(05-10-2013 அன்று ஸ்காபரோ ஸிவிக் சென்டர் மண்டபத்தில் திரு. க. நவம் அவர்களின் தலைமையில் நிகழ்ந்த கவிஞரின் முதுவேனில் பதிக அறிமுகவிழாவில் என்னால் நிகழ்த்தப்பட்ட உரையின் கட்டுரை வடிவம் இது. கவிஞர் நீண்டநாள்கள் வாழ்ந்து எமது நெஞ்சை நிறைவிப்பார் என்பதான ஆர்வத்துடன் மேற்படி உரை நிகழ்த்தப்பட்டது. அதனைஇன்று அவர் நம்மைப் பிரிந்துவிட்ட சோகச் சூழலில் அவரது நினைவைப் பதிவுசெய்யும் நோக்கில் வாசகர்கள் பார்வைக்கு முன்வைத்து எனது இதயபூர்வமான அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
தோற்றுவாய்
கனகசிங்கம் கருணாகரன் என்ற இயற்பெயர் தாங்கியவரான திருமாவளவன் அவர்கள் தமிழ்க் கலை இலக்கியத் துறைகளில் கடந்த ஏறத்தாழ இருபதாண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருபவர். பனிவயல் உழவு (2000)அஃதே இரவு அஃதே பகல் (2003)இருள்- யாழி (2008) மற்றும் முதுவேனில் பதிகம் (2013) ஆகிய தொகுதிகள் ஊடாக தமது கவித்துவ ஆளுமையை நமது கவனத்துக்கு இட்டுவந்துள்ள இவர், சேரன், சி.சிவசேகரம், வெங்கட்சாமிநாதன் , மோகனரங்கன், இராஜமார்த்தாண்டன் மற்றும் கருணாகரன் ஆகிய சமகால இலக்கிய வாதிகளால் தரமான ஒரு கவிஞராக அடையாளம் காட்டப்பட்டவருமாவார். கனடா இலக்கியத் தோட்டத்தின் கவிதைக்கான விருதை 2010இல் இருள் யாழி தொகுதிக்காக இவர் பெற்றுக்கொண்டவர். ஒரு படைப்பாளியாக மட்டுமன்றி இதழியலாளராகவும் நாடகக்கலைஞராகவும்கூடத் திகழ்பவரான திருமாவளவன் அவர்கள் (1995—1997காலப்பகுதியில்) கனடா எழுத்தாளர் இணையத்துக்குத் தலைமைதாங்கி அதனை வழிநடத்தியவருமாவார். இவ்வாறு கடந்த ஏறத்தாழ இருபதாண்டுகளாக கலை இலக்கியத் துறைகளில் செயற்பட்டுநிற்கும் திருமாவளவனின் ‘கவித்துவப் ஆளுமை’ தொடர்பான எனது அவதானிப்பு இங்கே முன்வைக்கப்படவுள்ளது. அவரது அண்மை வெளியீடாக இங்கு அறிமுகமாகும் ‘முதுவேனில் பதிகம்’ (2013) என்ற தொகுதியை முன்னிறுத்தி அமையும் இவ்வுரையானதுஅவரது ஒட்டுமொத்த கவித்துவப் பயணத்தையும் கருத்துட்கொண்டதாகும் .
1. கவிதையின் இயல்பும் திருமாவளவன் அதிற் கொண்டிருந்த ஈடுபாடும் தொடர்பாக…
கவிதை என்பது ஒரு மொழியின் உச்சநிலை வெளிப்பாடாகும். உரைநடையில் உணர்த்த முடியாததை உணர்த்தும் மனஉந்துதலின் விளைபொருளே கவிதையாகும். உரைநடை பொருளை முன்னிறுத்துவது. கவிதை உணர்ச்சியை முன்னிறுத்துவது. மன ஆழத்தில் சொற்களுக்கு வசப்படாத நிலையில் உள்ள உணர்வுகளை இயன்றவரை சொற்களில் வசப்பட வைப்பதான முயற்சியே கவிதையாகிறது. இத்தொடர்பில், கவிதையின் தனித்தன்மை பற்றிய இன்னொரு அம்சமும் நமது கவனத்துக்கரியதாகும். கவிதை என்பது முற்றிலும் தனிமனிதப்பாங்கானது என்பதே அந்த அம்சமாகும். கவிதைக்குரிய இந்த அடிப்படைகளை உணர்ந்து தம்மை வெளிப்படுத்தி வரும் பல படைப்பாளிகளள் ஒருவராகவே திருமாவளவன் நமது பார்வை வட்டத்துள் வருகிறார். ஒரு கவிஞனாகத் திகழவேண்டும் என்ற ஒரு தாகம் கொண்டஒருவராக அவர் திகழ்வதை இத்தொகுதிகளின் சில கவிதைகள் வெளிப்படையாகவே உணர்த்திநிற்கின்றன.இத்தொடர்பில் குறிப்பாக, முதுவேனில் பதிகம் தொகுதியிலமைந்த மறுத்தல்- (ஒன்று) என்ற 13வது கவிதை கவனத்துக்குரியது. “நீ கவிதை கேட்கிறாய் …எனத் தொடங்கும் இக்கவிதை அவரது கவிதை மீதான தாகத்தை உணர்த்துவது. அத்துடன் , அது (கவிதை) தனிமனித மனச்சான்றின் பிரதிபலிப்பே என்பதை அவர் உணர்ந்திருந்தமையையும் உணர்ததிவிடுகிறது.இதனை அக்கவிதையின்நிறைவுப்பகுதியிலமைந்தவையான ,
என் சொற்களையும்
குரலையும்
காலத்தின் கரங்களில் காவுகொடுத்ததன்
பிற்பாடு
எசமானனின் குரலில்பாட என்னால் முடியாது
வேண்டுமாயின்
சற்ற அழவிடு”
என்ற் அடிகள் தெளிவுற உணரலாம்.
இவ்வாறு கவிதைத் தாகங்கொண்டவராக இயங்கிவரும் திருமாவளவன் அவர்களை; சமகாலத் தமிழ்க் கவிஞர் வரிசையில் குறிப்பாக, புலம்பெயர் படைப்பாளிகள் என்ற அடையாளத்துக்குள் வருபவர் என்பதை நாமனைவரும் அறிவோம். எனவே அந்த அடையாளத்துக்குள் அவரை மையப்படுத்தி நோக்குவதே மதிப்பீட்டுநொக்கில் வசதியான ஒன்றாகும்.
