- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
அட்டுவம்பட்டி - பிளம்ஸ் மரம்
பள்ளங்கி போகும் வழியில், சப்த கன்னிமாரை பார்த்து, அவர்கள் பொருத்து கேட்டுவிட்டு போகும் நோக்கில், அந்த ஸ்டாப்பில் இறங்கி, அருகில் இருந்த தேனீர் கடைக்குள் நுழைந்தேன். காப்பியை குடித்து முடித்து, மாதிடம் கேட்டேன், கன்னிமார் கோயில் பொருத்து. ஏதேதோ தரவுகளை தர முயற்சித்துவிட்டு, “ஆனா இன்னும் தெரிஞ்சிக்கிறதுன்னா ரெண்டு வீடு தள்ளி இருக்கிற பச்ச வீட்டுல கேளுங்க… அவுக அந்த பூசாரிக்கு சொந்தகாரவுக – சம்பந்தம் இருக்கு…” என்று தணிந்த குரலில் ரகசியமாய் சொன்னாள்… அவள்.
“ஓ கன்னிமாரூ கோயிலா… குமாருன்னு ஒரு பூசாரி இருக்காரு… வில்லேஜ்ஜில கேளுங்க… சொல்லுவாங்க…” என்று அங்கு கூறப்பட்டது.
அட்டுவம்பட்டி என்பது (அப்போது) – அதாவது ஒரு ஏழு எட்டு வருடங்களுக்கு முன்பு – ஒரு முப்பது நாற்பது வீடுகளை ஒன்று சேர்த்து ஒருபிடி பிடித்து வைத்தது போன்ற ஒரு தொகுதி. ஒடுங்கிய, அந்த பஸ் செல்லும் பாதையின் இரு மருங்கிலும், நெருக்கி நெருக்கி நிற்கும் வீடுகள். அனைத்துமே சிமென்டால் கட்டப்பட்டவை. அதாவது குடிசைகள் இல்லை – இதைத்தான் ஒரு விலேஜ் – கிராமம் என்று இப்பகுதியில் வர்ணிக்கின்றார்கள். இங்கு மாடுகளையும் காணமுடிவதில்லை… இரண்டொன்று தோட்டங்களில் தலையை குனிந்து அப்புறம் இப்புறம் பார்க்காமல் மேய்ந்து கொண்டிருப்பதுடன் சரி…
இது ஒரு மலைப்பகுதி… இரு புறமும் மலைத்தொடர்களின் சரிவுகள்… அச்சரிவுகள் சந்திக்ககூடிய பள்ளத்தாக்குகள் அல்லது படுக்கைகள் – இவற்றில்தான் இந்த குடியிருப்புகள் – வாகன பாதை அனைத்துமே அமைந்து கிடந்தன. பாதையை ஒட்டி இருந்த அந்த குட்டையான சிமென்ட் கட்டடத்திற்குள் இரண்டொரு நடுத்தர வயது பெண்கள் அமர்ந்து சாவதானமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கருகே ஒருத்தி சிறு சாப்பாட்டு கூடையுடன் நின்றவாறு பேசிக்கொண்டிருந்தாள். வினவினேன்.
“குமாரு… அவரு கன்னிமாரு கோயில் பக்கத்துல இருக்கிற தோட்டத்துல வேல செஞ்சிட்டு இருக்காருங்க… நீங்க ஏன் அவருக்கிட்ட போறீங்க… இன்னைக்கு பூச இருக்காதுங்களே… இப்ப ஒடனே உங்களுக்காக பூச வைக்க அவருக்கு டைம் இருக்காதுங்களே… அப்ப சரி… ஆமா… இவ்வளவு தூரம் வந்துருக்கீங்க… சூடத்த பத்தி தீபம் காட்டிட்டு விபூதி போட்ருவாரு… இப்படியே போங்க… போயி அதுல திரும்பி… அந்தா ஏறுதே அந்த பாதையில ஏறி போங்க… கொஞ்ச தூரம்தான்…” என்றாள் அந்த கூடை தூக்கிய மாது, மலை சரிவில் ஏறிய ஓர் ஒடுங்கலான பாதையை சுட்டி காட்டியவாறே.
