ஏற வேண்டி வரும் என்பதை யோசித்தீர்களா? பத்திரிகைகள் எல்லாம் ‘அமராவதி’ வளவைப் பற்றி அலறும். அவற்றை என்னால் ஒரு போதும் சகிக்க முடியாது. ஸ்ரீதருக்கு நஞ்சு கொடுத்து நானும் நஞ்சு குடித்துச் செத்து விடுவேன். அதன் பின் ‘அமராவதி’ மாளிகையில் நீங்கள் தனியே உட்கார்ந்து கொண்டிருங்கள். உங்களுக்கென்ன குறை? பணம்தான் நிறைய இருக்கிறதே. பணமிருந்தால் வேறொன்றும் வேண்டியதில்லையல்லவா?"
"அப்போது நீ என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?"
"ஒன்றும் செய்ய வேண்டாம். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. நடப்பது நடக்கட்டும். சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்பது போல் ஆகக் கூடாது."
இவ்வாறு கூறிய பாக்கியம் முன்னாளிரவு டெலிபோனில் தான் ஸ்ரீதரிடம் கூறிய பொய்த் தகவல்களைப் பற்றிக் குறிப்பிட்டாள். "இந்தப் பொய்யை வைத்துத்தான் ஸ்ரீதரைச் சில காலத்துக்குச் சமாளிக்க வேண்டும். பத்மாவின் தந்தையார் சுகமில்லாமலிருக்கும்பொழுது கல்யாணத்தை எப்படி நடத்துவது? பொறுத்திருப்போம் - என்ற முறையில் பேசி வர வேண்டியதுதான்" என்றாள்.
"ஆனால் இந்தக் கதையை எவ்வளவு காலத்துக்குக் கொண்டு போக முடியும்? எப்பொழுதோ ஒரு நாள் உண்மையைக் கூற வேண்டித்தானே வரும்?"
"கொண்டு போகக் கூடிய அளவுக்குக் கொண்டு போவோம். அதற்குப் பின்னர் கடவுள் விட்ட வழி"
நல்லையாவுக்குச் சிவநேசர் கூறிய புதிய மின்வெட்டு வேக பலாத்கார முறை சிறிதும் பிடிக்கவில்லை. எனினும், சிவநேசர் மீது கொண்ட தனிப்பட்ட மதிப்பின் காரணமாக எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்துவிட்டு முடிவாக "ஐயா, அம்மா கூறுவதையும் நாம் அலட்சியம் செய்யக் கூடாது. இன்னும் இதில் நாம் யோசிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயமும் இருக்கிறது. நீங்கள் நேற்றுத்தான் பத்மாவைப் பெண் கேட்டுப் போயிருக்கிறீர்கள். ஆகவே இன்றே பத்மா காணாமல் போய் விட்டால் உடனே உங்கள் மீதுதான் சந்தேகமேற்படும். ஆனால் ஸ்ரீதர் தம்பியைச் சிறிது காலம் நாம் சமாளித்துக் கொண்டால் ஒரு மாதமோ இரண்டு மாதமோ கழித்து எவ்வித ஐயத்துக்கும் இடமில்லாவிட்டால் பத்மாவை நாம் கிளப்பி வந்து விடலாம். அப்படிச் செய்தால் ஸ்ரீதர் தம்பியைக் கோடேறாது தடுப்பதும் இலேசாயிருக்கும்." என்றார்.
இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க ‘கிஷ்கிந்தா’ வளவுக்குள் ஒரு ‘ஸ்டேஷன் வாகன்’ வந்து நின்றது. மேல் மாடியிலிருந்தபடியே அதனைப் பார்த்த கஞ்சா நல்லையா அதில் இருந்த இரு வாலிபர்களையும் மேலே வரும்படி சைகை காட்டினார். "முதலாளி மேலே வரச் சொல்லுகிறார்" என்ற படியே அவர்கள் இருவரும் மாடிப்படியில் தடதடவென்று ஏறி வந்து விட்டார்கள்.
வந்தவர்கள் சிவநேசருக்கும், பாக்கியத்துக்கும் தம் தலையைத் தாழ்த்திவிட்டு நல்லையாவின் முகத்தைப் பார்த்தார்கள். "என்ன விஷயம்?" என்றார் நல்லையா. "தனியாய்ப் பேசுவோமா" என்றான் வாலிபர்களில் ஒருவன். "இங்கு வெளியார் யாருமில்லை. ஆகவே இங்கேயே எல்லாவற்றையும் பேசலாம்" என்றார் நல்லையா.