2. புலம்பெயர் இலக்கியத்தின் பரிமாணங்களும் திருமாவளவன் தந்துநிற்கும் தரிசனங்களும்
தமிழின் புலம்பெயர் இலக்கியம் என்பது ஈழத்தமிழிலக்கியத்தின் ஒரு நீட்சி என்பதே இன்றுவரையான நிலையாகும். தமிழ் இலக்கியப் பொதுப் பரப்பிலே புலம்பெயர் இலக்கியத்துக்குத் ஒரு தனி அடையாளம் உளது. தமிழக எழுத்துகளையும் உள்ளடக்கிய தான தமிழ் இலக்கியப் பொதுப் பரப்பானது சமூக- பொருளியல் ஏற்றத்தாழ்வு நிலைகள், பாலின ஆதிக்கம் மற்றும் தலைமுறை மாற்ற வேறுபாடுகள்சார் உணர்வம்சங்கள் முதலியன தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை உள்ளடக்கியதாகத் திகழ்வது வெளிப்படை. இவற்றை யெல்வாம் உள்ளடக்கி இவற்றின் மேலாக, சில தனி அடையாளங்களையும் கொண்டதாகத் திகழ்வதே புலம்பெயர்; இலக்கியம் ஆகும். குறித்த ஒரு வாழ்நிலம் சார்ந்த மக்கள் தம் இருப்பிடங்களை இழந்தும் உற்றார் உறவினர்களைப் பிரிந்தும் புதிய புகலிடங்களில் புதிய வாழ்வாதாரங்களை நாடுவதான ‘நெஞ்சு நடுக்குறும் பெருவலி’யே ‘புலம்பெயர் இலக்கிய’த்தின் தனி அடையாளம் எனச் சுட்டலாம்.
வேரோடு பிடுங்கியெறியப்பட்ட நிலையில் முற்று முழுதான புதிய சூழலில்- புதிய நிலத்தில்- வேர்கொள்ள முயலும் பயிரொன்றின் வலிசுமந்த இதயத்துடிப்பின் பதிவு என்பதே புலம்பெயர்; இலக்கியம் என்பதற்கான பொது வரைவிலக்கணமாகக் கொள்வதே பொருந்தும். ஏறத்தாழ முப்பதாண்டுக்கால வரலாறுகொண்ட-1980களின் நடுப்பகுதியிலிருந்து தொடர்கின்றதான - இந்த இதயத்துடிப்புக்கு வரலாற்று நிலையிலான பல பரிமாணங்கள் உள.
போர்ச்சூழல்தந்த அதிர்வுகள் மற்றும் புலப்பெயர்வு சார்ந்த அலைவுகள்என்பனவாக வெளிப்பட்டவை, ஒருவகை.
அலைவுகளைத் தொடர்ந்து புகலிடங்களின் புதிய ‘தட்ப-வெப்ப’ நிலைகளுடனான சமூக-பண்பாட்டுச் சூழல்களில் வாழ்க்கை வசதிகளைத் தேடிக்கொள்வதிலும் அதேவேளை தமக்குரிய அடையாளங்களைப் பேணிக்கொள்வதிலும் எதிர்கொண்ட உடல் மற்றும் மன உளைச்சல்கள், இன்னொரு வகை.
புதியசூழல்களில் காலூன்றி நிலைத்தபின்னரும் அச் சூழல்களின் பண்பர்டுநிலைகளில் ஒன்றிப் போய்விட முடியாதுள்ள- அதாவது புதிய தேசத்தின் குடிமக்களாக உணர்வுபூர்வமாக ஒன்றிவிடமுடியாததான – மனத்தடை,மற்றொரு வகை. ‘நிலத்தால் பிரிந்தாலும் உணர்வால் பிரிவுபட முடியாதுள்ளதான நிலை’யே, இது. பழையநிலைக்கு மீளும் நோக்கும் இல்லை.(புலம்பெயர் தமிழரின் புதிய தலைமுறை அவ்வாறான மீட்சிக்கான வாய்ப்பை முதிய தலைமுறைக்கு வழங்கும் வாய்ப்பும் இல்லை). முதிய தலைமுறையால் புலம்பெயர் சூழல்கள்சார் அநுபவங்களோடு மனப்பூர்வமாக ஒன்றிவிடவும் முடிவதில்லை.
(இவ்வாறான முத்தள உணர்வுப் பரிமாணங்கள் சார்ந்தவை என்ற வகையில் மிகப் பெருந்தொகையான அக்கங்கள் எம்து பார்வைக்குக் கிடைத்துள்ளன. இவற்றுள் குறிப்பாகக் கவிதைகள் மற்றும் சிறுகதைகள்- ஆகியவற்றின் தொகையே அதிகமாகும்.)
மேற்படி வலிசுமந்த அநுபவபத்தளங்களுள் குறிப்பாக, மூன்றாவது தளநிலைசார் உணர்வுகளின் பலநிலைப் பரிமாணங்களையே திருமாவளவன் அவர்களின் கவிதைப்பரப்பின் மிகப் பெரும் பகுதி நமக்குக் காட்சிப்படுத்துகின்றது.\
அவர் கனடாவில் வாழ்கிறார்.ஆனால் புதிய தேசத்தின் குடிமக்களாக உணர்வுபூர்வமாக ஒன்றிவிடமுடியாததான மனத்தடைகொண்டவராக - அந்நியப்பட்டுநிற்பவராக வாழ்கிறார். அவ்வாழ்வை ஒரு இயந்திரப் பாங்கான இயக்கமாகவே அவர் தரிசிக்கிறார். (அவரால் புலம்பெயர்சூழலில் ஒன்றமுடியாமைக்கான முக்கியகாரணி இது) அதேவேளை பிரிந்துவந்த தாயக மண்ணின் போர்க்கால அவலங்கள் மற்றும் பண்;பாட்டு உணர்வுகள் சார்ந்த நினைவோட்டங்கள் அவரை வலிந்து இழுக்கின்றன. இந்த இழுப்புவிசைகளுக்கிடையிலே வாழும் கணத்தை நிறைவாக அநுபவித்துவிடல் என்ற எண்ணமும் அவரிடத்தில் அலையடிக்கிறது. இவ்வகையில் அவர்இயற்கையில் ஒன்றி அமைதிகாணவும் விழைகின்றார். மேலும் வாழ்வியல் மாற்றங்களை உணர்வு பூர்வமாக ஒப்புக்கொள்ளவும் அவர் முற்படுகிறார். இடையிடையே கனடியத் தமிழரின் சமூகவெளியிற் புலப்படும் முரண்பாட்டம்சங்கள் பற்றிய தமது விமர்சனங்களையும் அவர் பதிவுசெய்கிறார். இவற்றுடன் அவ்வப்போது எதிர்காலத் தலைமுறை பற்றிய அவரது நம்பிக்கை ஒளியும் சில கவிதைகளில் பளிச்சிடுகிறது. இவைதவிர பாலுறவுசார் இன்ப நாட்டம்,காதல் மற்றும் அறவுணர்வு முதலியன சார்ந்த மானுடத்தின் பொதுவான மன அசைவுகளையும் கூட இவரது கவிதைப்பரப்பில் தரிசிக்க முடிகின்றது
பனிவயல் உழவு முதல் முதுவேனில் பதிகம் வரையான கவிதைப்பயணத்திலே திருமாவளவன் அவர்கள் நமக்குத் தரும் தரிசனங்களின் வகைமைகளை இவ்வாறுதான் எம்மால் தொகுத்துக்கொள்ள முடிகின்றது. இவ்வாறான தரிசனங்களுள் அமைந்த சில உணர்வம்சங்கள் தொடர்பான சில விளக்கங்களை முன்வைப்பது அவசியமாகிறது.
