இன்று உலக மகளிர் தினம். ஆணும் பெண்ணும் சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையும், அனைத்துத் தரப்பினருமே சரிநிகர்சமானமாக வாழும் வாழ்க்கையுமே சமூகப்பிரக்ஞை மிக்க மனிதர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கமுடியும். அதேசமயம், எப்போதுமே சிலர் பாதிக்கப்பட்டவர்களாகவே தம்மை முன்னிறுத்திக்கொள்வார்கள். Playing the victim card. அதைச் செய்யும் ஆண்களும் உண்டு. அது எனக்குப் பிடிக்காத விஷயம். அதேபோல், மாற்றுத்திறனாளிகளையும், அவர்கள் பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தும் மக்கள் இயக்கங்கள், பெண்கள் இயக்கங்கள் குறைவு என்பதும் வருத்தத்திற்குரிய உண்மை.
THE AGE OF ABILITY என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 5ஆம் தேதி பகிரப்பட்ட ஒரு காணொளி உரையை பதிவுகள் இணையதள ஆசிரியர் கிரிதரன் நவரத்தினம் முகநூலில் தன் டைம்-லைனில் பதிவேற்றியுள்ளார். NORA ZEMERA என்ற BHUTAN நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான, இளம்பெண்ணின்(பாகிஸ்தானிய தேசிய தொலைக் காட்சியில் நிகழ்ச்சித்தொகுப்பாளராக இயங்கிவரும் இவர் ஃபேஸ்புக்கிலும் இருக்கிறார் என்று நினைக் கிறேன்) இந்த உரையை மகளிர்தினமான இன்று என்னால் முடிந்த அளவு மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம் என்று தோன்றியது. அத்தனை எழுச்சிமிக்க உரை இது. _ லதா ராமகிருஷ்ணன்
நீங்கள் என் இயலாமையைப் பார்க்கிறீர்கள். நான் என் திறமையைப் பார்க்கிறேன். நீங்கள் என்னை ஊனமுற்றோர் என்றழைக்கிறீர்கள். நான் என்னை மாற்றுத்திறனாளி என்று அழைக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நேரலாம். அவை உங்களை உடைந்துபோகச் செய்கின்றன; உருக்குலையச் செய்கின்றன. ஆனால், அவையே உங்களை உங்களுடைய ஆகச்சிறந்த பாங்கில் வார்த்தெடுக்கின்றன; வடிவமைக்கின்றன. என் வாழ்க்கையிலும் அப்படியொரு சம்பவம் நடந்தது. எனக்குப்பதினெட்டு வயதாகும்பொது என் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று என் தந்தை விரும்பினார். நான் அவரிடம் சொன்னதெல்லாம் இதுதான்: நான் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்குமானால் நான் அப்படியே ஆகட்டும்.”. அந்தத் திருமணம் ஒருபோதும் மகிழ்ச்சியானதாக இருந்ததில்லை.
திருமணமாகி இரண்டுவருடங்களே ஆகியிருந்தபோது நான் ஒரு கார் விபத்தில் சிக்கிக்கொண்டேன். எப்படியோ என் கணவர் தூங்கிவிட்டார். கார் ஒரு ஆழ்பள்ளத்தில் விழுந்துவிட்டது. அவர் எப்படியோ சமாளித்து காரிலிருந்து குதித்துத் தன்னைக் காப்பாற்றிக்கொண்டுவிட்டார். அவர் தப்பித்ததில் எனக்கு மகிழ்ச்சியே.
ஆனால், நான் காரிலேயே இருக்கும்படியாகியது. எனக்கு ஏராளமான காயங்கள் ஏற்பட்டன. நீண்ட பட்டியல் அது. கேட்டு பீதியடைந்துவிடாதீர்கள். மணிக்கட்டில் எலும்புமுறிவு, தோள்பட்டை எலும்பும், கழுத்துப்பட்டை எலும்பும் முறிந்துவிட்டன. என்னுடைய விலா எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டது.
இவ்வாறு இடுப்பு எலும்புக்கூடு முழுவதுமாக நொறுங்கிவிட்டதால் என் நுரையீரல்களும் கல்லீரலும் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. என்னால் மூச்சுவிட முடியவில்லை. சிறுநீரை அடக்கிக்கொண்டு உரிய நேரத்தில் வெளியேற்றும் கட்டுப்பாட்டை என் சிறுநீரகங்கள் அறவே இழந்துவிட்டன. முதுகுத் தண்டுவடத்தில் மூன்று எலும்புகள் முழுவதுமாக நொறுங்கிவிட்டன. அதன் விளைவாக நான் அதற்குப் பிறகான வாழ்க்கையில் இயங்கவே இயலாதவளானேன்.
