அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா - டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான டுங்காவில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.
அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.
1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937 இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.
இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.
பிடித்துக் கொள்ளப்பட்டிருந்த மற்றவர்களோடு கட்டன்ஹாவும் ஆட்சியாளர் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். இவ்வாறு பிடித்துக் கொண்டு வரப்பட, தான் என்ன தவறு செய்தோமென கட்டன்ஹாவுக்குத் தெரியவில்லை. கையில் ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பிற்பாடு அவனுக்கு 'சாந்தோம்' நோக்கிச் செல்லும் கப்பலில் ஏற நேர்ந்தது.
எல்லோரும் சாந்தோமில் இறக்கி விடப்பட்டனர். கட்டன்ஹா, கோப்பி மற்றும் கொக்கோ தோட்டமொன்றில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டான். அது மிகவும் கடினமானதொன்றாக இருந்தது. இரவில் திரும்ப முகாமுக்கு வருகையில் அவனுக்கு எவ்வளவு களைப்பாக இருப்பினும், அதையெல்லாம் மறந்து அவனது பிறந்த பூமியான டுங்கா பற்றி நினைத்துக் கொண்டிருப்பான். அவனது உடல் சாந்தோமில் இருந்த போதிலும், அவனது இதயமும், எண்ணங்களும் முழுமையாக அவனது மனைவியிடமும், மூன்று குழந்தைகளிடமுமே வசித்தன. அவன் தனிமையை உணர்ந்தான். எப்பொழுதாவது விடுதலை கிடைத்து திரும்பிச் செல்லும் இலக்கோடு அவன் தைரியமாக வேலை செய்தான். அவனது தைரியம் உறுதிப்பட்டுக் கொண்டு வந்ததோடு, அவன் ஐந்து வருடங்கள் சாந்தோமில் வேலை செய்திருந்தான்.
ஐந்து வருடங்கள் மட்டுமே கழிந்து போயிருந்தன. தனித்திருந்ததன் காரணத்தால் அவன் அந்த வருடங்களை பத்தாக உணர்ந்திருந்தான். இதற்கிடையில் அவனது மனைவி டொம்பூலா பற்றி எந்தத் தகவலையும் அவனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் தனது குழந்தைகள் மூவருடனும் இன்னொருவனுடன் வாழத் தொடங்கியிருந்தாள்.
டொம்பூலா மனம் கவரும் அழகுடன் கூடிய இளம் யுவதியாக இருந்தாள். செழிப்பாக வளர்ந்த மேனியைக் கொண்ட அவள் அப்பாவித் தோற்றமுடையவளாக இருந்தாள். அதனால் இம் மனிதன் அவள் பின்னால் சென்றது ஆச்சரியப்படத்தக்க விடயமொன்றல்ல. தனது மனதை சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவள் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்த போதிலும், பிறகு அவனது யோசனையை ஏற்றுக் கொண்டாள். அன்பானவனாக இருந்த அவன், அவளையும் மூன்று குழந்தைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டான்.
சாந்தோமில் கட்டன்ஹா ஆறு நாட்களும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் ஓய்வெடுத்தான். வீடு குறித்த வருத்தம் இருந்தபோதிலும் அவன் சுற்றுச் சூழலுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டான். கௌரவமான குடும்பமொன்றிலிருந்து வந்த அவனுக்கு அது இலகுவாகவும் இருந்தது.
காலங்கள் கழிந்தன. வழமை போல ஓர் தினம், விடியலுக்கு முன்பு அவன் வரிசையில் இணைந்திருந்தான். கொக்கோ பழங்களைச் சேகரிக்கும் பை அவனது தோளைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்தது. கை விளக்கொன்றை வைத்திருந்த மேற்பார்வையாளர், தோட்டத்தில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களையும் முகாமையாளர் அழைத்துவரச் சொல்லியிருப்பதாக அறிவித்தார். எதிர்பார்த்திராத இந்த அழைப்பு குறித்து அம் மனிதர்கள் அச்சமுற்றனர். இதற்கு முன்பு நிகழ்ந்தது போல இதுவும் அவர்களுக்கு துயரம் விளைவிக்கும் நோக்கோடு அழைக்கப்படும் அழைப்பாக இருக்கக் கூடும்.