2.1. கனடிய வாழ்வில் ஒன்றிவிடமுடியாத மனத்தடை
கனடிய வாழ்வில் ஒன்றிவிட முடியாது அவர் தவிப்பதையம் அவ்வாழ்வை ஒரு இயந்திரப் பாங்கான இயக்கமாக அவர் தரிசிப்பதையும் பலகவிதைகள் புலப்படுத்திநிற்கின்றன. பனிவயல் உழவு தொகுதியிலமைந்ததான இனி இன்னொரு தேசியன் (பக் 117-119) என்ற கவிதை இவ்வகையில் முக்கியமான ஒன்றாகும். கனடியக் குடிமகனாக உறுதியுரை எடுத்த நிகழ்வை நினைவில் மீட்கும் இக்கவிதை அக்குடியுரிமை நிகழ்வை ஒரு அடிமை வாழ்வுநிலைக்கான சடங்காகத் தரிசிப்பது. பாரதக்கதையிலே சூதாட்டத்தில் உடைமைகளனைத்தையும் இழந்து வனம்புகுந்த தருமனாக அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். புதிய சூழலில் தான்பெற்ற குடியுரிமையை தன்தலைமீது இறுக்கப்பட்ட ஒரு ‘முள்முடி’யாக அவர் உணர்கிறார்.இக்கவிதையில்,
“எனக்காக
எனக்குப்பின் எழுகின்ற
ஏழேழு தலைமுறைக்காக
என்தலையில்
முள்முடி இறுக்கப்படுகின்றது”
எனவரும் அடிகள் ‘தான்விரும்பாமலே தம்மீது திணிக்கப்பட்ட ஒரு நிலையாக’வே அப்புதியதேசியத்தை அவர் உணர்ந்தமையை உணர்த்துவன. மேலும் இந்நிலைமையை ஒரு அடிமைநிலையாகவே அவர் கருதிநின்றமையையும் இக்கவிதை சுட்டியமைகிறது
“முந்நூறாண்டுகள்
உழுதோம்
எங்கள் நிலத்தை அவர்க்கு.
இனியும்
உழுவோம்
அவர்கள் நிலத்தை அவர்க்கே.
எனவரும் அடிகள் இதற்குச்சான்று. இங்கே அவர்கள் என்பது ஈழத்தை அடக்கியாண்ட ஐரோப்பிய சமூகத்தினரைக் குறிப்பதாகவே தெரிகிறது. இதற்கு மேலதிக விளக்கம் தேவை என நான் கருதவில்லை.
திருமாவளவன் புலப்படுத்திநிற்கும் இவ்வாறான ‘ஒன்றிவிட முடியாத உணர்வுநிலை’யானது புகலிடச் சூழல்களில் புதிதாகக்குடியேறிய பலருக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய ஒன்றுதான். எனினும் நாளடைவில் அது படிப்படியாக மாறியிருக்கக்கூடியதே. எனினும் திருமாவளவன் பதிவுகளில் அம் மாற்றத்திற்;கான சான்றுகள் தெளிவான வகையில் புலப்பட்டில என்பது இங்கு பதிவுசெய்யப்படவேண்டிய எனது முக்கிய அவதானிப்பாகும்.
அவரது இந்த ஒன்றாத உணர்வுநிலை தொடர்வதற்கு இந்த மண்ணின் உழைப்புநிலை ஒரு காரணியாக அமைந்துளது என்பதை வதை அவரது கவிதைகள் பல உணர்த்தியமைகின்றன. குடும்பத் தேவைகளை நிறைவுசெய்வதற்கான தொழில்சார் தொடர்புகள் கனடியச் சூழலின் குடும்பவாழ்க்கையின் மகிழ்ச்சிசார் அம்சங்களை வற்றவைத்துவிடுகின்றன என்பதையும் அதனால் அவ்வாழவியலானது இயந்திரப்பாங்கானதாக மாறிவிடுகின்றது என்பதையும் அவரது கவிதைமனம்; எமது கவனத்துக் முன்வைக்கிறது. மீண்டும் மீண்டும பலமுறை இது நமது கவனத்தை ஈர்ப்பதைக்காணலாம். சான்றுகளாக குறிப்பாக செக்குமாடு, கூதல் தேசக் கறவை, பந்தயம்,காலை (அஃதே இரவு அஃதே பகல்- .பக்..11-13, 38-41, 55-57, 62-63) முதலியவற்றைச் சுட்டலாம.;
வசதிகள் பலவற்றுடன் கூடிய பெரிய வீடுகளில் வாழ முடிந்தாலும் அவ்வாழ்க்கையை அநுபவிப்பதற்கு வாய்ப்பின்றி இரவுபகல் பாராது ஒடியோடி உழைக்கவேண்டியுள்ள நிலையை செக்குமாடு கவிதை காட்சிப்படுத்துகிறது. அத் தலைப்பே பலசெய்திகளை உணர்த்திவிடுகின்றமை வெளிப்படை.
“ …….
