- எழுத்தாளர் அமரர் குறமகள் நினைவாக நினைவழியா நினைவுகள் என்ற நினைவு மலர் ஒன்று சென்ற சனிக்கிழமை (12-11-2016) குடும்பத்தினரால் கனடாவில் வெளியிடப்பட்டது. இந்த நினைவு மலரில் இடம் பெற்ற எனது நினைவுக் குறிப்பையும் இத்துடன் இணைத்திருக்கின்றேன். - குரு அரவிந்தன். -
திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களைப் பிரிந்து இன்று ஒரு மாதமாகிவிட்டது. இலக்கிய உலகில் குறமகள் என்று சொன்னாலே இவரைத் தெரிந்து கொள்வார்கள். சிலர் இவரைப் பெண்ணிய வாதியாகப் பார்த்திருந்தார்கள். ஆனால் பிறந்ததில் இருந்து இவருடன் கூட வளர்ந்ததாலோ என்னவே அன்புள்ளம் கொண்ட அக்காவாகவும், பாசமுள்ள தாயாகவும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்ட ஒருவருமாகத்தான் நான் எப்பொழுதும் இவரைப் பார்த்தேன். பொறுமையாக எதையும் ஏற்றுக் கொள்வதால், அக்கா தனது மரணத்தையும் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டார். எப்பொழுதுமே கலகலப்பாக இருப்பதையே விரும்பினார். எங்கள் குடும்பங்களுக்குள் என்ன நடந்தாலும் எங்கள் அத்தான் அதிபர் கனகசபாபதியும், இராசாத்தி அக்காவும்தான் (குறமகள்) உடனே எங்களுக்கு அறிவிப்பார்கள். இவர்கள் இருவரும் எங்களுக்கு வழிகாட்டியாக மட்டுமல்ல, எங்களைத் தாங்கும் தூணாகவும் இருந்தார்கள்.
இவர் எனது தந்தையின் அண்ணாவின் முத்த மகள். எங்கள் இருவரின் வீடும் ஒரே காணியில் இருந்தது. நடுவில் ஒரு வேலிபோட்டு போய்வருவதற்கு வசதியாக இடம் விடப்பட்டிருந்தது. நாங்கள் வாழ்ந்த குருவீதியில், குரு விளையாட்டுக் கழகத்தை ஆரம்பிக்கும்வரை இராசாத்தி அக்கா வீட்டு முற்றமே எங்கள் விளையாட்டுத் திடலாக அமைந்தது. அவரிடம் தலைமைத்துவம் இருப்பதை அப்போதே கவனித்திருக்கின்றேன். எனது தந்தையார் குருநாதபிள்ளை காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரி அதிபராகவும், காங்கேசந்துறை உள்ளுராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். அக்காவிற்குச் சிறியதந்தையான எனது தந்தையே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தனக்கு வழிகாட்டியாக இருந்ததாக அக்கா அடிக்கடி சொல்வார். தனது நூலான ‘மாலை சூட்டும் மணநாள்’ என்ற நூலை அவருக்கே சமர்ப்பணம் செய்து அதில் இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தார். எங்கேயாவது வெளியே போவதானால் வீட்டிலே விடமாட்டார்களாம், அப்போதெல்லாம் எனது தந்தைதான் அனுமதி பெற்றுத் தருவதாகவும் சொல்வார். உறவு என்பதைவிட, வழிகாட்டி அறிவூட்டிய ஆசிரியர் என்பதற்கான நன்றிக்கடனே அவர் செய்த இந்தச் சமர்பணம்.
எனது பெரியப்பாவான மு.அ. சின்னத்தம்பியின் மூத்த புதல்விதான் இராசாத்தி அக்கா. அடுத்துப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு ராணி, அரசி, தேவி, ரதி என்று பெயர் சூட்டினார்கள். கடைசி ஆண் குழந்தைக்கு நவநீதன் என்று பெயர் சூட்டினர். அருகே இருந்த குலதெய்வமான குருநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் தங்குவதற்காக ஒரு மடம் கட்டி அக்காவின் நட்சத்திரமான ரோகிணி என்ற பெயரிலே ‘ரோகிணிமடம்’ என்ற பெயரைச் சூட்டி, திருவிழாக் காலங்களில் வருடாவருடம் அந்த மடத்தில் அன்னதானமும் நடைபெற்றதை இன்றும் மறக்க முடியாது. இன்று இருந்த இடமே தெரியாமல் எல்லாமே தரைமட்டமாக்கப் பட்டு விட்டது. மூலஸ்தானத்திற்குப் பின்னால் இருந்த அரசமரம் மட்டும் அந்த இடத்தில் நிமிர்ந்து நிற்கின்றது.
