அடிக்கொவ்வொன்றாய் இராணுவக் குடியிருப்புக்கள், சைக்கிள்களில் ஏறிப் பயணித்துக் கொண்டிருக்கும் இராணுவத்தினர், குண்டுகளும் ரவைகளும் ஏற்படுத்திய துவாரங்களைத் தாங்கியிருக்கும் வீடுகள், தலை சிதைந்துபோன தீக்குச்சிகளை நட்டுவைத்தது போல பனை மரங்கள்...இவற்றைத் தாண்டி சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருந்த ஏ9 பாதை வழியே நாம் கிளிநொச்சி நகரத்தைச் சென்றடைந்தோம். வடக்கின் வசந்தம் ஏ9 பாதையோடு மட்டுப்பட்டிருந்தது. ஏ9 ஐத் தாண்டியுள்ள கிராமங்கள் இன்னும் பிசாசுகளின் மைதானம் போலவே காட்சி தருகின்றன. அம் மக்களின் முகங்களில் நிச்சயமற்ற தன்மையின் சாயல் படிந்திருந்தது. இடைக்கிடையே, உடைந்துபோன மதில்களில் சிரித்துக் கொண்டிருக்கும் முகங்கள் நெருங்கி வரும் தேர்தலை எமக்கு ஞாபகமூட்டுகின்றன. அவை அநேகமாக ஆளும்கட்சி வேட்பாளர்களது சுவரொட்டிகளே. கிளிநொச்சியானது நீண்டகாலமாக விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பிரதேசமாகும். இப்பொழுது நடக்கப் போகும் மாகாணசபைத் தேர்தலானது, இங்குள்ள சிலர் 30 வருட காலத்துக்குப் பின்னர் முகம் கொடுக்கப் போகும் முதல் தேர்தலாகும். எனினும் அவர்கள் அதனை மிகப் பெறுமதியான ஒன்றாகக் கருதுவதில்லை. தேர்தல் எனப்படுவது, ஜனநாயக ஆட்சி முறையின் முதல் இலட்சணமாகும். எனினும் எமது பயண இலக்குகளான கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்கள் இன்னும் சிவில் ஆட்சி முறையிலிருந்து தூரப்படுத்தப்பட்ட, இராணுவ ஆட்சியின் கீழ், துயருறும் வாழ்க்கையை நடத்திச் செல்லும், கடந்த கால குரூர யுத்தத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்தும்படியாக இருண்டுபோன பிரதேசங்களாகும்.
குரூர யுத்தத்தின் சிதிலங்கள்
ஒரே தேசத்தில், ஒரே நிலத்தின் ஒரு பகுதியைப் பங்கிட்டுக் கொள்ள நடைபெற்ற யுத்தத்தின் இருண்ட நினைவுக் குறிப்புக்கள், இம் மாவட்டங்களில் தேவைக்கும் அதிகமாகவே பரவி விசிறப்பட்டிருக்கின்றன. அநேகமானவர்களுக்கு தாம் பிறந்த கிராமத்தில் ஆரம்பித்து, புதுமாத்தளன் யுத்த களத்தில் உயிர் தப்பி, இராணுவ வலயத்தின் இடம்பெயர் முகாம்களில் சிக்குண்டு, சிறைப்பட்டு திரும்பவும் தமது கிராமங்களுக்கு மீளத் திரும்பிய இருண்ட வரலாறுகள் உண்டு.
அந்த இருண்ட ஞாபகங்கள் அன்று அவர்கள் ஷெல் மழைகளிலிருந்தும், மோட்டார் குண்டுகளிலிருந்தும் தப்பித்து, வாழ்க்கையோடு போராடி, வாழ்வதற்காக வேண்டி இத் துயருற்ற நிலத்தில் நடந்து சென்ற தூரத்தினாலும், கடந்த காலத்தில் அனுபவித்த வேதனைகளாலும் நிரம்பியவை. அந்த இருண்ட ஞாபகங்கள் அவர்களை இன்றும் வதைக்கின்றன. சில நேரங்களில் அழ வைக்கின்றன.
பிள்ளை வரும்வரை...
