20-ம் அத்தியாயம்: மோகனாவின் ஓலம்!
வேதனையில் வீழ்ந்திருந்த ஒருவன் விகடப் பேச்சுப் பேசினால், பேசுபவனுக்கு அது விகடமாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு அது சாதாரண வேதனையிலும் பார்க்க அதிக வேதனையையே உண்டு பண்ணும். ஸ்ரீதரின் பகடிப் பேச்சுகள் யாவும் அத்தகைய உணர்ச்சிகளையே பாக்கியத்துக்கு உண்டு பண்னின. இன்னும் பிள்ளை அனுபவிக்கும் துன்பம் தாய்க்கும் தந்தைக்கும் கொடுக்கும் வேதனை, அப்பிள்ளை தான் அனுபவிக்கும் துன்பத்திலும் பார்க்க அதிகமாகவே இருக்கிறது. இயற்கையின் நெறியாலும் சமுதாயக் கூட்டுறவாலும் ஏற்படும் இப்பிள்ளைப் பாசத்தோடு ஒப்பிடக் கூடிய பேருணர்ச்சி இவ்வுலகில் வேறில்லை என்றே கூற வேண்டும். மக்கட் பேறு மதிக்கவொண்ணாத பேறாக இருப்பதினாலேயே தாய் தந்தையருக்குத் தம் பிள்ளைகள் மீது இத்தகைய பாசம் ஏற்படுகிறது. அதனால் தான் திருவள்ளுவர் கூட
"பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற"
என்றார். (அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுவது போன்ற வேறு பேறு இவ்வுலகில் இல்லை.) ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் அறிவறிந்த மகன் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமல்ல, சில வகைகளில் தந்தை சிவநேசரிலும் பார்க்கச் சிறந்தவன் என்றும் பெயரெடுத்து வந்து கொண்டிருந்தவன் அவன்.
"தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது"
என்றும் வள்ளுவர் கூறியிருக்கிறார். (தம்மிலும் பார்க்கத் தம் மக்கள் அறிவுடையவராய் விளங்குதல் எவர்க்கும் இனிக்கும் ஒன்றாம்.) சிவநேசரும் தம் மகன் தம்மிலும் பார்க்கப் போற்றப்படுபவனாக வளர்ந்து வருவதை அறிந்து ஆனந்தம் கொண்டிருந்தவர். அப்படிப்பட்ட செல்லப்பிள்ளை, அதுவும் குலம் விளக்க வந்த ஒரே குருத்து கண்ணற்ற கபோதியாகி விட்டால் பெற்றோர்களால் அதை எவ்வாறு தாங்க முடியும்?
ஸ்ரீதர் அன்று காலை பத்து மணியளவில் காலை ஆகாரமருந்தி விட்டுத் தாயாருடன் வீட்டின் முன்னாலிருந்த பெரிய வேப்பமரத்தின் கீழிருந்த சிமெந்து ஆசனத்தில் உட்கார்ந்திருந்தான். கண் குருடாகிய பின் அவனுக்கு ஏற்பட்ட சந்தேகங்களில் ஒன்று "தன் கண்ணின் அழகு கெட்டுவிட்டதா?" என்பதாகும். ஸ்ரீதருக்குத் தன்னை எல்லோரும் கட்டழகன் என்றும், முக்கியமாகக் கண்ணழகன் என்றும் மெச்சுவது நன்கு தெரியும். அத்துடன், பத்மா முதல் முதலாக அவனோடு பம்பலபிட்டி "எஸ்கிமோ" ஐஸ்கிறீம் பார்லருக்குச் சென்று ஐஸ்கிறீம் அருந்திய அன்று " நான் உங்களை உங்களது அழகிய கண்களுக்காகவே காதலிக்கிறேன்" என்று கூறிய வார்த்தைகள் இன்னும் அவன் காதில் வீணா கானம் போல் ஒலித்துக் கொண்டிருந்தன. "இப்படி பலராலும் போற்றப்பட்ட நீண்ட என் குறுகுறுத்த விழிகள் இன்று ஒளியிழந்து விளங்குகின்றனவோ?" என்று ஐயப்பட்ட அவன் அதற்காக விசனிக்கவும் செய்தான். இளமையும் கலையுணர்ச்சியும் அழகின்பால் அளவில்லாத ஆர்வமும் கொண்ட ஒரு யுவனுக்கு இயற்கையாக ஏற்படும் விசனம்தானே அது? உண்மையில் ஒளியிழந்த தன் கண்களை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்று கூட அவன் எண்ணினான். அதனால் முன்னர் பகலில் அதுவும் வெயில் நாளில் வெளியில் போகும் போது மட்டும் தான் அணியும் குளிர்ச்சிக் கண்ணாடியை இரவு பகல் என்று பாராது எந்நேரமும் அணியும் பழக்கத்தை அவன் மேற்கொண்டான். அது மட்டுமல்ல, அழகாக உடுத்திக் கொள்ளுவதையும் அவன் விடவில்லை. சிறுவயதிலிருந்தே அது அவனுக்கு இரண்டாவது இயற்கையாகிவிட்டது. ஆகவே, காலையில் அவன் குளித்த முடித்ததும் தாய் பாக்கியம் அவனுக்கு வேண்டிய காற்சட்டையையும் புஷ் ஷெர்ட்டையும் அவனுக்குக் கொண்டு வரச் செல்லும் போது "அம்மா, பெரிய நீலப் பூவிட்ட அந்த வெள்ளை புஷ் கோட்டையும் அந்தக் கறுப்புக் காற்சட்டையையும் கொண்டு வா" என்று திட்டவட்டமாகத் தனக்கு வேண்டிய உடைகளைப் பற்ரி விவரமாகக் கூறுவான்.