தொடர்ந்து பையில் கையை விட்டு “இருங்க கேட்ருவோம்…” என்று ஒரு சிறிய ஃபோனை எடுத்து காதில் வைத்து, பிறகு “ஓஃப் பண்ணி வச்சிருக்காங்க” என்றாள், என்னிடம்.
நான் நடக்க தொடங்கினேன்.
வளைவில் செங்குத்தாய் ஏறிய மண்பாதையில் ஏறத்தொடங்கி, பின் இரண்டாக பிரிந்த சந்தியில் நின்று மூச்சு வாங்கினேன்.
யாரிடம் கேட்பது என்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு, கீழே பார்த்தால் ஃபோன் செய்து வழிகாட்டிய மாது, நான் ஏறி வந்த பாதையிலேயே ஏறி வந்துக்கொண்டிருந்தாள் கூடையுடன்.
கூப்பாடு போட்டு கேட்காமல், சைகையிலேயே கேட்டேன் அவளிடம் – எந்த பாதை என… இடது பக்கமாய் போகும்படி அவளும் பதிலுக்கு சைகை காட்டினாள்.
அவளும் மேலே ஏறுகின்றாளா என்று சைகையிலேயே கேட்டேன்… ஆமாம் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள். அட, அதை அங்கேயே சொல்லியிருக்கலாமே என்று நினைத்துக்கொண்டேன்.
பின் அருகே வந்தவுடன் கேட்டேன். நீங்களும் அந்த பக்கமா போறீங்க என்று…
“ஆமா” என்று அவள் சொன்னாள் “எங்க தோட்டத்துலதான் குமாரு வேல செய்யிறாரு…”
அப்பாதை மலையுச்சியை நோக்கி சரிவில் ஏறியது. அவள் அநாயாசமாக நடந்தாள் கூடையுடன்… நானோ மூச்சு வாங்கிக்கொண்டு நடந்தேன். இருந்தும் மூச்சு வாங்கி கொண்டே பேச்சுக் கொடுக்க தொடங்கினேன்.
“கன்னிமார் வரலாறு எல்லாம் எனக்கு தெரியாதுங்க… அம்மா சொல்லுவாங்க ஏழு பேருன்னு… கோயில் எங்கவுட்டுத்தான்… அம்பது வருசத்துக்கு முன்ன அப்பா கொண்டுவந்து வச்சது… தண்ணி இல்லாத பிரதேசம்… இங்கன மட்டும்தான் இந்த ஊத்து… அப்பத்தான் அப்பா இந்த தோட்டத்த தொடங்கி இருக்காரு… கன்னிமார் ஏழு பேரும் ஓடையில வெளையாட விருப்பம் கொண்டவுங்க… அவுங்க அப்பா கனவுல வந்து அப்படி சொல்லியிருக்காங்க… அப்புறம் அப்பா போயித்தான் இவுங்க செலைக எல்லாம் கொண்ணாந்து இத தொடங்கியிருக்காங்க…”
“சக்தி உள்ளதுன்னு சொல்றாங்க… ஒழுங்கா பூச செய்யாட்டி கனவுல வருவாங்க… சில சமயம் இருட்டுல ஆளுங்க போகையில கல்ல உருட்டி வெளாடுவாங்க… வெளையாட்டுதானுங்க அவுங்களுக்கு…”
மலைசரிவில் பிளம்ஸ் மரங்கள் வரிசை வரிசையாக வளர்ந்திருந்தன. இரண்டொன்றில் இளசிவப்பும், செம்மஞ்சளும் கலந்த பருத்த நெல்லி அளவிலான காய்கள் இரண்டொன்று.