இறுதியாக ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இரண்டரை மாதங்கள் அங்கே இருந்தேன். எத்தனையோ அறுவைசிகிச்சைகள் நடந்தன. ஒரு நாள் மருத்துவரொருவர் என்னிடம் வந்தார். “நீங்கள் ஒரு ஓவியக்கலைஞராக ஆசைப்பட்டதாகவும், ஆனால், குடும்பத் தலைவியாகிவிட்டதாகவும் நான் கேள்விப்பட்டேன். ஒரு மோசமான தகவலை உங்களுக்குத் தந்தாகவேண்டிய நிலையில் இருக்கிறேன். உங்களால் இனி ஓவியந்தீட்ட முடியாது. ஏனெனில், உங்களுடைய மணிக்கட்டும், கையும் மிக மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளதால் உங்களா இனி பேனாவைக் கையில் பிடிக்க இயலாது. மறுநாள் மருத்துவர் மீண்டும் வந்து என்னிடம் கூறினார்: ”உங்களுடைய முதுகுத்தண்டில் ஏற்பட்டுள்ள காயம் மிக மோசமானது. அதனால் உங்களால் இனி எழுந்து நடக்க முடியாது. உங்கள் முதுகுத்தண்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை உறுப்பு காரணமாய் இனி உங்களால் குழந்தை பெற்றெடுக்க முடியாது”
அன்று நான் முழுவதுமாய் நொறுங்கிப்போனேன். என் அம்மாவிடம் கேட்டேன்: ‘இது ஏன் எனக்கு நடந்தது?’ அன்றுதான் நான் என் வாழ்க்கையையே, இருப்பையே கேள்விக்குட்படுத்தத் தொடங்கினேன். ‘நான் ஏன் இன்னமும் உயிரோடிருக்கிறேன்?’ என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.
அப்பொழுதுதான் ஆன்மாவுக்கு நிவாரணமளிக்கும், ஆன்மாவை குணப்படுத்தும் சக்தி வார்த்தைகளுக்கு இருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். என் அம்மா என்னிடம் சொன்னார்கள்: “இதுவும் கடந்துவிடும்” கடவுளிடம் உனக்கான பெரிய திட்டம் ஒன்று இருக்கிறது. அது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், கண்டிப்பாக அவரிடம் உனக்கான ஒரு மகத்தான திட்டம் இருக்கிறது”.
அத்தனை துயரத்திலும், கையறுநிலையிலும் அந்த வார்த்தைகள் மந்திரச்சொற்களாய் என்னை ஆட்கொண்டன. அவை என்னைத் தொடர்ந்து வாழவைத்துக்கொண்டிருந்தன. ஒருநாள் நான் என்னுடைய சகோதரர்களிடம் சொன்னேன்: “என்னிடமிருப்பது உருக்குலைந்த கை என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், இந்த மருத்துவமனையின் வெள்ளைச்சுவர்களையே பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு அயர்வாக இருக்கிறது. இந்த வெள்ளைத் துணிகளையே அணிந்துகொண்டிருப்பது என்னைக் களைத்துப்போகச் செய்கிறது. என் வாழ்வில் வண்ணங்களைச் சேர்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். ஏதாவது செய்ய விரும்புகிறேன். எனக்குச் சில வண்ணங்களைக் கொண்டுவந்து தாருங்கள். எனக்கு ஓவியந்தீட்ட ஆசையாய் இருக்கிறது”.
ஆக, நான் தீட்டிய முதல் ஓவியம் என் மரணப்படுக்கையின் மீதிருந்துதான். அப்படி நான் என் முதல் ஓவியத்தைத் தீட்டியபோது அது வெறுமே ஒரு ஓவியமோ அல்லது என்னுடைய ஆசையோ அல்ல. அது எனக்கான சிகிச்சை. பிறகு நான் மருத்துவமனையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு வீடுவந்துசேர்ந்தேன்.