பேரிரைச்சலுடன் உருளும் உலகில்
எந்திரமாய் உழல்கிறேன்
காதலி பதித்த முத்தங்கூட
உலர்ந்து கிடக்கிறது
இந்தக் கவிதையில்
ஒரு துளி உயிர்ப்பை ஒட்டிவைக்க
முயன்று தோற்றுப் போகிறேன்.
……….”
எனவரும் கூதல் தேசக் கறவை கவிதை அடிகள்( அஃதே இரவு அஃதே பகல்-ப.39) உணரத்;தும் செய்திகளுக்கு விளக்கம் தேவை என நான் கருதவில்லை.
2.2 தாயக நினைவுகளின் சுமையும் அறச் சீற்றமும்
புதிய தேசத்தின் குடிமக்களாக உணர்வுபூர்வமாக ஒன்றிவிடமுடியாததான – மனத்தடைக்கான முக்கிய காரணிகளள் ஒன்றாக ‘நிலத்தால் பிரிந்தாலும் உணர்வால் பிரிவுபட முடியாதுள்ளதான ‘தாயக உணர்வு நிலை’ என்பதனை முன்னரே நோக்கினோம். இத் தாயக உணர்வானது சின்னஞ்சிறு வயதுமுதல் வாழ்ந்து பழகிய மண்மீதும் அதன் பண்பாட்டுக்கூறுகள் மற்றும் சமூக வழக்காறுகள் முதலியவை மீதான பற்றாக வெளிப்படுவதாகும். இவ்வகையில் திருமாவளவன் அவர்கள் தான் வாழ்ந்து சிறந்த தாயகத்தின் வடபுலக் கிராமச் சூழலொன்றுக்கு பலமுறை நம்மை இட்டுச்செல்கிறார். பனிவயல் உழவு தொகுதியிலிடம்பெற்ற மழை: (92-95) வேள்வி-(105) அஃதே இரவு அஃதே பகல் தொகுதியிலிடம்பெற்ற ஈரம் முதலிய பல கவிதைகள் இவ்வகையிற் குறிப்பிடத்தக்கன. இவ்வகை நினைவு மீட்பு முயற்சிகளுக்குச்ஓரு சான்றாக இங்கு ஈரம் கவிதையின் சில பகுதிகளைச் சுட்ட விழைகின்றேன்.
“இன்னும் இருக்கிறது
எங்கள் ஊர்.
தாழம்பூ மணங்கமழ
இதழ் பரப்பி
றங்குப்பெட்டியுள் பத்திரப்படுத்திய
அம்மாவின் கூறைச் சேலையைப் போலும்
எனத்தமது கிராமத்தின் இருப்பை உணர்த்தத் தொடங்கிய இக்கவிதை,
……..
சங்கக்கடையின் ஒற்றைக்கதவு
திறந்தபடி
காற்றோடு பறைகிறது
முற்றத்து முருங்கையில்
உலாந்தாக்காய் நெற்றாகித் தொங்குகிறது
வீணில்
வேலியோரப் பூவரசெல்லாம்
பூத்துச் சொரிகிறது
தன்னாரவாரம்
கொத்தியாலடிச் சுடலை மடச் சுவரில்
கிள்ளிப்பிடிக்க இடமிலா தளவுக்கு
கரித்துண்டால் நிறைத்துவைத்த
தோற்றம்- மறைவுக் குறிப்புகள்
ஆனாலும்
ஆனி பன்னிரண்டு 1990ற்;குப்பின்
எவர் குறிப்பும் இல்லை” (அஃதே இரவு அஃதே பகல்- பக் 81-84)
என நிறைவடைகிறது. திருமாவளவன் தரும் இத் தரிசனம் ஈழத்து வடபுலத்தின் ஒரு கிராமத்தின் இருப்பு மட்டும் அல்ல என்பதை எம்மால் உணரமுடிகிறது. ஒரு வரலாற்றுச் சான்று எனத்தக்கவகையில் ஆண்டுக்குறிப்பையும் இது தந்துள்ளமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியதாகும் .
திருமாவளவன் அவர்கள் முதுவேனில் காலம் என்ற தொகுதிக்கு வருத்தலைவிளான் கிராமத்தின் மருதமரத்தையே ‘காப்பு’ என்ற தலைப்பில் காவலாக நிறுத்துகிறார் என்பதும் இங்கு பதிவுபெறவேண்டியதாகும்.
திருமாவளவனது தாயக நினைவுசார் கவிதைகளில் ஒரு முக்கியபகுதியின போர் அழிவுகள் தொடர்பான - குறிப்பாக அதில் சிறுவர் பயன்பட்ட நிலை மீதான- கண்டனங்களாக வெளிப்பட்டனவாகும். நாளைய தலைமுறையாக உருவாக வேண்டிய இளைய பரம்பரை –அதாவது பச்சிளம் பாலகர்கள் சமூகம் - அநியாயமாகப் பலியிடப்படுகின்றதே என்பதான இயல்பான மன எழுச்சியின் வெளிப்பாடுகளாக அமைந்த கவிதைகள் இவை. சத்திரியம் நச்சுக்nhடி முல்லைத்தீவு , எச்சம் முதலிய பல கவிதைகள் இவ்வகையில் நமது கவனித்துக்குரியனவாகும். சான்றாக ணரு கவிதையின் சிலபகுதிகள்:
“….
அழு பெண்ணே அழு
உன் ஒப்பாரிப் பாடல்
ஏழு கடல் தாண்டி
எழுகிறது (வி)
என்செவியில்
……..
கண் மூடி விழிக்கு முன்னெழுந்த
கணப்பொழுதுள் களத்துள் பாய்ந்து
வெடித்து சிதறி
காற்றில் கலந்துவிட்டான்
உன்பாலன்
……
வெடிவால் முளைக்கும் முன்னர்
அழைத்து
மூளை நீக்கி
கபாலத்தைக் கோதாக்கி
சலவையிட்டு;
துடைத்து
வெடிமருந்தை நிரப்பி
ஏவிவிடும் கலையும்
மாவிரம் செய்கின்ற
வல்லமையும்
வாய்த்திருக்கு
அவர்க்கு (எச்சம்- பனிவயல் உழவு பக்.20-21)
பூரண மனவளர்ச்சியடையும் முன்பே மூளைச்சலவை மூலம் போர்க்கோலத்துக்குத் தள்ளப்படட இளந்தலைமுறையினர் பலியாகிவந்த பரிதாபநிலைக்கான ஒரு பதிவு இது. இவ்வாறான கொடுமைகள தொடர்ந்துவந்த சூழலில் இவற்றை விமர்சிக்கும் அறச்சீற்றமாக வடிவுகொண்ட கவிதைகளாகவே மேற்சுட்டியவகையின வெளிப்பட்டன என்பது வெளிப்படை. அஃதே இரவு அஃதே பகல் தொகுதியிலமைந்த நிலம் என்ற தலைப்பிலான 5 வது கவிதை சிறுவர்; போராளிகளாக்கபப்படும் நடைமுறையைப் பனை மரத்தின் பாளை சீவிக் கள்ளிறக்கும் முயற்சியாக உருவகிக்கிறது.
