- முடிவுக்கு வந்தது தொடர் நாவல் மார்க் ட்வைனின் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்). கொரோனா தந்த விடுமுறையினை நன்கு பயன்படுத்தி முனைவர் ஆர்.தாரணி மிக விரைவாக, சிறப்பாக நாவலைத் தமிழாக்கம் செய்துள்ளார். அதனை அவர் மிகவும் விருப்புடன், மகிழ்ச்சியுடன் செய்துள்ளார். ஜூலை மொழிபெயர்ப்பு நூலுருப்பெறவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மேனாட்டு இலக்கியங்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாடினான் மகாகவி பாரதி. அதற்கமைய நல்லதொரு ஆங்கில நாவலைத்தமிழுக்குக் கொண்டு வருவதற்குப் 'பதிவுகள்' களமாக இருந்ததையிட்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைகின்றது. உண்மையிலேயே மகிழ்ச்சியும், திருப்தியும் தந்த பங்களிப்பு. இவ்விடயத்தில் முனைவர் தாரணியும் நிச்சயம் பெருமையும், மகிழ்ச்சியுமடையலாம். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அவர் இது போல் மேலும் பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவரவேண்டுமென்று வாழ்த்துகின்றோம். - - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் நாற்பத்தி மூன்று
முதல் தடவையாக, டாமை நான் தனிமையில் சந்திக்க முடிந்தது. அவனின் ஏய்ப்பு வேலை சமயத்தில் அவனின் மனதில் ஓடிய எண்ணங்கள்தான் என்ன என்று அவனிடம் வினவினேன். ஏய்ப்பு செய்தது வெற்றியடைந்து அவனும் எப்படியோ சமாளித்து முன்பே சுதந்திரம் அடைந்த ஒரு நீக்ரோவை மீண்டும் ஒரு முறை விடுவித்திருந்தால் அதன் பின் என்ன செய்யவேண்டும் என்று அவன் திட்டம் தீட்டியிருந்தான்? முதலில் இருந்து ஆரம்பித்து அதே விஷயத்தை பின்பற்றி, மீண்டும் அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருப்பேன் என்று அவன் பதில் கூறினான். எங்களின் பாதுகாப்பில் ஜிம் இருந்திருந்தால், நதியின் கீழ் பக்கமாக தோணியில் பயணம் செய்து, தப்பி ஓடி வந்த அவனைக் காப்பாற்ற வழி முழுதும் சாகசங்கள் செய்து நதியின் கரையை அடைந்திருப்போம் என்று கூறினான்.
அதன் பின்னர் ஜிம் ஒரு சுதந்திர மனிதன் என்ற உண்மையைக் கூறி, அவனை அங்கிருந்து ஒரு நீராவிப் படகில் ராஜமரியாதையோடு பாங்குடன் அழைத்து சென்றிருக்கலாம் என்றான். அவன் தொலைத்த நேரங்களை ஈடு கட்டப் பணம் கொடுத்து, அந்த ஊரின் அனைத்து நீக்ரோக்களையும் அழைத்து வரச் செய்து, ப்ராஸ் இசைக்குழுவினர் பாட்டிசைக்க, அவர்களை ஊரின் நடுவே ஒளிவிளக்கு அணிவகுப்பு மற்றும் வால்ட்ஸ் நடனம் ஆட வைத்திருக்கலாம் என்றான். அந்த ஆட்டத்தின் முக்கிய நாயகன் ஜிம்தான் என்றும் அப்புறம் துணை நாயகர்கள் நாங்கள் தான் என்றும் சொன்னான். ஆனால், திட்டம் அத்தனையும் தலைகீழாக மாறிவிட்டாலும், இத்தோடு முடிந்தது நல்லது என்றே நான் கருதினேன்.
கண் இமைக்கும் நேரத்திற்குள், சங்கிலிகளை கழற்றி வீசி ஜிம்மை விடுவித்தோம். டாமை நல்ல நிலைக்கு கொண்டு வர மருத்துவருக்கு ஜிம் செய்த உதவிகள் மற்றும் டாமுக்கு அவன் செய்த பணிவிடைகள் ஆகியவை அனைவருக்கும் தெரிய வந்ததும், போல்லி பெரியம்மா, சைலஸ் சித்தப்பா மற்றும் சேல்லி சித்தி ஆகியோர் ஜிம்முக்கு கணக்கிலடங்கா புகழாரம் சூட்டினார்கள். மிகச் சிறந்த முறையில் அவனை அவர்கள் நடத்தினார்கள். அவனுக்கு சாப்பிடத் தேவையான அனைத்தையும் கொடுத்து, அவன் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரத்தையும் வழங்கினார்கள். சில முக்கியமான காரியங்களை விவாதிக்க, நோயாளி அறைக்கு அவனை நாங்கள் வரச் செய்தோம். சிறைக் கைதி பாத்திரத்தை மிகவும் நேர்த்தியாகவும், பொறுமையுடனும் நடத்திக் கொடுத்ததைப் பாராட்டி, டாம் அவனுக்கு நாற்பது டாலர்கள் பரிசு கொடுத்தான். மட்டற்ற மகிழ்ச்சியில் ஜிம் உயிரையே விட்டுவிடுவான் போல இருந்தது. ஆனந்தத்தில் இவ்வாறு கூவினான்:
"பார்த்தாயா இப்போது, ஹக்! நாம் ஜாக்சன் தீவில் இருந்தபோது உன்னிடம் நான் என்ன சொன்னேன்? முடிக்கற்றைகள் கொண்ட மார்புடையவன் நான் என்று உன்னிடம் கூறினேன் அல்லவா. அப்படியென்றால் என்னவென்று அர்த்தம் தெரியுமா? ஒரு காலத்தில் நான் பணக்காரனாக இருந்தேன் என்றும் மீண்டும் நான் அதே போல் ஆவேன் என்றும் கூறினேன், ஞாபகம் உள்ளதா? அது இப்போது உண்மையாகி விட்டது. இதோ, இங்கே நான்! இப்போது நான் பணக்காரன். என்னிடம் வேறு எதுவும் கூறாதே. குறிகள் சிலது உண்மையாகவே என்ன நடக்கும் என்று காட்டும் குறிகள்தான். தெரிந்து கொள். நான் இங்கே நிற்பது எவ்வளவு உண்மையோ, அதே போன்றே ஒரு நாள் மீண்டும் நான் பணக்காரன் ஆவேன் என்பதும் அன்றே எனக்குத் தெரிந்திருந்தது."