“கோட மாங்கா மாதிரின்னு வச்சிக்கங்களே…”
“புடுங்கலாம்… இருங்க… ஒங்களுக்கு முடியாது… நான் புடுங்கி தர்றேன்…”
கூடையை அந்த ஒற்றையடி பாதையில் வைத்துவிட்டு சரிவில் ஏறி வாதை முரட்டுத்தனமாய் பிடித்து இழுத்து பாதையை நோக்கி வளைத்தாள். என்னால் என்றால் இப்படி அநாயாசமாக வளைத்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. உழைப்பால் வந்த வலிமை நிறைந்த கைகள். வாது வளைந்து சர சரவென கீழே பாதைக்கே தலைக்கருகே வந்தது. நானும் ரோட்டில் இருந்தவாறே வாதின் நுனியை எட்டிப்பற்றி பிடித்துக்கொண்டு “பிடுங்கவா” என்றேன். “புடுங்குங்க புடுங்குங்க” என்றாள் அவள், வாதை விட்டு விடாமல்.
கூடுதலாக சிவந்திருந்த ஒன்றை பார்த்து பறித்து கொண்டேன். இன்னும் ஒன்று இருந்தது. “உங்களுக்கும் ஒன்ன பறிக்கவா” என்றேன்.
“வேண்டாம்… வேண்டாம்… எனக்கு வேணாம்… அதையும் ஒங்களுக்கே புடுங்கிக்கிங்க…” சென்று சத்தம் வைத்தாள் அவள்.
விட்டவுடன் வாது விருட்டென மேல் கிளம்பி ஒரு ஆட்டம் போட்டு, ஆடி பின் நின்றது.
ருசி அருமையாக இருந்தது. சற்றே இனிப்பு. பின் சற்றே கசப்பு. கிட்டத்தட்ட இலங்கையில் உள்ள உகுரெஸ்ஸ என்ற பழத்தை நினைவுபடுத்தியது. ஆனால் இங்கிருந்த புளிப்பு சுவை வித்தியாசப்பட்டது. ஆனால் உள்ளிருந்த செம்மஞ்சள் நிறம் அவ்வாறு.
“இது அன்னை தெரேசா கல்லூரிங்க…” சரிவில் இருந்த கட்டட தொகுதியை காட்டினாள். இதெல்லாம் அன்னை தெரேசாவுக்கு சொந்தமான நெலங்க… ஒரு அம்பது ஏக்கர் இருக்குங்க… அது முடிஞ்சொடன நம்ம நெலம் தொடங்கும்…”
இப்போது பாதை மேலும் குறுகலாகி, தண்ணையான போக்கில் சென்றது. நான் நடந்துக்கொண்டே மூச்சு வாங்காமல் பேச வசதியாகியது.
முன்பு, ஒரு புறமாய் மாத்திரம் நின்றிருந்த பிளம்ஸ் மரங்கள் இப்போது, இரு மருங்கிலும்… பீச்சும் ஆங்காங்கே பாதையோரமாகவும் சரிவுகளிலும் பயிரிடப்பட்டு இருந்தது.
அவள் எனக்கு பிளம்ஸ்களினதும், பீச்சுகளினதும் வகைகளை எடுத்துக்கூறி வந்தாள்.
“மாங்காய் பீச்சுதான் ருசி… மாங்கா மாதிரி இருக்கும்… ஆனா அது, அவுங்க அவுங்க பாவனைக்கு அப்படின்னு ஒன்னு ரெண்டு மரம் மட்டும்தான் நிக்கும்… ஏன்னா மார்க்கெட்டுக்கு சரி வராது… அதுட்டு தோலு ரொம்ப மெல்லிசு… வச்சிருக்க ஏலாது… அதனால மார்க்கெட்ல வாங்க மாட்டாங்க. அது தேன் பீச்சு…” – தேன் பீச்சு மரங்களில் வயலட் பூக்கள் நிறைந்திருந்தன.