“………
இப்பொழுதுங்கூட
பதம்பார்த்துக்
கசக்கியெடுத்து கசக்கியெடுத்து
காக்கிக்குள் புகுத்தி
சீவுகிறார்கள்
சின்னப் பொடியள் குரதியில்
வீறுகொண்டெழுகிறது வீரம்
…..” (நிலம்- அஃதே இரவு அஃதே பகல்- ப. 17)
இத்தகு கவிதைகள் முக்கியத்துவம் யாதென்றால், ‘இலக்கிய உலகினரிற் பெரும்பாலோர் கவனத்துட் கொள்ளாத – அல்லது கவனத்துட்கொண்டிருந்தாலும்கூட வெளிப்படையாகப் பேசமுற்பட்டிராத’ – ஒர் அம்சத்தை இவை எடுத்துப்பேச முற்பட்டவை இவை என்பதாகும். இதற்கான முக்கிய காரணம் போராட்டத்தை மறுதலிப்பவர்களாகத் தாம் கணிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சநிலையே வெளிப்படை.
இத்தகைய அச்சமின்றித் அக்காலப் போராட்ட அரசியலின் பிடிக்குள் அடங்காது தமது மனச்சான்றுகளை ஆரம்ப காலம் முதலே பதிவுசெய்துவந்தவர்கள் சிலரே.இச்சிலருள் முக்கியமான ஒருவராகக் கவிஞர் திருமாவளவன் திகழ்கிறார் என்பது இங்கு நமது கவனத்துக்குரியதாகும். (முக்கியமான மற்றொருவர் குமார் மூர்த்தி.அவருடைய முகம்தேடும் மனிதன் என்ற சிறுகதைத் தொகுதிக்குப பதிப்பாளர் குறிப்பு வழங்கிய காலம் இதழாசிரியர் செல்வம் அவர்கள் அதில் , “அரசியலின் அசுரப் பிடியில் சிக்குண்டு அல்லலுறும் ஈழத்தமிழர் வாழ்வின் அவலங்களையும் கோரங்களையும் தனிமனித –குடும்ப-சமூகப் பின்புலங்களினூடாகவும் அவற்றின் உள்ளும் புறமுமான ஊடுபாவலின் மூலமாகவும்; குமார் மூர்த்தியவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்” என்ற கணிப்பை பதிவுசெய்துள்ளார்).
திருமாவளவன் வெளிப்படுத்திய இந்த அறச்சீற்றத்துக்கு கவிஞர் சேரன் அவர்கள அங்கீகாரம் வழங்கியுள்ளார் என்பது இங்கு நமது கவனத்துக்குரியது பனிவயல் உழவு தொகுதியிலமைந்த அவரது முன்னுரையில் இதனை நோக்கலாம்.
“திருமாவளவனுடைய சில கவிதைகள் சில பலத்த சர்சசைக்குள்ளானவை. குறிப்பாக
சத்திரியம் ,முல்லைத்தீவு நச்சுக்கொடி போன்றவை நமது சமகால அரசியலையும் யுத்தத்
தையும் விமர்சிக்கின்றன.
(எனச்சுட்டி ,அதனையடுத்து இத்தொடர்பில் அரசியலாரும் ஊடகத்தினரும் அக்கறைகொள்ளா
திருந்த நிலையைச் சுட்டியபின்னர்,
“இந்தச்சூழலில் கவிதைக்கூடாக இத்தகைய விமர்சனங்களை எழுப்புகிற திருமாவளவன்
மதிக்கப்படவேண்டியவர் எனவும்
அவர்,ஆவேசத்திலுங்கூட தமது அறிவுபூர்வமான அலசலை விலக்கிவிடவில்லை எனவும்
குறிப்பிடுகிறார் (பனிவயல் உழவு ப. 7-8)
2.3 வாழும்கணம் பற்றிய உணர்வு
கனடிய வாழ்வின் இயந்திர இயக்கம் மற்றும் தாயகம் பற்றிய உணர்வுநிலைகளில்ன் இடையே தவிக்கும் கவிஞருக்கு வாழும்கணத்தை நிறைவாக வாழுதல் என்பதான உணர்வும் அவ்வப்பொழுது ஏற்படுகிறது. இவ்வகையில் குறிப்பாக மீன்குஞ்சுகளின் அவருடைய கவனத்துக்குவருகின்றன. இவ்வகையில் இரு கவிதைகள் நமது கவனத்துக்குரியன. ஒன்று கண்ணாடிச் தொட்டிக்குள் சகல உபசரிப்புகளோடும் சிறைப்பட்டிருக்கும் மீன் பற்றியது. இன்னொன்று நீர்நிலையொன்றிலே ஆபத்துகள் வரப்போவதை எதிர்பார்க்காமல் வாழும்கணத்தை நிறைவாக வாழும் மீன்குஞ்சு பற்றியது.இவை முறையே, அஃதே இரவு அஃதே பகல் மற்றும் இருள்--யாழி ஆகிய இரு தொகுதிகளின் முதலாவது கவிதைகளாக இவை உள்ளன.
“சிறுதொட்டி
சுவர் நான்கும் கண்ணாடி
நஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர்
………
பதனிட்டுத் தயார் செய்யப்பட்ட உணவு
நேரம் தவறாத உபசரிப்பு
சொகுசுச் சிறைக்குள் ளிருந்து
தன்வாழ்வின் துயரைப் பாடுகிறது
மீன் குஞ்சு ( இருப்பு -அஃதே இரவு அஃதே பகல் -ப.7)
“வெய்யில்
நீர்வற்றிக்கொண்டே போகிறது
…..
