- கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் 28-03-2015 அன்று ரொறன்ரோ தமிழ் சங்கம் நடத்திய ஒன்றுகூடலின்போது வாசித்த கட்டுரையில் இருந்து சில பகுதியை மட்டும் இங்கே தருகின்றேன். - குரு அரவிந்தன் -
ஒரு சிறுகதை எழுதியவர்களே தங்களைச் ‘சிறுகதை எழுத்தாளர்கள்’ என்று சொல்லிக் கொள்பவர்கள் மத்தியில் இக்கட்டுரை எல்லோரையும் திருப்திப் படுத்த மாட்டாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் இப்படி ஒரு கட்டுரையை யாராவது எழுதாவிட்டால் கனடிய சிறுகதை இலக்கியத்தை ஆவணப்படுத்த முடியாமல் போய்விடலாம் என்பதால் ரொறன்ரோ தமிழ் சங்கத்தினரின் விருப்பத்திற்கிணங்க இக்கட்டுரையை இங்கே வாசிக்கின்றேன். நான் வாசித்த என் நினைவில் நிற்கும் அனேகமாகக் கனடாவில் வெளிவந்த சிறுகதைகள் சிலவற்றின் கருப்பொருட்களை மட்டுமே இங்கே குறிப்பிடுகின்றேன்.
ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்த பின்புதான் தமிழ் சிறுகதைகள் அவர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வளர ஆரம்பித்தன. அந்தவகையில் கனடாவில் 1980 களின் பின்தான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி அடையத் தொடங்கியது எனலாம். கனடாவில் தமிழ் சிறுகதைகளை எழுதுபவர்களில்; அனேகமானவர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த எழுத்தாளர்களாகவே இருக்கின்றார்கள். பொதுவாகத் தமிழ்ச் சிறுகதைகள் தாயக வாழ்க்கை அனுபவங்களையும், இந்த மண்ணில் சுமார் 30 வருடகால வாழ்வியல் அனுபவங்களையும் கொண்டனவாகவும் இருக்கின்றன. குறிப்பாக ஈழத்துப் பொதுச் சூழலில் எழுந்த கதைகள், ஈழத்துப் போராட்டச் சூழலில் எழுந்த கதைகள், புலம் பெயர்தலின் போது ஏற்பட்ட அனுபவங்கள், கனடிய சூழலில் எழுந்த கதைகள், இவை இரண்டையும் கடந்து சர்வதேச சூழலில் எழுந்த கதைகள் எனப் பல்வேறு சூழலை மையமாகக் கொண்ட கனடாவில் வெளிவந்த தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை கடந்த காலங்களில் என்னால் வாசிக்க முடிந்தது.
கனடியச் சிறுகதை இலக்கியம் பற்றி இன்று பரந்த அளவில் பேசப்படுவதற்குக் காரணம், கனடாவில் வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகைகள், இதழ்கள், இணையப் பத்திரிகைகள், வெளியீட்டு நிறுவனங்கள் போன்றவை சிறுகதைகளை வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்கிவித்தது மட்டுமல்ல, சிறுகதைப் போட்டிகள் வைத்துப் பரிசுகள் வழங்கி இலக்கிப்பணி புரிகின்றமையும் குறிப்பிடத் தக்கது. அதேபோல நவீன வசதிகள் காரணமாக, வானொலிகள், தொலைக்காட்சிகள், ஒலிப்புத்தகங்கள் மூலம் சிறுகதைகளை ஒலியமைப்பில் கேட்கவும் முடிந்தது. கனடிய குடியுரிமை பெறாத சில எழுத்தாளர்களின் கதைகளும் இங்கே உள்ள ஊடகங்களில் வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக இலங்கை மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கமாக மகாஜனக்கல்லூரியின் 100 வது ஆண்டு விழாவை முன்னிட்டு எழுத்தாளர் குரு அரவிந்தனால் வெற்றிமணி பத்திரிகை ஆதரவுடன் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் பங்கு பற்றிப் பரிசு பெற்ற