விகடன் ஆசிரியர் உண்மைச் சம்பவம் ஒன்றை விகடன் தீபாவளி மலருக்காக எழுதி அனுப்பும்படி கேட்டிருந்தார். அப்போது அக்காவின் பாத்திரம்தான் கண்ணுக்குள் வந்தது. 1983 ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் அகதிகளாக நாங்கள் நங்கூரி என்ற கப்பலில் காங்கேசந்துறை நோக்கித் திரும்பி வந்தபோது, மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் கடலில் குதிக்க முயன்றார். அக்காவை உடனே அழைத்து வந்து அவருக்கு ஆறுதல் சொல்ல வைத்தேன். அக்கா சொன்னதை அவர்கள் கேட்டார்கள். அக்காவின் ஆளுமையை அங்கே அவதானித்தேன். அந்த சம்பவத்தின் கருவில் பிறந்ததுதான் ‘நங்கூரி’ என்ற ஈழத்தமிழரின் அவலத்தை எடுத்துச் சொன்ன கதை.
இராசாத்தி அக்காவின் கணவர் பெரியத்தான் இராமலிங்கம் அவர்கள் மிகவும் அன்பானவர். சிறுவனாக இருந்தபோது. மழையில் நனைந்ததால் எனக்குக் காய்ச்சல் வந்து படுத்திருந்தேன். அத்தான் காலையில் மெயில் வண்டியில் கடமையில் வந்திருந்தார். மாலை மெயில் வண்டியில் திரும்பிச் செல்ல வேண்டும். அப்படியிருந்தும் வாடகை வண்டி ஒன்றைப் பிடித்து மூளாய் வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றதை என்னால் என்றும் மறக்க முடியாது. அதேபோல, அக்காவின் கடைசி மகள் ‘ரோசா’ என்னாலே மறக்க முடியாத முகம்.
1983 ஆம் ஆண்டு கொழும்பிலே அடிபட்டு சொந்த மண்ணிலே அனாதையாக வந்த போது நடேஸ்வராக் கல்லூரியில் பதிவு செய்வதற்காக நின்ற போது என்னிடம் ஓடிவந்து முதலில் ஆறுதல் சொன்னது ரோசாதான். தன்னார்வத் தொண்டர்களாக அப்போது சசிகலாவும், ரோசாவும் இனக்கலவரத்தில் அடிபட்டு வந்தவர்களுக்கு அங்கே நின்று உதவிக் கொண்டிருந்தார்கள். அகதிகள் பலரின் வாக்கு மூலத்தைக் கேட்டதாலோ என்னவோ, ரோசா இயக்கத்திற்குச் சென்றதற்கு அதுவும் ஒரு காரணமாகும். அவர் மறைந்த போது ‘மறந்தாலும் நெஞ்சம் மறக்காதமா’ என்று 31 வது நாள் நினைவு அஞ்சலிக்காக அவரைப்பற்றிய ஒரு கதையை எழுதித் தமிழகத்தில் இருந்து வெளிவரும் குமுதத்திற்கு அனுப்பியிருந்தேன். அதனால் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்களுக்கு குகபாலிகா என்ற மாவீரரான மேஜர் துளசியின் தியாகத்தை எடுத்துச் சொன்ன கதையாகியது. எனது உள்ளத்தில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது ரோசாவின் மறைவுதான்.
அக்கா தான் படித்த கல்லூரியான நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) மலருக்காக நடேஸ்வராக் கல்லூரியின் ஆரம்ப காலம் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தந்திருக்கின்றார். அவரது ஆக்கத்தை அவர் நினைவாக எப்படியும் ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பமாகும். அவரது இன்னுமொரு விருப்பம் பிறந்த மண்ணான மாவிட்டபுரம் பற்றிய சரித்திரத்தை ஆவணப்படுத்த வேண்டும் என்பது. மகாஜனாக்கல்லூரியில் எனது தமிழ் ஆசிரியரான தமிழ் ஒளி த. சண்முகசுந்தரத்திடம் இருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு சில அத்தியாயங்களை எழுதிவிட்டு அதுபற்றி அக்காவிடம் ஆலோசனை கேட்டேன். எனக்குத் தெரிந்திராத, அவரது தாயார் சொன்னதாகப் பல விடையங்களை அவர் அப்போது என்னிடம் குறிப்பிட்டிருந்தார். அவரது விருப்பப்படி அந்த நாவலையும் பூர்த்தி செய்ய வேண்டும். அக்கா எங்களை விட்டுப் பிரிந்தாலும் அவரது ஆக்கங்கள் தமிழ் மொழி இருக்கும்வரை மறையாது என்பதைக் கூறி அவரது மறைவினால் துயருறும் குடுப்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் கூறி, அவரது ஆத்மா சாந்தியடையக் குருநாதரை வேண்டுகிறேன்.
பெயர்: வள்ளிநாயகி இராமலிங்கம் - 1933-2016
புனைப்பெயர்: குறமகள்
இடம்: மாவிட்டபுரம், காங்கேசந்துறை
தகப்பன்: மு.அ. சின்னத்தம்பி
தாய்: செல்லமுத்து
கணவர்: இராமலிங்கம்
பிள்ளைகள்:
சசிகலா
கலைவாணி
குருமோகன்
துளசிராம்
குகபாலிகா
கனடாவிற்கு வந்தது: 1991
ஆக்கங்கள்:
உள்ளக்கமலமடி
மாலை சூட்டும் மணநாள்
குதிர்காலக் குலவல்கள்
இராமபாணம்
யாழ்ப்பாணத் தமிழ் பெண்கள் கல்வி
அகநிதன்-மிதுனம்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.