தப்புத் தண்ணியில் அள்ளிப் போவதற்கு
பறியொடு காத்திருக்கிறான் செம்படவன்
நீரிடைத் துலங்கும் திட்டில்
ஓடும்மீன் ஓடி உறுமீன் வருமென
ஒற்றைக்காலில் தவங்கிடக்கிறது கொக்கு
எஎவ்வித சலனமுமின்றி
வாழுமிக் கணத்தை நீந்திச் சுகிக்கிறது
மீன் குஞ்;சு” (சுயம் -இருள்--யாழி-ப.11)
இருப்பு என்ற தலைப்பிலான முதலாவது கவிதை ‘சொகுசுச் சிறை’யாகவும் சுயம் என்ற தலைப்பிலான இரண்டாவது கவிதை கவலையற்ற இயல்பான தன்னியக்க நிலையாகவும் உணர்த்தப்படுகின்றன. வாழ்க்கை பற்றிய கவிஞரின் நோக்குநிலைக்கான குறியீடுகளாக இம்மீன்குஞ்;சுகளை நாம் கருதமுடியமா? சொகுசுச் சிறை என்பதைப் புகலிடநிலையாகவும் ஆபத்துகளின் மத்தியிலும் வாழுங்கணத்தை நிறைவாக வாழுதல் என்பது தாயக நிலையாகவும் கவிஞர் காட்ட முற்படுகிறாரா? இவ் வினாக்கள் வாசகர்களின் முடிவுகளுக்கு முன்வைக்கப்படுகின்றன.
இருள்-யாழி தொகுதியில் 3வதாக இடம்பெற்றுள்ள மரம் என்ற தலைப்பிலான கவிதையிலே மேற்படி ‘வாழும் கணம்’பற்றிய உணர்வானது துருவப் பனிச் சூழலின் இயற்கை நியதி பற்றிய பார்வையொன்றினூடாக முன்னிறுத்தப்படுகிறது.
“பனிப் படுகையின் மேல் விறைத்துப்
பிணமாகக் கிடந்தது
மரம்.
பனி உருகக் கிடைத்த சிறுதுளி வெப்பத்தில்
துளிர்க்க விரைகிறது இன்று.
இனியென்ன
பிஞ்சு விரல்களென முகையரும்பும்
மொட்டவிழும்
………
பழுக்கும்
சருகாய் உதிரும்
மீளப் பிணமாகும்
நாளைய உதிர்தல் தெரிந்தும்
இக்கணத்தில்
மகிழ்ந்து துளிர்க்க விரைகிறது
மரம் (இருள்-யாழி –ப.14)
திருமாவளவன் கவிதைகள் தொடர்பான பொது வான தரிசனம் இதுவரை இங்கு முன்வைக்கப்பட்டது. மேலே எம்மால் வகைப்படுத்தி நோக்கப்பட்ட அவர்கள் நமக்குத் தரும் அவரது தரிசனங்கள் அனைத்துக்குமான சான்றுகளை இங்கு எடுத்துக்காட்ட முடியமாயினும் இவ்வுரையின் கால அளவைக் கருத்துட்கொண்டு இம் முயற்சியைச் சுருக்கிக்கொள்கிறேன். இத்தொடர்பில் அடுத்ததாக இன்று அறிமுகமாகும் முதுவேனில் பருவம் தொகுதி தொடர்பான ஒரு சுருக்கக் குறிப்பைமட்டும் இங்கு பதிவுசெய்ய முற்படுகிறேன்.
3. முதுவேனிற்பருவம் பற்றிய ஒரு சுருக்கக் குறிப்பு
பொதுவாக ஏனைய தொகுதிகளிற் புலப்படும் திருமாவளவனது கவித்துவ ஆளுமையின் தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் இத்தொகுதியில் நாம் தரிசிக்கிறோம் எனக் கூறுவது பொதுவான விமர்சனமாகும். அதற்கு மேலாக இத்தொகுதியிற் புலப்படும் சிறப்புக் கூறுகளை எடுத்துப் பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவை. எனவே உடனடியாக எனது கவனத்துக்கவந்த சில அம்சங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்ள முற்படுகிறேன்.
முதுவேனிற்பருவம் தொகுதியில் இடம்பெற்ற கவிதைகள் 2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் எழுந்தவை. அவ்வகையில் ஈழத்தினல் போராட்டம் உக்கிரமாக நடைபெற்று ஒரு முடிவுக்கு வந்த காலகட்டம் சார்ந்த கவிதைகள் இவை என்பது இங்கு முதலிற் குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாகும். அப் போர்ச் சூழல் மற்றும் அது முடிவுக்கக் கொண்டுவரப்பட்ட முறைமை என்பன ஈழத் தமிழர் வாழும் அனைத்துப் புகலிடங்களிலும்சிந்தனை நிலையிலான பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தின. அவ்வதிர்வுகள் கலை,இலக்கியங்களிலும் பல பரிமாணங்களிற் பிரதிபலித்தன. திருமாவளவன் கவிதைகளிலும் அப்பிரதிபலிப்புகளை ஆழமாகவே உணரமுடிகிறது. கவிஞரின் பின்னுரைக் குறிப்பிலும் இந்த அதிர்வு தெரிகிறது.
இத் தொகுதியின் ஒருவகைக் கவிதைகள் மேற்சுட்டியவாறு யுத்தமுடிவின் அதிர்வுகள் சார்ந்தவை. குறிப்பாக ,கிளிநொச்சி, தோற்கடிக்கப்பட்ட நிலம், முள்ளிவாய்க்கால்-2009,மறுத்தல்- (இரண்டு ) முதலிய கவிதைகளை; இவ்வகையிற் சுட்டலாம். போராட்டத்தின் முடிவை, பலகாலம் தொடர்ந்து பெய்த கொடிய மழையொன்று நிறைவுபெற்ற நிலையாக அவர் காண்கிறார்.
“….
மூன்று தசாப்தம் கொட்டிய கொடுமழை யின்
ஈரம்
பாறி வீழ்ந்த பெருமரங்கள்
கட்டடங்கள்
இன்னும்
புதிதாக ‘அரச’மரக்கன்றுகள்
அவற்றின் அடிகளிலெல்லாம் முளைவிட்டிருக்கிறது
வெள்ளைக் காளான்கள்
சிறிதும் பெரிதுமாய் ஒவ்வொன்றும்
புத்தன் வடிவம்
எனச் செல்லும் இக்கவிதை,
இனியும்வேண்டாம்
எமக்கோர் பெருமழை (முதுவேனில் காலம் - 19-20)
என்று நிறைவடைகிறது.
