என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள். - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'
அத்தியாயம் முப்பத்தி ஒன்பது
அன்று காலை ஊருக்குள் சென்று கம்பிகளோடு கூடிய எலிபிடிக்கும் கருவி நாங்கள் வாங்கினோம். அதை இருப்பதிலேயே பெரிய எலி வங்கின் அருகே வைத்து காத்திருந்தோம். ஒரு மணி நேரத்திற்குள்ளாகவும், புஷ்டியாய் தென்பட்ட பதினைந்து எலிகள் பிடித்து விட்டோம். பின்னர், எலி பிடிக்கப் பயன்படும் அந்தக் கருவியை, சேல்லி சித்தியின் படுக்கையின் கீழ் மறைத்து வைத்தோம்.ஆனால், கொஞ்ச நேரம் கழித்து, நாங்கள் சிலந்திகளைப் பிடிக்க அலைந்து கொண்டிருந்த நேரத்தில், குட்டி பிராங்கிளின் பெஞ்சமின் ஜெபர்ஸன் எலெக்சாண்டர் பிலிப்ஸ் அந்தக் கருவியைக் கண்டுபிடித்து, அந்த எலிகளால் வெளியே வர முடியுமா என்று சோதிக்க எண்ணி அதனின் கதவை திறந்து விட்டிருக்கிறான். அவைகளும் வெளியே வந்திருக்கின்றன. அந்த சமயத்தில் சேல்லி சித்தியும் அவள் அறைக்குள் வந்திருக்கிறாள்.
பிறகென்ன? நாங்கள் வீடு திரும்பிய வேளையில், அவள் தனது படுக்கையின் மீது நின்று கொண்டு தலை வெடித்துவிடும் போலக் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தாள். அவள் களைப்படைந்து போகாவண்ணம், அந்த எலிகளும் அவளுக்குத் தண்ணி காட்டிக் கொண்டிருந்தன. நல்லதொரு மூங்கில் விளாறு கொண்டு சித்தி எங்கள் இருவரையும் வெளுத்து வாங்கினாள். அதெல்லாம் போக, மீண்டும் ஒரு பதினைந்து அல்லது பதினாறு எலி பிடிக்க எங்களுக்கு இன்னொரு இரண்டு மணி நேரம் பிடித்தது. முதல் முறையே நாங்கள் புஷ்டியான எலிகள் பிடித்து விட்டுவிட்டதால் இந்த முறை அவை எங்கள் கைக்குச் சிக்கவில்லை. முதலில் எங்களுக்குச் சிக்கிய குண்டு எலிகள் போன்றவை அதன் பிறகு என்னால் காண முடியவில்லை. எல்லாம் பாழாய்ப் போன அந்த வாண்டுப் பையன் செய்த வேலை!
சிலந்திகள், மூட்டைப்பூச்சிகள், தவளைகள், வெட்டுக்கிளிகள் என இது போன்ற பல உயிரினங்கள் கலந்த கலவையை நாங்கள் தயார் செய்து விட்டோம். தூக்கணாங்குருவிக்கூடு ஒன்று எங்களுக்குத் தேவைப்பட்டது. ஆனால், அந்தக் கூட்டில் அந்தக் குருவிக் குடும்பம் இன்னமும் வசித்துக் கொண்டிருந்ததால், அதை நாங்கள் கலைத்து எடுக்க விரும்பவில்லை. அதற்காக அந்தக் கூட்டை அப்படியே விட்டுவிடவும் எங்களுக்கு மனமில்லை. எங்களால் முடிந்த அளவு அந்த இடத்திலேயே வட்டமடித்துக் கொண்டிருந்தோம். ஒன்று அவைகளை நாங்கள் சலித்துப் போக வைக்க வேண்டும் அல்லது அவைகளால் நாங்கள் சலித்துப் போகவேண்டும் என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தோம்.
