இலங்கை ஆட்சியாளரின் அதிகாரத்தில் “நல்லிணக்கம்’’ ஒரு கபடம் சாட்சியமளிக்கும் - சண்முகதாசனும், பொன்னம்பலமும், செல்வநாயமும்
“அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு. கொலைக் களத்திற்கு கருணை இல்லம் என்று பெயரிடுவார்கள். சித்தரவதை முகாமிற்கு அன்பு மாடம் என்று பெயரிடுவார்கள். சிறைச்சாலைக்கு தர்மசாலை என்று பெயரிடுவார்கள். என்பதையொத்த தீர்க்கதரிசனம் 1940களின் பிற்பகுதியில் உரைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஜோர்ஜ் ஓவல் எழுதிய “1984” என்ற தலைப்பிலான கருத்துருவ நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இந்தவகையில் தமிழின அழிப்பிற்கு “நல்லிணக்கம்” என்று பெயரிட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலங்கை அரசியலில் இலங்கையர் தேசியவாதம், இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன தோல்வி அடைந்துவிட்டமைக்கான வரலாற்றுச் சின்னமாக எஸ். ஹன்டி பேரின்பநாயகம் விளங்குகிறார். காலனிய ஆதிக்க எதிர்ப்பு, இலங்கையர் தேசியவாதம், பூரண பொறுப்பாட்சி, சமூக சமத்துவம் என்பன இவர் முன்வைத்த அரசியல் கொள்கைகளாகும். 1931ஆம் நடைமுறைக்கு வந்த டெனாமூர் அரசியல் யாப்பு மேற்படி கூறப்பட்டதான பூரண பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்று கூறி அந்த யாப்பின் கீழான முதலாவது பொதுத் தேர்தலை (1931) முன்னின்று பகிஷ்கரித்த முன்னணித் தலைவர்களில் எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முதன்மையானவர்.
இத்தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றிய அழைப்பிற்கு அப்போது தென்னிலைங்கையில் காணப்பட்ட அனைத்து முன்னணிச் சிங்களத் தலைவர்களும் வரவேற்பும் ஆதரவும் அளித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாண குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகரமாக பகிஷ்கரிக்கப்பட்ட போது அதில் எந்தொரு சிங்களத் தலைவரும் தமது பகுதிகளில் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவில்லை. ஆனால் அக்காலத்தில் பகிஷ்கரிப்பு பற்றி சிங்களத் தலைவர்கள் வரவேற்று வாழ்த்தத் தவறவில்லை. குறிப்பாக அப்போது மிகப்பெயர் பெற்ற சிங்கள அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு. பிலிப் குணவர்த்தன லண்டனில் இருந்து Searchlight, 20-27.6.1931 என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்தது.