தமிழ் இலக்கியத்தில் ஒரு சந்தேகம் உங்களிடம் கேட்டுப் பார்க்கலாமா?, ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் என்ன, சங்க இலக்கியத்தில் தேடிப்பார்த்தேன், அப்படி ஒரு பதம் இருப்பதாகத் தெரியவில்லை’ என்று நண்பர் ஒருவர் கேட்டார். ஆறாம்திணை என்பதற்கு ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததை வெவ்வேறு வகையான விளக்கத்துடன் தருவார்கள், அது அவர்களது சொந்தக் கருத்தாகும். ஆனாலும் ‘ஆறாம் நிலத்திணை’ என்றால் இப்படியும் இருக்கலாம் என்று எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன் என்று எனது கருத்துக்களையும் அவருடன் நான் பகிர்ந்து கொண்டேன். எனவேதான் கருத்துப் பரிமாறல் மூலம் இந்தக் கட்டுரையை மேலும் மெருக்கூட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன், ஆவணப் படுத்துவதில் தமிழர்தகவல் ஆண்டு மலர்கள்; முன்னிற்பதால் எனது கருத்தை இந்த மலரில் பதிவு செய்கின்றேன்.
தமிழர்களின் வரலாற்றில் ‘தமிழ் இலக்கியம்’ எப்பொழுதும் முக்கியமான இடத்தை வகித்திருக்கின்றது. தமிழ் மொழியின் காலத்தையும் தமிழர்களின் பண்பாடு நாகரிகம் போன்றவற்றையும் கலை, இலக்கிய வடிவங்களையும் அறிந்து கொள்ள பழம்பெரும் இலக்கியங்கள்தான் எங்களுக்கு உதவியாக இருந்தன. புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் தமிழர் வரலாற்றை ஆவணப்படுத்தியதால் தான் இன்று எமது மொழியின் தொன்மையை, எமது இனத்தின் வரலாற்றை எடுத்துச் சொல்ல முடிகின்றது. அக்காலத்தில் எழுதப்பட்ட ஏடுகளும், கல்வெட்டுக்களும், புடைப்புச் சிற்பங்களும், ஓவியங்களும் எம்மை அடையாளப்படுத்த மிகவும் உதவியாக இருந்தன.
அவற்றைக் கவனமாகப் பாதுகாத்தவர்களும், தமிழ் பிரமி எழுத்துக்களை வாசித்து நவீன முறையில் எல்லோரையும் சென்றடையக் கூடிய வகையில் பதிப்பித்தவர்களும் எம்மினத்தின் பாராட்டுகுரியவர்கள். தற்போது மதுரைக்கு அருகே உள்ள கீழடி அகழாய்வுகள் எம்மினத்தின் தொன்மையைத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக இருக்கின்றன. இவற்றை எல்லாம் தேடி எடுத்து வெளியே கொண்டு வந்து, தமிழ் மெழியைச் செம்மொழியாக்கி எம்மினத்திற்கும் முகவரி தந்தவர்கள் இவர்களைப் போன்றவர்களே என்றால் மிகையாகாது.
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கிய நூல்கள் ‘ஐந்திணை நிலங்கள்’ என்றால் என்ன என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. இதை எல்லாம் கடந்து இன்றைய தமிழ் இலக்கியத்தில் ஐந்தை விட ‘ஆறாவது நிலத்திணை’ யும் முக்கிய இடம் பெறவேண்டும் என்றால் மிகையாகாது. இதற்குக் காரணம் தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து தங்கள் பாதுகாப்புக் கருதிப் பெருமளவில் புலம் பெயர்ந்தவர்களில் அதிகமான தமிழர்கள் அமெரிக்காக் கண்டத்தின் வடபகுதியில் உள்ள கனடா நாட்டிற்குப் புலம் பெயர்ந்தனர். ஈழத்தமிழர்கள் தாயகத்தில் பட்ட அவலங்களுக்கு ஆறுதல் தருவதாக கனடா நாடு தமிழர்களை அரவணைத்துப் புகலிடம் கொடுத்ததால்தான் கனடா அரசிற்கும் கனடிய முதற்குடி மக்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.
பெயர்ச் சொல்லாகவும் வினைச் சொல்லாகவும் தமிழர் வாழ்வோடு இணைந்து விட்ட இந்த ‘ஆறு’ என்ற சொல், இன்று ‘ஆறாம் நிலத்திணை’ என்ற சொற் பதத்தையும் உள்வாங்கிக் கொண்டது. ஆறாம் நிலத்திணை என்ற சொற்பதம் ‘பனியும் பனிசார்ந்த நிலத்தையும்’ குறிப்பிடுவதற்கே பொருந்தும் என நினைக்கின்றேன். பழந்தமிழ் இலக்கியம் உருவாகிய தமிழ் நாட்டு நிலங்களை விட்டு வெளியே நிரந்தரமாகப் பனிப்பிரதேசத்தில் வசிக்கும் குறிப்பிட்ட தமிழர்களின் வாழ்விடமாக இந்த ‘ஆறாம் திணை’ நிலம் இன்று இருக்கின்றது.