அவைகளே முதலில் எரிச்சலடைந்து எங்களை கொத்த ஆரம்பித்தன. மூலிகைச் செடி ஒன்றை பறித்து அதன் சாற்றை அவை கொத்திய இடங்களில் தேய்த்தோம் கொஞ்சம் எரிச்சல் அடங்கினாலும், நாங்கள் நிம்மதியாக அமரமுடியவில்லை. அடுத்ததாக, பாம்புகளைத் தேடி நாங்கள் சென்றோம். அவைகளைப் பிடித்து ஒரு பையில் வைத்து அதை எங்கள் அறையின் உள்ளே வைத்தோம்., அன்றைய நாளை நாங்கள் கடுமையான உழைப்பில் கழித்திருந்ததால், இரவு உணவு வேளை நெருங்குகையில் மிகுந்த பசியோடு இருந்தோம். எனவே, உணவை முடித்து விட்டு, எங்கள் அறைக்கு நாங்கள் திரும்பிச் சென்று பார்க்கையில், ஒரு பாமபு கூட அங்கே இல்லை. அவைகள் வைத்திருந்த சாக்கை நாங்கள் முடிச்சிட்டு வைக்காததால், அவைகள் அனைத்தும் எப்படியோ நழுவித் தப்பித்து விட்டன.
இருந்தாலும், அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. இன்னமும் இங்கே வீட்டுக்குள் எங்கேயாவதுதான் அவை இருக்கக் கூடும். அவற்றில் சிலவற்றை எப்படியாவது நாங்கள் மீண்டும் பிடித்து விடலாம் என்று கணக்குப் போட்டோம். ஆம்! சிறிது காலத்திற்கு வீட்டுக்குள் ஒரே பாம்புப்படையாகத்தான் இருந்தது. சன்னல் மேல் உள்ள சட்டத்தில் இருந்து தொங்கிக் கொண்டு சிலதும், மற்ற இடங்களில் அவ்வப்போது சிலதும் எனத் தலையைக் காட்டிக்கொண்டிருந்தன. பொத் என உங்கள் தட்டில் அவை சில சமயம் விழும். அல்லது உங்களுக்கு அவை வேண்டாம் என்று நீங்கள் என்னும் சமயத்தில், உங்களின் கழுத்துக்குப் பின்புறம் ஊர்ந்து போகவும் செய்யும்.
பட்டையாக கோடுகள் உள்ள அவை உண்மையில் விஷமில்லாதவை. ஒரு கோடிப் பாம்புகள் ஒன்றாக வந்தாலும் அவை உங்களுக்கு ஒரு தீங்கும் விளைவிக்காது. ஆனால், அது பற்றி எல்லாம் சேல்லி சித்திக்குத் தெரியாது. பாம்புகளை அவள் அறவே வெறுத்தாள். அவை எங்கே இருந்தாலும், அவைகளின் பிரசன்னத்தை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது. ஒவ்வொரு முறையும், அவள் மேல் பாம்புகள் விழும் வேளை, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை அப்படியே விட்டுவிட்டு, அலறிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி விடுவாள். அவள் போடும் அலறல் அந்த கடவுளுக்கேக் கூட சில சமயம் கேட்டு விடும் போல இருக்கும். இப்படி ஒரு பயந்தாங்கொள்ளிப் பெண்ணை நான் கண்டதேயில்லை.
ஒரு ஜோடி இடுக்கி போன்ற கருவி கொண்டு கூட நீங்கள் அவளை அந்தப் பாம்பைப் பிடிக்க வைக்க முடியாது. அப்புறம், அவள் தன் படுக்கையில் திரும்பிப் படுக்கையில், அவள் பக்கம் படுத்திருக்கும் ஒரு பாம்பைக் கண்டவுடன், அலறியடித்து எழுந்து கூப்பாடு போடும்போது, மொத்த வீடுமே தீப்பற்றி எரிகிறதோ என்று நீங்கள் நினைக்கும் அளவு கடுமையாக இருக்கும். அந்த முதியவரை அவள் படுத்திய பாட்டில், பாம்புகள் படைக்கப் பட்டிருக்கவே கூடாது அவர் என்று வேண்டிக்கொள்ளும் அளவு அவர் பாதிக்கப்பட்டுவிட்டார். மொத்தமுள்ள அனைத்துப் பாம்புகளையும் வீட்டிலிருந்து விரட்டி அடித்த ஒரு வார காலத்திற்குப் பிறகும், சேல்லி சித்தி அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவில்லை. அமர்ந்து அவள் ஏதேனும் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு இறகு கொண்டு அவளைத் தொட்டால் போதும். அவ்வளவுதான். அவளின் கால் உறை கழன்று விழும்படி எழுந்து நின்று குதிப்பாள். பார்க்க மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஆனால், அனைத்துப் பெண்களுமே இப்படித்தான் என்று டாம் கூறினான். ஏதோ சில காரணங்களுக்காக அவர்கள் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவன் கூறினான்.