அவன் அணிந்து கொண்டு வந்ததும் "அம்மா நான் சொன்ன சட்டைகளைத்தானே கொண்டு வந்தாய்? குருடனென்றாலும் எனக்கு வண்ணச் சட்டைதான் வேண்டும்" என்பான் சிரித்துக் கொண்டு.
பின் "அம்மா, நீ நீலக் காற்சட்டை என்று சொல்லி சிவப்புச் சட்டையைக் கொண்டு வந்தாலும் நான் என்ன செய்வது அம்மா?" என்று கேட்பான்.
"சீ, ஸ்ரீதர் அப்படிச் செய்வேனா நான்? நீ சொல்லும் சட்டையை எப்படியும் தேடிக் கொண்டு வருவேன்" என்பாள் தாய்.
"அப்படி நீ வேறு நிறச் சட்டையைக் கொண்டு வந்தாலும் என்ன நட்டம்? எனக்குத்தான் கண் தெரியாதே. உனக்குத்தான் நட்டம். உன் பிள்ளை அழகில்லாமல் இருப்பான். பார்ப்பவர்கள் சிரிப்பார்கள். அவர்களுக்காகத் தான் நான் சட்டை உடுத்த வேண்டியிருக்கிறது." என்பான் ஸ்ரீதர்.
"என் பிள்ளை அழகில்லாமலிருப்பானா? அவனைப் போல் அழகானவன் இவ்வுலகிலேயே இல்லை ஸ்ரீதர்" என்பாள் தாய்.
"அழகிருந்தென்ன? உன் பிள்ளை குருடன்தானே" என்பான் ஸ்ரீதர். அவன் அப்படிக் கூறும் வேளைகளிலே தன் கைகளால் அவன் வாயைப் பொத்துவாள் பாக்கியம். "இப்படி எல்லாம் பேசாதே" என்று மன்றாடுவாள்.
இன்று காலையும் ஸ்ரீதர் அழகான காற்சட்டையும் புஷ் ஷேர்ட்டுமணிந்து கம்பீரமாகவே விளங்கினான். வேப்ப மர நிழலில் கொட்டும் வேப்பம் பூக்களின் மணத்தையும் வீசு தென்றலின் குளுமையும் அனுபவித்துக் கொண்டு தாயோடு பேசிக் கொண்டிருந்தான் அவன். சற்றுத் தொலைவில் எங்கோ ஒரு மரத்தில் குயில் ஒன்று மறைந்திருந்து கூகூவென்று கூவிக் கொண்டிருந்தது. சண்பகப் பட்சி ஒன்றும் இடையிடையே தன் குரலை எழுப்பியது.
ஸ்ரீதர் பாக்கியத்திடம் "அம்மா, உன் மீது எனக்குக் கோபம். நான் குருடனாகி விட்டேனென்று எனக்கு நீ ஒரு கோல் வாங்கிக் கொடுக்கவில்லையே. எப்போது வாங்கிக் கொடுப்பாய்?" என்றான் விளையாட்டாக.
பாக்கியம் "உனக்குக் கோல் வேண்டியதில்லை. நான் பக்கத்திலிருக்கும்போது கோல் எதற்கு? நானே உன்னை விரும்பிய இடத்துக்கு அழைத்துச் செல்வேன்," என்றாள்.
ஸ்ரீதர் "போ அம்மா. எனக்குக் கோல் வேண்டும். நீ கோல் வாங்கப் பணம் செலவாகும் என்று பார்க்கிறாய்! எனக்குப் பணம் கொடுக்காமலே கோல் வாங்கத் தெரியும் கொழும்பிலே ஒரு தர்ம ஸ்தாபனம் குருடர்களுக்கு இலவசமாக வெள்ளைக் கோல்களை வழங்குகிறது. அவர்களுக்குக் கடிதம் எழுதிப் போட்டால் இனாமாகவே கோலொன்றை அனுப்பி வைக்கிறார்கள். அவர்களுக்கும் புண்ணியம். எங்களுக்கும் பணம் மிச்சம்." என்று கூறினான்.