மாணவர்களின் கதைகள் கனடாவில் வெளிவரும் தூறல் இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அதேபோல கனடியர்கள் அல்லாதோரின் பல கதைகள் இங்கே உள்ள பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. இதுவரை கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகள் எல்லாவற்றையும் இங்கே குறிப்பிட முடியாவிட்டாலும், கனடாவில் வெளிவந்த, நான் வாசித்த, எனது ஞாபகத்தில் இருக்கும் தமிழ் சிறுகதைகள் சிலவற்றின் கருப்பொருட்களை மட்டுமே நேரம் கருதி இப்போது இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
போர்க்கால சூழல், நாட்டைவிட்டுப் புலம் பெயர்ந்த அனுபவங்கள், போர் முடிந்தபின் நாட்டு நிலமை, கனடிய இளைஞர் பிரச்சனை, முதியோர் பிரச்சனை, பெண்ணியப் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, பல்கலாச்சாரப் பிரச்சனை, பொதுவான அறிவியல் முன்னேற்றம் போன்றவையே கடந்த காலச் சிறுகதைகளில் அதிகம் பேசுபொருளாக இருந்தன. புலம் பெயர்ந்த தலைமுறையே எழுத்தாளர்களாகவும், வாசகர்களாகவும் இருந்ததால், தாய் மண் மீது இருந்த பற்றுதல் காரணமாக ஈழத்துச் சூழலில் எழுந்த கதைகள் தொடக்கத்தில் வாசகர் மத்தியில் அவர்களின் நினைவலைகளைத் தூண்டி விட்டதால், அதிக வரவேற்பைப் பெற்றன. அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டு எழுத்தாளர்களால் யதார்த்தமாகக் கையாள முடியாத போர்க்கால அனுபவங்களைக் கருப் பொருளாகக் கொண்ட சிறு கதைகளைப் போர்க்காலச் சூழலில் வாழ்ந்து புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தார்களால் இலகுவாகக் கையாள முடிந்தது. குறிப்பாக குரு அரவிந்தன் எழுதிய போர்க்காலச் சூழலைக் கருப்பொருளாகக் கொண்டு வெளிவந்த நங்கூரி (விகடன்) மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா (குமுதம்) போதிமரம் ( கல்கி) அம்மாவின் பிள்ளைகள் (யுகமாயினி) தாயுமானவர் ( கலைமகள்) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இனி எனது ஞாபகத்தில் நிற்கும் சில எழுத்தாளர்களின் பெயர்களை ஆவணப் படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு இங்கே அவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்புகின்றேன். இவர்களில் மூத்த எழுத்தாளரான குறமகள், அ. முத்துலிங்கம், குரு அரவிந்தன், வித்துவான் க. செபரத்தினம், பொ.கனகசபாபதி, கவிஞர் வி. கந்தவனம், வ.ந. கிரிதரன், அகில், பொன்குலேந்திரன், க.ரவீந்திரநாதன், டானியல்ஜீவா, கலைவாணி ராஜகுமாரன், சம்பந்தர், மனுவல் ஜேசுதாசன், வீரகேசரி மூர்த்தி, நவம், ஸ்ரீpரஞ்சனி விஜேந்திரா, சிவநயனி முகுந்தன், மாலினி அரவிந்தன், கணபதிரவீந்திரன், சுரேஸ் அகணி, கதிர் துரைசிங்கம், கமலா தம்பிராஜா, தேவகாந்தன், கடல்புத்திரன், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், த. அகிலன், சித்திவிநாயகம், வ.மூர்த்தி, வீணைமைந்தன், ஜெகதீசன், காலம் செல்வம், சா.வே. பஞ்சாட்சரம், நா.கணேசன், அசை சிவதாசன், குமார் மூர்த்தி, பவான், மைக்கல், ஜோர்ஜ் குருஷேவ், இளங்கோ, சுமதி ரூபன், த. மைதிலி, செழியன், மொனிக்கா, மெலிஞ்சிமுத்தன், விஜயா ராமன், சரஸ்வதி அரிகிருஷ்னன் போன்றவர்களின் சிறுகதைகளைக் கடந்த காலங்களில் வாசித்தது என் நினைவில் நிற்கின்றது. இவர்களில் அ, முத்துலிங்கம், குரு அரவிந்தன் ஆகியோர் 100 சிறுகதைகளுக்கு மேல் இதுவரை எழுதியிருக்கின்றார்கள். தேவகாந்தன், வ.