ஒவ்வொரு முறையும் பாம்பைக் காண நேரும்போதும், அவள் எங்களை அடித்துத் தீர்த்தாள். இந்த அடி எல்லாம் ஒன்றுமே கிடையாது என்றும், இனி ஒரு முறை இவ்வாறு பாம்புகளை வீட்டுக்குள் கொண்டு வந்தால் நடப்பதே வேறு என்று அவள் எங்களைக் கடுமையாக பயமுறுத்தினாள். அவள் அடிப்பது பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில், அவை ஒன்றும் கடுமையான அடிகள் இல்லை. ஆனால், இன்னும் எத்தனை சிரமத்துடன் இன்னொரு பாம்புக்கூட்டம் பிடிக்க அலைய வேண்டும் என்பதை நினைத்து நான் மிகவும் கவலை கொண்டேன். இறுதியாக, மற்ற உயிரினங்களுடன் சேர்த்தி எங்களுக்குத் தேவையான சில பாம்புகளையும் பிடித்து விட்டோம். ஜிம்மின் அறையில், அவன் அருமையான இசையை வாசிக்க, அதன் இனிமையில் மயங்கி அந்த உயிரினங்கள் அவனை சுற்றி சூழ்ந்து கொண்ட காட்சியை நீங்கள் எங்கும் கண்டிருக்கவே முடியாது.
ஜிம்முக்குச் சிலந்திகளைப் பிடிக்கவேயில்லை. சிலந்திகளுக்கும் அவனைப் பிடிக்கவில்லை போலும். அவன் மேல் அமர்ந்து அவனுக்காக அவைகள் காத்திருக்கும் வேளையில், ஜிம் மிகவும் கடுப்பாகி விடுவான். படுக்கையில் அவைகள் ஆக்கிரமித்துக் கொள்வதால், அவனுக்கு சிறிதும் இடமில்லை என்று அவன் முறையிட்டான். எலிகளும், பாம்புகளும் அங்குள்ள பாறாங்கல் என அனைத்து இடமும் நிரம்பி இருப்பதால், அவனுக்கென்று சிறிது இடம் கூட இல்லையெனக் கூறினான். அப்படி ஏதேனும் கொஞ்சம் இடம் கிடைத்தாலும், அந்த இடம் முழுதுமே உயிரோட்டம் நிரம்பிய ஜீவன்களின் அசைவினால் நிறைந்து இருக்கும் காரணத்தால், அவனால் உறங்க முடிவதில்லை.
ஏனெனில், அவை அனைத்துமே ஒரே சமயத்தில் உறங்குவதில்லை. பாம்புகள் உறங்கும் சமயத்தில், எலிகள் மேலும் கீழுமாக ஓடிக் கொண்டே இருக்கும். எலிகள் அசந்து தூங்கும் நேரத்தில் பாம்புகள் நெளிந்து கொண்டே இருக்கும். அந்த உயிரினங்களின் ஒரு பகுதி ஜிம்மோடு சேர்ந்து நிம்மதியாக உறங்கும்போது, மற்ற சிலது அவனின் மேல் அங்குமிங்குமாக ஊர்ந்து கொண்டிருக்கும். இவைகளை விடுத்து, ஏதேனும் புதிய இடம் கண்டுபிடித்து ஜிம் உறங்கச் சென்றால், அவனுடன் கூடவே சிலந்திகளை செல்லும். இந்தச் சிறையிலிருந்து தப்பித்துப் போன பிறகு, இனி தன் வாழ்நாளில் ஒரு போதும், யாரேனும் கோடிக் கணக்கில் பணம் கொடுத்தாலும் கூட, சிறை வாழ்வுக்குள் செல்லப் போவதேயில்லை என்று ஜிம் அடித்துக் கூறினான்.