முகாமையாளரின் அலுவலகத்துக்கு அருகில் வரும்போது மற்றத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் அங்கு கூடியிருப்பதை அவர்கள் கண்டனர். ஒருவருக்கொருவர் கதைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் அச்சத்தோடு அமைதியாக இருந்தனர்.
அவர்கள் மீண்டும் வரிசையில் ஒன்று கூடினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அலுவலகத்தின் கீழ் மாடி யன்னலில் முகாமையாளர் தோன்றினார். அவர் கண்களைக் கசக்கி முற்றத்தில் கூடியிருந்த மக்களைப் பார்த்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.
அரை மணித்தியாலமளவில் கழிந்த பிறகு திரும்பவும் அவர் யன்னலின் முன்னால் தோன்றினார். அவரது மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிய மேற்பார்வையாளரும் அவரது அருகிலேயே நின்றார். மேற்பார்வையாளரின் கரங்களில் கடதாசித் தாள்களின் கட்டொன்று இருந்ததோடு, அவர் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார். அவரது பெயர் சொல்லி அழைக்கும் ஓசையோடு அங்கிருந்த அமைதி சிதறிப் போனது.
டொங்குவா - இருக்கிறேன்
மெகிண்டோ - இருக்கிறேன்
நயீம் - இருக்கிறேன்
உகம்பா - இருக்கிறேன்
டுன்கோ - இருக்கிறேன்
கொரன்கா - இருக்கிறேன்
உலொம்பா - இருக்கிறேன்
கலொன்கா - இருக்கிறேன்
அநேகமாக நூறு பெயர்கள் தாண்டிய பின்பு கட்டன்ஹாவின் பெயரும் அழைக்கப்பட்டது. நீண்ட நேரமாக பெயர் கூப்பிட்டு முடிந்ததன் பிற்பாடு முகாமையாளர் உரையாற்றினார். அவர் ஒவ்வொரு வசனமாக தெளிவாக உச்சரித்து அறிவிப்பொன்றை நிகழ்த்தினார். வரிசையில் நின்றிருந்த மக்கள் தங்கள் கழுத்துக்களை நீட்டி முகாமையாளர் சொல்வதை மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளருக்கு செவிமடுத்தனர்.
"இப்பொழுது உங்களால் அங்கோலாவுக்குத் திரும்பிச் செல்ல முடியும். நீங்கள் இங்கு இருக்க வேண்டிய காலம் நிறைவடைந்து விட்டது. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத் தொகை இப்பொழுது கிடைக்கும். அதன் பிறகு உங்களால் கப்பலேற முடியும். புரிந்ததா?"
மேற்பார்வையாளரின் மொழிபெயர்ப்பு முடிவதற்கும் முன்பு, மக்களிடையே தவழ்ந்த அமைதி உடைந்து போயிற்று. அவர்களது உடனடி ஆரவாரத்தை, நீண்ட காலம் சிறையிலிருந்து விடுதலையாகும் ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும்.
கட்டன்ஹாவின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் நிலத்தோடு கலந்தது. இப்பொழுது அவர்கள் மீண்டும் பயணத்துக்கு தயாராக வேண்டும். அவர்களுக்கு பணத்தின் ஒரு பகுதி கிடைத்ததோடு, நகரத்துக்குச் சென்று அப் பணத்தால் ஏதாவது விலைக்கு வாங்கிக் கொள்ளவும் முடியுமாக இருந்தது. மீண்டுமொரு முறை பெயர் கூப்பிடப்பட்டு, அவர்களுக்கு கடற்பிரயாண அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டது.
