நவீன கவிதை - காட்சிப்படுத்துதலிலிருந்து தரிசனமும் புரிதலும்
என் நூற்றாண்டு / MY CENTURY
என் நூற்றாண்டு
– தேவதச்சன் –
துணியால் வாயைப் பொத்தி அழுதபடி
ஒரு பெண் சாலையில் நடந்து போகிறாள்
என் பஸ் நகர்ந்து விட்டது.
படிவங்களை நிரப்பத் தெரியாமல் ஒரு முதியவர்
மருத்துவமனையில் திகைத்து நிற்கிறார்
என் வரிசை நகர்ந்து விட்டது.
தண்டவாளத்தில் ஒரு இளைஞன் அடிபட்டு
தண்ணீர் தண்ணீர் என்று
கையசைத்துக் கொண்டிருக்கிறான்
என் டிரெயின் நகர்ந்து விட்டது
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்
தேவதச்சனின் கவிதை அதன் ஆங்கில் மொழிபெயர்ப்பு மற்றும் கவிதை பற்றிய விமர்சனம் இவை மூன்றுமே பதாகை இணைய தளத்தில் வாசிக்கக் கிடைத்தன. அவற்றிற்கான இணைப்பு : இது.
தேவதச்சனின் மற்றொரு கவிதை பின்வருவது. இதையும் வாசித்து நாம் நவீன கவிதை பற்றி சிலவற்றைப் பகிர்வோம்:
பரிசு
என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்
நவீன கவிதையின் சாத்தியங்கள் மிகவும் விரிந்தவை. ஆழ்ந்தவை. தேவதச்சன் கவிதைகள் மற்றும் சமகால நவீன கவிதையில் காட்சியிலிருந்து ஒரு ஆழ்ந்த உட்பொருளுக்கு கவிஞர் ஒரு அழகிய நகர்வைக் கொள்வதை நாம் பார்க்கிறோம். முதல் கவிதையில் காட்சிகள் என்ன? ஒரு பெண்ணின் சோகம், இரு விபத்துக்கள். இந்தக் காட்சிகளிலிருந்து கவிஞரின் நகர்வு எங்கே? முடிவான வரிகள் இவை
எவ்வளவு நேரம்தான் நான் இல்லாமல் இருப்பது
எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம்
இருபத்தொன்றாம் நூற்றாண்டு எவ்வளவு நேரமோ
அவ்வளவு நேரம்
இந்த இடத்தில் அவர் ஒவ்வொரு காட்சியிலும் அதைத் தாம் பார்த்தது ஒரு ரயில் அல்லது பேருந்திலிருந்து அது நகர்ந்ததால் அந்த துக்கத்தில் தாம் இல்லை. அங்கே மனிதநேயம் காட்டத் தாம் இல்லை என்பதையே தாம் இல்லாமல் இருக்கும் நேரத்துக்கு எதாவது அளவு உண்டா என்றால் இல்லை ஒரு நூற்றாண்டு என்று முடிக்கிறார். அங்கே அது தனி மனிதனைத் தாண்டி சமூகத்தின் கூட்டு மனசாட்சியை அது தட்டுகிறது.
இரண்டாவது கவிதையில் காட்சி ஒரு பின்னணியோடு நம்முன்னே விரிகிறது. நட்பு முறையாய் இருப்பவரது விருந்தில் பரிசு அதற்கு எதிர்ப்பரிசு என கைமாறி விட்டன. அந்தப் பரிசுகளுக்குள் ஒரு செய்தி, ஒரு அதிகாரப் பகிர்வுக்கான துவக்கம், அரசியலுக்கான அச்சாரம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கள் அல்லது உட்பொருட்களே பரிசு என்னும் ஒரு துளிக்குள் ஓராயிரம் துளிகளாக இருக்கின்றன. இல்லையா?
காட்சிகளின் வழி அந்தக் காட்சிகள் நுட்பமற்று மேலோட்டமாகக் காட்டுவதைத் தாண்டி ஒரு ஆழ்ந்த தரிசனத்தை நவீன கவிதை சென்றடைகிறது. இந்த நகர்வு மிகுந்த நளினமாய் இருப்பது கவிஞனின் கவித்துவத்தால் மட்டுமே . ஆனால் அது வாசகனை ஒரு சங்கிலித் தொடரான சிந்தனையில் ஆழ்த்துவது. வாசகனை அந்த வடிவில்லா தத்துவச் சரடு உறுத்திக் கொண்டே இருக்கிறது. அது நிகழும் போது கவிதை வெற்றி பெறுகிறது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். சத்யானந்தன்