மூன்றாம் வார முடிவில்,அனைத்தும் நல்லமுறையில் சரியாகவே நடந்து கொண்டிருந்தது. கேக்கில் மறைத்து வைத்து ஒரு மேல்சட்டையை, ஜிம்முக்கு அனுப்பினோம். ஒவ்வொரு முறையும் ஒரு எலி அவனைக் கடித்து வைக்கும்போதும் அவன் எழுந்து அமர்ந்து சொட்டிக் கொண்டிருக்கும் ரத்தம் காய்வதற்கு முன்பாக சாசனம் எழுதிவைத்தான். எழுதுகோல் தயார் செய்து அங்கிருந்த பாறாங்கல்லில் பொறிக்கப்படும் வேலையும் நடந்தது. அங்குள்ள கட்டிலின் காலை ரம்பம் கொண்டு இழைத்து எடுக்கும் பணியில் கீழே விழுந்த அந்த மரத் துகள்களை நாங்கள் தின்று விழுங்கியதால், கடும் வயிற்று வலிக்கும் ஆட்பட்டோம். வலி தாங்காது நாங்கள் இறந்து விடுவோமோ என்று கூட அஞ்சினோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. என் வாழ்க்கையில் நான் பார்த்த மரத்துகள்களிலேயே மிகுந்த துன்பம் கொடுத்தது அவைகள்தான். நான் கூறியது போலவே டாமும் கூறினான். ஆயினும், அப்படிச் சொல்லிக் கொண்டே எங்களின் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டோம். இருந்தாலும் நாங்கள் மிகவும் சோர்வடைந்து விட்டோம். அதிலும், ஜிம் மிகவும் அதிக அளவில் தளர்வுற்றுவிட்டான்.
இதற்கிடையில். தப்பி ஓடிச் சென்ற அவர்களின் நீக்ரோவை வந்து கூட்டிச் செல்லுமாறு நியூ ஆர்லியன்ஸின் கீழ் பக்கமாக உள்ள பண்ணைக்கு பலமுறை அந்த வீட்டின் முதிய மனிதர் கடிதம் அனுப்பிவிட்டார். அப்படி ஒரு பண்ணை அங்கே உண்மையில் இல்லாத காரணத்தினால், அவருக்கு ஒரு பதில் கூட வரவில்லை. செயின்ட் லூயிஸ் மற்றும் நியூ ஆர்லியன்ஸ் பகுதியைச் சேர்ந்த செய்தித்தாள்களில் ஒரு விளம்பரம் கொடுப்பதென அவர் முடிவு செய்தார். செயின்ட் லூயிஸ் நகரத்தின் செய்தித்தாள்கள் என்று அவர் கூறியதும் எனக்குள் ஏதோ ஒன்று சில்லிட்டது. இனியும் தாமதிக்க நேரமில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். எனவே, மொட்டைக்கடிதாசுகள் எழுதும் காலம் வந்துவிட்டது என்று டாம் கூறினான்.
"என்ன அவைகள்?" நான் வினவினேன்.
"கெட்ட விஷயம் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று அவைகள் எச்சரிக்கை செய்யும். அவைகளைச் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. கோட்டையைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உளவறிந்து அது பற்றிய தகவல்களை கோட்டையின் தளபதியிடம் சொல்வதெற்கென்று யாரேனும் இருப்பார்கள். ட்யூயிலரி அரண்மனையிலிருந்து பதினாறாம் லூயி மன்னர் தப்பிக்கும் சமயம் ஒரு பணிப்பெண் எச்சரிக்கை செய்கிறாள். அது ஒரு நல்ல வழி. அது போலத்தான், இந்த மொட்டைக் கடிதாசுகளும். இரண்டையுமே நாம் பயன்படுத்துவோம். அத்துடன், கைதியின் அம்மா, கைதியின் உடையை மாற்றி அணிந்து கொண்டு அவனைப் தப்புவித்துவிட்டு, அவள் சிறைக்கைதியாகி விடுவாள். கைதியோ அவனின் அம்மாவின் உடையை அணிந்து கொண்டு தப்பி விடுவான். அதையும் நாம் செய்வோம்.”
"ஆனால், இங்கே பார், டாம்! ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று நாம் ஏன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்? தாமாகவே அவர்கள் அதைத் தெரிந்து கொள்ளட்டுமே. அப்படி கண்காணித்துப் பார்ப்பது அவர்கள் வேலைதான்."