பணமும், அனுமதிப் பத்திரமும் கிடைத்ததன் பிற்பாடு 'லுஸிலா' எனும் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. 'லுஸிலா' கப்பலானது நிறைய துறைமுகங்களில் பொருட்களை இறக்குவதற்காகவும், ஏற்றுவதற்காகவும் தரித்திருந்ததன் காரணத்தால், அதற்கு 'லெபிடோ' துறைமுகத்துக்கு வந்து சேர மூன்று வாரங்கள் பிடித்தது.
கப்பலிலேறிய இருபத்தோராவது நாளின் மாலை ஆறு மணிக்கு 'லுஸிலா' கப்பலானது, அங்கோலாவுக்கு வந்து 'லெபிடோ' துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. அதன்பிறகு அம் மக்களுக்கு துறைமுகத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சுங்கப் பரிசோதனைகளின் பிற்பாடு அவர்கள் வெளியே திறந்து விடப்பட்டார்கள்.
கட்டன்ஹாவும் இன்னும் சிலரும் பேரூந்தொன்றில் 'பொகோய்' நகருக்குச் சென்று, அவர்களது வருகை குறித்து அங்கிருந்த குடியுரிமை நிலையத்தில் தெரிவித்தார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கடைத் தெருவுக்குச் சென்றார்கள். அங்கு கட்டன்ஹாவுக்கு அவனது பழைய நண்பர்கள் சிலரையும், நெருங்கிய உறவினர்கள் சிலரையும் சந்திக்கக் கிடைத்தது. கட்டன்ஹாவின் பிறந்த ஊரான 'டுங்கா' கிராமத்திலிருந்து வியாபார நிமித்தம் பொகோய் நகரத்துக்கு வந்திருந்த கட்டன்ஹாவின் மிக நெருங்கிய உறவினரொருவனும் இவர்களிலொருவன்.
வியப்போடு ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்ட கட்டன்ஹாவும், அவனது உறவினனும் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தமையால் அருகிலிருந்த மதுபானசாலைக்குச் செல்லத் தீர்மானித்தனர். அங்கு அவர்கள் காலமானவர்கள் குறித்தும், காணாமல் போனவர்கள் குறித்தும் கதைத்ததோடு, இறுதியில் அவனது மனைவி குறித்தும் கதைத்தனர். நன்றாக மதுவெறியிலிருந்த கட்டன்ஹாவின் உறவினன் உளறத் தொடங்கினான்.
"டொம்பூலா இப்பொழுது பெங்குலாவின் மனைவி. அவள் இப்பொழுது மூன்று பிள்ளைகளோடும் பெங்குலாவுடன்தான் இருக்கிறாள். அவர்களுக்கும் இப்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்."
கட்டன்ஹாவின் முள்ளந்தண்டினூடு வேதனையொன்று பெருக்கெடுத்துச் சென்றது. மின்சாரம் தாக்கியது போல அவன் உணர்ந்தான். மது அருந்தியிருந்ததால் அவனால் கதைக்க முடியவில்லை. கட்டன்ஹா அதியுச்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த அசுபத் தகவல் குறித்து கதைக்க முயற்சித்தான்.
"அதற்குப் பரவாயில்லை. நான் இதனை மிக நல்ல முறையில் தீர்த்து வைக்கிறேன். எப்படியிருப்பினும் அவள் எனது பிள்ளைகளின் தாய் அல்லவா!"
அவனது உறவினன் தனது முட்டாள்தனம் குறித்து கவலையுற்றதோடு அது பற்றித் தொடர்ந்தும் கதைப்பதைத் தவிர்க்க முயற்சித்தான். கட்டன்ஹாவின் பொறுப்புணர்வு அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.
டொம்பூலா, தான் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும் விதிக்கு தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தாள். அவள் தனது வாழ்வில் மிகத் துன்பகரமான நிலைமைக்கு முகம் கொடுத்திருந்தாள்.