ந. கிரிதரன், அகில் போன்றோர் சுமார் ஐம்பது கதைகளுக்கு மேல் எழுதியிருப்பதாகத் தெரிகின்றது. அதே சமயம் இரண்டு மூன்று சிறுகதைகளோடு நிறுத்திக் கொண்டவர்களும் இங்கே இருக்கின்றார்கள். இவர்களில் சிலர் வர்த்தகப் பத்திரிகைகளில் எழுதியவர்களும், சிற்றிலக்கியப் பத்திரிகைகளில் எழுதியவர்களும், சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டவர்களும் அடங்குவர்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் தொகுத்து வெளியிடப்பட்ட ‘அரும்பு’ என்ற சிறுகதைத் தொகுப்பிலும், கனடா உதயன் இதழ் வெளியீடான 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தூரமும் துயரமும் போன்ற வெளியீடுகளிலும் வெளிவந்த சிறுகதைகளின் கருப்பொருட்கள் குறிப்பிடத் தக்கன. பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள தனது பிள்ளைகளுக்காக தனது இறுதிக்காலம் வரையும் வாழ்ந்து அவர்களின் நலனுக்கு இறைவனிடம் வேண்டிக்கொண்டு இறைவனாகிவிட்ட பெற்றோரை நினைத்து ஏங்கும் பிள்ளைகளைப் பற்றிய கதையாகவும், ஒரு விடுதலைப் போராளியின் இதயம்தான் உலகிலே மிகவும் மென்மையானது ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் துன்ப துயரங்களைக் கண்டு தாங்க முடியாதவனே போராளியாகிறான் என்று விடுதலைப் போராட்டம் பற்றிய கதையாகவும், இன்னுமொருகதை சொந்த மண்ணுக்காகத் தம்முயிர் தந்தவர்களின் பாதையில் நடக்கப் போகிறேன், என்னைத் தாங்கிச் சுமந்து காத்த மண்ணின் விடியலுக்காக உழைக்கப்போகிறேன். என்ற தாய் மண்ணின் விடியலுக்கான சூழலையும், காலத்தையும் பிரதிபலிப்பதாகவும் இருந்தது. இன்னுமொரு கதை ஆபத்து நிறைந்திருந்த கோப்பாய் கைதடிப் பாதையைக் குறியீடாகக் காட்டி, அன்று தாய் மண்ணிருந்த நிலமையையும் காலத்தையும் காட்டுகின்றது. இன்னும் ஒரு கதை ‘பிரசாந் என்ன பேசாமல் இருக்கிறியள், நாங்கள் பதிவுக் கந்தோரில் திருமணத்தை முடித்து விடுவோம், என் வயிற்றில் வளரும் குழந்தைக்குத் தாய் தந்தையர் பெயரைக் கொடுக்க வேண்டுமல்லவா?’ என்று திருமணம் செய்யாது ஒன்றாக வாழும் ஒரு பெண் கேட்பது, எமது கலாச்சாரத்தைக் கைவிடமுடியாமலும், வெளிநாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்ற முடியாமலும் இரண்டும் கெட்டான் நிலையில் வாழும், போர்ச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி வெளிநாடு வந்த ஒரு சிலரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கின்றது. இன்னுமொருகதை சீதனக் கொடுமையையும், அதனால் பெண்களைப் பெற்றோர் படும் அவஸ்தையையும் எடுத்துக் காட்டுகின்றது. அரும்பு, தூரமும் துயரமும் ஆகிய இந்த இரண்டு சிறுகதைத் தொகுப்பிலும் எனது சிறுகதைகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