வீட்டிற்கு வந்தபிறகு, எப்பொழுதும் படுத்துக்கொண்டே யிருப்பதால் உடல் அழுத்தப்பட்டு என்னுடைய பின்பகுதியிலும் விலா எலும்பிலும் நிறைய புண்களும் ரணங்களும் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. என்னால் உட்கார இயலவில்லை. என் உடலில் நிறைய நோய்த்தொற்றுகளும், ஒவ்வாமைகளும்(அலர்ஜி) இருந்தன. நான் எப்பொழுதும் படுக்கையில் நேராக நீட்டிப் படுத்திருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறினார்கள். அப்படி ஆறுமாதங்களல்ல, ஒரு வருடமல்ல – இரண்டு முழு வருடங்கள் நான் படுக்கையிலேயே கிடந்தேன் _ ஒரே அறையில் அடைபட்டுக் கிடந்தேன். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி, பறவைகளின் கீச்சொலிகளைக் கேட்டபடி…. ’ஒருவேளை அந்த நாள் வரலாம் – நானும் என்னுடைய குடும்பத்தாரோடு வெளியே சென்று இயற்கையை ரசிக்கும் காலம் ஒன்று வரக்கூடும்’ என்று எண்ணியபடியே…..
அப்போதுதான், மனிதர்கள் எத்தனை பேறுபெற்றவர்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது. அப்போதுதான் ’நான் என்று உட்காரப்போகிறேனோ அன்று என் சக மனிதர்களிடம் என்னுடைய வலிகளைப் பற்றி எடுத்துரைத்து அவர்கள் எத்தனை பேறுபெற்றவர்கள் என்பதை அவர்களிடம் எடுத்துரைக்கப்போகிறேன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனால், அவர்களோ தங்களை அதிர்ஷ்டசாலிகள் என்று எண்ணுவதேயில்லை.
அன்று நான் தீர்மானித்துக்கொண்டேன் – என்னுடைய பயங்களை எதிர்த்துப் போராடுவேன். கண்டிப்பாகப் போராடுவேன். நம் எல்லோரையுமே பலவிதமான அச்சங்கள் அலைக்கழிக்கின்றன. நம்மால் அறிந்துணர முடியாதவைகளைப் பற்றிய அச்சம், இழப்புகள் குறித்த அச்சம். மனிதர்களை இழப்பது குறித்து, உடல்நலனை இழப்பது குறித்து பணத்தை இழப்பது பற்றி,யெல்லாம் எத்தனையெத்தனை அச்சங்கள். நாம் பார்க்கும் வேலையில் யாரும் எட்டாத உயரத்தை அடைய ஆசைப்படுகிறோம், பேரும் புகழும் அடைய விரும்புகிறோம், மேலும் மேலும் பணத்தை ஈட்டப் பரிதவிக்கிறோம், இப்படி எல்லா நேரமும் அச்சங்களால் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.
எனவே, ஒருநாள் நம்மை ஆட்டிப்படைக்கும் அந்த அச்சங்கள் எல்லாவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக எழுதிப் பட்டியலிட்டேன். இந்த அச்சங்கள் அத்தனையையும் நான் என்னிடம் இல்லாமலாக்கப் போகிறேன். இவற்றைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறப்போகிறேன் என்று முடிவுசெய்து கொண்டேன். ஒரு சமயத்தில் ஒரு பயத்தை எதிர்கொண்டு மோதி வெற்றிகொள்வது என்று தீர்மானித்துக்கொண்டேன்.
என்னுடைய மிகப் பெரிய அச்சம் எது தெரியுமா? விவாகரத்து. என்னை இனியும் விரும்பாத ஒரு நபரை நான் விடாமல் இறுகப் பற்றியிருக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். எப்படியாவது அந்த உறவை சரியாக்கிவிட வேண்டும் என்ற விருப்பத்தோடு முயற்சித்துக்கொண்டிருந்தேன். ஆனால், இது என் அச்சம்தானே தவிர வேறேதுமில்லை என்பதை என்று உணர்ந்து கொண்டேனோ அன்றே நான் அந்த மனிதரை அவர் வழியில் செல்ல விட்டதன் மூலம் எனக்கு விடுதலையளித்துக் கொண்டேன்.
என்னை மனரீதியாக, உணர்வுரீதியாக மிக வலுவானவளாக மாற்றிக்கொண்டுவிட்ட தால், அவர் மறுமணம் செய்துகொள்ளப்போவதாகத் தெரியவந்த நாளில் அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். வாழ்வின் எல்லா நலவளங்களும் உங்களுக்குக் கிடைக்கட்டும்.” அவருடைய நலவாழ்வுக்காக நான் இன்றும் பிரார்த்தனை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரியும்.