பெங்குலாவும் இந் நிலைமைக்கு முகம் கொடுக்கத் தயாராகவேயிருந்தான். குழாயை உறிஞ்சியபடியிருந்த அவனது மனதில் பல வித எண்ணங்கள் நிரம்பி வழிந்தன. கட்டன்ஹாவின் மீள்வருகை குறித்து அறியக் கிடைத்ததன் பிற்பாடு அவன் மோசமான செயல்களுக்குக் கூடத் தயாராக இருந்தான். கட்டன்ஹாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அவன் தீர்மானித்திருந்தான்.
தனக்கு தகவலைச் சொன்ன உறவினனுக்கு விடைகொடுத்த பிறகு, கட்டன்ஹா நடந்தே டுங்கா நோக்கி வந்தான். அவன் தனது குலத்தில் பெரியவரான 'க்விடபோ'விடம் வரும்போது இருள் சூழ்ந்திருந்தது. நாய்கள் குரைக்க ஆரம்பித்ததோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஆண்பிள்ளைகள் இருவர் யாரென்று பார்க்க வெளியே வந்தனர். கட்டன்ஹாவை வரவேற்க பெரியவர்கள் முன்னே வந்தனர். அவர்கள் மிக மகிழ்வோடு கட்டன்ஹாவை வரவேற்றனர்.
மறுநாட்காலையில் அதிகளவு மக்கள் அங்கு கூடினர். அபாயங்களுக்கு முகங்கொடுக்காமல் பத்திரமாகத் திரும்பி வர முடிந்ததையிட்டு அவர்கள் கட்டன்ஹாவை வாழ்த்தினர். சில தினங்கள் கட்டன்ஹாவுக்கு உறவினர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் கிடைத்தன. அவனால் தனது வீட்டுக்குச் செல்வதை அதற்கு மேலும் தாமதப்படுத்த முடியவில்லை.
அவன் பயணித்த ஒற்றையடிப் பாதையானது மேடுபள்ளங்களால் நிறைந்தது. மலையுச்சிக்குச் சென்ற பொழுது கீழுள்ள பிரதேசம் மிக அழகாகக் காட்சியளித்தது. எதுவும் மாறியிருக்கவில்லை. வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட அவன் வெட்டியிருந்த வாய்க்கால்கள் அப்படியே இருந்தன. அவன் தனது வீட்டுக்குச் செல்லும் பாதையில் திரும்பினான். உண்மையில் அங்கு வீடொன்று இருக்கவில்லை. அங்கிருந்தது, அவனது அழிவுற்ற பழைய வீட்டின் சேதாரங்கள் மட்டுமே. அவனது உடைமைகள் அனைத்தும் சேதமுற்றிருந்தன.
வேலி உடைந்து வீழ்ந்திருந்தது. வாசலருகே இருந்த கற்தொடர்களைக் கொண்டுதான், வீடு இருந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. வீட்டின் கூரை, நிலத்தில் வீழ்ந்து கிடந்தது. அவன் தனது கரங்களால் நீண்ட காலத்துக்கு முன்பு கட்டிய வீடு, அழிவுற்ற சேதாரங்களின் குவியலாக இருந்தது. அவனது கண்களில் கண்ணீர் நிறைந்தது. முன்பிருந்தவாறே வீட்டைக் கட்டியெழுப்ப அவன் தீர்மானித்தான்.
ஆனால் எல்லாவற்றும் முன்பு, அவன் டொம்பூலாவைக் காண வேண்டும். அவளும், அவளது பிள்ளைகளும் அவன் உயிர் வாழ்வதைக் காணும் மகிழ்வை அனுபவிக்க வேண்டும். அவர்கள் முன்பு போலவே மகிழ்வோடு இருக்க வேண்டும். அவனால் இன்னும் பார்த்திருக்க முடியாது. அவசரமான தீர்வொன்றை எடுக்க வேண்டும்.