"ஆம். எனக்கும் தெரியும். ஆனால் அவர்களை நீ நம்பிக் கொண்டிருக்க முடியாது. முதலிலிருந்தே எல்லா விஷயங்களையும் நம்மைச் செய்ய வைத்துக் கொண்டு அவர்கள் சென்று விடுகிறார்கள். நம்மை மிகவும் நம்பி, முட்டாள்தனமாக இருப்பதால், என்னென்ன வேலைகள் நடந்திருக்கிறது என்று கூட அவர்கள் கண்டு கொள்ளவேயில்லை. ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்று நாம் அவர்களுக்கு அறிவிக்கவில்லையென்றால், நம்மைத் தடுக்க அவர்கள் யாருமே வரமாட்டார்கள். இத்தனை தொல்லைகள், சிரமங்களுக்குப் பின், நாம் தப்பிக்கும் போது எந்தத் தடையும் இல்லையென்றால், அதற்கு எந்தப் பலனும் இல்லை. பிறகு, அதில் எந்த உப்பு சப்பும் இருக்காது."
"ஆனால் டாம்! என்னைப் பொறுத்த வரை, அப்படிதான் நான் விரும்புகிறேன்."
"ப்ச்ச்!" மிகுந்த எரிச்சலுடன் அவன் உச்சுக் கொட்டினான்.
"ஆனால், எந்தப் புகாரும் நான் செய்யப் போவதில்லை. நீ என்ன செய்தாலும், அது எனக்குச் சம்மதமே. பணிப்பெண் விஷயத்திற்கு நீ என்ன செய்யப்போகிறாய்?" நான் கூறினேன்.
"நீதான் அந்தப் பணிப்பெண். மஞ்சள் நிற நீக்ரோ பணிபெண்ணின் நீண்ட அங்கியை நள்ளிரவில் எப்படியாவது திருடி விடு."
"டாம்! அடுத்த நாள் காலையில், அந்தத் திருட்டு மிகுந்த கலவரத்தை உண்டு பண்ணிவிடும். ஏனெனில், அணிவதற்கு அந்தப் பெண்ணுக்கு அந்த ஒரு அங்கி மட்டுமே இருக்கக்கூடும்."
"எனக்குத் தெரியும். ஆனால், அதை அணிந்து, கடிதத்தை எடுத்து வந்து கதவின் அடியில் உள்ளே இடுக்கில் தள்ளி விடும்வரை உள்ள ஒரு பதினைந்து நிமிடம் மட்டுமே அது உனக்குத் தேவைப் படும்."
"அப்படியானால் சரி. அதை நான் செய்கிறேன். ஆனால், அந்த வேலையை நான் என்னுடைய உடையில் இருக்கும்போதே சுலபமாகச் செய்யலாமே."
"நல்லது. ஆனால் நீ ஒரு பணிப்பெண் போலத் தென்படமாட்டாய்தானே?"
"இல்லை. என்னவாக இருந்தாலும், நான் எப்படித் தென்படுகிறேன் என்று பார்க்க என்னைச் சுற்றியும் யாரும் இருக்க மாட்டார்கள்."
"அது தேவையில்லாத விஷயம். யார் நம்மைப் பார்க்கிறார்களோ இல்லையோ, அது பற்றிக் கவலைப்படாமல், நம்முடைய கடமையை நாம் சரிவரச் செய்ய வேண்டும். உனக்கென்று எந்தக் கொள்கைகளுமே கிடையாதா, சார்?"
"சரி. நான் விவாதிக்க விரும்பவில்லை. நானே பணிப்பெண். ஜிம்மின் அம்மா யார்?"
"நான்தான் அவனின் அம்மா. சேல்லி சித்தியின் ஒரு நீண்ட அங்கியை நான் திருடிக் கொள்கிறேன்."
"அப்படியானால், நல்லது. நானும், ஜிம்மும் தப்பித்து வெளியே செல்லும்போது, அறையினுள்ளே நீ தங்க வேண்டி வரும்."