யுத்தத்தை மையப்படுத்திச் சந்நதமாடும் மரணவியாபாரிகள் மீதான கவிஞரின் கொடும் சினத்தை மறுத்தல்- (இரண்டு) கவிதையில் உணரமுடிகின்றது. அதன் சில அடிகள் வருமாறு:
“--------- ---------- -----
தொலைவில் ஒரு தேவன் வருகிறான் என விளிக்கும்
ஒலிகளிடையில்
இருளை விழித்தபடி விழித்திருக்கிறேன்
விழி வற்றவில்லை .
------ ------- -------
சாமியாடிச் சாமியாடிச் சந்நதம் அடங்க
பூசாரிகள்
எந்தத் தேவன் வருகைக்காக இன்னமும் கூவுகின்றனர்?
வியாபாரிகளே ஒழிந்து போங்கள்!
என் பாட்டன் உழுத நிலத்தில்
இனி
புற்களாவது முளைக்கட்டும்! (முதுவேனில் பதிகம் - பக். 30-31)
இக்கவிதைகள் உணர்த்தும் செய்திகளுக்கு விளக்கம் அவசியமில்லை.
இவ்வாறான யுத்தநிலை சார் அதிர்வுகளுக்கு அப்பால் இத்தொகுதியில் குறிப்பிடத்தக்கதாக வெளிப்ப்பட்டுள்ள முக்கிய உணர்வம்சங்களிலொன்று அடுத்த பரம்பரை பற்றிய நம்பிக்கைச் சுடராகும். பின் மழைக்காலம் என்ற தலைப்பிலமைந்த கவிதையில் ஒரு மின்னல் தெறிப்பாக இது வெளிப்பட்டுள்ளது.
“ அந்த சாய்கிறது
யன்னலினோரம் வெளியை வெறித்திருந்தேன்
…….
எனத் தொடங்கித் தொடரும் இக்கவிதை வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்துவிட்டநிலையில் விக்தியும் துயரும் மண்டியிருந்த ஒரு கட்டத்தை நினைவுக்கு இட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக ,
மனசு துயருறுமிக்கணத்தில்
விளக்கில் ஒளியூட்டி
தன் பிஞ்சு மகவைக் கைகளில் தருகிறாள்
என்மகள்
சிற புலனிக் குஞ்சென
மெல்லிதழ் நெளித்துப் பூக்கிறாள்
புன்னகை
நீளக் கொடிவிட்டு வீழ்கிறது
மின்னல் என்னுள் (முதுவேனில் பதிகம் - பக்.92-93)
எனச்சென்று நிறைவடைகிறது.
முதுவேனில் பதிகம் தொடர்பான எனது பார்வையை இத்துடன் நிறுத்தி, இவ்வுரையின் நிறைவான குறிப்பை இங்கு முன்வைக்கிறேன்
4. நிறைவுக் குறிப்பு.
திருமாவளவனது கவிதைகள் தொடர்பான இப்பார்வையை நிறைவுசெய்யம் சந்தர்ப்பத்தில் திறனாய்வு நிலைசார்ந்த மூன்று முக்கிய குறிப்புகளை இங்க முன்வைக்க விழைகின்றேன் . ஒன்று இக்கவிதைகளின் ஆக்கநிலை-அதாவது அழகியல்- தொடர்பானது. இன்னொன்று இப்படைப்புகளைப் பண்பாட்டுப்பிரதியாகக் கொள்ளலாமா? என்ற வினாவை முன்னிறுத்திய விளக்கமாகும் என்பது தொடர்பானது. மற்றது அவர்பற்றிய கணிப்பு தொடர்பானதாகும்.
கவிதையின் ஆக்கநிலை என்ற வகையில் வரிகளை அமைப்பதில் அவரிடம் ஒரு வளர்ச்சிப்போக்க காணப்படுகின்றதென திறனாய்வாளர் ராஜமார்தாண்டன் குறிப்பிடுகிறார். படிமங்களைக் கையாள்வதில் இவர் புலப்படுத்தியள்ள சிறப்பை திறனாய்வாளர் வெங்கட்சாமிநாதன் விதந்துரைத்துள்ளார். (பார்க்க:இருள்யாளி பின்னிணைப்பு பக். 73-74,71) இத்தொடர்பில் மேலும் விரிவான விளக்கங்களுக்கு இடமுண்டு. (இவ்வுரையில் அதற்கான நேரவாய்ப்பு இல்லை).
இக் கவிதையாக்கங்களை ‘பண்பாட்டுப்பிரதிகள்’ எனக் கொள்ள வாய்ப்புளதா? என்றவினா திறனாய்வு நோக்கில் அவசியமானது. குறித்த படைப்பானது அது எழுந்த காலத்தின் பண்பாட்டம்சங்கள் பற்றிய நிறைவான முக்கியகூறுகளையும் மதிப்பீடுகளையும் கொண்டதாக அமைந்துள்ள நிலையே ‘பண்பாட்டுப்பிரதி’ என்பதன் அர்த்தமாகும். இவ்வாறான கணிப்பானது படைப்பாளியின் சமூக-பண்பாட்டு நோக்கு மற்றும் சமூக இயங்குநிலைகள் சார்ந்தது. இக்கவிதைகள் அவருடைய சமூக ஈடுபாட்டையும் பண்பாட்டுநிலை உணர்வுகளையும் தெளிவாகவே உணர்த்திநிற்கின்றன. குறிப்பாகப் பல கவிதைகள் சமகால சமூகத்தின் மனச்சான்றின் குரல்களாகவே வெளிப்பட்டுள்ளன. எனவே இக்கவிதைகளை ‘பண்பாட்டுப்பிரதிகள்’ என ஏற்றுக்கொள்வதில் தடையேதுமில்லை. இதனையே திருமாவளவன் அவர்கள் சமகாலத்தின் முக்கிய கவிஞர் என்பதான எனது மதிப்பீடாக முன்வைக்கிறேன்.