அவனது மனைவி சம்பந்தமாக எடுக்கக் கூடிய மிகச் சிறந்த தீர்வு குறித்து அவன் மிக ஆழமாகச் சிந்தித்தான். அவனுக்கு இப் பிரச்சினையை தனது மனைவியுடன் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள முடியுமெனினும், அவளது புதிய கணவனின் எதிர்வினை எவ்வாறானதாக இருக்கும்? இப் பிரச்சினையை சட்டத்தின் முன் வைக்குமிடத்து அங்கு எழும் தர்க்கங்களுக்கும், வேண்டுகோள்களுக்கும் முடிவற்றுப் போகும். உண்மையில் இரு சாராருக்கும் சாட்சிகள் இருக்கிறார்கள். எனினும் இறுதியில் ஒரு சாரார் தோற்றுப் போவர்.
பைத்தியக்காரனொருவனைப் போல தனது மனைவியையும், பிள்ளைகளையும் கட்டன்ஹா நேசித்தான். அவர்கள் எப்பொழுதும் தனக்காகவே இருப்பார்களென அவன் நம்பினான். தான் வழக்கில் வெல்வதென்பது நிச்சயமென அவனுக்குத் தோன்றியது.
அடுத்தநாள் காலை அவன் பணத்தையும் எடுத்துக் கொண்டு பொனோய் நகருக்குச் சென்று குடியுரிமை நிலையத்துக்குள் நுழைந்தான். அன்றைய தினமே மாலையில் அவன் நீதிமன்றத்தில் மொழிபெயர்த்துச் சொல்பவரைச் சந்தித்தான். கட்டன்ஹா, தான் வந்திருக்கும் காரணத்தை முழுமையாக அவரிடம் கூறினான். கட்டன்ஹாவுக்குத் தேவை, அவனது மனைவியையும் பிள்ளைகளையும் அவனிடமே பெற்றுக் கொள்வதுதான்.
மறுநாட்காலை கட்டன்ஹா குடியுரிமை நிலையத்தின் வாயிலருகிலிருந்த வரிசையில் இணைந்து தனது முறை வரும்வரை காத்திருந்தான். மொழிபெயர்த்துச் சொல்பவருடன் கலந்துரையாடியதன் பிற்பாடு கட்டன்ஹாவின் வழக்கு முன்னிறுத்தப்பட்டது. பெங்குலாவுக்கும், டொம்பூலாவுக்கும் நீதவான் மூலம் அழைப்பாணைக் கடிதத்தை அனுப்புவதற்கு குடியுரிமை நிலைய அதிகாரி கட்டளையிட்டார்.
அவர்களிடம் அழைப்பாணைக் கடிதத்தை கொண்டு சேர்ப்பதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டியிருந்ததால் அதற்காகவே ஒரு நாள் செலவழிந்தது. அழைப்பாணைக் கடிதமானது, பெங்குலா எதிர்பார்த்திருந்த ஒன்றே. என்ற போதிலும் அவன் இதற்குச் சற்றுப் பயந்தான். ஏனெனில் நீதி நிலைநாட்டப்படுவது மிகவும் அபூர்வமானது என்பதனால்தான். டொம்பூலா, பெங்குலாவின் எதிர்வினையை அறிந்துகொள்ள விரும்பினாள் எனினும் அவனிடம் செல்லும் வழிமுறை அவளுக்குத் தெரியவில்லை.
அவர்கள் இருவருக்கும் பொனோய் நகருக்குச் செல்ல ஒரு தினம் எடுத்தது. முதலாவதாக அவர்கள் மொழிபெயர்ப்பாளரைச் சந்தித்து, வழக்கை விசாரிப்பதற்கான தினமொன்றைக் குறித்துக் கொண்டனர். குடியுரிமை நிலையத்தின் அதிகாரி விசாரிப்பதெல்லாம் அவசர வழக்குகளை மாத்திரமே. கிடைக்கும் முறைப்பாடுகளைப் பரிசீலிப்பதிலேயே அவரது காலம் கழிந்தது.
பெங்குலாவும் டொம்பூலாவும் மூன்று நாட்கள் அங்கு இருந்ததோடு இறுதியில் அவர்களது வழக்கு விசாரிக்கப்பட்டது. முதலில் கட்டன்ஹாவும் அடுத்தது பெங்குலா, டொம்பூலா மற்றும் ஐந்து பிள்ளைகள் என முறைப்படி விசாரிக்கப்பட்டனர். முறைப்பாட்டையும் சித்தாஸியையும் வாசித்துப் பார்த்த நீதவான் எல்லோரையும் நோக்கினார்.