"அப்படியில்லை. ஜிம்மின் உடைகளுக்குள் வைக்கோல் வைத்துத் திணித்து, அதை அவனின் படுக்கையில் சாய்த்து வைத்து, அவனின் அம்மா மாற்று ஆடையில் இருப்பது போன்றதொரு பாவனை ஏற்படுத்தி விடுகிறேன். நான் போட்டுச் செல்லும் நீண்ட அங்கியை ஜிம் அணிந்து கொண்டதும், நாம் மூவரும் அனைவரையும் ஏய்த்துவிடுவோம். ஒரு பிரபலமான கைதி தப்பிப்பதை ஏய்த்துச் செல்வது என்று குறிப்பிடுவோம் என்று உனக்கு தெரியும் அல்லவா! உதாரணத்துக்கு , ஒரு ராஜா தப்பிக்கும் போது அப்படிக் குறிப்பிடப்படும். அதே போன்றுதான், இளவரசன் தப்பிக்க முயற்சிக்கும் போதும் கூறப்படும். ராஜாவின் உண்மையான வாரிசாக இருந்தாலும் சரி, பொய்யான வாரிசாக இருந்தாலும் சரி. எந்த வித்யாசமும் இல்லை.
எனவே, டாம் மொட்டைக் கடிதாசு எழுத ஆரம்பித்தான். மஞ்சள் நிற நீக்ரோ பெண்ணின் அங்கியை நான் அன்றிரவு திருடி வந்து விட்டேன். அதை அணிந்து கொண்டு டாம் என்னைச் செய்யச் சொல்லிக் கூறியது போலவே, அந்த முன் கதவின் இடுக்கில் செருகிவிட்டு வந்து விட்டேன். அந்தக் கடிதத்தில் பின்வருமாறு இருந்தது:
ஜாக்கிரதை! தொல்லை உருவாகிக் கொண்டிருக்கிறது. நன்கு கண்காணிக்கவும். பெயரில்லா நண்பன்.
அடுத்த நாளிரவு, மண்டையோடும், குறுக்கில் வைக்கப்பட்ட இரண்டு எலும்புகளும் என ஒரு படத்தை டாம் முன் கதவில் ரத்தம் கொண்டு வரைந்து வைத்தான். அடுத்த நாளிரவும், ஒரு சவப்பெட்டியின் பின்பக்கக் கதவில் வரைந்து வைத்தோம். சாவைப் பற்றி இந்த அளவு கவலைப்பட்ட ஒரு குடும்பத்தை அதுவரை நான் கண்டதேயில்லை. அந்த இடத்தை பேய்கள் ஆக்கிரமித்து அவர்களுக்காக, ஒவ்வொரு பொருளின் பின்புறத்திலும், படுக்கையின் கீழும், காற்றில் மிதந்து கொண்டிருப்பது என்பது போன்ற விஷயங்களைச் செய்து, எல்லா இடங்களிலும் காத்துக் கொண்டிருந்தாலும் கூட அவர்கள் இவ்வளவு கவலை கொண்டிருப்பார்களா என்று சொல்ல முடியாது.
பட் என்று காற்றில் கதவு அடித்துக் கொண்டாலும் "ஓவ்ச்" என்று கத்தியவாறே சேல்லி சித்தி குதிப்பாள். ஏதேனும் பொருள் கீழே விழுந்தாலும் "ஓவ்ச்" என்று கத்திக்கொண்டே குதிப்பாள். அவளின் கவனம் வேறு திசையில் இருக்கும்போது, நீங்கள் அவளைத் தொட நேர்ந்தால், அதே போன்றுதான் செய்வாள். அவளின் பின்னால் ஏதோ ஒன்று எப்போதும் நின்று கொண்டிருப்பதைப் போன்ற அவளின் அதீத கற்பனையினால், அவளால் நிம்மதியாகவே இருக்க முடியவில்லை. எப்போதுமே சடாரெனத் திரும்பியவாறே, "ஓவ்ச்" என்ற ஒலி எழுப்புவாள். ஆனால் மூன்றில் இரு பங்கு திரும்புவதற்குள்ளாகவே, மீண்டும் பழையநிலைக்குத் திரும்பி அதே ஒலியை எழுப்புவாள். படுக்கையில் தூங்கச் செல்ல அவளுக்குப் பயம். அதே சமயம் விழித்திருந்து ஆபத்தை எதிர்நோக்கவும் அவள் தயாராக இல்லை. எங்களின் எச்சரிக்கை நன்கு வேலை செய்தது என்று டாம் சந்தோஷமடைந்தான். இந்த அளவு சிறப்புப் பலன் கொடுத்த எச்சரிக்கை வேறு எதுவும் அவன் பார்த்ததில்லை என்றான். நாங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் சரியாகச் செய்துள்ளோம் என்று இவை எடுத்துக் காட்டுகிறது என்றும் டாம் கூறினான்.