பாக்கியம் ஸ்ரீதரிடம் "ஸ்ரீதர் நீ எந்த நேரமும் உன் கண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. வேறு விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும்." என்று கூறினாள்.
"ஆனால் நான் என்ன செய்ய, அம்மா? எனக்கென்னவோ என் கண்களைப் பற்றிய நினைவு தானே எந்த நேரமும் வந்து கொண்டிருக்கிறது" என்றான் ஸ்ரீதர்.
அதற்குத் தாய் "நீ பயப்பட வேண்டாம் ஸ்ரீதர். சின்னைய பாரதி உன் சாதகத்தைப் பார்த்து உன் கன்கள் நிச்சயம் உனக்கு மீண்டே தீரும் என்று சொல்லியிருகிறார். அத்துடன் கோவிலிலே பூசைகள், நவக்கிரக சாந்தி முதலியனவும் செய்து வருகிறோமல்லவா? என் குஞ்சுக்கு மாவிட்ட புரத்தான் கண்ணைத் தந்தே தீருவான். அஞ்சாமலிரு. எல்லாம் சரியாய் விடும்." என்றாள்.
"எனக்கென்னவோ இவற்றில் நம்பிக்கையே இல்லை. இருந்தாலும் நீ ஏற்பாடு செய்யும் பூசைகளில் நான் கலந்து கொள்வது உனக்காகத்தான் அம்மா. நான் பூசைகளுக்கு வராவிட்டால் நீ கவலைப்படுவாய் அல்லவா அம்மா?" என்றான் ஸ்ரீதர்.
இவ்வாறு சிறிது நேரம் பேசியிருந்த பின்னர், ஸ்ரீதர் வானொலியில் இசைத்தட்டு சங்கீதம் கேட்கச் சென்றான். அவனை அவன் அறையில் தன் கைகளால் அணைத்துச் சென்று விட்டு விட்டு, சிவநேசர் அறைக்குள் சென்றாள் பாக்கியம்.
அறையும் புகும் பொழுதே "என்னால் இதைத் தாங்க முடியாது. நான் செத்துப் போகிறேன்" என்று கதறினாள் பாக்கியம்.
சிவநேசர் நிமிர்ந்து பார்த்து விட்டு, "என்னாலும் தாங்க முடியாதுதான். ஆனால் நாம் என்ன செய்வது? பொறுத்துக் கொள்ளப் பழக வேண்டியதுதான்." என்றார்.
பாக்கியம் "பெற்ற மகன் கண்ணிமைக்காமல் பரிதவிக்க நான் கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கிறேனே. எவ்வளவு கல் நெஞ்சு எனக்கு? இது அடுக்குமா? என் கண்ணிரண்டையும் பிய்த்தெறியப் போகிறேன். எனக்கு வேண்டாம் இக் கண்கள்." என்று உணர்ச்சிகரமாய்க் கதறினாள். கண்களிரண்டையும் தன் இரு கரங்களால் பிடுங்கப் போனாள் அவள்.
சிவநேசர் எழுந்து அவள் கைகளைத் தன் இரு கரங்களால் தடுத்து "பாக்கியம், உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா? நீயும் குருடாகிவிட்டால் அவனைப் பார்ப்பதார்? அவனுக்கு வழி காட்டுவதார்? அவனுக்காக நாங்களிருவரும் பல்லைக் கடித்துக் கொண்டாவது வாழத்தான் வேண்டும்?" என்றார். அதைக் கேட்ட பாக்கியம் கண்ணீர் சிந்தினாளென்றாலும் சிறிது நேரத்தில் அடங்கிவிட்டாள்.
அதன் பின் தம்பதிகளிருவரும் சிறிது பேசாதிருந்தனர். கொஞ்சம் கழித்து, பாக்கியம் பேசினாள்.
"பார்த்தீர்களா? கந்தப்பசேகரர் அமுதா விஷயத்தில் முன்னர் எவ்வளவு நாட்டமாக இருந்தார்? ஸ்ரீதர் கண்ணிழந்ததும் எல்லாவற்றையும் விட்டு விட்டார். குருட்டுப் பிள்ளைக்கு என்ன கல்யாணம் என்பது அவர்கள் எண்ணம் போலும். இவற்றை நினைத்தால் வயிறெரிகிறது." என்றாள்.
சிவநேசர் எப்பதிலும் பேசவில்லை. அவர் உள்ளம் பதில் கூற முடியாத அளவுக்கு நொந்து போயிருந்தது. ஸ்ரீதரின் கண்ணிழப்பு அவன் எதிர்காலத்தையே முற்றாக நாசமாக்கிவிட்டதே என்று கவலை அடைந்தார் அவர்.
இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருக்க, கொழும்பு ‘கிஷ்கிந்தா’வுக்கு ஸ்ரீதர் பெயருக்கு வந்திருந்த கடிதமொன்றை கிளாக்கர் நன்னித்தம்பி சிவநேசர் அறைக்கு எடுத்து வந்தார். "தம்பிக்கு வந்துள்ள கடிதம். யாராவது அவருக்கு வாசித்துக் காட்ட வேண்டும். அதுதான் அவரிடம் கொடுக்காமல் இங்கு கொண்டு வந்தேன்" என்றார் அவர்.
சிவநேசர் அதற்கு "பாக்கியம் அவனுக்கு வரும் கடிதங்களை நாங்கள் வாசிப்பது நல்லதல்ல. அவற்றில் எழுதப்பட்டுள்ள விஷயங்களில் சில சம்பவங்களை நாங்கள் அறிவது அவனுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். நன்னித்தம்பியே அவற்றை வாசித்துக் காட்டட்டும். இவ்விஷயங்களில் அப்பா அம்மாவுக்கு முன் வெட்கப்படுவது போல் பிள்ளைகள் மற்றவர்கள் முன் வெட்கப்படுவதில்லை" என்றார்.
பாக்கியம் "கடிதம் எங்கிருந்து வந்திருக்கிறது?" என்று கேட்டான். "இங்கிலாந்திலிருந்து டாக்டர் சுரேஷ் எழுதியிருக்கிறார்" என்றார் நன்னித்தம்பி.
"ஓ! சுரேஷா? ஸ்ரீதர் மிகவும் சந்தோஷப்படுவான். நேற்றுக் கூட சுரேஷைப் பற்றி ஞாபகமூட்டினான். நன்னித்தம்பி உடனே போய் வாசித்துக் காட்டு" என்றாள் பாக்கியம்.
யாழ்ப்பாணம் வந்து பிறகு ஒரு நாளாவது ஸ்ரீதர் சுரேஷைப் பற்றிச் சிந்திக்காமல் கழிந்ததில்லை. சுரேஷ் சீமை சேர்ந்து இரண்டு மூன்று தினங்களின் பின்னர் தான் சுகமே அங்கு சேர்ந்ததாக ஒரு கடிதம் "அமராவதி" விலாசத்துக்கு அனுப்பியிருந்தான். தனக்குப் படிப்பு வேலை அதிகமாயிருப்பதால் அடிக்கடி கடிதம் எழுத முடியாதென்றும் எதிர்காலத்தில் ‘கிஷ்கிந்தா’ விலாசத்துக்கே தான் கடிதங்களை எழுத எண்ணியிருப்பதாகவும் அதில் அவன் கூறியிருந்தான். அதன் பின் எழுதிய முதலாவது கடிதம் தான் இன்று வந்திருந்த கடிதம்.
நன்னித்தம்பி ஸ்ரீதர் அறைக்குச் சென்று கடிதத்தை வாசித்துக் காட்டினார். சுகஷேமங்களைப் பற்றியும், தனது படிப்பைப் பற்றியும், தன்கேற்பட்ட சில வேடிக்கையான அனுபவங்களைப் பற்றியும் எழுதியிருந்த சுரேஷ் "ஸ்ரீதர், எப்பொழுது உன் திருமணம். வர முடியாவிட்டாலும். வாழ்த்தனுப்புவதற்கு எதிர்நோக்கியிருக்கிறேன். அம்மாவுக்கு, அப்பாவுக்கு, பத்மாவுக்கு எல்லோருக்கும் என் அன்பைச் சொல்லு" என்று முடித்திருந்தான்.
கடிதத்தைக் கேட்டு முடிந்ததும் ஸ்ரீதர் பெருமூச்சு விட்டான். "நான் கண் நோயுற்றிருக்கும் இந்நேரத்தில் சுரேஷ் பக்கத்திலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? நன்னித்தம்பி காகிதம் கொண்டு வருகிறாயா. நான் என் கைப்பட சுரேசுக்குப் பதிலெழுத வேண்டும். நீ பக்கத்திலிருந்து உதவினால் என்னால் எழுத முடியும்." என்றான் ஸ்ரீதர்.