தமது பிள்ளைகள் வரும்வரை வழிபார்த்திருக்கும் தாய்மார்களுக்கும், தந்தைமார்களுக்கும், தமது சகோதர சகோதரிகள் வரும்வரை வழிபார்த்திருக்கும் சகோதர சகோதரிகளுக்கும் இந் நிலத்தில் பஞ்சமேயில்லை. யுத்தம் முடிவுற்று நீண்ட காலம் ஆன பின்பும் கூட இன்னும் அவர்களது எதிர்பார்ப்புக்கள் புதிதாகவே உள்ளன. அநேகமானவர்களது ஒரே எதிர்பார்ப்பு, தமது மரணத்திற்கு முன்பாக காணாமல்போன தமது மகனை, மகளைக் காண்பதாகும்.
மேரி புஷ்பராணி அம்மாவுக்கும் கூட தனது வாழ்க்கையில் ஒரேயொரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அது, யுத்த களத்திலிருந்து இடம்பெயர்முகாமுக்குள் வந்த பிற்பாடு காணாமல் போன தனது மகனை (ஆண்டனி ஜெயசுந்தரம் நளினிகாந்தன்), தனது மரணத்துக்கு முன்பதாகக் காண்பதாகும்.
"எனது மகன் ஆண்டனி 1987.02.19 அன்று பிறந்தவர். நாங்கள் யுத்த களத்திலிருந்து வந்து இராணுவத்தைச் சரணடைந்தோம். 2009.05.10 ஆம் திகதி, செட்டிக்குளம், ஆனந்த குமார ஸ்வாமி முகாமில் வைத்துத்தான் அவர் காணாமல் போனார். அப்பொழுது அவருக்கு வயது பத்தொன்பதுதான் ஐயா. அவருக்கு இயக்கத்தோடு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அவரை எங்காவது சிறைப்படுத்தி வைத்திருப்பார்களென எனக்குத் தோன்றுகிறது. நான் போகாத இடமில்லை. வெலிக்கடை, களுத்துறை, மனித உரிமைகள் ஆணைக்குழு என எல்லா இடங்களுக்கும் போனேன். இன்னும் எனது பிள்ளையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு எனது மகனைத் தேடித் தாருங்கள் ஐயா. என்னால் அப்பொழுதுதான் நிம்மதியாகக் கண்களை மூட முடியும்."
அழுகை கலந்த தொனியோடு அவர் சொல்லிக் கொண்டே போகிறார். அவரைத் தொடர்ந்து இன்னுமொரு பெண் வந்து அவரது துயரத்தையும் எம்மிடம் கூறினார். அவரது பெயர் ராசா மேரி லெட்ரீஷியா. அவரது கவலை, காணாமல் போன தனது மகளைப் பற்றியது.
"எனது மகள் ராசா மேரி தர்ஷியா. காணாமல் போகும்போது அவளுக்கு வயது 18. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அவளை விடுதலைப் புலிகளுடன் சேர்த்து கைவேலியில் வைத்துப் பிடித்துக் கொண்டு போனார்கள். பிறகு வட்டுவாலிலுள்ள இராணுவ எல்லைக்குள் அவள் வந்ததாக நிறையப் பேர் கூறினார்கள். அவர்கள் தர்ஷியாவை அங்கே கண்டிருக்கிறார்கள். எனது மகள் தென்பகுதியில் எங்காவது இருப்பாளென எனக்குத் தோன்றுகிறது."
அவரும் தனது மகளைத் தேடுகின்றார். இந்தப் பிரச்சினையானது, இலங்கை அரசால் தவிர்த்து விட முடியாதளவிற்கு சர்வதேச மட்டத்திலுள்ள பிரச்சினையாகும்.
அங்கவீனர்கள்
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் இலங்கை இராணுவத்துக்குமிடையில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக, கிளிநொச்சி மாவட்டத்துக்குள் மட்டும் கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் பேர் அங்கவீனமாகியுள்ளனர். இப்போதிருக்கும் நிலையில் அவர்களது எதிர்காலமானது கேள்விக்குறி ஆகும். அவர்களது துயர வாழ்க்கை மற்றும் தற்போதுள்ள சமூக நிலைப்பாட்டுக்குள் அவர்களது வாழ்க்கையை அவர்கள் எவ்வாறு கொண்டு செல்கிறார்கள் என்பது பற்றி கிளிநொச்சி மாவட்ட அங்கவீனர் சங்கத்தின் தலைவர் திருணாகரன் சிவராமன் இவ்வாறு கூறுகின்றார்.