பின்னர் டாம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான். நாங்கள் மூவரும் மீண்டும் ஒருமுறை ஒரு இரவு நேரத்தில் திருட்டுத்தனமாக வெளியேறி நல்ல ஆடைகள் வாங்கி அணிந்து கொண்டு, ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் இந்தியர்களின் எல்லைகுட்பட்ட பிராந்தியத்தில், இந்தியர்களின் மத்தியில் பிரம்மாண்டமான சாகசங்கள் செய்து கழிக்க வேண்டும் என்று டாம் பேசிக் கொண்டே சென்றான். அது எல்லாம் சரிதான், ஆனால் புது ஆடைகள் வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை என்று நான் வருத்தத்துடன் உரைத்தேன். எனது அப்பா நீதிபதி தாட்சரிடம் சென்று எனது பணத்தை முழுதும் பெற்று இந்நேரம் மதுவாக வாங்கிக் குடித்து முடித்திருப்பார் என்பதால், நான் அங்கு சென்று அவர்களிடமும் பணம் கேட்க முடியாது என்று நினைத்து மனம் வருந்தினேன்.
"இல்லை. அவர் அதை வாங்கவில்லை" டாம் கூறினான், "அது அப்படியே அங்கு உள்ளது. ஆறாயிரம் டாலர்கள், அதற்கும் கொஞ்சம் அதிகமாகவும் கூட இருக்கும் . உனது அப்பா திரும்பி வரவேயில்லை. நான் அங்கிருந்து கிளம்பி வரும்வரை கூட அவர் அங்கே வரவேயில்லை."
கொஞ்சம் தீவிரமான தொனியில் ஜிம் கூறினான்: "அவர் இனித் திரும்பி வரப்போவதேயில்லை, ஹக்!"
"ஏன், ஜிம்?" நான் கேட்டேன்.
"கண்டுக்காதே, ஹக்! - ஆனால் அவர் இனித் திரும்பி வரப்போவதேயில்லை."
எனினும், நான் தொடர்ந்து அவனை நச்சரித்ததால், இறுதியாக அவன் இவ்வாறு கூறினான்:
"ஒரு நாள் நதியில் ஒரு பெரிய வீடு அடித்துக் கொண்டு வந்ததே, அது உனக்கு ஞாபகம் உள்ளதா? உள்ளே ஒரு மனிதன் எப்படி நன்கு மூடப்பட்டுக் கிடந்தான் என்று உனக்கு நினைவிருக்கிறதா? அப்புறம் நான் உள்ளே சென்று மூடியிருந்த அவனின் முகத்தைத் திறந்து பார்த்து விட்டு, எதற்கு உன்னை அங்கே வந்து பார்க்க வேண்டாம் என்று சொன்னேன் தெரியுமா? நல்லது. உனக்குத் தேவைப்படும்போது சென்று உன் பணத்தை நீ வாங்கிக் கொள்ளலாம். ஏனென்றால், இறந்து கிடந்த அந்த மனிதன் உன் அப்பாதான்."
டாம் இப்போது முழுமையாகக் குணமடைந்து விட்டான். தனது கழுத்தில் போட்டிருந்த சங்கிலியில் உள்ள பாக்கட்கடிகாரத்துடன் சேர்த்து அந்த துப்பாக்கிக் குண்டையும் இணைத்து வைத்துக் கொண்டான். மணி என்ன என்பதைச் சோதிக்க அந்தக் கடிகாரத்தில் பார்ப்பதுதான் அவன் வழக்கம். எனவே, இதற்கு மேல் எழுத ஒன்றுமில்லை. அது பற்றி நான் உறுதியாக மகிழ்ச்சியும் கொண்டிருக்கிறேன். ஒரு புத்தகம் எழுதுவது எத்தனை கடினம் என்பது பற்றி முன்பே நான் உணர்ந்திருந்தால், இந்த வேலையை முதலாவதாக நான் தொடங்கி இருக்கவே மாட்டேன். இனி நான் எதுவும் எழுதப் போவதாக எண்ணம் இல்லை. மற்றவர்களுக்கு முன்பாகவே நான் இந்தியப் பிராந்தியத்தின் எல்லை நோக்கி முன்னேறிச் செல்லும் பயணம் மேற்கொள்ளப் போகிறேன் என்ற கருத்துக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், சேல்லி சித்தி என்னைத் தத்தெடுத்து ஒரு நல்ல மனிதாக திருத்தப் போவதாக இருக்கிறாள். அதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அதை நான் முன்பே முயற்சித்துப் பார்த்திருக்கிறேன்.
உங்கள் உண்மையுள்ள,
ஹக் ஃபின்
முற்றும்
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.