பெரிய எழுத்துகளில் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் ஏறக்குறைய அரை அங்குல இடைவெளிவிட்டு அவன் எழுதிய கடிதத்தில், தன் கண்கள் பார்வை இழந்தவை, டாக்டர் நெல்சன் அது பற்றிக் கூறிய குறிப்புகள், தந்தையாரும் தானும் தனது திருமணம் பற்றிச் செய்து கொண்ட ஒப்பந்தம், தான் பிரெயில் கற்று வருவது முதலியவற்றைப் பற்றி விரிவாக எழுதினான் ஸ்ரீதர். முடிவில் "சுரேஷ், கண்ணற்றவன் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது எவராலும் அறிந்து கொள்ள முடியாது. ஒரு நாள் முழுவதும் உன்னை முற்றாக ஒரு துணியால் கட்டி விட்டு வாழ்ந்து பார். இருளிலே பயங்கரமான இருள் கண்ணில்லாதவன் இருள். சிறையில் கொடியது இருட் சிறை. அழகின் அனுபவம் குருடனுக்கில்லை. நேரம் போகாது நடந்து திரிதல் முடியாது. ஒரு கருஞ் சுவருக்கு முன்னர் எப்பொழுதும் உட்கார்ந்திருத்தல் போன்ற நிலை. அதுவும் மூடிய கண் இனி எப்போதும் ஒளியில் திறக்காது என்று தெரிந்தபின் ஏற்படும் மன ஏக்கத்தை எப்படிச் சொல்வது? சில சமயங்களில் எல்லாவற்றையும் பிய்த்தெறிய வேண்டும் போன்ற சினம் ஏற்படுகிறது. இந்நிலையில் சங்கீதம் எனக்குத் துணை புரிகிறது. இசைத் தட்டுகளைக் கேட்டு மகிழ்கிறேன். அவைகள் எனக்குச் சிறிது சாந்தியைத் தருகின்றன. சுரேஷ், நான் ஏன் இவ்வுலகில் பிறந்தேன்? பணக்காரனாகப் பிறந்ததால் அவனுக்கென்ன குறை என்பார்கள். நான் கண்ட இன்பமென்ன சுரேஷ்? உன் நட்பு வேண்டுமானால் ஓர் இன்பமென்று சொல்லலாம். அம்மாவின் அன்பையும், என்னதான் இருந்தாலும் அப்பாவும் என்னை நேசிக்கவே செய்கிறார் - அவர் அன்பையும் இன்பமென்று சொல்லலாம். பத்மாவின் அன்பு? அதுதான் இப்பொழுது எட்டாததாகிவிட்டதே. என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது. இது உனக்கு எவ்வளவு கவலையைத் தருமென்று எனக்குத் தெரியும். கவலைப்படாதே. கவலைப்படுவதால் பலனில்லை" என்று எழுதி "உன் உயிருக்குயிரான நண்பன் ஸ்ரீதர்" என்று கை ஒப்பமிட்டான் அவன்.
ஸ்ரீதரின் இக் கடிதத்திற்கு ஒரு வாரத்திலேயே சுரேஷின் விமானத் தபால் மூலம் வந்துவிட்டது. அதில் அவன் ஸ்ரீதரின் கண்ணிழப்பால் தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக் கூறினாள். "ஸ்ரீதர், கவலைப்படாதே, நான் டாக்டர் நெல்சனுக்கு உன் கண் நோய் பற்றிய விவரங்களை எழுதும்படி கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறேன். சுரேஷ் டாக்டராகியிருப்பது உனக்கு நல்லதென்று நினைத்துக் கொள். நான் கண் டாக்டரல்லாவிட்டாலும் இங்கு பெரிய வைத்தியப் பேராசிரியர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடையே சிறந்த கண் டாக்டர்களும் இருக்கிறார்கள். உன் நோய் பற்றி அவர்களுடன் கலந்து பேசுவேன். உனது கண் பார்வையை நீ மீண்டும் பெறுவதற்கு என்னாலான முயற்சிகளை எப்பொழுதும் செய்து கொண்டேயிருப்பேன்." என்று எழுதியிருந்தான் அவன். முடிவில், "ஸ்ரீதர், நீ நாடகப் பிரியனல்லவா? நீ கேட்டு மகிழ்வதற்காக பெர்னாட் ஷா போன்ற நல்ல நாடகாசிரியர்களின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட சில நாடகங்களை உனக்கு வாங்கி அனுப்பியுள்ளேன். இவை இலங்கையில் கிடையா. ரேடியோ கிராமில் இவற்றைப் போட்டுக் கேட்கும்போது சுரேஷை நினைப்பாயல்லவா? ஸ்ரீதரின் அன்பை மதிப்பது போல் சுரேஷ் வேறெதையும் இவ்வுலகில் மதிப்பதில்லை. உன் அன்புதான் எனக்கு உலகிலேயே மிகச் சிறந்தது. வாழ்க்கையைத் தைரியமாக எதிர்கொள். கண் பார்வையைப் பொறுத்தவரையில் கலங்காதே. இன்றுள்ள நிலையில் வைத்திய சாஸ்திரம் உன் கண் பார்வை மீள்வது கடினமென்று தீர்ப்பளிக்கலாம். ஆனால் தினசரி விஞ்ஞானம் முன்னேறி வரும் உலகில் நாளையோ, நாளை மறு தினமோ உன் கண் பார்வை மீள்வது இலகுவான காரியம் ஆகிவிடலாம். முன்னர் பயங்கரமான சத்திர சிகிச்சைகள் என்றூ கருதப்பட்ட பல இன்று மிக இலகுவானவை ஆகிவிட்டன. நீ இன்னும் இளைஞன். பொறுமை பலனைத் தரும். பொறு அஞ்சாதே. வெறி நிச்சயம்" என்று எழுதியிருந்தான் சுரேஷ்.