"நாங்கள் பன்னிரண்டாயிரம் பேர் அங்கவீனர்களாகியிருக்கிறோம். இப் பன்னிரண்டாயிரம் பேரினதும் அங்க இழப்புக்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டது. எமக்குத் தொழில் இல்லை. எமது நிலையைக் கருத்திற்கொண்டு தகுந்த வேலைகளில் அமர்த்துவது அரசின் கடமை. இல்லாவிடில் நாங்கள் எவ்வாறு வாழ்க்கையைக் கொண்டுசெல்வது? இங்குள்ள வறிய மக்களுக்கு எம்மைப் பராமரிக்கும் அளவு வசதி கிடையாது. அவர்களுக்கும் தொழில் இல்லை. பணம் இல்லை. பொது இடங்கள் கட்டப்படும்போது எம்மைப் பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும் இன்றுவரை அது நடைமுறையிலில்லை. அங்கவீனர்களாகிய எமக்கு உதவிகளை வழங்கி, நல்லதொரு வாழ்க்கையை எட்டச் செய்வது அரசின் பொறுப்பாக உள்ளது. சமூகத்திற்கு ஒரு பாரமாக இருக்க அங்கவீனர்களாகிய நாம் விரும்புவதில்லை. ஏதாவது செய்து வாழ்க்கையைக் கொண்டு செல்ல எம்மால் முடியும். எமக்கு அரசிடமிருந்து அதற்கான உதவி தேவைப்படுகிறது."
'மனிதாபிமான நடவடிக்கை'யின் காரணமாக அங்கவீனர்களாகிய இவ்வாறான மனிதர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக, திரும்பவும் உண்மையான மனிதாபிமான நடவடிக்கையைத் தொடங்குவது உடனடித் தேவையாகும்.
போர்க் கால விதவைகள் மற்றும் இன்னும் சில பிரச்சினைகள்
'யுத்தமொன்றின்போது முதன்முதலில் இடப் பெயர்வுக்குள்ளாகுபவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான்' என பிரபல சொல்லாடலொன்று உள்ளது. வடக்கிற்கும் அது பொதுவானது. முல்லைத்தீவுக்குள் மாத்திரம் போர்க் காலத்தில் விதவையான பெண்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7500 ஆகும். கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இதைப் போல இரண்டு மடங்காக உள்ளதென சிவில் அமைப்பு செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
போர்க்கால விதவை நிலைமையானது ஒரு சமூகத் துயரமாகும். இச் சமூகத் துயரத்தைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வளிப்பது அனைவரதும் கடமையாகும். அக் கடமை குறித்து முல்லைத் தீவு சமூக செயற்பாட்டாளரான பெருமாள் குமாரி எம்மிடம் இவ்வாறு தனது கருத்தினைத் தெரிவித்தார்.
"எமது சமூகத்தில் விதவைப் பெண்கள் அநேகமானவர்கள் உள்ளனர். அவர்களது பொருளாதார நிலைமை பூச்சியமாகும். அவர்களது பொருளாதார நிலைமை கீழிறங்கும்போது அவர்களது பிள்ளைகளுக்கு என்ன நடக்கும்? இதனால் இப்பொழுது எமது சமூகத்தில் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எமது பிள்ளைகள் பாடசாலை செல்வதற்காக பேரூந்துகள் இங்கு தரித்து நிற்பதில்லை. அவர்கள் நடந்துதான் செல்ல வேண்டியிருக்கிறது. விடிகாலையில் பாடசாலை சென்று வீடு திரும்பும்போது மாலை 4 மணியாகிவிடும். இவ்வாறு நடந்துவரும்போது யாராவது தமதருகில் சைக்கிளை நிறுத்தினால் அவர்கள் அதில் ஏறி விடுகின்றனர். அதன்பிறகு வல்லுறவுக்குள்ளாக்கப்படுகின்றனர். நாங்கள் இப்பொழுது பிரச்சினைகள் பலவற்றுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். எம்மால் தேர்தல் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை. அதற்கு நாங்கள் முயற்சிக்கவுமில்லை. எமக்கு அதை விடவும் பல பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் இன்று வாழ்ந்துவிட்டு, நாளை எப்படி வாழ்வது என்ற யோசனையிலேயே எப்பொழுதுமிருக்கிறோம்."