“இது பட்டர் பீன்ஸ்ங்க… நல்லா வெள போகும்… இந்த சீசன்ல மட்டும் மரங்களுக்கு நடுவ – நாங்க பட்டர் பீன்ஸ் போட்ருவோம்…”
பிறகு, “குமாரு… குமாரு… ஒங்கள தேடி ஆளு வந்துருக்காங்க…” என்று சப்தம் வைத்தாள்.
“இந்தாங்க தண்ணி குடிங்க… பச்சதண்ணி குடிப்பிங்களா… சுடுதண்ணியா… ம்… பிளெய்ன்ஸ் இருந்து வர்றவங்க எல்லாம் பச்சதண்ணிதான் கேப்பாங்க… இங்க, நாங்க, சுடுதண்ணிதா கேப்போம்… நீங்க திருச்சியா… எங்க.”
குமாரு, பூசாரிக்கே உரிய மிகப்பெரிய மீசையுடன் தலைப்பாகையுடன் வாட்டசாட்டமாக தோன்றினார்.
வலது கையை தலையை நோக்கி கொண்டு சென்று தலைப்பாகையை கழற்றி எடுத்துவிட்டு வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் அவர் முன்னால் நடக்க, அவருக்கு பின்னால், மலையின் வளைவுக்கு பின்னால் மறைந்திருந்த கோயிலை நோக்கி, ஒற்றையடிப்பாதையில் நடக்க தொடங்கினேன்.
வளைவில் திரும்பியவுடன், பாதை மாதின் தோட்டத்தில் இருந்து முற்றாக மறைந்து மேலே இன்னும் ஏறத் தொடங்கியது.
ஐம்பது அறுபதடியில் மலைசரிவில் ஓர் திண்ணையுடன் ஓர் பிரமாண்டமான ஆலமரத்தடியின் கீழ் கருப்பண்ணனுடன் கோயில் இருந்தது. ஒரு விநாயகர், ஏழு கன்னிமார், கருப்பண்ணன். கருப்பண்ணனுக்கு நடுநாயகமாக, ஓர் அறைத் தரப்பட்டிருந்தது. மற்றையவை வெளியில்.
“மொதல்ல நீங்க விநாயகர வணங்கனும். பெறகு கன்னிமார், பெறகு கருப்பண்ணன்…”
பத்திபக்கெட் ஒன்றை உடைத்து குச்சிகளை இழுத்தெடுத்து பற்ற வைத்துவிட்டு, சூட பெக்கட்டை தேடினார்.
“ஒரு முப்பத்தொரு ஆடு, நூறு கோழி… விசேசம்…”
“சக்தி வாய்ந்ததுங்க…”
“இவரு…கொல்லி மலையில இருந்து வந்தவரு…பெரியவரு கனவுல வந்து, அடே நான் கொல்லி மலையில ஒரு கால், அட்டுவம்பட்டியில இன்னொரு கால வைக்கப்போறேன்டான்னு சொல்லியிருக்காரு… பெறகுதான் இவரு இங்க வந்தது…”
“கருப்பண்ணங்கறது கேரளா பகுதிங்க… பில்லி சூனியம் – இதுக்கு எதிரா வந்தவருத்தானே இவரு…”
“மூனு புள்ளைங்க… ரெண்டு பையனுங்க ஒரு பொண்ணு… பொண்ணு நல்லா படிச்சதுங்க… மொதல்ல கல்லூரில எடம் இல்லனுட்டாங்க… ஐபிய போயி பாத்தேன்… நம்ப இனம்… நம்ப இனம்னோன்ன ஒரு லெட்டர் கொடுத்தாரு… லெட்டர பாத்தோடன சேத்துட்டாங்க… இவெ படிப்ப பாத்துட்டு, இவ கலெக்கடர் கூட ஆகலாம்னு சொன்னாக…”