இவற்றை நன்னித் தம்பி வாசித்துக் காட்டிய போது ஸ்ரீதர் "நன்னித்தம்பி, சுரேஷைப் பற்றி என்ன நினைக்கிறாய்? நான் இவ்வீட்டின் தனிப்பிள்ளையாகப் பிறந்துவிட்டேன். எனக்கு ஒரு சகோதரன் இருந்தால் அவன் கூட இப்படி எனக்காகத் துடிதுடித்திருப்பானோ என்னவோ?" என்றான்.
நன்னித்தம்பி "உண்மைதான். சுரேஷின் கடிதம் தேறுதளிப்பதாகவே இருக்கிறது. அவர் சொல்வது போலத் தம்பிக்கும் கண் பார்வை மீண்டே தீரும். பயப்பட வேண்டாம்." என்றார்.
இவை இங்கே நடந்து கொண்டிருக்க, கொழும்பிலே பத்மா தனது வாழ்க்கைப் பாதையில் மேலும் ஓர் அடி எடுத்து கலந்து விட்டாள். இவ் விஷயத்தில் அடுத்த வீட்டு அன்னம்மாக்கா அவளுக்குப் பேருதவி செய்தாள்.
வழக்கம் போல, வாசம் வீசும் சூடான தோசைகளைச் சாப்பிட்டுக் கொண்டே அன்னம்மாவிடம் விஷயங்களை எடுத்து விளக்கினாள் பத்மா. ஸ்ரீதரின் கண்கள் குருடாகிவிட்டதை விவரமாகக் கூறி "நான், அவரைக் கட்டத்தான் வேண்டுமா?" என்று கேட்டாள் அவள்.
அதைக் கேட்ட அன்னம்மாக்கா "உனக்கென்ன பைத்தியமா? இரண்டு கண்ணும் குருடான கபோதியை யாராவது கல்யாணம் செய்வார்களா? விடு கதையை." என்றான் வெடுக்கென்று.
பத்மா அதற்கு "என்றாலும் அக்கா எனக்கு ஸ்ரீதரை நினைத்தால் பாவமாயிருக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை." என்றாள்.
அன்னம்மாக்கா "குருடனைக் கல்யாணம் கட்டினால் ஒரு நன்மை மட்டும் ஏற்படும்." என்று கூறினாள்.
"அது என்ன?"
"அவன் உன்னை அடிக்க வந்தால் இலகுவில் தப்பித்துக் கொள்ளலாம். நீ கேள்விப்பட்டதில்லையா? "குருடன் பெண்டாட்டியை அடித்த மாதிரி" என்று தமிழில் ஓர் வசனமிருக்கிறது. அதைத் தவிரக் குருடனைக் கல்யாணம் செய்வதால் வேறு நன்மை ஒன்றுமே இல்லை."
பத்மா அதைக் கேட்டுச் சிறிது நேரம் ஒன்றும் பேசாமலிருந்தாள்.
தோசைக் கல்லில் தோசை மாவைச் ‘சொய்’ என்று வார்த்துக் கொண்டே அன்னம்மா சிறிது நேரம் செல்ல மீண்டும் பேசினாள்.
"அத்துடன் நீயோ துடிதுடிப்பான பெண். வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்படுபவள். ஆனால் யாருக்குத் தான் அந்த ஆசையில்லை? அப்படிப்பட்ட நீ குருடனைக் கட்டிக் கொண்டு என்ன இன்பம் காண்பாய்" என்றாள்.
"அப்படியானால் நான் என்ன செய்ய வேண்டும் அக்கா!"
"பத்மா, நீ என்னை ஏமாற்றவா பார்க்கிறாய்? எனக்கெல்லாம் தெரியும். சிங்காரவேலு சொன்னான். நீ தினசரி மோட்டார் சைக்கில் ஊர் சுற்றுகிறாயாமே, அந்த மீசைக்கார மாப்பிள்ளையைக் கட்ட வேண்டியதுதானே."
பத்மா நாணத்தால் சிறிது தலை குனிந்ததாளென்றாலும் விஷயத்தைத் தான் தன் வாயால் கூறாமல் அன்னம்மாவே கூறிவிட்டது அவளுக்குத் திருப்தியையே தந்தது. காரியத்தை இலகுவில் சாதிக்க வழி பிறந்து விட்தாக அவளுக்குத் தோன்றியது.
"அது சரி அக்கா, ஆனால் நான் என்ன செய்ய வேண்டும் ?"
" நீ ஒன்றும் செய்ய வேண்டாம். பேசாமலிரு. நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன். ஆனால் ஒரு கேள்வி - புது மாப்பிள்ளையின் பெயரென்ன? கமலநாதன் தானே?"