இன்று இலங்கையின் தென்பகுதியில், வடக்கின் தேர்தலானது ஒரு பிரச்சினையாகும். தெற்கின் இனவாதத் தலைவர்கள் இத் தேர்தலை முன்னிட்டு 'தனி ஈழத்துக்குப் பாதை அமைக்கப் போகிறார்கள்' எனக் குரலெழுப்புவதைக் கேட்க முடிகிறது. அது உண்மையெனில், இம் மக்கள் தமது அரசுக்குப் பாதையமைக்கப் போகும் இத் தேர்தலுக்காக உயிரைக் கொடுத்துப் பாடுபட வேண்டும் அல்லவா? எனினும் அவர்களுக்கு இதைவிடவும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன. அவர்களுக்குக் குடிக்க தூய குடிநீர் வசதி இல்லை. ஒழுங்கான பாதைகள் இல்லை. அதிகளவான பிரதேசங்களுக்கு இன்னும் மின்சார வசதி இல்லை. ஏ9 பாதையானது செப்பனிடப்பட்டிருந்த போதிலும், இடையிடையே குறுக்கிடும் தெருக்களும், ஏனைய பாதைகளும் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளன. குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் கிணறுகள் யாவும் தூர்ந்துபோயுள்ளன.
இங்குள்ள மக்களில் அநேகமானவர்கள் விவசாயத்தையும், மீன்பிடிக் கைத்தொழிலையும் தமது ஜீவனோபாயமாகக் கொண்டவர்கள். எனினும் இன்று தண்ணீர் வடிகால்கள் சிதிலமடைந்துள்ள காரணத்தால் விவசாயத்துக்கான தண்ணீரைப் பெற்றுக் கொள்ள முடியாமல் சோர்ந்துபோகும் நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மீன்பிடிக் கைத்தொழிலுக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை. உபகரணங்கள் இல்லாமல் கடலுக்குச் செல்ல முடியாது. அதனால் வடக்கில் இன்று சிறு பிள்ளைகள் உட்பட, பலரும் பேக்கரி போன்ற நிலையங்களில் வேலை பார்த்து அன்றைய தினத்துக்கான உணவினைத் தேடிக் கொள்பவர்களாக உள்ளனர்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இங்குள்ள மக்களில் அநேகமானவர்கள் உயிராபத்துக்கு அஞ்சி பாதுகாப்பைத் தேடி ஓடியவர்கள். அவர்களது பிறப்புச் சான்றிதழிலிருந்து தமது காணி உரித்துச் சான்றிதழ் வரை அனைத்துப் பத்திரங்களையும் தொலைத்தவர்கள். அவற்றை மீண்டும் ஒழுங்கான முறையில் பெற்றுக் கொள்ள அரசானது எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென அவர்கள் தெரிவிக்கின்றனர்.
யுத்த காலத்தில் விட்டுவந்த தமது வாகனங்களும், பாரம்பரிய காணி நிலங்களும் தமக்கு இன்னும் கிடைக்கவில்லையெனவும், சிலரது இடங்களுக்குள் இராணுவ முகாம்கள், பௌத்த விகாரைகள் போன்றன கட்டப்படுவது வியப்புக்குரியது எனவும் தெரிவிக்கும் அவர்கள், இவற்றை மீளப் பெற்றுத் தந்து யுத்தத்தின் காரணமாக கையறு நிலைக்குள்ளாகியிருக்கும் தமக்கு அரசு உதவ வேண்டுமெனவும் கூறுகின்றனர்.