இந்த ஆறுதிணை நிலங்களைப் பற்றியும் இப்போது பார்ப்போம். மருதம், நெய்தல், முல்லை, குறுஞ்சி, பாலை என்று ஐந்து திணை நிலங்களாகத் தமிழர் வாழ்ந்த இடங்களைச் சங்க இலக்கியங்களில் அடையாளப்படுத்தி இருந்தனர். நிலத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகுக்கப்பட்ட பாகுபாடுதான் ‘நிலத்திணை’ என்று அழைக்கப்பட்டது. தொடக்கத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகை நிலத் திணிவுகளைக் கொண்டதாகத் தமிழ் இலக்கியம் இருந்தது. இடைக்காலச் சங்க காலத்தில் வாழ்ந்த தொல்காப்பியரின் தொல்காப்பியத்தில் இந்த நான்கு திணைகளும் தான் இடம் பெற்றிருக்கின்றன.
‘முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே’
என்கிறது தொல்காப்பியம்.
பின்னாளில் முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கொண்ட போது அது ஐந்தாவது திணையாகத் தமிழ் இலக்கியத்தில் கணிக்கப்பட்டது. காலத்திற்கு ஏற்ற தேவை கருதிச் சங்ககால நான்கு திணைகள் ஐந்தாக மாறும் போது, இன்றைய தேவை கருதி ஆறாக மாறுவதில் தவறில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது.
தமிழ்நாட்டு மண்ணில் ‘பாலை’ என்று கூறும்படி தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக நிலம் ஒன்றுமில்லை. முல்லை நிலமும், அதற்கு அருகே இருக்கும் குறிஞ்சி நிலமும் கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக ஆங்காங்கே திரிந்து பாலை என்னும் படிமை நிலையைக் கொண்டிருக்கின்றது. இதைச் சிலப்பதிகாரத்தில் உள்ள காடுகாண்காதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து,
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்து,
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்’ (காடுகாண்காதை)
இந்த ஐந்தும்தான் சங்க இலக்கியத்தில் தமிழர் நிலத்திணைகளாக இருந்தன. தமிழரின் வாழ்விடங்கள் என்று கணிக்கப்பட்டால் அவர்கள் வாழும் நிலத்தின் அமைப்பு முக்கியமாகிறது. ஆதனால்தான் இன்றைய தமிழ் இலக்கியத்தில் ஆறாம் நிலத்திணையாக பனியும் பனி சூழ்ந்த பகுதியும் ‘பனிப்புலம்’ என்று முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இதில் முக்கியமாகப் புலம்பெயர்ந்த அதிக தமிழர்கள் வாழும் கனடா நாட்டு ‘பனியும் பனி சூழ்ந்த நிலமும்’ குறிப்பிடத்தக்கது.
மலையும் மலை சார்ந்த நிலத்தைக் குறிஞ்சித் திணை என்றும், காடும், காடு சார்ந்த நிலத்தை முல்லைத் திணை என்றும், இந்த இரண்டு நிலங்களுக்கும் நடுவே உள்ள பாழ்நிலத்தை பாலைத் திணை என்றும், வயலும் வயல் சார்ந்த நிலத்தை மருதத் திணை என்றும், கடலும் கடல் சார்ந்த இடத்தை நெய்தல் திணை என்றும் சங்க இலக்கிய காலத்தில் அழைத்தனர். இத்தகைய சங்க இலக்கிய நிலங்கள் இயல்பியல் அடிப்படையிலான பகுப்புக்களாக மட்டும் இருக்கவில்லை, அக்கால மக்களின்; வாழ்வியலோடும் இணைந்தவையாகவும் அமைந்திருந்தன. எனவேதான் இன்றைய தமிழர்களின் வாழ்நிலங்களில் ஒன்றான பனியும் பனி சூழ்ந்த நிலத்தை ‘பனிப்புலம்’ என்று அழைக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
சங்க இலக்கியத்தில் இந்த ஐந்திணைகளுக்கும் நிலம் சார்ந்த பண்புகளும், உளம் சார்ந்த பண்புகளும் இருந்திருக்கின்றன. சில விசேட பண்புகளையும் தமிழர் வாழ்ந்த நிலங்கள் கொண்டிருந்ததாக சங்க இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றது.
இத்திணைகளுக்குரிய மனிதருள் பொதுவாக எழும் உணர்வுகளையும் அது சார்ந்த வாழ்வியற் கூறுகளையுமே அவர்களின் பொதுப்பண்புகளாகச் சங்கஇலக்கியம் கூறுகின்றது. அந்த வகையில் நிலத்தின் அமைப்புக்கு ஏற்ப உரிப்பொருளாகப் பொதுவாகக் குறிஞ்சி நிலத்தில் புணர்தலும், முல்லை நிலத்தில் இருத்தலும், மருதநிலத்தில் ஊடலும், நெய்தல் நிலத்தில் இரங்கலும், பாலை நிலத்தில் பிரிதலும் என அந்தந்த நிலங்களுக்கான பொதுப்பண்புகளை இலக்கியம் எடுத்துக் காட்டுகின்றது.