இம்மதிப்பீட்டிலே அவரது வரலாற்று இடத்தை உரியவாறு தீர்மானிப்பதற்கு அவர் புலப்படுத்திய உணர்வுப் பொருண்மைகள் சார்ந்தனவாகப் பிறகவிஞர்களின் தந்துள்ள ஆக்கங்களுடன் தொடர்புறுத்தி ஒப்புநோக்கவேண்டிய தேவை உளது. இது மிகவிரிவான தளத்திலான ஆய்வாகும். புலம்பெயர் சூழலின் தொழில்சார் வாழ்நிலையை இயந்திரப்பாங்கானதாக திருமாவளவன் கருதுகிறார் என்பதை மேலே நோக்கினோம். இத்தகைய பார்வை இவருடையது மட்டுமன்று வேறு பலரும் இவ்வகைப் பார்வைகளை வௌ;வேறு வகைகளில் வௌ;வேறு பரிமாணங்களில் வெளிப்படுத்தியிருப்பார்கள். குறிப்பாக, புலம்பெயர் கவிஞர்களிலொருவரான த.பாலகணேசன் என்பவர் தமது கவிதைகளில் இவ்வாறான பார்வையைப் பதிவுசெய்துள்ளார்.(பார்க்க: தா.பாலகணேசன் -வண்ணங்கள் கரைந்த வெளி -2004 -இயந்திரன் ) திருமாவளவன் கவிதைகளில் பரதேசியின் பாடல் என்ற தலைப்பிலான ஒரு கவிதை உளது. புலம்பெயர் கவிஞர்களில் முக்கியமான மற்றொருவரான கி.பி. அரவிந்தன் அவர்கள் பரதேசிகளின் பாடல்கள்(2006)என்ற தலைப்பில் பலரது ஆக்கங்களைக் கொண்ட ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார் என்பதையும் நாமறிவோம். இவ்வாறான பொதுமைகளை மையப்படுத்திய விரிவான ஒப்பியல் பார்வைக@டாகவே திருமாவளவனுடைய வரலாற்று இடத்தை நாம் உறுதிசெய்துகொள்வது சாத்தியமாகும். இவ்வகை முயற்சியானது தனிநிலையில் விரிவாகவும் ஆழமாகவும் மேற்கொள்ளப்படவேண்டியதொன்றாகும்.
திருமாவளவன் அவர்கள் மீதான முக்கிய கணிப்பு ‘துயர்சுமந்த கவிஞர்’ என்பதாகும் முதுவேனில் பதிகம் தொகுதிக்கமைந்த கருணாகரனுடைய கணிப்பு இதுவே. துயர்வெளிக் கவியின் வேரோடிய நிலம் என்பது அவர் தந்துள்ள தலைப்பு இதனையே உணர்த்துவது இக்கணிப்பிற்கு அவருடைய சுய பதிவுகளும் சான்றாவன.
“ எல்லாக் கவிதையின் மீதும் ஒரு ஆற்றின் போக்கென மெல்லிய துயரம் நகர்ந்தும்
ஓடியும் குமுறியும் பாய்ந்தும் இருப்பது தெரிகிறது. என் வாழ்வே கவிதை என்பதில்
இக்கண்ணீரைத் தவிர்க்க முடியவில்லை.”
( அஃதே இரவு அஃதே பகல் -திருமாவளவன் வாசிப்பு ப.121 )
யிலும் இதே துயரமும் சலிப்புமாகவே அமைகிறது.
“ இந்த அவசர உலகில் வேறு எதிர்பார்ப்புகளுக்க இடம்வைக்கக்கூடாது.அதன் திசையில்
ஓடிஅடங்கவேண்டியதேநியதி.இந்த மனவோட்டத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரட்டு
முழுவதிலும் அடங்கியிருக்கிறது. சலிப்பூட்டுகிற வாழ்வு . இக்கவிதைகளும் அப்படியே.
எனவே மேலும் சலிப்பூட்ட இதற்கு ஒரு பின்னிணைப்பு தேவையா என்ற எண்ணம்;
எழவேசெய்கிறது”
( முதுவேனில் பதிகம்- பின்னுரைப.107)
இக்கணிப்பு மாற்றப்பட வேண்டியது என்பதே ஒரு திறனாய்வாளன் என்றநிலையிலான எனது ஆலோசனையாகும்.புலப்பெயர்வு வாழ்வானதுவெறும் ‘பனிவயல்உழவு’மட்டுமன்று. அது தாயக வாழ்வு தொடர்பான பலகுறைபாடுகள் மற்றும் துன்ப-துயரங்கள் என்பவற்றினின்று நம்மை விடுவித்ததுமாகும் தலை தந்ததும் கூட. கவிஞர்கள் பொதுவாகக் கலைஞர்கள் சமூகயதார்த்தங்கள் சார்ந்த துன்பதுயரங்களைச் சுமப்பவர்கள மட்டும்; மட்டும்அல்ல. புதிய சூழல்சார் சமூகத்தின் உள்ளுறைந்திருக்கும் உயர் பண்புகளையும் நலன்களையும் அறவுணர்வுகளையும் வெளிக்கொணர்ந்து – திரைவிலக்கி உணரவைக்கவேண்டிய பொறுப்புடையவர்களுங்கூட.
அ. மூடப்பட்ட சமுதாய உணர்வு நிலை.குறிப்பாக சாதிமுறை மற்றும் சீதனமுறைகள்
ஆ. கல்விசார் இலட்சியங்களின் வரையறைகள்-குறிப்பாக மருத்துவக் கல்வி மற்றும் பொறியியற் கல்வி என்பவற்றுக்கு மட்டும் முதன்மை தந்த மனோநிலை ஆகிய இவற்றையெல்லாம் கடக்கவைத்தமை புலப்பெயர்வு தந்த வாய்ப்பல்லவா. மேலும் பரந்த உலகநோக்கை முன்வைத்தமை, தாயகமண்ணில் பல்லாண்டுகள் உழைத்தாலும் அடைய முடியாத வீட்டுவசதி மற்றும் வாகன வசதிகள், பலநூல்களை அனைத்துலகத் தரத்தில் உயர் கட்டமைப்பில் வெளியிடக்கூடிய வாய்ப்புகள் வசதிகள் முதலிய இவை யாவும் புதிய புகலிடச் சூழல்களின் பேறுகள் அல்லவா? இவற்றையெல்லாம் உணர்வில் இருத்தி கனடாவை நேசிக்கும் கவிஞனாகவும் திருமாவளவன் மலரவேண்டும். (இரண்டு ஆண்டுகளின் முன் நான் அவரிடம் நட்புரிமையுடன் முன்வைத்த அன்புக் கோரிக்கை இது. இவ்வளவு விரைவில் அவர் எம்மைப் பிரிந்து விடுவார் என்பதை அறிவேனா! விண்ணிலிருக்கும் அந்த அன்புக் கவிஞருக்கு எனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். )
-------------------------------07-10-2015--------------------