‘பனியும் பனையும்’ என்ற சிறுகதைத் தொகுப்பு 1994இல் எஸ்.பொ.வின் மித்ர பதிப்பக வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்தது. ஆரம்ப காலத்தில் வெளிவந்த இந்தக் கதைகள் உள்ளுர் பத்திரிகைகளில்; மறுபிரசுரம் செய்யப் பட்டிருக்கலாம் என எண்ணுகின்றேன். இதேபோல, கணையாழி இதழ் வெளியிட்ட கனடாச் சிறப்பிதழ் பற்றியும் இணையப் பத்திரிகையான பதிவுகளில் இருந்து தெரிய வருகின்றது. ஜீவநதி கலை இலக்கிய மாத சஞ்சிகையின் 48வது இதழ் கனடாச் சிறப்பிதழாக வெளிவந்திருந்தது. மேற்குறிப்பிட்ட கனடா சிறப்பு மலர்களில் ஒரு சில எழுத்தாளர்களின் ஆக்கங்களே இடம் பெற்றிருந்ததை, அமரர் அதிபர் பொ.கனகசபாபதி அவர்கள் இப்படியான குழு நிலையில் தொடர்ந்தும் இயங்கினால் கனடிய தமிழ் இலக்கியம் அதன் உச்சத்தை ஒருபோதும் தொடப்போவதில்லை என்று ஒரு சமயம் சுட்டிக் காட்டியிருந்ததையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். அந்தக் குறையை ஞானம் 175 வது மலரான ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய மலர் ஓரளவு நிவர்த்தி செய்திருக்கின்றது. ஞனம் இதழ் வெளியிட்ட போர்க்கால இலக்கிய இதழில் விட்ட சில தவற்றை இந்த மலரில் திருத்திக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. கனடிய எழுத்தாளர்கள் பலரின் ஆக்கங்கள் இந்த இதழில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக அ. முத்துலிங்கம், யோகா பாலச்சந்திரன், தேவகாந்தன், குமார் மூர்த்தி, க.நவம், சக்கரவர்த்தி, திருமாவளவன், குரு அரவிந்தன், வ.ந. கிரிதரன், அகில், சுமதி ரூபன், வீரகேசரி மூர்த்தி, மனுவல் ஜேசுதாசன், ஸ்ரீ ரஞ்சனி, துறையூரான், கடல் புத்திரன், மெலிஞ்சிமுத்தன், இளங்கோ, வசந்திராஜா ஆகியோரது சிறுகதைகள் இடம் பெற்றிருப்பது பாராட்டத் தக்கது.
அடுத்து கனடாவில் இருந்து வெளிவரும் ஆண்டு மலரான கூர் கனடாவில் வெளிவந்த சிறுகதைகளைப் பற்றியும் குறிப்பிட விரும்புகின்றேன். இதில் வெளிவந்த சில சிறுகதைகளின் தரம் எதிர்பார்த்தபடி கிடைக்கவவில்லை என்று அதன் தொகுப்பாசிரியர் குறிப்பிட்டாலும், தரநிர்ணயத்தை யார் செய்கிறார்கள் என்று பார்த்தால் அது வாசகர்களின் கையில்தான் இருக்கின்றது. ஒரு ஆசிரிருக்குப் பிடிக்காத கதை பல வாசகர்களுக்குப் பிடிக்கும் என்பதையும் நான் எனது அனுபவத்தில் கண்டிருக்கின்றேன். கதையைப் பார்க்காது கதையை எழுதியவரைப் பார்த்து தரத்தை நிர்ணயிக்கும் நிலை இன்றும் கனடிய தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல்லாக இருக்கின்றது. அதுமட்டுமல்ல, இதழ் தொடர்ந்தும் வெளிவர வேண்டும் என்றால் பொருளாதார நிலை காரணமாக நிதி கொடுத்தவருக்கு, அல்லது அரச நிதி எடுக்க உதவியவர்களுக்குக் கடமைப்பட வேண்டிய நிலையிலும் பத்திரிகை ஆசிரியர்கள் இன்று இருக்கின்றார்கள். சிறுகதைகளின் தரம் போதாது என்று குறை சொல்பவர்கள் கனடிய எழுத்தாளர்கள் பலர் கனடாவில் மட்டுமல்ல வெளிநாட்டு பத்திரிகைகளிலும் எழுதிப் பரிசுகளும் விருதுகளும் பெற்றுச் சாதனைகள் படைத்திருக்கின்றார்கள் என்பதையும் இங்கே நினைவில் கொள்வது நல்லது. இச்சந்தர்ப்பத்தில் கனடாவில் வெளிவந்த தமிழ் சிறுகதைகளின் கருப்பொருட்கள் என்ற தலைப்பில் நான் வாசித்த என் நினைவில் நின்றவற்றை இங்கே எடுத்துச் சொல்லச் சந்தர்ப்பம் தந்த ரொறன்ரோ தமிழ் சங்கத்தினருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.