" இங்கு கட்டன்ஹா என்பது யார்?"
" நான்"
"அவ்வாறெனில் உனது கதையைச் சொல்."
கட்டன்ஹா அவனது கதையை விவரித்தான். தான் சாந்தோமுக்கு அனுப்பப்பட்ட விதத்தையும், அங்கு ஐந்து வருடங்களைக் கழிக்க நேர்ந்த விதத்தையும் அவன் விவரித்தான். அவன் வீட்டை விட்டு வெளியே இருந்த காலத்தில் வீட்டிலிருந்து எந்தத் தகவலும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் திரும்பவும் வந்தபோது அவனது மனைவி இன்னுமொருவனைத் திருமணம் செய்திருப்பதை அறியக் கிடைத்தது.
நீதவான் அவனது உரையின் மொழிபெயர்ப்பைக் கேட்டுக் கொண்டிருந்தார். இது மற்ற வழக்குகளைப் போலவே அவருக்குச் சாதாரணமான ஒன்று. அவரது முப்பது வருட சேவை அனுபவத்தில் இவ்வாறான சம்பவங்கள் இத் தேச மக்களிடத்தில் சாதாரணம்.
" உனக்கு உனது முதல் மனைவி அவசியமாக இருப்பது ஏன்?" அவர் வினவினார்.
" எனக்கு அவள் அவசியமானவள். அவளை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்." தயங்காது கட்டன்ஹா பதில் கூறினான். கட்டன்ஹாவின் பதிலிலிருந்து அவனுக்குள்ளிருந்த குருட்டுத்தனமான நம்பிக்கை தெளிவாக வெளிப்பட்டது.
"எதிராளியிடமிருந்து நஷ்ட ஈடாக என்ன பெற்றுக்கொள்ள விரும்புகிறாய்?"
" எனக்கு அவனிடமிருந்து எதுவுமே தேவையில்லை. நான் சாந்தோமிலிருந்த ஐந்து வருடங்களிலும் எனது குழந்தைகளை அவன் பராமரித்ததற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்" கட்டன்ஹா பதிலளித்தான்.
எதிர்பாராத இப் பதிலால் எல்லோருமே ஆச்சரியத்துக்குள்ளானார்கள். ஒரு கணம் அமைதி நிலவியது. நீதவான் விழிகளைச் சுழற்றி ஆச்சரியத்தோடு பார்த்தார்.
"டொம்பூலா நீயா?"
"ஆமாம்"
" நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? இவர்களில் யாரை நீ கணவனாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாய்? கட்டன்ஹாவையா? மற்றவனையா?"
"நான் முதல் கணவனைத் தேர்ந்தெடுக்கிறேன். அவர் எனது மூத்த குழந்தைகளின் தந்தை" டொம்பூலா தயங்காது பதிலளித்தாள்.
அந்தக் கணத்திலேயே கட்டன்ஹாவின் பிள்ளைகள் மூவரும் தமது தந்தையின் பக்கம் சென்றனர்.
"சரி. உனக்கு, உனது இரண்டாவது திருமணத்தின் மூலமும் இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா?" டொம்பூலாவின் எதிர்வினையைப் பார்த்தவாறு நீதவான் வினவினார்.
"ஆமாம். இன்னும் இருவர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எனது மூத்த குழந்தைகளின் சகோதரர்கள்தானே"
வழக்கு வேறோர் திசைக்கு திரும்புவதைப் போலத் தோன்றியது. இதனால் எதிராளியை அழைப்பதற்கு நீதவான் தீர்மானித்தார்.
"இப்பொழுது உனது தீர்மானம் என்ன?"