“ஒரு பையன் படிக்கல… நாலாம் வகுப்பு மட்டும் தான்… இப்ப ட்ரைவர் ஆகனுங்கிறான்….எங்க ஆகிறது… எட்டாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காரான்னு கேக்குறாங்க… படிச்சிருக்கனுமே…”
அவனுக்கு ரெண்டு பசங்க…”
“நெலம் இல்லைங்க… நெலம் வாங்குறதுன்னா அரசாங்கம் கடன் கொடுத்தா தாங்க… முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க வந்தது… தஞ்சாவ10ர்ல இருந்து… நெல தகராறுதாங்க. அண்ணே தம்பி… சரி நீயே வச்சுக்கன்னு சொல்லி இங்க வந்துட்டேன்…”
“கன்னிமாரு பத்தி அவ்வளவா தெரியாதுங்க… ஆனா கருப்பண்ணன் வந்த பெறகு சக்தி கூடிருச்சிங்க… திருச்சியில இருந்து ஒரு டாக்டர் வந்தாரு… புள்ளைங்க இல்ல…பெறகு புள்ள கெடச்சிருச்சி… இப்படி எத்தனையோ… கல்யாணம் ஆகாதவுங்க… நெலம் கெடைக்காதவுங்க”
நான் இருக்கிற வீட்டு சொந்தக்காரரு… அவரு கெடா வெட்றதா நேந்துக்கிட்டாரு… அவருக்கு நெலம் கெடைச்சிருச்சி… இத பாருங்க – இதுதான் ஒட்டு வைக்கிறது… பீச் மரத்துல பிளம்ஸ் ஏத்துறது… நல்லா வருங்க… கீழ இன்னும் நெறைய இருக்கு…”
தோட்டத்துக்கு திரும்பிய போது மாதிடம் இது குறித்து விசாரித்தேன்.
“பிளம்ஸ் வெல கூடத்தானேங்க… அதான் எல்லாத்தையும் பிளம்ஸா மாத்திக்கிட்டு இருக்கோம்…”
பிளம்ஸ்ஸ நட்டு வளத்தெடுக்க முடியாது… ஒட்டு வச்சாத்தான் உண்டு.
“ம்… மத்தது இந்த சரிவுல இருக்கிற பிளம்ஸ் மாதிரி வேறெங்கயும் கெடைக்காதுங்க… அவ்வளவு ருசி…”
“ஏன்னா… பாருங்க… இந்த தோட்டத்துக்கு மேல உயர்ந்த மல… அப்படின்னா கால நேரத்துல வெயில் விழாது – பனியா இருக்கும்… நிழல்ல வளரும்… சாயங்காலம் வேற மாதிரி… அதான் இந்த பழங்க இந்த மாதிரி ருசி வர காரணங்க…”
“உதாரணமா…? சரி, எடுத்தாப்புல இருக்கிற மலையில, காலையில வெயில் நல்லா படும். அங்கேயும் எங்களுக்கு தோட்டம் இருக்கு… ஆனா இந்த அளவு ருசி கெடையாது… ஒரே காய், ஒரே வக, ஒரே பராமரிப்பு – ஆனா ருசி மட்டும் வேற வேற…”
“தேத்தனீ சாப்ட்றீங்களா…? போடுவோம்… ஏ செல்வமணீ… செல்வம்… இங்க வா எல்லாத்துக்குமா போடு…”
“ஒரு பத்து பேரு வேல செய்யிறாங்க… ஆனா முந்தி மாதிரி இல்லைங்க… விரும்புனா வருவாங்க… இல்லாட்டி வரமாட்டாங்க..”