இனி நாங்கள் இறுதியாக இயங்க வேண்டிய கட்டம் அது என்று டாம் கூறினான். அடுத்த நாள் அதிகாலை சூரிய உதயவேளையில் நாங்கள் இன்னொரு கடிதம் தயார் செய்தோம். இனி வரும் எல்லா இரவுகளிலும், ஒவ்வொரு நீக்ரோவை ஒவ்வொரு கதவுக்கும் எனக் காவல் போட்டு வைப்பது என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டதால், அந்தக் கடிதத்தை எப்படிச் சேர்ப்பது என்று நாங்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டோம். அன்றிரவு, இடிதாங்கிக் கம்பி வரை ஏறிச் சென்று டாம் சுற்றிலும் டாம் பார்வையிட்டான். பின்பக்கக் கதவுக்குக் காவலிருந்த நீக்ரோ நன்கு அசந்து தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். எனவே, அங்கே சென்று அவனின் கழுத்தின் பின்புறமாக இந்தக் கடிதத்தைச் செருகி விட்டு வந்து விட்டான். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
எனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ய முற்பட வேண்டாம். நான் உங்களின் நண்பன். இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சார்ந்த, மாபாதகத்திற்கும் அஞ்சாத கொலைகாரக் கூட்டம் ஒன்று உங்களிடம் சிக்கியுள்ள தப்பி ஓடி வந்த நீக்ரோவை இன்றிரவு கடத்திப் போவதாகத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் உங்களை மிரட்டி உங்களின் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி செய்து அவர்களுக்குத் தொல்லை தராத வண்ணம் செய்துள்ளார்கள். நானும் அந்தக் கூட்டத்தில் ஒரு உறுப்பினர். ஆனாலும், கடவுள் பக்தி அதிகம் உள்ள நான் இந்தக் கூட்டத்தை விட்டு விலகி, மீண்டும் நேர்மையான வாழ்க்கை வாழ எண்ணியுள்ளேன். எனவேதான், அவர்களின் திட்டத்தில் நான் குறுக்கீடு செய்ய முனைகிறேன்.
வடக்குப் பகுதியிலிருந்து திருட்டுத்தனமாக வரும் அவர்கள், நள்ளிரவு சரியான சமயத்தில் வேலியோடு சேர்ந்து செல்வார்கள். அவர்களிடம் அந்த நீக்ரோ அறையின் சாவி உள்ளதால், அங்கே நேராகச் சென்று அவனைப் பிடிக்கச் செல்வார்கள். யாரும் வருகிறார்களா என்று பார்க்கும் வேலையை எனக்குக் கொடுத்துள்ளார்கள். பின்பக்கமாக நின்று, ஏதேனும் ஆபத்து வந்தால், கையிலிருக்கும் தகர ஊதுகுழல் கொண்டு சத்தம் எழுப்பி அவர்களுக்கு நான் தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்வதற்கு பதிலாக, அவர்கள் உள்ளே நுழைந்ததும், ஆடு கத்தும் ஒலி எழுப்பி உஷார் படுத்துகிறேன். அந்த நீக்ரோவின் சங்கிலியைக் அவர்கள் கழட்டி முடிப்பதற்குள், நீங்கள் சத்தமிடாமல் சென்று அவர்களை உள் வைத்து கதவைப் பூட்டி வைத்து விட்டு, உங்களுக்கு சமயம் கிடைக்கும் வேளையில் அவர்களைக் கொன்று விடுங்கள். நான் கூறியது மட்டுமே செய்யுங்கள். வேறு ஏதேனும் புதிதாக நீங்கள் செய்தால், அவர்களுக்குச் சந்தேகம் வந்து அபாயச் சங்கு ஊதிவிடுவார்கள். எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். எல்லா விஷயத்தையும் நான் சரியாகச் செய்திருக்கிறேன் என்பதை அறிந்துகொண்டாலே, அது எனக்கு மிகச் சிறந்த பரிசுதான். - பெயரில்லா நண்பன் -
[தொடரும்]
- முனைவர் ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D. தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.