இராணுவமும், இராணுவக் குடியிருப்புகளும்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குள் பார்க்குமிடமெல்லாம் இராணுவ முகாம்கள், காவற் தடைகள், சந்தி சந்தியாக நின்றுகொண்டிருக்கும் இராணுவத்தினர் மற்றும் சாதாரண உடையில் நடமாடும் ஒற்றர்கள். எனவே மனிதர்கள் வாயைத் திறக்கவும் பயந்துபோயுள்ளனர். சிவில் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சந்திப்பொன்றின் போது கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஒரு விடயத்தை எமது கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
"தெற்கின் ஊடகவியலாளர்களிடம் நான் ஒரு விடயத்தைக் கூற விரும்புகிறேன். நான் ஒரு நாள் தெருவில் வைத்து எனது தோழியுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது ஒரு இராணுவ வீரர் எம்மிடம் வந்து என்ன கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கேட்டார். எமக்கு இத் தெருவில் நின்று கதைக்கக் கூட உரிமை இல்லையா?"
இது வடக்கின் ஜனநாயக நிலைப்பாடாகும். திருமணம் போன்ற உற்சவ நிகழ்வுகளைத் தமது வீட்டில் நடத்துவதாயின், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்பே அது பற்றியும், அந் நிகழ்வில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பூரண விபரங்களையும் அண்மையிலுள்ள இராணுவ முகாமிற்குச் சென்று அறியத் தர வேண்டும். இது, இராணுவமானது இம் மக்களின் வாழ்விற்குள் ஊடுருவியுள்ள விதத்தைக் காட்டும் ஒரு உதாரணமாகும்.
தேர்தல் போராட்டம்
தெற்கில் தேர்தலானது ஒரு போராட்டமாகும். விடுதலைப் புலிகளின் ஆட்சியிலிருந்து மீண்டுள்ள வடக்கிற்குள் இன்னும் தேர்தல் வன்முறைகள் ஊடுருவவில்லை.
"நாங்கள் தேர்தலைக் கேட்கவில்லை ஐயா. நாம் கேட்பதெல்லாம் தண்ணீர், இருப்பிடம், பாதை, பள்ளிக் கூடம், வைத்தியசாலை, மின்சாரம் ஆகியவற்றைத்தான். ஆனால் இப்பொழுது தேர்தல் வந்துள்ளது. இந்தத் தேர்தலை நாம் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை."
இதை மட்டும்தான் பலரும் கூறுகின்றனர். சிலர் இத் தேர்தல் குறித்து எதையும் கதைப்பதாயில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் எம்மிடம், அமைச்சர்கள் ரிஷாத் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தனது தேர்தல் நடவடிக்கைகளில் குறுக்கீடு செய்வதாகக் கூறினார். அவ்வாறே முஸ்லிம் மக்களுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றியும் அவர் காட்டமாக கருத்துக்களைத் தெரிவித்தார். தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்டு, கிளிநொச்சியின் சுயாதீன வேட்பாளர் ஒருவர், இப்பொழுது தேர்தல் வன்முறைகள் எதுவும் இடம்பெறாவிட்டாலும் கூட, நவநீதம் பிள்ளை வந்து சென்றதன் பிற்பாடு, எதிர்வரும் காலத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறக் கூடுமெனத் தெரிவித்தார்.
தேர்தல் குறித்து எவ்வித முனைப்புமே காட்டாத மக்களுக்கு மத்தியில் வடக்கின் தேர்தலை அத்தியாவசியமானதாகவும், வென்றே தீர வேண்டுமெனவும் கருதும் அரசுக்கும், தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெறப் போகும் இத் தேர்தலின் முடிவு எவ்வாறு அமையப் போகிறதெனக் கூற இயலாதுள்ளது.
1997 இன் பிறகு இலங்கையின் தேர்தல் வரலாறு குறித்தும், வடக்கில் நிலைகொண்டிருக்கும் இராணுவ முகாம்களின் அளவு குறித்தும் சிந்தித்துப் பார்க்கும் ஒருவருக்கு, இத் தேர்தலானது சுதந்திரமானதும், சாதாரணமானதும் ஒன்றாக இருக்கக் கூடும் என ஒருபோதும் எண்ண முடியாது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.