"அந்தப் பெண்னைக் கண்டுவிட்டோம். தேர்ஸ்டன் வீதியிலுள்ள பெரிய பள்ளிக் கூடத்தில் படிக்கிறது. பள்ளிக் கூடத்தில் இருந்து வெளியேற இரண்டு கேட்டுகள் இருக்கின்றன. இரண்டு பக்கத்திலும் காவல் வைத்துவிட்டேன். வில்சனும் செபமாலையும் நிலைமையைச் சமாளித்துக் கொள்வார்கள். இன்றே அப்பெண்னை நீங்கள் சொன்ன ராகமை வீட்டுக்குக் கொண்டு போய்விடலாம், முதலாளி. குருவி தப்புவதற்கு எந்த வழியுமே இல்லை. ஐயாவுக்கு எல்லா வேலையும் சரி என்று சொல்லி விடுங்கள். எதிர்ப்பொன்றும் ஏற்படுவதற்கு இடமே இல்லை. இருந்தாலும் கை காவலாக எல்லோர் கையிலும் கைத் துப்பாக்கிகள் வைத்திருக்கிறோம். காலையில் புறப்படு முன்னர் முதலாளி சொன்னபடி மாரியம்மனுக்குக் கர்ப்பூரம் கொளுத்தினோம்." என்றான் அவர்களில் சிரித்த முகத்துடன் விளங்கிய ஸ்ரீபால என்ற இளைஞன்.
இதைக் கேட்ட நல்லையா சிவநேசர் முகத்தையும் பாக்கியத்தின் முகத்தையும் பரபரப்புடன் நோக்கினார். பாக்கியம் தலையை அசைத்தாள். "வேண்டாம் இந்த வேலை. நான் இதை ஒத்துக்கொள்ள மாட்டேன். விரும்பாத பெண்ணைப் பலாத்காரமாக அவனுக்குக் கட்டி வைப்பதை விட ஸ்ரீதர் கல்யானம் செய்யாமலே இருக்கட்டும்" என்றாள் அவள். அவளுடைய திடமான எதிர்ப்பைக் கண்டு சிவநேசரே கலங்கிவிட்டாரென்றால் நல்லையாவின் நிலையை சொல்லவா வேண்டும்?
"அம்மா சொல்வது சரி. இரண்டு வாரம் கழித்து விஷயத்தைச் செய்வோம். இப்பொழுது ஒத்தி போடுவது நல்லதுதான்" என்றார் அவர்.
"சரி" என்று தலை அசைத்தார் சிவநேசர்.
இதற்கிடையில் நன்னித்தம்பி அங்கு வந்தார். "தம்பி ஸ்ரீதர் அம்மாவை டெலிபோனில் அழைக்கிறார்." என்றார் அவர். பாக்கியம் அதைக் கேட்டதும் டெலிபோனுக்கு ஓடினாள். நல்லையா தன் கையாட்களிடம் "செபமாலையையும் வில்சனையும் கிளப்புக்குப் போகச் சொல்லுங்கள். எல்லோரையும் நான் பின்னேரம் சந்திக்கிறேன்." என்றார். வேலைக்காரச் சுப்பையா எல்லோருக்கும் கோப்பி கொண்டு வந்தான். சிவநேசரும் நல்லையாவும் கோப்பியை மெளனமாக அருந்தினார்கள். சிவநேசரைப் பொறுத்த வரையில் அவர் வாய்தான் கோப்பியை அருந்தியதே அல்லாமல் அவர் மனம் வேறெங்கோ இருந்தது. அவர் மூளையை அழுத்திக் கொண்டிருந்த திக்குத்திகாந்தரம் தெரியாத சிந்தனை என்னும் பனி மூட்டத்துள் தம்மால் ஏதாவது ஒரு நல்ல வழியைக் கண்டு பிடிக்க முடியாதா என்று அவர் உள்ளம் அலைந்து கொண்டிருந்தது.
[அடுத்த அத்தியாயத்தில் பத்மா - ஸ்ரீதர் திருமணம். - தொடரும்)
[ ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞரும் அமரருமான அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. 'பதிவுகளில்' ஏற்கனவே தொடராக வெளிவந்த நாவலிது. ஒரு பதிவுக்காக தற்போது ஒருங்குறி எழுத்தில் மீள்பிரசுரமாக வெளிவருகின்றது. அ.ந.க. எழுதி வெளிவந்த ஒரேயொரு நாவலிது. இன்னுமொரு நாவலான 'களனி வெள்ளம்' , எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடமிருந்தது, 1983 இலங்கை இனக்கலவரத்தில் எரியுண்டு போனதாக அறிகின்றோம். 'தோட்டத் தொழிலாளர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலிதுவென்றும் அறிகின்றோம். - பதிவுகள்]