"ஆமக்கா, கமலநாதன் தான். விமலா-லோகாவின் அண்ணன்."
இவ்வாறு சொல்லிக் கொண்டே பத்மா அன்னம்மாவைக் கட்டிக் கொண்டு முத்தமிட்டாள். "அன்னம்மாக்கா, எனக்கு ஓர் அம்மாவைப் போல" என்று கூறினாள் அவள்.
அன்னம்மா சிரித்துக் கொண்டு "காரியம் முடியும் வரை எல்லோரும் இப்படித் தான் பேசுவார்கள். காரியம் முடிந்ததும் நீ யாரோ நான் யாரோ?" என்றாள்.
"சத்தியமாய் நான் அப்படிச் செய்ய மாட்டேன்." என்றாள் பத்மா.
பத்மா சொல்வதை "ஆம்" என்று ஆமோதிப்பது போல தோசைக் கல்லில் அன்னம்மாக்கா வார்த்த தோசை ‘சொய்’ என்று சப்தித்தது. இதற்கிடையில் குசுமா அங்கே வர, பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது.
அன்று பிற்பகல் அன்னம்மா ஸ்ரீதருக்குக் கண் குருடான செய்தியைக் கூறியதும் பத்மாவின் தந்தை பரமானந்தர் திடுக்கிட்டு விட்டார். "பாவம், நல்ல பையன். இப்படி நேர்ந்ததே" என்று பதைபதைத்த அவர் தொடர்ந்து, "ஆரம்பத்திலேயே இந்தக் கல்யாணம் நடக்குமா என்று சந்தேகிக்கவே செய்தேன். கோடீஸ்வரருக்கும் குச்சு வீட்டுக்கும் சரி வருமா என்று யோசித்தேன். நான் நினத்தது போலவே ஆகிவிட்டது." என்றார். கமலநாதனைப் பற்றிக் கூறியதும் "பத்மாவுக்கும் இஷ்டமென்றால் எனக்கும் இஷ்டம்தான். அவள் இஷ்டம் போலவே செய்துவிடலாம். ஆனால் கமலநாதன் வீட்டார் என்ன சொல்வார்களோ?" என்றார் பரமானந்தர். "அதெல்லாம் என் பொறுப்பு" என்றாள் அன்னம்மா.
இது நடந்த மறு தினம் கொழும்பு சவோய் தியேட்டரில் பல்கனி சீட்டில் தன் காதலன் கமலநாதன் தோளில் சாய்ந்து பிற்பகல் மாட்டினிக் காட்சி பார்த்துக் கொண்டிருந்த பத்மா அவன் காதில் இரகசியமாக "எங்கள் கல்யாணம் முடிந்ததும் என்னை எங்கே தேன் நிலவுக்கு அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டாள்.
"தேன் நிலவா? அதுதான் கொள்ளுப்பிட்டியில் முடிந்து விட்டதே?" என்று புன்னகையோடு கூறிய கமலநாதன் "இருந்தாலும் உத்தியோக பூர்வமான தேன் நிலவு வேண்டுமானால் நூரளைக்குப் போவோம்" என்றான்.
"அது நல்லதுதான். நான் நூரளைக்கு முன் ஒரு போதும் பொனதில்லை" என்றாள் பத்மா.
திரையில் காதலர்கள் தம்மை மறந்த பரவச நிலையில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து பத்மாவும் கமலநாதனும் தம்மை மறந்தார்கள். வார நாட்களில் மாட்டினிக் காட்சிக்கு பல்கனியில் பொதுவாக ஆட்கள் குறைவுதான். அப்படி வந்திருந்தவர்களிலும் பலர் பத்மா-கமலநாதன் போன்ற காதல் ஜோடிகளே. அவர்களும் தம்மவர்களுக்குத் தெரியாமல் இருளையும் தனிமையையும் நாடியே அங்கு வந்திருந்தனர். சம்பந்தியும் சம்பந்தியும் சத்திரத்துக்குப் போனால் ஏச்சுமில்லை பேச்சுமில்லை அல்லவா? இந்தச் சூழ்நிலை பத்மாவுக்கும் கமலநாதனுக்கும் பெருந்துணையாய் அமைந்தது. இருளிலே ஒருவருக்கொருவர் இடையூறு செய்யாமல் சல்லாபம் செய்து கொண்டிருந்த பல காதல் ஜோடிகளில் தாமும் ஒரு ஜோடியாகக் கலந்து கொண்டார்கள் அவர்கள்.