“எல்லாம் படிக்க தொடங்கிட்டாங்க… படிச்சா யாரு இந்த தொழிலுக்கு வரப்போறாங்க… முந்திமாதிரி இல்லைங்க…எல்லா வெலையும் கூடிருச்சி… ஒரம், மருந்து, எல்லாமே…அந்த அளவுக்கு காய்கவுட்டு வெல கூடலிங்க… வரப்போற காலங்கள்ல என்ன நடக்குமோ தெரியாது…”
“ஒரு ஏக்கர்ல எழுநூற்றி ஐம்பது பிளம்ஸ் இருக்குங்க… எங்ககிட்ட ஒரு ரெண்டாயிரத்தைந்நூறு மரம் இருக்குங்க…”
“ஒரு தோட்டம் மட்டும்தான் நமக்கு… மத்த ரெண்டு குத்தகைக்கு செய்றோம்”
“கன்னிமாரா… இன்னும் தெரியனும்னா… கீழ ஒரு பெரியவரு இருப்பாரு… அவருகிட்ட கேட்டா சொல்லுவாரு… பேரு பெரியண்ணன். ஆனா நான் சொன்னேனு சொல்லிடாதிங்க…. பெரியப்பா தாங்க… அவருக்கும் நமக்கும் சரி வராது… அவருத்தான் இந்த கருப்பண்ணன கொண்டு வந்தது… கன்னிமாரும் கருப்பண்ணனும் வித்தியாசமானவுங்க… கன்னிமாருக்கு சுத்தம் இருக்கனும்… கவுச்சி ஆகாது… அவுங்க கனவுல வந்து ரெண்டொரு பேருக்கு சொல்லியும் இருக்காங்க… இப்பிடி சுத்தமா இல்லனு… அப்பாவும் இல்ல… அதுல கொஞ்சம் மனஸ்தாபம்… நான் சொன்னேன்னு சொல்லாதிங்க…”
களைப்புடன் வந்து பஸ்ஸ{க்காக காக்க தொடங்கினேன். பெரியண்ணனையும் காணமுடியவில்லை… இங்கன பஸ் நிக்குங்க… அது வரைக்கும் அந்த சிமென்ட் கட்டடத்துல ஒக்காரலாம்...
சிமென்ட் கட்டடத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டேன். அதனை ஒட்டினாற் போல் இருந்தது, நான் காப்பி பருகிய மாதின் கடை. அப்படியே இங்கிருந்தவாறே எட்டித் தொட்டுவிடலாம்.
அந்த மாது எங்கிருந்தோ ஓர் சிறு தட்டில் வடையையும் மறுகையில் ஓர் சிறு எவர் சில்வர் வாளியுடனும் வந்தாள். ஒருவேளை வடையை வீட்டில் போட்டு கொண்டு வருகிறாள் போல.
அவளது முகத்தில் மலர்ச்சி என்று எதுவும் மருந்துக்கு தானும் இல்லை. ஒருவித வாட்டமும் “கீ நாட்டு” கொடுமையான வெயிலால் அல்லது கொடுமைகளால் நிரந்தரமாக பாதிக்கப்பபட்டவள் போல் காய்ந்த முகத்துடனும் இருந்தாள். ஒடுங்கிய அந்த கடையினுள் நான்கைந்து பேர் சுற்றி வர போடப்பட்டிருந்த கட்டையான குறுகிய பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர், இவளது வருகையை எதிர்பார்த்து. “ஒங்களுக்கு வடையா… ஒங்களுக்கு தேத்தனி…” ஒவ்வொருவராய் விசாரித்தாள் அவள். ஒரு இருபத்தைந்து வயது இளைஞன், ஆங்காங்கு வளர்ந்திருந்த தாடியுடனான முகத்துடன். அவனும் ஒரு வாட்டமாய் வந்து சிமென்ட் கட்டிடத்தில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.
ஒவ்வொருத்தவர்க்கும் தேனீர் என்று அவரவர்க்கு நீட்டியவள் இவனிடம் திரும்பி, எட்டி, “நீ வட சாப்ட்றியா” என்றாள்.
இவன் ஒன்றும் பேசாமல் “இல்லை” என்பதை போல் நிலத்தை பார்த்தவாறு, தலையை ஆட்டி மறுத்தான்.
“அப்ப ட்டீ..”
எரிந்து விழுந்தான்.