இரண்டாவதாக, என்னால் இனி தாயாக முடியாது என்ற உண்மை. அது தெரியவந்தபோது நான் உண்மையிலேயே முழுவதுமாக நொறுங்கிப்போய் விட்டேன். ஆனால், அதன்பின் நான் உணர்ந்து கொண்டேன் – ‘உலகில் எத்தனையோ குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒன்றேயொன்றுதான். ஏற்றுக்கொள்ளப்படுதல். ஆகவே, அழுதுகொண்டேயிருப்பதில் பயனில்லை. போ, போய் ஒரு குழந்தையை தத்தெடுத்துக்கொள். அதைத்தான் நான் செய்தேன்.
நாம் ஏற்றுக்கொள்ளப் பட மாட்டோம் என்று நாம் நினைக்கிறோம் – முழுமையான மனிதர்கள் நிறைந்த உலகில் முழுமையற்றவர்களான நாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டோம் என்று நாம் நினைக்கிறோம். எனவே, உடற்குறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு தன்னார்வத் தொண்டுநிறுவனத்தைத் தொடங்குவதற்கு பதிலாக – அவை ஒருவருக்கும் பயனளிப்பதில்லை என்று எனக்குத் தெரியும் – நான் அடிக்கடி பொதுவெளியில், மக்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தேன்.
நான் ஓவியந்தீட்ட ஆரம்பித்தேன். பாகிஸ்தான் தேசியத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பா ளராகப் பணியில் சேர முடிவெடுத்தேன். கடந்த மூன்று வருடங்களாக நிறைய நிகழ்ச்சிகளை நடத்திவருகிறேன். ஐ.நாவில் பாகிஸ்தான் பெண்களுக்கான தேசிய நல்லெண்ணத்தூதரானேன் (Goodwill ambassador). இன்று பெண்கள், குழந்தைகளின் நலன்கள், உரிமைகளுக்காகக் குரல்கொடுத்துவருகிறேன். அனைவரையும் உள்ளடக்கவேண்டிய தேவை, பல்வகைமை, பாலினரீதியான சமத்துவம் பற்றியெல்லாம் நாங்கள் பேசுகிறோம். இது கட்டாயம் செய்யவேண்டியது.
நான் பொதுவெளியில், மக்கள் மத்தியில் போகும்போதெல்லாம் புன்னகையோடிருப்பேன். ஒரு பெரிய பெரிய புன்னகை! சிலர் என்னிடம் கேட்பார்கள் – எல்லாநேரங்களிலும் இப்படி புன்னகைத்துக்கொண்டேயிருப்பது உங்களுக்கு சலிப்பாக இல்லையா?” என்று. எப்படி உங்களால் எப்போதுமே புன்னகைத்துக்கொண்டிருக்க முடிகிறது. இதன் ரகசியம் என்ன?” என்று கேட்பார்கள்.
அதற்கான பதிலாய் நான் ஒன்றே ஒன்றைத்தான் எப்போதுமே சொல்வேன். “நான் இழந்தவற்றைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தியாயிற்று. நான் இழந்த மனிதர்களை நினைத்து வருத்தப்படுவதை நிறுத்தியாயிற்று. என்னோடிருக்கவேண்டியவை களும், என்னோடிருக்கவேண்டிய மனிதர்களும் என்னோடுதான் இருக்கிறார்கள். சில சமயங்களில் சிலர் உங்களோடு இல்லாமலிருப்பதும்கூட உங்களை மேம்பட்ட மனிதராக்குகிறது. எனவே, அவர்களுடைய இன்மையைப் போற்றுங்கள். அது எப்போதுமே, எப்போதுமே ஒரு மாறுவேடத்திலான ஆசிர்வாதம்; அருள்பாலிப்பு.
உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள். நீங்கள் எப்படியிருக் கிறீர்களோ அப்படியே உங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிடம் கருணையோடு இருங்கள். ஆம், மீண்டும் கூறுகிறேன் - உங்களிடம் கருணையோடு இருங்கள். அப்படியிருந்தால் மட்டுமே உங்களால் மற்றவர்களிடம் கருணை யோடு இருக்க முடியும். உங்களை நேசியுங்கள். அந்த அன்பைப் பரவலாக்குங்கள். வாழ்க்கை கடினமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக கொந்தளிப்பு கள் இருக்கும்; சோதனைகள் இருக்கும். ஆனால், அவையெல்லாமே உங்களை மேலும் மேலும் வலிமையானவர்களாக மாற்றும்.
எனவே, நீங்கள் எப்படியிருக்கிறீர்களோ அதேய ளவாய் உங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது உலகம் உங்களை அடையாளம் கண்டு அங்கீகரிக் கிறது.
எல்லாமே நமக்குள்ளிருந்து தான் ஆரம்பமாகிறது.
காணொளி: https://www.youtube.com/watch?v=2m9RBAJmvGY