ஆதிகாலத் தமிழர்கள் இயற்கையையே வழிபட்டு வந்தனர். அதன் பின் திணை வாழ்வில் தங்களைக் காத்தவர்களையும் கடவுளாக வணங்கினர். தமிழர் மரபில் ஐந்திணை வாழ்வியல், வழிபாடு முறைகள் இதனால்தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
'மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச், சொல்லியமுறையான் சொல்லவும் படுமே’
என ஒவ்வொரு நிலத்திற்கான தெய்வங்களையும் குறிப்பிட்ட தொல்காப்பியர் பாலை நிலத்திற்கான தெய்வத்தைக் குறிப்பிடாததற்குக் காரணம் பாலை என்ற நிலப்பரப்பு அவர்காலத்தில் இருக்கவில்லை. நால்வகை நிலங்களுக்கும் முறையே முருகன், திருமால், இந்திரன், வருணன் ஆகிய கடவுள்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. தமிழ் இலக்கியத்தில் பாலைநிலத்துக் கடவுளாக கொற்றவையைப் பின்னாளில் குறிப்பிட்டிருப்பதை அவதானிக்க முடியும். பனி சூழ்ந்த ஆறாந்திணை நிலத்திற்குச் ‘சூரியக்கடவுளை’ குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். உத்தராயண புண்ணிய காலம் தை மாதம் தொடங்குவது மட்டுமல்ல, தை மாதப் பிறப்பு ‘பொங்கல்’ திருநாளாகவும், தமிழர் மரபுத் திங்களாகவும் கொண்டாடப்படுகிறது.
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்று பாகுபாடுகளில், கனடா நிலத்தை இந்தப் பொதுப் பண்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது ‘பனியும் பனிசார்ந்த நிலத்தின்’ உரிப்பொருள் பொதுப்பண்பாக ‘உருகல்’ என்பதை எடுத்துக் கொள்ளலாம்.
பனிக்கட்டி போன்றவை (வெப்பத்தினால்) இளகுதல், மனம் நெகிழ்தல், தாயக உறவுகளை எண்ணி ஏங்குதல், சொந்தங்களைப் பிரிந்த கவலையால் மெலிதல் போன்ற நிலைகளுக்கு இந்தப் பண்பு பொருந்தும் என்றே எடுத்துக் கொள்ளலாம். பனிநிலம், பனிக்காலம் முதற்பொருளாக வரலாம். தைமாதமும், சூரியக்கடவுளும் ஆறாந்திணை கருப்பொருளில் இடம் பெறுவது பொருத்தமாக இருக்கலாம். எனவே, ஆறாம் நிலத்திணை பனியும் பனி சூழ்ந்த பகுதியையும் கொண்டிருப்பதால், பனிப்புலம் என்று அழைக்கலாம்.
ஆறாம் நிலத்திணை உரிப்பொருள் பொதுப்பண்பாக ‘உருகல்’ என்பதை எடுத்துக் கொள்ளலாம். உருகலும் உருகல் நிமித்தமும்.
ஆறாம் நிலத்திணை தெய்வமாக' சூரியக்கடவுளை' எடுத்துக் கொள்ளலாம்.
ஆறாம் நிலத்திணை மாதமாக தைமாதத்தை எடுத்துக் கொள்ளலாம்.
ஆறாம் நிலத்திணைக்கான பறவைகளாக வாத்து, சீஹள் (ளுநயபரடட) என்று அழைக்கப்படுகின்ற வெண்ணிறமான கடற்புறா போன்றவற்றைக் குறிப்பிடலாம். சங்ககாலத்து குருகு பறவையில் இருந்து இது சற்று மாறுபட்டது. இதன் அலகுகளும், கால்களும் சிறியனவாகும். இந்தப் பறவைகள் பனிக்காலத்தில் வலசை போகின்றன.
ஆறாம் நிலத்திணை மிருகங்களாக ‘கருங்கரடி, வெண்கரடி’ போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை பனிக்காலத்தில் உறங்குநிலையில் இருக்கின்றன.
ஆக, ஆறாம் நிலத்திணை கனடா போன்ற பனி உறையும் நாடுகளில் புலம் பெயர்ந்து நிரந்தரமாக வசிக்கும் தமிழர்களுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்றே சொல்லத் தோன்றுகின்றது. தமிழ் இலக்கியம் சார்ந்த சர்வதேசத்தின் பார்வை கனடாவின் பக்கம் திரும்பி இருக்கும் இச் சந்தர்ப்பத்தில், தமிழ் இலக்கியம் ‘ஆறாம் நிலத்திணை’ யையும் உள்வாங்கிக் கொண்டால், தமிழ் மொழியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கனடா தமிழர்களும் தமிழ் இலக்கிய வரலாற்றில் காலமெல்லாம் இடம் பிடித்துக் கொள்வார்கள்.
உசாத்துணை :
http://www.tamilvu.org/library/l0100/html/l0100ind.htm
https://ilakkiyam.com/iyal/25-tamil/iyal/imperunkapiyam/1149-
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.