“டீயும் வேணாம்… வடையும் வேணாம்…”
அவனது வார்த்தையின் பாவத்தில் போதியளவு எரிச்சலும் கோபமும் கலந்து கொப்புளித்து சுள்ளென வந்து வெளியே விழுந்தது.
“என்னா நாயி மேல சுடுத்தண்ணிய கொட்டுன மாறி பாயுற…” இவன் வெறுமனே பேசாது மீண்டும் தலையை குனிந்தவாறே அமர்ந்திருந்தான். அவள் கடையிலிருந்து எட்டி ஒரு வடையை நீட்டினாள்.
“இந்தா சாப்பிடு…”
இப்பொழுது டீ அருந்த வந்த நான்கைந்து பேரும் மாதிடம் பணத்தை செலுத்தி அகன்றனர்.
இவன் ஒன்றுமே பேசாது மௌனமாய் வடையை கையில் பிடித்தவாறே திருப்பி திருப்பி பார்த்துக்கொண்டு மீண்டும் சிந்தனையுடன் இருந்தான். பின் சிறிது சிறிதாய் வடையை பிய்த்து வாயில் போட்டு மெல்ல தொடங்கினான். வேண்டா வெறுப்பில்.
“இந்தா, சாப்ட்டு, குடி…” – அவனுக்கு எளிதாய் எட்டுமாப்போல் ஒரு தம்ளரை இவள் தள்ளிவிட்டாள்.
இவன் தரையை பார்த்தவாறே மெது மெதுவாய் மென்றுக்கொண்டிருந்தான்.
“என்னா பிரச்சினையா…?”
இவன் பேசாது இருந்தான்.
“பேசு… என்னா ஏசிப்புட்டாங்களா… என்னா விஷயம்… சொல்லு” என்றாள் அவள் ஒருவித வேதனை கசிய.
இவன் தணிந்த குரலில் முணுமுணுத்தான், “நா என்னா வேண்டாத ஆள்தானே – என்ன பத்தி என்னா அக்கற தேவ இருக்கு… அவுங்களுக்கு தேவையானது அவுங்க மருமகன்… மகன்… அவுங்க குடும்பம்… நான் இவுக மகள கட்டுனேன்னு அவளுக்கும் இல்ல… இவுகளுக்கும் இல்ல…”
பஸ் வரும் சத்தம் கேட்டது. “சார்… ஒங்க பஸ் வருதுங்க” – இளைஞன் என்னிடம் கூறினான்.
நான் அவசர அவசரமாக எழுந்து பாதையில் இப்புறமாய் ஓடி வந்து நின்றேன், பஸ்ஸ{க்காக.
நின்று கடையை நோக்கினேன்.
அவள் கல்லாய் சமைந்து எதிர்த்தாற் போலிருந்த பலகையை வெறித்து நோக்கியப்படி இருந்தாள்.
அவள் முகத்தில் ஒரு சிறு அசைவும் இல்லை. உயிரற்ற வெறும் கல்லை போல சமைந்து கிடந்தது அது – இறுகி, இறுக்கத்துடன் வாட்டமுற்று. அவள் பார்வை, எதிர்த்தாற் போலிருந்த அந்த பலகையிலேயே குத்திட்டு நின்றது, அசையாமல்.
அவள் சிந்தனை எங்கோ, எதிலோ மாட்டி எடுக்கமாட்டாமல் பின்னோக்கி சென்று கொண்டிருப்பது புரிந்தது.
கிட்டத்தட்ட ஓர் இறந்த வாழ்க்கை பொறுத்து அல்லது பிழைப்பட்ட ஒரு வாழ்க்கை பொறுத்து அல்லது மீட்கவே முடியாமல் வரண்டு போன ஒரு வாழ்வின் நிராகரிப்பு பொறுத்து – அல்லது அந்த அனைத்துமே ஒன்று சேர்ந்து சோர்வுற பாதித்தது பொறுத்து… நான் பஸ்ஸில் தொற்றி ஏறினேன். பஸ் புறப்பட்டது.
[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.