நாம் தமிழர்! யார் தமிழர்! - நந்திவர்மப்பல்லவன் -
தமிழ்நாட்டை எடுத்துக்கொள்வோம், இலங்கையை எடுத்துக்கொள்வோம். ஒரு கேள்வி எழுகிறது. யார் தமிழர்? தலைமுறை தலைமுறைகளாகத் தமிழ் பேசும் மக்கள் தமிழர்களா? அல்லது அவர்களது மரபணுக்களின் அடிப்படையில் அவர்களைத் தமிழர்கள் ,தமிழர்கள் அல்லாதவர்கள் என்று பிரித்துப் பார்ப்பதா? அப்படி யாரையுமே வேறு இனக்கலப்பல்லாத இனமொன்றைச் சேர்ந்தவராகக்ப் பிரிக்க முடியாது. மரபணுவை வைத்து ஒருவர் எத்தனை இனங்களின் கலப்பு என்பதை இன்று இலகுவாகக் கண்டு பிடிக்கலாம்.
நாம் தமிழர் என்று கருதுவது தலைமுறை, தலைமுறையாகத் தமிழ் பேசி, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுடன் ஒன்றிணைந்து போனவர்களைத்தாம். தமிழகத்தை எடுத்துக்கொண்டால் காலத்துக்குக் காலம் தமிழகத்து மன்னர்கள் பிற பகுதிகளுக்குப் படையெடுத்துச் சென்றார்கள். பிற தேசத்து மன்னர்கள் தமிழக்த்துக்குப் படையெடுத்து வந்தார்கள். இலட்சக்கணக்கான படை வீரர்கள் இடம் பெயர்து வந்தார்கள். வேலை வாய்ப்புக்காக, வர்த்தகத்துக்காக மக்கள் இடம் பெயர்ந்தார்கள். இவ்விதம் வந்தவர்களின் சந்ததியினர்தான் இன்றுள்ள தமிழகத்தமிழர்கள்.