பகல் வேளைகளில் ஸ்ரீதர் ‘அமராவதி’ வளவின் பெரிய தோட்டத்தில், தாமரைத் தடாகத்துக்குப் பக்கத்தில் நிழல் மரங்களின் கீழே தன் நேரத்தைக் கழிக்கும் பழக்கத்தைச் சமீப காலமாக மேற்கொண்டிருந்தான். பாக்கியமோ ஒரு வேலைக்காரனோ அவனுக்குப் பக்கத்தில் எப்பொழுதும் இருப்பார்கள். அவள் செளகரியமாக உட்கார நாற்காலிகள், நிலத்தில் சிரிக்க ஜமுக்காளம், உண்ணுவதற்குச் சிற்றுண்டிகள். குடிப்பதற்குச் சர்பத், கோப்பி போன்ற பான வகைகள் எல்லாம் அவனுக்கங்கே தினசரி காலையில் கொண்டு போய் வைக்கப்படும். சிறிய "ரெக்கோர்ட் பிளேயர்" ஒன்றும், இசைத் தட்டுகளும் கூட அங்கே கொண்டு போய் வைக்கப்படும். ஓரொரு சமயங்களில் ஸ்ரீதர் அம்மாவைக் கொண்டு கதைப் புஸ்தகங்களை வாசிக்கச் செய்வான். அவன் சமீப காலமாக ஸ்ரீதரின் விருபத்திற்கிணங்க மகாபாரதத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தான்.
அம்மாவைத் தவிர இன்னொரு தோழியும் அவனுடன் அங்கு கூட இருந்து அவனுக்கு இன்பமளிப்பது வழக்கம். மோகனாதான் அது.
`ஸ்ரீதரைப் பொறுத்த வரையில் அவன் தன் காதலி பத்மாவை ஒரு சிறிதும் மறக்க வில்லை. தந்தையாரே மண முடிக்கச் சொன்னாலன்றித் தான் பத்மாவை மண முடிக்க மாட்டான் என்பது தானே அவன் செய்து கொண்ட ஒப்பந்தம்? யாருக்குத் தெரியும்? ஒரு வேளை தந்தையின் மனமே மாறக் கூடலாம் என்றும் அவன் சில சமயங்களில் எண்ணுவதுண்டு. அதற்காகக் காத்திருப்பது என்றும் முடிவு செய்தான் அவன். ஆனால் இப் பிரச்சினைக்குச் சுமூகமான முடிவு ஏற்பட்டாலன்றிப் பத்மாவுடன் கடிதத் தொடர்போ வேறெந்தத் தொடர்போ கொள்ளுவதில் பொருளில்லை என்றது அவனுள்ளம். ஆகவே அவன் இது விஷயத்தில் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும், அவன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ‘பத்மா பத்மா’ என்றெழும்பிய நினைவலைகளை அவனால் எதிர்த்து நிற்க முடியவில்லை.
ஒரு நாள் சிவநேசர் தாமரைத் தடாகத்துக்கு அருகே ஸ்ரீதர் வழக்கமாக இருக்கும் இடத்துக்கு வந்த போது, அவன் அங்கே புற்றரையில் ஜமுக்காளத்தில் உட்கார்ந்து கொண்டு மோகனாவுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டார். பளபளக்கும் சிறகுகளுடன் விளங்கிய பஞ்சவர்ணக் கிளி அவன் திரண்ட கைகளில் வீற்றிருந்த காட்சி பார்ப்பதற்கு அழகாயிருந்தது. கறுப்புக் கண்ணாடியுடனும் பூக்களிட்ட புஷ் கோட்டுடனும் விளங்கிய ஸ்ரீதரை அப்பொழுது பார்த்த எவருமே ஒரு கண்ணற்ற கபோதி என்று எண்ணியிருக்க முடியாது. அத்தகைய கம்பீரத் தோற்றத்துடன் விளங்கினான் அவன்.
அரச குமாரன் போல் விளங்கிய அவனை ஆசையோடு பார்த்த சிவநேசரை மோகனாவின் பேச்சு நிலை குலைய வைத்தது. அது ‘பத்மா பத்மா’ என்று கூவியது. அக் கூவல் வெறும் மூன்றெழுத்து வார்த்தைகளாகத் தொனிக்கவில்லை அவருக்கு. ஏக்கத்திலும் தாபத்திலும் தோய்ந்தெடுத்த சொற்களாக, ஒரு காதலனின் இதயக் குமுறலிலே பொங்கி எழுந்த வார்த்தைகளாக வெளி வந்தன அவை.
"சொல்லிக் கொடுத்தவன் தன் உணர்ச்சி எல்லாவற்றையும் ஒன்று திரட்டி உச்சரித்திருக்கிறான் அவ்வார்த்தையை. கிளியும் அவ்வாறே கற்றுவிட்டது’" என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அந்த நினைவு வந்ததும் அவர் மனதில் இனந் தெரியாத ஒரு கலவரம் ஏற்பட்டது. அங்குமிங்கும் அசையாது மகனையும் கிளியையுமே பார்த்து நின்றார் அவர்.
கிளி ‘பத்மா பத்மா’ என்ற சோகக் குரல் எழுப்பியது. இடது கையில் இருந்த அதன் முதுகைத் தன் வலது கரத்தால் தடவிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.
[தொடரும்]