"நான் தீர்மானமொன்றை எடுப்பதில்லை. நான் இப் பெண்ணைத் திருமணம் முடித்தது அவள் தனியாக இருந்த காலத்திலேயே. இப்பொழுது அவளது சட்டபூர்வமான கணவன் வந்திருப்பதால் என்னால் எதுவும் சொல்ல இயலாது. உங்களது முடிவை வேண்டுகிறேன்."
குழம்பிப் போன நீதவான் மீண்டும் கட்டன்ஹாவை அழைத்தார்.
"கட்டன்ஹா, இதற்குப் பிறகு எதிராளியின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது யார்?"
"நான் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறேன். அப் பிள்ளைகள் எனது மனைவி பெற்ற பிள்ளைகள். ஆகவே அந்தப் பிள்ளைகளின் உரிமை எனக்குத்தான். அவனுக்கு எந்த நேரத்திலும் வந்து அப் பிள்ளைகளைப் பார்த்துச் செல்லலாம்."
நீதவான் தலையசைத்தார். அமைதி மீண்டும் அரசாண்டது. இப்பொழுது நீதவான் புத்திசாலித்தனமான, கருணை மிக்க முடிவொன்றை எடுக்கவேண்டிய நிலையிலிருந்தார். அவர் சிறிது நேரம் சிந்தித்தார்.
"சிலவேளை நீ இதன்பிறகு எதிராளியுடன் பிரச்சினை ஏற்படுத்திக் கொள்வாயா?"
"எதற்காக? எனது பிள்ளைகளை வளர்த்தெடுத்ததற்கு நான் அவனுக்குக் கடன் பட்டிருக்கிறேன். நான் அவனை எனது நண்பனொருவனாகத்தான் உபசரிப்பேன். அவனும் அப்படியே எண்ணுவானென நான் நினைக்கிறேன்."
"பெண்ணே, நீ பெங்குலாவிடம் பராமரிப்புப் பணம் ஏதாவது கேட்கவில்லையா?”
"இல்லை. ஏனெனில் அவர் இன்றிலிருந்து எனது மூத்த பிள்ளைகளின் சகோதரர்களுடைய தந்தை."
"ம்ம்"
எல்லோருக்குமே ஒற்றுமையாக வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்ததோடு எவரிடமிருந்தும் எந்தக் கட்டணமும் அறவிடப்படவுமில்லை.
எழுத்தாளர் ராஉல் டேவிட்(Raúl David) பற்றிய குறிப்பு
ராஉல் மாத்யூ டேவிட் எனும் முழுப் பெயர் கொண்ட எழுத்தாளர் ராஉல் டேவிட் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அங்கோலா நாட்டிலுள்ள பெங்குஎலா மாகாணத்தில் காண்டா எனும் பிரதேசத்தில் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் மேற்படிப்புக்காக கலாங்கு எனும் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயர்கல்வியைப் பூர்த்தி செய்ததும் அரச சேவையில் இணைந்து பல தரங்களிலும் பணியாற்றியுள்ளார்.
பணி நிமித்தம் நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பயணிக்க வேண்டியிருந்த காரணத்தால் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளவும் கிராமப்புற பண்ணைத் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகவும், அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றை கட்டுரைகளாகவும் இலக்கியப் படைப்புக்களாகவும் எழுதி வந்தார். அவை பின்னாட்களில் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
அங்கோலா எழுத்தாளர்கள் சங்கம் (UEA) உருவாகுவதற்கான பிரதான காரணகர்த்தாவான இவர், பல்வேறு கலாசார, இலக்கிய செயற்பாடுகளிலும், ஆப்பிரிக்க – ஆசிய எழுத்தாளர்களின் ஒன்றுகூடலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இவரது தொகுப்புக்கள்
Colonized and settlers (1974), Poems (1977), Traditional Tales of Our Land (I) (1978); Narratives at random (1979), Traditional Tales of Our Land (II) ( 1981), Against the law and the flock (1988), Song of Our People, written versions of songs and poems in language Umbundu (1988), Song of Yesterday to Listen and Tell (1989), From Traditional Justice of Umbundus (1997), Benguela in time and space (2000) and Old Owl history.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.